1. ஆயுள் காப்பீடு எடுக்காமல் காலம் தாழ்த்துவது
மக்கள் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது இது. இப்ப என்ன அவசரம் என்று காப்பீடு எடுக்காமல் இருந்து விடுகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த ஒவ்வொருவரும் ஆயுள் காப்பீடு எடுக்கணும். இளம் வயதில் எடுத்தால் ப்ரீமியம் கம்மியாக இருக்கும். வயதாக வயதாக ப்ரீமியம் கூடிக்கொண்டே போகும். அப்புறம் நீரழிவு, இதய நோய் போன்றவை வரும் முன்னரே காப்பீடு எடுத்து விட வேண்டும். இது போன்ற நோய்கள் வந்தப்புறம் இன்சூரன்ஸ் கிடைப்பதே கடினம்
2. தவறான பாலிசிகளை வாங்குவது
டெர்ம் பாலிசி தவிர வேறு எதையும் வாங்குவது பண விரயம். எந்த எண்டோமெண்ட் / யூலிப் / மணி பேக் பாலிசிகளாலும் உங்களுக்குத் தேவையான அளவு காப்பீட்டை பெற முடியாது
3. தேவை இல்லாதோருக்கு காப்பீடு வாங்குவது
சார், மேடம் பேர்ல ஒரு பாலிசியும் பாப்பா பேர்ல ஒரு பாலிசியும் போட்டுடலாம் என்று சொல்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பேச்சில் மயங்காமல், சரிங்க அப்படியே போட்டுடலாம் ரெண்டு பேருக்கும் தலா ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி போடுங்கன்னு சொல்லுங்க, அவர் தெரிச்சி ஓடிடுவார். வருமானம் இல்லாதோருக்கு டெர்ம் பாலிசி தர மாட்டாங்க ஏன்னா இன்சூரன்ஸ் என்பதே வருமான இழப்பை ஈடுகட்டத்தான் என்பது காப்பீடு நிறுவனங்களின் நிலை. அப்ப எண்டோமெண்ட் மட்டும் ஏன் கொடுக்கறீங்கன்னு கேளுங்க. வருமானம் ஈட்டாதோருக்கு குறிப்பா குழந்தைகள் பேரில் ஆயுள் காப்பீடு போடாதீங்க. அவர்களுக்கு முதலீடு வேணும்னா அதுக்கு பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன
4. க்ரூப் பாலிசி இருக்குன்னு காப்பீடு எடுக்காமல் இருப்பது
அலுவலகத்தில் தரும் க்ரூப் பாலிசியை மட்டும் நம்பி இருக்காதீர்கள். அதில் உங்களுக்குத் தேவைப்படும் ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இருக்காது. நீங்க அதே கம்பெனியில் ரிட்டையர்மெண்ட் வரை வேலை செய்வீங்கன்னு நிச்சயமில்லை, அடுத்த கம்பெனியிலும் க்ரூப் பாலிசி இருக்கும் என நிச்சயமில்லை. இருக்கும் கம்பெனி வழங்கும் க்ரூப் பாலிசியிலும் மாற்றங்கள் வரலாம். இப்ப விட்டுட்டு அப்புறம் தேவையை உணரும் போது உங்களுக்கு நீரழிவு நோய் வந்து காப்பீடு எடுக்க முடியாமலே போகலாம்
5. தேவைக்கு குறைவாக காப்பீடு செய்வது
ஒருவரின் ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு காப்பீடு ஐடியல், குறைந்த பட்சம் 10 மடங்காவது இருக்க வேண்டியது அவசியம். இப்ப நீங்க ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கறீங்க. உங்க குடும்பம் அதுக்கு ஏத்த லைஃப்ஸ்டைலுக்கு பழகிடுவாங்க. நீங்க திடீர்னு இறந்தா 2 கோடி ருபாய் இருந்தால்தான் அதை முதலீடு செய்து ஆண்டுக்கு 12-14 லட்சம் பெற முடியும். அப்போதுதான் விலைவாசி உயர்ந்தாலும் உங்க குடும்பத்தாரால் சமாளிக்க முடியும். ஒரு கோடி கிடைத்தால் அதிலிருந்து வரும் 7 லட்சம் வச்சி செலவுகளை கட்டுப் படுத்தி சமாளிக்கலாம். அதற்கும் குறைவாக காப்பீட்டுத் தொகை கிடைத்தால் அது சில ஆண்டுகளிலேயே கரைந்து விடும்
6. தேவைக்கு அதிகமாக காப்பீடு செய்வது
எப்படி தேவைக்கு குறைவாக காப்பீடு செய்வது தவறோ அது போல தேவைக்கு அதிகமாக காப்பீடு செய்வதும் தவறு. நிறுவனங்கள் பொதுவா உங்க தேவைக்கு அதிகமா காப்பீடு தர மாட்டாங்க., அப்படியே கிடைத்தாலும் உதாரணத்துக்கு வருமானத்தின் 40- 50 மடங்கு காப்பீடு எடுப்பது வீண் (மிக இளம் வயதில் இருப்போர் விதிவிலக்கு). 20 மடங்கு காப்பீட்டுக்கு ஆகும் ப்ரீமியத்துக்கும் மேல் செலவழிக்கும் பணத்தை முதலீடு செய்யும் வாய்ப்பை இழப்பீர்கள்.
அதே போல ரிட்டையர்மெண்ட் முதலீட்டு குறிக்கோளை அடைந்த பின் காப்பீட்டை நிறுத்தி விடலாம். இன்று நாம் இறந்தால் குடும்பம் இதே லைஃப்ஸ்டைலை தொடர முடியும் என்ற நிலை வந்தபின் கட்டும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் வீண் செலவு
7. ப்ரீமியத்தை மட்டும் வைத்து முடிவு செய்வது
டெர்ம் பாலிசி எடுக்கும் போது ப்ரீமியத்தை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள். காப்பீட்டு நிறுவனத்தின் க்ளெயிம் ரேசியோ, கஸ்டமர் சர்வீஸ் பற்றிய ரிவ்யூஸ், கம்பெனி இன்னும் 30-40 ஆண்டுகள் நிலைத்திருக்குமா என்பதையெல்லாம் பார்த்து ஆராய்ந்து முடிவெடுங்கள்.
எப்ப எடுக்கறது, எந்த பாலிசி எடுக்கறது, எந்த நிறுவனத்தில் எடுக்கறதுன்னு குழம்புவோர் இவற்றை விலக்கிவிட்டால் மிச்சமிருப்பதே சரியா முடிவாக இருக்கும்