எந்த டெர்ம் பாலிடி சிறந்தது?

எந்த நிறுவனத்தில் டெர்ம் பாலிசி எடுக்கணும்? 
எல் ஐ சியின் டெர்ம் பாலிசி ப்ரீமியம் அதிகமா இருக்கு, நான் தனியார் நிறுவனத்தில் எடுக்கலாமா?

இவையே பொதுவா டெர்ம் பாலிசி எடுக்க நினைப்போரின் கேள்விகளாக இருக்கின்றன. இவற்றுக்கு இங்கு பதில் அளிக்க முயல்கிறேன்

1. டெர்ம் பாலிசி என்பது “No Frills” வகை. இதில் பெரும்பாலும் அம்சங்கள் (Features) என்று ஏதும் இல்லை. பயனர் இறந்தால் குடும்பத்துக்கு இழப்பீடு, காப்பீட்டுக் காலம் முடியும் வரை பயனர் இறக்கலேன்னா யாருக்கும் எதுவும் கிடைக்காது. என்னைப் பொருத்த வரை ரைடர்கள் எதுவும் தேவையில்லை. ஆக கம்பேர் பண்ணி பாக்க அம்சங்கள் ஏதும் இல்லை

2. எந்த நிறுவனத்தில் வேணா எடுக்கலாம். ஓப்பீட்டுப் பார்ப்பதற்கு சில காரணிகளை உபயோக்கலாம்

அ. நிலைத்தன்மை / நம்பிக்கை : நிறுவனம் எவ்வளவு நாளா இருக்கு, இன்னும் முப்பது நாப்பது வருசம் இருக்குமா அல்லது கை மாறுமா அல்லது திவாலாகுமா? இதை அப்ஜெக்டிவாக அணுகுவது கொஞ்சம் கஷ்டம், சப்ஜெக்டிவாக எந்த கம்பெனி நீண்ட நாள் நிலைக்கும்னு பாக்கலாம். எல் ஐ சி அரசு நிறுவனம், டாடா பிர்லா நிறுவனங்கள் இந்தியாவில் நீண்ட நாட்களாக தொழில் செய்து வருகின்றன, அவை இணைந்திருக்கும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் நீண்ட வரலாறு கொண்டவை. எச் டி எஃப் சியும் ஐ சி ஐ சி யும் இந்தியாவில் செயல்படும் லாபகரமான வங்கிகள் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

ஆ. கஸ்டமர் சர்வீஸ் : எண்டோமெண்ட் பாலிசி விக்க மல்லு கட்டிட்டு அது முடியாம போனப்புறம் டெர்ம் பாலிசி கொடுக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ண வங்கி மேனேஜர், பாலிசி இஷ்யூ ஆக விடாம அழிச்சாட்டியம் பண்ணது எல்லாம் பார்த்திருக்கேன். கஸ்டமர் சர்வீஸில் சேவை பெற்ற நண்பரின் கருத்துக்களைக் கேட்டு இதை முடிவு செய்யுங்க

இ. க்ளெயிம் செட்டில்மெண்ட் ரேஷியோ : நிறுவனம் வருகின்ற க்ளெயிம்களில் எத்தனை சதவீதம் செட்டில் செய்கிறது என்பதை குறிப்பது இது. ஒவ்வொரு ஆண்டும் ஐ ஆர் டி ஏ எல்லா நிறுவனங்களில் ரேஷியோவை வெளியிடும். 
விண்ணப்பத்தை ஒழுங்காக பூர்த்தி செய்தால் க்ளெயிம் ஏற்பட்டால் இழப்பீடு பெறுவது கடினமாக இருக்காது. இருக்கும் உடல் உபாதைகள், இதுவரை செய்த அறுவை சிகிச்சைகள், நம்மிடம் இருக்கும் மற்ற பாலிசி விவரங்கள் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுங்கள். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், பாலிசி கைக்கு வந்ததும் அதையும் மூணு முறை படிச்சுப் பாருங்க. பேர், பிறந்த தேதி, விலாசம், நாமினி பேர், உறவு, பிறந்த தேதி இவையனத்தும் சரியா இருக்கான்னு பாருங்க. டையாபட்டிஸை மறைப்பது, அறுவை சிகிச்சையை சொல்லாமல் இருப்பது, தெரியவா போகுதுன்னு வச்சிருக்கும் 50 லட்ச ரூபாய் பாலிசி விவரத்தை விடுவது, மனைவின் சர்ட்டிஃபிக்கேட் பேரை எழுதாமல் கண்ணம்மா குட்டிமான்னு எதையாவது நாமினி இடத்தில் எழுதுவது – இவற்றில் எதையும் செய்யாமல் இருந்தால் க்ளெயிம் ரிஜக்ட் ஆவதற்கு வாய்ப்புகள் கம்மி

இன்னிக்கு படிச்சேன். காலில் செய்த அறுவை சிகிச்சையை மறைத்தவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிருக்கார், காப்பிட்டு நிறுவனம் க்ளெய்மை மறுத்து விட்டது, குடும்பத்தார் Ombudsman போய் பணம் வாங்கியிருக்காங்க. உடனே இந்த கம்பெனி மோசம் என்று எண்ண வேண்டாம், க்ளெயிம் ரிஜெக்ட் செய்தபின்னர் Ombudsman குட்டியதும் க்ளெயிம் ரிலீஸ் செய்யாத கம்பெனி இந்தியாவில் ஒன்று கூட இல்லை.

3. எல் ஐ சியின் டெர்ம் இன்சூரன்ஸ் ப்ரீமியம் இருப்பதிலேயே அதிகம். 
ஆமாம், எல் ஐ சி யின் ப்ரீமியம் அதிகம்தான், ஆனா எல் ஐ சியின் நிலைத்தன்மையும் க்ளெயிம் ரேஷியூவும் Unmatched. Claim Raitio விவரங்கள் பொது வெளியில் கிடைக்கும் நீங்க தேடிப்பார்க்கலாம்

எல்லா நிறுவனங்களும் ஏன் அரசுகளும் கூட திவால் ஆகக்கூடியவைதான். இந்திய அரசும் ஏன் அமெரிக்க அரசும் கூட திவால் ஆக Theoritical Possibilities உண்டு. ஆனா ப்ராக்டிகலாக எல் ஐ சி திவால் ஆகும் வாய்ப்புகள் குறைவு ஏன்னா

அ. எல் ஐ சியிடம் இரண்டரை கோடி லட்ச ரூபாய்கள் கையிருப்பு இருக்கிறது. அதில் ஒரு பாதி அரசு கடன் பத்திரங்களில் சேஃபாக உள்ளது, மிச்சம் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டித் தருகிறது

ஆ. எல் ஐ சி நாட்டின் அனைத்து நகரங்களின் முக்கிய இடங்களில் சொந்தக் கட்டிடங்கள் வைத்துள்ளது. எல் ஐ சியின் புக்கில் இவை வாங்கிய விலையிலேயே உள்ளன, இன்றைய மார்க்கெட் மதிப்புக்கு அவற்றை புக்கில் மாற்றினால் ஓவர் நைட் எல் ஐ சி உலகின் அதிக மதிப்புள்ள காப்பீடு நிறுவனமாக மாறும். அந்த அளவுக்கு எல் ஐ சியிடம் சொத்து உள்ளது

இ. இன்னமும் ஏஜெண்ட்கள் எண்டோமெண்ட் பாலிசியும் மணி பேக்கையும் பெருமளவு விற்றுக்கொண்டிருக்கின்றனர். இவற்றில் சிறிய சம் அஷ்யூர்டுக்கு அதிக அளவு ப்ரீமியம் எல் ஐ சிக்கு கிடைக்கிறது. பெரும்பாலான பாலிசிகளில் சம் அஷ்யூர்ட் மட்டுமே கேரன்டீட், போனஸ் எல்லாம் எல் ஐ சி லாபத்தில் இயங்கினால் மட்டுமே தரப்படும். இப்பாலிசிகளின் மூலம் தொடர்ந்து பணம் வந்து கொண்டேயிருக்கும் நிலையில் டெர்ம் பாலிசி க்ளெயிம் செட்டில் செய்வதில் பிரச்சனை இருக்காது

4. எல் ஐ சி அரசு நிறுவனம், அது திவால் ஆக இந்திய அரசு விடாது, இந்திய அரசு திவால் ஆனால் மட்டுமே எல் ஐ சி திவால் ஆகும் என நான் நம்புகிறேன்

எல்லா சேஃப்டி ஃபீச்சர்ஸும் கொண்ட கார் விலை அதிகமாகத்தான் இருக்கும் அந்த காரில் போனால் விபத்து நிகழாது என்பதும் உத்திரவாதமில்லை, அவ்வம்சம்கள் குறைவாக இருக்கும் காரில் போனால் இறப்போம் என்பதும் நிச்சயமில்லை, ஆனாலும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமுள்ள கார் விலை அதிகமாகத்தான் இருக்கும்

இந்தியாவில் செயல்படும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஐ ஆர் டி ஏவின் கண்காப்பில் செயல்படுகின்றன, எல்லா விதமான பொருளாதாரப் பாதுகாப்பு அரண்களும் கொண்டிருக்கின்றன. உங்களுக்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது உங்க உரிமை

Please follow and like us: