காஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு
கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டு தகவல் சொன்னார்கள்.
முதல் நண்பர், சிங்கப்பூர் வாழ் என் ஆர் ஐ வயது 35, எச் டி எஃப் சியில் 2 கோடிக்கு டெர்ம் பாலிசி 30 ஆண்டு காலம் எடுத்திருக்கார். அதற்கு ஓராண்டு ப்ரீமியம் ரூ 21,500 மட்டுமே. நாள் கணக்கில் பார்த்தால் ஒரு நாளைக்கு 58 ரூபாய்
நண்பர் அவரோட நண்பரை டெர்ம்பாலிசி எடுக்க வைத்திருக்கிறார். வயது 29 எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி 32 ஆண்டு காலம், இதன் ப்ரீமியம் வெறும் 15,741 மட்டுமே, அதாவது ஒரு நாளைக்கு 43 ரூபாய்
இன்னொரு நண்பர், வயது 42, எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி எடுத்திருக்கிறார், அதன் ப்ரீமியம் ரூ 26,923, அதாவது ஒரு நாளைக்கு 72 ரூபாய்
இதில் ரெண்டு விசயங்களை கவனிக்கலாம்.
உண்மையான காப்பீட்டுக்கு (எண்டோமெண்ட், மணி பேக் என்ன பிற போன்ற ஃபேக் காப்பீட்டு பாலிசிகள் தவிர்க்கப்படவேண்டியவை) ஆகும் செலவு மிகவும் கம்மி. 40-50 ரூபாய் என்பது பலருக்கு தினமும் வெளியில் காஃபி குடிக்கும் செலவு. அவ்வாறு உணவகத்தில் காஃபி குடிப்பதற்கு பதிலாக அப்பணத்தைக் கொண்டு கோடி ரூபாய் காப்பீடு எடுத்து குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
ரெண்டாவது இளமையில் கல், கற்றபின் காப்பீடு எடு என்பதே. 29 வயதாக இருக்கும் போது 1 கோடி ரூபாய் காப்பீடு 16 ஆயிரத்துக்கும் குறைவாகக் கிடைக்கிறது, அதே அளவு காப்பீடு, குறைவான காலத்துக்கே 27 ஆயிரம் ரூபாய் ஆகிறது 41 வயதானவருக்கு. வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஆயுள் காப்பீடு பெறுவதும் ஓய்வு காலத்துக்கு திட்டமிடுதலும் அவசியம்.
அரசு வேலையில் இருப்போர் புது பென்சன் திட்டமா பழைய திட்டமான்னு போராட்டம் செய்வதை வேடிக்கை பார்க்கும் தனியார் துறை ஊழியர்கள் தமக்கு எந்த பென்சன் திட்டமும் இல்லை என்பதை உணர வேண்டும்