யாருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை?

டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு தேவையில்லை, அதை வாங்காதீர்கள்

என்னடா ஆச்சு இவனுக்கு? இவன் பேச்சைக் கேட்டு டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் இப்படி சொல்றானேன்னு திட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?

இப்பதிவு யார் யாருக்கெல்லாம் ஆயுள் காப்பீடு தேவையில்லை என்பது குறித்து

1. குழந்தைகள் : கண்டிப்பா ஆயுள் காப்பீடு தேவைப்படாதவர்கள் லிஸ்டில் முதலிடம் பெறுபவர்கள் குழந்தைகள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கிறேன் பேர்வழி என்று காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். சேமிப்பிற்கு பல்வேறு நல்ல வழிகள் இருக்கின்றன

2. ஓய்வு பெற்றவர்கள் : வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் காப்பீடு தேவையில்லை. காப்பீடு என்பதே திடீர் மரணத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சரிகட்டுவதற்குத்தான். வருமானம் இல்லாத போது காப்பீடு அவசியல்லாதது மட்டுமல்ல அது ஒரு அநாவசிய செலவு

3. இறந்தாலும் வருமான இழப்பு இல்லதோர் : சில பேரோட வருமானம் மொத்தமும் வீட்டு வாடகையில் மூலம் இருக்கும். அவர்கள் இறந்து போனாலும் வருமானம் சற்றும் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கும். இவர்களைப் போன்றோருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை

4. செய்யும் தொழிலில் குடும்பத்தாரை ஈடுபடுத்துவோர் : உதாரணத்துக்கு சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி அவர் உயிருடன் இருக்கும் போதே பிள்ளைகளை ஆளுக்கொரு கடையை நிர்வகிக்க வைத்து விட்டார், அவர் இறந்தபின்னும் கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தன. அவர் இறப்பால் குடும்பத்தாருக்கு பொருளாதார இழப்பு இருந்திருக்காது என நினைக்கிறேன். இது போன்று தம் கடையிலோ, தொழிலிலோ குடும்பத்தாரை ஈடுபடுத்தி முழுமையாக தொழிலை நடத்தும் அளவுக்கு வைத்திருப்போருக்கும் பெரிய அளவில் ஆயுள் காப்பீடு தேவையில்லை

5. ஒரு குடும்பத் தலைவர் தான் இருக்கும் போதே மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டால் அதற்குப் பின் ஆயுள் காப்பீட்டுக்கு அவசியமில்லை

6. உங்க பெற்றோர் உங்க வருமானத்தை நம்பி வாழவில்லை, நீங்க திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோர் – அதாவது பொருளாதார ரீதியில் உங்களை நம்பி யாரும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்று உறுதியாக நம்புவோருக்கும் ஆயுள் காப்பீடு அவசியமற்றது.

7. அமெரிக்காவில் இருக்கும் அமிஷ் சமூகம் போல முழுக்க முழுக்க சுயசார்பு வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை.

8. நீங்க “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்” கேட்டகரி ஆளாக இருந்து, உங்க மரணத்துக்குப்பின் உங்க குடும்பத்தை கடவுள் பொருளாதார சீரழிவிலிருந்து காப்பார் என்று நீங்க நம்பினால் – தேவை எனினும் நீங்களும் ஆயுள் காப்பீடு இல்லாமல் வாழலாம். “In God, We Trust” என்று அமெரிக்கா அச்சிடுவதும் பணத்தில்தான் என்பதை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்

வாழ்க்கையின் எந்த எட்டில் நீங்கள் இருந்தாலும் இந்த எட்டில் இல்லாவிட்டால் ஆயுள் காப்பீடு உங்களுக்கு அவசியம். உங்க வருமானத்தை நம்பி ஏதேனும் ஒரு ஜீவன் இருந்தால், நீங்க வருமானம் ஈட்டும் வரையும், அந்த ஜீவன் பொருளாதார ரீதியில் உங்களைச் சார்ந்து இருக்கும் வரையும் உங்களுக்கு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு அத்தியாவசியம்

Please follow and like us: