காப்பீடும் லாப, நஷ்ட கணக்கும்.

ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்ய ரெண்டு சாய்ஸ். முதலாவதில் 9000 ரூபாய் லாபம் நிச்சயம். இரண்டாவதில் பத்தாயிரம் ரூபாய் லாபமடைய 90% வாய்ப்பு, லாபமற்றுப் போக 10% வாய்ப்பு – இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் முதலாவது வழியையே தேர்ந்தெடுக்கின்றனர். 
அதே ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் இருக்கும் போது இப்படி ஒரு நிலை – 9000ரூபாய் நஷ்டம் நிச்சயம் என்று ஒரு சாய்ஸ் பத்தாயிரம் ரூபாய் நஷ்டம் அடைய 90% வாய்ப்பு நஷ்டமே இல்லாமல் தப்பிக்க 10% வாய்ப்பு, இப்படி ஒரு நிலையில் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது ரெண்டாவது வழியை.

இதிலிருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. 
லாபம் தரும் சந்தோஷத்தை விட நஷ்டம் மனிதர்களை அதிகம் பாதிக்கிறது. 
பொதுவாக நாம் லாபத்தை எதிர்நோக்கும் போது ரிஸ்க்கை தவிர்க்கவும் நஷ்டத்தை எதிர் நோக்கும் போது ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை. 
பொதுவாக மக்கள் காப்பீட்டை அதிலும் குறிப்பாக ஜெனரல் இன்சூரன்ஸ் என்றழைக்கப்படும் பொருள் அல்லது சொத்துக்கான காப்பீட்டை லாப நஷ்ட நோக்கிலேயே எதிர்கொள்கின்றனர்.

காப்பீட்டின் அவசியம் ஏற்படும் வரை பலரும் அது குறித்து யோசிப்பதே கிடையாது. எப்போதோ ஒரு முறை நிகழக்கூடிய அல்லது நிகழாமலே போகக்கூடிய ஒரு இயற்கை பேரிடருக்காகவோ திருட்டுக்காகவோ செலுத்தும் காப்பீட்டுத்தொகை நஷ்டம் என்று கூட கருதப்படுகிறது. அதே நேரத்தில் பேரிடர் நிகழ்கையில் நம் எண்ணம் மாறுகிறது, காப்பீட்டை பெறுவதில் உள்ள சாதகங்கள் மாதாந்திர ப்ரீமியத்தை விட அதிகம் என புரிகிறது. 
வீடோ தொழிற்சாலையோ தீப்பற்றிய பிறகும், வெதர்மேன் இன்னும் இரண்டு நாளில் புயலடிக்கும் என்று சொன்ன பின்போ காப்பீட்டை பெற முடியாது.

இதை ஆங்கிலத்தில் ‘prospect theory’ என்று அழைக்கின்றனர். இந்த தியரி மனிதர்கள் எப்படி ரிஸ்க்கை எதிர்கொள்கிறார்கள் என்று விவரிக்கிறது. இந்த தியரியின் படி பெரும்பாலானோர் ஒரே அளவு லாபம் தரக்கூடிய இருவேறு முதலீடுகளை மக்கள் அவர்தம் எண்ணத்தில் எப்படி நோக்குவார்கள் என்று அலசுகிறது. உதாரணத்துக்கு ரெண்டு திட்டத்தில் வரக்கூடிய லாபம் ஒரு லட்ச ரூபாய்தான். முதலாவது திட்டத்தில் நேரடியாக ஒரு லட்ச ரூபாய் லாபம், இரண்டாவதில் ரெண்டு லட்சரூபாய் லாபம் அப்புறம் ஒரு லட்சரூபாய் நஷ்டம் – முதலாதவது திட்டமே நம்மில் பலரின் சாய்ஸாக இருக்கும். அதற்குக் காரணம் லாபம் தரும் சந்தோசத்தை விட நஷ்டம் தரும் துக்கம் அதிகம்.

மனிதர்களின் மற்றொரு குணம் ரிஸ்க்கை பைனரியாகப் பார்ப்பது, அதாவது மனித மனம் ஒரு விசயத்தில் ரிஸ்க் முழுதாக உள்ளது (1) அல்லது ரிஸ்க் இல்லவே இல்லை (0) என்று பைனரியாக சிந்தித்து அதன்படி முதலீட்டு / செலவு சம்பந்தமான முடிவுளை மேற்கொள்கிறது. 
உதாரணத்துக்கு சென்னைவாசிகளிடம் கேட்டால் வெள்ளம் வர வாய்ப்பு முழுமையாக இருப்பதாகவும் எனவே வெள்ள நிவாரண காப்பீடு எடுக்கணும்னு சொல்வாங்க ஆனா நிலநடுக்கத்துக்கான காப்பீடு எடுக்கச் சொன்னா அது எதுக்கு வீண் செலவு என்பார்கள். ஒரு கருத்துக் கணிப்பின் படி வெள்ளம் வந்த அடுத்த ஆண்டு காப்பீடு எடுத்தோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்கிறது. அடுத்த 4 ஆண்டுகள் பெரிய வெள்ளம் ஏதும் வராத நிலையில் கிட்டத்தட்ட பாதி பேர் காப்பீட்டை புதுப்பிக்கவில்லை.

விபத்தோ திருட்டோ ஏதும் நிகழாது என்ற நம்பிக்கையில் சில ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் தொகையை சேமிப்பதாக எண்ணி ஒரு கோடி ரூபாய் சொத்தை காப்பீடு செய்ய மறுக்கிறோம். இதில் ப்ரீமியம் தொகையை நட்டம் என கருதும் நாம் காப்பீடு வழங்கு கவரேஜை லாபமாக கருதாதே இதற்குக் காரணம். ஆனால் இயற்கை பேரிடர் ஒன்று நிகழும் காலத்தில் ப்ரீமியத்தை நட்டமாக நினைக்காமல் கவரேஜை லாபமாகப் பார்க்கிறோம்

வீடோ தொழிற்சாலையோ தீப்பற்றிய பிறகும், வெதர்மேன் இன்னும் இரண்டு நாளில் புயலடிக்கும் என்று சொன்ன பின்போ காப்பீட்டை பெற முடியாது.

எதையெல்லாம் இன்சூர் செய்ய வேண்டும் என்பதை சுலபமாக முடிவு செய்யலாம். சேமிப்பில் கைவைக்காமல் வெறும் மாதாந்திர சம்பளத்தில் எதையெல்லாம் Replace செய்ய உங்களால் முடியாதோ அதையெல்லாம் இன்சூர் செய்வது உத்தமம். 
எங்கு இன்சூர் செய்வது? இந்தியாவில் பல்லாண்டுகளாக ஜெனரல் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கும் நிறுவங்கள் – ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இண்டியா அசூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட், இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டட் மற்றும் பல்வேறு நிறுவங்கள்.

காப்பீடு என்பது லாப நட்ட நோக்கில் பார்க்க வேண்டிய முதலீடு அல்ல. Investing is to Achieve Certainty while Insurance is cover the uncertainty. இனியாவது காப்பீட்டுக்கு செலுத்தும் தொகையை நட்டமெனக் கருதாமல் அதை ஒரு அத்தியாவசியச் செலவாக கருதி மதிப்பு மிக்க பொருட்கள் / சொத்துகள் அனைத்தையும் இன்சூர் செய்ய ஆரம்பிப்போம்.

அடல் யோஜ்னா எளியோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம்

எளியோருக்கான  மத்திய அரசின் பென்சன் திட்டம்

Image result for images for Atal Yojna

35 வயது சுதர்ஷன் கட்டிட வேலை செய்கிறார், அவர் மனைவி ஸ்ரீவித்யா ரெண்டு வீடுகளில் வேலை செய்து விட்டு ஒரு ஐடி கம்பெனியில் காண்ட்ராக அடிப்படையில் துப்புரவுப் பணியாளர் வேலையும் பார்க்கிறார். சுதர்ஷனுக்கு சம்பளம் அதிகமாக இருந்தாலும் நிரந்தரமில்லை, மாதத்தில் 20 நாள் வேலை இருந்தால் பெரிய விசயம்.  இருவருமாகச் சேர்ந்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பார்கள். பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லேன்னாலும் கடனில்லாத வாழ்க்கை. இவர்களைப்போன்று அமைப்பு சாரா தொழிலாளிகளின் மிகப்பெரிய பிரச்சனை உடல் ஒத்துழைக்கும் வரை வேலை செய்ய இயலும் அதற்கப்புறம் என்ன வழி என்று யாருக்கும் தெரியாது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியத் திட்டங்கள் பல உள்ளன, இவர்களைப் போன்ற அமைப்பு சாரா தொழிலார்களுக்கு அவற்றில் பங்கு பெரும் வாய்ப்பில்லை, வாய்ப்பு இருக்கும் ஒரு சில திட்டங்கள் குறித்தும் இவர்களுக்கு அறிமுகம் இல்லை.

இதை உணர்ந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய அருமையான திட்டம்தான் அடல் பென்சன் யோஜ்னா. முந்தைய அரசு அறிமுகப்படுத்திய Swavalamban Yojna திட்டத்தில் இருந்த குறைகளை நீக்கி அதிக அளவில் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது மோடி அரசு.

இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுவரை உள்ள இந்தியர் எவரும் சேரலாம். 60 வயது வரை சேமிக்கணும், மாதாமாதம் சிறு தொகையை செலுத்த வந்தால் 60 வயது முதல் உயிருள்ள வரை பென்சன் கிடைக்கும்.

உதாரணத்துக்கு 30 வயது ஆகும் ஒருவர் மாதம் 116 ரூபாய் வீதம் 30 ஆண்டுகள் செலுத்தி வந்தால் அதற்கப்புறம் மாதம் 1000 ரூபாய் பென்சன் கிடைக்கும். அவரே மாதம் 577 ரூ செலுத்தி வந்தால் 5000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

அவர் இறந்த பின் அவரது மனைவி அல்லது கணவனுக்கு அத்தொகை கிடைக்கும், இருவரும் இறந்தபின் வாரிசுக்கு முழுத்தொகையும் கிடைக்கும்.

சுதர்ஷன் மாதத்துக்கு 902 ரூபாய் + ஸ்ரீவித்யா மாதத்துக்கு 577 ரூபாய் மொத்தம் 1479 ரூபாய்கள் செலுத்தி வந்தால், அவர்களுக்கு 60 வயது ஆகும் போது தலா 5000 ரூபாய் வீதம் குடும்ப பென்சன் 10,000 ரூபாய் கிடைக்கும். இது அவர்கள் இறக்கும் வரையில் வழங்கப்படும், அதற்கப்புறம் அவங்க மகளுக்கு 17 லட்சம் ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கு 60 வயது ஆகும் போது மாதம் 10 ஆயிரம் ரூபாய்கள் போதாது, ஆனால் அவர்களுக்குத் தேவைப்படும் தொகையில் ஒரு பங்கையாவது இது கொடுக்கும்.

இதில் யார் சேரலாம்?  – 18 முதல் 40 வயது வரை உள்ள Resident இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம்

திட்டத்தில் சேருவது எப்படி?  வங்கிகள் மூலம் இத்திட்டம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான அரசுடமை வங்கிகளும் பல தனியார் வங்கிகளும் இத்திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஜுன் மாதம் விஜயா வங்கி இத்திட்டத்தை சிறப்பாக மக்களில் எடுத்து சென்றதற்கான விருதைப் பெற்றுள்ளது.

KYC or Demat அவசியமா ? இல்லை இத்திட்டத்தில் சேர் ரெண்டுமே அவசியமில்லை. ஆதார் எண் அவசியம், இதற்கு ஆதார் எண்ணே KYC போல செயல்படும்

எவ்வளவு நாள் பணம் செலுத்த வேண்டும்?  : 60 வயது ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும்

எவ்வளவு செலுத்தினால் எவ்வளவு பென்சன் கிடைக்கும்?  இங்கு இணைக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் அதைக் காணலாம்

இடையில் பயனர் இறந்தால் என்ன ஆகும்?  அவரது கணவன் அல்லது மனைவிக்கு பென்சன் வழங்கப்படும், அதற்கப்புறம் பணம் கட்டத்தேவையில்லை, இருவரும் இறந்தபின் மொத்தப்பணம் நாமினிக்கு வழங்கப்படும்

இதன் சாதகம் என்ன? அமைப்பு சாரா தொழிளாலர்களுக்கு இந்தியாவில் பென்சன் தரும் திட்டம் இது ஒன்றே. அவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி ஓய்வு கால பென்சனுக்கு இது வகை செய்கிறது

மாதாந்திரம் கட்டும் பணத்தையும் மெச்சூரிட்டி பணத்தையும் கணக்கெடுத்தால் 8% கூட்டு வட்டி வருகிறது. அரசின் திட்டமாதலால் 100% பாதுகாப்பு உடையது. 100% பாதுகாப்பும் 8% கூட்டு வட்டியும் என் கருத்தில் மிகச் சிறந்த முதலீடு

மெச்சூரிட்டி தொகைக்கு 7% ஆண்டு வட்டி அல்லது பென்சன் வழங்கப்படும். உதாரணத்துக்கு 8,50,000 மெச்சூரிட்டி பணத்துக்கு மாதம் 5000 ரூபாய் / ஆண்டுக்கு 60,000 பென்சன் கிடைக்கும். ஆன்னுவிட்டி என்று அழைக்கப்படும் பென்சன் திட்டத்தில் இன்று அமெரிக்காவில் 3% கிடைக்கிறது, இந்தியாவில் மட்டும்தான் ஜீவன் அக்‌ஷய் மற்றும் சில ஆன்னுவிட்டி திட்டங்களில் 6-7% கிடைக்கிறது, இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலும் ஆன்னுவிட்டிகள் 3-4%க்கு வந்துவிடும், அப்போதும் இத்திட்டம் 7% வழங்கும். இவ்விரண்டு காரணங்களால் இது ஒரு நல்ல திட்டமாக எனக்குப் படுகிறது

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் இந்த அளவுக்கு சிறந்த வட்டி இருப்பதால்  மற்றவர்களும் இதில் முதலீடு செய்யலாம். எல்லாரோட போர்ட்ஃபோலியோவிலும் ஈக்விட்டி தவிர்த்து பாண்ட் / Debt / Fixed Income கள் இருக்க வேண்டும், அந்த முதலீடுகளின் ஒரு பகுதியை இதில் முதலீடு செய்யலாம். இந்திய அரசின் திட்டம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு இதற்கு உண்டு.

பாதகம் : இன்றைய நிலையில் திட்டத்தின் ஒரே பாதகமாக நான் கருதுவது பென்சனின் அளவு மட்டுமே. இன்னும் 18 வயதில் சேரும் ஒருவன் பென்சன் பெற இன்னும் 42 ஆண்டுகள் ஆகும் அப்போது தலா 5000 / குடும்பத்துக்க்கு 10,000 ரூபாய் என்பது மிகக்குறைவு. இதே வட்டியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஏனையோருக்கு கொஞ்சம் குறைந்த வட்டியிலும் மாதம் 10 அல்லது 20 ஆயிரம் பென்சன் வருமளவுக்கு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

தயவு செய்து இத்திட்டத்தை உங்களுக்குத் தெரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள், வீட்டில் வேலை செய்பவர், கார் ட்ரைவர், கட்டிடத் தொழிலாளிகள், உணவகங்களில் வேலை செய்வோர் போன்றோர் ஃபேஸ்புக்கிலுல் யூடெர்ன் வலைதளத்திலும் இதை படிக்க இயலாது. அவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதை எடுத்துச் சென்றாலும் பேருதவியாக இருக்கும். சந்தேகங்கள் இருப்பின் வங்கிகளை அணுகலாம் அல்லது எனக்கு மின்மடல் அனுப்பினால் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவற்றைத் தீர்த்து வைக்கவும் முடியும்.

               
  Amount To Pay As Per Age      
Monthly Pension at 60 18 years 20 years 25 years 30 Y 35Y 40Y Corpus
1000 42 50 76 116 181 291 1.7 Lakhs
2000 84 100 151 231 361 582 3.4 Lakhs
3000 126 150 226 347 543 873 5.1 Lakhs
4000 168 198 301 462 722 1164 6.8 Lakhs
5000 210 248 376 577 902 1454 8.5 Lakhs

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு அல்ல இப்பதிவு.

தங்கத்தில் முதலீடு செய்தே ஆவேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையும் புதிதாய் வந்திருக்கும் Sovereign Gold Bonds பற்றியும் சொல்லவே இப்பதிவு

வழக்கமாய் கடைகளில் செய்கூலி, சேதாரம் எல்லாம் கட்டி, பில் போட்டா ஒரு விலை, பில் போடலேன்னா ஒரு விலை என்று பேரம் பேசி நகைகளும் ஆலிலை கிருஷ்ணர் காயின்களும் வாங்கும் வித்தை நாம் அறிந்ததே

அப்புறம் Stock Market இல் விற்கும் Gold ETF வந்தது, இதில் டீமேட் அக்கவுண்ட் மூலம் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு வந்தது

இவை தவிர மத்திய அரசு Sovereign Gold Bond களை அறிமுகப் படுத்தியுள்ளது. முன்னேப்போதும் இல்லாத முதலீட்டுக்கு வட்டி தரும் திட்டம் இது

விலை : சென்ற வாரம் தங்கத்தின் விலையை விட கிராமுக்கு 50 ரூ குறைவு

எவ்வளவு வாங்கலாம் : தனிநபர் ஆண்டுக்கு 1 கிராம் முதல் 500 கிராம் வரை வாங்கலாம்

முதலீட்டு காலம் : 8 ஆண்டுகள்

வட்டி : ஆண்டுக்கு 2.5 % வட்டி வழங்கப் படுகிறது

ஃபார்மேட் : டீமேட் அக்கவுண்டில் வரவு வைக்கலாம் அல்லது காகித ரசீதாகவும் வைத்துக்கொள்ளலாம்

அன்பளிப்பு / பேர் மாற்றம் : இந்த பாண்ட்களை பிறருக்கு பரிசாக அளிக்கலாம், பேர் மாற்றியும் கொடுக்கலாம் (விதிகளுக்கு உட்பட்டு)

முன்னரே விற்கும் வாய்ப்பு : 5 ஆண்டுகளுக்குப் பிறகு விற்க இயலும்

கடன் வசதி : இவற்றை கடன்களுக்கு பிணையாக வழங்க முடியும்

பணம் திரும்பப் பெறுதல் : 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பணம் வாங்கும் போது அதற்கு முந்தைய வாரம் தங்கத்தின் சராசரி விலை என்னவோ அது நமக்கு கிடைக்கும்.

பொதுவா தங்கத்தில் முதலீடு செய்யும் போது தங்க விலையில் இருக்கும் ஏற்றம் மட்டுமே லாபம். கடைகளில் வாங்கும் போது அதிலும் பெரும்பகுதி செய்கூலி, சேதாரம், வரி என்று போய்விடும். இந்த பாண்ட்களில் கேபிடல் கெயின் (விலை ஏற்றம்) மட்டுமல்லாது ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது

மற்ற வித்தியாசங்கள் கீழேயுள்ள பட்டியலில்

மொதல்ல சொன்னா மாதிரி இது தங்க முதலீடு சிறந்ததா பிற முதலீடுகள் சிறந்தவையா என்று ஆராய்வதல்ல. தங்க மூதலீட்டுக்குள் இருக்கும் வாய்ப்புகள் குறித்து அறிய மட்டுமே

SIP முதலீடு மாய மந்திரமா?

Image may contain: one or more people and text

SIP முதலீட்டையும் ஈமு கோழி ரேஞ்சுக்கு ஆக்காம விட மாட்டாங்க போலருக்கு. இதுக்கும் ஆறு வாரம் க்ரீம் போட்டா வெள்ளையாகிடலாம், என்ன வேண்டா தின்னலாம், உடற்பயிற்சியும் வேணாம் எங்க மாத்திரை மூணு மாசம் தின்னா இளைச்சிடலாம் போன்ற விளம்பரங்களுக்கும் வித்தியாசமேயில்லை.

எஸ் ஈ பி என்பது Asset Class அல்ல, எப்படி வைப்பு நிதிக்கு ரெக்கரிங் டெபாசிட் ஒரு குட்டித் தம்பியோ அது போல ஈக்விட்டி (பங்குச் சந்தை), பாண்ட் / Debt இவற்றில் மாதாமாதம் சிறு தொகை தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு வழிதான்.

எஸ் ஐ பி முதலீடு, முதலீட்டாளர் என்பது என்னவோ அது ஒரு தனி அசெட் க்ளாஸ் என்பது போல தோற்றத்தைத் தருகிறது. ஷேர் எல்லாம் ரொம்ப ரிஸ்க் அதான் மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செய்யறேன்னு சொன்னவங்களை ஏற்கெனவே பாத்துட்டேன், ஷேர், மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் ரிஸ்க் அதான் எஸ் ஐ பில முதலீடு செய்யறேன்னு பொதுமக்களை செய்யவச்சிடுங்கன்னு நினைக்கிறேன் இந்த மாதிரி படங்களை போடும் ஆலோசகர்கள்

பெரிய மீனை போட்டு சின்ன மீன் லாபம் பார்க்கும் முதலீடு என்னதுன்னு சொல்லலை

எஸ் ஐ பி முறை என்பது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது அல்ல, ஒரு முறை மட்டும் சின்ன மீனை போட்டுவிட்டு பெரிய மீனுக்காக காத்திருப்பது போல அல்ல எஸ் ஐ பி என்பது. 
இன்னும் சொல்லப் போனால் மீன் பிடிப்பது போலவே அல்ல. நாலு தொட்டி வச்சு (லார்ஜ் கேப், மிட் கேப், மல்ட்டி கேப் மற்றும் பாண்ட்), ஒவ்வொன்றிலும் மாதா மாதம் ஒரு சிறு மீனை வாங்கி போட்டு அவை அவற்றின் இயல்புக்குத் தகுந்தவாறு குட்டிகள் போட்டு இறுதியில் பெரிய பண்ணையாக்கி அவற்றை விற்று பணமாக்குவது போன்றது எஸ் ஐ பி. ஆண்டுக்கு ஒருமுறையாவது அதிகமா நிரம்பியிருகும் தொட்டியிலிந்து மீன்களை பிற தொட்டிகளுக்கு மாற்றணும், தொட்டி சரியா இல்லேன்னா அதை தூக்கிப் போட்டுட்டு அதிலுள்ள மீன்களை வேறு நல்ல தொட்டிகளுக்கு மாற்றணும் (ரீபேலன்சிங்) இப்படி தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பதுதான் எஸ் ஐ பி யே தவிர சின்ன மீனை போட்டுவிட்டு பீர் குடிச்சிக்கிட்டே பெரிய மீன் தானா வந்து மாட்டும் என்று காத்திருப்பதல்ல

சமயத்தில் ஒரு தொட்டியில் இருக்கும் பல மீன்கள் சாகவும் வாய்ப்புண்டு, ஒரே தொட்டியில் இருந்தால் ஆபத்து அதிகம் என்பதால்தான் 3-4 தொட்டிகள் வைக்கணும் என்கிறார்கள்

காம்பவுண்ட் இண்ட்ரெஸ்ட் எனும் கூட்டு வட்டி ரொம்ப சிறப்பானது, ஆனால் அது வேலை செய்ய வெகு காலமாகும். 
இது மாதிரி சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடிக்கலாம் போன்ற ஆசை வார்த்தைகள் நெறய ரீடெயில் இன்வெஸ்டர்களை சந்தைக்குள் அழைத்துவரும், ஆனா சரியான தெளிவு இன்றி வருபவர்கள் மார்க்கெட் சரியும் போது நஷ்டத்தில் வெளியே போவாங்க, அது சந்தை மேலும் சரிய காரணமாகும்.

சிகரெட் பாக்கெட்டில் இருப்பதுபோல் உபயோகமற்ற எச்சரிக்கை வாசகம் வேறு இந்த அழகில்

இது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றில் நீண்ட காலம் முதலீடு செய்வது நல்லது

காப்பீட்டு பணத்தைக் கடனாளிகளிடமிருந்து காப்பது எப்படி?

சுதாவின் கணவர் ரங்கராஜ் சிறு தொழில் ஒன்றை நிறுவி நல்ல முறையில் நடத்தி வந்தார். தொழில் அபிவிருத்திக்காக நிறைய கடன் வாங்கியிருந்தார். குடும்பத்தின் பாதுகாப்புக்காக ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசியும் எடுத்திருந்தார்

வித்யாவின் கணவர் சந்தானம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி, இவரும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி ஒரு கோடி ரூபாய்க்கு எண்டோமெண்ட் பாலிசி எடுத்து வைத்திருந்தார்

கவிதாவின் கணவர் சங்கரும் லதாவின் கணவர் ஜோசஃபும் தலா ஐம்பது லட்சரூபாய்க்கு ஹோல் லைஃப் பாலிசி வாங்கியிருந்தனர்.

கணவர்கள் நால்வரும் ஒரு ரயில் விபத்தில் இறந்தனர். கணவர்களின் மரணம் பேரிழப்பாக இருந்தாலும் இன்சூரன்ஸ் பணம் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த உதவும் என்று எண்ணியிருந்த குடும்பத்தாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒருவரின் இன்சூரன்ஸ் பணத்தை கடன் கொடுத்தவர்கள் பெற்றுச் சென்றனர். ஒருவர் குடும்பத்துக்குத் தெரியாமல் 75% இன்சூரன்ஸ் கம்பெனியிலேயே லோன் வாங்கியிருந்தார். இன்னொருவர் மனைவியிடம் சொல்லாமல் சென்ற மாதம்தான் பாலிசியை சரண்டர் செய்து விட்டிருந்தார். கடைசி ஆள் இன்னொரு நாமினி பேரை இன்னோரு பெண்ணுக்கு மாற்றி விட்டிருந்தார்.

இவர்கள் நால்வருக்கும் நேர்ந்தது வேறு யாருக்கும் நேராமல் இருக்க ஒரு வழி இருகிறது அதுதான் MWP Act எனப்படும் Married Women’s Property Act மூலம் காப்பீடு பெறுவது. இச்சட்டம் மணமான பெண்களின் சொத்துக்களை சொந்தக்காரர்கள், கடன் கொடுத்தவர்கள் மற்றும் கணவனிடமிருந்து காக்க உருவானது. இதன் ஆறாம் செக்சன் காப்பிட்டு பணப்பாதுக்காப்பு குறித்தானது. ஆயுள் காப்பீடு எடுக்கும் போது MWP Act form இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே எடுத்த பாலிசியில் இதை இணைக்க முடியாது. பாலிசி எடுப்பவர் தனக்கு மட்டுமே இதை எடுக்க முடியும், வேறு ஒருவருக்காக எடுக்க முடியாது. பாலிசி தாரர் இறந்தால் காப்பீட்டுப் பணம் மனைவிக்கு மட்டும், பிள்ளைகளுக்கு மட்டும், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு என்று ஏதாவது ஒரு ஆப்சன் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

காப்பீட்டுப் பணம் அனைவருக்கும் சரிசமமாகப் பிரிக்கும் படியும் இதனை எழுதலாம் அல்லது யாருக்கு எத்தனை சதவீதம் என்று குறிப்பிட்டும் எழுதலாம். ஆனால், ஒரு முறை தேர்ந்தெடுத்தபின் அதை மாற்ற இயலாது.

MWP Act இன் கீழ் எடுக்கப்படும் ஒவ்வொரு ஆயுள் காப்பீடும் ஒரு ட்ரஸ்ட் போன்றது. ட்ரஸ்டின் சொத்துகள் அதன் Beneficiaries க்கு மட்டுமே சொந்தம் . பாலிசிதாரருக்கோ அவருடைய நிறுவனத்துக்கோ கடன் கொடுத்தவர்கள் அவருடைய வீடு, வங்கியில் உள்ள பணம், ஆயுள் காப்பீட்டுத் தொகை உள்பட அனைத்து சொத்துகள் மீதும் உரிமை கொண்டாட முடியும் ஆனால் அவர்களால் இந்தச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயுள் காப்பீடு பணத்தின் மீது உரிமை கோர முடியாது

இச்சட்டம் வெளி ஆட்கள் மட்டுமல்லாது கணவரிடமிருந்தும் குடும்பத்தைக் காக்கிறது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட பாலிசியை சரண்டர் செய்யவும் முடியாது, பாலிசியிலிருந்து கடனும் பெற முடியாது. ஒரு முறை மனைவியை நாமினியாக அறிவித்த பின் வேறு யார் பேருக்கும் அதை மாற்றவும் முடியாது.

சரி. இந்தப் பாலிசியை எப்படி பெறுவது?
MWP Act பாதுகாப்பு பெறுவது எளிது, இதற்காக ஒரு எளிய விண்ணப்படிவம் உள்ளது. இது எல்லா இன்சூரன்ஸ் முகவர்களிடமும் இருக்க வேண்டும். ஆயுள் காப்பிட்டு படிவத்துடன் இதையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும், இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

பாதகங்கள்
இத்திட்டத்தின் பாதகங்கள் என்று பார்த்தால், இன்சூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்ய இயலாது. ஏதேனும் கடனுக்காக இன்சூரன்ஸ் பாலிசியைப் பிணையாக தர முடியாது. மெச்சூரிட்டி தொகை வரும் பாலிசியாக இருந்தால், அத்தொகை நேரடியாக மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தான் போகுமே தவிர பணம் போட்ட குடும்பத் தலைவருக்கு வராது.

பாலிசி பற்றி குடும்பத்தாரிடம் சொல்லி வையுங்கள்

No photo description available.

காப்பீடு எடுத்தா மட்டும் பத்தாது. எப்படி க்ளெய்ம் செய்வதுனு வீட்ல இருக்கவங்களுக்கு அவசியம் சொல்லியும் கொடுக்கனும். நம்ம கிட்ட இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை – பல ஆண்கள் மனைவியிடமோ பிள்ளைகளிடமோ நிதி சம்பந்தமா எதுவுமே சொல்வதில்லை. பெண்களும் “அதெல்லாம் எனக்குத் தெரியாது என் வீட்டுக்காரருக்குத்தான் தெரியும் அவருதான் எல்லாத்தையும் பாத்துக்கறாரு” என்று இருந்து விடுகிறார்கள். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்களும் இதில் அடக்கம். வங்கிக் கணக்கு பாஸ்வேர்ட், எங்க என்ன சேமிப்பு, முதலீடு இருக்கு, என்னென்ன காப்பீடுகள் இருக்கு இப்படி எதுவுமே சொல்லாம கணவர் திடீர்னு இறந்தா மனைவி இப்படி வங்கிக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் பணத்தை தாரை வார்க்க வேண்டியதுதான்

முதியோருக்கான முதலீட்டு வாய்ப்புகள்.

நம் அப்பாவும் தாத்தாவும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற போது வந்த பணத்தை இந்தியன் வங்கியிலோ சுந்தரம் ஃபைனாஸிலோ போட்டுவிட்டு வந்த வட்டியில் வாழ முடிந்தது. 15% வட்டி, போட்ட பணம் 5 வருடங்களில் இரட்டிப்பான காலமெல்லாம் போய் இப்ப சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி 7.25% ல வந்து நிக்குது. வரும் காலங்களில் இது இன்னும் குறையும் என எதிர்பாக்கலாம்.

ஓய்வு பெற்றவர்களில் பலரும் பங்குச் சந்தை குறித்து அறிமுகம் இல்லாதவர்கள். ஈக்விட்டியிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அவர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் என்னென்ன?

1. Fixed Deposit with Non Banking Financial Companies : வைப்பு நிதி என்பது வங்கிகளால் மட்டும் வழங்கப்படுவதல்ல. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட பல நிறுவங்கள் 5 ஆண்டுகள் வரை வைப்பு நிதி பெறுகின்றன. இவை வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகின்றன

எல் ஐ சி ஹவுசிங் – 7.7%, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் 8.5%, மஹிந்த்ரா நிறுவனம் 8.3%, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் 9.38% ஆகியவை சில உதாரணங்கள் (இவை சீனியர் சிட்டிசன்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும் திட்டங்கள, மாதாமாதம் வட்டி வேணும்னா கொஞ்சம் கம்மியாகும்.ஆண்டுக்கொருமுறை வட்டி வங்கிக்கு வருமாறு செய்துவிட்டு மாதாமாதம் எடுத்துக்கொள்வது அதிக நன்மை பயக்கும்)

சாதகம் : வங்கியை விட அதிக வட்டி
பாதகம் : வங்கிகளை விட பாதுகாப்பு கொஞ்சம் குறைவு என்று சொல்லலாம். வங்கிகள் போற போக்கைப் பாத்தா அதுவும் பாதகமாத் தெரியல

2. பிரதம மந்திரி வய வந்தன யோஜ்னா: 
60 வயது மேற்பட்டோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம். எல் ஐ சி வழியாக வழங்கப் படுகிறது

காலம் : 10 ஆண்டுகள் 
வட்டி : மாத வட்டிக்கு 8%, ஆண்டுக்கு ஒரு முறை வாங்கினால் 8.3%
அதிக பட்ச முதலீடு : 15 லட்சம் 
நடுவில் டெபாசிட்டை உடைக்க முடியாது, ஆனா 3 ஆண்டுகளுக்குப் பிறகு 75% கடன் பெற்றுக் கொள்ளலாம்

சாதகங்கள் : 10 ஆண்டுகளுக்கு 8.3% வட்டி தரும் திட்டம் வேறு எதுவும் இன்று இல்லை 
மத்திய அரசின் திட்டம் ஆதலால் பாதுகாப்பு மிக அதிகம் 
வட்டி குறையாமல் 10 ஆண்டுகளும் இருக்கும்

பாதகங்கள் : வங்கிகளில் செய்வது போல டெபாசிட்டை உடைக்க முடியாது
15 லட்சம் வரைதான் இதில் முதலீடு செய்ய முடியும்

3. சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் 
60 வயதுக்கு மேற்பட்டோரும் வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிய 55 வயதுக்கு மேற்பட்டோரும் முதலீடு செய்யலாம்

8.6% வட்டியில் ஆரம்பிச்சது இப்ப 8.3% த்தில் வந்து நிக்குது

வங்கிகள் மூலமோ, தபால் அலுவலகம் மூலமோ முதலீடு செய்யலாம்

15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்

காலம் : 5 ஆண்டுகள், அப்புறம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்

ஒரு வருடம் கழித்து Pre Mature Withdrawal செய்யலாம் (கட்டணம் உண்டு)

சாதகங்கள் 
வங்கியை விட அதிக வட்டி 
செக்சன் 80 C யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு

பாதகம் : வட்டி நிர்ணயம் இல்லை, ஆண்டுக்கொரு முறை வரி மாற்றி அமைக்கப்படும். குறைந்து கொண்டே வரும் என நினைக்கிறேன்

4. எல் ஐ சியின் ஜீவன் அக்‌ஷய் : 
இது ஒரு வகை பென்சன் திட்டம். உலகிலுள்ள பெரும்பான்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் Annuity என்ற பென்சன் திட்டத்தை வழங்குகின்றன. நான்றிந்த வரையில் ஜீவன் அக்‌ஷய் அளவுக்கு பென்சன் வழங்கும் Annuity வேறு எதுவுமில்லை

முதலீட்டுத் தொகை : எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

இத்திட்டம் முதியோருக்கு மட்டுமல்ல, யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். வாழ் நாள் முழுதும் மாறாத (குறையாத) பென்சன் தரும் திட்டம் என்பதால் இதை இங்கு சேர்த்தேன்

முதலீடுத்தொகை, வயது, எல் ஐ சி தரும் 7 ஆப்சன்கள் இவற்றிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும். 60 வயதுக்கு மேற்பட்டோர் எடுக்கும் ஆப்சனுக்கு ஏற்ப 7-8% எதிர்பார்க்கலாம்

1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். 
இவையே அந்த 7 ஆப்சன்கள் 
சாதகம் : இன்று ரிட்டையர் ஆகும் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகள் உயிருடன் இருப்பார் என எதிர்பார்க்கலாம். இன்னும் 5-10 ஆண்டுகள் கழித்து இன்று இருக்கும் வட்டி விகிதம் இருக்காது. இந்த ஒரு திட்டம் மட்டும் தான் வாழ் நாள் முழுதும் குறிப்பிட்ட வட்டி கேரண்டீட் தருகிறது. 
முதலீட்டுத் தொகைக்கு சீலிங் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் 
பாதகம் : உங்க வாழ் நாளில் பணம் திரும்ப வராது, வட்டி மட்டுமே வரும். மூன்றாவது & ஏழாவது ஆப்சனில் மட்டும் உங்க வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்

5. மத்திய அரசின் 7.75% கடன் பத்திரம் 
பேரே இதன் முழு விவரங்களையும் சொல்லிவிடும்
இது ஒரு கடன் பத்திரம், மத்திய அரசால் வழங்கப்படுவது

இதுவும் சீனியர் சிட்டிசன்கள் மட்டுமன்றி எல்லாருக்குமான முதலீடு. வங்கிகளை விட சிறிது அதிக வட்டி மற்றும் மத்திய அரசு கடன் பத்திரம் என்பதால் அதிக பாதுகாப்பு – இவ்விரு காரணங்களால் இதையும் இங்கு பட்டியலிட்டேன்.

வட்டி : ஆண்டுக்கு 7.75% 
எவ்வளவு முதலீடு செய்யலாம் : உச்சவரம்பு இல்லை 
முதலீட்டு காலம் : முதலீடு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைக்கும் – இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது

60 முதல் 70 வயதானவர்கள் 6 ஆண்டுகளுக்குப்பிறகும் 
70 முதல் 80 வயதானவர்கள் 5 ஆண்டுகளுக்குப்பிறகும் 
80 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆண்டுகளுக்குப்பிறகும் பணம் திரும்பப் பெறலாம்.

சாதகம் : வங்கிகளை விட சிறிது அதிக வட்டி 
பாதகங்கள் : குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் திரும்பப் பெற முடியாது 
இக்கடன் பத்திரங்கள் டீமேட் அக்கவுண்ட் மூலமே வழங்கப்படுகின்றன. டீமேட் அக்கவுண்ட் இல்லாதவர்கள் இதற்காக மட்டும் டீமேட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.

இவை தவிர, போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் ஸ்கீம்னு ஒண்ணு இருக்கு. அதில் ஒரு வருஷத்துக்கு 6.6%, ரெண்டு வருசத்துக்கு 6.7% மூணு வருஷத்துக்கு 6.9%, அஞ்சு வருசத்துக்கு 7.4% வட்டி வழங்கப் படுகிறது. இது வங்கி வட்டியை ஒத்திருப்பத்தால் இது குறித்து பெரிசா எழுத ஒன்றுமில்லை.

மாதாந்திர வட்டி தேவைப்படாதவர்கள் பெரும்பாலும் Cumulative Deposit செய்வார்கள். அதில் வரும் மொத்த வட்டிக்கும் வருமான வரி உண்டு. கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும்னா – கையிருப்பை இதில் ஏதாவது ஒரு வைப்பு நிதியில் போட்டு அதில் வரும் வட்டியை மட்டும் ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் முடிவில் Cumulative Deposit மூலம் பெறுவதை விட அதிகம் பெற வாய்ப்பு அதிகம்.

ஜீவன் அக்‌ஷய் ஆன்னுவிட்டித் திட்டம்

Image may contain: 2 people, people smiling
திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி முதலீடு செய்யும் போது எடுக்கப்பட்ட படம்

LIC யின் Jeevan Akshay குறித்து ஏற்கெனவே இங்கும் நாணயம் விகடனிலும் எழுதியிருக்கிறேன். முன்னாள் குடியரசுத் தலைவர் ப்ரணாப் முகர்ஜியும் சமீபத்தில் இதில் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீடு செய்ததால் இது நல்ல திட்டம் என்பதில்லை, இது நல்ல திட்டம் என்பதால் அவரும் முதலீடு செய்துள்ளார்

பழைய பதிவு – ஏற்கெனவே படிச்சவங்க ஸ்கிப் பண்ணிடுங்க

அறிவோம் ஆன்னுவிட்டி(Annuity )

வங்கிகளும், பிற நிறுவங்களும் நிரந்தர வைப்பு நிதிக்குத் தரும் வட்டியை நம்பியிருப்போருக்கு இது கடின காலம்.

கடந்த இருபது வருடங்களில் வைப்பு நிதியின் (ஃபிக்ஸ்ட் டெபாசிட்) வட்டி பாதியாக குறைந்துள்ளது. 1997ம் ஆண்டு தமிழகத்தில் ரிட்டையர் ஆன தம்பதியர் மாதம் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய்க்குள் வாழ முடிந்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லைஃப் ஸ்டைலுக்கு 25,000ரூ தேவைப்படும். அதாவது இருபது ஆண்டுகளில் விலைவாசி 4 – 5 மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் 1997ல் வங்கிகள் 12 -13 சதவீதமும் நிறுவனங்கள் 16 சதவீதமும் வழங்கி வந்தன. இன்றோ வங்கிகள் 6.5% வழங்குகின்றன. சுந்தரம் ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்கள் 7.25% வழங்குகின்றன ஆனால் அதிகபட்சமாக 3 அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டுமே டெபாசிட் பெறுகின்றன. இந்தியாவும் சந்தைப் பொருளாதார நாடாக மாறி வரும் நிலையில் வாங்கும் & வழங்கும் வட்டி இரண்டுமே இனி இறங்கு முகமாத்தான் இருக்க முடியும். கடன் வாங்கி வீடோ வண்டியோ வாங்க எத்தனிக்கும் இளம் வயதினருக்கு இது சாதகமாக இருந்தாலும் ரிட்டையர் ஆன அவங்க பெற்றோருக்கு இது பாதகமாகவே இருக்கும். 
அமெரிக்காவில் இன்று 10 வருட டெபாசிட்டுக்கு அதிக பட்சமாக 2.75% வட்டி, 5 வருசத்துக்கு 2% வட்டி. இந்தளவுக்கு குறையாவிட்டாலும் இந்தியாவில் வைப்பு நிதி வட்டி 5% அளவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. இப்படி குறைந்து கொண்டே வரும் நிலையில் வட்டியை நம்பியிருப்போர் என்ன செய்வது? இவர்களில் பலர் ஈக்விட்டியிலும் பாண்டிலும் பணத்தை போட விரும்புவதில்லை. இவர்களுக்கான தீர்வே ஆன்னுவிட்டி (Annuity) அல்லது ஆண்டுத் தொகை திட்டங்கள். 
முதலீட்டாளருக்கு வாழ்நாள் முழுதும் ஆண்டுத் தொகை வழங்கும் திட்டமே ஆன்னுவிட்டி. இவற்றை காப்பீடு நிறுவங்கள் மட்டுமே வழங்க முடியும். வங்கிகளில் பெற முடியாது. 
ஆன்னுவிட்டியில் ஃபிக்ஸ்ட் ஆன்னுவிட்டி, மாறக்கூடிய ஆன்னுவிட்டி (variable annuity), உடனடி ஆன்னுவிட்டி, பிற்கால ஆன்னுவிட்டி (deferred annuity), குறிப்பிட்ட சதவீதத்தில் அதிகரிக்கும் ஆன்னுவிட்டி என்று பல வகை உண்டு.

ஃபிக்ஸ்ட் ஆன்னுவிட்டியில் போடும் பணத்துக்கு முதலீட்டாளர் உயிருடனிருக்கும் வரையில் ஆண்டுத்தொகை வழங்கப்படும். முதலீடு செய்த அன்று நிர்ணயிக்கப்பட்ட வட்டி வாழ்நாள் முழுதும் மாறாது. அவருக்குப் பிறகு கணவனுக்கோ மனைவிக்கோ கிடைக்கும்படியும் செய்யலாம். முதலீட்டாளர் இறந்த பின் அவருடைய வாரிசுக்கு முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்கும் திட்டத்துக்கு கொஞ்சம் கம்மி வட்டியும், முதலீட்டை யாருக்கும் திருப்பித் தரத் தேவையில்லாத திட்டத்துக்கு அதிக வட்டியும் கிடைக்கும். 
நெறய பேருக்கு வாரிசுகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப்பின் பத்து, இருபது லட்ச ரூபாய் ஒரு பொருட்டாய் இருக்காது. ஆனால் உயிருடன் இருக்கும் வரையில் முதலீட்டாளருக்கு மாதம் அதிகம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பிள்ளைகள் கையை எதிர்நோக்கி இருக்காமல் இருக்க உதவும். இந்த மாதிரி கேட்டகரி முதலீட்டாளர்கள் திரும்ப பணம் வராத ஆன்னுவிட்டியை தெரிவு செய்யலாம். 
உடனடி ஆன்னுவிட்டியில், பணம் போட்ட அடுத்த வருடத்திலிருந்து ஆண்டுத் தொகை கிடைக்கும். 
பிற்கால ஆன்னுவிட்டியில் மாதாமாதம் அல்லது ஆண்டுக்கொரு முறை பணம் போட்டு வந்தால், ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு ஆண்டுத் தொகை கிடைக்கும்.
உயரும் ஆன்னுவிட்டியில் ஆண்டுத்தொகை குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்து கொண்டே வரும். 
ஆன்னுவிட்டியின் சாதகங்கள்
வங்கிகள் தரும் வட்டி குறைந்துவிடுமோ என்ற கவலையில்லை.
ஆண்டுக்கு 3% அதிகமாகிக்கொண்டே போகும் திட்டத்தில் பணம் போட்டால் விலைவாசி ஏற்றத்தையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம்

ஆன்னுவிட்டியின் பாதகம்
ஆன்னுவிட்டியில் போட்ட பணம் முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை திரும்பக் கிடைக்காது. வைப்பு நிதியைப் போல லிக்விடிட்டி கிடையாது.

இந்திய அரசு நிறுவனமான எல் ஐ சி வழங்கும் ஜீவன் அக்‌ஷய் ஓய்வூதியத் திட்டம் இப்போது பிரபலமாக உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கிகள் தரும் வட்டி விகிதம் குறைந்ததால் நிறைய பேர் இத்திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். மகாராஷ்ட்ர மாநிலம் தானேவில் ஒருவர் 100 கோடி ரூபாய் திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார். 
ஜீவன் அக்‌ஷய் ஒரு உடனடி பென்சன் திட்டம். இந்த ஆண்டு பணம் போட்டால் அடுத்த ஆண்டிலிருந்து பணம் கிடைக்கும். இதில் 30 வயது முதல் 85 வயது வரை உள்ளோர் முதலீடு செய்யலாம். முதலீட்டாளரின் வயதுக்கும் அவர் தெரிவு செய்யும் திட்டத்துக்கும் ஏற்ப ஆண்டுத் தொகை நிர்ணயிக்கப் படுகிறது.

ஜீவன் அக்‌ஷய் ஏழு ஆப்சன்களை வழங்குறது
1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். 
முதலீடு செய்பவரின் தேவைக்கேற்ப அவர் இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யலாம். ஒரு முறை தேர்ந்தெடுத்த பிறகு மாற்ற இயலாது. 
உதாரணத்துக்கு இன்னைக்கு ரிட்டையர் ஆகும் ஒருவர் தன் கையில் இருக்கும் 20 லட்ச ரூபாயில் பாதியை ஜீவன் அக்‌ஷயில் போடறார்னு வச்சிக்குவோம். 
அறுவது வயது மற்றும் ஆப்சன் ஆறுக்கு 8 சதவீதமும் ஆப்சன் ஏழுக்கு 7 சதவீதமும் கிடைக்கும். இப்போதைக்கு இது வங்கி வட்டியை விட கொஞ்சமே அதிகமா இருந்தாலும், இன்னும் பத்தாண்டுகள் கழித்து வங்கி வட்டி கீழே போனப்புறம் அது மிக அதிகமாகத் தெரியும்.

பங்குச்சந்தை, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாதவர்களுக்கு ஓய்வூதியத்துக்கு இருக்கும் தெரிவுகளில் இது மிக முக்கியமானது

எல் ஐ சியின் கேன்சர் கவர் பாலிசி.

கேன்சர் எனும் கொடிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களால் மட்டும் கேன்சர் வந்து கொண்டிருந்தது மாறி சுற்றுச்சூழல், பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு போன்ற பல காரணங்களால் கேன்சரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. கேன்சர் வந்தவர்களின் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போவதை அன்றாடம் காண்கிறோம். இந்நோய் வந்தவர்களுக்கு பொதுவாக அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியேஷன் தெரபி, லேசர் சிகிச்சை மற்றும் அறிதாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.

கேன்சரிலிருந்து முழுவதுமாக மீண்டு வருபவர்கள் சொற்பமே. மேற்கூரிய சிசிக்கைகள் மூலம் கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் சில பல ஆண்டுகள் நீட்டிக்கப்படுகின்றன. கேன்சர் சிகிச்சைகள் அதிக பொருள் செலவு பிடிக்கக் கூடியவை.

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் மாரல் சப்போர்ட்டும் பொருள் உதவியும் தேவைப்படும். மாரல் சப்போர்ட்டுக்கு நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சேர்த்தாலும் கேன்சர் சிகிச்சைக்குத் தேவைப்படும் அளவுக்கு பணம் சேர்ப்பது கடினம். இப்பிரச்சனையைத் தீர்க்கும் அருமருந்தாக வந்திருப்பது எல் ஐ சியின் கேன்சர் கவர் பாலிசி. இத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது ஒரு Non-linked, Regular premium payment Health Insurance Plan. இதில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் சேரலாம். குறைந்தபட்சமாக 10 லட்சரூபாயும் அதிகபட்சமாக 50 லட்சரூபாயும் காப்பீட்டின் அளவு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
காப்பீட்டின் கால அளவு குறைந்த பட்சம் 10 வருடம் அதிக பட்சம் 30 வருடம் அதே நேரத்தில் காப்பீடு முடியும் காலம் 50 வயது முதல் 75 வயதுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் , அதாவது 20 வயதில் நீங்கள் இந்த பாலிசியை எடுத்தால் 30 ஆண்டு காலம் எடுக்க வேண்டும். ஒரு வேளை நீங்க இந்த பாலிசியை 50 வயதில் எடுத்தால் காப்பீடடு 25 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப் படும்

இந்த பாலிசியிம் ப்ரீமியம் ஆண்டுக்கொரு முறையோ அல்லது அரையாண்டுக்கொரு முறையோ செலுத்தப்பட வேண்டும். ஆயுள் காப்பிட்டுத் திட்டங்களைப் போல் காலாண்டுக்கொரு முறையோ மாதாமாதமோ செலுத்தும் வசதி தற்போது இல்லை. இந்தத் திட்டம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. எல் ஐ சியின் பிற திட்டங்களைப் போல் இதில் என் ஆர் ஐக்கள் பங்கு பெற முடியாது.

எல் ஐ சி கேன்சர் கவரின் காப்பீட்டுத் தொகை (Sum Insured) பாலிசி காலம் முழுவது மாறாமல் இருக்குமாறும், பாலிசி ஆரம்பித்து ஒராண்டுக்குப் பிறது ஆண்டுக்கு 10% அதிகரிக்கவும் என இரண்டு ஆப்சன்களை எல் ஐ சி நிறுவனம் வழங்குகிறது. தற்போதைய வருமானத்தில் 40 லட்சரூபாய் காப்பீட்டுக்கு ப்ரீமியம் கட்ட முடியாது, ஆனால் வரும் ஆண்டுகளில் வருமானம் கூடும் அதிக ப்ரீமியம் செலுத்த முடியும் என நினைப்போர் இரண்டாவது ஆப்சனை தெரிவு செய்யலாம். அவர்கள் முதலில் 25 லட்ச ரூபாய்க்கு எடுக்கும் பாலிசி ஆண்டுக்கு 10% உயர்ந்து 5 ஆண்டுகளில் 40 லட்ச ரூபாய் அளவை எட்டும். 


பாலிசியின் பயன்கள் 
1. பயனருக்கு Early Stage Cancer இருப்பது உறுதி செய்யப் பட்டால், காப்பீட்டுத் தொகையில் 25% பணமாக வழங்கப் படும், மேலும் மூன்றாண்டுகளுக்கு ப்ரீமியம் கட்டுவதிலிருந்து விலக்கும் வழங்கப் படும்

2. பயனருக்கு Major Stage Cancer இருப்பது உறுதி செய்யப்பட்டால், முழு காப்பீட்டுத் தொகையும் உடனே வழங்கப்படும். ஒரு வேளை பயனருக்கு ஆரம்ப நிலை கேன்சர் கண்டறியப்பட்டு 25% தொகை வழங்கப்பட்டபின் கேன்சர் முற்றி மேஜர் ஸ்டேஜுக்குப் போனால் அப்போது 75% வழங்கப்படும். பாலிசியின் இரண்டாவது பயனாக பத்தாண்டுகளுக்கு காப்பீட்டு அளவின் 1% மாதாமாதம் வழங்கப்படும். 50 லட்சரூபாய் பாலிசி எடுத்த ஒருவருக்கு மேஜர் ஸ்டேஜ் கேன்சர் உறுதியானால், அவருக்கு உடனடியாக 50 லட்சரூபாயும் மேலும் அப்போதிலிருந்து பத்தாண்டுகளுக்கு மாதாமாதம் 50,000ரூபாய் பணமும் கிடைக்கும். இடையில் பயனர் இறக்க நேரிட்டாலும் அவருடைய வாரிசுக்கு பத்தாண்டு காலம் முழுவதும் இத்தொகை வழங்கப்படும். 
பாலிசியின் மூன்றாவது பயனாக மேஜர் ஸ்டேஜ் கேன்சர் உறுதியான பிறகு ப்ரீமியம் தொகை செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது.

பீரிமியம் தொகை 
30 வயது ஆண், 50 லட்ச ரூபாய் காப்பீடு, 30 ஆண்டுகாலம் என்ற உதாரணத்துக்கு ப்ரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ 7254 மற்றும் ரூ 1306 வரி ஆக மொத்தம் ரூ 8560. உங்களுக்கான ப்ரீமியம் தொகையை எல் ஐ சியின் இணையதளமான www.licindia.inஇங்கு காணலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிய பிற விவரங்கள் 
இந்த பாலிசியை எல் ஐ சியின் முகவர்களிடமும் பெறலாம் அல்லது எல் ஐ சியின் இணையதளத்தில் நேரடியாகவும் வாங்கலாம். இணைய தளம் மூலம் வாங்கும் போது ப்ரீமியம் தொகையில் 7% தள்ளுபடி பெறலாம்

கவரேஜ் பாலிசி வாங்கிய தினத்திலிருந்து 180 நாட்களுக்குப் பிறகே தொடங்கும்.

பொதுவாக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் திட்டகாலம் முழுவதும் ப்ரீமியம் தொகை மாறாது. கேன்சர் கவர் திட்டத்தில் ப்ரீமியம் தொகை ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே நிச்சயம். அதற்கப்புறம் நிர்ணயிக்கப்படும் ப்ரீமியத் தொகை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாறாமல் இருக்கும்.

இந்த பாலிசியையும் பிற மெடிகல் இன்சூரன்ஸ் பாலிசிக்களையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த பாலிசி எடுத்தாச்சு வேற மெடிகல் இன்சூரன்ஸ் தேவையில்லை என எண்ண வேண்டாம். இது கேன்சர் நோய்க்கு மட்டுமான ப்ரத்யேகமான பாலிசி

இந்த பாலிசியின் குறைகள் என்று பார்த்தால் பாலிசியின் அம்சங்களைத்தான் சொல்ல வேண்டும். அதிகபட்ச காப்பீட்டு அளவு 50 லட்ச ரூபாய்தான், வருங்காலத்தில் எல் ஐ சி இதை அதிகப்படுத்த வேண்டும். அதே போல அதிகபட்சமாக 30 ஆண்டுகாலம் மட்டுமே பாலிசி எடுக்க முடியும். ஆயுள் காப்பீடு சம்பாதிக்கும் காலம் வரை மட்டும் போதும் ஆனால் இது போன்ற பாலிசிகள் உயிருடன் இருக்கும் வரை தேவை. இந்த இரண்டு மாற்றங்களையும் எல் ஐ சி எதிர்காலத்தில் கொண்டு வந்தால் இந்த பாலிசி முழுமையடையும்.

கேன்சர் எனும் கொடிய நோய் யாருக்கும் வர வேண்டாம். அப்படி வந்துவிட்டால் குறைந்தபட்சம் மருத்துவச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்காமல் இருக்க இந்த பாலிசி உதவும். ”கடவுளை நம்பு ஆனால் கதவை பூட்டு” என்ற சொலவடைக்கு ஏற்ப கேன்சர் உருவாக்கும் பொருட்களான புகையிலை, மது போன்றவற்றை தவிர்ப்போம் அதையும் மீறி கேன்சர் வந்தால் சிகிச்சை உதவிக்கு காப்பீட்டை நாடுவோம்.

ஏன் வேண்டாம் எண்டோமெண்ட்?

No photo description available.

இதைத்தான் நான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். 
எண்டோமெண்ட் மற்றும் மணி பேக் பாலிசிகள் பொதுவா 5% ரிட்டர்ன் மட்டுமே எதிர்பார்க்கலாம், மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் கூட வேண்டாம், வங்கி ரெக்கரிங் டெபாசிட் 7-8 % பி பி எஃப் 8%க்கு மேல தருகின்றன, அந்த அளவுக்கு கூட இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் தருவதில்லை. இதுக்கப்புறம் யாராவது வந்து உங்க கிட்ட இந்த பாலிசியில் பணம் போட்டா லம்ப்பா கிடைக்கும்னு சொன்னா என்ன பண்ணனும்னு நீங்களே முடிவு பண்ணுங்க..