எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

இந்த வருசம் எந்த ஃபண்ட் நல்ல ரிட்டர்ன் தரும்
தெரியாது

யாரு தேர்தலில் ஜெயிப்பார்கள்? 
தெரியாது

அடுத்து அமையும் ஆட்சியில் மார்க்கெட் ஏறுமா? 
தெரியாது

எலக்சன் ரிசல்ட் அன்னிக்கு மார்க்கெட் ஏறுமா இறங்குமா? 
தெரியாது

இந்தாண்டும் மிட் கேப் இறக்கம் காணுமா? 
தெரியாது

ஒராண்டில் எந்த ஷேர்கள் நல்லாப் போகும்? 
தெரியாது

எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்? 
உங்களுக்கு எந்த ஃபண்ட் சரியா வரும்னு எனக்குத் தெரியாது.

அப்ப உனக்கு என்னதான்யா தெரியும்? 
உங்க வயது 35 – இன்னிக்கு உங்க குடும்பச் செலவு (பிள்ளைகள் செலவு இல்லாமல்) 25,000 ரூபாய் ஆகுதுன்னா, நீங்க ரிட்டையர் ஆகும் போது (65 வயது, 6% இன்ஃப்லேசன்) மாசம் 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்னு தெரியும்

இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் கல்விக் கட்டண ஏற்றத்துக்கும் பொதுவான விலைவாசி ஏற்றத்துக்கும் சம்பந்தமில்லைன்னு தெரியும். இன்ஃப்ளேசன் 6% ஆக இருக்கும் போதும் கல்லூரிச் செலவு மட்டும் 10% அளவில் ஏறிக்கிட்டே இருக்குன்னு தெரியும்

உங்க பிள்ளைகள் இப்ப ஆரம்பப் பள்ளியில் இருக்காங்க, அவங்க கல்லூரி போகும் போது தலா 50 லட்சம் ஆக மொத்தம் 1 கோடி ரூபாய் செலவாகும்னு தெரியும்

வங்கி தரும் வட்டி இப்ப 7% அளவில் இருக்குன்னும் அது மேலும் குறையும்னும் தெரியும். இன்சூரன்ஸ் கம்பெனிகளின் எந்த ஒரு திட்டமும் 5-6 % மேல் ரிட்டர்ன் தராதுன்னு தெரியும். இவற்றில் முதலீடு செய்தால் பொருளாதார இலக்குகளை எட்டவே முடியாதுன்னு தெரியும்

நீண்ட நாள் முதலீட்டில் பங்குச் சந்தை மட்டுமே இன்ஃப்ளேசனைத் தாண்டி ரிட்டர்ன் தந்திருக்கு, தரும் என்று தெரியும்.

ஓய்வு கால திட்டமிடல் மிக நீண்ட பயணம். மார்க்கெட் வீழ்ச்சி தற்காலிகமானது, போன வருச மிட் கேப் வீழ்ச்சி மார்க்கெட் சந்திக்கும் முதல் வீழ்ச்சியுமல்ல நிச்சயமாக கடைசி வீழ்ச்சியுமல்ல. உங்க குறிக்கோள் நீண்ட கால பயணமாக இருந்தால் சிறு சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை

குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி?

பட்ஜெட் போடுவது என்பது தேவையான ஆனால் பலரும் கடைபிடிக்காத பழக்கம்.

பட்ஜெட் போடணும்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல என்போருக்கான பதிவு

One Size Fits All Solution பட்ஜெட்டில் இல்லை. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருத்தருக்கு சாப்பாட்டு செலவு அதிகமாகும், வேறொருவருக்கு பெட்ரோல் செலவு அதிகமாகும்.. அனைவருக்கும் பொருந்தும் டெம்பளேட் பட்ஜெட் போட முடியாது. மாதம் 50 முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கும் ஓரிரு பிள்ளைகள் கொண்ட நடுத்தர தமிழ்க் குடும்பத்தை மனதில் கொண்டு இதை வரைந்திருக்கிறேன்.

வீட்டுக்கடன் 35%

உணவு, உடை, மருந்து இன்னபிற – 25%

வாகனக் கடன் மற்றும் பெட்ரோல் – 15%

கல்வி – 10%

சேமிப்பு 10%

டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு 5%

இது ஒரு டெம்ப்ளேட், ஒவ்வொரு குடும்பத்தின் தேவையும் மாறுபடும். அதன்படி ஒவ்வொரு தலைப்புக்குமான செலவு 5% கூட குறைய இருக்கக்கூடும்.

வீட்டுக்கடன் 30% அளவில் இருப்பது நல்லது, அப்படி இருக்கும் போது அந்த 5% கல்விக்கோ சேமிப்புக்கோ அல்லது Discretionary செலவுகளுக்கோ உபயோகிக்கலாம். 
சிலருக்கு கல்லூரிச் செலவு 20% வரை கூட போகலாம், அப்போது அந்த 10%த்தை வீட்டுக்கடனிலிருந்தோ உணவு உடை பட்ஜெட்டிலிருந்தோ குறைத்து மேனேஜ் செய்யலாம்.

மாதம் 75,000 சம்பளம் வாங்குபவர் தன் வீட்டுக்கடன் தவணையை 22,000-25,000 ரூபாய்க்குள் வைக்க விரும்பினால், அவர் வாங்கும் வீடு ஆண்டு வருமானமான 9 லட்சத்தின் 4 -5 மடங்குக்குள் இருக்க வேண்டும். அதிலும் 20 %க்கும் மேல் கையிருப்பு போட்டு 30 -32 லட்சம் அளவிலேயே கடன் வாங்க வேண்டும்.

கார் நிஜமாவே அவசியமாக இருந்தால் வாங்கலாம். காரைப் பொருத்த வரை ஆண்டு வருமானத்தின் பாதிக்குள் காரின் விலை இருக்க வேண்டும். அதற்கு மேல் காருக்குச் செலவு செய்வது உசிதமல்ல

வருமானத்தின் 5%க்குள் அர்த்தமுள்ள ஆயுள் காப்பீடு வாங்கணும்னா, அது டெர்ம் பாலிசியில்தான் சாத்தியம். அதுக்கும் மேல நீங்க செலவு பண்றீங்கன்னா, தேவையான வேறு செலவுகளின் பட்ஜெட்டிலிருந்து செலவழிக்கிறீர்கள் அல்லது வேறு நல்ல சேமிப்பு வாய்ப்புகளை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்

உங்களுக்கான பட்ஜெட் எப்படி இருந்தாலும் பட்ஜெட்னு ஒண்ணு போட்டு ஒவ்வொரு மாதமும் நீங்க எப்படி செலவு பண்ணியிருக்கீங்கன்னு பாக்கறதும். அதிகமா செலவு செய்யும் கேட்டகரியில் செலவை குறைப்பது எப்படின்னு பாக்கறதும் முக்கியம்.

டெர்ம் இன்சூரன்ஸ் – ஆயுள் காப்பீட்டின் அவசியம்

No photo description available.

இந்தப் படத்தைப் பாத்ததும் சில நாட்கள் முன்னர் நண்பருடன் நடந்த உரையாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது.

நண்பர் தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றில் வசிக்கிறார். நல்ல வேலை, அந்நகரத்து ஸ்டாண்டர்ட் படி நல்ல சம்பளம், அழகான சிறு குடும்பம்… அவர் வருமானத்துக்கு ஏற்ற காப்பீடு இல்லை. நண்பர் படித்தவரும் அறிவாளியும் கூட (இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று உறுதியாக நம்புபவன் நான்) – இதுநாள் வரை ஏங்க டெர்ம் பாலிசி எடுக்கலேன்னு கேட்டேன்… ஏனோ தோணலை என்பதைப் பதிலாகத் தந்தார்.

ஆயுள் காப்பீடு பத்தி பேசிக்கிட்டே இருந்தோம். அவருக்கு வயது 49, ஓய்வு காலம் வரை காப்பீடு எடுக்க ப்ரீமியம் ஆண்டுக்கு 20,000 ரூபாய் போல வரும் என்றேன். உடனே அவர் 15 ஆண்டுகளுக்கு 3 லட்ச ரூபாய் விரயம் என்றாரே பார்க்கலாம்.

அதே நண்பர் கார் வச்சிருக்கார், அதன் காப்பீட்டு ஆண்டுக்கு 15,000 ரூபாய். அதை அவர் வீண் செலவு என்றோ விரயம் என்றோ கருதவில்லை. ஏனோ தெரியவில்லை ஆயுள் காப்பீடு என்று வரும் போது மட்டும் மக்கள் போட்ட பணம் வட்டியுடன் திரும்ப வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

வெறும் 4-5 லட்ச ரூபாய் பெருமானமுள்ள காருக்கு 10-20 ஆயிரம் கொடுத்து காப்பீடு பெருகிறோம், விபத்து நிகழலேன்னா பணம் திரும்ப வருமா? வட்டி கிடைக்குமா என்று நாம் கேட்பதேயில்லை. அதை விட பல மடங்கு மதிப்பு மிக்க நம் வருமானத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கும் டெர்ம் இன்சூரன்ஸை மட்டும் வீண்செலவு என்கிறோம், போட்ட பணம் திரும்ப வருமா? எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கேட்கிறோம். அடிப்படை புரிதலில் தவறை வைத்துக் கொண்டு இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்.

ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல, அதுவும் செலவு என்று புரிந்து கொள்ள வேண்டியது பயனர்களே. நாம் டெர்ம் இன்சூரன்ஸ்தான் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால், காப்பீட்டு முகவர்களும் அதையே ப்ரமோட் செய்யத் தொடங்குவார்கள்

இன்சூரன்ஸ் கம்பெனிகளில் “முதலீடு”.? எண்டோமெண்ட் பாலிசி

இன்சூரன்ஸ் கம்பெனிகளில் “முதலீடு” செய்வதன் தீமைகளை பத்தாயிரம் வார்த்தைகளில் கட்டுரையாக்குவதை விட எளிதாக் இப்படம் விளக்குகிறது.

எண்டோமெண்ட் பாலிசிகளின் முடிவில் பணம் கிடைக்கும் என்பது உண்மையே.. ஆனால் எவ்வளவு கிடைக்கும் என்று உறுதியாச் சொல்ல முடியாது. இன்னிக்கு நீங்க ரூபாய்களாகக் கொட்டி செய்யும் முதலீடு இறுதியில் சிறு காசுகளாத் திரும்ப வரும். பத்து லட்சம் முதலீடு செய்து பதிமூன்று லட்சம் திரும்ப வரலாம் ஆனா அது கையில் கிடைக்கும் போது பதிமூணு லட்சத்தின் மதிப்பு இன்றைய நிலையில் ஆயிரங்களில் இருக்கும். அதைத்தான் இப்படம் எளிமையாக விளக்குகிறது.

No photo description available.

எண்டோமெண்ட் பாலிசி குறித்து சில நண்பர்கள், ஷேர் மார்க்கெட் ஃபாலோ பண்ண முடியாத, பிசினஸ் பண்ணத் தெரியாத, ரியல் எஸ்டேட் மேல நம்பிக்கை இல்லாத, தங்கம் வாங்கி வச்சிக்கிட்டு பயப்பட விரும்பாத, வங்கிகள் மேல மிகுந்த கோவத்துடன் இருப்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் எண்டோமெண்ட் பாலிசியில பணம் போடலாம். செத்தா பசங்களுக்கு பணம் கிடைக்கும், உயிரோட இருந்தா வங்கி வட்டி அளவுக்காவது வளர்ச்சி வருமே, முதலீடு செய்யலாம் இல்லையான்னு கேட்டிருந்தாங்க . அதற்க்கான பதில்

1. வங்கி பணத்தை கமாடிட்டியா உபயோகித்து பிசினஸ் பண்ணுது, உங்க கிட்ட வட்டிக்கு வாங்கி பிறருக்கு கடன் கொடுத்து லாபம் பாக்குது. அதே அளவு அல்லது அதற்கு மேலும் வட்டி தருவதற்கு காப்பீட்டு நிறுவனம் என்ன செய்யுதுன்னு எப்பவாவது யோசிச்சி இருக்கீங்களா?

2. நேரடி பங்குச் சந்தை முதலீடு எல்லாருக்கும் சரியா வராது அது ஓகே. நீங்க ஏன் மியூச்சுவல் ஃபண்ட் வழியை தேர்ந்தெடுப்பதில்லை?

3. மியூச்சுவல் ஃபண்ட் தேர்ந்தெடுப்பதும் கஷ்டம். 2000க்கும் மேல ஃபண்ட் இருக்கு அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பதுன்னு புரியலயா? அதே மாதிரி பலப்பல காப்பீட்டுத் திட்டங்கள் (எண்டோமெண்ட், ஹோல் லைஃப், யூலிப், மணி பேக்) இருக்கின்றன. எல்லாத்தையும் அலசி ஆராய்ந்தா இப்ப வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசியை எடுத்தீங்க?

4. காப்பீட்டு முகவர் சொன்ன பாலிசியைத்தானே கண்ணை மூடிக்கிட்டு எடுத்தீங்க?நீங்க முதலாண்டு கட்டும் தொகையில் 30% பெரும் அவர் நல்ல ஆலோசனை சொல்வார்னு நம்புற நீங்க, நீங்க முதலீடு செய்யும் தொகையில் 1% பெரும் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசர் நல்ல ஆலோசனை சொல்வார் என ஏன் நம்பமாட்டேங்கறீங்க?

5. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வளர்ச்சியைத்தான் பாலிசிதாரர்களுக்கு போனஸாக வழங்குகிறது என்பது தெரியுமா?

6. நீங்க காப்பீடு நிறுவனத்திடம் பணம் கொடுத்து அது அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் வளர்ச்சியில் கிள்ளி உங்களிடம் போனஸாக கொடுப்பதற்கு பதில் நீங்களே மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சந்தையில் முதலீடு செய்து வளர்ச்சியை அள்ளலாமே

7. எண்டோமெண்ட் பாலிசிகளில் எனக்கு இருக்கும் பிரச்சனைகளில் வளர்ச்சி / வட்டி இரண்டாம் பட்சமே, முதல் பிரச்சனை காப்பீடு என்பதுதான் Irony. காப்பீடு அவசியம் – இன்னும் ஒரு படி மேல போய் அத்தியாவசியம் என்பேன். குடும்பத்தின் பொருளாதாரம் நலன் காக்க தலைவரின் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை காப்பீடு அவசியம். இந்த அளவு காப்பீடு எண்டோமெண்ட் பாலிசிகளில் எடுக்கவே முடியாது. இந்தளவு காப்பீடு டெர்ம் பாலிசியில் மட்டுமே எடுக்க முடியும். ஆண்டு வருமானத்தின் 5 மடங்கு எண்டோமெண்ட் ப்ரீமியமே எட்டாத உயரத்தில் இருக்கும். அதனாலத்தான் எண்டோமெண்ட் பாலிசி வேண்டாமனு சொல்றேன்

8. வருமானத்தின் 10 மடங்கோ அதற்கு மேலோ டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் வட்டி கம்மியாத்தான் வரும், வரும் வட்டி இன்ஃப்லேசனை விட கம்மியாத்தான் இருக்கும் தெரிஞ்சே 5-6% வளர்ச்சி தரும் எண்டோமெண்ட் பாலிசியில் முதலீடு செய்வதாக இருந்தால் தாராளமா செய்யுங்க. உங்க பணம் – உங்க முடிவு.

ஆனா பிரச்சனை எஙக் வருதுன்னா, காப்பீட்டுக்கான பட்ஜெட் முழுவதையும் எண்டோமெண்ட்டுக்கு கட்டிட்டு தேவனையான அளவு காப்பீடு எடுப்பதிலை பலரும். எண்டொம்மெண்ட் எடுத்துட்டு ஆயுள் காப்பீடு எடுத்து விட்டேன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இறக்கும் போது குடும்பத்துக்கு 5-10 லட்சம் மட்டுமே கிடைக்கும் – அதை வச்சி குடும்பம் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும். அதே காசுக்கு 1 கோடி ரூபாய் டெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் காப்பிட்டு தேவையும் பூர்த்தியாகும் முதலீடும் நல்ல வளர்ச்சி காணும்.

வங்கி சேமிப்புக் கணக்கு vs Liquid Mutual Funds

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டியை மறைமுகமாகக் குறைத்துள்ளது. May 2,2019 முதல் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கணக்குகளுக்கு வட்டி 3.5% லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது. இது எல்லாருக்கும் என மாற்றப்படும் எனவும் ஏனைய வங்கிகளும் விரைவில் வட்டிக் குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன்

இனியாவது வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணத்தை முடக்காதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அதில் பேலன்ஸ் வைத்து விட்டு மிச்சத்தை Liquid Mutual Funds யிலோ அல்லது குறைந்த பட்சம் வைப்பு நிதியிலோ வையுங்கள்.

இந்நடவடிக்கை எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் வட்டி விகிதம் இன்ஃப்ளேசனை ஒட்டியே இருக்கும். இன்ஃப்ளேசன் குறையும் போது வட்டி குறைவதும் இயல்பே. மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர வட்டியை குறைத்தே ஆகவேண்டும். வங்கி வைப்பு நிதிக்கான வட்டி 5 – 6% லெவலுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சாதக பாதகங்கள் நீங்க்ள் இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். நீங்க டெபாசிட் செய்யும் இடத்தில் இருந்தால் இது உங்களைப் பாதிக்கும். வீட்டுக் கடனோ தொழில் கடனோ வாங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இன்ஃப்ளேசனைத் தாண்டி அதிக அளவு வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் தரக்கூடியது பங்குச் சந்தை முதலீடுகளே. ஏற்கெனவே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணவரத்து அதிகமா இருக்கு. வங்கி வட்டி விகிதம் குறையும் போது அது இன்னும் அதிகமாகும்..

மியூச்சுவல் ஃபண்ட்… – லாபகரமான முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

2017 முடிவில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.21.38 லட்சம் கோடி. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

நம் நாட்டில் மொத்தம் 44 ஃபண்ட் நிறுவனங்கள் 2000-க்கும் அதிகமான ஃபண்ட் திட்டங்களை நடத்துகின்றன. இவற்றுள் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும், அதற்கு என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

1. திட்டத்தின் வளர்ச்சி வரலாறு 

ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எவ்வளவு வருமானம் ஈட்டியிருக்கிறது என்கிற தகவல் முக்கியம்தான்; ஆனால், அது மட்டுமே போதுமா என்றால் நிச்சயம் இல்லை. ஒரு காரின் ரியர் வியூ மிரர், காரை பின்னோக்கிக் கொண்டு செல்ல முக்கியம். ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு கார் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வருமானம் குறித்துப் பார்க்கையில், குறுகிய கால வருமானத்தில் அதிக கவனம் செலுத்தாமல், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு வருமானம் என்று பார்க்க வேண்டும்.

2. தொடர்ச்சியான வருமானம்

இதுவும் ஃபண்டின் வருமானம் குறித்ததுதான்.  கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஃபண்ட் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாருங்கள். உதாரணமாக, கணேஷ் முதலீடு செய்த ஃபண்ட் ஆண்டுக்கு 10% தொடர்ச்சியாக வளர்ந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் முதலீடு செய்த ரூ.1 லட்சம் ரூ.2,59,374-ஆக உயர்கிறது. ஆனால், கணேஷின் நண்பர் சுந்தர் முதலீடு செய்த ஃபண்டோ ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதத்தில் லாபமும், நஷ்டமும் தந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம் ரூ2,21, 922-ஆக இருக்கும். இதிலிருந்து தொடர்ச்சியான, நிலையான வருமானம் எவ்வளவு  முக்கியம் என்று புரிந்துகொள்ளுங்கள். 



3. சந்தை விழும்போது ஃபண்டின் செயல்பாடு 

மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகளில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தையின் போக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரதிபலிக்கும். பங்குச் சந்தை 10% ஏறும் காலத்தில், நல்ல ஃபண்ட் பத்துக்கும் மேற்பட்ட சதவிகித வளர்ச்சியைக் காணும். அதைவிட முக்கியம், பங்குச் சந்தை 20% வீழ்ச்சியடையும்போது அதைவிடக் குறைவாக நஷ்டம் அடைவதே ஒரு நல்ல ஃபண்டின் அடையாளம். 

2008-ம் ஆண்டு, பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி யடைந்தது. அப்போது சந்தை வீழ்ச்சியைவிடக் குறைவான அளவு நஷ்டத்தைத் தந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பாப்புலராக இருந்தன. 

சந்தை வீழ்ச்சி குறித்து பேசும்போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ஓர் ஆண்டில் 50% நஷ்டத்தைச் சந்திக்கும் ஒரு ஃபண்ட் அடுத்த ஆண்டு 100% லாபம் பார்த்தால் தான் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். அதாவது, ஒரு ஃபண்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் 50% நஷ்ட மடைந்து 50,000 ரூபாயாகக் குறைந்தால், அடுத்த ஆண்டு 100% லாபம் ஈட்டினால்தான் ரூ.1 லட்சத்தை எட்ட முடியும். 

4. முதலீட்டு ஸ்டைல்

முதலீடு செய்வதற்குமுன் முதலீட்டாளர் தன் வயதுக்கேற்ற ‘அஸெட் அலோகேஷனை’ முடிவு செய்ய வேண்டும். லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால் கேப், கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்யப் போகிறோம் என்று உறுதியாக முடிவு செய்துவிட வேண்டும். 
உதாரணத்துக்கு, பங்குச் சந்தையில் செய்ய வேண்டிய முதலீடு செய்தபின் மீதமிருக்கும் முதலீட்டுக்கு மற்ற சொத்துகளில் முதலீடு செய்ய பரிசீலிக்க வேண்டும்.

5. ஃபண்டின் வயது

பொதுவாக, புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதைவிட நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. பத்தாண்டுகளாக இருக்கும் ஃபண்டுகள் ஓரிரு மார்க்கெட் வீழ்ச்சியைச் சமாளித்து வந்திருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து, நல்ல வருவாய் ஈட்டி யிருக்கும் ஃபண்டுகள், தொடர்ந்து பரிமளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

6. ஃபண்டின் அளவு

நாம் முதலீடு செய்யும் ஃபண்டில் குறிப்பிடத்தக்க அளவு பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஃபண்டுகளில் சில ஆயிரம் கோடிகள் பொதுவாக இருக்கும். ரூ.5-10 கோடிகள் மட்டுமே இருக்கும் ஃபண்டுகளால் பெரிய முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது. மேலும், ரூ.5-10 கோடி களுக்கான செயல்திறனை வைத்து அந்த ஃபண்ட் ரூ.1,000 கோடி  என வரும்போது எப்படிச் செயல்படும் எனக் கணிக்க முடியாது.

7. பல்வேறு கட்டணங்கள் 

ரமேஷும், சுரேஷும் பால்ய நண்பர்கள். இருவரும் 30 வயதாகும் போது மாதம் ரூ.5,000-க்கு     எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆரம்பித்தார்கள். ரமேஷ் முதலீடு செய்த ஃபண்டின் கட்டணம் 1%, சுரேஷுக்கோ 2%. இரு ஃபண்டுகளும் ஒரே அளவு வளர்ந்தன. 65 வயதில் ஓய்வு பெறும்போது ரமேஷிடம் இருந்தது ரூ. 34,270,234. சுரேஷிடம் இருந்ததோ ரூ.33,294,070. அதாவது, வெறும் ஒரு சதவிகித கட்டணத்தால் சுரேஷ் இழந்தது சுமார் ரூ.3.5 லட்சம். எனவே, கட்டணத்தில் கவனம் மிக முக்கியம். 

8. நிதி நிர்வாகி  

ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும் முன் அதன் ஃபண்ட் மேனேஜர் குறித்தும், அவர் ஃபண்டை எவ்வளவு நாளாக நிர்வாகம் செய்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதற்கு முன் நிர்வகித்த ஃபண்டுகளின் வளர்ச்சி குறித்து அறிவது உதவி யாக இருக்கும். ஐந்து ஆண்டுகளாக அதீத வளர்ச்சி அல்லது சுமாராக போய்க்கொண்டிருந்த ஒரு ஃபண்ட், கடந்த ஓராண்டில் பெரிய அளவில் மாறியிருந்தால் முதலில் நாம் பார்க்க வேண்டியது ஃபண்ட் மேனேஜர் மாறியுள்ளாரா என்பதையே. அதன்பிறகு அந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.

9. ரேட்டிங் 

வேல்யூ ஸ்டார் ஆன்லைன் ரிசர்ச், மணி கன்ட்ரோல் போன்ற இணையதளங்கள் அனைத்து ஃபண்டுகளையும் ஆராய்ந்து அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்குகின்றன. மற்ற காரணிகள் அனைத்தையும் பார்த்தபிறகு நாம் தெரிவு செய்த ஃபண்டுகளுக்கு 4 அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கி யிருக்கிறார்களா என்று பார்த்து, நம் தேர்வு சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

10. செக்டோரல் ஃபண்ட் 

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகள், அனைத்துத் துறை நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யும்.  அவ்வாறில்லாமல் ஒரேயொரு துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் அதாவது, ஒரேயொரு செக்டாரில் முதலீடு செய்வது செக்டோரல் ஃபண்ட். ஒரேயொரு துறை என்பதால், அந்தத் துறை குறித்து வெளியாகும் செய்தி, அரசின் கொள்கை முடிவுகள் இத்தகைய ஃபண்டுகளைப் பெரிதும் பாதிக்கும். இந்த வகை ஃபண்டு களின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் செக்டோரல் ஃபண்டுகளைத் தவிர்ப்பது நலம்.

இளமையில் கல் என்பது பழமொழி, இளமையில் திட்டமிடு என்பது புதுமொழி..

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை இருபதுகளின் இறுதியிலோ முப்பதுகளின் ஆரம்பத்திலோ தொடர் முதலீடு ஆரம்பித்தால் ரிட்டையர் ஆகும் போது கணிசமான தொகை கையில் இருக்கும். 35 ஆண்டுகள் மாதாமாதம் 2500ரூ நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து வந்தால் முடிவில் 1 கோடி ரூபாய் இருக்க வாய்ப்பு மிக அதிகம். இதை Power of Compounding என்பார்கள்

காப்பீட்டிலும் சீக்கிரம் ஆரம்பிப்பது பலனளிக்கும். நண்பர் வல்லம் பசிர் 29, ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செய்தார். இதை இரண்டு கம்பெனிகளில் தலா 50 லட்சம் என முடிவு செய்துள்ளார்… ஜீவன் ஆனந்திலும் ஜீவன் சரலிலும் இன்ன பிற ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்யும் வாலிப வயோதிக அன்பர்களே, பஷீர் ஒரு கோடி ருபாய் காப்பீடுக்கு கட்டப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? எஸ் பி ஐயில் 50 லகரத்துக்கு ஆண்டுக்கு 10,400 ரூபாய், எல் ஐ சியில் 8800 ரூபாய். அதாவது ஒரு கோடிக்கு ப்ரீமியம் வெறும் 19.200 ரூபாய். மாசம் வெறும் 1600 ரூபாய்.

எஸ் பி ஐ மேனேஜர் கிட்டத்தட்ட டெர்ம் பாலிசி விக்க மாட்டேன்னே சொல்லியிருக்கார், இது வேணாம் சார், ரிட்டர்ன் எதுமே வராது, இதுக்கு பதிலா மணிபேக் போடுங்க என்றெல்லாம் மூளைச் சலவை செய்ய முயன்றுள்ளார். அதுல காப்பீடு 5 லட்சம் மட்டுமே கிடைக்கும் நான் இறந்தால் அது குடும்பத்துக்கு ஒராண்டுக்கு கூட காணாது, அப்புறம் நீங்களா என் குடும்பத்தைக் காப்பீங்கன்னு கேட்டதும் இந்தாள் கிட்ட எதுவும் தேராதுன்னு விட்டிருக்கிறார். வெல்டன் பஷீர்

பாலிசி ரசீது கையில் வந்ததும் பஷீருக்கு கிடைத்த திருப்தியை வார்த்தையில் விவரிக்க இயலாது

மாசத்துக்கு 10-20 ஆயிரம் இன்சூரன்ஸில் “முதலீடு” செய்வதற்கு பதில் 1600 ரூபாய்க்கு பாலிசி, மிச்சம் ஒரு பத்தாயிரத்தை எஸ் ஐ பி முதலீடு செய்து வந்தால் பஷீருக்கு 65 வயது ஆகும் போது 4-5 கோடி ரூபாய் கையில் இருக்க வாய்ப்பு மிக அதிகம்.

பஷீர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்… நீங்க எல்லாம் வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசிகள் இத்தகைய நிலைமையில் உங்களை வச்சிருக்கான்னு யோசிங்க, இல்லைனா அப்புறம் அந்த பாலிசிகளை ஏன் நீங்க இன்னமும் வச்சிருக்கீங்கன்னு யோசிங்க.

வங்கிகளிலும் ஆல்கஹால் கம்பெனிகளிலும் முதலீடு செய்யாத மியூச்சுவல் ஃபண்ட்.

நெறய முஸ்லிம் நண்பர்கள் வங்கிகளிலும் ஆல்கஹால் கம்பெனிகளிலும் முதலீடு செய்யாத மியூச்சுவல் ஃபண்ட் இருந்தாச் சொல்லுங்கன்னு கேட்டிருந்தாங்க… தேடிப்பார்த்ததில் இது ஒண்ணுதான் என் கண்ணில் பட்டது.

இதுக்கு ஒரு மார்க்கெட் இருப்பதைக் கண்டறிந்து டாடா நிறுவனம் ஷரியா சட்டப்படி செயல்படும் கம்பெனிகளில் முதலீடு செய்கிறது. இந்த ஃபண்டின் பெயர் டாடா எதிகல் ஃபண்ட். கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 10% வளர்ச்சி கண்டிருக்கு. மாருதி சுசுகியில் 8% ஹிந்துஸ்தன் லீவரில் 6%க்கும் மேல் முதலீடு செய்துள்ளது… மத்த நிறுவனங்களில் 2-3% மட்டும் வெயிட்டேஜ்… ஃபண்டின் செயல்திறன் சுமார்தான் என்றாலும் வங்கிகள் எவற்றிலும் முதலீடு செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு இவ்வளவுதான் செய்ய இயலும்.

ஷரியா விதிகளையும் மீறக்கூடாது, மீயூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யணும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.

http://www.tatamutualfund.com/our-funds/equity/diversified/tata-ethical-fund?fbclid=IwAR1DQooWBAKnwJLVYE9IvhQNpkQpfENJr3USxReFp3WB4ousSIDaTFDxNVY

Disclaimer: I am not a professional financial advisor – certified or otherwise

The purpose of this post is purely informational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals, consult a financial advisor before investing.

முதலீட்டின் முக்கியத்துவமும்,அடிப்படைகளும்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பென்சன் என்கிற safety net இருந்தது. ரிட்டையர் ஆகும் போது சொந்த வீடும் கையில் கொஞ்சம் காசும் இருந்தா போதும் என்கிற நிலை. நிரந்தர வைப்பு நிதி தரும் வட்டியும் பென்சனும் வாழப் போதுமானதாக இருந்தது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருதாளார மாற்றத்துக்குப் பின் நிலை வெகுவாக மாறியுள்ளது. சந்தை பொருளாதாரத்தில் வாழத் தேவையும் அதிகமாகிப் போனது, பென்சனும் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவன ஊழியர்கள் ரிட்டையர்மெண்ட் குறித்து யோசிக்க ஆரம்பித்தன் விளைவே ம்யூச்சுவல் ஃபண்ட்களின் வளர்ச்சி.

2007 மார்ச் மாதம் 3 லட்சம் ரூபாய் கோடி அளவில் இருந்த ம்யூச்சுவல் ப்ஃண்ட்களின் AUM (Asset Under Management) 2014 ஆண்டு முதல் முறையாக 10 லட்சம் கோடியை எட்டியது, அதுக்கப்புறம் அசுர வளர்ச்சி கண்டு இன்று அது 20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது மூன்றே ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி அதுவும் பத்து லட்சம் கோடி ருபாய் அளவுக்கு.
பலரும் ம்யூச்சுவல் ஃபண்ட் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வந்தாலும், இன்னமும் இந்தியாவில் முதலீடு குறிந்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்
அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன்

(1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose),
(2) நம்முடைய இலக்கு என்ன (Goal)
(3) நம்முடைய risk tolerance என்ன?
(4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும்
(5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும்

இதையெல்லாம் முடிவு செய்யணும்.
உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.

கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.

அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.
ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.
நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை

  1. மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
  2. முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
  3. கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
  4. எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
  5. சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு
  6. ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும். கொஞ்சம் அதிக ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் வேணும்னா 80% ஈக்விட்டியிலும் 20% பாண்டிலும் முதலீடு செய்யலாம்
  7. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
    8 பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.

முதலீட்டு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
உடல் நலம் காக்கும் மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித்தான். நீங்க ஃபீஸ் ஏதும் கொடுக்க வேண்டாம், மருந்து கம்பெனிகளிடம் கமிசன் வாங்கிக்கறேன்னு ஒரு டாக்டர் சொன்னா அவரிடம் போவோமா? ஒரே மருந்தை நூறு கம்பெனிகள் தயாரிக்கின்றன, எந்த கம்பெனி அதிக கமிசன் தருதோ அவங்க மாத்திரையைத்தானே அவர் பரிந்துரை செய்வார். கம்பனி அதையும் நம்ம கிட்டதான் வசூல் செய்யும். அதே லாஜிக்தான் முதலீட்டு ஆலோசகர்களுக்கும். அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் “Fee Only” Advisors இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. வாடிக்கையாளர் தரும் 0.5 – 1 % மட்டுமே இவர்களின் வருமானம். இவர்கள் பரிந்துரைக்கும் ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து இவர்கள் கமிசன் ஏதும் பெறக்கூடாது. இப்படி இருந்தால் அவர் பாரபட்சமின்றி நல்ல முதலீடுகளை நமக்குக் காட்டுவார்கள்.
எப்படி டாக்டர், வக்கீல், இஞ்சினியருக்கு ஃபீஸ் கொடுத்து கன்சல்டேசன் பெருகிறோமோ அப்படி முதலீட்டு ஆலோசகர்ளுக்கும் கொடுத்தால்தான் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்
லாபத்தில் பங்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதிலிருக்கும் ரிஸ்க் – அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆலோசகர்கள் ரிஸ்க் அதிகமான முதலீடுகளை பரிந்துரைக்கும் வாய்ப்பு இருப்பதால் அது உசிதமல்ல.
ம்யூச்சுவல் ஃப்ண்டில் போடறதா இருந்தா www.valueresearchonline.com போன்ற வெப்சைட்களில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், பாண்ட் இவற்றில் டாப் 10 ஃபண்ட்கள் குறித்து பாத்துட்டு போங்க, இவை தவிர ஆலோசகர் வேறு ஃபண்ட்களை பரிந்துரை செய்தால், காரணம் கேளுங்க, அந்த ஃபண்ட் டாப் 10 ஃபண்ட்களை விட எந்த விதத்தில் சிறந்தது என்று கேளுங்க. பதில் திருப்தியா இருந்தால் அதில் முதலீடு செய்யுங்க. சில டாக்டர்கள் நான் டாக்டரா நீயான்னு கேக்கறா மாதிரி கேட்டா ஆலோசகரை மாத்திடுங்க.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ், எனக்கு சிம்பிளா 3-4 ஃபண்ட் சொல்லுங்க, அதில் பணம் போடறேன்னு சொல்றவரா நீங்க? உங்களுக்கென உருவானதுதான் Robo Investing என்கிற கான்செப்ட். ரோபோ இன்வெஸ்டிங் தளங்களில் நீங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சா, வயசு, முதலீடு செய்ய இருக்கும் தொகை, காலம், உங்க risk appetite ஒரு சில அடிப்படை கேள்விகள் கேக்கும். பதில்களை வைத்து அதில் உள்ள அல்கோரிதம் உங்களுக்கென ஒரு ப்ரத்யேக போர்ட்ஃபோலியோ கொடுக்கும், அது எவ்வளவு ப்ரத்யேகம்னா, உலகில் உள்ள எல்லா மகர ராசிகாரர்களும் ஒரே பலன் சொல்றது எவ்வள்வு ப்ரத்யேகமோ அந்த அளவுக்குத்தான் இதுவும். அது சொல்லும் ஃப்ண்ட்களில் பணம் போட எழுதிக் கொடுத்தா மாதா மாதம் உங்க வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து அதுவே முதலீடு செய்து விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதுவே ரீ பேலன்சிங் செய்து விடும். அமெரிக்காவில் Betterment, Wealthsimple, Wealth Front என நிறைய ரோபோ பேலன்சிங் தளங்கள் உள்ளன. இவர்கள் 0.25% முதல் 0.5% வரை ஃபீஸ் வாங்குகிறார்கள்.
இந்தியாவில் இந்த கான்செப்ட் இன்னும் சூடு பிடிக்க வில்லை, www.wealthy.in, www.goalwise.com போன்றோர் ரோபோ இன்வெஸ்டிங் சேவை அளிக்கின்றனர். இவற்றில் பிரச்சனை மேலே சொன்ன ஃபீஸ் வாங்கும் வழிதான். நம்மிடம் ஃபீஸ் வாங்காமல், ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து கமிசன் பெறுகின்றனர். இந்நிலை மாறும் போது இன்னும் நல்ல ஃபண்ட்களை இவர்கள் பரிந்துரை செய்வார்கள் என நம்பலாம்.
தற்போது இந்தியாவில் உள்ள ம்யூச்சுவல் ஃபண்ட்கள் 2-3 % அளவுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்க இதுவும் ஒரு காரணம். அமெரிக்காவில் வேன்கார்ட், ஃபிடெலிடி நிறுவனங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் 0.3% முதல் 0.9% வரையிலும் actively managed funds 0.5% முதல் 1% வரையிலும் கட்டணம் பெற்று வருகின்றன. இந்த அளவுக்கு குறையலேன்னாலும் இந்தியாவில் இப்ப இருக்கும் கட்டணங்கள் பாதி அளவுக்காவது குறையணும்.
எல்லாம் சொல்லிட்டு என்னிக்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்னு சொல்லணும் இல்லையா? முதலீடு செய்ய ஆரம்பிக்க உகந்த நாள் “இன்று”. நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே உங்க ஓய்வு கால திட்டமிடுதலைத் தொடங்குங்க

எந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்

ELSS Funds : வருமான வரி விலக்கு வேண்டுவோர் இந்த ஃபண்ட்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் போடும் பணத்தை மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது, ஆனா 80C Section கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.
http://www.moneycontrol.com/mutual-funds/performance-tracker/returns/elss.html இங்கு அனைத்து இ எல் எஸ் எஸ் ஃபண்ட்களையும் காணலாம்

வருமானவரி விலக்கு இல்லா ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போது ஒரு பகுதி லார்ஜ் கேப்பிலும் ஒரு பகுதி மிட்கேப்பிலும் ஒரு பகுதி பாண்ட் ஃபண்ட்களிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம்.

பின்குறிப்பு : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. உங்கள் முதலீடு வளரவும் வீழவும் வாய்ப்புண்டு. நீண்டகால முதலீடு வளர வாய்ப்பு அதிகம் என்று மட்டுமே கூற இயலும்.
இங்கு சொல்லப்பட்டவை வெறும் அறிவுப் பகிர்தல் மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதும் விடுவதும் உங்க சொந்த முடிவே.

காப்பீடு மற்றும் முதலீடு அடிப்படைகள்

நெறய பேரு தொடர்ந்து ஒரே கேள்விகள் கேக்கறதால ஒரு அடிப்படி கைடு மாதிரி ஒண்ணு எழுதலாம்னு எண்ணம்

இதில் இருப்பவை ரொம்பவே பேசிக் விசயங்கள், ஓரளவுக்கு ஞானம் இருப்பவர்கள் இப்பவே அடுத்த போஸ்ட்டுக்கு செல்வது நேர விரையத்தை தவிர்க்க உதவும். 
முதலீட்டைப் பத்தி யோசிக்கும் முன்னர் செய்ய வேண்டியவை 
1. வரிகள் போக கையில் வரும் மாத வருமானத்தின் 3 முதல் 6 மடங்கு வரை ஒரு அவசர கால நிதியை உருவாக்குங்கள். இதை ஒரு தனி வங்கிக் கணக்கிலோ அல்லது ஒரு ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிலோ போட்டு வையுங்கள். இதை எமெர்ஜென்சி காலம் தவிர வேறு எப்போதும் தொடக்கூடாது. பள்ளிக் கட்டணம், தீபாவளி செலவு, காலா பட டிக்கெட் எல்லாம் எமர்ஜென்சி செலவு இல்லை

2. ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுங்கள் 

அ) எந்த நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு எடுப்பது? 
எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் எடுங்கள் ஆனால் எடுப்பது டெர்ம் பாலிசியாக மட்டும் இருக்கட்டும்

ஆ) க்ரிடிகல் இல்னெஸ், ஆக்சிடெண்ட் டபுள் கவர் என்றெல்லாம் ரைடர் சொல்றாங்களே அதெல்லாம் எடுக்கலாமா?

உங்க காப்பீட்டுத் தேவை ஒரு கோடி ருபாய்னா, அது நீங்க எப்படி இறந்தாலும் ஒரு கோடிதான், விபத்தில் இறந்தால் மட்டும் உங்க குடும்பத்துக்கு ஏன் ரெண்டு கோடி வேணும்? எனவே இது வேணாம்.

உங்களுக்கு கேன்சர் போல ஏதேனும் பெரிய வியாதி வந்தால் ப்ரீமியம் கட்டத்தேவையில்லை க்ரிடிகல் இல்னெஸ் ரைடரில் – இது தேவைன்னு உங்களுக்குத் தோணிணா வாங்குங்க

இ) எவ்வளவு காலத்துக்கு பாலிசி எடுக்கணும்? 
காப்பீடு என்பது Income Replacement எனவே நீங்க ரிட்டையர் ஆகும் தினம் வரை தேவை, வருமானம் இல்லாத யாருக்கும் காப்பீடு தேவையில்லை. 

ஈ) இல்லத்தரசிக்கும் பிள்ளைகளுக்கும் பாலிசி எடுக்கலாமா? 
யார் ஒருவர் இறந்தால் குடும்பம் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுமோ அவர்களுக்கு மட்டுமே காப்பீடு தேவை. மற்றவர்களுக்கு இல்லை 
மனைவி இறந்தால் அவர் இடத்தில் ஒருவரை வேலைக்கு அமர்த்தணும் அதுக்கு 10,000 ரூ மாதாமாதம் தேவைன்னு நினைச்சா அதுக்கு ஏற்றார்போல காப்பீடு எடுக்கலாம், பிள்ளைகளுக்கு கண்டிப்பா தேவையில்லை

உ) சேத்து வச்சிருக்கும் சொத்துக்களான மணி பேக், யூலிப், ஜீவன் ஆனந்த் இன்னபிற பாலிசிகளை என்ன செய்வது? சரண்டர் செய்தால் நஷ்டமாகுமா? 
டெர்ம் பாலிசி விலையைப் பாத்தீங்கன்னா அப்ப புரியும் அந்த பாலிசிகள் அனைத்தும் எப்படி உங்க சேமிப்பை சூறையாடுகின்றன என்று. அவை நல்ல காப்பீடுமில்லை நல்ல முதலீடுமில்லை. அவற்றை நிறுத்திவிட்டு அந்த காசுக்கு பல மடங்கு அதிகம் ஆயுள் காப்பீடும் எடுக்கலாம் முதலீடும் செய்யலாம். இப்ப சிறு நஷ்டம் வரலாம், தொடர்ந்தால் வரும் நஷ்டம் பெரிது, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

2 ஊ : வேலை செய்யும் நிறுவனத்தில் காப்பீடு இருக்கு, நானும் எடுக்கணுமா? 
ரிட்டையர் ஆகற வரை அங்கயே சாஸ்வதம்னா வேணாம், அந்த நம்பிக்கையில்லைனா கண்டிப்பா வேணும். அடுத்த கம்பெனி காப்பீடு தருமான்னு தெரியாது, வயசு ஏற ஏற ப்ரீமியம் அதிகமாகும், அதை விட முக்கியம் – உங்களுக்கு ஏதாவது வியாதி வந்தால் ஆயுள் காப்பீடு மறுக்கப்படும்

3. ஹெல்த் இன்சூரன்ஸ் வேணுமா? எவ்வளவு ? எங்கு? 
வேணும் என்பது மட்டுமே நான் சொல்ல இயலும். ஸ்டார் ஹெல்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ பாலிசி எடுக்கவும். உங்க குடும்பத்தினர் எண்ணிக்கை, அவர்களின் உடல் நிலை, நீங்க வசிக்கும் நகரத்தின் மருத்துவச் செலவு இவற்றை ஆராய்ந்து முடிவு செய்யவும்

3அ) கம்பெனியில் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கு, நானும் எடுக்கணுமா? 
இப்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குகின்றன. கம்பெனின் மாறினாலும் இருக்கும் என நம்பலாம், ஆதலால் வேணும்னா ஒரு சிறு தொகைக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நீங்களும் எடுக்கலாம்.

இதுக்கு அப்புறம்தான் நீங்க முதலீடு குறித்தே யோசிக்கணும்.