5% Rule and Retirement Corpus

ஓய்வு கால சேமிப்பு குறித்த தலைப்பில் எவர் க்ரீன் கேள்வி ரிட்டையர்மெண்ட்டுக்கு எவ்வளவு சேக்கணும் என்பதே. அதிலும் நாற்பதைத் தொட்டவர்களின் மனதில் வியாபித்திருப்பது இது, நண்பர் Murali Kannan அவர்கள் கூட சமீபத்தில் நாற்பதைத் தொட்டவர்களின் ரிட்டையர்மெண்ட் கவலை குறித்து எழுதியிருந்தார்.

முந்தைய தலைமுறை போல நமக்கு பென்சன் எனும் லக்சரி கிடையாது. பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிற்கவும் முடியாது. நம் ஓய்வு காலத்துக்கு நாமே சேமித்தால்தான் உண்டு. இதையும் 5% விதியையும் விளக்கவே இப்பதிவு.

ரிட்டையர்மெண்ட்டுக்குத் தேவைப்படும் தொகையை துல்லியமாக யாராலும் கணிக்க முடியாது – மருத்துவம் போன்ற எதிர்பாரா செலவுகள் அதிகரிக்கக்கூடும், இன்ஃப்ளேசன் அடுத்த 20- 30 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது – ஆனால் இன்றிருக்கும் தகவல்களைக் கொண்டு தோராயமாக இதைக் கணிக்க முயல்கிறேன்.

40 வயதாகும் ஒருவர் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். ரிட்டையர் ஆகும் அன்னிக்கு கடனில்லாத வீடு இருக்கணும், பிள்ளைகளின் படிப்புச் செலவு முடிந்திருக்கணும். இவற்றைச் செய்து முடிக்காமல் ரிட்டையர் ஆவது கடினம். 
இன்றைய உங்க குடும்பச் செலவுக் கணக்கை எடுங்க, அதில் வீட்டுக்கடன், பிள்ளைகள் படிப்புச் செலவு, பிள்ளைகளின் பிற செலவுகளை நீக்கிடுங்க – மிச்சமிருப்பதுதான் நீங்களும் உங்க மனைவியும் வாழத்தேவையான பணம். 
2019 ஜனவரி மாதம் உங்க வயசு 40 ஆக இருக்கும் போது இத்தொகை 25000 ரூபாய் / ஆண்டுக்கு 3 லட்ச ரூபா என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியாவின் இன்ஃப்ளேசன் தோரயமா 6% அதாவது இந்த ஆண்டு 100 ருபாய் இருக்கும் பொருளோ சேவையோ அடுத்த ஆண்டு 106 ரூபாயாக இருக்கும். இப்படியே கணக்குப் போட்டால் உங்களுக்கு 60 வயது ஆகும் போது இன்றிருக்கும் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய உங்களுக்கு ஆகும் செலவு 9,62,141 – ஒன்பது லட்சத்து அறுபத்து இரண்டாயிரம் ரூபாய். அதற்கப்புறமும் இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் 85 வயது வரை எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டிருக்கிறேன். இன்று ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தரும் லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய 85வது வயதில் ஆண்டுக்கு 41 லட்சத்து 29 ஆயிரத்து 383 ரூபாகள் ஆகும்.

அது என்ன 5% விதி இது ஆக்சுவலா விதி அல்ல, பொருளாதார / சேமிப்பு வல்லுனர்கள் ரிட்டையர்மெண்ட் சேமிப்பிலிருந்து ஆண்டுக்கு 5% மட்டுமே உருவி செலவு செய்யலாம் என அறிவுரை சொல்கின்றனர். அதற்கு மேல் எடுத்து செலவு செய்தால் நீங்க சேர்த்து வைத்திருக்கும் தொகை உங்க வாழ் நாள் முழுமைக்கும் வராமல் போகலாம், கடைசி காலத்தில் செலவுக்கு காசில்லாமல் நீங்கள் நிற்கும் நிலை வரலாம் என்கிறனர்.

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்போர் தம் சேமிப்பை பங்குச் சந்தை முதலீடு போன்ற ரிஸ்கான வழிகளில் முதலீடு செய்யலாம், இதையே ரிட்டையர் ஆன ஒருவர் செய்ய முடியாது – ரிட்டையர்மெண்ட் தொகையை வங்கி வைப்பு நிதி, அரசு கடன் பத்திரங்கள் போன்ற சேஃபான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது நலம். ரிஸ்க் இல்லாத / கம்மியான முதலீடுகளின் ரிட்டர்னும் கம்மியாவே இருக்கும். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இத்தகைய முதலீடுகளின் ரிட்டர்ன் 5% க்கு மேல் இருக்க வாய்ப்புகள் குறைவு.

அதாவது உங்க சேமிப்பு ஆண்டுக்கு 5 % ரிட்டர்ன் கொடுக்கும் அதே சமயம் உங்க செலவோ ஆண்டுக்கு 6% அதிகரித்துக்கொண்டேயிருக்கும். அப்ப நீங்க வட்டி மட்டுமல்லாது அசலில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். இதை சமாளிக்க நீங்க செய்ய வேண்டியது உங்களுக்கு 60 வயது ஆகும் போது இருக்கக் கூடிய ஆண்டு செலவின் 30 மடங்கை சேமிப்பு இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். இது இன்று 40 வயது ஆகும் ஒருவரின் தற்போதைய செலவின் 100 மடங்கு.

40 வயது ஆகும் ஒருவரின் குடும்பச் செலவு ஆண்டுக்கு 3 லட்சம் (வீட்டுக்கடன், பிள்ளைகள் செலவு சேர்க்காமல்) 60 வயதில் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்யத் தேவை ரூ9,62,141. அங்கிருந்து ஆரம்பித்து 85 வயது ஆகும் போது வாழத் தேவையான சேமிப்புத் தொகை 2 கோடியே 88 லட்சத்து 64 ஆயிரத்து 219 ரூபாய்கள்.

இப்போது எக்செல் ஷீட்டை ஒரு முறை பாருங்கள். அந்நபர் ரிட்டையர் ஆகும் அன்று இத்தொகையை சேமித்து வைத்திருக்கிறார். கணக்கு எளிதாகப் புரிவதற்கு ஜனவரி 1 அன்றே அந்த ஆண்டுக்கான செலவு 962141 மொத்ததையும் கழித்து விட்டு மிச்சம் 2,79,02079க்கு மட்டும் 5% வளர்ச்சி போட்டு அந்த ஆண்டு இறுதியில் 2929783 ரூபாய் அவரிடம் இருக்கும். அடுத்த ஆண்டு 6% விலைவாசி உயர்வில் செலவு 1019869 ஆக இருக்கும். அது போக மிச்சமிருக்கும் 2,82,77,313 ரூபாய் 5% வளர்ச்சி பெற்று 29691179 ஆக இருக்கும். வளர்ச்சி 5% லேயே நிற்கும் ஆனால் செலவோ அதிகரித்துக் கொண்டேயிருகும். 2 கோடியே 88 லட்சத்தில் ஆரம்பித்த சேமிப்பு 10 ஆண்டுகள் அதிகரித்து 70 வயதில் மூணு கோடியைத்தாண்டும் ஆனா அதற்கப்புறம் செலவு அதிகரித்து அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். 74 வயது ஆகும் போது 60 வயதில் ஆரம்பித்ததை விட கம்மியாகும்… அது மேலும் குறைந்து கொண்டே வந்து 85ம் வயது முடிவில் வெறும் 2 லட்ச ரூபாய் மட்டுமே கையிருப்பு இருக்கும்.

வளரும் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களை வளர்த்து ஆளாக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், அதே ரிட்டையர் ஆனப்புறம் சேமிப்பு கரைந்தபின்பும் உயிரோடு இருக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள். 85 வயது வரை கணக்கிட்டு சேமித்து அதற்கு முன்னர் இறந்தால் பிள்ளைகள் சந்தோசமாக மிச்சப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள், அதே பெற்றோரின் சேமிப்பு 70 வயதில் கரைந்து விட்டால் அதற்கப்புறம் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் குறைவே.

சரி இத்தனை பணத்தை எப்படி எங்கு சேமிப்பது? மாதம் 20,000 ரூபாயை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 20 ஆண்டுகள் சேமித்தால் 3 கோடி ரூபாயை எட்டி விடலாம். எந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பதை ஒரு நல்ல ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை எல்லைக் கோட்டை நிர்ணயிக்காமல் சேமித்தவர்களும் சேமிப்பே இல்லாதவர்களும் இனியாவது சரியான பாதையில் சேமிக்கத் தொடங்குங்கள்

No photo description available.
Please follow and like us: