கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் ரீட்டெயில் இன்வெஸ்டர்கள் எஸ் ஐ பி மாதாந்திர முதலீட்டை நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எக்கனாமிக் டைம்ஸ் கட்டுரை சொல்கிறது.
நீங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், முதலீட்டைத் தொடர்வதும், நிறுத்துவதும், இருக்குற பணத்தை எடுத்துக்கிட்டு வருவதும் உங்க விருப்பம், ஆனா இதை விட மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியில் என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.
அக்டோபர் 2008 முதல் மார்ச் 2009 வரை (5 மாதங்கள்), அமெரிக்கப் பங்குச் சந்தை பெறும் வீழ்ச்சியடந்தது. 9 அக்டோபர் 2008 இல் 14,164 புள்ளிகளாக இருந்த டௌ ஜோன்ஸ் குறியீடு 9 மார்ச் 2009 அன்று வெறும் 6504 புள்ளிகளாக ஆகிவிட்டது. 5 மாதங்களில் 54% வீழ்ச்சி. அதாவது அக்டோபர் அன்று உங்க கணக்கில் இருந்த ஒரு கோடி ரூபாய் நீங்க எதுவுமே பண்ணாம 5 மாசம் கழிச்சு 56 லட்சமாக குறைந்திருக்கும். இப்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிறிய வீழ்ச்சிக்கே பயப்படுவோர் 54% குறைந்திருந்தா என்ன பண்ணியிருப்பாங்க?
இந்தியாவில் எப்படியோ தெரியல, அமெரிக்க முதலீட்டாளர்கள் மூவர் என்ன பண்ணாங்கன்னு பாக்கலாம்.
டாம், டிக் & ஹாரி மூவரும் நெருங்கிய நண்பர்கள், மூவரும் ஒரு ஆலோசகர் துணையுடன் ஒரே மாதிரி பங்குச் சந்தை முதலீடுகளை செய்து வந்தனர். 2008இல் சந்தை வீழ்ச்சியடையும் போது மூவரின் கணக்கிலும் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தது. ஒரே மாதிரி முதலீடு செய்து வந்தாலும் 5 மாத தொடர் வீழ்ச்சியின் போது மூவரும் வெவ்வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கினர். ஹாரியைத் தவிர மற்ற இருவரும் ஆலோசகர் பேச்சைக் கேட்பதையும் நிறுத்தி விட்டனர்
டாம் 54% மதிப்பு இறக்கத்தைக் கண்டதும் ரொம்பவே பயந்துவிட்டார். இன்னமும் சந்தையில் பணத்தை வைத்திருந்தால், மொத்தவும் போய்விடும் என்று 10 மார்ச் 2009 அன்று 460,000 டாலர்களையும் எடுத்து வங்கியில் போட்டுவிட்டார். அமெரிக்க வங்கிகள் சேமிப்புக்கணக்குக்கு வெறும் 0.5% மட்டுமே வட்டி கிடைக்கும் அதற்கும் வருமான வரி உண்டு, ஆக மொத்தம் பணம் அப்படியே இருக்கும். ஆனால் 2009 முதல் இன்று வரை அமெரிக்காவில் விலைவாசி 15% உயர்ந்துள்ளது. அதாவது 2009 இல் 400,000 டாலருக்கு கிடைத்த பொருளுக்கு இன்று 460,000 கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது 54%ஐ பங்குச் சந்தையில் இழந்த டாம் இன்னொரு 15%ஐ இன்ஃப்ளேசனில் இழந்து விட்டார்.
டிக் கொஞ்சம் மிதவாதி. டாம் 2009 இல் தன் முதலீட்டை எடுக்கப்போறேன்னு சொன்னதும் இவரும் கொஞ்சம் பயந்து விட்டார். டிக் அதற்கு மேலும் எவ்வித முதலீடும் செய்யவில்லை ஆனால் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு மில்லியன் டாலரைத் தொடவில்லை. இன்று அதன் மதிப்பு 1.9 மில்லியன் டாலர்கள். இன்று டௌ ஜோன்ஸ் குறியீடு 26,627 புள்ளிகள் அதாவது நஷ்டத்தையும் ஈடு செய்து, ஒரிஜினல் முதலீட்டின் இரு மடங்காகவும் ஆகியுள்ளது.
இருப்பதிலேயே ஹாரிதான் புத்திசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி. டாமையும் டிக்கையும் பங்குச் சந்தையில் நீண்டகாலம் நிலைத்திருப்பதை வலியுறுத்தினார், ஒருவர் பாதி கேட்டார் மற்றொருவர் சுத்தமா கேக்கல.
பங்குச் சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என்று நம்பிய ஹாரி 10 மார்ச் 2009, ஏற்கெனவே இருந்த முதலீட்டை தொடவில்லை, அது மட்டுமில்லாமல் தன்னிடமிருந்த வேறு சில முதலீடுகளிலிருந்து எடுத்து இன்னொரு மில்லியன் டாலரை 6504 புள்ளிகளில் டௌ ஜோன்ஸ் இருந்த போது சல்லிசா கிடைத்த நல்ல பங்குகளில் முதலீடு செய்தார். ஆக அவரோட மொத்த முதலீடு 2 மில்லியன் டாலர்கள். 54% வீழ்ந்த முதல் மில்லியனின் இன்றைய மதிப்பு 1.9மில்லியன், வீழ்ச்சியடந்த மார்க்கெட்டில் முதலீடு செய்த மில்லியனின் இன்றைய மதிப்பு 4.1 மில்லியன் டாலர்கள். ஆக மொத்தம் 6 மில்லியன் டாலர்கள்.
https://economictimes.indiatimes.com/mf/analysis/mutual-fund-investors-stop-their-sips-as-market-turns-volatile/articleshow/66049916.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=ETFBMF&fbclid=IwAR20K923Mzca2y3fRIX1DaRcRX62AWgCQHIWEeLAHwd1MdyLCZi9vONFOvsடாம், டிக் & ஹாரி – இந்த மூவரில் நீங்க யார் மாதிரி என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஆஃப்டர் ஆல் உங்க பணம் – உங்க முடிவு