எனக்கு முந்தையத் தலைமுறை க்ரெடிட் கார்டை கௌரவக் குறைச்சலாகப் பார்த்தது, பணம் கொடுத்தே பொருள் வாங்கியவர்கள் க்ரெடிட் கார்ட் நீட்டுவதை கடன் சொல்வதைப் போல எண்ணினார்கள்.
என் நண்பர்கள் இந்தியாவில் க்ரெடிட் கார்டை பரவலாக உபயோகித்த முதல் தலைமுறையினர். அது செயல் படும் விதம் புரியாமல் “ரிவால்விங் க்ரெடிட்டில்” சிக்கி சின்னாபின்னமானார்கள்
இன்றைய தலைமுறை க்ரெடிட் கார்டின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு எப்போதும் லிமிட் முழுவதையும் உபயோக்கின்றன்றனர்.
ஆக மொத்தம் க்ரெடிட் கார்ட் என்கிற வஸ்து பெரும்பாலான நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படவேயில்லை.
சிபில் ஸ்கோர் வந்தப்புறம் “நான் க்ரெடிட் கார்ட் எல்லாம் வச்சிக்கவே மாட்டேன்” என்று சொல்வது வேலைக்காக்காது – ஏன்னா நீங்க கடன் வாங்கி ஒழுங்கா கட்டியிருந்தாத்தான் உங்க சிபில் ஸ்கோர் ஏறும். வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற Big Ticket Loan வாங்கப் போகும் போது அதிக ஸ்கோர் இருந்தாத்தான் வட்டி கம்மியா இருக்கும். நான் கார்டே வச்சிக்கிட்டத்தில்லைன்னு சொல்றவருக்கான வட்டி கார்டுக்கு மாசா மாசம் ஒழுங்கா டியூ கட்றவருக்கான வட்டியை விட அதிகமா இருக்கும்.
க்ரெடிட் கார்ட்டை ஒழுங்கா கையாள்வது எப்படி
1. Credit Card பாலபாடம் இலவசக் கார்டை மட்டுமே வாங்குங்க – இலவச கார்டுகள் இருக்கும் போது Annual Fee கொடுத்து கார்ட் வாங்குவது வீண்
2. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் – எண்பதுகளில் பிரபலமாக இருந்த வாசகம் – இது க்ரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் – பத்து கார்டு கையில் இருந்தால் எதை உபயோகிக்கிறோம், எதுக்கு எப்போ டியூ என்று மறத்து விடும். 99% மக்களுக்கு ரெண்டு கார்டுக்கு மேல் தேவையில்லை
3. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் மாதாவையும் மாதாந்திர டியூவையும் ஒரு நாளும் மறக்க வேண்டாம் – கார்டோட டியூ தேதிக்கு 5 நாள் முன்ன ஞாபகப் படுத்தறா மாதிரி ஒரு நோட்டிஃபிகேசன் வச்சிக்கோங்க, கடைசி நாள் வரை காத்திராமல் சீக்கிரமே பணத்தைச் செலுத்தவும்
4. பணத்தைச் செலுத்தும் போது ஸ்டேட்மெண்ட் பேலன்ஸ் முழுவதையும் செலுத்தவும். 5 % கட்டினா போதும் 10% கட்டினா போதும்னு பேங்க் காரன் சொல்லுவான் – ரிவால்விங் க்ரெடிட் ஒரு புதைமணல் அதில் சிக்கி மீண்டு வருவதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மி
5. ரிவால்விங் க்ரெடிட் உபயோகிக்காமல் பேலன்ஸ் முழுவதையும் எப்படிச் செலுத்துவது? அது ரொம்ப சிம்பிள் – அடுத்த மாசம் உங்களால் எவ்வளவு பணம் க்ரெடிட் கார்டுக்கு கட்ட முடியுமோ அதற்கும் கம்மியா இந்த மாசம் கார்டில் தேய்ங்க.. ரொம்ப சிம்பிள்தானே?
6. வங்கிகள் தரும் க்ரெடிட் லிமிட் பெரும்பாலும் உங்களை ரிவால்விங் க்ரெடிட் சுழலுக்குள் இழுக்கும் அளவுக்கே இருக்கும். என் அனுபவத்தில் பொதுவா பயனருக்குத் தரவேண்டிய லிமிட்டின் ரெண்டு மடங்கு தருகின்றன வங்கிகள். அவன் சொல்றதை தூர தூக்கிக் கடாசிட்டு நீங்களே உங்களுக்கு ஒரு லிமிட் செட் பண்ணுங்க – பொதுவா அது வங்கி தரும் லிமிட்டில் பாதியா இருக்கும். குறிப்பா சொல்லணும்னா சம்பளத்திலேருந்து – வாடகை அல்லது இ எம் ஐ, கார்டில் தேய்க்காத பிற செலவுகள், சேமிப்பு இவை போக எவ்வளவு கட்ட முடியுமோ அதுக்கு 5-10% கம்மியா லிமிட் முடிவு பண்ணிக்கோங்க
7. Credit Utilization Ratio : சிபில் ஸ்கோரை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இது.
உங்களுக்கு வங்கி தந்திருக்கும் லிமிட்டில் எத்தை % உபயோக்கிறீர்கள் என்பதைக் குறிப்பது இது. உங்க லிமிட் 1 லட்ச ரூபாய் என்றும் இன்று உங்க பேலன்ஸ் 50,000 என்றும் வைத்துக் கொண்டால் உங்க Credit Utilization Ratio 50%, இது ஒரு போதும் 90% தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 80%க்கு குறைவாக வைத்துக் கொள்வது உசிதம். இதற்கு ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. உங்க Credit Utilization Ratio வங்கியால் சிபிலுக்கு மாதமொரு முறை அதாவது ஸ்டேட்மெண்ட் எடுத்தவுடன் ரிப்போர்ட் செய்யப்படும் – உங்க பில்லிங் ட்10ம் தேதி என்று வைத்துக் கொள்வோம் – நீங்க ஸ்டேமெண்ட்டுக்கெல்லாம் காத்திராமல் 5 ம் தேதியே இருக்கும் பேலன்ஸை க்ளியர் செய்து கொண்டே வந்தால் ஒவ்வொரு மாதமும் உங்க Credit Utilization Ratio மிகக் குறைவாகவே ரிப்போர்ட் ஆகும்.
8. க்ரெடிட் கார்டுகள் தரும் ரிவார்ட்ஸை ஒழுங்காக உபயோகியுங்கள். கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம், ஒழுங்காக திருப்பிக் கட்டினால் சிபில் ஸ்கோர் ஏறும் இவை போக கார்டுகள் வேறு ஒரு சலுகையும் தருகின்றன. அதுதான் கேஷ் பேக் மற்றும் ரிவார்ட்ஸ்.
குறிப்பிட்ட வகை ஷாப்பிங்குகளுக்கு கேஷ் பேக் தரும் கார்டுகள் உள்ளன. சிடி ரிவார்ட்ஸ் க்ரெடிட் கார்ட் போன்ற கார்டுகள் நீங்கள் பெரும் ரிவார்ட்ஸ் பாயிண்ட்களை பணமாக மாற்றி அதை உங்க கார்ட் பேலன்ஸ்க்கு கட்டுவதற்கு அனுமதிக்கின்றன. அதாவது கார்டும் இலவசம், அதைக் கொண்டு செய்யும் சில பர்ச்சேஸ்களுக்கு கேஷ் பேக், மற்ற பர்ச்சேஸ்களுக்கும் சுமாரா 1% ஸ்டேண்டெண்ட் க்ரெடிட் – சுருக்கமாச் சொன்னா கரும்பு தின்னக் கூலி.
இப்படி நமக்கு நாமே விதிகளை வகுத்துக் கொண்டால் க்ரெடிட் கார்ட் ஒரு நல்ல வரம்