LIC யின் பங்குச்சந்தை முதலீடுகள்

டெர்ம் பாலிசியைத் தவிர வேறெந்த ஆயுள் காப்பீட்டையும் வாங்காதீங்கன்னு எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் பாலிசி நல்லாருக்குன்னு சொல்றாங்களே? ஏஜெண்ட் இதுல போட்டா நல்ல ரிட்டர்ன்ஸ் இருக்கும்னு சொல்றாரே? வங்கியில் இந்த இன்சூரன்ஸ் பால்சியில் 8% கேரண்டீட் ரிட்டர்னு சொல்றாங்களே? இது நல்ல முதலீடான்னு கேட்பது நிற்கவேயில்லை

நேரடி / மியூச்சுவல் ஃபண்ட் வழிப் பங்குச் சந்தை முதலீடு எல்லாம் ரிஸ்க்குங்க, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் எண்டோமெண்ட் / ஹோல் லைஃப் பாலிசியில் முதலீடு செய்தா கேரண்டீட் ரிட்டர்ன் கிடைக்கும்னு நினைக்கறாங்க பலபேர்.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் இரு கேள்விகள்

1. எந்த எண்டோமெண்ட் பாலிசிலியிலும் ரிட்டர்ன்ஸ் குறித்து எவ்வித கேரண்டியும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. வங்கியில் நீங்கள் வைக்கும் பணம்தான் (சேமிப்புக் கணக்கிலோ வைப்பு நிதியிலோ) அதன் மூலப்பொருள். 4 முதல் 7% வட்டிக்கு வங்கி உங்களிடம் பணம் வாங்கி அதை 9-18 % வட்டிக்கு விற்கிறது. உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி கணக்கில் வைத்தால் வங்கி தோராயமாக 4- 5 லட்ச ரூபாயை Fractional Reserve Lending மூலம் கடன் கொடுக்கும். இதன் மூலம் வங்கி வருமானம் பெறுகிறது. பணத்தை மூலதனமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தாத காப்பீட்டு நிறுவனம் எப்படி வங்கியை விட அதிக வட்டி தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியாவை பொருத்த வரை எல் ஐ சி தான் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். அது தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சார், ஷேர்லாம் ரிஸ்க் – மொத்த முதலும் கோவிந்தாவாகிடும், பாலிசில போட்டீங்கன்னா கேரண்டீட் ரிட்டர்ன் என்று சொல்லி ஏஜெண்ட் ஜீவன் ஆனந்துக்கு வாங்கும் ப்ரீமியத்தை எல் ஐ சி பங்குச் சந்தையிலும் அரசு கடன் பத்திரன்களிலும்தான் முதலீடு செய்கிறது. அவற்றிலிருந்து எல் ஐ சி அள்ளி எடுக்கும் வருமானத்தில்தான் உங்களுக்கான போனஸ் கிள்ளித் தரப்படுகிறது.

இவ்வாறு பல ஆண்டுகளாக எல் ஐ சி முதலீடு செய்து வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

(மே 2018 வரையிலான விவரங்கள்)

நேரடிப் பங்குகளில் முதலீடு – 4.6 லட்சம் கோடிகள்
ப்ரெஃபென்ஸ் ஷேர் 59 ஆயிரம் கோடிகள்
மியூச்சுவல் ஃபண்ட்கள் 25 ஆயிரம் கோடிகள்

அரசு கடன் பத்திரங்கள் 1.6 லட்சம் கோடி
பிர கடன் பத்திரங்கள் 25 ஆயிரம் கோடி
Debentures / Bonds 78 ஆயிரம் கோடி

2018 ல் மட்டும் எல் ஐ சி பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை 58,000 ஆயிரம் கோடி.

இதையெல்லாம் கூட்டி மொத்தமா எவ்வளவு எல் ஐ சி வச்சிருக்குன்னு பாத்துக்கோங்க

எல் ஐ சி முதலீடு செய்திருக்கும் பங்குகள், அரசின் கடன் பத்திரங்கள் அனைத்திலும் நாமும் நேரடியாகவோ மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமோ முதலீடு செய்ய முடியும். எல் ஐ சி யின் போர்ட்ஃபோலியோ திறமையாக நிர்வகிக்கப் படுகிறது என்பது உண்மையே – ஆனால் அதே அளவு திறமையுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.

நொடித்துப் போன நிறுவனங்களை எல் ஐ சியின் தலையில் கட்டுவதை மத்திய அரசு ஒரு பழக்கமாவே வச்சிருக்கு. அது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்கள் எல் ஐ சியை விட சிறப்பாக போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியும்

எல் ஐ சியின் போர்ட்ஃபோலியோ எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் எண்டோமெண்ட் பாலிசிகளில் 5-6% க்கு மேல் ரிட்டர்ன் கிடைக்கப் போவதில்லை. எல்லோரும் பயமுறுத்தறா மாதிரி பங்குச் சந்தை மொத்தமா வீழ்ந்தால் காப்பீடு நிறுவனங்களும் போனஸ் வழங்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்களில் 1-2% கட்டணம் போக மிச்சத்தொகை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது, வளர்ச்சியின் முழு பெனிஃபிட்டும் உங்களுக்கே

டெர்ம் பாலிசி தவிர மற்ற பாலிசிகள் தரும் காப்பிடும் பிரயோசனப்படாது முதலீடாகவும் அவை மோசமானவை என ஏன் சொல்கிறேன்

35 வயதுடைய ஒருத்தர் 30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கறார்னு வச்சிக்குவோம். அவர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்.

ஜீவன் ஆனந்த் 35 வயது, 30 ஆண்டுகாலம் – இதுக்கு ப்ரீமியம் 1.9 லட்ச ரூபாய்

5 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் 2 லட்ச ருபாய் ப்ரீமியம் கட்டவே முடியாது

அதே ஆள் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்தால் (35 வயது, 30 ஆண்டுகள்) அதற்கு ப்ரீமியம் வெறும் 11,562 ரூபாய்கள்தான். அதாவது ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய்கள் மட்டுமே. இதை அவரால் சுலபமாக எடுக்க முடியும்.

இப்ப முதலீட்டுக்கு வருவோம். ஜீவன் ஆனந்த் பாலிசியின் முடிவில் கிடைக்கக் கூடிய தொகை 1.8 கோடி, அப்புறமும் காப்பீடு தொடரும், பாலிசிதாரர் இறக்கும் போது ஒரு 50 லட்சம் கிடைக்கும்.
அதற்கு பதிலாக 12 ஆயிரத்துக்கு எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்ச 178,000 ஐ மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் 30 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் உங்களிடம் 5 கோடி ரூபாய்கள் இருக்க நல்ல வாய்ப்புண்டு

இனியாவது உங்க ஓய்வு கால சேமிப்புக்கு எண்டோமெண்ட் பாலிசிகளை நம்பாமல் எல் ஐ சியே நம்பும் பங்குச் சந்தை முதலீடுகளை தேர்ந்தெடுங்கள்

எல் ஐ சியின் முதலீடு குறித்த தகவல்கள் 4/9/2018 அன்று மணிகண்ட்ரோல் தளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டன

Please follow and like us: