ELSS (Equity Linked Savings Scheme) அப்படின்னா என்ன?

Image may contain: textULIP, ELSS மற்றும் வருமானவரி சேமிப்பு

இந்தப்படம் சொல்லும் சில கருத்துகள்

1. யூ எல் ஐ பி திட்டம் மோசமானது.
2. அதை மியூச்சவல் ஃபண்ட் முதலீடு + இலவச காப்பீட்டு என்பது போல் சொல்லப்படுவதை நம்பி முதலீடு செய்யக்கூடாது
3. வங்கிக்குப் போனால் சேமிப்பு, கடன், லாக்கர் இவை குறித்து மட்டும் பேசி விட்டு வந்து விட வேண்டும். வங்கியில் யாராவது முதலீடு குறித்தோ காப்பீடு குறித்தோ பேசினால், காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ஓடி வந்து விட வேண்டும்.

சரி யூ எல் ஐ பி மோசம், அப்ப ELSS?

ELSS (Equity Linked Savings Scheme) அப்படின்னா என்ன? அதில் எல்லாரும் முதலீடு செய்யலாமா?

ELSS என்பது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் போன்று மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் வகை.
இவ்வகை ஃபண்ட்கள் பாண்ட் எனும் கடன் பத்திரங்களில் இல்லாமல் ஈக்விட்டி எனும் பங்குச் சந்தை முதலீட்டை அடிப்படையாகக் கொண்டவை (ஈக்விட்டி ஃபண்ட்ஸ்)

நெறய ஈக்விட்டி ஃபண்ட்ஸ் இருக்கே, இதிலென்ன வித்தியாசம்?
இரு முக்கிய வித்தியாசங்கள் உள்ளன – 1. இதில் செய்யும் முதலீட்டுக்கு செக்சன் 80சியின் கீழ் வரி விலக்கு உண்டு (மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகளுக்கு கிடையாது) 2. இதில் செய்யும் முதலீட்டை 3 ஆண்டுகளுக்கு திரும்ப எடுக்க முடியாது. பொதுவா மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இம்மாதிரி நிபந்தனை கிடையாது. ஓராண்டுக்குள் எடுத்தால் 1% கட்டணம் இருக்கக் கூடும் ஆனால் எடுக்கவே முடியாது என்று இருக்காது.

ELSS இன் சாதகங்கள் :
1. வருமான வரி விலக்கு : இதில் செய்யும் முதலீட்டுக்கு செக்சன் 80சி யில் விலக்கு உண்டு

2. மூன்றாண்டுகள் லாக் இன் இருப்பதால் ஃபண்ட் மேனேஜருக்கு சுதந்திரம் அதிகம். முதலீட்டாளர் எடுக்கக்கூடும் என்று எப்போதும் நிறைய கேஷ் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாள் முதலீட்டுக்கு உகந்த பங்குகளை அவர் வாங்க முடியும்.

ELSS இன் பாதகங்கள்:
1. மூன்றாண்டுகள் முதலீட்டை எடுக்க முடியாது

2. எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு முதலீட்டுக்கும் முன்றாண்டு முடிந்த பின் தான் பணத்தை எடுக்க முடியும். உதாரணத்துக்கு வேறொரு ஃபண்டில் ஜனவரி 2016 முதல் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்த பணத்தை இப்போது மொத்தமாக எடுக்க முடியும், ஆனால் ELSS இல் ஜனவரி 2016 இல் முதலீடு செய்ததை மட்டுமே இப்போது எடுக்க முடியும் மார்ச் 2016 இல் முதலீடு செய்ததை ஏப்ரல் 2019இல் தான் எடுக்க முடியும்.

ELSS யாருக்கு ?
இது ஒரு நல்ல திட்டம் அதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் இது அனைவருக்குமானதல்ல

ஆண்டுக்கு 5 -6 லட்சரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்து, செக்சன் 80சியில் 1.5 லட்சம் விலக்கு பெறும் அளவுக்கு பிற முதலீடுகள் இல்லாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம்

ஏற்கெனவே இன்சூரன்ஸ் ப்ரீமியம், சுகன்ய சம்ரிதி, பி பி எஃப் போன்றவற்றில் 1.5 லட்சம் முதலீடு செய்து விட்டிருந்தால் இதில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் வருமான வரி விலக்கு இருக்காது

80சி யில் இடம்பெறக்கூடிய முதலீடுகள் 1 லட்சம் இருந்தால் மிச்சம் 50 ஆயிரம் மட்டும் இதில் முதலீடு செய்யலாம்

வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள், 80சியின் முழுமைக்கும் வேறு முதலீடுகள் வைத்திருப்போர், ELSS இல் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். அதற்கு பதில் Flexibility கொண்ட மற்ற ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யலாம்.

ELSS இல் ரிட்டர்ன்ஸ் நிச்சயம் என்றொரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது நிச்சயம் தவறு. மற்ற அனைத்து பங்குச் சந்தை முதலீடுகளைப் போல இதிலும் ரிஸ்க் உண்டு. உதாரணத்துக்கு ரிலையன்ஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் கடந்த ஆண்டு 24% வீழ்ச்சியடந்துள்ளது. 2017 இறுதியில் அக்கவுண்டில் இருந்த 10 லட்ச ரூபாய் 2018 இறுதியில் 7.6 லட்சமாக குறைந்திருக்கும். அது மீண்டு வர வாய்ப்புள்ளது என்றாலும், ELSS ஃபண்ட்கள் ஸ்திரமானவை என்பது வெறும் மாயையே.

இந்தக் கேட்டகரியில் எனக்குப் பிடித்த ஃபண்ட்கள் Axis Long Term Equity Fund – Direct Plan & Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct Plan – இதன் மூலம் நான் இவற்றைப் பரிந்துரைக்கவில்லை, எனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடித்திருந்தால், சுயமாக முடிவெடுத்து முதலீடு செய்யுங்கள்.

Please follow and like us: