புதியதலைமுறை பத்திரிக்கையில் வெளியான வருமானவரியில் மாற்றம் குறித்த கட்டுரை.
அதை அழகாகச் சுருக்கி வெளியிட்டமைக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி Justin Durai
ஐந்து லட்ச ரூபாய் வரை வருமானவரி விலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கேட்டவர் திரு. அருண் ஜெட்லி அவர்கள். அதற்கான அதிகாரம் அவர் கையில் வந்து நான்காண்டுகளுக்குப் பின்னரே அதற்கு வழி பிறந்திருக்கிறது.
நிதியமைச்சர் பியுஷ் கோயல் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் வரி மற்றும் சேமிப்பு குறித்து இருக்கும் முக்கிய அம்சங்கள்
1. ஸ்டாண்டர்ட் டிடக்சன் ஆண்டுக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது
2. சொந்த உபயோகத்திற்கு இருக்கும் இரண்டாவது வீட்டிற்கும் விலக்கு
3. வங்கி வட்டிக்கு TDS Limit 10,000 லிருந்து 40,000ஆக உயர்த்தப் படுகிறது
4. வீட்டு வாடகைக்கு TDS Limit 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது (TDS பிடித்தம் செய்வதிலிருந்து மட்டுமே விலக்கு அளிக்கப் படுகிறது, வருமானவரியிலிருந்து அல்ல)
5. இவற்றையெல்லாம் விட அதிகம் பேசப்பட்டது 87A செக்சனில் அளிக்கப்பட்டுவந்த 2500 ரூபாய் வரி விலக்கு 12,500 ரூபாய உயர்த்தப் பட்டதுதான்.
ஆண்டுக்கு 5 லட்சம் சம்பாதிப்போர் மட்டுமல்ல, 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர் கூட சரியான திட்டமிடல் இருந்தால் வருமானவரி ஏதும் செலுத்தாமல் இருக்க வகை செய்திருக்கிறது இந்த பட்ஜெட். நடுத்தர வர்க்கத்துக்கு பயனளிக்கும் அதே நேரத்தில் ஆண்டுக்கு 12 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு இதன் பயன் பெரும்பாலும் சென்று சேராத வகையில் இது நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.
பொதுவாக வருமானவரியில் சலுகை மாற்றம் செய்ய விரும்பும் அரசுகள் அடிப்படை விலக்கு (Basic Exemption) அல்லது Standard Deduction இல் மாற்றம் செய்யும். அப்படிச் செய்கையில் அதன் பயன் அனைவரையும் சென்று சேரும். இம்முறை நடுத்தரவர்க்கத்துக்கு பயனளிக்கும் வகையில் வருமானவரி விலக்கு தர எண்ணிய இந்திய அரசு செக்சன் 87 A மாற்றி அமைப்பதன் மூலம் அதை சிறப்பான வகையில் செய்திருக்கிறது. Standard Deduction இல் வெறும் 10,000 ரூபாய் அளவுக்கே சலுகை தரப்பட்டிருக்கிறது. 2.5 லட்ச ரூபாய் அடிப்படை விலக்கில் (Basic Exemption) மாற்றம் ஏதும் செய்யப் படவில்லை.
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் வரி கணக்கிடல்
வருமானம் 5,00,000 ரூபாய்
அடிப்படை விலக்கு 2,50,000 ரூபாய்
வரிக்குட்பட்ட வருமானம் 2,50,000
வருமான வரி : 2.5 லட்ச ரூபாய் *5% = ரூபாய் 12,500
87 A இன் கீழ் விலக்கு ரூபாய் 12,500
நிகர வரி = 0
ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் வரி கணக்கிடல்
வருமானம் 7,00,000 ரூபாய்
அடிப்படை விலக்கு 2,50,000 ரூபாய்
Standard Deduction 50,000 ரூபாய்
Section 80 C யின் கீழ் விலக்கு 1,50,000
வரிக்குட்பட்ட வருமானம் 2,50,000
வருமான வரி : 2.5 லட்ச ரூபாய் *5% = ரூபாய் 12,500
87 A இன் கீழ் விலக்கு ரூபாய் 12,500
நிகர வரி = 0
இது தவிர ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியத்துக்கு 50,000 ரூபாய் வரை விலக்கு
புதிய பென்சன் திட்டத்தில் செலுத்தும் 50,000 ரூபாய்க்கு விலக்கு
வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு விலக்கு
போன்றவற்றை கணக்கில் எடுத்தால் 9 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உடையோர் கூட வருமான வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்
நேரடியா அடிப்படை விலக்கை உயர்த்தாமல் இருப்பதன் மூலம் பயன் நடுத்தர வர்க்கத்துக்கு மட்டும் செல்வதை உறுதி செய்வதோடு இது வேறொரு பலனையும் தரக்கூடும். இனி வருமான வரி சேமிப்பதற்காகவாவது மக்கள் காப்பீடு (ஆயுள் மற்றும் ஹெல்த்) மற்றும் சந்தை முதலீடுகள் (NPS & ELSS) பக்கம் போவாங்க. இது நடுத்தரவர்க்க குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பங்குச் சந்தைக்கு இன்னும் அதிக முதலீடு வர வழிவகை செய்யும். இவற்றிற்காகவே இதைப் பாராட்டலாம்.
ஆண்டு வருமானம் 2 அல்லது 3 லட்ச ரூபாய்க்குள் இருப்போர் வருமானவரி தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் உணராமல் விட்டு விடுகின்றனர். வேறு எந்த சேமிப்பும் இல்லாவிட்டாலும் கூட இனி 5 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது. உங்க வருமானம் 2 அல்லது 3 லட்சரூபாயாக இருந்தாலும் அதை வருமானவரித்துறைக்கு டிக்ளேர் செய்து தாக்கல் செய்யுங்கள். வருமானவரி ஏதும் செலுத்தா விட்டாலும் பின்னாளில் வீட்டுக்கடன் வாகனக் கடன் போன்றவை பெற விண்ணப்பிக்கும் போது உதவியாக இருக்கும்.