சாதாரண செலவுகளையும் மாதாந்திரத் தவணையாக மாற்றுவது அமெரிக்கப் பழக்கம். வீட்டுக்கு ஃபர்னீச்சர் வாங்கினாலும் சுற்றுலா செல்ல விமான டிக்கெட் வாங்கினாலும் அதை 12 மாதத் தவணைகளாக மாற்றிக்கொள்ள முடியும் அமெரிக்காவில். இவை நம் கையில் காசு இருந்தால் மட்டுமே செய்ய வேண்டிய செலவுகள் – இவற்றை தவணை முறையில் பெறுவதன் மூலம் எதிர்கால வருமானத்தை இன்றே ஆடம்பரத்துக்கு செலவு செய்ய பழகிவிட்டனர் அமெரிக்கர்கள்
இப்போது இந்தியாவிலும் இப்பழக்கம் பரவத்தொடங்கியுள்ளது. ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி கல்வியையும் கவர் செய்யுள்ளது இப்பழக்கம்.
https://www.fullertonindia.com/school-fee-funding/index.aspx
இந்த நிறுவனம் மூணாம் கிளாஸ் படிக்கும் பையனின் அப்பாவை பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வேணுமான்னு கேக்குது. இது கல்விக் கடன் என்ற பேரில் வழங்கப்படும் பர்சனல் லோன். 10.99% வட்டியாம். கடன் தருவதும் பெறுவதும் கூட பெரிய தப்பாப் படல, திருப்பி 24 மாசத்தில் கட்டலாம்னு சொல்றதுதான் பெரிய பொருளாதார புதைகுழியாகப் படுகிறது எனக்கு.
பிள்ளையின் ஒராண்டு பள்ளிக் கட்டணத்தை கடனாக வாங்கிவிட்டு அதை 2 வருச இ எம் ஐ யாக மாற்றி விட்டால், அடுத்தாண்டு கட்டணத்துக்கு என்ன செய்வது? அதையும் ரெண்டு வருசத் தவணையா மாத்தினா 2ம் ஆண்டிலேருந்து தொடர்ந்து ரெண்டு தவணை கட்டவேண்டியிருக்கும், குடும்பத்தில் 2 பிள்ளைகள் இருந்தால் 4 தவணைகள் கட்ட வேண்டியிருக்கும். இதிலேருந்து மீளவே முடியாது.
க்ரெடிட் கார்டுகள் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான் இதுவரை நான் பார்த்ததிலேயே மோசமான கடன். மிக அதிக வட்டி ஒரு காரணமாக இருந்தாலும் அதை விட மோசமான காரணம் ஒரு முறை இதில் மாட்டிக்கொண்டு விட்டால் அதிலேருந்து வெளியே வருவது 99% பேருக்கு இயலாத காரியம். அதைப் போல பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வாங்க ஆரம்பித்தால் பிள்ளைகள் படிப்பை முடிக்கும் வரை அதிலேருந்து வெளியே வரவே முடியாது.
சென்னையில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆண்டுக்கட்டணம் 90,000 ரூபாய். 2 வருசம் இல்லை ஒரே வருசத்தில் திருப்பித் தர்றேன்னு அதை இங்கு கடனாக வாங்கினால் திருப்பிச் செலுத்தும் தொகை மாதத்துக்கு 7954.35 ரூபாய் அதாவது 95452.19 ரூபாய் திருப்பித் தரணும். இதில் இழப்பது வெறும் 5000 ரூபாய் அல்ல. பங்குச் சந்தை முதலீடெல்லாம் வேணாம் மாசம் 7954 ரூபாய் வங்கி தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் ஆண்டு இறுதியில் 98,570 ரூபாய் உங்களிடம் இருக்கும். அதாவது ஒரே ஒரு ஆண்டு கடன் வாங்காமல் கட்டணத்தை கட்டி விட்டு இ எம் ஐ செலுத்துவதற்கு பதிலாக தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் 8570 ரூபாய் – இதுதான் உண்மையான இழப்பு.
கடன்தான் ஈஸியா கிடைக்குதேன்னு வாங்காம கையிருப்பிலிருந்தோ, எதையாவது விற்றோ ஒரே ஒரு வருசம் கஷ்டப்பட்டு பள்ளிக் கட்டணத்தை கட்டி விட்டு, அடுத்தாண்டுக்காக இப்போதே சேமிக்கத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யும் போது மாதம் 7270 ரூபாய் தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தாலே ஓராண்டு முடிவில் 90,000 ரூபாய் சேர்ந்து விடும்.
பிள்ளைகள் கல்லூரிக்கு போகும் போது லட்சக்கணக்கில் செலவாகும், அப்ப கல்விக் கடன் வாங்குவதில் ஒரு நியாயம் இருக்கும். பள்ளிக் கட்டணத்துக்கே கடன் வாங்குவதில் ஒரு நியாயமும் இல்லை. உங்களால் இக்கடனுக்கு இ எம் ஐ கட்ட முடியுமென்றால், கண்டிப்பாக உங்களால் அப்பணத்தைச் சேமித்து அடுத்தாண்டு கடன் வாங்காமல் கட்ட முடியும்.
https://www.facebook.com/bostonsriram/posts/2426768307354834