காப்பீடு மற்றும் முதலீடு அடிப்படைகள்

நெறய பேரு தொடர்ந்து ஒரே கேள்விகள் கேக்கறதால ஒரு அடிப்படி கைடு மாதிரி ஒண்ணு எழுதலாம்னு எண்ணம்

இதில் இருப்பவை ரொம்பவே பேசிக் விசயங்கள், ஓரளவுக்கு ஞானம் இருப்பவர்கள் இப்பவே அடுத்த போஸ்ட்டுக்கு செல்வது நேர விரையத்தை தவிர்க்க உதவும். 
முதலீட்டைப் பத்தி யோசிக்கும் முன்னர் செய்ய வேண்டியவை 
1. வரிகள் போக கையில் வரும் மாத வருமானத்தின் 3 முதல் 6 மடங்கு வரை ஒரு அவசர கால நிதியை உருவாக்குங்கள். இதை ஒரு தனி வங்கிக் கணக்கிலோ அல்லது ஒரு ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிலோ போட்டு வையுங்கள். இதை எமெர்ஜென்சி காலம் தவிர வேறு எப்போதும் தொடக்கூடாது. பள்ளிக் கட்டணம், தீபாவளி செலவு, காலா பட டிக்கெட் எல்லாம் எமர்ஜென்சி செலவு இல்லை

2. ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுங்கள் 

அ) எந்த நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு எடுப்பது? 
எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் எடுங்கள் ஆனால் எடுப்பது டெர்ம் பாலிசியாக மட்டும் இருக்கட்டும்

ஆ) க்ரிடிகல் இல்னெஸ், ஆக்சிடெண்ட் டபுள் கவர் என்றெல்லாம் ரைடர் சொல்றாங்களே அதெல்லாம் எடுக்கலாமா?

உங்க காப்பீட்டுத் தேவை ஒரு கோடி ருபாய்னா, அது நீங்க எப்படி இறந்தாலும் ஒரு கோடிதான், விபத்தில் இறந்தால் மட்டும் உங்க குடும்பத்துக்கு ஏன் ரெண்டு கோடி வேணும்? எனவே இது வேணாம்.

உங்களுக்கு கேன்சர் போல ஏதேனும் பெரிய வியாதி வந்தால் ப்ரீமியம் கட்டத்தேவையில்லை க்ரிடிகல் இல்னெஸ் ரைடரில் – இது தேவைன்னு உங்களுக்குத் தோணிணா வாங்குங்க

இ) எவ்வளவு காலத்துக்கு பாலிசி எடுக்கணும்? 
காப்பீடு என்பது Income Replacement எனவே நீங்க ரிட்டையர் ஆகும் தினம் வரை தேவை, வருமானம் இல்லாத யாருக்கும் காப்பீடு தேவையில்லை. 

ஈ) இல்லத்தரசிக்கும் பிள்ளைகளுக்கும் பாலிசி எடுக்கலாமா? 
யார் ஒருவர் இறந்தால் குடும்பம் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுமோ அவர்களுக்கு மட்டுமே காப்பீடு தேவை. மற்றவர்களுக்கு இல்லை 
மனைவி இறந்தால் அவர் இடத்தில் ஒருவரை வேலைக்கு அமர்த்தணும் அதுக்கு 10,000 ரூ மாதாமாதம் தேவைன்னு நினைச்சா அதுக்கு ஏற்றார்போல காப்பீடு எடுக்கலாம், பிள்ளைகளுக்கு கண்டிப்பா தேவையில்லை

உ) சேத்து வச்சிருக்கும் சொத்துக்களான மணி பேக், யூலிப், ஜீவன் ஆனந்த் இன்னபிற பாலிசிகளை என்ன செய்வது? சரண்டர் செய்தால் நஷ்டமாகுமா? 
டெர்ம் பாலிசி விலையைப் பாத்தீங்கன்னா அப்ப புரியும் அந்த பாலிசிகள் அனைத்தும் எப்படி உங்க சேமிப்பை சூறையாடுகின்றன என்று. அவை நல்ல காப்பீடுமில்லை நல்ல முதலீடுமில்லை. அவற்றை நிறுத்திவிட்டு அந்த காசுக்கு பல மடங்கு அதிகம் ஆயுள் காப்பீடும் எடுக்கலாம் முதலீடும் செய்யலாம். இப்ப சிறு நஷ்டம் வரலாம், தொடர்ந்தால் வரும் நஷ்டம் பெரிது, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

2 ஊ : வேலை செய்யும் நிறுவனத்தில் காப்பீடு இருக்கு, நானும் எடுக்கணுமா? 
ரிட்டையர் ஆகற வரை அங்கயே சாஸ்வதம்னா வேணாம், அந்த நம்பிக்கையில்லைனா கண்டிப்பா வேணும். அடுத்த கம்பெனி காப்பீடு தருமான்னு தெரியாது, வயசு ஏற ஏற ப்ரீமியம் அதிகமாகும், அதை விட முக்கியம் – உங்களுக்கு ஏதாவது வியாதி வந்தால் ஆயுள் காப்பீடு மறுக்கப்படும்

3. ஹெல்த் இன்சூரன்ஸ் வேணுமா? எவ்வளவு ? எங்கு? 
வேணும் என்பது மட்டுமே நான் சொல்ல இயலும். ஸ்டார் ஹெல்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ பாலிசி எடுக்கவும். உங்க குடும்பத்தினர் எண்ணிக்கை, அவர்களின் உடல் நிலை, நீங்க வசிக்கும் நகரத்தின் மருத்துவச் செலவு இவற்றை ஆராய்ந்து முடிவு செய்யவும்

3அ) கம்பெனியில் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கு, நானும் எடுக்கணுமா? 
இப்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குகின்றன. கம்பெனின் மாறினாலும் இருக்கும் என நம்பலாம், ஆதலால் வேணும்னா ஒரு சிறு தொகைக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நீங்களும் எடுக்கலாம்.

இதுக்கு அப்புறம்தான் நீங்க முதலீடு குறித்தே யோசிக்கணும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *