எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பென்சன் என்கிற safety net இருந்தது. ரிட்டையர் ஆகும் போது சொந்த வீடும் கையில் கொஞ்சம் காசும் இருந்தா போதும் என்கிற நிலை. நிரந்தர வைப்பு நிதி தரும் வட்டியும் பென்சனும் வாழப் போதுமானதாக இருந்தது.
தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருதாளார மாற்றத்துக்குப் பின் நிலை வெகுவாக மாறியுள்ளது. சந்தை பொருளாதாரத்தில் வாழத் தேவையும் அதிகமாகிப் போனது, பென்சனும் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவன ஊழியர்கள் ரிட்டையர்மெண்ட் குறித்து யோசிக்க ஆரம்பித்தன் விளைவே ம்யூச்சுவல் ஃபண்ட்களின் வளர்ச்சி.
2007 மார்ச் மாதம் 3 லட்சம் ரூபாய் கோடி அளவில் இருந்த ம்யூச்சுவல் ப்ஃண்ட்களின் AUM (Asset Under Management) 2014 ஆண்டு முதல் முறையாக 10 லட்சம் கோடியை எட்டியது, அதுக்கப்புறம் அசுர வளர்ச்சி கண்டு இன்று அது 20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது மூன்றே ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி அதுவும் பத்து லட்சம் கோடி ருபாய் அளவுக்கு.
பலரும் ம்யூச்சுவல் ஃபண்ட் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வந்தாலும், இன்னமும் இந்தியாவில் முதலீடு குறிந்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்
அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன்
(1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose),
(2) நம்முடைய இலக்கு என்ன (Goal)
(3) நம்முடைய risk tolerance என்ன?
(4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும்
(5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும்
இதையெல்லாம் முடிவு செய்யணும்.
உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.
கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.
அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.
ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.
நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை
- மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
- முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
- கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
- எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
- சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு
- ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும். கொஞ்சம் அதிக ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் வேணும்னா 80% ஈக்விட்டியிலும் 20% பாண்டிலும் முதலீடு செய்யலாம்
- குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
8 பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.
முதலீட்டு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
உடல் நலம் காக்கும் மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித்தான். நீங்க ஃபீஸ் ஏதும் கொடுக்க வேண்டாம், மருந்து கம்பெனிகளிடம் கமிசன் வாங்கிக்கறேன்னு ஒரு டாக்டர் சொன்னா அவரிடம் போவோமா? ஒரே மருந்தை நூறு கம்பெனிகள் தயாரிக்கின்றன, எந்த கம்பெனி அதிக கமிசன் தருதோ அவங்க மாத்திரையைத்தானே அவர் பரிந்துரை செய்வார். கம்பனி அதையும் நம்ம கிட்டதான் வசூல் செய்யும். அதே லாஜிக்தான் முதலீட்டு ஆலோசகர்களுக்கும். அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் “Fee Only” Advisors இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. வாடிக்கையாளர் தரும் 0.5 – 1 % மட்டுமே இவர்களின் வருமானம். இவர்கள் பரிந்துரைக்கும் ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து இவர்கள் கமிசன் ஏதும் பெறக்கூடாது. இப்படி இருந்தால் அவர் பாரபட்சமின்றி நல்ல முதலீடுகளை நமக்குக் காட்டுவார்கள்.
எப்படி டாக்டர், வக்கீல், இஞ்சினியருக்கு ஃபீஸ் கொடுத்து கன்சல்டேசன் பெருகிறோமோ அப்படி முதலீட்டு ஆலோசகர்ளுக்கும் கொடுத்தால்தான் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்
லாபத்தில் பங்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதிலிருக்கும் ரிஸ்க் – அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆலோசகர்கள் ரிஸ்க் அதிகமான முதலீடுகளை பரிந்துரைக்கும் வாய்ப்பு இருப்பதால் அது உசிதமல்ல.
ம்யூச்சுவல் ஃப்ண்டில் போடறதா இருந்தா www.valueresearchonline.com போன்ற வெப்சைட்களில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், பாண்ட் இவற்றில் டாப் 10 ஃபண்ட்கள் குறித்து பாத்துட்டு போங்க, இவை தவிர ஆலோசகர் வேறு ஃபண்ட்களை பரிந்துரை செய்தால், காரணம் கேளுங்க, அந்த ஃபண்ட் டாப் 10 ஃபண்ட்களை விட எந்த விதத்தில் சிறந்தது என்று கேளுங்க. பதில் திருப்தியா இருந்தால் அதில் முதலீடு செய்யுங்க. சில டாக்டர்கள் நான் டாக்டரா நீயான்னு கேக்கறா மாதிரி கேட்டா ஆலோசகரை மாத்திடுங்க.
இதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ், எனக்கு சிம்பிளா 3-4 ஃபண்ட் சொல்லுங்க, அதில் பணம் போடறேன்னு சொல்றவரா நீங்க? உங்களுக்கென உருவானதுதான் Robo Investing என்கிற கான்செப்ட். ரோபோ இன்வெஸ்டிங் தளங்களில் நீங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சா, வயசு, முதலீடு செய்ய இருக்கும் தொகை, காலம், உங்க risk appetite ஒரு சில அடிப்படை கேள்விகள் கேக்கும். பதில்களை வைத்து அதில் உள்ள அல்கோரிதம் உங்களுக்கென ஒரு ப்ரத்யேக போர்ட்ஃபோலியோ கொடுக்கும், அது எவ்வளவு ப்ரத்யேகம்னா, உலகில் உள்ள எல்லா மகர ராசிகாரர்களும் ஒரே பலன் சொல்றது எவ்வள்வு ப்ரத்யேகமோ அந்த அளவுக்குத்தான் இதுவும். அது சொல்லும் ஃப்ண்ட்களில் பணம் போட எழுதிக் கொடுத்தா மாதா மாதம் உங்க வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து அதுவே முதலீடு செய்து விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதுவே ரீ பேலன்சிங் செய்து விடும். அமெரிக்காவில் Betterment, Wealthsimple, Wealth Front என நிறைய ரோபோ பேலன்சிங் தளங்கள் உள்ளன. இவர்கள் 0.25% முதல் 0.5% வரை ஃபீஸ் வாங்குகிறார்கள்.
இந்தியாவில் இந்த கான்செப்ட் இன்னும் சூடு பிடிக்க வில்லை, www.wealthy.in, www.goalwise.com போன்றோர் ரோபோ இன்வெஸ்டிங் சேவை அளிக்கின்றனர். இவற்றில் பிரச்சனை மேலே சொன்ன ஃபீஸ் வாங்கும் வழிதான். நம்மிடம் ஃபீஸ் வாங்காமல், ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து கமிசன் பெறுகின்றனர். இந்நிலை மாறும் போது இன்னும் நல்ல ஃபண்ட்களை இவர்கள் பரிந்துரை செய்வார்கள் என நம்பலாம்.
தற்போது இந்தியாவில் உள்ள ம்யூச்சுவல் ஃபண்ட்கள் 2-3 % அளவுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்க இதுவும் ஒரு காரணம். அமெரிக்காவில் வேன்கார்ட், ஃபிடெலிடி நிறுவனங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் 0.3% முதல் 0.9% வரையிலும் actively managed funds 0.5% முதல் 1% வரையிலும் கட்டணம் பெற்று வருகின்றன. இந்த அளவுக்கு குறையலேன்னாலும் இந்தியாவில் இப்ப இருக்கும் கட்டணங்கள் பாதி அளவுக்காவது குறையணும்.
எல்லாம் சொல்லிட்டு என்னிக்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்னு சொல்லணும் இல்லையா? முதலீடு செய்ய ஆரம்பிக்க உகந்த நாள் “இன்று”. நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே உங்க ஓய்வு கால திட்டமிடுதலைத் தொடங்குங்க
எந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
ELSS Funds : வருமான வரி விலக்கு வேண்டுவோர் இந்த ஃபண்ட்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் போடும் பணத்தை மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது, ஆனா 80C Section கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.
http://www.moneycontrol.com/mutual-funds/performance-tracker/returns/elss.html இங்கு அனைத்து இ எல் எஸ் எஸ் ஃபண்ட்களையும் காணலாம்
வருமானவரி விலக்கு இல்லா ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போது ஒரு பகுதி லார்ஜ் கேப்பிலும் ஒரு பகுதி மிட்கேப்பிலும் ஒரு பகுதி பாண்ட் ஃபண்ட்களிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம்.
பின்குறிப்பு : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. உங்கள் முதலீடு வளரவும் வீழவும் வாய்ப்புண்டு. நீண்டகால முதலீடு வளர வாய்ப்பு அதிகம் என்று மட்டுமே கூற இயலும்.
இங்கு சொல்லப்பட்டவை வெறும் அறிவுப் பகிர்தல் மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதும் விடுவதும் உங்க சொந்த முடிவே.