இளமையில் கல் என்பது பழமொழி, இளமையில் திட்டமிடு என்பது புதுமொழி..

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை இருபதுகளின் இறுதியிலோ முப்பதுகளின் ஆரம்பத்திலோ தொடர் முதலீடு ஆரம்பித்தால் ரிட்டையர் ஆகும் போது கணிசமான தொகை கையில் இருக்கும். 35 ஆண்டுகள் மாதாமாதம் 2500ரூ நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து வந்தால் முடிவில் 1 கோடி ரூபாய் இருக்க வாய்ப்பு மிக அதிகம். இதை Power of Compounding என்பார்கள்

காப்பீட்டிலும் சீக்கிரம் ஆரம்பிப்பது பலனளிக்கும். நண்பர் வல்லம் பசிர் 29, ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செய்தார். இதை இரண்டு கம்பெனிகளில் தலா 50 லட்சம் என முடிவு செய்துள்ளார்… ஜீவன் ஆனந்திலும் ஜீவன் சரலிலும் இன்ன பிற ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்யும் வாலிப வயோதிக அன்பர்களே, பஷீர் ஒரு கோடி ருபாய் காப்பீடுக்கு கட்டப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? எஸ் பி ஐயில் 50 லகரத்துக்கு ஆண்டுக்கு 10,400 ரூபாய், எல் ஐ சியில் 8800 ரூபாய். அதாவது ஒரு கோடிக்கு ப்ரீமியம் வெறும் 19.200 ரூபாய். மாசம் வெறும் 1600 ரூபாய்.

எஸ் பி ஐ மேனேஜர் கிட்டத்தட்ட டெர்ம் பாலிசி விக்க மாட்டேன்னே சொல்லியிருக்கார், இது வேணாம் சார், ரிட்டர்ன் எதுமே வராது, இதுக்கு பதிலா மணிபேக் போடுங்க என்றெல்லாம் மூளைச் சலவை செய்ய முயன்றுள்ளார். அதுல காப்பீடு 5 லட்சம் மட்டுமே கிடைக்கும் நான் இறந்தால் அது குடும்பத்துக்கு ஒராண்டுக்கு கூட காணாது, அப்புறம் நீங்களா என் குடும்பத்தைக் காப்பீங்கன்னு கேட்டதும் இந்தாள் கிட்ட எதுவும் தேராதுன்னு விட்டிருக்கிறார். வெல்டன் பஷீர்

பாலிசி ரசீது கையில் வந்ததும் பஷீருக்கு கிடைத்த திருப்தியை வார்த்தையில் விவரிக்க இயலாது

மாசத்துக்கு 10-20 ஆயிரம் இன்சூரன்ஸில் “முதலீடு” செய்வதற்கு பதில் 1600 ரூபாய்க்கு பாலிசி, மிச்சம் ஒரு பத்தாயிரத்தை எஸ் ஐ பி முதலீடு செய்து வந்தால் பஷீருக்கு 65 வயது ஆகும் போது 4-5 கோடி ரூபாய் கையில் இருக்க வாய்ப்பு மிக அதிகம்.

பஷீர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்… நீங்க எல்லாம் வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசிகள் இத்தகைய நிலைமையில் உங்களை வச்சிருக்கான்னு யோசிங்க, இல்லைனா அப்புறம் அந்த பாலிசிகளை ஏன் நீங்க இன்னமும் வச்சிருக்கீங்கன்னு யோசிங்க.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *