2017 முடிவில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.21.38 லட்சம் கோடி. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
நம் நாட்டில் மொத்தம் 44 ஃபண்ட் நிறுவனங்கள் 2000-க்கும் அதிகமான ஃபண்ட் திட்டங்களை நடத்துகின்றன. இவற்றுள் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும், அதற்கு என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?
1. திட்டத்தின் வளர்ச்சி வரலாறு
ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எவ்வளவு வருமானம் ஈட்டியிருக்கிறது என்கிற தகவல் முக்கியம்தான்; ஆனால், அது மட்டுமே போதுமா என்றால் நிச்சயம் இல்லை. ஒரு காரின் ரியர் வியூ மிரர், காரை பின்னோக்கிக் கொண்டு செல்ல முக்கியம். ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு கார் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வருமானம் குறித்துப் பார்க்கையில், குறுகிய கால வருமானத்தில் அதிக கவனம் செலுத்தாமல், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு வருமானம் என்று பார்க்க வேண்டும்.
2. தொடர்ச்சியான வருமானம்
இதுவும் ஃபண்டின் வருமானம் குறித்ததுதான். கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஃபண்ட் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாருங்கள். உதாரணமாக, கணேஷ் முதலீடு செய்த ஃபண்ட் ஆண்டுக்கு 10% தொடர்ச்சியாக வளர்ந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் முதலீடு செய்த ரூ.1 லட்சம் ரூ.2,59,374-ஆக உயர்கிறது. ஆனால், கணேஷின் நண்பர் சுந்தர் முதலீடு செய்த ஃபண்டோ ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதத்தில் லாபமும், நஷ்டமும் தந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம் ரூ2,21, 922-ஆக இருக்கும். இதிலிருந்து தொடர்ச்சியான, நிலையான வருமானம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
3. சந்தை விழும்போது ஃபண்டின் செயல்பாடு
மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகளில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தையின் போக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரதிபலிக்கும். பங்குச் சந்தை 10% ஏறும் காலத்தில், நல்ல ஃபண்ட் பத்துக்கும் மேற்பட்ட சதவிகித வளர்ச்சியைக் காணும். அதைவிட முக்கியம், பங்குச் சந்தை 20% வீழ்ச்சியடையும்போது அதைவிடக் குறைவாக நஷ்டம் அடைவதே ஒரு நல்ல ஃபண்டின் அடையாளம்.
2008-ம் ஆண்டு, பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி யடைந்தது. அப்போது சந்தை வீழ்ச்சியைவிடக் குறைவான அளவு நஷ்டத்தைத் தந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பாப்புலராக இருந்தன.
சந்தை வீழ்ச்சி குறித்து பேசும்போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ஓர் ஆண்டில் 50% நஷ்டத்தைச் சந்திக்கும் ஒரு ஃபண்ட் அடுத்த ஆண்டு 100% லாபம் பார்த்தால் தான் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். அதாவது, ஒரு ஃபண்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் 50% நஷ்ட மடைந்து 50,000 ரூபாயாகக் குறைந்தால், அடுத்த ஆண்டு 100% லாபம் ஈட்டினால்தான் ரூ.1 லட்சத்தை எட்ட முடியும்.
4. முதலீட்டு ஸ்டைல்
முதலீடு செய்வதற்குமுன் முதலீட்டாளர் தன் வயதுக்கேற்ற ‘அஸெட் அலோகேஷனை’ முடிவு செய்ய வேண்டும். லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால் கேப், கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்யப் போகிறோம் என்று உறுதியாக முடிவு செய்துவிட வேண்டும்.
உதாரணத்துக்கு, பங்குச் சந்தையில் செய்ய வேண்டிய முதலீடு செய்தபின் மீதமிருக்கும் முதலீட்டுக்கு மற்ற சொத்துகளில் முதலீடு செய்ய பரிசீலிக்க வேண்டும்.
5. ஃபண்டின் வயது
பொதுவாக, புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதைவிட நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. பத்தாண்டுகளாக இருக்கும் ஃபண்டுகள் ஓரிரு மார்க்கெட் வீழ்ச்சியைச் சமாளித்து வந்திருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து, நல்ல வருவாய் ஈட்டி யிருக்கும் ஃபண்டுகள், தொடர்ந்து பரிமளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
6. ஃபண்டின் அளவு
நாம் முதலீடு செய்யும் ஃபண்டில் குறிப்பிடத்தக்க அளவு பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஃபண்டுகளில் சில ஆயிரம் கோடிகள் பொதுவாக இருக்கும். ரூ.5-10 கோடிகள் மட்டுமே இருக்கும் ஃபண்டுகளால் பெரிய முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது. மேலும், ரூ.5-10 கோடி களுக்கான செயல்திறனை வைத்து அந்த ஃபண்ட் ரூ.1,000 கோடி என வரும்போது எப்படிச் செயல்படும் எனக் கணிக்க முடியாது.
7. பல்வேறு கட்டணங்கள்
ரமேஷும், சுரேஷும் பால்ய நண்பர்கள். இருவரும் 30 வயதாகும் போது மாதம் ரூ.5,000-க்கு எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆரம்பித்தார்கள். ரமேஷ் முதலீடு செய்த ஃபண்டின் கட்டணம் 1%, சுரேஷுக்கோ 2%. இரு ஃபண்டுகளும் ஒரே அளவு வளர்ந்தன. 65 வயதில் ஓய்வு பெறும்போது ரமேஷிடம் இருந்தது ரூ. 34,270,234. சுரேஷிடம் இருந்ததோ ரூ.33,294,070. அதாவது, வெறும் ஒரு சதவிகித கட்டணத்தால் சுரேஷ் இழந்தது சுமார் ரூ.3.5 லட்சம். எனவே, கட்டணத்தில் கவனம் மிக முக்கியம்.
8. நிதி நிர்வாகி
ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும் முன் அதன் ஃபண்ட் மேனேஜர் குறித்தும், அவர் ஃபண்டை எவ்வளவு நாளாக நிர்வாகம் செய்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதற்கு முன் நிர்வகித்த ஃபண்டுகளின் வளர்ச்சி குறித்து அறிவது உதவி யாக இருக்கும். ஐந்து ஆண்டுகளாக அதீத வளர்ச்சி அல்லது சுமாராக போய்க்கொண்டிருந்த ஒரு ஃபண்ட், கடந்த ஓராண்டில் பெரிய அளவில் மாறியிருந்தால் முதலில் நாம் பார்க்க வேண்டியது ஃபண்ட் மேனேஜர் மாறியுள்ளாரா என்பதையே. அதன்பிறகு அந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
9. ரேட்டிங்
வேல்யூ ஸ்டார் ஆன்லைன் ரிசர்ச், மணி கன்ட்ரோல் போன்ற இணையதளங்கள் அனைத்து ஃபண்டுகளையும் ஆராய்ந்து அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்குகின்றன. மற்ற காரணிகள் அனைத்தையும் பார்த்தபிறகு நாம் தெரிவு செய்த ஃபண்டுகளுக்கு 4 அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கி யிருக்கிறார்களா என்று பார்த்து, நம் தேர்வு சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
10. செக்டோரல் ஃபண்ட்
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகள், அனைத்துத் துறை நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யும். அவ்வாறில்லாமல் ஒரேயொரு துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் அதாவது, ஒரேயொரு செக்டாரில் முதலீடு செய்வது செக்டோரல் ஃபண்ட். ஒரேயொரு துறை என்பதால், அந்தத் துறை குறித்து வெளியாகும் செய்தி, அரசின் கொள்கை முடிவுகள் இத்தகைய ஃபண்டுகளைப் பெரிதும் பாதிக்கும். இந்த வகை ஃபண்டு களின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் செக்டோரல் ஃபண்டுகளைத் தவிர்ப்பது நலம்.