ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கும் எவ்வளவு செலவாகும் .?

தீன் அசார் மேன் சுரக்‌ஷா பூரா பரிவார் கேலியே

ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடும் இன்றியமையாதவை என்று தெரிந்தாலும் அவற்றுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை. தெரிந்த ஏஜெண்ட் சொன்னார்னு ஏதோ ஒரு பாலிசி போட்டுட்டு காப்பீடு எடுத்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். காப்பீட்டுக்கு ஒதுக்ககூடிய நிதி முழுவதையும் ஏதோ ஒரு எண்டோமெண்ட் பாலிசிக்கு கமிட் செய்து விட்டதால் தேவையான அளவு காப்பீடு எடுக்காமல் விட்டு விடுகின்றனர்.

காப்பீட்டுக்கு எவ்வளவு செலவு செய்யலாம்? ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு ஆயுள் காப்பீடும் தேவையான அளவு மருத்துவக் காப்பீடும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவரின் கடமை. காப்பீட்டுக்கு கம்மியா செலவு பண்ண சீக்கிரமே எடுப்பதுதான் சரியான வழி. ஒரு கோடி ரூபாய் டெர்ம் பாலிசிக்கு 30 வயதுகாரர் செலுத்துவதை விட 40 வயதுகாரர் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். 
முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும், ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் தன்னுடைய சிறு குடும்பத்தை வெறும் மூவாயிரம் ரூபாயில் (மாதத்துக்கு) எப்படி காப்பது என்பதைச் செய்து காட்டியிருக்கார் நண்பர் திருமலை கந்தசாமி .

அவர் தனக்கு 31 வயதாக இருக்கும் போது எடுத்தவை இவை
1.5 கோடி ருபாய்க்கு டெர்ம் பாலிசி – ஆண்டு ப்ரீமியம் 14,691 ரூபாய்.

20 லட்சரூபாய்க்கு Critical Health மற்றும் 20 லட்ச ரூபாய்க்கு Disability Coverage – 9,764 ரூபாய்.

திருமலை, அவர் மனைவி, ஒரு குழந்தைக்கு 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு – 11,505 ரூபாய்

ஆக மொத்தம் அவர் குடும்பத்தின் மொத்தப் பாதுகாப்பிற்கு அவர் செலவிடும் தொகை ஆண்டுக்கு 36,230 ரூபாய் அதாவது மாதத்துக்கு வெறும் 3020 ரூபாய் மட்டுமே.

இதை அப்படியே அனைவரும் காப்பியடிக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் தேவையும் வெவ்வேறாக இருக்கும். உங்க தேவைக்கு ஏற்ப ஆயுள் காப்பீட்டை குறைத்து 1 கோடிக்கு எடுக்கலாம், மருத்துவக் காப்பீட்டை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம். ஆயுள் காப்பீட்டை வேறு தனியார் நிறுவனங்களில் எடுக்கும் போது கொஞ்சம் அதிகமாகலாம். எல் ஐ சி இடெர்ம் பாலிசி எடுக்கும் போது ப்ரீமியம் இன்னும் கொஞ்சம் அதிகமாகலாம்.

சரியாகத் திட்டமிட்டு சீக்கிரமே காப்பீடுகளை எடுத்தால் உங்க ஆண்டு வருமானத்தின் 5% க்குள் அனைத்தையும் பெறலாம். இதுவே நாம் காப்பீட்டுக்கு செலவழிக்க வேண்டியது. நாற்பது வயதுக்கு மேல் ஞானோதயம் பிறந்தால் ஒரு சில சதவீதம் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். அப்போதும் எண்டோமெண்ட் பாலிசிகளையும் தேவையற்ற ரைடர்களையும் தவிர்த்து தனியார் நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் குறைந்த விலையில் அனைத்தையும் பெற முடியும்.

வருமானத்தின் 5 அல்ல 15% ப்ரீமியமாகக் கட்டினாலும் தேவையான அளவு காப்பீடு எண்டோமெண்ட் பாலிசிகளில் பெறவே முடியாது. அவை தரும் வளர்ச்சி இன்ஃப்ளேசனுக்கு கூட காணாது. எனவே காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசிகளையும் முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்ட்களையும் நாடுங்கள்

Please follow and like us:

1 thought on “ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கும் எவ்வளவு செலவாகும் .?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *