பல நிறுவனங்கள் டெர்ம் பாலிசியின் பணத்தை மொத்தமாகவோ அல்லது மாதாந்திர வருமானமாகவோ பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குகின்றன. ஆதித்ய பிர்லா சன்லைஃப் நிறுவனத்தின் இன்கம் ஷீல்ட் மட்டுமே நான் அறிந்த வரையில் மொத்தப் பணம் ஆப்சன் இல்லாமல் மாத வருமானம் மட்டுமே தரும் திட்டம்.
இதுவும் ஒரு டெர்ம் பாலிசிதான், காப்பிட்டுக் காலத்தில் பயனர் இறந்தால், அவர் குடும்பத்துக்கு 20 ஆண்டுகள் மாத வருமானம் வழங்கப்படும். சம் அஸ்யூர்ட் என்னவோ அதன் 1.25% மாத வருமானமாக வழங்கப்படும். காப்பீடு காலத்தில் அவர் இறக்காவிட்டால் மெச்சூரிட்டி பெனிஃபிட் என்று எதுவும் கிடையாது
இதில் நான்கு தெரிவுகள் உள்ளன
1. 20 ஆண்டுகளுக்கும் ஒரே அளவு மாத வருமானம்
2. ஆப்சன் ஒன்றுடன், க்ரிடிகல் இல்னெஸ் ரைடர் கொண்டது
3. ஆண்டுக்கு 5% அதிகருக்கும் மாத வருமானம். உதாரணத்துக்கு முதலாண்டு மாதம் 10,000 ரூ வருமானம் வந்தால் 2ம் ஆண்டு மாதம் 10,500 மூன்றாம் ஆண்டு மாதம் 11,025 என்று கூடும்
4. மூன்றாம் ஆப்சனுடன் க்ரிடிகல் இல்னெஸ் ரைடர் கொண்டது
நீங்கள் தெரிவு செய்வதைப் பொருத்து ப்ரீமியம் தொகை வரும்.
பணம் மொத்தமா கிடைப்பது நல்லதா மாதவருமானம் நல்லதா என்று சப்ஜெக்ட்டிவா பாக்கறதுக்கு முன்ன பணரீதியில் எது பெட்டர் என்று கணக்குப் பண்ணி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். என் கணக்கின் படி ரெண்டுமே ஒரு பலனைத்தான் தருகின்றன. பணரீதியில் பெரிய வித்தியாசமேயில்லை.
40 வயது புகைபிடிக்காத ஆண் ஒருவர் 25 ஆண்டுகால பாலிசி எடுக்கிறார். ஒர் கோடி டெர்ம் பாலிசிக்கு ப்ரீமியம் ஆண்டுக்கு 18,000 ரூபாய். அதே ப்ரீமியத்தை இன்கம் ஷீல்ட் திட்டத்தில் அவர் கட்டினால், 58 லட்ச ரூபாய் சம் அஸ்யூர்ட் வரும், ஆனால் அது முக்கியமில்லை, அவர் இறந்தால் குடும்பத்துக்கு மாதம் 72,500 ரூ 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். (ஆண்டுக்கு 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்)
குடும்பத் தலைவர் இறந்தால் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தை ஷேர் மார்க்கெட் போன்ற ரிஸ்கான, நிரந்தரமற்ற முதலீடுகளில் போட முடியாது. குறிப்பா அதிலேருந்து மாதச் செலவுகளுக்கு பணம் எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தால் நிலைத்தன்மையற்ற முதலீடுகளில் பணத்தை வைக்க முடியாது. ஷேரிலோ மியூச்சுவல் ஃபண்டிலோ பணம் இருந்தால், பங்குச் சந்தை கீழே இருக்கும் போது 50,000 ரூபாய்க்கு அதிக ஷேர்களையோ யூனிட்களையோ விற்க நேரிடும், கையிருப்பும் சீக்கிரமே கரையும். Principal Protection is of Paramount Importance when investing insurance proceeds. அதை வைப்பு நிதி, பென்சன் ப்ளான், கடன் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பு அதிகமுள்ள முதலீடுகளிலேயே வைக்க முடியும். அதிக ரிஸ்க் அதிக வளர்ச்சி, கம்மி ரிஸ்க் கம்மி வருமானம் என்பது எல்லாருக்கும் தெரியும். அவற்றிலிருந்து வரும் வட்டி வருமான வரிக்கு உட்பட்டது. அப்படிப்பட்ட முதலீடுகள் வருமான வரிக்கு அப்புறம் 5 முதல் 6% வட்டி வழங்கும் என எதிர்பார்க்கலாம். இன்றைக்கே வைப்பு நிதி வட்டி 7% அளவுக்கு வந்து விட்டது (வருமான வரிக்கு அப்புறம் 5 -6%) இது இன்னும் குறையும், வங்கி வட்டி குறையும் போது பென்சன் ப்ளான் வட்டியும், கடன் பத்திரங்களின் வட்டியும் குறையும். விலைவாசியோ ஏறிக்கொண்டே இருக்கும்.
ஒரு பக்கம் ஒரு கோடியை பாதுகாப்பான முதலீட்டில் வைக்கிறேன், அது ஆண்டுக்கு 5 மற்றும் 6% அளவில் வளருகிறது, அதிலிருந்து ஆண்டுக்கு 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் எடுக்கிறேன், அதாவது வரும் வட்டியை விட எடுக்கும் பணம் அதிகம், ஆகவே முதல் குறைந்து கொண்டே வரும். வரிக்கு அப்புறம் 5% வட்டி என்று வைத்தால் ஒரு கோடியும் 17 ஆண்டுகளில் கரைந்து விடும், 6% வட்டி என்று வைத்தால் சரியாக இருபது ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் கரைகிறது. (இணைத்திருக்கும் படத்தில் கேல்குலேசன் உள்ளது)
ஆக மொத்தமா வாங்கினாலும் மாதா மாதம் வாங்கினாலும் ஒரே அளவுதான் பணம் கிடைக்கும். இப்ப சப்ஜெக்ட்டிவா பாக்கலாம்
மொத்தமா பணம் வாங்குவதில் உள்ள சாதகங்களாக பலரும் சொன்னவை
1. கடன் இருந்தால் அடைக்கலாம்
2. வீட்டு லோன் இருந்தால் அடைக்கலாம், வீடு இல்லேன்னா வீடு வாங்கலாம்
3. மொத்தமாவோ பிரித்தோ முதலீடு செய்தால் நெறய வருமானம் வரும்
4. காப்பிட்டு காலம் 25 ஆண்டுகள், 24 ஆண்டு ஒருவர் இறந்தால் அடுத்த 20 ஆண்டு காலம் வருமானம் வரும் ஆக 44 ஆண்டுகள் அந்நிறுவனம் இருக்குமான்னு சந்தேகம், அதனால் மொத்தமா வாங்குவது நல்லது
5. படிப்பு, கல்யாணம் போன்ற செலவுகளை சமாளிக்கலாம்
நான்காவது பாயிண்ட் தவிர வேறெதுவும் வேலிட் ரீசன் என்று எனக்குத் தோன்றவில்லை. குடும்பத் தலைவர் இருந்தால் இவை அனைத்தையும் மாத வருமானத்தில் இருந்துதான் சமாளித்திருப்பார், அவர் இறந்ததால் மட்டுமே ஏன் வீட்டுக் கடனையோ பிற கடனையோ உடனே அடைக்க வேண்டும்? இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து வரும் வருமானத்திலிருந்தும் அதே ஷெட்யூலில் அடைக்கலாமே? பெரும் செலவுகளுக்கு தலைவர் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்ததைப் போல இன்சூரன்ஸ் வருமானத்திலிந்தும் சேமிக்கலாம், பெரும் செலவுகளை அதைக் கொண்டு சமாளிக்கலாம். இன்னும் சொல்ல போனால் தலைவர் இல்லாத போது அவரோட செலவுகள் மிச்சம், அவர் தன்னுடைய தற்போதைய சம்பளம் கிடைக்குமாறும் அது ஆண்டுக்கு 5% அதிகரிக்கும் வகையிலும் பாலிசி எடுத்து வைத்தால் அவர் இருந்து சேமிக்கும் அளவை விட அதிகம் சேமிக்கலாம்.
30-40 ஆண்டு காலம் நிறுவனம் இருக்குமா என்பது நியாயமான சந்தேகம், காப்பீட்டு நிறுவனங்களை ஐ ஆர் டி ஏ கண்காணிக்கிறது, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறது. 100% கியாரண்டி யாராலும் தர முடியாது என்றாலும், காப்பீட்டு நிறுவனம் திவால் ஆகும் வாய்ப்பு குறைவு
மொத்தப் பணம் பெருவதில் உள்ள பாதகங்களே இதன் சாதகம்
1. அதுநாள் வரை முதலீடு குறித்து அறியாத இல்லத்தரசிக்கு பெரும் பணத்தை முதலீடு செய்வது கடினமான காரியம்
2. அவரை பலரும் ஏமாற்றி மோசமான முதலீடுகளில் பணம் போட வாய்ப்பு அதிகம்
3. உறவினர் பலரும் பணம் கேட்டு நச்சரிக்க வாய்ப்பு அதிகம். கணவனை இழந்த அவருக்கு உறவினரின் உதவி தேவைப்படும், அந்நிலையில் அவர் பணம் கொடுக்கும் நிலைமைக்கு ஆளாவார்
4. பிள்ளைகளோ மனைவியோ கூட பெரும்பணத்தைப் பார்க்கையில் ஆடம்பரமா செலவு செய்ய ஆரம்பிக்கலாம், பணத்தை 10 ஆண்டுகளிலேயே கரைத்து விடலாம்
5. வட்டி விகிதம் மிகக் குறைந்து பணம் சீக்கிரமே கரையலாம்
இவை அனைத்தும் மாத வருமானம் பெருவதன் மூலம் தவிர்க்கப்படும்
இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ளன, இதுதான் சரி இது தவறென்று சொல்ல இது அப்ஜெக்டிவ் டைப் கேள்வி அல்ல, நம்முடைய நிலைமைக்கு எது சரி என்று பார்த்து, குடும்பத்தினரிடமும் ஆலோசித்து நமக்கு சரியான தேர்வை எடுக்கலாம்.
வருமானம் ஈட்டும் மனைவி இருக்கும் குடும்பத்துக்கு கூடுதல் மாத வருமானம் தேவையில்லாமல் இருக்கக்கூடும், அவர்கள் மொத்தமாக வாங்கி நீண்ட நாள் கூட்டு வட்டி முதலீடு செய்யலாம்
ஒரு குடும்பத்தில் பசங்க ஏற்கெனவே வளர்ந்திருக்கலாம், 2வருசத்தில் ஒரு கல்லூரிச் செலவும் 3 வருசத்தில் கல்யாண செலவு மட்டுமே இருக்கலாம் அதற்கப்புறம் குறைந்த மாத வருமானமே போதுமானதாக இருக்கலாம்
மனைவி முதலீட்டு விசயங்களில் ஆர்வர் உடையவராக இருக்கலாம், அவர் பணத்தை திறமையாக நிர்வகித்து 10% வளர்ச்சி காண வைக்கும் திறமை உடையவராக இருக்கலாம்.
இந்த மாதிரி சிச்சுவேசன்களில் மொத்த பணம் பெறுவது நல்லது
பசங்க சின்னவங்களா இருக்காங்க என் மனைவிக்கு முதலீடு குறித்து அதிகம் தெரியாது, அவங்களை உறவினரோ மத்தவங்களோ ஏமாத்திடக் கூடாதுன்னு நினைச்சீங்கன்னா, மாத வருமானம் ஆப்சன் நல்லது
இதுவா அதுவான்னு முடிவு செய்ய இயலாதவர்கள்
இதில் பாதி அதில் பாதி என்று பிரித்து ரெண்டு பாலிசியா எடுப்பதன் மூலம் இரண்டின் சாதகங்களையும் அடைய முடியும்