டெர்ம் இன்சூரன்ஸ் பக்கம் மக்கள் கவனத்தைத் திருப்பினாலும் காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்றதை விற்க முயன்று கொண்டேதான் இருக்கின்றன.
எண்டோமெண்ட், மணிபேக் பாலிசிகள் உபயோகமற்றவை என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர், குறைந்த ப்ரீமியத்தில் தேவையான கவரேஜ் டெர்ம் பாலிசிகளால் மட்டுமே வழங்கமுடியும் என்றுணர்ந்த பொதுமக்கள் அதையே கேட்கத் தொடங்கியதும் காப்பீட்டு நிறுவங்கள் ரைடர்கள் என்ற பேரில் தேவயற்ற விசயங்களை இணைக்கத் தொடங்கினார்கள்.
சூப்பர் மார்க்கெட்டில் பில்லிங் கவுண்டர் அருகே சாக்லேட், பபிள் கம் போன்ற எளிதில் கவரக்கூடிய அதே சமயம் அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும், நமக்குத் தேவையானதை வாங்கிய பின் பில் போடும் அவசரத்தில் கண்ணில் படும் தேவையற்ற பொருட்களை வாங்குவது போல இந்த ரைடர்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
ரைடர்கள் என்னென்ன அவை அவசியமா என்று பார்க்கலாம்
1. க்ரிடிகல் இல்னெஸ் ரைடர் : இது மட்டமான ரைடர் இல்லேனாலும் அவசியமற்றது. இந்த ரைடர் எடுத்தால், நிறுவனம் லிஸ்ட் செய்திருக்கும் கேன்சர் போன்ற சில பல கொடும் நோய்கள் வந்தால், பாலிசி தொகையில் குறிப்பிட்ட அளவு வழங்கப்படும், அதற்கப்புறம் ப்ரீமியம் கட்டத்தேவையில்லை. இதில் கூறப்பட்டிருக்கும் நோய்கள் வந்த ஒருவர் அதற்கப்புறம் அதிக நாள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கப்புறம் கிடைக்கப் போகும் பணம் இப்போதே கிடைக்கும், அதுவும் மருத்துவச் செலவுக்குப் போய்விடும். அவர் இறக்கும் போது குடும்பத்துக்கு தேவைப்படும் பணம் இருக்காது.
இதற்காக செலவழிக்கும் பணத்தைக் கொண்டு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது நன்மை பயக்கும்
2. விபத்திற்கு இரட்டைக்காப்பீடு : எனக்குத் தெரிந்ததில் இதை விட அனாவசிய செலவு வேறேதுமில்லை. 10 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு குடும்பத்திற்கு அவசியம் என முடிவு செய்து டெர்ம் இன்சுரன்ஸ் வாங்குகிறார். அவர் விபத்தில் இறந்தால் இரட்டிப்புக் காப்பீடு அதாவது 2 கோடி கவரேஜ் வழங்குவதே ஆக்சிடெண்ட் டபுள் கவரேஜ். அவர் நோயில் இறந்தால் 1 கோடி தேவைப்படும் குடும்பத்துக்கு விபத்தில் இறந்தால் மட்டும் ஏன் 2 கோடி தேவைப்படும்? இதற்கு செலவழிக்கும் ப்ரீமியத்தையும் வைத்து 1.5 கோடிக்கு பாலிசி எடுத்தால் அவர் எப்படி இறந்தாலும் குடும்பத்துக்கு அந்தத் தொகை கிடைக்கும். நம் இறப்பின் காரணத்தை கணிக்க முயல்வது, பங்குச் சந்தையின் போக்கை கணிக்க முயல்வதை விட முட்டாள்தனமானது
3. எக்ஸ்ப்ரஸ் பேமெண்ட் : முப்பதாண்டு கால பாலிசியின் முழு ப்ரீமியத்தையும் எட்டு ஆண்டிலேயே கட்டி பணம் சேமிப்பது.
தொடக்கம் முதலே இருந்து வரும் பழக்கம், பாலிசிக்கு ஆண்டு ப்ரீமியம் கணிக்கப்படும் அதை ஆண்டுக்கொரு முறையோ இரு முறையோ நாலு முறையோ செலுத்தலாம். இப்ப புதுசா ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. ஆண்டு ப்ரீமியம் 11,000 ரூபாய், 30 ஆண்டுக்கு மூணு லட்சத்து 30ஆயிரம் வருது, இதையே 8 வருசங்களில் கட்டினா ஆண்டுக்கு 28,261 ரூபாய் மொத்தமே 2,26.088 ரூபாய், ஆக உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மிச்சம் என்பார்கள். இதுல ரெண்டு பிரச்சனைகள் இருக்கு
அ. இதற்காக செலுத்தும் அதிக தொகையை முதலீடு செய்தால் முப்பதாண்டு முடிவில் நம்மிடம் அதிகப் பணம் இருக்கும்
சராசரியா 10% வளர்ச்சி என்று வைத்தால், 8 ஆண்டுகளுக்கு மாதம் 1468 ரூபாய் சேமித்தால் 2,14,000 ரூபாய் இருக்க வாய்ப்பு அதிகம், அது மிச்ச 22 ஆண்டுகள் வளர்ச்சியடைந்து 17.5 லட்சமாக இருக்கும். எட்டு ஆண்டுகள் அதிகமாக செலுத்தி முடித்த பின் ஆண்டுக்கு 11ஆயிரத்தை சேமித்தால் 22 ஆண்டுகள் கழித்து 8.8 லட்சம் மட்டுமே கையில் இருக்கும் . இது க்ளியரா கம்பெனிக்கே லாபம் தரும் திட்டம்
ஆ. டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து 7 ஆண்டுகள் கழித்து பயனர் இறந்தால் எக்ஸ்ப்ரஸ் பே திட்டத்தில் அவர் கிட்டத்தட்ட முழு ப்ரீமியத்தையும் செலுத்தி இருப்பார், ரெகுலர் திட்டத்தில் இருந்திருந்தால் அவர் வெறும் 77,000 மட்டுமே செலுத்தியிருப்பார்
4. ப்ரீமியம் திரும்பக் கிடைக்கும் ரைடர் : இதுவும் ஒரு பம்மாத்து வேலையே. நான் பல முறை சொன்னா மாதிரி வாகன இன்சூரன்ஸிலும் பொருட்களின் இன்சூரன்ஸிலும் ரிட்டர்ன் எதிர்பார்க்காத நாம் ஆயுள் காப்பீட்டில் மட்டும் ஏன் ரிட்டர்ன் எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் அதே பல்லவிதான் – இந்த ரைடருக்கு செலுத்தும் தொகையை நல்ல வகையில் முதலீடு செய்தால் 30 ஆண்டு முடிவில் ரிட்டர்ன் கிடைக்கும் ப்ரீமியத்தை விட அதிகம் கையில் இருக்கும்.
அடுத்து பயன் தரக்கூடிய ரெண்டு ரைடர்கள்
1. அதிகரிக்கும் கவரேஜ் : இது கிட்டத்தட்ட அனைவருக்கும் அவசியம். ஏன் அனைவருக்கும் அவசியம்னு சொல்லலேன்னா – சிலர் 45 – 50 வயது வரை டெர்ம் பாலிசி எடுப்பதில்ல்லை, அப்போது அவர்களில் பலரும் வருமானத்தின் உச்சியை கிட்டத்தட்ட எட்டி விடுகின்றனர் அதற்கப்புறம் வருமானம் நிறைய உயர்வதில்லை அதனால் காப்பீட்டின் அளவும் அதிகம் உயர வேண்டியதில்லை, அவர்களில் பலர் அதற்குள் நெறய சேமித்து விடுகின்றனர், அவர்களுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல காப்பீடு தேவையில்லை. இருவதுகளிலும் முப்பதுகளிலும் உள்ளோரின் வருமானம் இனி நிறைய உயரும், வருமானம் உயர உயர குடும்பத்தின் லைஃப் ஸ்டைலும் உயரும், இவை உயர உயர காப்பீட்டு அளவின் தேவையும் உயரும். இவர்கள் அதிகரிக்கும் கவரேஜ் திட்டத்தில் சேருவது நல்லது
2. கணவன் – மனைவி Joint கவரேஜ் : இருவரும் வருமானம் ஈட்டுகின்றனர், கணவரின் வருமானம் மனைவியின் வருமானத்தை விட கணிசமாக அதிகம் – இந்நிலையில் இருப்போருக்கு இது நல்ல திட்டம். இதில் கணவரின் காப்பீட்டு அளவில் பாதி மனைவிக்கு வழங்கப்படும். உதாரணத்துக்கு கணவர் 1 கோடிக்கு பாலிசி எடுத்தால் மனைவிக்கு 50 லட்ச ரூபாய்க்கு கவரேஜ் 10% டிஸ்கவுண்ட் ரேட்டில் வழங்கப்படும். கணவன் இறந்தால் மனைவிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் இது நார்மல், இந்த திட்டத்தில் மனைவியின் 50 லட்ச ரூபாய் காப்பீடு தொடரும் ஆனால் அவர் கணவரின் இறப்பிற்கு அப்புறம் ப்ரீமியம் கட்டத் தேவையில்லை. வருமானமீட்டும் கணவன் மனைவி இருவரும் தனித்தனியே பாலிசி எடுப்பதை விட இது ரொம்பவே பெட்டர்.