டேர்ம்பிளான் விண்ணப்பிக்கும்போது முதலில் சரியான வயதை தெரிவிக்கவேண்டும். வயதை அடிப்படையாக கொண்டே திட்டத்தின் பிரீமியம் வரையறுக்கப்டுகிறது. மேலும் புகையிலை பயன்படுத்துபவரா இல்லையா என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால் புகையிலை பயன்படுத்தாதவர்களுக்கு சாதாரண பிரீமியத்திலிருந்து 30% வரை தள்ளுபடி தரப்படுகிறது. இதை எப்படி நிறுவனம் தெரிந்துகொள்ளும்.
டேர்ம்பிளானுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம். மற்ற பரிசோதனைகளுடன் சேர்த்து புகைபழக்கம் இல்லாதவர்களுக்கு routine urine analysis with Cotinine என்ற பரிசோதனையும் செய்யப்படும். அதில் புகையிலை பயன்படுத்துபவர்களின் சிறுநீரில் நிகோடின் அளவு தெரியவரும்.
அளிக்கப்படும் விண்ணப்பம் இருவிதமாக பரிசீலிக்கப்படும். ஒன்று உடல் தகுதி ரீதியிலும் மற்றொன்று பொருளாதார சூழல் ரீதியிலும் இருக்கும். (Medical underwriting & financial underwriting ) இருவேறு குழுக்கள் பரிசீலிக்கும்.
உடல் தகுதி தேர்வென்பது ஒருவர் எத்தனை ஆண்டுகள் காப்பீடு கேட்டிருக்கிறாரோ அத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக இருப்பாரா என்பதை மருத்துவ பரிசோதனை முடிவுகளை வைத்து முடிவெடுப்பார்கள்.
பொருளாதார தகுதி என்பது ஒருவர் எவ்வளவு தொகைக்கு காப்பீடு கேட்கிறாரோ அந்த அளவுக்கு தகுதியானவரா என்று பார்ப்பது. அதாவது அவர் கேட்டிருக்கும் காப்பீடு அளவுக்கு அவருக்கு வருமானமிருக்கிறதா தொடர்ந்து பணம்கட்டும் தகுதி இருக்கிறதா ஒருவேளை அவர் இறந்துபோனால் அவர் காப்பீடு கேட்கும் அளவுக்கு குடும்பத்துக்கு வருமான இழப்புஉண்டா என்றெல்லாம் பார்ப்பார்கள்.
நேற்று பேசிய நண்பர் ஒருவர் தான் ஆண்டுக்கு ஐந்துலட்ச ரூபாய்க்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதாகவும் தனக்கு ஐம்பதுலட்ச ரூபாய் காப்பீடு வேண்டுமென்றும் கேட்டிருந்தார். அவர் வயது 45. வருமானம் எப்படி வருகிறது என்று கேட்டபோது நான்குலட்ச ரூபாய் வாடகை வருமானமும் ஒருலட்ச ரூபாய் வட்டி மற்றும் டிவிடன்ட் வருமானமும் உள்ளதென்றார்.
காப்பீடு என்பதே ஒருவர் இறந்துபோனால் அவர்மூலம் குடும்பத்துக்கு வரும் வருமானத்துக்கு மாற்றாக அதை ஈடுசெய்யும் விதமாக வழங்கப்படுவதாகும். இங்கு இவர் இறந்துபோனால் குடும்பத்துக்கு வருமான இழப்பு என்ன? இவர் இருந்தாலும் இல்லையென்றாலும் வாடகை வட்டி டிவிடன்ட் எல்லாம் தொடர்ந்து வரப்போகிறது. இதில் வருமான இழப்பே இல்லை. கம்பனி இவர் விண்ணப்பத்தை ஏற்று காப்பீடு வழங்காது. அவரிடம் சொல்லி புரியவைத்தேன்.
இ்ப்படியாக விண்ணப்பத்தை பரிசீலித்து காப்பீடு வழங்க வாடிக்கையாளர் மருத்துவ பரிசோதனைகள் முடித்தபின் குறைந்தது பத்து நாட்களாவது கம்பனிக்கு தேவைப்படும்.
ஸ்ரீராம் அவர்கள் எழுதிய பதிவில் ஒருதம்பதியினர் இணைந்து பாலிசி எடுத்ததாக கூறியிருந்தார்.அந்த தம்பதியினர் பாலிசிக்கு பணம் செலுத்தியபின் அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு பல்வேறு வேலைவிசயமாக பலஊர்களுக்கு சென்றிருந்தனர். அவர் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தார். காப்பீட்டு பணம் செலுத்தியதற்கும் மருத்துவ பரிசோதனை செய்ததற்கும் இடையில் எட்டு நாட்கள் இருந்தது. இதனால் காப்பீடு வழங்குவது தாமதமானது. அவர்கள் என்னை கேட்கவில்லை. உங்களுக்கு ஒரு தகவலுக்காக சொல்கிறேன். எப்படியெல்லாம் தாமதமாகிறது என்பதற்காக.
சரி. உடல் பரிசோதனையில் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்.
பலர் காப்பீட்டு கம்பனி தெரிவித்தபின்னரே தங்களது உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து கொள்கின்றனர். பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். ரத்த பரிசோதனையில் பலருக்கு சர்க்கரை அளவு கூடுலாக இருக்கலாம். ரத்த அழுத்தம் கூடவோ குறையவோ இருக்கலாம். உங்களைவிட உங்கள் உடல்நலத்தின்மீது அக்கறை காட்டுபவர்கள் காப்பீட்டு கம்பனிகளே என்று உணருங்கள். சிறிது தவறினாலும் பலகோடி நட்டமாகிவிடும்.
உடல்தகுதியில் பிரச்சனை இருந்தால் கம்பனிகள் மூன்றுவிதமாக முடிவெடுப்பார்கள். 1. கூடுதல் பிரீமியம் கேட்பது. ரேட்அப் என்று சொல்வார்கள். 2. காப்பீடு வழங்குவதை ஆறுமாதம் தள்ளி வைப்பது. போஸ்ட்போன்டு என்று சொல்வார்கள். உடல்தகுதியை சீராக்கி ஆறுமாதம் கழித்து விண்ணப்பம் செய்யுங்கள் என்பார்கள். 3. விண்ணப்பத்தை நிராகரிப்பது. அதாவது ரிஜக்ட் செய்வது.
பலகோடி ரூபாய் சம்பந்தபட்ட விசயம் என்பதால் காலதாமதத்தை தவிற்க இயலாது. பாலிசி வழங்க எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை க்ளைம் என்று வந்தால் உடனடியாக வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு பரிசோதனைகளும் தாமதங்களும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று நிரூபித்து காப்பீடு பெறும்போது க்ளைமில் பிரச்சனைவர வாய்ப்பே இல்லை.