வீட்டுக் கடன் வாங்கும் போது வலுக்கட்டாயமா ஆயுள் காப்பீடு திணிப்பது குறித்து எழுதியிருந்தேன்.. அப்பவே வங்கிகள் ஆயுள் காப்பீட்டை விட்டுவிட்டு வீட்டை காப்பீடு செய்ய முயலணும் என்று எழுத நினைத்து விட்டு விட்டேன். அமெரிக்காவில் வங்கிகள் வீட்டுக்கடன் தரும் போது ஆயுள் காப்பீடு எடுக்கச் சொல்வதில்லை, ஆனா வீட்டை இன்சூர் செய்தே ஆகணும், அப்புறம் டைட்டில் இன்சூரன்ஸும் வாங்கணும் – Title Insurance இதுவரை இந்தியாவில் இல்லை, அதனால் அது பத்தி எழுத வேணாம்னு நினைச்சேன், ரெண்டே நாள் கூட ஆகல, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தப்போகுதுன்னு நியூஸ்..
டைட்டில் இன்சூரன்ஸ் : பத்திரத்தில் ஏற்படும் வில்லங்கங்கள், அப்படி வில்லங்கம் ஏற்பட்டால் வழக்கு தொடர ஏற்படும் செலவுகளுக்கான இன்சூரன்ஸ் இது. இந்த இன்சூரன்ஸ் மிகவும் விலை மலிவானது. உதாரணத்துக்கு நான் வசிக்கும் Massachusetts மாநிலத்தில் 1000$ க்கு 2.5$ இன்சூரன்ஸ் ப்ரீமியம் – இதை வீடு வாங்கும் போது ஒரே ஒரு முறை செலுத்தினால் போதும். இந்தியாவில் என்ன விலை வைக்கப் போறாங்கன்னு பொருந்த்திருந்து பாக்கணும்.
வீட்டுக்கு காப்பீடு : இது வீட்டையும் உள்ளே இருக்கும் உடமைகளுக்குமான இன்சூரன்ஸ். வீடு இடிந்து விழுந்தாலோ, தீயில் நாசமானாலோ வெள்ளம், மின்னல் போன்றவற்றில் சேதமானாலோ இழப்பீடு வழங்கும் காப்பீடு.
Home Loan is a SECURED LOAN, It has a collateral which usually has higher value than the loan. அப்படியிருக்கையில் வங்கிகள் கடன் பெறுவோரை ஆயுள் காப்பீடு எடுக்கச் சொல்லி நிர்பந்திக்கூடாது.
ஆளே இல்லேன்னா கூட வீட்டை விற்று வங்கி பணம் எடுத்துக் கொள்ள முடியும், வீடு இடிந்து விழுந்தாலோ, பத்திரத்தில் வில்லங்கம் இருந்து வேற யாரோ சொத்தின் மீது உரிமை கொண்டாடினாலோ – கடன் வாங்கியவர் கை கழுவினால் வங்கியின் கதி அதோ கதிதான்.
வங்கிகள் அவை விற்கும் ஆயுள் காப்பீட்டை அதிக விலைக்கு கஸ்டமர் தலையில் கட்டுவதில் கவனம் செலுத்துவதை விட்டு அவர்களை இந்த இரு காப்பீடுகளும் எடுக்கச் சொல்லலாம்.