டெர்ம் இன்சூரன்ஸ் விலை மலிவுன்னும் பிற எண்டோமெண்ட் பாலிசிகள் ரொம்ப எக்ஸ்பென்சிவ்னும் சொல்லிக்கிட்டே இருக்கியே டெர்ம் பாலிசிக்கு எவ்வளவு ஆகும்னு கேட்டாங்க..
எல் ஐ சியின் டெர்ம் பாலிசிகளான அமுல்ய ஜீவன் மற்றும் இடெர்ம் பாலிசிகளின் ப்ரிமியம் ஜீவன் டேஷ்களின் ப்ரீமியத்தை விட கம்மியா இருந்தாலும் மற்ற நிறுவனங்களின் டெர்ம் பாலிசிக்களை விட அதிகம்.
யார் கேட்டாலும் ஆதித்ய பிர்லா சன்லைஃப், ஐசிஐசிஐ, எச் டி எஃப் சி, ரெலிகேர், ஏகான் எதுல வேணா எடுங்கன்னு சொல்லுவேன்..
ஆதித்ய பிர்லா நிறுவனம் காப்பீட்டிலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் நல்லா செயல் பட்டு வருகிறது. காப்பீட்டைப் பொருத்த வரை ஆதித்ய பிர்லா குழுமத்திற்கு இந்தியாவில் நல்ல பேர் இருக்கிறது, சன்லைஃப் உலக அளவில் ஒரு நல்ல காப்பீட்டு நிறுவனம். அதனால் அதில் என்ன ப்ரீமியம் என்று கேட்டு பகிர நினைத்தேன்.
சம் அச்யூர்ட் 1 கோடி, ரிட்டையர் ஆகும் வரை காப்பீடு அதாவது 65 வயது ஆகும் வரை, புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர் இவற்றை நிலையாக வைத்தேன்.
30 வயது ஆணுக்கு 1 கோடிக்கு ப்ரீமியம் ரூ 11,623 வரிகள் உள்பட
40 வயது ஆணுக்கு – ரூ 18,155
30 வயது பெண்ணுக்கு ரூ 9830
40 வயது பெண்ணுக்கு 14,485
நேற்றைய போஸ்டில் ஜீவன் ஆனந்தில் 50 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு ஒருத்தர் 2,70,000 ரூபாய் செலுத்துவதைச் சொல்லியிருந்தேன். அவர் ஒரு கோடிக்கு காப்பீடு 15,000 ரூ செலவில் எடுத்து விட்டு மிச்சத்தை மாதா மாதம் 20,000 ரூ மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வந்தால் – காப்பீடும் இருமடங்கு முதலீடும் பல மடங்கு இருந்திருக்கும்.
பொதுவா நான் டெர்ம் பாலிசிகளில் ரைடர்களை விரும்ப மாட்டேன். ஆனா பிர்லா நிறுவனம் இரண்டு நல்ல ஆப்சன்கள் வழங்குகிறது
1. கணவன் + மனைவிக்கான காப்பீடு : இருவரும் வேலை செய்தால் இது மிகப் பொருத்தமாக இருக்கும். உதாரணத்துக்கு கணவருக்கு 1 கோடிக்கு காப்பீடு – ஆண்டுக்கு 15,000 ப்ரீமியம். மனைக்கு அதில் பாதிதான் காப்பீடு – அவருக்கு 50 லட்சத்துக்கு ப்ரீமியம் 6000 ரூ என்று வைத்துக் கொள்வோம். இருவரும் சேர்ந்து பாலிசி எடுக்கும் போது மனைவியின் காப்பீட்டுக்கான ப்ரீமியத்தில் 10% தள்ளுபடி. மொத்த செலவு 15000+5400= 20,400 மட்டுமே.
கணவர் இறக்கும் பட்சத்தில் மனைவிக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும், மனைவியின் 50 லட்ச ரூபாய் காப்பீடு தொடரும் ஆனால் ப்ரீமியம் கட்டத்தேவையில்லை.
2. அதிகரிக்கும் காப்பீடு
பேச்சிலரா இருக்கும் ஒருவர் 25 வயதில் 50 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கிறார். திருமணம் ஆனதும் குழந்தை பிறப்புக்கு அப்புறமும் சார்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகிறது, காப்பீட்டு அளவின் தேவையும் அதிகரிக்கிறது. திருமணத்தின் போது 25 லட்சமும் முதல் இரண்டு குழந்தைகளின் பிறப்பின் போதும் தலா 25 லட்சம் காப்பீட்டை அதிகரிக்க பிர்லா நிறுவனம் அனுமதிக்கிறது. ஒரு கட்டத்தில் பிள்ளைகள் தன் காலில் நிற்கத் தொடங்கிவிட்டனர் இனி எனக்கு இந்த அதிகக் காப்பீடு வேண்டாம் என்று எண்ணினால் இதை விலக்கிக் கொள்ளலாம்.
இவை இரண்டும் மிகக் க்ரியேட்டிவான ஆப்சன்கள்
பின்குறிப்பு : இது ஆலோசனையோ பரிந்துரையோ அல்ல. இப்பதிவு டெர்ம் பாலிசியின் விலை குறித்து தெரியப்படுத்த மட்டும் எழுதப்பட்டது. இதன் நோக்கம் பிர்லா கம்பெனியின் பாலிசியையோ வேறு எந்த ஒரு பாலிசியையோ விற்பது அல்ல. காப்பீடு விற்கும் தகுதி எனக்கு இல்லை.இதைப்படித்துவிட்டு நீங்கள் எடுப்பவை உங்க சொந்த முடிவுகள்.
இதை எழுதுவதன் மூலமோ, இதன் மூலம் பிர்லா நிறுவனத்துக்கு பாலிசி கிடைத்தால் அதன் மூலமோ எனக்கு எந்த ஒரு பொருளாதார ஆதாயமும் இல்லை. இது கமிசனுக்காக எழுதப்பட்டதல்ல