மத்திய அரசின் இன்னுமொரு நலத்திட்டம். இது இந்தியக் குடிமகன்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்குகிறது. மிகக் குறைந்த செலவில் குறைந்த அளவு ஆயுள் காப்பீடு
என்னளவில் இது அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் அதுக்கு மேலே இருப்பவர்களுக்கு உகந்ததல்ல. ஆனாலும் இதை நல்ல திட்டமாகக் கருதுகிறேன்
ஆயுள் காப்பீடின் அளவு வெறும் 2 லட்ச ரூபாய் மட்டும்தான். காப்பிட்டின் பாலபாடமாக ஆண்டு வருமானத்தின் 5 முதல் 20 மடங்கு வரை காப்பீடு எடுக்கச் சொல்வாங்க, எனவே மாசம் 50,000 ரூ சம்பாதிக்கும் ஒருவரின் குடும்பத்துக்கு இந்த காப்பீடு யானைப்பசிக்கு சோளப்பொரி. மேலும் காப்பீடு 55 வயதில் முடிந்து விடும், காப்பீடு அதிகம் தேவைப்படும் காலம் 55- 65 வயது வரை. இதுவோ 55ல முடிந்து விடும்.
அப்புறம் நான் ஏன் இதை நல்ல திட்டம் என்கிறேன்.
இதை வாங்கலாம் உங்களுக்காக அல்ல, உங்க வீட்டிலோ அலுவலகத்திலோ வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களுக்கு வாங்கித் தரலாம். செலவு ஆண்டுக்கு 330 ரூபாய் தான் (வரிகள் தனி). நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான செலவில் 2 லட்ச ரூபாய் காப்பீடு. வீட்டு வேலை செய்யும் பெண்மணி, டிரைவர், அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன், அலுவலக ப்யூன் போன்றோர் காப்பீட்டில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களில் ஒருவர் இறக்க நேரிட்டால் அக்குடும்பம் ரொம்பவே கஷ்டப் படுகிறது, அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கணிசமான தொகை, நமக்கோ ஆண்டுக்கு 330 ரூபாய் பெரிய பணமில்லை. உங்களுக்கு வேலை செய்பவரின் குடும்பத்துக்காக இதைச் செய்யலாம். சும்மாத் தர மனசில்லைன்னா தீபாவளி போனஸாக இதைத் தரலாம்.
இக்காப்பீட்டை எல் ஐ சி நிறுவனம் மூலமாகவும் வங்கிகளின் மூலமாகவும் பெறலாம்