எண்டோமெண்ட், மணி பேக் பாலிசி எல்லாம் நல்ல முதலீடுன்னு நம்புறவங்க அடுத்த போஸ்ட்டுக்கு தாவி விடுதல் நலம். இந்த பதிவு முழுக்க முழுக்க என்னோட பர்சனல் ஒப்பீனியன். இது யாருக்கும் அறிவுரை சொல்லவோ எந்த பாலிசியையும் வாங்கவோ விற்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் போட்ட கணக்கை சேமிக்க மட்டுமே…
மணிபேக் பாலிசி மட்டமான சாய்ஸ் என்பது என் நம்பிக்கை ஆனா இவ்வளவு மட்டமா இருக்கும்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்..
நான் கிறுக்கறதையெல்லாம் படிச்ச ஒரு நண்பர் ஆலோசனைன்னு வந்தார். நல்ல இன்சூரன்ஸ் ஏஜெண்டா பாருங்க சார், எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தெரியாதுன்னு சொன்னாலும் கேக்கல, மணிபேக்ல போடலாம்னு முடிவு பண்ணிட்டேன், 20 வருச ஸ்கீம்ல போடலாமா அல்லது 25 வருச ஸ்கீம்ல போடலாமான்னு மட்டும் சொல்லுங்க. ப்ரீமியம் வித்தியாசம் வருது. 20 வருசத்தில் 3 முறையும் 25 வருசத்தில் 4 முறையும் நடுவில் பணம் வரும், கடேசீல லம்ப்பாவும் வரும் – ரெண்டையும் எக்சலில் போட்டு எதில் அதிக பணம் கிடைக்கும்னு சொன்னா போதும்னு சொன்னார். சரி எக்சல் சொல்லப் போகுது அதை அவருக்கு காமிச்சிட்டா போதும்னு ஆரம்பிச்சேன்
நண்பரின் வயது35
இன்சூரன்ஸ் காலம் 20 வருசம்
காப்பீட்டு அளவு : 10 லட்ச ரூபாய்
ப்ளான் : மணி பேக் 20 வருச ப்ளான் நம்பர் 820
இதுக்கு ப்ரீமியம் பாத்தா மாசத்துக்கு 6749 ரூ வருது. (ரூ 6458 மற்றும் 291 ரூ வரி).
அதாவது ஆண்டுக்கு 77,496 மற்றும் வரிகளாம் 10 லச்ச ரூவா இன்சூரன்ஸுக்கு. சில பல பாலிசிகளைப் பாத்திருக்கேன். சம் அஸ்யூர்டுக்கு 7.7% ப்ரீமியம் இப்பத்தான் பாக்கறேன்.
நண்பரின் ஆண்டு வருமானம் ரூ 10 லட்சம். உங்க ஆண்டு வருமானம் அளவுக்கு இன்சூரன்ஸ் போதாதுன்னு சொன்னதுக்கு, இல்லீங்க நல்ல ரிட்டன்ஸ் இருக்கு. நீங்க 20-25 வருச ப்ளான்களில் ரிட்டர்ன் வித்தியாசம் மட்டும் பாருங்கன்னார். நமக்கென்ன போச்சுன்னு எக்சலில் கவனம் செலுத்தினேன்.
5 ஆண்டுகள் கழித்து 2 லட்ச ரூபாய் கிடைக்கும். நம்மாள் ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம் என்பவர். அதனால் வங்கி வட்டி 6% வச்சி கணக்கு போட்டேன். அந்த 2 லட்சம் கூட்டு வட்டி முறையில் 15 ஆண்டுகள் கழித்து ரூ 479312 ஆகியிருக்கும்
10 ஆண்டுகளித்து இன்னோரு 2 லச்ச ரூபாய், அது பத்தாண்டுகள் 6% வட்டியில் வளர்ந்து 358170 ஆகியிருக்கும்.
15 ஆண்டுகள் கழித்து இன்னோரு 2 லச்ச ரூபாய், அது ஐந்தாண்டுகள் வளந்து 267645 ஆக இருக்கும்.
(இன்றைய நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் வங்கி வட்டி விகிதம் 6% எல்லாம் இருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் 6% போட்டு கணக்கு பண்ணேன்)
கடேசி பேமெண்ட் கொஞ்சம் ட்ரிக்கி. 4 லட்சம் கேரண்டீட் அதுக்கு மேல போனஸ், லாபத்தில் பங்கு எல்லாம் தருவாங்களாம். எவ்வளவுன்னு கேரன்டி இல்லை. சரி நாலுக்கு பதில் எட்டு லட்சம் தர்றாங்கன்னே வச்சிக்கோவோம்.
ஆக மொத்தம் 19,05,126 ரூ நண்பரிடம் 20 ஆண்டுகள் கழித்து இருக்கும்.
வாவ் 20 லட்ச ரூபாயா? நல்ல ரிட்டர்ன்பா அப்படியே 25 வருசம் பாத்துடுன்னு சொன்னவருக்கு ஒரு போன் கால் வந்தது. அவர் பேசிட்டு வர்றதுக்குள்ள எல் ஐ சியின் அமுல்ய ஜீவன் (நம்பர் 822) பாலிசியில் 35 வயசு, 20 ஆண்டு காலம், 10 லட்ச ரூபாய் காப்பீடுக்கு ப்ரீமியம் எவ்வளவுன்னு பாத்தேன். ஆண்டுக்கு 4150 + 747 வரி = 4897. அதாவது மாசத்துக்கு 408 ரூ. அதே பத்து லட்ச ரூபாய் காப்பீடு, அதே 20 வருச காலம் 6750 ரூ எங்க 408 ரூ எங்க.
அமுல்ய ஜீவன் எடுத்துட்டு, மிச்ச காசான 6340 ரூபாயை வங்கி ரெக்கரிங்க் அல்லது பாண்ட்கள் அல்லது ஈக்விட்டி ம்யூச்சுவல் ஃபண்ட் அல்லது சிட் ஃபண்ட் எதிலாவது முதலீடு செய்யலாம்.
மணி பேக் பாலிசி மூலம் வரக்கூடிய 19,05,126 ஐ விட அதிகம் பெற அந்த முதலீடு பெற வேண்டிய வட்டி அல்லது வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? வெறும் 2.2% மட்டுமே.
மாதாமாதம் முதலீடு ரூ 6340
காலம் 240 மாதங்கள்
வட்டி 2.2%
கடேசில கையில் 19,09,200 ரூ இருக்கும் அதாவது மணி பேக் பாலிசி கணக்கை விட நாலாயிரம் ரூ அதிகம் சம்பாதிக்க வெறும் 2.2% வட்டி கிடைத்தால் போதும். மணி பேக் பாலிசி கணக்குக்கு எடுத்த 6% வட்டி கிடைச்சால் 29,29339 ரூ இருக்கும்.
போன் பேசி விட்டு வந்த நண்பரிடம் இதையும் காமிச்சேன். பாவம் உனக்கு 2.5% வளர்ச்சி தரக்கூடிய முதலீடு எதுவும் தெரியாது இல்லையா? உனக்கு மணி பேக் தான் சரியா வரும், அடுத்து 25 வருச மணி பேக்கையும் பாத்துடலாம் என்றேன்.
ஸ்ரீராம், அமுல்ய ஜீவன்ல 20 லட்ச ரூபாய்க்கு எவ்வளவு ப்ரீமியம்னு பாரு, அப்படியே எப்பபாரு சொல்வியே அந்த இ எல் எஸ் எஸ் ம்யூச்சுவல் ஃபண்ட் பத்தியும் சொல்லுப்பா என்றார்
வெல்கம் டு த கிளப் என்றேன்.