2016 மே மாதம் பெங்களூரு சுல்தான் பேட்டையில் ஒரு வீட்டின் உரிமையாளர்கள் வினோபா ராவ் (வயது 80) மற்றும் அவர் மனைவி கலாவதி பாய் (வயது 72) இறந்து கிடந்தனர்.
வயதான காலத்தில் அவர்களைப் பார்த்துக் கொள்ள ஆளின்றி வறுமையில் வாடி பட்டினியில் இறந்திருக்கின்றனர். நாலு ஆண்டுகளுக்கு முன்னரே மின்சார இணைப்பும் குடிநீர் இணைப்பும்
துண்டிக்கப் பட்டுள்ளது. வினோபா ராவ் ஆயுதப் படையில் வேலை செய்து ரிட்டையர் ஆனவர் – அவருக்குக் கிடைத்த சில ஆயிரம் ரூபாய்கள் பென்சன் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
இதில் ஆகப் பெரிய சோகம் என்னன்னா, அவங்க இருந்தது சொந்த வீடு அதன் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்!!!!!
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு சொந்தமாய் இருந்தும் வறுமையில் வாடிய இவர்கள் நிலைமைக்கு காரணம் அறியாமையே
வினோபா ராவ் அவர்கள் வேலை செய்யும் போது ஹோம் லோன் வாங்கி வீட்டைக் கட்டுகிறார். 20 ஆண்டுகள் மாதத் தவணை கட்டி வீட்டை சொந்தமாக்கிக் கொள்கிறார்.
இந்திலையில் அந்த வீட்டின் கடன் ஏதுமில்லா Free Hold நிலையை அடைகிறது. வினோபா போல நிறைய பேர் ஒரு வீட்டோடும் கையில் சொற்ப பணத்தோடும் ரிட்டையர் ஆவதைப் பாக்கறோம்.
மகனோ மகளோ வெளி நாட்டில் செட்டில் ஆனப்புறம் அங்கு போகவும் இவர்களுக்கு மனசு வர்றதில்லை, அவர்களிடம் வாங்கி உண்ணவும் தன்மானம் இடம் கொடுப்பதில்லை
வங்கி, வைப்பு நிதி, ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட் இன்னபிற குறித்து ஓரளவுக்கு கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இவர்களைப் போன்றவர்களுக்கும், வருமானம் நின்ற பின் எப்படி வாழ்வது என்ற கேள்வி உடையோருக்கும் அதிகம் விளம்பரப் படுத்தப் படாத வரப்பிரசாதம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ்
Reverse Mortgage :
வங்கி தரும் பணத்தைக் கொண்டு வீட்டை வாங்கிவிட்டு மாதா மாதம் வங்கிக்கு பணம் தருவது மார்ட்கேஜ் அல்லது ஹோம் லோன்
கடன் கொடுக்கும் வங்கி கடன் வாங்குபவருக்கு மாதாந்திரத் தவணை கொடுத்தல் அது ரிவர்ஸ் மார்ட்கேஜ்
நீங்களும் உங்க மனைவி / கணவர் உயிருடன் உள்ள வரை (இப்போதைக்கு அதிக பட்சமாக 20 ஆண்டுகள் வரை) வங்கி உங்களுக்கு மாதா மாதம் பணம் தந்து உங்க இறப்புக்கு பின் வீட்டை
எடுத்துக் கொள்ளும் .
அ. இத்திட்டம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே.
ஆ. வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு அதில் 80% வரை கடன் கொடுக்கமுடியும். அதை மாதாந்திரத் தவணைகளாக மாற்றி 20 ஆண்டுகள் வரை வங்கிகள் வழங்கும்
இ. இத்திட்டத்தில் நீங்கள் குடியிருக்கும் வீட்டைமட்டுமே உபயோகிக்க முடியும். வாடகைக்காக வாங்கி வைத்திருக்கும் இன்வெஸ்ட்மெண்ட் வீட்டைக் கொடுக்க முடியாது
இ. தவணையை மாதா மாதமோ, காலாண்டுக்கு ஒரு முறையோ அரையாண்டுக்கு ஒருமுறையோ பெற்றுக் கொள்ளலாம்
ஈ. இதன் மூலம் பெரும் பணம் வருமானமாக கருதப் படாது எனவே நீங்கள் இதற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை
உ. இது அடமானம் போல அல்ல – அடமானத்தில் மொத்தமாக பணம் பெற்றுக் கொண்டு மாதா மாதம் அடைக்க வேண்டும். இதில் மொத்தமா பணம் கிடைக்காது. திருப்பித் தரும் அவசியம்
கிடையாது.
ஊ. கணவனும் மனைவியும் உயிருடன் இருக்கும் வரை வங்கி பணம் தரும். இருவரும் இறந்த பின் வீடு வங்கிக்கு சொந்தமாகி விடும்
எ. அப்போது வங்கி இவர்களின் வாரிசுதாரர்களுக்கு வீட்டை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும். வாரிசுகள் விருப்பப் பட்டால் வங்கிக்கு மொத்தமா பணம் கொடுத்து வீட்டை வாங்கிக்
கொள்ளலாம்.
ஏ. வாரிசுகள் வாங்காத பட்சத்தில் வங்கி வீட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளும்
ரிவர்ஸ் மார்ட்கேஜ் குறித்த மேலும் சில தகவல்கள்
- வீட்டின் உரிமையாளர் வீட்டில் வசிக்கும் வரை அவரே அதற்கு உரிமையாளராகவும், பொறுப்பாகவும் இருப்பார். வீட்டு வரி, மெயிண்டனன்ஸ் போன்றவற்றை அவர்தான் கட்ட வேண்டும்
- வீட்டின் உரிமையாளர் 20ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தாலும் அவர் அவ்வீட்டில் தொடர்ந்து வசிக்கலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப்பின் வங்கி பணம் தருவதை நிறுத்தி விடும்
- வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விட்டாலோ, வரிகளை செலுத்தாமல் விட்டாலோ, திவால் ஆகும் நிலைமை வந்தாலோ வங்கி வீட்டை எடுத்துக் கொள்ளும்
- ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு கொடுத்த வீட்டை உரிமையாளர் அடகு வைக்கவோ விற்கவோ முடியாது.
- உரிமையாளர் வீட்டை விற்க முடிவு செய்தால், முதலில் வங்கிக்கு சேர வேண்டிய தொகையை செலுத்தி வீட்டை மறுபடியும் ஃப்ரீ ஹோல்ட் நிலைக்கு கொண்டு வந்தபின்னரே விற்க முடியும்.
- இப்போதைக்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ் மூலம் பெறக்கூடிய அதிகபட்சத் தொகை 1 கோடி ரூபாய்.
வினோபா ராவ்க்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ் குறித்து தெரிந்திருந்தால், இரு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இனி இது மாதிரி மரணங்கள் நிகழாகமல் இருக்க நாம் செய்ய வேண்டியது
இத்திட்டத்தை ரிட்டையர் ஆனவர்களுக்கு தெரியப் படுத்துவதுதான்.