இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தும் நமக்கு காய்கறி தேவைப்படும் ஆனா அதுக்கு நாம கொடுக்கப்போகும் விலை இன்றைய விலையை விட பல மடங்கு அதிகமாய் இருக்கும்.
வருமானத்தை உயர்த்திக் கொள்வது, சேமிப்பு, நம் தேவையை நாமே உற்பத்தி செய்வது என இதை நாம் பல விதமாய் சமாளிக்களாம். 45 வயது ஆகும் ஒருவர் அவர் ரிட்டையர் ஆகும் வரை அடுத்த 20 ஆண்டுகள் ஒரு விவசாயிக்கு மாதம் / ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் அவரும் அவர் மனைவியும் இறக்கும் வரை காய்கறி வழங்கப்படும் என்று ஒரு திட்டம் இருந்தால் எப்படி இருக்கும்? காய்கறி போன்றே கல்லூரிச் செலவும் நிச்சயமான ஒன்று. இன்னிக்கே பல லட்சம் பிடிக்கும் பட்டப்படிப்பு, இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து கோடிகள் கேட்கும் என்பது நிச்சயம்.
இந்தியாவில் இதுவரை பொதுவான சேமிப்பிலிருந்து கல்லூரிச் செலவை சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவில் கல்லூரிச் செலவுக்கென சேமிக்கும் வழி இருக்கிறது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நிறுவனம் இதற்கென இயங்குகிறது. நான் வசிக்கும் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் இதன் பேர் Massachusetts Educational Financing Authority. இந்நிறுவனம் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்கு சேமிக்க பெற்றோருக்கு இரு வழிகளை வழங்குகிறது
ஆப்சன் 1 : U Plan Prepaid Tuition Program உதாரணத்துக்கு 7 வயது ஆகும் என் பெண் 2029ம் ஆண்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைப்பாள். மசாசுசெட்ஸ் மாநிலத்தின் தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு நான்காண்டுகளுக்கு இப்ப ஆகும் செலவு 1 லட்சம் டாலர்கள் -நான்கு ஆண்டுகள் இளங்கலை பட்டபடிப்பு ஆண்டுக்கு 25,000 டாலர்கள் கட்டணம். இன்று நான் 5000 டாலர்கள் இத்திட்டத்தில் கட்டினால் கல்லூரி முதலாண்டு கட்டணத்தின் 20% ஆக அது வரவு வைக்கப்படும். அடுத்த ஆண்டு இதுவே 26000 டாலர்களாக உயரலாம் அப்ப நான்5200 டாலர் கட்டினால் அதை முதல் ஆண்டுக்கான கூடுதல் 20% ஆகவோ அல்லது இரண்டாம் ஆண்டுக்கான முதல் 20% ஆகவோ வரவு வைக்கச் சொல்லலாம்.
சிம்பிளா சொன்னா தங்கமாளிகையில் ஒரு தங்க நகை சீட்டுத்திட்டம் இருக்கு – மாதா மாதம் நாம் கட்டும் தொகை நம் கணக்கில் பணமாக வைக்காமல் அன்றைய தேதிக்கு விற்கும் தொகைக்கு ஏற்ப தங்கமாக வரவு வைக்கப்படும், மாதம் 2 கிராம் வீதம் வாங்கி ஆண்டு முடிவில் 24 கிராம் தங்க நகை வாங்கிக் கொள்ளலாம் – நாம் வாங்கும் அன்று தங்கம் என்ன விலை விற்றாலும் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. தங்கத்தின் விலையாவது ஏறி இறங்கிக் கொண்டிருக்கும், கல்லூரிக் கட்டணங்கள் இறங்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
அதே போல ஒவ்வொரு ஆண்டும் சிறுதொகை இத்திட்டத்தில் கட்டி வந்தால் நான்காண்டுகளுக்கான முழு கட்டணத்தையும் சேமிக்க இயலாவிட்டாலும் 50-60% வது சேர்க்க முடியும், மிச்சத்தை என் மகள் கல்லூரியில் படிக்கும் போது அப்போதுள்ள பட்டியல் படி கட்டிக்கொள்ளலாம்
என் மகள் கல்லூரிக்குப் போகாவிட்டாலோ அல்லது வேறு மாநிலக் கல்லூரிக்குப் போனாலோ நான் கட்டிய பணம் எவ்வித அபராதக் கட்டணமுமின்றி வழங்கப்படும். வட்டின்னு எதுவும் தரமாட்டாங்க, ஆனா Consumer Price Index கணக்கிட்டு நாம் கட்டிய பணத்தைவிட அதிகமாகவே வரும்.
இதில் செலுத்தப்படும் பணம் பங்கு வர்த்தகத்தில் போடப்படமாட்டாது, பணம் முழுவதும் மசாசுசெட்ஸ் மாநில அரசு வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் செக்யூரிட்டியும் அதிகம். மாநில வரி விலக்கு மட்டும் உண்டு
ஆப்சன் 2 : இதை ப்ளான் 529 என்பார்கள் – இது கிட்டத்தட்ட புது பென்சன் திட்டம் போன்றது. புதிய பென்சன் திட்டத்தில் ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கிறோம் அது போல 529 இல் பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்காக சேமிக்கலாம். வரி விலக்கு உண்டு, ஆனால் பணம் ஈக்விட்டி மற்றும் பாண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஈக்விட்டியில்தான் அதிக வளர்ச்சி இருக்கும் ஆனால் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உள்பட்டது.
இதில் சேமிக்கும் பணத்தை திட்டத்தில் இணைந்திருக்கும் கல்லூரி ஒன்றின் கட்டணத்திற்கு உபயோகிக்கலாம். ஆனால் படிப்பு தவிர வேறு எதற்கேனும் எடுத்தால் வருமான வரி மற்றும் அபராதத்தொகை பிடிக்கப்படும்
முன்னது உத்தரவாதம் பின்னது வளர்ச்சி, நமக்கு எது தேவையோ அதை தெரிவு செய்யலாம்.
இந்தியாவிலும் கல்லூரிக்கட்டணங்கள் ஏகத்துக்கும் உயர்ந்து கொண்டே வருகின்றன. இது மாதிரியான சேமிப்புத் திட்டம் இந்தியாவின் உடனடித் தேவை.
தங்கத்திலும், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சேமிப்புத் திட்டத்திலும் மக்கள் ஏமாந்தது போதும். மியூச்சுவல் ஃபண்ட்களில் பொது சேமிப்பை வைத்தாலும் இது போன்ற டார்கெட்டட் சேமிப்புத் திட்டங்கள் குறிப்பிட்ட செலவுகளுக்கு மட்டுமே ஆனவை என்பதாலும் இவற்றுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் என்பதாலும் நலல் வரவேற்பு இருக்கும். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்களின் மூலம் அரசுக்கும் லாபம் – வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்த ஏதுவாய் இருக்கும், ஈக்விட்டியில் முதலீடு செய்யும் திட்டங்கள் பங்குச் சந்தையில் ரீட்டெயில் இன்வெஸ்டர்களின் முதலீட்டை அதிகரிக்கும்.
மோடி அரசு இது போன்ற நல்ல சேமிப்புத் திட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என விரும்புகிறேன். அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை உயர்த்துவார் என்று ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். முதல் முறைதான் செய்யவில்லை, அடுத்த ஐந்து ஆண்டுகள் 2019 முதல் 2024 வரை ஆட்சியில் இருக்கப் போகும் போதாவது இம்மாதிரி திட்டங்களை உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்