காப்பீட்டு பணத்தைக் கடனாளிகளிடமிருந்து காப்பது எப்படி?

சுதாவின் கணவர் ரங்கராஜ் சிறு தொழில் ஒன்றை நிறுவி நல்ல முறையில் நடத்தி வந்தார். தொழில் அபிவிருத்திக்காக நிறைய கடன் வாங்கியிருந்தார். குடும்பத்தின் பாதுகாப்புக்காக ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசியும் எடுத்திருந்தார்

வித்யாவின் கணவர் சந்தானம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி, இவரும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி ஒரு கோடி ரூபாய்க்கு எண்டோமெண்ட் பாலிசி எடுத்து வைத்திருந்தார்

கவிதாவின் கணவர் சங்கரும் லதாவின் கணவர் ஜோசஃபும் தலா ஐம்பது லட்சரூபாய்க்கு ஹோல் லைஃப் பாலிசி வாங்கியிருந்தனர்.

கணவர்கள் நால்வரும் ஒரு ரயில் விபத்தில் இறந்தனர். கணவர்களின் மரணம் பேரிழப்பாக இருந்தாலும் இன்சூரன்ஸ் பணம் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த உதவும் என்று எண்ணியிருந்த குடும்பத்தாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒருவரின் இன்சூரன்ஸ் பணத்தை கடன் கொடுத்தவர்கள் பெற்றுச் சென்றனர். ஒருவர் குடும்பத்துக்குத் தெரியாமல் 75% இன்சூரன்ஸ் கம்பெனியிலேயே லோன் வாங்கியிருந்தார். இன்னொருவர் மனைவியிடம் சொல்லாமல் சென்ற மாதம்தான் பாலிசியை சரண்டர் செய்து விட்டிருந்தார். கடைசி ஆள் இன்னொரு நாமினி பேரை இன்னோரு பெண்ணுக்கு மாற்றி விட்டிருந்தார்.

இவர்கள் நால்வருக்கும் நேர்ந்தது வேறு யாருக்கும் நேராமல் இருக்க ஒரு வழி இருகிறது அதுதான் MWP Act எனப்படும் Married Women’s Property Act மூலம் காப்பீடு பெறுவது. இச்சட்டம் மணமான பெண்களின் சொத்துக்களை சொந்தக்காரர்கள், கடன் கொடுத்தவர்கள் மற்றும் கணவனிடமிருந்து காக்க உருவானது. இதன் ஆறாம் செக்சன் காப்பிட்டு பணப்பாதுக்காப்பு குறித்தானது. ஆயுள் காப்பீடு எடுக்கும் போது MWP Act form இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே எடுத்த பாலிசியில் இதை இணைக்க முடியாது. பாலிசி எடுப்பவர் தனக்கு மட்டுமே இதை எடுக்க முடியும், வேறு ஒருவருக்காக எடுக்க முடியாது. பாலிசி தாரர் இறந்தால் காப்பீட்டுப் பணம் மனைவிக்கு மட்டும், பிள்ளைகளுக்கு மட்டும், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு என்று ஏதாவது ஒரு ஆப்சன் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

காப்பீட்டுப் பணம் அனைவருக்கும் சரிசமமாகப் பிரிக்கும் படியும் இதனை எழுதலாம் அல்லது யாருக்கு எத்தனை சதவீதம் என்று குறிப்பிட்டும் எழுதலாம். ஆனால், ஒரு முறை தேர்ந்தெடுத்தபின் அதை மாற்ற இயலாது.

MWP Act இன் கீழ் எடுக்கப்படும் ஒவ்வொரு ஆயுள் காப்பீடும் ஒரு ட்ரஸ்ட் போன்றது. ட்ரஸ்டின் சொத்துகள் அதன் Beneficiaries க்கு மட்டுமே சொந்தம் . பாலிசிதாரருக்கோ அவருடைய நிறுவனத்துக்கோ கடன் கொடுத்தவர்கள் அவருடைய வீடு, வங்கியில் உள்ள பணம், ஆயுள் காப்பீட்டுத் தொகை உள்பட அனைத்து சொத்துகள் மீதும் உரிமை கொண்டாட முடியும் ஆனால் அவர்களால் இந்தச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயுள் காப்பீடு பணத்தின் மீது உரிமை கோர முடியாது

இச்சட்டம் வெளி ஆட்கள் மட்டுமல்லாது கணவரிடமிருந்தும் குடும்பத்தைக் காக்கிறது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட பாலிசியை சரண்டர் செய்யவும் முடியாது, பாலிசியிலிருந்து கடனும் பெற முடியாது. ஒரு முறை மனைவியை நாமினியாக அறிவித்த பின் வேறு யார் பேருக்கும் அதை மாற்றவும் முடியாது.

சரி. இந்தப் பாலிசியை எப்படி பெறுவது?
MWP Act பாதுகாப்பு பெறுவது எளிது, இதற்காக ஒரு எளிய விண்ணப்படிவம் உள்ளது. இது எல்லா இன்சூரன்ஸ் முகவர்களிடமும் இருக்க வேண்டும். ஆயுள் காப்பிட்டு படிவத்துடன் இதையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும், இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

பாதகங்கள்
இத்திட்டத்தின் பாதகங்கள் என்று பார்த்தால், இன்சூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்ய இயலாது. ஏதேனும் கடனுக்காக இன்சூரன்ஸ் பாலிசியைப் பிணையாக தர முடியாது. மெச்சூரிட்டி தொகை வரும் பாலிசியாக இருந்தால், அத்தொகை நேரடியாக மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தான் போகுமே தவிர பணம் போட்ட குடும்பத் தலைவருக்கு வராது.

பாலிசி பற்றி குடும்பத்தாரிடம் சொல்லி வையுங்கள்

No photo description available.

காப்பீடு எடுத்தா மட்டும் பத்தாது. எப்படி க்ளெய்ம் செய்வதுனு வீட்ல இருக்கவங்களுக்கு அவசியம் சொல்லியும் கொடுக்கனும். நம்ம கிட்ட இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை – பல ஆண்கள் மனைவியிடமோ பிள்ளைகளிடமோ நிதி சம்பந்தமா எதுவுமே சொல்வதில்லை. பெண்களும் “அதெல்லாம் எனக்குத் தெரியாது என் வீட்டுக்காரருக்குத்தான் தெரியும் அவருதான் எல்லாத்தையும் பாத்துக்கறாரு” என்று இருந்து விடுகிறார்கள். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்களும் இதில் அடக்கம். வங்கிக் கணக்கு பாஸ்வேர்ட், எங்க என்ன சேமிப்பு, முதலீடு இருக்கு, என்னென்ன காப்பீடுகள் இருக்கு இப்படி எதுவுமே சொல்லாம கணவர் திடீர்னு இறந்தா மனைவி இப்படி வங்கிக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் பணத்தை தாரை வார்க்க வேண்டியதுதான்

முதியோருக்கான முதலீட்டு வாய்ப்புகள்.

நம் அப்பாவும் தாத்தாவும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற போது வந்த பணத்தை இந்தியன் வங்கியிலோ சுந்தரம் ஃபைனாஸிலோ போட்டுவிட்டு வந்த வட்டியில் வாழ முடிந்தது. 15% வட்டி, போட்ட பணம் 5 வருடங்களில் இரட்டிப்பான காலமெல்லாம் போய் இப்ப சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி 7.25% ல வந்து நிக்குது. வரும் காலங்களில் இது இன்னும் குறையும் என எதிர்பாக்கலாம்.

ஓய்வு பெற்றவர்களில் பலரும் பங்குச் சந்தை குறித்து அறிமுகம் இல்லாதவர்கள். ஈக்விட்டியிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அவர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் என்னென்ன?

1. Fixed Deposit with Non Banking Financial Companies : வைப்பு நிதி என்பது வங்கிகளால் மட்டும் வழங்கப்படுவதல்ல. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட பல நிறுவங்கள் 5 ஆண்டுகள் வரை வைப்பு நிதி பெறுகின்றன. இவை வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகின்றன

எல் ஐ சி ஹவுசிங் – 7.7%, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் 8.5%, மஹிந்த்ரா நிறுவனம் 8.3%, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் 9.38% ஆகியவை சில உதாரணங்கள் (இவை சீனியர் சிட்டிசன்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும் திட்டங்கள, மாதாமாதம் வட்டி வேணும்னா கொஞ்சம் கம்மியாகும்.ஆண்டுக்கொருமுறை வட்டி வங்கிக்கு வருமாறு செய்துவிட்டு மாதாமாதம் எடுத்துக்கொள்வது அதிக நன்மை பயக்கும்)

சாதகம் : வங்கியை விட அதிக வட்டி
பாதகம் : வங்கிகளை விட பாதுகாப்பு கொஞ்சம் குறைவு என்று சொல்லலாம். வங்கிகள் போற போக்கைப் பாத்தா அதுவும் பாதகமாத் தெரியல

2. பிரதம மந்திரி வய வந்தன யோஜ்னா: 
60 வயது மேற்பட்டோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம். எல் ஐ சி வழியாக வழங்கப் படுகிறது

காலம் : 10 ஆண்டுகள் 
வட்டி : மாத வட்டிக்கு 8%, ஆண்டுக்கு ஒரு முறை வாங்கினால் 8.3%
அதிக பட்ச முதலீடு : 15 லட்சம் 
நடுவில் டெபாசிட்டை உடைக்க முடியாது, ஆனா 3 ஆண்டுகளுக்குப் பிறகு 75% கடன் பெற்றுக் கொள்ளலாம்

சாதகங்கள் : 10 ஆண்டுகளுக்கு 8.3% வட்டி தரும் திட்டம் வேறு எதுவும் இன்று இல்லை 
மத்திய அரசின் திட்டம் ஆதலால் பாதுகாப்பு மிக அதிகம் 
வட்டி குறையாமல் 10 ஆண்டுகளும் இருக்கும்

பாதகங்கள் : வங்கிகளில் செய்வது போல டெபாசிட்டை உடைக்க முடியாது
15 லட்சம் வரைதான் இதில் முதலீடு செய்ய முடியும்

3. சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் 
60 வயதுக்கு மேற்பட்டோரும் வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிய 55 வயதுக்கு மேற்பட்டோரும் முதலீடு செய்யலாம்

8.6% வட்டியில் ஆரம்பிச்சது இப்ப 8.3% த்தில் வந்து நிக்குது

வங்கிகள் மூலமோ, தபால் அலுவலகம் மூலமோ முதலீடு செய்யலாம்

15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்

காலம் : 5 ஆண்டுகள், அப்புறம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்

ஒரு வருடம் கழித்து Pre Mature Withdrawal செய்யலாம் (கட்டணம் உண்டு)

சாதகங்கள் 
வங்கியை விட அதிக வட்டி 
செக்சன் 80 C யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு

பாதகம் : வட்டி நிர்ணயம் இல்லை, ஆண்டுக்கொரு முறை வரி மாற்றி அமைக்கப்படும். குறைந்து கொண்டே வரும் என நினைக்கிறேன்

4. எல் ஐ சியின் ஜீவன் அக்‌ஷய் : 
இது ஒரு வகை பென்சன் திட்டம். உலகிலுள்ள பெரும்பான்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் Annuity என்ற பென்சன் திட்டத்தை வழங்குகின்றன. நான்றிந்த வரையில் ஜீவன் அக்‌ஷய் அளவுக்கு பென்சன் வழங்கும் Annuity வேறு எதுவுமில்லை

முதலீட்டுத் தொகை : எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

இத்திட்டம் முதியோருக்கு மட்டுமல்ல, யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். வாழ் நாள் முழுதும் மாறாத (குறையாத) பென்சன் தரும் திட்டம் என்பதால் இதை இங்கு சேர்த்தேன்

முதலீடுத்தொகை, வயது, எல் ஐ சி தரும் 7 ஆப்சன்கள் இவற்றிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும். 60 வயதுக்கு மேற்பட்டோர் எடுக்கும் ஆப்சனுக்கு ஏற்ப 7-8% எதிர்பார்க்கலாம்

1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். 
இவையே அந்த 7 ஆப்சன்கள் 
சாதகம் : இன்று ரிட்டையர் ஆகும் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகள் உயிருடன் இருப்பார் என எதிர்பார்க்கலாம். இன்னும் 5-10 ஆண்டுகள் கழித்து இன்று இருக்கும் வட்டி விகிதம் இருக்காது. இந்த ஒரு திட்டம் மட்டும் தான் வாழ் நாள் முழுதும் குறிப்பிட்ட வட்டி கேரண்டீட் தருகிறது. 
முதலீட்டுத் தொகைக்கு சீலிங் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் 
பாதகம் : உங்க வாழ் நாளில் பணம் திரும்ப வராது, வட்டி மட்டுமே வரும். மூன்றாவது & ஏழாவது ஆப்சனில் மட்டும் உங்க வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்

5. மத்திய அரசின் 7.75% கடன் பத்திரம் 
பேரே இதன் முழு விவரங்களையும் சொல்லிவிடும்
இது ஒரு கடன் பத்திரம், மத்திய அரசால் வழங்கப்படுவது

இதுவும் சீனியர் சிட்டிசன்கள் மட்டுமன்றி எல்லாருக்குமான முதலீடு. வங்கிகளை விட சிறிது அதிக வட்டி மற்றும் மத்திய அரசு கடன் பத்திரம் என்பதால் அதிக பாதுகாப்பு – இவ்விரு காரணங்களால் இதையும் இங்கு பட்டியலிட்டேன்.

வட்டி : ஆண்டுக்கு 7.75% 
எவ்வளவு முதலீடு செய்யலாம் : உச்சவரம்பு இல்லை 
முதலீட்டு காலம் : முதலீடு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைக்கும் – இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது

60 முதல் 70 வயதானவர்கள் 6 ஆண்டுகளுக்குப்பிறகும் 
70 முதல் 80 வயதானவர்கள் 5 ஆண்டுகளுக்குப்பிறகும் 
80 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆண்டுகளுக்குப்பிறகும் பணம் திரும்பப் பெறலாம்.

சாதகம் : வங்கிகளை விட சிறிது அதிக வட்டி 
பாதகங்கள் : குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் திரும்பப் பெற முடியாது 
இக்கடன் பத்திரங்கள் டீமேட் அக்கவுண்ட் மூலமே வழங்கப்படுகின்றன. டீமேட் அக்கவுண்ட் இல்லாதவர்கள் இதற்காக மட்டும் டீமேட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.

இவை தவிர, போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் ஸ்கீம்னு ஒண்ணு இருக்கு. அதில் ஒரு வருஷத்துக்கு 6.6%, ரெண்டு வருசத்துக்கு 6.7% மூணு வருஷத்துக்கு 6.9%, அஞ்சு வருசத்துக்கு 7.4% வட்டி வழங்கப் படுகிறது. இது வங்கி வட்டியை ஒத்திருப்பத்தால் இது குறித்து பெரிசா எழுத ஒன்றுமில்லை.

மாதாந்திர வட்டி தேவைப்படாதவர்கள் பெரும்பாலும் Cumulative Deposit செய்வார்கள். அதில் வரும் மொத்த வட்டிக்கும் வருமான வரி உண்டு. கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும்னா – கையிருப்பை இதில் ஏதாவது ஒரு வைப்பு நிதியில் போட்டு அதில் வரும் வட்டியை மட்டும் ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் முடிவில் Cumulative Deposit மூலம் பெறுவதை விட அதிகம் பெற வாய்ப்பு அதிகம்.

ஜீவன் அக்‌ஷய் ஆன்னுவிட்டித் திட்டம்

Image may contain: 2 people, people smiling
திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி முதலீடு செய்யும் போது எடுக்கப்பட்ட படம்

LIC யின் Jeevan Akshay குறித்து ஏற்கெனவே இங்கும் நாணயம் விகடனிலும் எழுதியிருக்கிறேன். முன்னாள் குடியரசுத் தலைவர் ப்ரணாப் முகர்ஜியும் சமீபத்தில் இதில் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீடு செய்ததால் இது நல்ல திட்டம் என்பதில்லை, இது நல்ல திட்டம் என்பதால் அவரும் முதலீடு செய்துள்ளார்

பழைய பதிவு – ஏற்கெனவே படிச்சவங்க ஸ்கிப் பண்ணிடுங்க

அறிவோம் ஆன்னுவிட்டி(Annuity )

வங்கிகளும், பிற நிறுவங்களும் நிரந்தர வைப்பு நிதிக்குத் தரும் வட்டியை நம்பியிருப்போருக்கு இது கடின காலம்.

கடந்த இருபது வருடங்களில் வைப்பு நிதியின் (ஃபிக்ஸ்ட் டெபாசிட்) வட்டி பாதியாக குறைந்துள்ளது. 1997ம் ஆண்டு தமிழகத்தில் ரிட்டையர் ஆன தம்பதியர் மாதம் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய்க்குள் வாழ முடிந்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லைஃப் ஸ்டைலுக்கு 25,000ரூ தேவைப்படும். அதாவது இருபது ஆண்டுகளில் விலைவாசி 4 – 5 மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் 1997ல் வங்கிகள் 12 -13 சதவீதமும் நிறுவனங்கள் 16 சதவீதமும் வழங்கி வந்தன. இன்றோ வங்கிகள் 6.5% வழங்குகின்றன. சுந்தரம் ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்கள் 7.25% வழங்குகின்றன ஆனால் அதிகபட்சமாக 3 அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டுமே டெபாசிட் பெறுகின்றன. இந்தியாவும் சந்தைப் பொருளாதார நாடாக மாறி வரும் நிலையில் வாங்கும் & வழங்கும் வட்டி இரண்டுமே இனி இறங்கு முகமாத்தான் இருக்க முடியும். கடன் வாங்கி வீடோ வண்டியோ வாங்க எத்தனிக்கும் இளம் வயதினருக்கு இது சாதகமாக இருந்தாலும் ரிட்டையர் ஆன அவங்க பெற்றோருக்கு இது பாதகமாகவே இருக்கும். 
அமெரிக்காவில் இன்று 10 வருட டெபாசிட்டுக்கு அதிக பட்சமாக 2.75% வட்டி, 5 வருசத்துக்கு 2% வட்டி. இந்தளவுக்கு குறையாவிட்டாலும் இந்தியாவில் வைப்பு நிதி வட்டி 5% அளவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. இப்படி குறைந்து கொண்டே வரும் நிலையில் வட்டியை நம்பியிருப்போர் என்ன செய்வது? இவர்களில் பலர் ஈக்விட்டியிலும் பாண்டிலும் பணத்தை போட விரும்புவதில்லை. இவர்களுக்கான தீர்வே ஆன்னுவிட்டி (Annuity) அல்லது ஆண்டுத் தொகை திட்டங்கள். 
முதலீட்டாளருக்கு வாழ்நாள் முழுதும் ஆண்டுத் தொகை வழங்கும் திட்டமே ஆன்னுவிட்டி. இவற்றை காப்பீடு நிறுவங்கள் மட்டுமே வழங்க முடியும். வங்கிகளில் பெற முடியாது. 
ஆன்னுவிட்டியில் ஃபிக்ஸ்ட் ஆன்னுவிட்டி, மாறக்கூடிய ஆன்னுவிட்டி (variable annuity), உடனடி ஆன்னுவிட்டி, பிற்கால ஆன்னுவிட்டி (deferred annuity), குறிப்பிட்ட சதவீதத்தில் அதிகரிக்கும் ஆன்னுவிட்டி என்று பல வகை உண்டு.

ஃபிக்ஸ்ட் ஆன்னுவிட்டியில் போடும் பணத்துக்கு முதலீட்டாளர் உயிருடனிருக்கும் வரையில் ஆண்டுத்தொகை வழங்கப்படும். முதலீடு செய்த அன்று நிர்ணயிக்கப்பட்ட வட்டி வாழ்நாள் முழுதும் மாறாது. அவருக்குப் பிறகு கணவனுக்கோ மனைவிக்கோ கிடைக்கும்படியும் செய்யலாம். முதலீட்டாளர் இறந்த பின் அவருடைய வாரிசுக்கு முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்கும் திட்டத்துக்கு கொஞ்சம் கம்மி வட்டியும், முதலீட்டை யாருக்கும் திருப்பித் தரத் தேவையில்லாத திட்டத்துக்கு அதிக வட்டியும் கிடைக்கும். 
நெறய பேருக்கு வாரிசுகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப்பின் பத்து, இருபது லட்ச ரூபாய் ஒரு பொருட்டாய் இருக்காது. ஆனால் உயிருடன் இருக்கும் வரையில் முதலீட்டாளருக்கு மாதம் அதிகம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பிள்ளைகள் கையை எதிர்நோக்கி இருக்காமல் இருக்க உதவும். இந்த மாதிரி கேட்டகரி முதலீட்டாளர்கள் திரும்ப பணம் வராத ஆன்னுவிட்டியை தெரிவு செய்யலாம். 
உடனடி ஆன்னுவிட்டியில், பணம் போட்ட அடுத்த வருடத்திலிருந்து ஆண்டுத் தொகை கிடைக்கும். 
பிற்கால ஆன்னுவிட்டியில் மாதாமாதம் அல்லது ஆண்டுக்கொரு முறை பணம் போட்டு வந்தால், ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு ஆண்டுத் தொகை கிடைக்கும்.
உயரும் ஆன்னுவிட்டியில் ஆண்டுத்தொகை குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்து கொண்டே வரும். 
ஆன்னுவிட்டியின் சாதகங்கள்
வங்கிகள் தரும் வட்டி குறைந்துவிடுமோ என்ற கவலையில்லை.
ஆண்டுக்கு 3% அதிகமாகிக்கொண்டே போகும் திட்டத்தில் பணம் போட்டால் விலைவாசி ஏற்றத்தையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம்

ஆன்னுவிட்டியின் பாதகம்
ஆன்னுவிட்டியில் போட்ட பணம் முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை திரும்பக் கிடைக்காது. வைப்பு நிதியைப் போல லிக்விடிட்டி கிடையாது.

இந்திய அரசு நிறுவனமான எல் ஐ சி வழங்கும் ஜீவன் அக்‌ஷய் ஓய்வூதியத் திட்டம் இப்போது பிரபலமாக உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கிகள் தரும் வட்டி விகிதம் குறைந்ததால் நிறைய பேர் இத்திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். மகாராஷ்ட்ர மாநிலம் தானேவில் ஒருவர் 100 கோடி ரூபாய் திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார். 
ஜீவன் அக்‌ஷய் ஒரு உடனடி பென்சன் திட்டம். இந்த ஆண்டு பணம் போட்டால் அடுத்த ஆண்டிலிருந்து பணம் கிடைக்கும். இதில் 30 வயது முதல் 85 வயது வரை உள்ளோர் முதலீடு செய்யலாம். முதலீட்டாளரின் வயதுக்கும் அவர் தெரிவு செய்யும் திட்டத்துக்கும் ஏற்ப ஆண்டுத் தொகை நிர்ணயிக்கப் படுகிறது.

ஜீவன் அக்‌ஷய் ஏழு ஆப்சன்களை வழங்குறது
1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். 
முதலீடு செய்பவரின் தேவைக்கேற்ப அவர் இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யலாம். ஒரு முறை தேர்ந்தெடுத்த பிறகு மாற்ற இயலாது. 
உதாரணத்துக்கு இன்னைக்கு ரிட்டையர் ஆகும் ஒருவர் தன் கையில் இருக்கும் 20 லட்ச ரூபாயில் பாதியை ஜீவன் அக்‌ஷயில் போடறார்னு வச்சிக்குவோம். 
அறுவது வயது மற்றும் ஆப்சன் ஆறுக்கு 8 சதவீதமும் ஆப்சன் ஏழுக்கு 7 சதவீதமும் கிடைக்கும். இப்போதைக்கு இது வங்கி வட்டியை விட கொஞ்சமே அதிகமா இருந்தாலும், இன்னும் பத்தாண்டுகள் கழித்து வங்கி வட்டி கீழே போனப்புறம் அது மிக அதிகமாகத் தெரியும்.

பங்குச்சந்தை, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாதவர்களுக்கு ஓய்வூதியத்துக்கு இருக்கும் தெரிவுகளில் இது மிக முக்கியமானது

எல் ஐ சியின் கேன்சர் கவர் பாலிசி.

கேன்சர் எனும் கொடிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களால் மட்டும் கேன்சர் வந்து கொண்டிருந்தது மாறி சுற்றுச்சூழல், பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு போன்ற பல காரணங்களால் கேன்சரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. கேன்சர் வந்தவர்களின் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போவதை அன்றாடம் காண்கிறோம். இந்நோய் வந்தவர்களுக்கு பொதுவாக அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியேஷன் தெரபி, லேசர் சிகிச்சை மற்றும் அறிதாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.

கேன்சரிலிருந்து முழுவதுமாக மீண்டு வருபவர்கள் சொற்பமே. மேற்கூரிய சிசிக்கைகள் மூலம் கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் சில பல ஆண்டுகள் நீட்டிக்கப்படுகின்றன. கேன்சர் சிகிச்சைகள் அதிக பொருள் செலவு பிடிக்கக் கூடியவை.

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் மாரல் சப்போர்ட்டும் பொருள் உதவியும் தேவைப்படும். மாரல் சப்போர்ட்டுக்கு நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சேர்த்தாலும் கேன்சர் சிகிச்சைக்குத் தேவைப்படும் அளவுக்கு பணம் சேர்ப்பது கடினம். இப்பிரச்சனையைத் தீர்க்கும் அருமருந்தாக வந்திருப்பது எல் ஐ சியின் கேன்சர் கவர் பாலிசி. இத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது ஒரு Non-linked, Regular premium payment Health Insurance Plan. இதில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் சேரலாம். குறைந்தபட்சமாக 10 லட்சரூபாயும் அதிகபட்சமாக 50 லட்சரூபாயும் காப்பீட்டின் அளவு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
காப்பீட்டின் கால அளவு குறைந்த பட்சம் 10 வருடம் அதிக பட்சம் 30 வருடம் அதே நேரத்தில் காப்பீடு முடியும் காலம் 50 வயது முதல் 75 வயதுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் , அதாவது 20 வயதில் நீங்கள் இந்த பாலிசியை எடுத்தால் 30 ஆண்டு காலம் எடுக்க வேண்டும். ஒரு வேளை நீங்க இந்த பாலிசியை 50 வயதில் எடுத்தால் காப்பீடடு 25 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப் படும்

இந்த பாலிசியிம் ப்ரீமியம் ஆண்டுக்கொரு முறையோ அல்லது அரையாண்டுக்கொரு முறையோ செலுத்தப்பட வேண்டும். ஆயுள் காப்பிட்டுத் திட்டங்களைப் போல் காலாண்டுக்கொரு முறையோ மாதாமாதமோ செலுத்தும் வசதி தற்போது இல்லை. இந்தத் திட்டம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. எல் ஐ சியின் பிற திட்டங்களைப் போல் இதில் என் ஆர் ஐக்கள் பங்கு பெற முடியாது.

எல் ஐ சி கேன்சர் கவரின் காப்பீட்டுத் தொகை (Sum Insured) பாலிசி காலம் முழுவது மாறாமல் இருக்குமாறும், பாலிசி ஆரம்பித்து ஒராண்டுக்குப் பிறது ஆண்டுக்கு 10% அதிகரிக்கவும் என இரண்டு ஆப்சன்களை எல் ஐ சி நிறுவனம் வழங்குகிறது. தற்போதைய வருமானத்தில் 40 லட்சரூபாய் காப்பீட்டுக்கு ப்ரீமியம் கட்ட முடியாது, ஆனால் வரும் ஆண்டுகளில் வருமானம் கூடும் அதிக ப்ரீமியம் செலுத்த முடியும் என நினைப்போர் இரண்டாவது ஆப்சனை தெரிவு செய்யலாம். அவர்கள் முதலில் 25 லட்ச ரூபாய்க்கு எடுக்கும் பாலிசி ஆண்டுக்கு 10% உயர்ந்து 5 ஆண்டுகளில் 40 லட்ச ரூபாய் அளவை எட்டும். 


பாலிசியின் பயன்கள் 
1. பயனருக்கு Early Stage Cancer இருப்பது உறுதி செய்யப் பட்டால், காப்பீட்டுத் தொகையில் 25% பணமாக வழங்கப் படும், மேலும் மூன்றாண்டுகளுக்கு ப்ரீமியம் கட்டுவதிலிருந்து விலக்கும் வழங்கப் படும்

2. பயனருக்கு Major Stage Cancer இருப்பது உறுதி செய்யப்பட்டால், முழு காப்பீட்டுத் தொகையும் உடனே வழங்கப்படும். ஒரு வேளை பயனருக்கு ஆரம்ப நிலை கேன்சர் கண்டறியப்பட்டு 25% தொகை வழங்கப்பட்டபின் கேன்சர் முற்றி மேஜர் ஸ்டேஜுக்குப் போனால் அப்போது 75% வழங்கப்படும். பாலிசியின் இரண்டாவது பயனாக பத்தாண்டுகளுக்கு காப்பீட்டு அளவின் 1% மாதாமாதம் வழங்கப்படும். 50 லட்சரூபாய் பாலிசி எடுத்த ஒருவருக்கு மேஜர் ஸ்டேஜ் கேன்சர் உறுதியானால், அவருக்கு உடனடியாக 50 லட்சரூபாயும் மேலும் அப்போதிலிருந்து பத்தாண்டுகளுக்கு மாதாமாதம் 50,000ரூபாய் பணமும் கிடைக்கும். இடையில் பயனர் இறக்க நேரிட்டாலும் அவருடைய வாரிசுக்கு பத்தாண்டு காலம் முழுவதும் இத்தொகை வழங்கப்படும். 
பாலிசியின் மூன்றாவது பயனாக மேஜர் ஸ்டேஜ் கேன்சர் உறுதியான பிறகு ப்ரீமியம் தொகை செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது.

பீரிமியம் தொகை 
30 வயது ஆண், 50 லட்ச ரூபாய் காப்பீடு, 30 ஆண்டுகாலம் என்ற உதாரணத்துக்கு ப்ரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ 7254 மற்றும் ரூ 1306 வரி ஆக மொத்தம் ரூ 8560. உங்களுக்கான ப்ரீமியம் தொகையை எல் ஐ சியின் இணையதளமான www.licindia.inஇங்கு காணலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிய பிற விவரங்கள் 
இந்த பாலிசியை எல் ஐ சியின் முகவர்களிடமும் பெறலாம் அல்லது எல் ஐ சியின் இணையதளத்தில் நேரடியாகவும் வாங்கலாம். இணைய தளம் மூலம் வாங்கும் போது ப்ரீமியம் தொகையில் 7% தள்ளுபடி பெறலாம்

கவரேஜ் பாலிசி வாங்கிய தினத்திலிருந்து 180 நாட்களுக்குப் பிறகே தொடங்கும்.

பொதுவாக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் திட்டகாலம் முழுவதும் ப்ரீமியம் தொகை மாறாது. கேன்சர் கவர் திட்டத்தில் ப்ரீமியம் தொகை ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே நிச்சயம். அதற்கப்புறம் நிர்ணயிக்கப்படும் ப்ரீமியத் தொகை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாறாமல் இருக்கும்.

இந்த பாலிசியையும் பிற மெடிகல் இன்சூரன்ஸ் பாலிசிக்களையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த பாலிசி எடுத்தாச்சு வேற மெடிகல் இன்சூரன்ஸ் தேவையில்லை என எண்ண வேண்டாம். இது கேன்சர் நோய்க்கு மட்டுமான ப்ரத்யேகமான பாலிசி

இந்த பாலிசியின் குறைகள் என்று பார்த்தால் பாலிசியின் அம்சங்களைத்தான் சொல்ல வேண்டும். அதிகபட்ச காப்பீட்டு அளவு 50 லட்ச ரூபாய்தான், வருங்காலத்தில் எல் ஐ சி இதை அதிகப்படுத்த வேண்டும். அதே போல அதிகபட்சமாக 30 ஆண்டுகாலம் மட்டுமே பாலிசி எடுக்க முடியும். ஆயுள் காப்பீடு சம்பாதிக்கும் காலம் வரை மட்டும் போதும் ஆனால் இது போன்ற பாலிசிகள் உயிருடன் இருக்கும் வரை தேவை. இந்த இரண்டு மாற்றங்களையும் எல் ஐ சி எதிர்காலத்தில் கொண்டு வந்தால் இந்த பாலிசி முழுமையடையும்.

கேன்சர் எனும் கொடிய நோய் யாருக்கும் வர வேண்டாம். அப்படி வந்துவிட்டால் குறைந்தபட்சம் மருத்துவச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்காமல் இருக்க இந்த பாலிசி உதவும். ”கடவுளை நம்பு ஆனால் கதவை பூட்டு” என்ற சொலவடைக்கு ஏற்ப கேன்சர் உருவாக்கும் பொருட்களான புகையிலை, மது போன்றவற்றை தவிர்ப்போம் அதையும் மீறி கேன்சர் வந்தால் சிகிச்சை உதவிக்கு காப்பீட்டை நாடுவோம்.

ஏன் வேண்டாம் எண்டோமெண்ட்?

No photo description available.

இதைத்தான் நான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். 
எண்டோமெண்ட் மற்றும் மணி பேக் பாலிசிகள் பொதுவா 5% ரிட்டர்ன் மட்டுமே எதிர்பார்க்கலாம், மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் கூட வேண்டாம், வங்கி ரெக்கரிங் டெபாசிட் 7-8 % பி பி எஃப் 8%க்கு மேல தருகின்றன, அந்த அளவுக்கு கூட இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் தருவதில்லை. இதுக்கப்புறம் யாராவது வந்து உங்க கிட்ட இந்த பாலிசியில் பணம் போட்டா லம்ப்பா கிடைக்கும்னு சொன்னா என்ன பண்ணனும்னு நீங்களே முடிவு பண்ணுங்க..

எல் ஐ சியின் பொருளாதார வலிமை

திவாலாக வேண்டிய நிலையில் இருக்கும் ஐடிபிஐ வங்கியை மத்திய அரசு எல் ஐ சி தலையில் கட்டிவிட்டது, எல் ஐ சி வாடிக்கையாளர்களின் முதலீடு இனி அம்போன்னு நெறய கூச்சல் கேக்குது.

ஃப்ரீ மார்க்கெட் சித்தாந்தத்தை நம்பும் அமெரிக்கா 2008 இல் வங்கிகளையும் இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் மீட்டெடுக்க 700 பில்லியன் டாலர்களைச் செலவிட்டது. இப்ப ஐடிபிஐ வங்கியை யாரும் வாங்க வராத நிலையில், அரசுக்கு மூணு வழிகள்தான் இருக்கு – அரசு பணத்தைப் போட்டு மீட்டெடுப்பது, திவாலாக விடுவது – இவை இரண்டையும் செய்யாமல் அரசு வழக்கம் போல் தன் செல்ல Piggy Bank உண்டியலான எல் ஐ சியின் சேமிப்பிலேயே கை வைத்திருக்கிறது.

எல் ஐ சியை அரசு ஏடிஎம் போல கருதுகிறதுன்னு பலரும் சொல்றாங்க, ஏடிஎம்ல கூட பணம் எடுக்க நிபந்தனைகள் உண்டு, நம் சொந்த உண்டியலை உடைச்சி எடுக்கத்தான் ரூல்ஸ் எதுவுமே கிடையாது, காலாகாலமா அரசுகள் எல் ஐ சியை உண்டியல் போலத்தான் பாவித்து வந்துள்ளன – தேவைப்படும் போதெல்லாம் உண்டியலில் கைவிட்டு எடுப்பதே வழக்கம்.

இது சரியா தவறா என்கிற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும், இப்ப மட்டும் ஏன் இவ்வளவு கூச்சல் என்றுதான் புரியவில்லை. ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஆகும் செலவு வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாய்கள்தான். இது ரிஸ்க், நஷ்டமாகிடும், எல் ஐ சி தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாம போயிடும் என்றெல்லாம் கூவும் வாய்கள் – ஆண்டாண்டு காலமா எல் ஐ சி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் போதெல்லாம் என்ன செய்வதில் பிசியாய் இருந்தன என்று தெரியவில்லை. எல் ஐ சியின் ஆண்டறிக்கையின்படி அது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 7 லட்சத்து 56 ஆயிரத்து 274 கோடிகள் – இதில் வெறும் 2% தான் ஐடிபிஐயில் எல் ஐ சி முதலீடு செய்ய இருக்கும் தொகை.

எல் ஐ சி பெரும் முதலீடு செய்திருக்கும் சில பங்குகளின் சந்தை மதிப்பீடு

ஐ டி சி 56 ஆயிரம் கோடி
ரிலையன்ஸ் 35 ஆயிரம் கோடி 
எல் & டி 25 ஆயிரம் கோடி 
ஓ என் ஜி சி 21 ஆயிரம் கோடி 
கோல் இந்தியா 14 ஆயிரம் கோடி
பி எச் இ எல் , கெயில் தலா 5 ஆயிரம் கோடி
என்று இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு..

இப்ப எப்படின்னு தெரியல, சென்ற ஆண்டு வரை ஐ டி பி ஐ வங்கியில் கூட 2000 கோடி முதலீடு செய்திருந்தது எல் ஐ சி. ஒரு வேளை ஐ டி பி ஐ வங்கி திவாலாகி இருந்தால், எல் ஐ சிக்கு நிஜமாவே நஷ்டம் வந்திருக்கும்.

இப்படி பல தனியார் நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்க நினைக்கும் போதெல்லாமும், அந்நிய முதலீடு கணிசமாக வெளியேறும் போது அதைச் சரிக்கட்டவும் என்று எல் ஐ சி பல முறை பங்குச் சந்தையில் பணத்தை இறக்கியிருக்கிறது. அப்போதெல்லாம் வராத ஸ்திரத்தன்மை பிரச்சனை வெறும் 13 ஆயிரம் கோடிக்கு ஏன் வருது??

எல் ஐ சிக்கு வங்கியை நடத்தத் தெரியாதாம் – ஆமா மற்ற வங்கிகளின் மேனேஜ்மெண்ட் எல்லாம் நடத்தற அழகைத்தான் தினமும் பாக்கறோமே, அவற்றை விட எல் ஐ சி மோசமாக வங்கியை நடத்திவிடாது… பாலிசி வித்தாவது லாபம் பாத்துடுவாங்க ..

அப்புறம் முக்கியமா 13,000 கோடி எல்லாம் எல் ஐ சியின் ஸ்திரத்தன்மையை ஆட்டிப் பார்த்துவிடாது.. ஓவரா கவலைப்பட்டு, எல்லாரும் ஒரே நேரத்தில் போய் பாலிசிகளை கேன்சல் பண்றேன்னு நிக்காதீங்க அதுதான் எல் ஐ சியை படுகுழியில் தள்ளும்.

இதுல ஆகச் சிறந்த காமடி என்னன்னா – எல் ஐ சி முகவர்கள் ஷேர் மார்க்கெட் எல்லாம் ரிஸ்க் எல் ஐ சியில் செய்யப்படும் முதலீடு சேஃப் என்று கூறுவதும் மக்கள் அதை நம்புவதும்தான். அவங்க பணத்தை வாங்கி எல் ஐ சி கோடிக்கணக்கில் லாபம் காண்பது அதே ஷேர் மார்க்கெட்டில்தான். அதுவும் இது மாதிரி தான தர்மம் எல்லாம் செஞ்சப்புறம்தான்.

என் பர்சனல் கருத்து – அரசு, நாட்டிலுள்ள நிறுவனங்களை மீட்டெடுக்கும் செயலை அரிதினும் அரிதாகவே செய்ய வேண்டும்.. இல்லேன்னா அமெரிக்க வங்கிகள் போல தெனாவட்டா “we are too big to fail” லைன் கட்டி நிப்பாங்க எல்லாரும். அப்படியே செய்வதானாலும் சொந்தக் காசில் செய்யவேண்டும், வேறு நிறுவனம் ஒன்றின் காசில் செய்யக்கூடாது – அதுவும் தன் நிறுவனமாகவே இருந்தாலும். அதுக்காக என்னவோ இதுநாள் வரை அரசுகள் எல் ஐ சி பர்ஸ்ல கை வைக்காத மாதிரியும் இது எல் ஐ சியை படுகுழியில் தள்ளிவிடும் என்கிற மாதிரியும் சொல்வது சரியல்ல

Jeevan Lakshaya from LIC

நண்பர் ஒருத்தருக்கு இப்படி ஒரு இமெயிலை எல் ஐ சியின் ஏஜெண்ட் ஒருத்தர் அனுப்பியிருக்கார். படிச்சதும் பகீர்னு இருந்தது, இப்படியெல்லாமா பொய் சொல்லி, பித்தலாட்டம் பண்ணி பாலிசி விக்கணும் என்றிருந்தது.

மொதல்ல இமெயிலைப் படிங்க

From: LIC <lic_csr@customerservice.org.in>
Date: 26-Jul-2018 5:48 PM
Subject: LIC NEW JEEVAN LAKSHYA FAMILY PROTECTION PLAN
To: 
HI,

Warm Greetings from LIC Of India

We are choosing few golden customers like you. Its regarding high returns with tax savings, were entire family will be benefited.

The plan name is JEEVAN LAKSHAYA which is purely a traditional plan which Is not linked to any share market.

For example ;If you are investing 1,20,000 P/A {Mode of premium : QUARTERLY, HALF YEARLY , YEARLY } So you will be choosing a term of 18 years but you will be Paying only for 15 years, So your investment will be18,00,000, towards the policy, And completion of the term your total returns will be 44,31,960 with complete Tax free under section 80(c) and 10(10) D .

Apart from your investment and returns you will be having 4 benefits:

1. Your life will be insured for 18lakhs of any death.

2. In case any thing happens to the policy holder in between the term, immediately 18 lakhs will be given to their beloved nominee, and every year nominee will get the amount of 1, 80,000 as a pension till the maturity term, and also all the future premiums will be waved and paid by LIC and finally the returns will be given their nominee.

3. Completion of the term you can also convert the returns in to pension plan were you will be receiving the pension amount of 34,163* every month throughout your life time and after you the nominee also can continue pension , In case of absence of the both the returns will be equally divided among the children.

4. By keeping this bond as supporting documents you can also avail for loans up to 80% of the estimated value of the property.

*Sir The plan name itself its JEEVAN LAKSHYA (Lakshya means Goal)whatever the customer goal either he is alive/absence the goal/Lakshya will be reached through this JEEVAN LAKSHYA plan.

*But where as in this plan in case of customer absence immediately 18 lacks of SUM ASSURED will be given and 10% of sum assured that is 1,80,000/- will be given from customer absence year to till maturity.And all the future premiums from customer absence year to till maturity will be waved and paid by the LIC. Finally again the nominee will get maturity benefit on 18th year last day.

Sir I mean to say this is very good savings cum protection plan. Like these golden plans once in 5 years lic will lunch. Earlier we have JEEVAN SREE, JEEVAN KOMAL, JEEVAN SHNEHA which has given very good benefits and got Golden Peacock awards. Again now this Jeevan Lakshya plan is one such plan with very good benefits. So we are giving awareness and helping the people to reach their future Lakhya with our JEEVAN LAKSHYA plan.

Sum Insured :Rs 18,00,000/-

Total investment :Rs 18,00,000/-

Total Benefits :Rs 44,31,690/-

*Pension :Rs 34,163/- P.M till 100 years[Pension is optional]

If your planning to go with this plan you can revert me back with your appointment details .

The documents that has to be keep ready.

1.) 2 passport size photos.

2.) Age Proof

3.) Address Proof

4.) I.D Proof

5.) Educational Certificates(10 + Higher education certificates)

6.) 3 month Salary pay slip if your working otherwise 3 years IT Returns.

7.) cheque leaf on favour of LIC of INDIA

With Regards,

Anjana

LIC of India.

இப்ப இதில் என்னென்ன தவறுகள்னு பாப்போம்

  1. ஜீவன் லக்‌ஷயா 2015 இல் அறிமுகம் செய்யப்பட்ட எல்லாருக்குமான பாலிசி, இது ஒன்றும் குறிப்பிட்டோருக்கு மட்டுமான ஸ்பெசல் பாலிசி அல்ல
  2. இமெயில் கிடைக்கப்பெற்ற நண்பருக்கு வயது 45. அவருக்கு 18 லட்ச ரூபாய், 15+3 ஆண்டுகள் ஜீவன் லக்‌ஷயா பாலிசிக்கு ப்ரீமியம் ஆண்டுக்கு 1,29,000 அல்லது மாதம் 10,980 – இதில் சொல்வது போல 1.2 லட்சம் அல்ல
  3. இத்திட்டத்தில் முதலீடு செய்தால், முதிர்வடையும் போது காப்பீட்டுத் தொகை (சம் அஸ்யூர்ட்), vested Simple Reversionary bonuses and Final Additional bonus, if any வழங்கப்படும் என்றே எல் ஐ சி சொல்கிறது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியாது, இன்னும் சொல்லப் போனால் இந்த ஏஜெண்ட் இப்படி உறுதி தருவது காப்பீட்டு விதிகளுக்கு முரணானது.
  4. சிம்பிள் ரிவிசினரி போனஸ் என்பது எல் ஐ சி  ஒவ்வொரு ஆண்டும் தன் லாபத்தில் ஒரு பங்கை பாலிசிதாரர்களுக்கு பிரித்து வழங்குவது. ஃபைனல் அடிசன் போனஸ் ஒரே ஒரு முறை வழங்கப்படுவது.  இன்று வழங்கும் போனஸ் என்றுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. சென்ற ஆண்டின் போனஸே அடுத்த 18 ஆண்டுகளும் நீடிக்கும் என்று நம்பினாலும், இத்திட்டம் முதிர்வடையும் போது எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

காப்பீட்டுத் தொகை ; 18 லட்சம்

சிம்பிள் போனஸ் – ஆயிரத்துக்கு 45 ரூபாய் * 18 ஆண்டுகள்= 14,58,000

ஃபைனல் போனஸ் 18 ஆண்டு பாலிசிக்கு ஆயிரத்துக்கு 30 ரூபாய் = 63,000 ரூ

ஆக மொத்தம் ரூ 33,21,000 எதிர்பார்க்கலாம்

  • 44 லட்சமெல்லாம் கிடைக்க வாய்ப்பேயில்லை, அப்படியே இருந்தாலும் அது உத்தரவாதத் தொகை கிடையாது, இப்படி 44 லட்சம் கிடைக்கும் என்று அவர்களுடைய ஏஜெண்ட்கள் எழுதிக் கொடுப்பதை எல் ஐ சி எப்படி அனுமதிக்கிறது என்று புரியவேயில்லை
  • இந்த பாயிண்ட் தான் இந்த ஏஜெண்ட்டுக்கு பாலிசி குறித்து எதுவுமே தெரியவில்லை என்று நிரூபிக்கிறது – இரண்டாவது பாயிண்ட்டில் சொல்லியபடி பாலிசிதாரர் இறந்தால் உடனே நாமினிக்கு 18 லட்சம் கிடைக்காது. இறக்கும் ஆண்டிலிருந்து பாலிசி நிறைவுரும் வரை ஆண்டு தோறும் 1.8 லட்சம் கிடைக்கும், பாலிசி முதிர்வடையும் போதுதான் அதாவது 18வது ஆண்டின் முடிவில்தான் 18 லட்சம் கிடைக்கும். 
  • ஜீவன் லக்‌ஷயாவில் பென்சன் பெறும் திட்டமே கிடையாது. இந்த ஏஜெண்ட்டோ திட்டம் முதிர்வடையும் போது பணத்தை பென்சனாக பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதாகச் சொல்கிறார் – இது முற்றிலும் தவறான தகவல், இவ்வசதி ஜீவன் லக்‌ஷயாவில் இல்லவே இல்லை.
  • ஏஜெண்ட் ஒரு நல்ல நிதி ஆலோசகராகச் செயல் பட்டு ரெண்டு திட்டங்களை இணைத்து ஒன்றாக வழங்குகிறார் என்று வைத்தாலும் – வெறும் ஜீவன் லக்‌ஷயாவின் பெயரை மட்டும் சொல்லி பென்சன் திட்டத்தின் பேரைச் சொல்லாமல் விடுவது தவறு
  • ஏஜெண்ட் சொல்லியிருக்கும் முதிர்வுத் தொகையின் 9.2% ஆண்டு பென்சனாக பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். இன்றே அந்த அளவுக்கு வட்டி தரும் பென்சன் திட்டம் ஏதுமில்லை, என்னும் 18 ஆண்டுகள் கழித்து 4-5% வட்டி தரும் பென்சன் திட்டம் இருந்தாலே பெரிய விசயம், 9% எல்லாம் வாய்ப்பேயில்லை.

இது போன்று உண்மைக்குப் புறம்பானவற்றைச் சொல்லி ஏமாற்றும் ஏஜெண்ட்டுகளை எல் ஐ சி என்ன செய்யப் போகிறது.

இப்போ ஜீவன் லக்‌ஷயா எப்படின்னு பாக்கலாம்

  1. காப்பீடு : மாசம் 10,000 ரூ ப்ரீமியம் கட்டுறதுக்கு பயனரின் சம்பளம் 1 லட்சமாவது இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 12 லட்சம் உள்ளவரின் குடும்பத்துகு அவர் திடீரென இறந்தால் எல் ஐ சி தருவதோ 1.8 லட்சம் (ஆண்டுக்கு)  – எனவே இது காப்பீட்டுக்கு கதைக்காகாது
  2. முதலீடு : ஏற்கெனவே சொன்ன கால்குலேசன் படி 15 ஆண்டுகளில் 16.5 லட்சம் செலுத்தி 18 ஆண்டுகள் முடிவில் கிடைக்கக் கூடியது 33 லட்சத்த்து சொச்சம், அதாவது 5% கூட்டு வட்டி – மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் கூட வேண்டாம் வங்கி ரெக்க்ரிங் டெபாசிட்ல போட்டா கூட இதை விட பெட்டர் ரிட்டர்ன் கிடைக்கும் என்று நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரியவேண்டும்??

இனிமே ஜீவன் லக்‌ஷயா எனும் உலகமகா திட்டம் என்று “நைஜீரிய” இமெயில் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் தானே?

எல் ஐ சியின் போனஸ் குறித்து அறிய உதவிய தரவுகள் :

Final Addition Bonus   http://sumassured.in/final-additional-bonus-fab-for-lics-policies-for-year-2015-16/

Annual Bonus https://www.basunivesh.com/2017/08/24/lic-bonus-rates-for-2017-18/

http://insurancefunda.in/lic-bonus-rates-2017-2018/

வாட்சப் வெறியர்களின் அட்டகாசமும் மைக்ரோசாஃப்ட் எக்செலின் உபயோகமும்


வர வர வாட்சப் வெறியர்களின் அட்டகாசம் தாங்க முடியல, இன்னிக்கு வந்த ஃபார்வர்ட் மெசேஜ்

STATE BANK OF INDIA”
have introduced new scheme called “Sukanya Yojana” In this they have mentioned
Any person having daughter from age 1 to 10, They have to pay Rs.1000/- per year, after 14 years, meaning in 14 years after paying 14000 when daughter will become 21 years old a person will have Rs.600000/-. 
Forward this message to all your relatives.
Government has implemented this scheme all over in India.
_Only for Girl
Always share good information to others.

Has க்கு பதிலா have, having daughter, after 14 years, meaning in 14 years after இப்படி ஏராளமான பிழைகள். சொற்குற்றத்தையாவது மன்னிச்சிடலாம், ஆனா எதுக்கு இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பறாங்கன்னு தெரியல

சுகன்ய சம்ரித்தி யோஜனான்னு ஒரு திட்டம் இருக்கு, சுகன்யா யோஜனான்னு இல்ல

அது 2014 லேருந்து இருக்கு, புதுசு இல்ல

இது இந்திய அரசின் திட்டம், ஸ்டேட் வங்கி மட்டுமல்லாது பல வங்கிகள் மூலம் வழங்கப்படுது 
மெசேஜில் சொல்லியிருக்கா மாதிரி கேரண்ட்டி எல்லாம் கிடையாது.

சிம்பிளா சொன்னா பெண் குழந்தைகளுக்கு மட்டுமான வரிவிலக்கு உடைய ரிக்கெரிங் டெபாசிட் மாதிரிதான் இது. 8.6% வட்டியில் ஆரம்பிச்ச இது இப்ப 8.1%ல வந்து நிக்குது இன்னும் குறையும் என எதிர்பார்க்கிறேன்

இத்திட்டத்தில் பெண் குழந்தை பேரில் ஆண்டுக்கு 1000 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், அதிக பட்சமாக 15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம், கணக்கு ஆரம்பித்ததிலிருந்து 21 ஆண்டுகள் கழித்து இது முதிர்வடையும். 21 ஆண்டுகளும் அவ்வப்போது இருக்கும் வட்டிக்கு ஏற்ப உங்க முதலீடு வளரும். இதில் சொல்லியிருக்கறா மாதிரி கேரண்டி எல்லாம் கிடையாது

இன்னிக்கு இருக்கும் 8.1% அடுத்த 21 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தா, 14 ஆண்டுகள் மாசம் 83 ரூபாய் (ஆண்டுக்கு 1000 ரூபாய்) கட்டிட்டு அதுக்கப்புறம் 7 ஆண்டுகள் காத்திருந்தா 21 ஆண்டுகள் கழித்து தோராயமா 45,000 ரூபாய் கிடைக்கும். இந்த வட்டி 21 ஆண்டுகள் தொடர வாய்ப்பு ரொம்ப கம்மி.

14 ஆயிரம் போட்டுட்டு ஆறு லட்சம் வேணும்னா, அந்த காசுக்கு லாட்டரி சீட்டுதான் வாங்கணும். ஆறு லட்சம் ஆகறதுக்கு 21 வருசமும் தொடர்ந்து எவ்வளவு வட்டி வரணும் தெரியுமா? 25% கூட்டு வட்டி 21 வருசம் வந்தால்தான் வெறும் 14 ஆயிரம் முதலீடு 6 லட்சம் ஆகும்

இந்த ரெண்டு கணக்குகளையும் அஞ்சு நிமிசத்த்துக்குள்ள எக்செல் ஷீட் ஒன்றில் கண்டுபிடிச்சிடலாம். அதைச் செய்ய யாருக்கும் பொறுமையில்லை

குறைந்த பட்சம் இது போன்ற ஃபேக் நியூஸை ஃபார்வேர்ட் செய்யாமலாவது இருக்கலாம், பாவம் ஸ்டேட் பாங்க் ஊழியர்கள், நாளைலேருந்து கூட்டம் குவியப் போகுது

How much coverage do I need?

Image may contain: 1 person, text

Am Glad to see that Insurance companies and its agents have started talking about “ADEQUATE” coverage. When the bread winner of a family dies in his/ her prime earning age – How much is Adequate? If his / her income is say 6 Lakhs rupees year (After Tax) – the family would have a life style for 5 Lakhs per year (assuming that they are Financially Prudent and save about 15% of the income) – we can deduct personal expenses of the person died and some luxury expenses making the most minimum to survive at Rs 4 Lakhs for year #1, it will keep increasing at around 5% every year (effect of inflation) 10th year they will need in excess of 6 Lakhs and the same will be 10 L in year # 20.

Principal Protection is of Paramount importance in funds like these. Hence the family cannot Invest the insurance amount in risky options. It would be safe to assume that they can only withdraw 5% of the Corpus available so that they don’t run dry in less than 20 years. We can consider the mid point of the 20 year duration – year # 10 and the corresponding expenses which is 6 Lakhs. Corpus should be Rs 1.2 Crores for them to be able to withdraw that amount comfortably.

The first 9 years, the corpus would yield more than the requirement amount and the same should be invested to offset the shortfall they will face from year # 11 and or any other unforeseen expenditure in future.

So, it would be safe to assume that 20 times of one’s annual income is ADEQUATE coverage, 10 times of annual income is the most minimum one should have as coverage.

It is practically impossible to buy any meaningful (read as Adequate) coverage with Endowment or Whole Life or Money Back or ULIP policies which brings the conversation to our rather my favorite topic – yes, you guessed it right – TERM POLICY – That is the ONE AND ONLY solution to your Life Insurance needs.

Color, Brand and options of the umbrella are irrelevant but the Size is super important. Buy from any Insurance Company but Do not Fall in the trap of Endowment policies and insist on Adequate coverage which only a Term policy can provide.