வேண்டாத காப்பீட்டு பாலிசிகளை என்ன செய்வது?

தெரியாமல் எடுத்துவிட்ட எண்டோமெண்ட் பாலிசியை என்ன செய்வது?

நான் அதிகம் எதிர்கொண்ட கேள்விகளின் பட்டியலில் டாப் 3யில் இக்கேள்வி இடம்பெறும். ஜீவன் ஆனந்த் அல்லது வேறொரு எண்டோமெண்ட் பாலிசி எடுத்துவிட்டேன். இப்பத்தான் புரியது அது ஒரு தேவையற்ற பாலிசி என்று. ஆனா பாலிசி எடுத்து சில பல வருசங்கள் ஆச்சு, வெறும் அஞ்சு லட்சத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்டிக்கிட்டு வர்றேன், அதே ப்ரீமியத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக டெர்ம் பாலிசி கிடைக்குது, அதை எடுத்து குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்னா, ரெண்டு பாலிசிக்கும் பணம் கட்ட முடியாது அல்லது ரெண்டு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்துட்டேன், இனி ஜீவன் ஆனந்த தரும் 5 லட்ச ரூபாய் கவரேஜுக்கு அர்த்தமேயில்லை, அந்த பாலிசியை என்ன செய்யட்டும் என்று கேட்போர் அனேகம்.

இந்நிலையில் இருப்போருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன

1. முதல் தெரிவு பாலிசி கேன்சல் செய்வது. பாலிசி எடுத்து மூன்றாண்டுகள் கூட ஆகலேன்னா, கட்டிய பணம் முழுதும் போய்விடும், எதுவும் கிடைக்காது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் கிடைக்காது, அப்புறம் கட்டிய ப்ரீமியங்களின் 30% திரும்பக் கிடைக்கும், அதற்கப்புறம் போனஸ் ஏதாவது இருந்தால், அதுவும் கிடைக்கும். உதாரணத்த்துக்கு 20,000 ஆண்டு ப்ரீமியம் 5 ஆண்டுகள் கட்டியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சமிருக்கும் 80 ஆயிரத்தின் 30% 24,000 ரூபாயும் போனஸ் இருந்தால் அதுவும் கிடைக்கும்.

2. ரெண்டாவது தெரிவு, பாலிசியை கடைசி வரை தொடர்வது. காப்பீடாகவும் பிரயோசனமில்லை, முதலீடாவகும் பிரயோசமில்லை என்று தெரிந்தும் ஆரம்பிச்சதை விட வேண்டாம் என தொடர்வது

3. இவை இரண்டுக்கும் இடையில் அதிகம் அறியப்படாத “Paid Up” Policy Option. அதாவது பாலிசியை கேன்சலும் செய்யாமல் தொடர்ந்து இறுதி வரை ப்ரீமியமும் செலுத்தாமல் இருக்க வகை செய்யும் தெரிவு இது.

தேவைப்படாத பாலிசியை கேன்சல் செய்யாமல் “Paid Up” ஆக மாற்றுவதன் மூலம் கட்டியபணத்திற்கு இழப்பு ஏதும் ஏற்படாது, இனிமேல் கட்ட வேண்டிய ப்ரீமியம் எதையும் கட்ட வேண்டியதில்லை. பாலிசியின் முதிர்வு வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், கட்டிய தொகையும் அதற்குண்டான போனஸும் கிடைக்கும்.
ஒரு உதாரணம் – பாலிசி எடுத்த போது வயது 23, தற்போது 26, காப்பீட்டுத் தொகை 12 லட்சம், காப்பீட்டின் காலம் 21 ஆண்டுகள், காலாண்டு ப்ரீமியம் 15 ஆயிரம் ரூபாய்கள். இப்ப இவருக்கான தெரிவுகள்

அ. மூன்றாண்டுகள் முடியும் வரை காத்திருந்து பாலிசியை கேன்சல் செய்வது. அப்படிச் செய்தால், மூன்றாண்டுகளுக்கான ப்ரீமியம் 1.8 லட்சத்தில் முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சம் இருப்பதில் 30% அதாவது 36,000 ரூபாய் கையில் கிடைக்கும்

ஆ. பாலிசியை உடனே “Paid Up”ஆக மாற்றினால் இப்போது பணம் ஏதும் கிடைக்காது, காப்பீட்டு காலத்தில் மிச்சம் இருப்பது 18 ஆண்டுகள், இதன் முடிவில் (தற்போதைய போனஸ் நிலவரப்படி) தோராயமாக 2 லட்ச ரூபாய் கிடைக்கும்.

கேன்சல் செய்து இன்று கிடைக்கும் 36,000 ரூபாயை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 18 ஆண்டுகள் முடிவில் 3 லட்ச ரூபாய் இருக்க வாய்ப்பு அதிகம். நிச்சயமில்லாத நாளைய லாபத்துக்காக இன்று நிச்சயமாக நிகழக்கூடிய நஷ்டத்தை ஏற்க விருப்பமில்லாதோருக்கு இந்த “Paid Up” பாலிசி தெரிவு நல்ல முடிவாக இருக்கும்

என் கருத்தில், பாலிசியின் ஆரம்ப காலத்தில் இருப்போர் (பாலிசி ஆரம்பிச்சு 5 ஆண்டுகள், இன்னும் 15 – 20 ஆண்டுகள் இருக்கு) பாலிசியை கேன்சல் செய்து விட்டு பணத்தை மியூச்சுவல் ஃப்ண்டில் முதலீடு செய்வது சரியா இருக்கும்

பாலிசி ஆரம்பிச்சு பல வருடங்கள் ஆச்சு இன்னும் 2-3 வருசங்களே இருக்கு பாலிசி முதிர்ச்சி அடைய என்பவர்கள், அந்த சில ஆண்டுகளும் ப்ரீமியம் கட்டி மொத்தமா போனஸ் பெறுவது மியூச்சுவல் ஃபண்டுக்கு மாற்றுவதை விடவும் பெயிட் அப் மாற்றுவதை விடவும் அதிக பலன தரும்

இவை இரண்டுக்கும் இடையில் இருப்போருக்கு (ஆரம்பிச்சு 7 – 8 -10 வருசம் ஆச்சு இன்னும் 10 வருசம் இருக்கு) பெயிட் அப் தெரிவு சரியாக இருக்கும்

வங்கி சேமிப்புக் கணக்குகளில் அதிக பணத்தை வைக்கலாமா ?

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டியை மறைமுகமாகக் குறைத்துள்ளது. இன்று முதல் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கணக்குகளுக்கு வட்டி 3.5% லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது. இது எல்லாருக்கும் என மாற்றப்படும் எனவும் ஏனைய வங்கிகளும் விரைவில் வட்டிக் குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன்

இனியாவது வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணத்தை முடக்காதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அதில் பேலன்ஸ் வைத்து விட்டு மிச்சத்தை Liquid Mutual Funds இலோ அல்லது குறைந்த பட்சம் வைப்பு நிதியிலோ வையுங்கள்.

இந்நடவடிக்கை எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் வட்டி விகிதம் இன்ஃப்ளேசனை ஒட்டியே இருக்கும். இன்ஃப்ளேசன் குறையும் போது வட்டி குறைவதும் இயல்பே. மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர வட்டியை குறைத்தே ஆகவேண்டும். வங்கி வைப்பு நிதிக்கான வட்டி 5 – 6% லெவலுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சாதக பாதகங்கள் நீங்க்ள் இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். நீங்க டெபாசிட் செய்யும் இடத்தில் இருந்தால் இது உங்களைப் பாதிக்கும். வீட்டுக் கடனோ தொழில் கடனோ வாங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இன்ஃப்ளேசனைத் தாண்டி அதிக அளவு வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் தரக்கூடியது பங்குச் சந்தை முதலீடுகளே. ஏற்கெனவே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணவரத்து அதிகமா இருக்கு. வங்கி வட்டி விகிதம் குறையும் போது அது இன்னும் அதிகமாகும்..

பள்ளிக் கட்டணத்துக்கே கடனா? : பொருளாதார புதைகுழி

சாதாரண செலவுகளையும் மாதாந்திரத் தவணையாக மாற்றுவது அமெரிக்கப் பழக்கம். வீட்டுக்கு ஃபர்னீச்சர் வாங்கினாலும் சுற்றுலா செல்ல விமான டிக்கெட் வாங்கினாலும் அதை 12 மாதத் தவணைகளாக மாற்றிக்கொள்ள முடியும் அமெரிக்காவில். இவை நம் கையில் காசு இருந்தால் மட்டுமே செய்ய வேண்டிய செலவுகள் – இவற்றை தவணை முறையில் பெறுவதன் மூலம் எதிர்கால வருமானத்தை இன்றே ஆடம்பரத்துக்கு செலவு செய்ய பழகிவிட்டனர் அமெரிக்கர்கள்

இப்போது இந்தியாவிலும் இப்பழக்கம் பரவத்தொடங்கியுள்ளது. ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி கல்வியையும் கவர் செய்யுள்ளது இப்பழக்கம்.

https://www.fullertonindia.com/school-fee-funding/index.aspx

இந்த நிறுவனம் மூணாம் கிளாஸ் படிக்கும் பையனின் அப்பாவை பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வேணுமான்னு கேக்குது. இது கல்விக் கடன் என்ற பேரில் வழங்கப்படும் பர்சனல் லோன். 10.99% வட்டியாம். கடன் தருவதும் பெறுவதும் கூட பெரிய தப்பாப் படல, திருப்பி 24 மாசத்தில் கட்டலாம்னு சொல்றதுதான் பெரிய பொருளாதார புதைகுழியாகப் படுகிறது எனக்கு.

பிள்ளையின் ஒராண்டு பள்ளிக் கட்டணத்தை கடனாக வாங்கிவிட்டு அதை 2 வருச இ எம் ஐ யாக மாற்றி விட்டால், அடுத்தாண்டு கட்டணத்துக்கு என்ன செய்வது? அதையும் ரெண்டு வருசத் தவணையா மாத்தினா 2ம் ஆண்டிலேருந்து தொடர்ந்து ரெண்டு தவணை கட்டவேண்டியிருக்கும், குடும்பத்தில் 2 பிள்ளைகள் இருந்தால் 4 தவணைகள் கட்ட வேண்டியிருக்கும். இதிலேருந்து மீளவே முடியாது.

க்ரெடிட் கார்டுகள் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான் இதுவரை நான் பார்த்ததிலேயே மோசமான கடன். மிக அதிக வட்டி ஒரு காரணமாக இருந்தாலும் அதை விட மோசமான காரணம் ஒரு முறை இதில் மாட்டிக்கொண்டு விட்டால் அதிலேருந்து வெளியே வருவது 99% பேருக்கு இயலாத காரியம். அதைப் போல பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வாங்க ஆரம்பித்தால் பிள்ளைகள் படிப்பை முடிக்கும் வரை அதிலேருந்து வெளியே வரவே முடியாது.

சென்னையில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆண்டுக்கட்டணம் 90,000 ரூபாய். 2 வருசம் இல்லை ஒரே வருசத்தில் திருப்பித் தர்றேன்னு அதை இங்கு கடனாக வாங்கினால் திருப்பிச் செலுத்தும் தொகை மாதத்துக்கு 7954.35 ரூபாய் அதாவது 95452.19 ரூபாய் திருப்பித் தரணும். இதில் இழப்பது வெறும் 5000 ரூபாய் அல்ல. பங்குச் சந்தை முதலீடெல்லாம் வேணாம் மாசம் 7954 ரூபாய் வங்கி தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் ஆண்டு இறுதியில் 98,570 ரூபாய் உங்களிடம் இருக்கும். அதாவது ஒரே ஒரு ஆண்டு கடன் வாங்காமல் கட்டணத்தை கட்டி விட்டு இ எம் ஐ செலுத்துவதற்கு பதிலாக தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் 8570 ரூபாய் – இதுதான் உண்மையான இழப்பு.

கடன்தான் ஈஸியா கிடைக்குதேன்னு வாங்காம கையிருப்பிலிருந்தோ, எதையாவது விற்றோ ஒரே ஒரு வருசம் கஷ்டப்பட்டு பள்ளிக் கட்டணத்தை கட்டி விட்டு, அடுத்தாண்டுக்காக இப்போதே சேமிக்கத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யும் போது மாதம் 7270 ரூபாய் தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தாலே ஓராண்டு முடிவில் 90,000 ரூபாய் சேர்ந்து விடும்.

பிள்ளைகள் கல்லூரிக்கு போகும் போது லட்சக்கணக்கில் செலவாகும், அப்ப கல்விக் கடன் வாங்குவதில் ஒரு நியாயம் இருக்கும். பள்ளிக் கட்டணத்துக்கே கடன் வாங்குவதில் ஒரு நியாயமும் இல்லை. உங்களால் இக்கடனுக்கு இ எம் ஐ கட்ட முடியுமென்றால், கண்டிப்பாக உங்களால் அப்பணத்தைச் சேமித்து அடுத்தாண்டு கடன் வாங்காமல் கட்ட முடியும்.

Asset Allocation

No photo description available.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் எனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், அசெட் அல்லோகேசனையும் வயது ஆக ஆக எப்படி முதலீட்டை திருத்தியமைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதையும் இதை விட எளிதாக விளக்கிவிட முடியாது. 

இளம் வயதில் ஈக்விட்டி அதிகமாகவும் கடன் பத்திரம் / ஃபிக்ஸ்ட் இன்கம் கேட்டகரியில் கம்மியாகவும் ஆரம்பிக்கவேண்டும். அதுவும் ஈக்விட்டியில் ரிஸ்க் அதிகமான மிட்கேப்பில் நிறைய முதலீடு செய்யலாம் (தனிப்பட்ட முறையில் எனக்க்கு ஸ்மால் கேப் ஃபண்ட்களில் நாட்டமில்லை) 
சந்தை இறக்கத்தில் மதிப்பு குறைந்தாலும் மீண்டு வருவதற்கு நிறைய காலம் இருக்கிறது. வயது அதிகரிக்க படிப்படியாக அதிக ரிஸ்க் ஈக்விட்டியிலிந்து கம்மி ரிஸ்க் ஈக்விட்டி கேட்டகரிக்கும் பிறகு ஈக்விட்டியை குறைத்து கடன் பத்திரங்கள் / ஃபிக்ஸ்ட் இன்கம் முதலீட்டையும் அதிகரித்துக்கொண்டே வரவேண்டும். 

ஓய்வு கால இலக்கான தொகையை அடைந்ததும் அல்லது ரிட்டையர்மெண்ட் அருகில் வந்ததும் 10-20% வரை மட்டும் ஈக்விட்டியில் வைத்து விட்டு மிச்சத்தை அசலுக்கு ஆபத்தில்லாத முதலீடுகளில் வைப்பது நலம். 

இதில் சொன்னது போலன்றி 50 வயதில் லார்ஜ் கேப்பை விட்டு வரவேண்டியதில்லை. 
இ எல் எஸ் எஸ் (வரிவிலக்கு ஃபண்ட்கள்) இல் 10% என்று இல்லாமல் தேவைப்படும் அளவுக்கு முதலீடு செய்யலாம். 20 வயதுகாரர்களுக்கு எஃப் டி தேவையேயில்லை. கேஷ் இன் ஹாண்ட் 10% வைத்துக் கொள்வதும் முதலீட்டுக்கு நல்ல ஆப்பர்ச்சுனிட்டி வரும்போது உயபோகப் படுத்திக்கொள்ளத்தான் அதை 20% அளவுக்கெல்லாம் அதிகரிக்கத் தேவையில்லை (எமெர்ஜென்சி ஃபண்டையும் இதையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது) 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணும் எங்கேருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என்போருக்கு இது ஒரு நல்ல துவக்கப்புள்ளியாக இருக்கும்.

எல் ஐ சி … இந்தியாவின் மிகப் பெரிய காப்பீடு நிறுவனம்..

இப்படிச் சொல்வதை விட நீங்க எல்லாரும் உங்க முதலீட்டை ஜீவன் ஆனந்த் மற்றும் ஜீவன் சரல்ல போட்டு விட்டு அவை உங்க எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று எண்ணியிருக்கும் திட்டங்களின் சொந்தக்கார நிறுவனம்…

ஷேர் மார்க்கெட் எல்லாம் ரிஸ்க் சார், எல் ஐ சி ல போட்டா கேரண்டி சார் என்று முகவர்களால் சர்ட்டிஃபிகேட் வழங்கப்படும் நிறுவனம்..

இந்தியாவின் மொத்த புது இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம் 1.75 ட்ரில்லியன் ரூபாய்கள் அதில் எல் ஐ சி மட்டும் 1.27 ட்ரில்லியன் ரூபாய்கள். 
எல் ஐ சியின் மொத்த ப்ரீமியம் கலெக்சன் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் – ட்ரில்லியனுக்கு 12 சீரோக்கள் என்பது பதிவுக்கு சம்பந்தம் இல்லாத தகவல்

இழப்புக் காப்பீடு, போனஸ், செலவு போன்றவை போக லாபத்தில் 50% கவர்மெண்ட் செக்யூரிட்டிகள் போட வேண்டும் என்பது விதி.. அதைப் பெரும்பாலும் இந்திய அரசின் பாண்ட்களில் போட்டுவிட்டு மிச்சத்தை எல் ஐ சி ஷேர் 
சென்ற ஆண்டு மட்டும் மார்க்கெட்டில் போட்ட பணம் எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமில்லை லேடிஸ் & ஜெண்டில்மென் வெறும் ஐம்பதாயிரம் கோடி ருபாய் மட்டும். மார்ச் 31 2017 அன்று எல் ஐ சியின் மொத்த மொதலீடு 24,69,589 கோடி ரூபாய்கள், ஷேர் மார்க்கெட்டில் சென்ற் ஆண்டு லாபம் மட்டும் 1.8 லட்சம் கோடிகள்

உங்க ஜீவன் ஆனந்த் பாலிசியின் ஒரு அம்சம் – லாபத்தில் பங்கு – அந்த லாபம் எங்கேருந்து வருது? அரசு பாண்ட்லேருந்தும் முகவர்களால் ரிஸ்க் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஷேர் மார்க்கெட்டிலிருந்தும்தான்…

மொதல்ல – உங்க யாராலாவது தேவைப்படும் அளவுக்கு (ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு) எந்த ஜீவன் டேஷ் பாலிசியாவது வாங்க முடியுமான்னு பாருங்க (டேஷ்னதும் தப்பா யோசிக்காதீங்க ஜீவன் பக்கத்துல எந்த பேரு போட்டாலும் அப்படி ஒரு பாலிசி இருக்கும், டேஷ்ல உங்க பாலிசி பேரை போட்டுக்கோங்க), வாங்க முடியாதுல்ல… அப்புறம் என்ன டேஷுக்கு அதை வாங்கணும்ங்கறேன்… (இந்த டேஷ் நீங்க நினைச்ச அதேதான்)

ரெண்டாவது முதலீடுன்னு சொல்லி விற்கப்படும் பாசிலிகளின் மூலம் கிடைக்கும் சொற்ப பணமும் ஷேர் மார்க்கெட்டில் லாபம் கிடைச்சால் மட்டுமே என்கிற போது… சல்லிசா டெர்ம் பாலிசியை ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு எடுத்துட்டு மிச்சத்தை ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலம் அதே பங்குச் சந்தைக்கு ஏன் அனுப்பக் கூடாது? இந்த ப்ளானில் பயனர் இறந்தாலும் வருமானத்தின் 10 மடங்கு பணம் குடும்பத்துக்கு கிடைக்கும், இறக்கலேன்னாலும் மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சி மூலம் கணிசமான தொகை கையில் இருக்கும்… இரண்டு சூழ்நிலைகளிலும் குறைந்த அளவே பணம் தரக்கூடிய ஜீவன் —— பக்கம் இனி போவீங்க?

https://www.livemint.com/Money/DELSJgyRofOgwmtQGJW0hO/LIC-may-hike-stock-market-investments-to-Rs4trillionin-201.html

A Step in the right Direction

ஆசான் Va Nagappan இரு வாரங்களுக்கு முன்னர் இது பற்றிச் சொல்லும் போது அவரிடம் சொன்னேன் – இது SIP முறையின் முழு பலனை அடைய சிறந்த வழி என்று

SIP முறை என்பது ஒரு குறிப்பிட்ட ஃபண்டில் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து செலுத்தி வருவது. மாதா மாதம் பணம் செலுத்தலாம் என்பதை இதன் பயனாக மக்கள் பார்த்தாலும் உதன் உண்மையான பயன் Rupee Cost Average அடைவதேயாகும். அதாவது நாம் வாங்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் விலை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும், எஸ் ஐ பி மூலம் வாங்கும் போது we buy units at average cost. பொதுவா இது மாதம் ஒரு முறையோ இரு முறைகளோ வாங்கறா மாதிரியான வசதியை ஃபண்ட் ஹவுஸ்கள் வழங்கி வந்தன. எச் டி எஃப் சி 5, 10, 15, 20, 25 தேதிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கி வந்தது. தினசரி எஸ் ஐ பி என்பது எஸ் ஐ பி யின் முழு பலனையும் அடைய உதவும். மாதா மாதம் ஏற்ற இறக்கங்களை மட்டும் கவர் செய்யாமல் இனி தினசரி ஏற்ற இறக்கங்களின் பலனையும் இதன் மூலம் பெற முடியும்.

இனி வெறும் 500 ரூபாயிலிருந்து எஸ் பி ஐ முறையில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் வசதி

மாதம் 5000 ரூ எச் டி எஃப் சி ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் 1 3 7 10 13 16 19 22 25 28 தேதிகளில் என 10 முறை எஸ் ஐ பியில் 500 ரூ வீதம் முதலீடு செய்யலாம்

ஒரே ஃபண்டில் 15,000 ரூ முதலீடு செய்ய நினைப்பவர்கள் தினசரி 500 என்று மாதத்தின் 30 நாளும் முதலீடு செய்யலாம்.

எச் டி எஃப் சி யின் திட்டம் அடையும் வெற்றியைப் பொறுத்து மற்ற நிறுவனங்களும் இதை அறிமுகப் படுத்து என நினைக்கிறேன்.

http://www.businessworld.in/article/HDFC-Securities-Launches-Daily-SIP-/24-01-2018-138279/?fbclid=IwAR2rGgY8QRqQboTZ3Qi8x8_etO21DBetmSvzAnLf0adQTWGOjC6x1sPTqcw

புத்திசாலித்தனமான முதலீடு… தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ம்மவர்கள் முதலீடு செய்வதே பெரிய விஷயம். அப்படிச் செய்கிறவர்களும் சிலபல தவறுகளைச் செய்துவிடுவதால், அந்த முதலீட்டின் மூலம் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு நாம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?    

1. செலவும், முதலீடும் ஒன்றல்ல 

எது செலவு, எது சேமிப்பு என்பதில் பலருக்கு  குழப்பம் இருக்கிறது. தங்கம் நல்ல முதலீடு என இன்னும்கூட பலரும் நினைக்கிறார்கள். தங்க நகை வாங்குவது முதலீட்டில் வராது. தினமும் ஓட்ட பயன்படுத்தும் காரும் அப்படித்தான். ரூ.10  லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார், ஷோரூமை விட்டு சாலைக்கு வந்ததும் அது செகண்ட் ஹாண்ட் காராகி, அதன் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகிவிடும். 

இதுபோலவே, காப்பீடும் செலவே. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, பொருள்களுக்கான காப்பீடு எல்லாம் செலவே. பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ‘முதலீடு’ செய்வதாக நினைத்துப் பணத்தை விரயம் செய்கின்றனர். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைக் காப்பீடு பாலிசி பெற மட்டுமே அணுக வேண்டும். முதலீடு என்பது உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்க வேண்டும்.  

2. ஓய்வுக்காலத் தேவைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி 

“பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேராது” என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஓய்வுக்காலத்துக்காக காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது தவறானது. காப்பீடும் முதலீட்டு வளர்ச்சியும் வழங்கும் திட்டங் களில் (ULIP) உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடும் கிடைக்காது, வருமானமும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், நீண்ட நாள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.  

3. தொடர்ச்சியான முதலீடே ஜெயிக்கும்

பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வரும்போது எல்லாரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் செய்வது தவறு. அதைவிடப் பெரிய தவறு, பங்குச் சந்தை விழும்போது முதல் ஆளாக போய் பணத்தை எடுப்பது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ளாமல் அதில்  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan – SIP) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது.  

4. முதலீட்டைப் பரவலாக்காமல் இருப்பது

என்ரான் நிறுவனம், தன் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு முழுவதையும் என்ரான் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதித்தது. அந்த நிறுவனம் திவாலானபோது, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிட்டது. எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் (Don’t put all your eggs in one basket) வந்ததால் வந்த தொல்லை இது. ஒரு நல்ல சொத்துப் பகிர்வில் (Asset Allocation) நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம்/ வெள்ளி அனைத்தும் இருக்க வேண்டும். 

5. கட்டணங்களில் கவனம் செலுத்தாதது

ஒவ்வொரு முதலீட்டுக்கும் கட்டணம் உண்டு. அவற்றில் கூடுதல் கவனம் அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமானது செலவு விகிதம் என அழைக்கப்படும். இதனைப் பார்க்க சிறிதாகத் தெரியும். கட்டணங்கள், 20-30 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும்போது போர்ட்ஃபோலியோவின் செயல் திறனை அது பெரிய அளவில் பாதிக்கும். ஒரே மாதிரியான இரு ஃபண்டுகளை ஒப்பிடுகையில் குறைவான செலவு விகிதம் கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. உதாரணம், இண்டெக்ஸ் ஃபண்டுகள்.

6. கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்வது  

ஒரு ஃபண்டின் ஐந்து மற்றும் பத்தாண்டு கால வருமானம் / வளர்ச்சி ஒரு முக்கியக் காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே முதலீட்டை முடிவு செய்யும் காரணியாக இருக்க முடியாது. ஃபண்டின் ஸ்டைல், அளவு, கட்டணம், டேர்ன் ஓவர், ரேட்டிங், ஃபண்ட் மேனேஜரின் செயல்திறன் ஆகிய காரணிகளை வைத்தே ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிலர் ஓராண்டு வருமானத்தை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பார்கள். இது மகா தவறு.

7. வருமான வரிச் சலுகையில் மட்டும் கவனம் செலுத்துவது

அதிகம் பேர் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக வரி விலக்கை நினைக்கிறார்கள். வரி விலக்கில்லா முதலீடு 20% வளர்ச்சி தரும் நிலையில், வருமான வரி விலக்குத் தரும் முதலீடு 10% தந்தால் அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. எனவே, வரி விலக்கு என்பதை மட்டும் பார்க்காமல், அது தரும் வருமானத்தையும் பாருங்கள்.

8. அதிக ரிஸ்க் எடுப்பது அல்லது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பது

சிலர் அஸெட் அலோகேஷன்படி பிரித்து முதலீடு செய்யாமல் எல்லாப் பணத்தையும் அக்ரெஸிவ் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மார்க்கெட் வீழ்ச்சி அடையும்போது இந்த போர்ட்ஃபோலியோ அதிக அளவில் நஷ்டத்தைத் தரும். வேறு சிலரோ, சேமிப்பு முழுவதையும் வங்கி வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். இவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருந்தாலும், வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இரு நிலைகளும் தவறு. முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க் குறைவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும். 

9. ஆலோசகர்களைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை ஆலோசகர்களாக்குவது

முதலீடு செய்யத் தேவையான அளவு அறிவு, அனுபவம், நேரம் இருப்பவர்கள் பிறர் துணையின்றி தாமே முதலீடு செய்யலாம். பெரும்பாலானோருக்கு இவை மூன்றும் இருப்பதில்லை. அவர்கள், ஒரு நல்ல நிதி ஆலோசகரை நாடுவது நலம். டாக்டர், வக்கீலைப்போல நிதி ஆலோசகரும் ஒரு புரஃபஷனல்தான். அவருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டும். அந்தச் செலவு உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைக்கவும், அதே சமயத்தில் வளர்ச்சி காண வைக்கவும் உதவும். நண்பர்களை ஆலோசர்களாக்குவதைத் தவிர்ப்பது நட்புக்கு நல்லது. 

10. தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது 

முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. அவ்வப்போது போகும் பாதை, வேகம், எரிபொருள் அளவு இவற்றைக் கண்காணிப்பது போல, முதலீட்டிலும் செய்ய வேண்டும். நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி போய்க்கொண்டிருக்கிறது. இனி ரிட்டயர்மென்ட் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்று இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோவைப் பார்த்து, அதை மாற்றியமைக்க வேண்டுமெனில், அதை செய்தே ஆகவேண்டும். 

25 ஆண்டுகளில் இந்திய சந்தைதான் பெஸ்ட்!

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைதான் மிகச் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 1,357 சதவிகிதமும், சென்செக்ஸ் 1,289 சதவிகிதமும் லாபம் தந்திருக்கின்றன. ஜெர்மனி 755%, அமெரிக்கா 688% லாபம் தந்திருக்கின்றன. 

கொரியா, தைவான், சீனா, பிரான்ஸ் நாட்டு பங்குச் சந்தைகள் 200 சதவிகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பங்குச் சந்தை 179 சதவிகிதமும், ஜப்பான் பங்குச் சந்தைகள் வெறும் 44 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. 

Funds Overlapping

நண்பர் ஒருத்தர் அஞ்சு லார்ஜ்கேப் ஃபண்ட்களில் எஸ் ஐ பி போடணும், எந்தெந்த ஃபண்ட்ல போடலாம்னு கேட்டார்.

ஐபிஎல் ல டீம்களை வாங்கிப் போடலாம்னு போறீங்க, டாப் 5 பேட்ஸ்மென், டாப் 4 பௌலர்கள் எல்லா டீம்லயும் இருக்காங்க ரெண்டு முக்கியத்துவம் குறைவான ப்ளேயர்கள் மட்டுமே ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசம். எல்லோரும் ரன் அடிக்கறாங்க , சச்சினை ஓப்பனிங்கும் கோலியை ஒன் டவுனிலும், கடேசி அஞ்சு ஓவருக்கு பாண்ட்யாவையும் உபயோகிக்கும் டீம் அதிக ரன் அடிக்குது, மாத்தி உபயோகிக்கும் டீம் அதை விட கம்மியா ரன் சேர்க்குது… அப்ப நீங்க அஞ்சு டீம்லயும் 20% பங்கு வாங்குவீங்களா அல்லது அதிக ரன் அடிக்கும் & தொடர்ச்சியா வெற்றிகளை குவிக்கும் டீமை 100% வாங்குவீங்களான்னு கேட்டேன்… நான் என்ன தப்பாச் சொல்லிட்டேன்னு கோவிச்சிக்கிட்டு போயிட்டாருன்னு தெரியல!!!!

நம்மில் பல பேர் செய்யும் தவறு இது… 14 ஃபண்ட்கள் கொண்ட போர்ட்ஃபோலியோ எல்லாம் வச்சிருக்காங்க. அவற்றினுள் என்ன இருக்குன்னே பல பேருக்குத் தெரியறதில்ல. ஒரே கேட்டகரி ஃபண்ட்ஸ் ரெண்டுக்கு மேல முதலீடு பண்றதுக்கான முகாந்திரன் எனக்குத் தெரிஞ்சு எதுவும் இல்லை. Birla Sunlife Frontline Equity, Mirae Assets India opportunities இவ்விரு லார்ஜ் கேப் ஃபண்ட்ஸ் எடுத்துக்கிட்டா HDFC, HDFC Bank, ICICI Bank, ITC, L &T, Maruti, SBI, Indus Ind Bank, ITC என்று பல கம்பெனிகளின் பங்குகள் ரெண்டிலும் கணிசமா இருக்கு. இதைத்தான் ஒவர்லாப் என்று சொல்வாங்க.. இப்படி இருக்கும் பல ஃபண்ட்கள் ஐந்தில் 20% முதலீடு செய்வதற்கு பதில் ஒன்றிலோ ரெண்டிலோ மட்டும் முதலீடு செய்வது நலம்.

Asset Allocation vs Diversification

நம்ம ஆட்கள் பொதுவா மாற்றிச் சொல்லும் வார்த்தைகள் 
Sales / Marketing
Hotel / Restaurant 
அந்த வரிசையில் Asset Allocation / Diversification இதையும் சேர்க்கலாம். இவை ஒன்று போலத் தெரிந்தாலும் இவை வெவ்வேறு.

Asset Allocation : இது நம்முடைய முதலீடு ஒவ்வொரு Asset Class லும் எவ்வளவு சதவீதம் வைக்கப்போறோம் என்பதைக் குறிப்பது. மொத்த முதலீட்டில் Equity 55% Debt/ Bond 20%, Real Estate 20% Gold 5% என்று ஒரு போர்ட்ஃபோலியோ உருவாக்குவது.

Diversification : உன்னிடம் இருக்கும் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதே என்று சொல்வார்கள். அது தவறி விழுந்தால் அனைத்து முட்டைகளும் உடையும். 
அது போலத்தான் Diversification. ஈக்விட்டியில் 55% என்று முடிவு செய்தாகி விட்டது – மொத்த பணத்தையும் ஒரே கம்பனியின் பங்கிலோ அல்லது ஒரே கேட்டகரி மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்யக்கூடாது. நேரடி பங்கு வாங்கறதா இருந்தா தொகைக்கேற்ப 10-20 அல்லது அதற்கு மேல் நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று 2-3 மியூச்சுவல் ஃபண்ட்களிலோ முதலீடு செய்ய வேண்டும்.

இனியாவது முதலீடு குறித்து எழுதும் போது பேசும் போது சரியான பதங்களை உபயோகிப்போம்.

Index Funds

இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் அப்படீங்கறாங்களே அதில் முதலீடு செய்யலாமான்னு நெறய பேரு யோசிக்கறாங்க… 
முதலீடு செய்யறதுக்கு முன்னாடி இண்டெக்ஸ் ஃபண்டுனா என்ன? அது யாருக்கு சரியா வரும் எல்லாம் தெரிஞ்சிக்கணும்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் இருவகை உண்டு – Actively Managed and Passively Managed. நமக்கு தெரிந்த பெரும்பாலான ஃபண்ட்கள் ஆக்டிவிலி மேனேஜ்ட் கேட்டகரி. எல்லா ஃபண்ட்களும் நிஃப்டி போன்ற ஏதோ ஒரு இண்டெக்ஸை ட்ராக் செய்யும். உதாரணத்துக்கு எஸ் பி ஐ ப்ளூ சிப் ஃபண்ட் BSE 100 Index ஐ ட்ராக் செய்கிறது. அதிலிருக்கும் கம்பெனிகளில் 50-60 ஐ தேர்ந்தெடுத்து அதன் பங்குகளில் முதலீடு செய்கிறார் இதன் ஃபண்ட் மேனேஜர். இப்பங்குகளின் போக்கை தினம்தோறும் கவனித்து அவர் கணிப்பின் படி வாங்க / விற்க முடிவெடுக்கிறார்.

இதே BSE 100 Index ஃபண்ட் என்று ஒன்று இருந்தால் அது passive முறையில் நிர்வகிக்கப்படும். இந்த இண்டெக்ஸில் இருக்கும் அனைத்து கம்பெனிகளின் மார்க்கெட் கேப்பின் மொத்தம் நூறு கோடின்னு வச்சிப்போம், அதில் ஒரு கம்பெனியான எச்டிஎஃப்சியின் மதிப்பு 5 கோடி, ஐசிஐசிஐயின் மதிப்பு 3 கோடின்னு வச்சிக்கிட்டால், அவற்றின் வெயிட்டேஜ் முறையே 5 மற்றும் 3 சதவீதமாகும். இதே மாதிரி எல்லா கம்பெனிகளுக்கு வெயிட்டேஜ் போட்டு ஒரு அல்கோரிதம் எழுதி வச்சிடுவாங்க. அந்த அல்கோரிதம் ஃபண்டுக்குள் வரும் ஒவ்வொரு ரூபாயையும் அதே விகிதததில் முதலீடு செய்து விடும். கம்பெனிகளின் மார்க்கெட் கேப் மாறும் போதோல்லாம் அது ஆட்டோமேட்டிக்காக ரீ பேலன்சிங் செய்து கொண்டேயிருக்கும். 
ஆக்டிவிலி மேனேஜ்ட் ஃபண்களைப் போல இதில் தினந்தோறும் வர்த்தகம் நிகழ்ந்து கொண்டே இருக்காது. எனவே இதன் டர்ன் ஓவர் ரேஷியோ கம்மியா இருக்கும் (டர்ன் ஓவர் ரேஷியோ என்பது ஒரு ஃப்ண்ட் ஒரு வருடத்தில் எத்தனை பங்குகளை மாற்றுகிறது என்பதைக் குறிப்பது, ஒரு வருடத்தில் தன்னுள் இருக்கும் அனைத்து பங்குகளின் அளவையும் ஒரு ஃபண்ட் மாற்றினால் அதன் டர்ன் ஓவர் ரேஷியோ 100%, பொதுவா இது மேனேஜ்ட் ஃபண்ட்களில் அதிகமா இருக்கும்)

சாதகங்கள் 
இண்டெக்ஸ் ஃபண்ட்களுக்கு மேனேஜர் அவசியமில்லை, அல்கோரிதம்கள் அவர் வேலையை செய்துவிடும் அல்லது எளிதாக்கிவிடும். இவற்றின் கட்டணம் வெகு கம்மியாக இருக்கும். அமெரிக்க வான்கார்ட் நிறுவனம் 0.04% கட்டணத்திலிருந்து இண்டெக்ஸ் ஃபண்ட்கள் வழங்குகிறது, இந்தியாவில் 0.2% லிருந்து இண்டெக்ஸ் ஃபண்ட்கள் உள்ளன

இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் மிக நீண்ட கால முதலீட்டாளர்களாக இருப்பார்கள், பணம் வெளியே போகாமல் ஃபண்டுக்குள் இருக்கும் போது பங்குகளை விற்பதும் மிகக் குறைவாக இருக்கும். இது ஃபண்டின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும்

மேனேஜெட் ஃபண்ட்கள் எப்போதும் நல்ல முதலீட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும், அப்படி வாய்ப்பு வரும்போது நாலு பங்கை வித்தாத்தான் வாங்க முடியும் என்ற நிலையை தவிர்க்க கையில் எப்போதும் பணம் வைத்திருக்கும் – அப்படி வைத்திருக்கும் பணம் வளர்வதில்லை. ஒரு ஃப்ண்டில் ஆயிரம் கோடி ருபாய் இருந்தால் சுமாராக 20 கோடி ரூபாய் பணமாக கையில் இருக்கும், அப்ப 980 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக்கும், முதலீட்டாளர்களும் 980 கோடியின் பயனை மட்டுமே அனுபவிக்க முடியும். 
இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இண்டெக்ஸின் அனைத்து பங்குகளிலும் முதலீடு செய்து விட்டதால் அது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

பாதகம்னு பாத்தா – இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இண்டெக்ஸ் காணும் வளர்ச்சி மட்டுமே காணும். அதாவது BSE 100 Index 10% உயர்ந்தா அதன் இண்டெக்ஸ் ஃபண்டும் 9.5 முதல் 10.5% வரையே உயரும். மார்க்கெட் 10% உயர்ந்தா என் முதலீடு 25% வளரணும்னு நினைப்பவர்களுக்கு இது சரியா வராது. 
இண்டெக்ஸை விட அதிகம் ஏறும் ஃபண்ட் இண்டெக்ஸ் கீழிறங்கும் போது பெரும்பாலும் மிக அதிகமாக இழக்கும். 
இண்டெக்ஸ் ஃபண்ட் டெஸ்ட் மேட்ச், மேனேஜ்ட் ஃபண்ட் ஒரு நாள் போட்டி மாதிரி என்று சொல்லலாம்,. டெஸ்ட் மேட்சில் ஸ்ட்ராடஜி முக்கியம், ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் அதை சரி செய்ய நேரம் இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் ஒரு மோசமான ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் 
சாரி டி 20 எல்லாம் நான் கிரிக்கெட்டாகவே கருதுவதில்லை.

இந்தியாவில் இன்னும் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் பெரிய அளவில் வளரவில்லை.
வட்டி விகிதம் மிகவும் கம்மியாகி வரும் நிலையில் இப்பதான் மக்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை நோக்கி வருகின்றனர். நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து மேனேஜ்ட் ஃபண்ட்கள் மார்க்கெட்டை விட சிறப்பா செயல்பட்டுக் கொண்டே இருக்க முடியாது, 30-40 வருடங்களில் மார்க்கெட் ரிட்டன்ஸ் கிடைச்சாலே போதும், கம்மி கட்டணத்தில் தம் குறிக்கோளை அடைய முடியும் என்ற நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.