LIC Endowment நியூ ஜீவன் ஆனந்த் vs PPF vs Mutual fund

வணக்கம் நண்பர்களே. LIC என்பது காப்பீட்டு நிறுவனம். அதில் காப்பீடு செய்யவேண்டும், ஆனால் காப்பீட்டுடன் முதலீடு என ஒன்றாகச் செய்யக்கூடாது என்பது என் கருத்து. ஏன் காப்பீட்டில் முதலீடு செய்யக்கூடாதென்றால், காப்பீடும் பத்தாது, முதலீடும் தேறாது(கூட்டு வட்டி 4% முதல் 6% வரை). பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டால், பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் முதிர்வுத்தொகை மகிழ்ச்சியைத் தராது.
LICவில் முதலீட்டுடன் காப்பீட்டுக்கென பல திட்டங்களிருக்கின்றன. அதில் முதலாவதாக நாம் பார்க்கப்போவது Endowment வகையைச் சேர்ந்த நியூ ஜீவன் ஆனந்த்.  https://www.licindia.in/Products/Insurance-Plan/anand

LIC Endowment நியூ ஜீவன் ஆனந்த்

LICவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மாதிரி. https://www.licindia.in/Products/Insurance-Plan/anand/abi.aspx
பாலிசிதாரரின் வயது 30. காலம் – 35 ஆண்டுகள். உறுதிப்படுத்தப்பட்ட முதிர்வுத் தொகை (Sum Assured ) – ஒரு லட்சம்.பாலிசித்தொகை  – ஆண்டுக்கு 3,165.
முதலில் பொதுவாக LICயின் endowment திட்டத்தின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம். 

1. Insurance – நான் Endowment திட்டங்களின் காப்பீட்டைப் பற்றி விவாதிக்கப்போவதில்லை. ஏனென்றால் காப்பீட்டுத் தொகை மிகக்குறைவு. ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330 செலுத்தினாலே,ஒன்றல்ல இரண்டு லட்சம் காப்பீடு கிடைக்கும். அதிகத் தொகைக்கு TERM INSURANCE. Term Insuranceக்கு ஈடான காப்பீட்டை Endowmentடால் கொடுக்கவே முடியாது என்பதே நிதர்சனம்.
2. Vested Simple Reversionary Bonus – LIC ஒவ்வொரு ஆண்டும் அதன் முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் Bonus நிர்ணயிக்கும். இணைப்பு -> https://www.licindia.in/Customer-Services/Bonus-Information. மேற்கண்ட நம் மாதிரிக்கு 2018ல் கொடுக்கப்பட்ட Bonus தொகை, Sum Assuredன் ஆயிரத்துக்கு 49 ரூபாய். மொத்தம் 4,900.. அடேங்கப்பா நாம் போட்ட பணமே 3,165 தான், அதற்கு 4,900 போனசானு நினைக்குறீங்களா .? இந்த Bonusயை கண்ணால பார்க்கத்தான் முடியும். திட்ட முதிர்வுக்குப் பிறகு தான் கையில் கிடைக்கும் . மேலும் இந்த Bonusக்கு எந்த வட்டியும் கிடையாது. இது போல், நம் எடுத்துக்காட்டின் படி ஆண்டுக்கு ஒன்று என மொத்தம் 35 போனஸ் கிடைக்கும். எதிர்காலத்தில் LICன் முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தைப் பொறுத்து இதே போனஸ் கிடைக்கலாம் , அல்லது குறையலாம். LIC தளத்தின் மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்ட அதிகபட்ச போனஸ் தொகையே 32 ரூபாய் என்றாலும் 2018ல் தந்த 49 ரூபாயையே நம் தோராய கணக்கிற்குப் பயன்படுத்துகிறேன். 
முதிர்வின் பொழுது கிடைக்கும் போனஸ் -> 35 ஆண்டுகள் * 4,900 போனஸ்  = 1,71,500 ரூபாய். இதுதவிர LICயின் சாதனை, மையில் கல்லைப் பொறுத்து எப்பவாவது சிறப்பு போனஸ் தரப்படலாம். இது பெரிய அளவில் முதிர்வு தொகையை மாற்றாது என்பதால் கணக்கில் கொள்ளவில்லை .
3. Final Additional bonus – முதிர்வின் பொழுது ஒரு முறை வழங்கப்படும். 2012ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட போனஸ் தொகை Sum Assuredன் ஆயிரத்துக்கு 1,850 ரூபாய். இணைப்பு -> https://www.licindia.in/Customer-Services/Bonus-Information/Bonus__For_2011-12
முதிர்வின் பொழுது கிடைக்கும் Final Additional bonus -> (1,00,000/1000) * 1,850 போனஸ்  = 1,85,000 ரூபாய் 


2054 ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மொத்தத் தொகை  -> 1,00,000 உறுதிபடுத்தப்பட்ட முதிர்வுத் தொகை (Sum Assured ) +1,71,500  Vested Simple Reversionary Bonus(தோராயமாக) + 1,85,000 Final Additional bonus (தோராயமாக) = 4,56,500 ரூபாய்.கூட்டு வட்டியின் படி 6.78%. முப்பதைந்து ஆண்டு நீண்ட கால முதலீடு என்பதால் ஒரு சுமாரான 6.78% கூட்டு வட்டி கிடைத்திருக்கு.

PPF – Public Provident Fund

இதற்க்கு பதிலாக ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330யை காப்பீட்டுக்குச் செலுத்திவிட்டு மீதத் தொகையை மிகவும் பாதுகாப்பான PPFல் முதலீடு செய்திருந்தால் எதிர்பார்க்கப்படும் தொகை (தோராயமாக) ->  5,80,000.00 ரூபாய். ஏறக்குறைய ஒரு லட்சத்து முப்பதாயிரம் அதிகம். எப்படி LICன் 2018ம் ஆண்டு Bonus தொகையை அனைத்து ஆண்டுகளுக்கும் கணக்கில் கொண்டேனோ, அது போல PPFன் தற்போதைய 8% வட்டியையே கணக்கில் கொண்டுள்ளேன். LIC Bonus போல இதுவும் மாறலாம். மேலும் ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் தொகையும் எதிர்காலத்தில் கூடலாம். மத்திய அரசின் திட்டம் என்பதால் பெரிய அளவில் விலையேற்றமிருக்காது எனக் கருதி விலை உயர்வைக் கணக்கில் கொள்ளவில்லை.

Mutual fund – Aggressive Hybrid Fund

இதுவே கொஞ்சம் துணிவு எடுத்து ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330 காப்பீட்டுக்குச் செலுத்திவிட்டு மீதத் தொகையை Aggressive Hybrid Fundல் முதலீடு செய்து 10% கூட்டு வட்டியை எதிர்பார்த்தால் கிடைக்கும் தொகை (தோராயமாக) -> 9,30,000(LICன் திட்ட முதிர்வில் கிடைக்கும் தொகையைப் போல் இருமடங்கு). Aggressive Hybrid Fundல் கிடைக்கும் லாபத்தொகைக்கு நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி 10% செலுத்த வேண்டும்.

தெரிந்து கொள்வோம்:
LIC Endowment ஆரம்பித்து முப்பது நாட்களைக் கடந்து விட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசியை நிறுத்தும் பட்சத்தில் எந்த தொகையும் திரும்பக் கிடைக்காது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்திற்கு முன் பாலிசியை Surrender செய்தால், முதல் வருட பாலிசி தொகையைக் குறைத்து  விட்டு Special surrender value கணக்கின் படி ஒரு குறிப்பிட்ட தொகை திரும்பத் தரப்படும். பெரும்பாலும் போட்ட பணமே திரும்பவராது. தயவு செய்து Special surrender value கணக்கை கேட்க வேண்டாம் . இதனால் பெரும்பாலானவர்களுக்கு எந்த உபயோகமுமில்லை.

LIC ஏஜெண்டுகளுக்கு Endowment பாலிசிகளுக்கு முதலாண்டுக்கு தோராயமாக 25% கமிஷனும், அதன் பிறகு ஒவ்வொரு தவணைக்கும் 5% முதல் 7.5% வரை கமிஷனும் தரப்படுகிறது. ஏஜெண்டுகளின் சேவை ஆண்டுகளை பொறுத்து கமிஷன் மாறும்.

அனைத்து கணக்குகளையும் கீழ்க்கண்ட இணைப்பில் கொடுத்துள்ளேன். https://docs.google.com/spreadsheets/d/1DaFbqi0_K_69all7kqTn3GChZPqy3uDVA7HecO6I-iI/edit?usp=sharing
கணக்கில் தவறிருந்தாலோ அல்லது புரிதலில் தவறிருந்தாலோ சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன் அல்லது தெரிந்து கொள்கிறேன் 

நன்றி:

https://freefincal.com

சில வருடங்களில் ஓய்வு பெறவுள்ள ஐம்பதுகளில் இருப்போர் எடுக்க வேண்டிய காப்பீட்டு அளவு.

காப்பீட்டின் அளவு ரொம்ப பெரிய சப்ஜெக்ட் – ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகர் க்ளையண்ட்டின் எல்லா விவரங்களையும் (வருமானம், செலவு, உடல்நிலை, சேமிப்பு, கடன் இன்னபிற) ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு என்ன மாதிரி லைஃப் ஸ்டைல் வேண்டும் என்றும் தெரிந்து கொண்டு (கிராமத்தில் அமைதியான வாழ்க்கை அல்லது உலகம் முழுதும் சுற்றும் ப்ளான் இன்னபிற) அதற்கு ஏற்றாற் போல காப்பீட்டை டிசைன் செய்யணும் (சம் அஸ்யூர்ட், காலம்) – இதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாச் செய்யும் அளவுக்கு அதுவும் இலவசமா செய்யும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை. அதனால் தான் பொதுவாக ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இன்றியமையாதது, 20 மடங்கு ஹெல்தியான காப்பீடு என்கிறேன், இது பெரும்பான்மையானவர்களுக்கு சரியா வரும். வெகு சிக்கனமாக வாழ்ந்து கடன் கம்மியா வச்சிருப்பவருக்கு 20 மடங்கு அனாவசியம், சம்பளம் முழுவதற்கும் இ எம் ஐ வச்சிக்கிட்டு சேமிப்பே இல்லாதவருக்கு 10 மடங்கு மிகக் குறைவு… டெர்ம் பாலிசியே வாங்காமல் எண்டோமெண்ட்டையே வாங்கும் சமூகம் இப்பத்தான் டெர்ம் பாலிசி பக்கம் திரும்புகிறது.. அவர்கள் ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்தாலே சந்தோசம்..

இப்ப கேள்விக்கான நேரடி பதில் – வயது முக்கியமில்லை – யாரோட சம்பளத்தை நம்பி குடும்பம் இருக்கோ அவர்கள் எல்லோருக்கும் காப்பீடு அவசியம். 35 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டு காலமும் 50 வயதாகும் ஒருவர் 15 ஆண்டு காலமும் எடுக்கணும். இன்று நான் இறந்தால் என் மனைவி அவர் வாழ்நாள் முழுதும், மகள் சம்பாதிக்கும் வயது வரைக்கும் எவ்வளவு செலவாகும், அதில் எவ்வளவு என் சேமிப்பு கொடுக்கும் என்று கணக்கிட்டு மிச்சத்தை இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்யணும். எனக்கு 65 வயதில் ரிட்டையர் ஆகும் அன்று நானும் மனைவியும் மிச்ச காலத்தை கழிக்கும் அளவுக்கு சேமிப்பு இருக்குமாறு திட்டமிடவேண்டும்.

காப்பீடும் லாப, நஷ்ட கணக்கும்.

ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்ய ரெண்டு சாய்ஸ். முதலாவதில் 9000 ரூபாய் லாபம் நிச்சயம். இரண்டாவதில் பத்தாயிரம் ரூபாய் லாபமடைய 90% வாய்ப்பு, லாபமற்றுப் போக 10% வாய்ப்பு – இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் முதலாவது வழியையே தேர்ந்தெடுக்கின்றனர். 
அதே ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் இருக்கும் போது இப்படி ஒரு நிலை – 9000ரூபாய் நஷ்டம் நிச்சயம் என்று ஒரு சாய்ஸ் பத்தாயிரம் ரூபாய் நஷ்டம் அடைய 90% வாய்ப்பு நஷ்டமே இல்லாமல் தப்பிக்க 10% வாய்ப்பு, இப்படி ஒரு நிலையில் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது ரெண்டாவது வழியை.

இதிலிருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. 
லாபம் தரும் சந்தோஷத்தை விட நஷ்டம் மனிதர்களை அதிகம் பாதிக்கிறது. 
பொதுவாக நாம் லாபத்தை எதிர்நோக்கும் போது ரிஸ்க்கை தவிர்க்கவும் நஷ்டத்தை எதிர் நோக்கும் போது ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை. 
பொதுவாக மக்கள் காப்பீட்டை அதிலும் குறிப்பாக ஜெனரல் இன்சூரன்ஸ் என்றழைக்கப்படும் பொருள் அல்லது சொத்துக்கான காப்பீட்டை லாப நஷ்ட நோக்கிலேயே எதிர்கொள்கின்றனர்.

காப்பீட்டின் அவசியம் ஏற்படும் வரை பலரும் அது குறித்து யோசிப்பதே கிடையாது. எப்போதோ ஒரு முறை நிகழக்கூடிய அல்லது நிகழாமலே போகக்கூடிய ஒரு இயற்கை பேரிடருக்காகவோ திருட்டுக்காகவோ செலுத்தும் காப்பீட்டுத்தொகை நஷ்டம் என்று கூட கருதப்படுகிறது. அதே நேரத்தில் பேரிடர் நிகழ்கையில் நம் எண்ணம் மாறுகிறது, காப்பீட்டை பெறுவதில் உள்ள சாதகங்கள் மாதாந்திர ப்ரீமியத்தை விட அதிகம் என புரிகிறது. 
வீடோ தொழிற்சாலையோ தீப்பற்றிய பிறகும், வெதர்மேன் இன்னும் இரண்டு நாளில் புயலடிக்கும் என்று சொன்ன பின்போ காப்பீட்டை பெற முடியாது.

இதை ஆங்கிலத்தில் ‘prospect theory’ என்று அழைக்கின்றனர். இந்த தியரி மனிதர்கள் எப்படி ரிஸ்க்கை எதிர்கொள்கிறார்கள் என்று விவரிக்கிறது. இந்த தியரியின் படி பெரும்பாலானோர் ஒரே அளவு லாபம் தரக்கூடிய இருவேறு முதலீடுகளை மக்கள் அவர்தம் எண்ணத்தில் எப்படி நோக்குவார்கள் என்று அலசுகிறது. உதாரணத்துக்கு ரெண்டு திட்டத்தில் வரக்கூடிய லாபம் ஒரு லட்ச ரூபாய்தான். முதலாவது திட்டத்தில் நேரடியாக ஒரு லட்ச ரூபாய் லாபம், இரண்டாவதில் ரெண்டு லட்சரூபாய் லாபம் அப்புறம் ஒரு லட்சரூபாய் நஷ்டம் – முதலாதவது திட்டமே நம்மில் பலரின் சாய்ஸாக இருக்கும். அதற்குக் காரணம் லாபம் தரும் சந்தோசத்தை விட நஷ்டம் தரும் துக்கம் அதிகம்.

மனிதர்களின் மற்றொரு குணம் ரிஸ்க்கை பைனரியாகப் பார்ப்பது, அதாவது மனித மனம் ஒரு விசயத்தில் ரிஸ்க் முழுதாக உள்ளது (1) அல்லது ரிஸ்க் இல்லவே இல்லை (0) என்று பைனரியாக சிந்தித்து அதன்படி முதலீட்டு / செலவு சம்பந்தமான முடிவுளை மேற்கொள்கிறது. 
உதாரணத்துக்கு சென்னைவாசிகளிடம் கேட்டால் வெள்ளம் வர வாய்ப்பு முழுமையாக இருப்பதாகவும் எனவே வெள்ள நிவாரண காப்பீடு எடுக்கணும்னு சொல்வாங்க ஆனா நிலநடுக்கத்துக்கான காப்பீடு எடுக்கச் சொன்னா அது எதுக்கு வீண் செலவு என்பார்கள். ஒரு கருத்துக் கணிப்பின் படி வெள்ளம் வந்த அடுத்த ஆண்டு காப்பீடு எடுத்தோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்கிறது. அடுத்த 4 ஆண்டுகள் பெரிய வெள்ளம் ஏதும் வராத நிலையில் கிட்டத்தட்ட பாதி பேர் காப்பீட்டை புதுப்பிக்கவில்லை.

விபத்தோ திருட்டோ ஏதும் நிகழாது என்ற நம்பிக்கையில் சில ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் தொகையை சேமிப்பதாக எண்ணி ஒரு கோடி ரூபாய் சொத்தை காப்பீடு செய்ய மறுக்கிறோம். இதில் ப்ரீமியம் தொகையை நட்டம் என கருதும் நாம் காப்பீடு வழங்கு கவரேஜை லாபமாக கருதாதே இதற்குக் காரணம். ஆனால் இயற்கை பேரிடர் ஒன்று நிகழும் காலத்தில் ப்ரீமியத்தை நட்டமாக நினைக்காமல் கவரேஜை லாபமாகப் பார்க்கிறோம்

வீடோ தொழிற்சாலையோ தீப்பற்றிய பிறகும், வெதர்மேன் இன்னும் இரண்டு நாளில் புயலடிக்கும் என்று சொன்ன பின்போ காப்பீட்டை பெற முடியாது.

எதையெல்லாம் இன்சூர் செய்ய வேண்டும் என்பதை சுலபமாக முடிவு செய்யலாம். சேமிப்பில் கைவைக்காமல் வெறும் மாதாந்திர சம்பளத்தில் எதையெல்லாம் Replace செய்ய உங்களால் முடியாதோ அதையெல்லாம் இன்சூர் செய்வது உத்தமம். 
எங்கு இன்சூர் செய்வது? இந்தியாவில் பல்லாண்டுகளாக ஜெனரல் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கும் நிறுவங்கள் – ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இண்டியா அசூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட், இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டட் மற்றும் பல்வேறு நிறுவங்கள்.

காப்பீடு என்பது லாப நட்ட நோக்கில் பார்க்க வேண்டிய முதலீடு அல்ல. Investing is to Achieve Certainty while Insurance is cover the uncertainty. இனியாவது காப்பீட்டுக்கு செலுத்தும் தொகையை நட்டமெனக் கருதாமல் அதை ஒரு அத்தியாவசியச் செலவாக கருதி மதிப்பு மிக்க பொருட்கள் / சொத்துகள் அனைத்தையும் இன்சூர் செய்ய ஆரம்பிப்போம்.

ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கும் எவ்வளவு செலவாகும் .?

தீன் அசார் மேன் சுரக்‌ஷா பூரா பரிவார் கேலியே

ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடும் இன்றியமையாதவை என்று தெரிந்தாலும் அவற்றுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை. தெரிந்த ஏஜெண்ட் சொன்னார்னு ஏதோ ஒரு பாலிசி போட்டுட்டு காப்பீடு எடுத்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். காப்பீட்டுக்கு ஒதுக்ககூடிய நிதி முழுவதையும் ஏதோ ஒரு எண்டோமெண்ட் பாலிசிக்கு கமிட் செய்து விட்டதால் தேவையான அளவு காப்பீடு எடுக்காமல் விட்டு விடுகின்றனர்.

காப்பீட்டுக்கு எவ்வளவு செலவு செய்யலாம்? ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு ஆயுள் காப்பீடும் தேவையான அளவு மருத்துவக் காப்பீடும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவரின் கடமை. காப்பீட்டுக்கு கம்மியா செலவு பண்ண சீக்கிரமே எடுப்பதுதான் சரியான வழி. ஒரு கோடி ரூபாய் டெர்ம் பாலிசிக்கு 30 வயதுகாரர் செலுத்துவதை விட 40 வயதுகாரர் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். 
முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும், ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் தன்னுடைய சிறு குடும்பத்தை வெறும் மூவாயிரம் ரூபாயில் (மாதத்துக்கு) எப்படி காப்பது என்பதைச் செய்து காட்டியிருக்கார் நண்பர் திருமலை கந்தசாமி .

அவர் தனக்கு 31 வயதாக இருக்கும் போது எடுத்தவை இவை
1.5 கோடி ருபாய்க்கு டெர்ம் பாலிசி – ஆண்டு ப்ரீமியம் 14,691 ரூபாய்.

20 லட்சரூபாய்க்கு Critical Health மற்றும் 20 லட்ச ரூபாய்க்கு Disability Coverage – 9,764 ரூபாய்.

திருமலை, அவர் மனைவி, ஒரு குழந்தைக்கு 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு – 11,505 ரூபாய்

ஆக மொத்தம் அவர் குடும்பத்தின் மொத்தப் பாதுகாப்பிற்கு அவர் செலவிடும் தொகை ஆண்டுக்கு 36,230 ரூபாய் அதாவது மாதத்துக்கு வெறும் 3020 ரூபாய் மட்டுமே.

இதை அப்படியே அனைவரும் காப்பியடிக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் தேவையும் வெவ்வேறாக இருக்கும். உங்க தேவைக்கு ஏற்ப ஆயுள் காப்பீட்டை குறைத்து 1 கோடிக்கு எடுக்கலாம், மருத்துவக் காப்பீட்டை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம். ஆயுள் காப்பீட்டை வேறு தனியார் நிறுவனங்களில் எடுக்கும் போது கொஞ்சம் அதிகமாகலாம். எல் ஐ சி இடெர்ம் பாலிசி எடுக்கும் போது ப்ரீமியம் இன்னும் கொஞ்சம் அதிகமாகலாம்.

சரியாகத் திட்டமிட்டு சீக்கிரமே காப்பீடுகளை எடுத்தால் உங்க ஆண்டு வருமானத்தின் 5% க்குள் அனைத்தையும் பெறலாம். இதுவே நாம் காப்பீட்டுக்கு செலவழிக்க வேண்டியது. நாற்பது வயதுக்கு மேல் ஞானோதயம் பிறந்தால் ஒரு சில சதவீதம் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். அப்போதும் எண்டோமெண்ட் பாலிசிகளையும் தேவையற்ற ரைடர்களையும் தவிர்த்து தனியார் நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் குறைந்த விலையில் அனைத்தையும் பெற முடியும்.

வருமானத்தின் 5 அல்ல 15% ப்ரீமியமாகக் கட்டினாலும் தேவையான அளவு காப்பீடு எண்டோமெண்ட் பாலிசிகளில் பெறவே முடியாது. அவை தரும் வளர்ச்சி இன்ஃப்ளேசனுக்கு கூட காணாது. எனவே காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசிகளையும் முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்ட்களையும் நாடுங்கள்

டெர்ம் இன்சூரன்ஸ் – ஆயுள் காப்பீட்டின் அவசியம்

No photo description available.

இந்தப் படத்தைப் பாத்ததும் சில நாட்கள் முன்னர் நண்பருடன் நடந்த உரையாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது.

நண்பர் தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றில் வசிக்கிறார். நல்ல வேலை, அந்நகரத்து ஸ்டாண்டர்ட் படி நல்ல சம்பளம், அழகான சிறு குடும்பம்… அவர் வருமானத்துக்கு ஏற்ற காப்பீடு இல்லை. நண்பர் படித்தவரும் அறிவாளியும் கூட (இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று உறுதியாக நம்புபவன் நான்) – இதுநாள் வரை ஏங்க டெர்ம் பாலிசி எடுக்கலேன்னு கேட்டேன்… ஏனோ தோணலை என்பதைப் பதிலாகத் தந்தார்.

ஆயுள் காப்பீடு பத்தி பேசிக்கிட்டே இருந்தோம். அவருக்கு வயது 49, ஓய்வு காலம் வரை காப்பீடு எடுக்க ப்ரீமியம் ஆண்டுக்கு 20,000 ரூபாய் போல வரும் என்றேன். உடனே அவர் 15 ஆண்டுகளுக்கு 3 லட்ச ரூபாய் விரயம் என்றாரே பார்க்கலாம்.

அதே நண்பர் கார் வச்சிருக்கார், அதன் காப்பீட்டு ஆண்டுக்கு 15,000 ரூபாய். அதை அவர் வீண் செலவு என்றோ விரயம் என்றோ கருதவில்லை. ஏனோ தெரியவில்லை ஆயுள் காப்பீடு என்று வரும் போது மட்டும் மக்கள் போட்ட பணம் வட்டியுடன் திரும்ப வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

வெறும் 4-5 லட்ச ரூபாய் பெருமானமுள்ள காருக்கு 10-20 ஆயிரம் கொடுத்து காப்பீடு பெருகிறோம், விபத்து நிகழலேன்னா பணம் திரும்ப வருமா? வட்டி கிடைக்குமா என்று நாம் கேட்பதேயில்லை. அதை விட பல மடங்கு மதிப்பு மிக்க நம் வருமானத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கும் டெர்ம் இன்சூரன்ஸை மட்டும் வீண்செலவு என்கிறோம், போட்ட பணம் திரும்ப வருமா? எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கேட்கிறோம். அடிப்படை புரிதலில் தவறை வைத்துக் கொண்டு இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்.

ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல, அதுவும் செலவு என்று புரிந்து கொள்ள வேண்டியது பயனர்களே. நாம் டெர்ம் இன்சூரன்ஸ்தான் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால், காப்பீட்டு முகவர்களும் அதையே ப்ரமோட் செய்யத் தொடங்குவார்கள்

இன்சூரன்ஸ் கம்பெனிகளில் “முதலீடு”.? எண்டோமெண்ட் பாலிசி

இன்சூரன்ஸ் கம்பெனிகளில் “முதலீடு” செய்வதன் தீமைகளை பத்தாயிரம் வார்த்தைகளில் கட்டுரையாக்குவதை விட எளிதாக் இப்படம் விளக்குகிறது.

எண்டோமெண்ட் பாலிசிகளின் முடிவில் பணம் கிடைக்கும் என்பது உண்மையே.. ஆனால் எவ்வளவு கிடைக்கும் என்று உறுதியாச் சொல்ல முடியாது. இன்னிக்கு நீங்க ரூபாய்களாகக் கொட்டி செய்யும் முதலீடு இறுதியில் சிறு காசுகளாத் திரும்ப வரும். பத்து லட்சம் முதலீடு செய்து பதிமூன்று லட்சம் திரும்ப வரலாம் ஆனா அது கையில் கிடைக்கும் போது பதிமூணு லட்சத்தின் மதிப்பு இன்றைய நிலையில் ஆயிரங்களில் இருக்கும். அதைத்தான் இப்படம் எளிமையாக விளக்குகிறது.

No photo description available.

எண்டோமெண்ட் பாலிசி குறித்து சில நண்பர்கள், ஷேர் மார்க்கெட் ஃபாலோ பண்ண முடியாத, பிசினஸ் பண்ணத் தெரியாத, ரியல் எஸ்டேட் மேல நம்பிக்கை இல்லாத, தங்கம் வாங்கி வச்சிக்கிட்டு பயப்பட விரும்பாத, வங்கிகள் மேல மிகுந்த கோவத்துடன் இருப்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் எண்டோமெண்ட் பாலிசியில பணம் போடலாம். செத்தா பசங்களுக்கு பணம் கிடைக்கும், உயிரோட இருந்தா வங்கி வட்டி அளவுக்காவது வளர்ச்சி வருமே, முதலீடு செய்யலாம் இல்லையான்னு கேட்டிருந்தாங்க . அதற்க்கான பதில்

1. வங்கி பணத்தை கமாடிட்டியா உபயோகித்து பிசினஸ் பண்ணுது, உங்க கிட்ட வட்டிக்கு வாங்கி பிறருக்கு கடன் கொடுத்து லாபம் பாக்குது. அதே அளவு அல்லது அதற்கு மேலும் வட்டி தருவதற்கு காப்பீட்டு நிறுவனம் என்ன செய்யுதுன்னு எப்பவாவது யோசிச்சி இருக்கீங்களா?

2. நேரடி பங்குச் சந்தை முதலீடு எல்லாருக்கும் சரியா வராது அது ஓகே. நீங்க ஏன் மியூச்சுவல் ஃபண்ட் வழியை தேர்ந்தெடுப்பதில்லை?

3. மியூச்சுவல் ஃபண்ட் தேர்ந்தெடுப்பதும் கஷ்டம். 2000க்கும் மேல ஃபண்ட் இருக்கு அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பதுன்னு புரியலயா? அதே மாதிரி பலப்பல காப்பீட்டுத் திட்டங்கள் (எண்டோமெண்ட், ஹோல் லைஃப், யூலிப், மணி பேக்) இருக்கின்றன. எல்லாத்தையும் அலசி ஆராய்ந்தா இப்ப வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசியை எடுத்தீங்க?

4. காப்பீட்டு முகவர் சொன்ன பாலிசியைத்தானே கண்ணை மூடிக்கிட்டு எடுத்தீங்க?நீங்க முதலாண்டு கட்டும் தொகையில் 30% பெரும் அவர் நல்ல ஆலோசனை சொல்வார்னு நம்புற நீங்க, நீங்க முதலீடு செய்யும் தொகையில் 1% பெரும் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசர் நல்ல ஆலோசனை சொல்வார் என ஏன் நம்பமாட்டேங்கறீங்க?

5. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வளர்ச்சியைத்தான் பாலிசிதாரர்களுக்கு போனஸாக வழங்குகிறது என்பது தெரியுமா?

6. நீங்க காப்பீடு நிறுவனத்திடம் பணம் கொடுத்து அது அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் வளர்ச்சியில் கிள்ளி உங்களிடம் போனஸாக கொடுப்பதற்கு பதில் நீங்களே மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சந்தையில் முதலீடு செய்து வளர்ச்சியை அள்ளலாமே

7. எண்டோமெண்ட் பாலிசிகளில் எனக்கு இருக்கும் பிரச்சனைகளில் வளர்ச்சி / வட்டி இரண்டாம் பட்சமே, முதல் பிரச்சனை காப்பீடு என்பதுதான் Irony. காப்பீடு அவசியம் – இன்னும் ஒரு படி மேல போய் அத்தியாவசியம் என்பேன். குடும்பத்தின் பொருளாதாரம் நலன் காக்க தலைவரின் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை காப்பீடு அவசியம். இந்த அளவு காப்பீடு எண்டோமெண்ட் பாலிசிகளில் எடுக்கவே முடியாது. இந்தளவு காப்பீடு டெர்ம் பாலிசியில் மட்டுமே எடுக்க முடியும். ஆண்டு வருமானத்தின் 5 மடங்கு எண்டோமெண்ட் ப்ரீமியமே எட்டாத உயரத்தில் இருக்கும். அதனாலத்தான் எண்டோமெண்ட் பாலிசி வேண்டாமனு சொல்றேன்

8. வருமானத்தின் 10 மடங்கோ அதற்கு மேலோ டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் வட்டி கம்மியாத்தான் வரும், வரும் வட்டி இன்ஃப்லேசனை விட கம்மியாத்தான் இருக்கும் தெரிஞ்சே 5-6% வளர்ச்சி தரும் எண்டோமெண்ட் பாலிசியில் முதலீடு செய்வதாக இருந்தால் தாராளமா செய்யுங்க. உங்க பணம் – உங்க முடிவு.

ஆனா பிரச்சனை எஙக் வருதுன்னா, காப்பீட்டுக்கான பட்ஜெட் முழுவதையும் எண்டோமெண்ட்டுக்கு கட்டிட்டு தேவனையான அளவு காப்பீடு எடுப்பதிலை பலரும். எண்டொம்மெண்ட் எடுத்துட்டு ஆயுள் காப்பீடு எடுத்து விட்டேன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இறக்கும் போது குடும்பத்துக்கு 5-10 லட்சம் மட்டுமே கிடைக்கும் – அதை வச்சி குடும்பம் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும். அதே காசுக்கு 1 கோடி ரூபாய் டெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் காப்பிட்டு தேவையும் பூர்த்தியாகும் முதலீடும் நல்ல வளர்ச்சி காணும்.

இளமையில் கல் என்பது பழமொழி, இளமையில் திட்டமிடு என்பது புதுமொழி..

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை இருபதுகளின் இறுதியிலோ முப்பதுகளின் ஆரம்பத்திலோ தொடர் முதலீடு ஆரம்பித்தால் ரிட்டையர் ஆகும் போது கணிசமான தொகை கையில் இருக்கும். 35 ஆண்டுகள் மாதாமாதம் 2500ரூ நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து வந்தால் முடிவில் 1 கோடி ரூபாய் இருக்க வாய்ப்பு மிக அதிகம். இதை Power of Compounding என்பார்கள்

காப்பீட்டிலும் சீக்கிரம் ஆரம்பிப்பது பலனளிக்கும். நண்பர் வல்லம் பசிர் 29, ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செய்தார். இதை இரண்டு கம்பெனிகளில் தலா 50 லட்சம் என முடிவு செய்துள்ளார்… ஜீவன் ஆனந்திலும் ஜீவன் சரலிலும் இன்ன பிற ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்யும் வாலிப வயோதிக அன்பர்களே, பஷீர் ஒரு கோடி ருபாய் காப்பீடுக்கு கட்டப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? எஸ் பி ஐயில் 50 லகரத்துக்கு ஆண்டுக்கு 10,400 ரூபாய், எல் ஐ சியில் 8800 ரூபாய். அதாவது ஒரு கோடிக்கு ப்ரீமியம் வெறும் 19.200 ரூபாய். மாசம் வெறும் 1600 ரூபாய்.

எஸ் பி ஐ மேனேஜர் கிட்டத்தட்ட டெர்ம் பாலிசி விக்க மாட்டேன்னே சொல்லியிருக்கார், இது வேணாம் சார், ரிட்டர்ன் எதுமே வராது, இதுக்கு பதிலா மணிபேக் போடுங்க என்றெல்லாம் மூளைச் சலவை செய்ய முயன்றுள்ளார். அதுல காப்பீடு 5 லட்சம் மட்டுமே கிடைக்கும் நான் இறந்தால் அது குடும்பத்துக்கு ஒராண்டுக்கு கூட காணாது, அப்புறம் நீங்களா என் குடும்பத்தைக் காப்பீங்கன்னு கேட்டதும் இந்தாள் கிட்ட எதுவும் தேராதுன்னு விட்டிருக்கிறார். வெல்டன் பஷீர்

பாலிசி ரசீது கையில் வந்ததும் பஷீருக்கு கிடைத்த திருப்தியை வார்த்தையில் விவரிக்க இயலாது

மாசத்துக்கு 10-20 ஆயிரம் இன்சூரன்ஸில் “முதலீடு” செய்வதற்கு பதில் 1600 ரூபாய்க்கு பாலிசி, மிச்சம் ஒரு பத்தாயிரத்தை எஸ் ஐ பி முதலீடு செய்து வந்தால் பஷீருக்கு 65 வயது ஆகும் போது 4-5 கோடி ரூபாய் கையில் இருக்க வாய்ப்பு மிக அதிகம்.

பஷீர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்… நீங்க எல்லாம் வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசிகள் இத்தகைய நிலைமையில் உங்களை வச்சிருக்கான்னு யோசிங்க, இல்லைனா அப்புறம் அந்த பாலிசிகளை ஏன் நீங்க இன்னமும் வச்சிருக்கீங்கன்னு யோசிங்க.

காப்பீடும் முதலீடும்

insurance vs investmentயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஐந்தறிவு படைத்த யானை கூட தான் இறக்கும் போது அதன் மதிப்புக்கு ஈடான தந்தத்தை விட்டுச் செல்கிறது.

நீங்க சம்பாதிக்கும் பொதே திடீரென இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு என்ன விட்டுட்டுப் போகறீங்க? ஈராண்டு செலவுக்கு வரும் எண்டோமெண்ட் பாலிசிகளையா அல்லது யூஸ்லெஸ் யூலிப் பாலிசிகளையா அல்லது குடும்பத்தைப் பாதுகாக்கும் டெர்ம் பாலிசிகளையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

”நல்ல முதலீடு”, வருமானவரி சேமிக்கும் வழி, புள்ளைங்க எதிர்காலத்துக்கு அவங்க பேர்ல பாலிசி போடுங்க – போன்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி பாலிசி போட்டால் கஷ்டப்படப்போவது நீங்களல்ல, உங்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படப்போவது உங்க குடும்பம்தான்.

எண்டோமெண்ட் பாலிசி போடச் சொல்லி வற்புறுத்தறவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி -இதுல காப்பீடு எவ்வளவுன்னு கேளுங்க – ? ஒருத்தரோட சம்பளம் மாதம் 50,000 ரூபாய், அதில் அவரால் 5% க்கு மேல் காப்பீட்டுக்கு செலவு செய்ய முடியாது அதாவது மாதம் 2500ரூபாய் – இதில் எவ்வளவு எண்டோமெண்ட் கவர் எடுக்க முடியும் தெரியுமா? தோராயமாக 7,5,000 மட்டுமே (35 வயது, 30 ஆண்டுகள் ஜீவன் ஆனந்த்) – நீங்கள் உயிரோடு இருந்தால் மாசம் 50,000 ரூபாய் கொண்டு வருவீங்க, அதுவும் உயர்ந்துகிட்டே போகும். திடீர்னு நீங்க இறந்தா வெறும் 7.5 லட்சத்தை வச்சிக்கிட்டு உங்க குடும்பம் எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும்?

27,000 ரூபாய்க்கு எவ்வளவு டெர்ம் பாலிசி எடுக்க முடியும் தெரியுமா? 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எல் ஐ சியில் எடுக்கலாம். தனியார் நிறுவனத்தில் எடுத்தால் கிட்டத்தட்ட 15-18 ஆயிரம் ரூபாய் ப்ரீமியத்துக்கே இவ்வளவு கவரேஜ் எடுக்கலாம். அதாவது உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு. இதை வச்சிக்கிட்டு உங்க பிள்ளைகள் தலையெடுக்கும் வரை கௌரம்வமா உங்க குடும்பம் வாழ்ந்து விடமுடியும்

உங்க இழப்பை ஈடுசெய்ய முடியாது, ஆனால் நீங்க ஈட்டும் வருமானத்தை கண்டிப்பாக ஈடுசெய்ய முடியும், ஆனால் அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே முடியும்.

இனியாவது ஆயுள் காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்துப் பார்க்க ஆரம்பிங்க. காப்பீட்டு நிறுவன எண்டோமெண்ட் பாலிசிகள் 5-6% மிக அதிகபட்சமாக 7% வளர்ச்சி கிடைக்கலாம், அதற்கு மேல் தரக்கூடிய திட்டம் இல்லை. செல்வமகள் போன்ற அரசின் திட்டங்களில் கூட இதை விட அதிக வட்டி கிடைக்கிறது. நீண்ட கால பங்குச் சந்தை முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட்கள்) 10-15%க்கும் மேல் வளர்ச்சி தந்துள்ளன. சலூன்ல போய் சாம்பார் பொடி கேக்கமாட்டீங்கல்ல, அது போல வங்கிகளில் டெபாசிட், கடன் பத்தி மட்டும் பேசுங்க, காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு பத்தி மட்டும் பேசுங்க, முதலீட்டுக்கு முதலீட்டு நிறுவனங்களை அணுகுங்க

புத்திசாலித்தனமான முதலீடு… தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ம்மவர்கள் முதலீடு செய்வதே பெரிய விஷயம். அப்படிச் செய்கிறவர்களும் சிலபல தவறுகளைச் செய்துவிடுவதால், அந்த முதலீட்டின் மூலம் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு நாம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?    

1. செலவும், முதலீடும் ஒன்றல்ல 

எது செலவு, எது சேமிப்பு என்பதில் பலருக்கு  குழப்பம் இருக்கிறது. தங்கம் நல்ல முதலீடு என இன்னும்கூட பலரும் நினைக்கிறார்கள். தங்க நகை வாங்குவது முதலீட்டில் வராது. தினமும் ஓட்ட பயன்படுத்தும் காரும் அப்படித்தான். ரூ.10  லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார், ஷோரூமை விட்டு சாலைக்கு வந்ததும் அது செகண்ட் ஹாண்ட் காராகி, அதன் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகிவிடும். 

இதுபோலவே, காப்பீடும் செலவே. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, பொருள்களுக்கான காப்பீடு எல்லாம் செலவே. பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ‘முதலீடு’ செய்வதாக நினைத்துப் பணத்தை விரயம் செய்கின்றனர். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைக் காப்பீடு பாலிசி பெற மட்டுமே அணுக வேண்டும். முதலீடு என்பது உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்க வேண்டும்.  

2. ஓய்வுக்காலத் தேவைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி 

“பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேராது” என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஓய்வுக்காலத்துக்காக காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது தவறானது. காப்பீடும் முதலீட்டு வளர்ச்சியும் வழங்கும் திட்டங் களில் (ULIP) உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடும் கிடைக்காது, வருமானமும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், நீண்ட நாள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.  

3. தொடர்ச்சியான முதலீடே ஜெயிக்கும்

பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வரும்போது எல்லாரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் செய்வது தவறு. அதைவிடப் பெரிய தவறு, பங்குச் சந்தை விழும்போது முதல் ஆளாக போய் பணத்தை எடுப்பது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ளாமல் அதில்  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan – SIP) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது.  

4. முதலீட்டைப் பரவலாக்காமல் இருப்பது

என்ரான் நிறுவனம், தன் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு முழுவதையும் என்ரான் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதித்தது. அந்த நிறுவனம் திவாலானபோது, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிட்டது. எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் (Don’t put all your eggs in one basket) வந்ததால் வந்த தொல்லை இது. ஒரு நல்ல சொத்துப் பகிர்வில் (Asset Allocation) நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம்/ வெள்ளி அனைத்தும் இருக்க வேண்டும். 

5. கட்டணங்களில் கவனம் செலுத்தாதது

ஒவ்வொரு முதலீட்டுக்கும் கட்டணம் உண்டு. அவற்றில் கூடுதல் கவனம் அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமானது செலவு விகிதம் என அழைக்கப்படும். இதனைப் பார்க்க சிறிதாகத் தெரியும். கட்டணங்கள், 20-30 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும்போது போர்ட்ஃபோலியோவின் செயல் திறனை அது பெரிய அளவில் பாதிக்கும். ஒரே மாதிரியான இரு ஃபண்டுகளை ஒப்பிடுகையில் குறைவான செலவு விகிதம் கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. உதாரணம், இண்டெக்ஸ் ஃபண்டுகள்.

6. கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்வது  

ஒரு ஃபண்டின் ஐந்து மற்றும் பத்தாண்டு கால வருமானம் / வளர்ச்சி ஒரு முக்கியக் காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே முதலீட்டை முடிவு செய்யும் காரணியாக இருக்க முடியாது. ஃபண்டின் ஸ்டைல், அளவு, கட்டணம், டேர்ன் ஓவர், ரேட்டிங், ஃபண்ட் மேனேஜரின் செயல்திறன் ஆகிய காரணிகளை வைத்தே ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிலர் ஓராண்டு வருமானத்தை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பார்கள். இது மகா தவறு.

7. வருமான வரிச் சலுகையில் மட்டும் கவனம் செலுத்துவது

அதிகம் பேர் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக வரி விலக்கை நினைக்கிறார்கள். வரி விலக்கில்லா முதலீடு 20% வளர்ச்சி தரும் நிலையில், வருமான வரி விலக்குத் தரும் முதலீடு 10% தந்தால் அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. எனவே, வரி விலக்கு என்பதை மட்டும் பார்க்காமல், அது தரும் வருமானத்தையும் பாருங்கள்.

8. அதிக ரிஸ்க் எடுப்பது அல்லது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பது

சிலர் அஸெட் அலோகேஷன்படி பிரித்து முதலீடு செய்யாமல் எல்லாப் பணத்தையும் அக்ரெஸிவ் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மார்க்கெட் வீழ்ச்சி அடையும்போது இந்த போர்ட்ஃபோலியோ அதிக அளவில் நஷ்டத்தைத் தரும். வேறு சிலரோ, சேமிப்பு முழுவதையும் வங்கி வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். இவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருந்தாலும், வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இரு நிலைகளும் தவறு. முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க் குறைவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும். 

9. ஆலோசகர்களைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை ஆலோசகர்களாக்குவது

முதலீடு செய்யத் தேவையான அளவு அறிவு, அனுபவம், நேரம் இருப்பவர்கள் பிறர் துணையின்றி தாமே முதலீடு செய்யலாம். பெரும்பாலானோருக்கு இவை மூன்றும் இருப்பதில்லை. அவர்கள், ஒரு நல்ல நிதி ஆலோசகரை நாடுவது நலம். டாக்டர், வக்கீலைப்போல நிதி ஆலோசகரும் ஒரு புரஃபஷனல்தான். அவருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டும். அந்தச் செலவு உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைக்கவும், அதே சமயத்தில் வளர்ச்சி காண வைக்கவும் உதவும். நண்பர்களை ஆலோசர்களாக்குவதைத் தவிர்ப்பது நட்புக்கு நல்லது. 

10. தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது 

முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. அவ்வப்போது போகும் பாதை, வேகம், எரிபொருள் அளவு இவற்றைக் கண்காணிப்பது போல, முதலீட்டிலும் செய்ய வேண்டும். நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி போய்க்கொண்டிருக்கிறது. இனி ரிட்டயர்மென்ட் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்று இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோவைப் பார்த்து, அதை மாற்றியமைக்க வேண்டுமெனில், அதை செய்தே ஆகவேண்டும். 

25 ஆண்டுகளில் இந்திய சந்தைதான் பெஸ்ட்!

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைதான் மிகச் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 1,357 சதவிகிதமும், சென்செக்ஸ் 1,289 சதவிகிதமும் லாபம் தந்திருக்கின்றன. ஜெர்மனி 755%, அமெரிக்கா 688% லாபம் தந்திருக்கின்றன. 

கொரியா, தைவான், சீனா, பிரான்ஸ் நாட்டு பங்குச் சந்தைகள் 200 சதவிகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பங்குச் சந்தை 179 சதவிகிதமும், ஜப்பான் பங்குச் சந்தைகள் வெறும் 44 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. 

நன்றே செய் அதுவும் இன்றே செய்

இன்சூரன்ஸ் எடுக்கறதுன்னு முடிவு செஞ்சதும் இன்னிக்கே எடுத்துடுங்க… நாளைக்கு ப்ரீமியம் அதிகமாக ஆகிடலாம். நண்பர் ஒருத்தர் என்னிடம் பேசியபின், டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செஞ்சார், தேவையான எல்லா ஆராய்ச்சியும் பண்ணி, அமவுண்ட் கம்பெனி எல்லாம் முடிவு செஞ்சிட்டார், ஆனா பாலிசி எடுக்க ஒரு வாரம் நேரம் எடுத்துக்கிட்டார், ப்ரீமியம் அமவுண்ட் ஆண்டுக்கு 500 ரூ அதிகமாகிடிச்சு. இன்சூரன்ஸை பொருத்தவரை Nearest Birthday is what will be taken for your age. அதாவது ஜூலை 7 1974 அன்று பிறந்த எனக்கு – ஜனவரி 7 2017 வரை 43 வயது என கணக்கிடப்படும், ஜனவரி 8 க்கு அப்புறம் 44 வயதுக்கு உரிய ப்ரீமியம் கட்ட வேண்டும். ஆண்டுக்கு 500 ருபாய் சின்ன விசயமாத் தெரியலாம், ஆனால் 35 வயதாகும் ஒருவர் இந்த 40 ரூபாயை மாசாமாசம் மிச்சம் பிடிச்சு முதலீடு செய்து வந்தால் அவரோட ரிட்டையர்மெண்ட் ஃபண்டில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் இருக்கும். தள்ளிப் போடுதல் பர்ஸுக்கு கெடுதல்.