ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு குறித்து தமிழில் பேசும் தளம். I am not a professional financial advisor – certified or otherwise The purpose of articles written here is purely educational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals and Invest as you see fit or consult a Professional Financial Advisor before investing
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டியை மறைமுகமாகக் குறைத்துள்ளது. May 2,2019 முதல் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கணக்குகளுக்கு வட்டி 3.5% லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது. இது எல்லாருக்கும் என மாற்றப்படும் எனவும் ஏனைய வங்கிகளும் விரைவில் வட்டிக் குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன்
இனியாவது வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணத்தை முடக்காதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அதில் பேலன்ஸ் வைத்து விட்டு மிச்சத்தை Liquid Mutual Funds யிலோ அல்லது குறைந்த பட்சம் வைப்பு நிதியிலோ வையுங்கள்.
இந்நடவடிக்கை எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் வட்டி விகிதம் இன்ஃப்ளேசனை ஒட்டியே இருக்கும். இன்ஃப்ளேசன் குறையும் போது வட்டி குறைவதும் இயல்பே. மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர வட்டியை குறைத்தே ஆகவேண்டும். வங்கி வைப்பு நிதிக்கான வட்டி 5 – 6% லெவலுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இதன் சாதக பாதகங்கள் நீங்க்ள் இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். நீங்க டெபாசிட் செய்யும் இடத்தில் இருந்தால் இது உங்களைப் பாதிக்கும். வீட்டுக் கடனோ தொழில் கடனோ வாங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
எது எப்படி இருந்தாலும் இன்ஃப்ளேசனைத் தாண்டி அதிக அளவு வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் தரக்கூடியது பங்குச் சந்தை முதலீடுகளே. ஏற்கெனவே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணவரத்து அதிகமா இருக்கு. வங்கி வட்டி விகிதம் குறையும் போது அது இன்னும் அதிகமாகும்..
சாதாரண செலவுகளையும் மாதாந்திரத் தவணையாக மாற்றுவது அமெரிக்கப் பழக்கம். வீட்டுக்கு ஃபர்னீச்சர் வாங்கினாலும் சுற்றுலா செல்ல விமான டிக்கெட் வாங்கினாலும் அதை 12 மாதத் தவணைகளாக மாற்றிக்கொள்ள முடியும் அமெரிக்காவில். இவை நம் கையில் காசு இருந்தால் மட்டுமே செய்ய வேண்டிய செலவுகள் – இவற்றை தவணை முறையில் பெறுவதன் மூலம் எதிர்கால வருமானத்தை இன்றே ஆடம்பரத்துக்கு செலவு செய்ய பழகிவிட்டனர் அமெரிக்கர்கள்
இந்த நிறுவனம் மூணாம் கிளாஸ் படிக்கும் பையனின் அப்பாவை பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வேணுமான்னு கேக்குது. இது கல்விக் கடன் என்ற பேரில் வழங்கப்படும் பர்சனல் லோன். 10.99% வட்டியாம். கடன் தருவதும் பெறுவதும் கூட பெரிய தப்பாப் படல, திருப்பி 24 மாசத்தில் கட்டலாம்னு சொல்றதுதான் பெரிய பொருளாதார புதைகுழியாகப் படுகிறது எனக்கு.
பிள்ளையின் ஒராண்டு பள்ளிக் கட்டணத்தை கடனாக வாங்கிவிட்டு அதை 2 வருச இ எம் ஐ யாக மாற்றி விட்டால், அடுத்தாண்டு கட்டணத்துக்கு என்ன செய்வது? அதையும் ரெண்டு வருசத் தவணையா மாத்தினா 2ம் ஆண்டிலேருந்து தொடர்ந்து ரெண்டு தவணை கட்டவேண்டியிருக்கும், குடும்பத்தில் 2 பிள்ளைகள் இருந்தால் 4 தவணைகள் கட்ட வேண்டியிருக்கும். இதிலேருந்து மீளவே முடியாது.
க்ரெடிட் கார்டுகள் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான் இதுவரை நான் பார்த்ததிலேயே மோசமான கடன். மிக அதிக வட்டி ஒரு காரணமாக இருந்தாலும் அதை விட மோசமான காரணம் ஒரு முறை இதில் மாட்டிக்கொண்டு விட்டால் அதிலேருந்து வெளியே வருவது 99% பேருக்கு இயலாத காரியம். அதைப் போல பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வாங்க ஆரம்பித்தால் பிள்ளைகள் படிப்பை முடிக்கும் வரை அதிலேருந்து வெளியே வரவே முடியாது.
சென்னையில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆண்டுக்கட்டணம் 90,000 ரூபாய். 2 வருசம் இல்லை ஒரே வருசத்தில் திருப்பித் தர்றேன்னு அதை இங்கு கடனாக வாங்கினால் திருப்பிச் செலுத்தும் தொகை மாதத்துக்கு 7954.35 ரூபாய் அதாவது 95452.19 ரூபாய் திருப்பித் தரணும். இதில் இழப்பது வெறும் 5000 ரூபாய் அல்ல. பங்குச் சந்தை முதலீடெல்லாம் வேணாம் மாசம் 7954 ரூபாய் வங்கி தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் ஆண்டு இறுதியில் 98,570 ரூபாய் உங்களிடம் இருக்கும். அதாவது ஒரே ஒரு ஆண்டு கடன் வாங்காமல் கட்டணத்தை கட்டி விட்டு இ எம் ஐ செலுத்துவதற்கு பதிலாக தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் 8570 ரூபாய் – இதுதான் உண்மையான இழப்பு.
கடன்தான் ஈஸியா கிடைக்குதேன்னு வாங்காம கையிருப்பிலிருந்தோ, எதையாவது விற்றோ ஒரே ஒரு வருசம் கஷ்டப்பட்டு பள்ளிக் கட்டணத்தை கட்டி விட்டு, அடுத்தாண்டுக்காக இப்போதே சேமிக்கத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யும் போது மாதம் 7270 ரூபாய் தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தாலே ஓராண்டு முடிவில் 90,000 ரூபாய் சேர்ந்து விடும்.
பிள்ளைகள் கல்லூரிக்கு போகும் போது லட்சக்கணக்கில் செலவாகும், அப்ப கல்விக் கடன் வாங்குவதில் ஒரு நியாயம் இருக்கும். பள்ளிக் கட்டணத்துக்கே கடன் வாங்குவதில் ஒரு நியாயமும் இல்லை. உங்களால் இக்கடனுக்கு இ எம் ஐ கட்ட முடியுமென்றால், கண்டிப்பாக உங்களால் அப்பணத்தைச் சேமித்து அடுத்தாண்டு கடன் வாங்காமல் கட்ட முடியும்.
பொதுவாக சிக்கனமாகச் செலவு செய்வதிலும் திட்டமிட்டு சேமிப்பதிலும் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்கள். இன்றைய சூழலில் குடும்பத்துக்காக கடன் வாங்கும் முடிவிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே பெண்கள் கடனும் கடன் சார்ந்த விசயங்களும் குறித்து தெளிவு பெற வேண்டியது அவசியம். ”கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பது இதிகாச காலத்துக்கு வேணா சரியா இருந்திருக்கலாம், இன்றிருக்கும் மாடர்ன் எக்கானமியில் கடன் இல்லாத மனிதரைப் பார்ப்பது கடினம். தனிமனித வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கும் தொழில் அபிவிருத்திகும் கடன் அவசியமாகிறது. அத்தியாவசத்திற்கு கடன் வாங்கும் பழக்கம் மெல்ல மெல்ல ஆடம்பரத் தேவைகளுக்கு வாங்கும் போது அதுவே பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாகிறது.
கடனில் நல்ல கடன் கெட்ட கடன் என எப்படி பிரிப்பது? எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கறோமோ அது உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக இருந்தால் அது நல்ல கடன் கடன் வாங்கி நீங்க வாங்கும் பொருள் மதிப்பில் உயரும் தன்மையுடையதாக இருந்தால் அது நல்ல கடன் (Appreciation) உங்க வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ ஒரு பொருள் அவசியமாகத் தேவைப்படுகிறது ஆனால் அதை வாங்க உங்களிடம் மொத்தமாகப் பணமில்லை, அதே நேரத்தில் அதற்கான தவணைத் தொகையை சுலபமாக உங்களால் செலுத்த முடியும் என்று வரும் போது அதற்காக வாங்குவதும் நல்ல கடனே உதாரணத்துக்கு, விற்பனைத் துறையில் இருக்கும் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் அவசியம். வண்டியிருந்தால்தான் அவரது வேலையில் நீடிக்க முடியும், வருவாயைப் பெருக்க முடியும் என்கிற நிலையில் வாங்கும் வாகனக் கடன் நல்ல கடன் கடன் இல்லாமல் வீடு வாங்குவது இன்று 99% பேருக்குச் சாத்தியமில்லை. வீட்டு வாடகை மிச்சமாகிறது, அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய பிரச்சனையில்லை, வாங்கிய வீட்டின் மதிப்பு உயரும் வாய்ப்பு இருக்கும், திருப்பிச் செலுத்தும் வட்டிக்கும் அசலுக்கும் வருமான வரி விலக்கு உண்டு (அசலுக்கான வரிவிலக்கு Section 80 C யின் கீழ் வரும்). இது சந்தேகமேயில்லாமல் நல்ல கடன்
உங்களுக்கோ உங்க பிள்ளைகளுக்கோ கல்விக்காக வாங்கும் கடனும் நல்ல கடனே. பணம் இல்லைன்னு படிப்பை நிறுத்தாமல் கடன் வாங்கியாவது படிப்பைத் தொடர்வது நல்ல எதிர்காலத்தை உறுதி செய்யும். அடிப்படைக் கல்வி, உயர் கல்வி, Certification போன்றவற்றுக்காக கடன் வாங்குவதில் தவறேயில்லை.
லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தில் திடீரென சமையல் அடுப்போ, கிரைண்டரோ, ஃபிரிட்ஜோ பழுதாகி புதிதாக வாங்க வேண்டிய நிலையில் மொத்தப்பணம் கொடுத்து வாங்க முடியலேன்னா தவணை முறையில் வாங்கித்தான் ஆகவேண்டும். வீட்டு உபயோகப் பொருட்கள் இல்லையென்றால் நிம்மதியாக வாழ முடியாதப்போ அது நல்ல கடனா இல்லையா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது
இவற்றைத் தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்துமே கெட்ட கடன்கள்தான் ஏற்கெனவே வருமானம் முழுமைக்கும் செலவும் பல கடன்களும் வைத்திருக்கும் ஒரு நடுத்தர குடும்பம் காருக்காக கடன் வாங்குவது ஆடம்பரம். அது அநாவசியம் சுற்றுலாவுக்கோ வேறு தேவையற்ற செலவுக்கோ பர்சனல் லோன் வாங்குவது கெட்ட கடன். வங்கிகள் பர்சனல் லோனுக்கு பொதுவா 14 முதல் 18 % வரை வட்டி வாங்குகின்றன. டாக்குமெண்டேசன், ப்ராசஸிங்னு தனியா 2% வேற வாங்குறங்க. நீங்க வாங்கும் ஒரு லட்ச ரூபாய் பர்சனல் லோனுக்கு 5 வருசத்தில் 1.5 லட்சரூபாய் திருப்பிச் செலுத்துவீங்க. லோனுக்கு கட்டும் 2500 ரூபாயை நல்ல முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் மூணே வருசத்தில் உங்க கிட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும், அப்ப நீங்க வாங்க நினைச்சதை முழுப்பணம் தர்றேன்னு பேரம் பேசி வாங்கலாம். இப்படி செய்யும் போது உங்களோட ரெண்டு வருட சேமிப்பு மிச்சமாகிறது.
இதே போல 0% வட்டின்னு வரும் விளம்பரங்களை நம்பி தேவையற்ற / அத்தியாவசிமற்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதும் கெட்ட கடனே. வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜோ வாஷிங் மெசினோ நல்லா வேலை செய்யும் போது புது மாடல் வருது, வட்டியில்லாமல் கிடைக்குது என்று வாங்குவது தேவையற்ற செலவு. பழைய பொருள் இன்னும் மூணு வருசம் வேலை செய்யும், இந்த நேரத்தில் மாசம் 500 ரூபாயை தொடர் முதலீடு செய்து வந்தால் அப்பொருளை கண்டிப்பாக மாற்ற வேண்டிய நேரத்தில் முழுப்பணம் கொடுத்தே வாங்கலாம். பரவி வரும் மற்றொரு மோசமான பழக்கம் ஆண்டுக்கொருமுறை செல்போனை மாற்றுவது அதுவும் மாதத்தவணையில். செல்போன்களை சுலபமாக 5 ஆண்டுகள் உபயோகிக்கலாம். ஆண்டுக்கொருமுறை செல் போன் மாற்றுவதே தவறு, அதையும் கடனில் வாங்குவது மிக ஆபத்தான போக்கு
0% வட்டி என்பது பெருமாலான நேரங்களில் ஏமாற்று வேலையே. கன்ஸ்யூமர் லோன்களுக்கான வட்டி 18%க்கும் மேல் இருக்கும். அது உங்களுக்குத் தெரியாத வகையில் பெறப்படும். ஒரு நிறுவனம் ஒரு பொருளை 15,000 ரூபாய் என்றும் மாதம் 500 வீதம் 30 மாதங்கள் செலுத்தலாம் என்றும் விளம்பரம் செய்யும். அதே பொருளை வேறு டீலரிடமோ அமேசானிலோ நீங்கள் 10,000 ரூபாய்க்கு ரொக்கத்துக்கு வாங்க முடியும். சொல்வது 0% செலுத்துவது 18% ஆக இருக்கும்.
இவற்றையெல்லாம் விட மோசமான கடன் என்றால் அது க்ரெடிட் கார்ட் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான். க்ரெடிட் கார்ட் கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா? 36%. ரிவால்விங் க்ரெடிட் எனும் சூழலில் சிக்கிச் சீரந்தழிந்தவர்கள் ஏராளம்.
கடன் வாங்குவதற்கு முன்னால் ஒரு விசயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். தவணை முறையில் பொருள் வாங்குவதன் மூலம் உங்க எதிர்கால வருமானத்தை இன்றே செலவு செய்கிறீர்கள். அதற்கு கடன் வாங்குவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டு உழைப்பையும் சேமிப்பையும் வங்கிக்கு தாரை வார்க்கிறீர்கள். கடன் வாங்கும் முன் கடன்பட்டாவது வாங்க வேண்டிய அளவுக்கு அந்தப் பொருள் தகுதியானதா என்று சிந்தித்துப்பாருங்கள். கடன் வாங்குவதற்கு முன்னால், மாதத்தவணையை கட்டும் அளவுக்கு உங்க வருமானமும் செலவுகளும் உள்ளனவா என்பதையும் பணத்தைத் திருப்பிக் கட்டத் தெளிவான திட்டம் இருப்பதையும் உறுதிசெய்யுங்கள். கடனை சீக்கிரமே திருப்பிக் கட்டினால் பெனால்டி உள்ளதா என்று கேளுங்கள். Pre Closure Penalty இல்லாத கடனை மட்டுமே வாங்கி அதையும் சீக்கிரமே அடைத்து வட்டியை மிச்சப்படுத்துங்கள்.
கெட்ட கடன் தவிர்த்து நல்ல கடன் நாடி வளமான எதிர்காலத்துக்கு திட்டமிட்டு சேமியுங்கள்