ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு குறித்து தமிழில் பேசும் தளம். I am not a professional financial advisor – certified or otherwise The purpose of articles written here is purely educational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals and Invest as you see fit or consult a Professional Financial Advisor before investing
எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்? உங்களுக்கு எந்த ஃபண்ட் சரியா வரும்னு எனக்குத் தெரியாது.
அப்ப உனக்கு என்னதான்யா தெரியும்? உங்க வயது 35 – இன்னிக்கு உங்க குடும்பச் செலவு (பிள்ளைகள் செலவு இல்லாமல்) 25,000 ரூபாய் ஆகுதுன்னா, நீங்க ரிட்டையர் ஆகும் போது (65 வயது, 6% இன்ஃப்லேசன்) மாசம் 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்னு தெரியும்
இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் கல்விக் கட்டண ஏற்றத்துக்கும் பொதுவான விலைவாசி ஏற்றத்துக்கும் சம்பந்தமில்லைன்னு தெரியும். இன்ஃப்ளேசன் 6% ஆக இருக்கும் போதும் கல்லூரிச் செலவு மட்டும் 10% அளவில் ஏறிக்கிட்டே இருக்குன்னு தெரியும்
உங்க பிள்ளைகள் இப்ப ஆரம்பப் பள்ளியில் இருக்காங்க, அவங்க கல்லூரி போகும் போது தலா 50 லட்சம் ஆக மொத்தம் 1 கோடி ரூபாய் செலவாகும்னு தெரியும்
வங்கி தரும் வட்டி இப்ப 7% அளவில் இருக்குன்னும் அது மேலும் குறையும்னும் தெரியும். இன்சூரன்ஸ் கம்பெனிகளின் எந்த ஒரு திட்டமும் 5-6 % மேல் ரிட்டர்ன் தராதுன்னு தெரியும். இவற்றில் முதலீடு செய்தால் பொருளாதார இலக்குகளை எட்டவே முடியாதுன்னு தெரியும்
நீண்ட நாள் முதலீட்டில் பங்குச் சந்தை மட்டுமே இன்ஃப்ளேசனைத் தாண்டி ரிட்டர்ன் தந்திருக்கு, தரும் என்று தெரியும்.
ஓய்வு கால திட்டமிடல் மிக நீண்ட பயணம். மார்க்கெட் வீழ்ச்சி தற்காலிகமானது, போன வருச மிட் கேப் வீழ்ச்சி மார்க்கெட் சந்திக்கும் முதல் வீழ்ச்சியுமல்ல நிச்சயமாக கடைசி வீழ்ச்சியுமல்ல. உங்க குறிக்கோள் நீண்ட கால பயணமாக இருந்தால் சிறு சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை
2017 முடிவில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.21.38 லட்சம் கோடி. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
நம் நாட்டில் மொத்தம் 44 ஃபண்ட் நிறுவனங்கள் 2000-க்கும் அதிகமான ஃபண்ட் திட்டங்களை நடத்துகின்றன. இவற்றுள் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும், அதற்கு என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?
1. திட்டத்தின் வளர்ச்சி வரலாறு
ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எவ்வளவு வருமானம் ஈட்டியிருக்கிறது என்கிற தகவல் முக்கியம்தான்; ஆனால், அது மட்டுமே போதுமா என்றால் நிச்சயம் இல்லை. ஒரு காரின் ரியர் வியூ மிரர், காரை பின்னோக்கிக் கொண்டு செல்ல முக்கியம். ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு கார் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வருமானம் குறித்துப் பார்க்கையில், குறுகிய கால வருமானத்தில் அதிக கவனம் செலுத்தாமல், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு வருமானம் என்று பார்க்க வேண்டும்.
2. தொடர்ச்சியான வருமானம்
இதுவும் ஃபண்டின் வருமானம் குறித்ததுதான். கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஃபண்ட் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாருங்கள். உதாரணமாக, கணேஷ் முதலீடு செய்த ஃபண்ட் ஆண்டுக்கு 10% தொடர்ச்சியாக வளர்ந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் முதலீடு செய்த ரூ.1 லட்சம் ரூ.2,59,374-ஆக உயர்கிறது. ஆனால், கணேஷின் நண்பர் சுந்தர் முதலீடு செய்த ஃபண்டோ ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதத்தில் லாபமும், நஷ்டமும் தந்து, பத்து ஆண்டுகளுக்குப்பின் அவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம் ரூ2,21, 922-ஆக இருக்கும். இதிலிருந்து தொடர்ச்சியான, நிலையான வருமானம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
3. சந்தை விழும்போது ஃபண்டின் செயல்பாடு
மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகளில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தையின் போக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரதிபலிக்கும். பங்குச் சந்தை 10% ஏறும் காலத்தில், நல்ல ஃபண்ட் பத்துக்கும் மேற்பட்ட சதவிகித வளர்ச்சியைக் காணும். அதைவிட முக்கியம், பங்குச் சந்தை 20% வீழ்ச்சியடையும்போது அதைவிடக் குறைவாக நஷ்டம் அடைவதே ஒரு நல்ல ஃபண்டின் அடையாளம்.
2008-ம் ஆண்டு, பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி யடைந்தது. அப்போது சந்தை வீழ்ச்சியைவிடக் குறைவான அளவு நஷ்டத்தைத் தந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பாப்புலராக இருந்தன.
சந்தை வீழ்ச்சி குறித்து பேசும்போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ஓர் ஆண்டில் 50% நஷ்டத்தைச் சந்திக்கும் ஒரு ஃபண்ட் அடுத்த ஆண்டு 100% லாபம் பார்த்தால் தான் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். அதாவது, ஒரு ஃபண்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் 50% நஷ்ட மடைந்து 50,000 ரூபாயாகக் குறைந்தால், அடுத்த ஆண்டு 100% லாபம் ஈட்டினால்தான் ரூ.1 லட்சத்தை எட்ட முடியும்.
4. முதலீட்டு ஸ்டைல்
முதலீடு செய்வதற்குமுன் முதலீட்டாளர் தன் வயதுக்கேற்ற ‘அஸெட் அலோகேஷனை’ முடிவு செய்ய வேண்டும். லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால் கேப், கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்யப் போகிறோம் என்று உறுதியாக முடிவு செய்துவிட வேண்டும். உதாரணத்துக்கு, பங்குச் சந்தையில் செய்ய வேண்டிய முதலீடு செய்தபின் மீதமிருக்கும் முதலீட்டுக்கு மற்ற சொத்துகளில் முதலீடு செய்ய பரிசீலிக்க வேண்டும்.
5. ஃபண்டின் வயது
பொதுவாக, புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதைவிட நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. பத்தாண்டுகளாக இருக்கும் ஃபண்டுகள் ஓரிரு மார்க்கெட் வீழ்ச்சியைச் சமாளித்து வந்திருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து, நல்ல வருவாய் ஈட்டி யிருக்கும் ஃபண்டுகள், தொடர்ந்து பரிமளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
6. ஃபண்டின் அளவு
நாம் முதலீடு செய்யும் ஃபண்டில் குறிப்பிடத்தக்க அளவு பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஃபண்டுகளில் சில ஆயிரம் கோடிகள் பொதுவாக இருக்கும். ரூ.5-10 கோடிகள் மட்டுமே இருக்கும் ஃபண்டுகளால் பெரிய முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது. மேலும், ரூ.5-10 கோடி களுக்கான செயல்திறனை வைத்து அந்த ஃபண்ட் ரூ.1,000 கோடி என வரும்போது எப்படிச் செயல்படும் எனக் கணிக்க முடியாது.
7. பல்வேறு கட்டணங்கள்
ரமேஷும், சுரேஷும் பால்ய நண்பர்கள். இருவரும் 30 வயதாகும் போது மாதம் ரூ.5,000-க்கு எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆரம்பித்தார்கள். ரமேஷ் முதலீடு செய்த ஃபண்டின் கட்டணம் 1%, சுரேஷுக்கோ 2%. இரு ஃபண்டுகளும் ஒரே அளவு வளர்ந்தன. 65 வயதில் ஓய்வு பெறும்போது ரமேஷிடம் இருந்தது ரூ. 34,270,234. சுரேஷிடம் இருந்ததோ ரூ.33,294,070. அதாவது, வெறும் ஒரு சதவிகித கட்டணத்தால் சுரேஷ் இழந்தது சுமார் ரூ.3.5 லட்சம். எனவே, கட்டணத்தில் கவனம் மிக முக்கியம்.
8. நிதி நிர்வாகி
ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும் முன் அதன் ஃபண்ட் மேனேஜர் குறித்தும், அவர் ஃபண்டை எவ்வளவு நாளாக நிர்வாகம் செய்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதற்கு முன் நிர்வகித்த ஃபண்டுகளின் வளர்ச்சி குறித்து அறிவது உதவி யாக இருக்கும். ஐந்து ஆண்டுகளாக அதீத வளர்ச்சி அல்லது சுமாராக போய்க்கொண்டிருந்த ஒரு ஃபண்ட், கடந்த ஓராண்டில் பெரிய அளவில் மாறியிருந்தால் முதலில் நாம் பார்க்க வேண்டியது ஃபண்ட் மேனேஜர் மாறியுள்ளாரா என்பதையே. அதன்பிறகு அந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
9. ரேட்டிங்
வேல்யூ ஸ்டார் ஆன்லைன் ரிசர்ச், மணி கன்ட்ரோல் போன்ற இணையதளங்கள் அனைத்து ஃபண்டுகளையும் ஆராய்ந்து அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்குகின்றன. மற்ற காரணிகள் அனைத்தையும் பார்த்தபிறகு நாம் தெரிவு செய்த ஃபண்டுகளுக்கு 4 அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கி யிருக்கிறார்களா என்று பார்த்து, நம் தேர்வு சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
10. செக்டோரல் ஃபண்ட்
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகள், அனைத்துத் துறை நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யும். அவ்வாறில்லாமல் ஒரேயொரு துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் அதாவது, ஒரேயொரு செக்டாரில் முதலீடு செய்வது செக்டோரல் ஃபண்ட். ஒரேயொரு துறை என்பதால், அந்தத் துறை குறித்து வெளியாகும் செய்தி, அரசின் கொள்கை முடிவுகள் இத்தகைய ஃபண்டுகளைப் பெரிதும் பாதிக்கும். இந்த வகை ஃபண்டு களின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் செக்டோரல் ஃபண்டுகளைத் தவிர்ப்பது நலம்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஐந்தறிவு படைத்த யானை கூட தான் இறக்கும் போது அதன் மதிப்புக்கு ஈடான தந்தத்தை விட்டுச் செல்கிறது.
நீங்க சம்பாதிக்கும் பொதே திடீரென இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு என்ன விட்டுட்டுப் போகறீங்க? ஈராண்டு செலவுக்கு வரும் எண்டோமெண்ட் பாலிசிகளையா அல்லது யூஸ்லெஸ் யூலிப் பாலிசிகளையா அல்லது குடும்பத்தைப் பாதுகாக்கும் டெர்ம் பாலிசிகளையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
”நல்ல முதலீடு”, வருமானவரி சேமிக்கும் வழி, புள்ளைங்க எதிர்காலத்துக்கு அவங்க பேர்ல பாலிசி போடுங்க – போன்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி பாலிசி போட்டால் கஷ்டப்படப்போவது நீங்களல்ல, உங்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படப்போவது உங்க குடும்பம்தான்.
எண்டோமெண்ட் பாலிசி போடச் சொல்லி வற்புறுத்தறவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி -இதுல காப்பீடு எவ்வளவுன்னு கேளுங்க – ? ஒருத்தரோட சம்பளம் மாதம் 50,000 ரூபாய், அதில் அவரால் 5% க்கு மேல் காப்பீட்டுக்கு செலவு செய்ய முடியாது அதாவது மாதம் 2500ரூபாய் – இதில் எவ்வளவு எண்டோமெண்ட் கவர் எடுக்க முடியும் தெரியுமா? தோராயமாக 7,5,000 மட்டுமே (35 வயது, 30 ஆண்டுகள் ஜீவன் ஆனந்த்) – நீங்கள் உயிரோடு இருந்தால் மாசம் 50,000 ரூபாய் கொண்டு வருவீங்க, அதுவும் உயர்ந்துகிட்டே போகும். திடீர்னு நீங்க இறந்தா வெறும் 7.5 லட்சத்தை வச்சிக்கிட்டு உங்க குடும்பம் எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும்?
27,000 ரூபாய்க்கு எவ்வளவு டெர்ம் பாலிசி எடுக்க முடியும் தெரியுமா? 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எல் ஐ சியில் எடுக்கலாம். தனியார் நிறுவனத்தில் எடுத்தால் கிட்டத்தட்ட 15-18 ஆயிரம் ரூபாய் ப்ரீமியத்துக்கே இவ்வளவு கவரேஜ் எடுக்கலாம். அதாவது உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு. இதை வச்சிக்கிட்டு உங்க பிள்ளைகள் தலையெடுக்கும் வரை கௌரம்வமா உங்க குடும்பம் வாழ்ந்து விடமுடியும்
உங்க இழப்பை ஈடுசெய்ய முடியாது, ஆனால் நீங்க ஈட்டும் வருமானத்தை கண்டிப்பாக ஈடுசெய்ய முடியும், ஆனால் அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே முடியும்.
இனியாவது ஆயுள் காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்துப் பார்க்க ஆரம்பிங்க. காப்பீட்டு நிறுவன எண்டோமெண்ட் பாலிசிகள் 5-6% மிக அதிகபட்சமாக 7% வளர்ச்சி கிடைக்கலாம், அதற்கு மேல் தரக்கூடிய திட்டம் இல்லை. செல்வமகள் போன்ற அரசின் திட்டங்களில் கூட இதை விட அதிக வட்டி கிடைக்கிறது. நீண்ட கால பங்குச் சந்தை முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட்கள்) 10-15%க்கும் மேல் வளர்ச்சி தந்துள்ளன. சலூன்ல போய் சாம்பார் பொடி கேக்கமாட்டீங்கல்ல, அது போல வங்கிகளில் டெபாசிட், கடன் பத்தி மட்டும் பேசுங்க, காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு பத்தி மட்டும் பேசுங்க, முதலீட்டுக்கு முதலீட்டு நிறுவனங்களை அணுகுங்க
டெர்ம் பாலிசியைத் தவிர வேறெந்த ஆயுள் காப்பீட்டையும் வாங்காதீங்கன்னு எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் பாலிசி நல்லாருக்குன்னு சொல்றாங்களே? ஏஜெண்ட் இதுல போட்டா நல்ல ரிட்டர்ன்ஸ் இருக்கும்னு சொல்றாரே? வங்கியில் இந்த இன்சூரன்ஸ் பால்சியில் 8% கேரண்டீட் ரிட்டர்னு சொல்றாங்களே? இது நல்ல முதலீடான்னு கேட்பது நிற்கவேயில்லை
நேரடி / மியூச்சுவல் ஃபண்ட் வழிப் பங்குச் சந்தை முதலீடு எல்லாம் ரிஸ்க்குங்க, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் எண்டோமெண்ட் / ஹோல் லைஃப் பாலிசியில் முதலீடு செய்தா கேரண்டீட் ரிட்டர்ன் கிடைக்கும்னு நினைக்கறாங்க பலபேர்.
இவர்களிடம் நான் கேட்க விரும்பும் இரு கேள்விகள்
1. எந்த எண்டோமெண்ட் பாலிசிலியிலும் ரிட்டர்ன்ஸ் குறித்து எவ்வித கேரண்டியும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
2. வங்கியில் நீங்கள் வைக்கும் பணம்தான் (சேமிப்புக் கணக்கிலோ வைப்பு நிதியிலோ) அதன் மூலப்பொருள். 4 முதல் 7% வட்டிக்கு வங்கி உங்களிடம் பணம் வாங்கி அதை 9-18 % வட்டிக்கு விற்கிறது. உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி கணக்கில் வைத்தால் வங்கி தோராயமாக 4- 5 லட்ச ரூபாயை Fractional Reserve Lending மூலம் கடன் கொடுக்கும். இதன் மூலம் வங்கி வருமானம் பெறுகிறது. பணத்தை மூலதனமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தாத காப்பீட்டு நிறுவனம் எப்படி வங்கியை விட அதிக வட்டி தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவை பொருத்த வரை எல் ஐ சி தான் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். அது தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் உங்களுக்கே புரியும்.
சார், ஷேர்லாம் ரிஸ்க் – மொத்த முதலும் கோவிந்தாவாகிடும், பாலிசில போட்டீங்கன்னா கேரண்டீட் ரிட்டர்ன் என்று சொல்லி ஏஜெண்ட் ஜீவன் ஆனந்துக்கு வாங்கும் ப்ரீமியத்தை எல் ஐ சி பங்குச் சந்தையிலும் அரசு கடன் பத்திரன்களிலும்தான் முதலீடு செய்கிறது. அவற்றிலிருந்து எல் ஐ சி அள்ளி எடுக்கும் வருமானத்தில்தான் உங்களுக்கான போனஸ் கிள்ளித் தரப்படுகிறது.
இவ்வாறு பல ஆண்டுகளாக எல் ஐ சி முதலீடு செய்து வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?
(மே 2018 வரையிலான விவரங்கள்)
நேரடிப் பங்குகளில் முதலீடு – 4.6 லட்சம் கோடிகள்
ப்ரெஃபென்ஸ் ஷேர் 59 ஆயிரம் கோடிகள்
மியூச்சுவல் ஃபண்ட்கள் 25 ஆயிரம் கோடிகள்
அரசு கடன் பத்திரங்கள் 1.6 லட்சம் கோடி
பிர கடன் பத்திரங்கள் 25 ஆயிரம் கோடி
Debentures / Bonds 78 ஆயிரம் கோடி
2018 ல் மட்டும் எல் ஐ சி பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை 58,000 ஆயிரம் கோடி.
இதையெல்லாம் கூட்டி மொத்தமா எவ்வளவு எல் ஐ சி வச்சிருக்குன்னு பாத்துக்கோங்க
எல் ஐ சி முதலீடு செய்திருக்கும் பங்குகள், அரசின் கடன் பத்திரங்கள் அனைத்திலும் நாமும் நேரடியாகவோ மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமோ முதலீடு செய்ய முடியும். எல் ஐ சி யின் போர்ட்ஃபோலியோ திறமையாக நிர்வகிக்கப் படுகிறது என்பது உண்மையே – ஆனால் அதே அளவு திறமையுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.
நொடித்துப் போன நிறுவனங்களை எல் ஐ சியின் தலையில் கட்டுவதை மத்திய அரசு ஒரு பழக்கமாவே வச்சிருக்கு. அது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்கள் எல் ஐ சியை விட சிறப்பாக போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியும்
எல் ஐ சியின் போர்ட்ஃபோலியோ எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் எண்டோமெண்ட் பாலிசிகளில் 5-6% க்கு மேல் ரிட்டர்ன் கிடைக்கப் போவதில்லை. எல்லோரும் பயமுறுத்தறா மாதிரி பங்குச் சந்தை மொத்தமா வீழ்ந்தால் காப்பீடு நிறுவனங்களும் போனஸ் வழங்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்களில் 1-2% கட்டணம் போக மிச்சத்தொகை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது, வளர்ச்சியின் முழு பெனிஃபிட்டும் உங்களுக்கே
டெர்ம் பாலிசி தவிர மற்ற பாலிசிகள் தரும் காப்பிடும் பிரயோசனப்படாது முதலீடாகவும் அவை மோசமானவை என ஏன் சொல்கிறேன்
35 வயதுடைய ஒருத்தர் 30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கறார்னு வச்சிக்குவோம். அவர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்.
5 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் 2 லட்ச ருபாய் ப்ரீமியம் கட்டவே முடியாது
அதே ஆள் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்தால் (35 வயது, 30 ஆண்டுகள்) அதற்கு ப்ரீமியம் வெறும் 11,562 ரூபாய்கள்தான். அதாவது ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய்கள் மட்டுமே. இதை அவரால் சுலபமாக எடுக்க முடியும்.
இப்ப முதலீட்டுக்கு வருவோம். ஜீவன் ஆனந்த் பாலிசியின் முடிவில் கிடைக்கக் கூடிய தொகை 1.8 கோடி, அப்புறமும் காப்பீடு தொடரும், பாலிசிதாரர் இறக்கும் போது ஒரு 50 லட்சம் கிடைக்கும்.
அதற்கு பதிலாக 12 ஆயிரத்துக்கு எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்ச 178,000 ஐ மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் 30 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் உங்களிடம் 5 கோடி ரூபாய்கள் இருக்க நல்ல வாய்ப்புண்டு
இனியாவது உங்க ஓய்வு கால சேமிப்புக்கு எண்டோமெண்ட் பாலிசிகளை நம்பாமல் எல் ஐ சியே நம்பும் பங்குச் சந்தை முதலீடுகளை தேர்ந்தெடுங்கள்
எல் ஐ சியின் முதலீடு குறித்த தகவல்கள் 4/9/2018 அன்று மணிகண்ட்ரோல் தளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டன
பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க் என்போருக்கு நான் சொல்வதும் இதுதான்.
ஒன்றல்ல, இரண்டு – மூன்றாண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை பங்குச் சந்தையில் போடாதீர்கள். பையன் 10 வகுப்பில் இருக்கான், இன்னும் இரண்டே வருசத்தில் காலேஜ் சேக்கத் தேவைப்படும் பணத்தை நேரடி பங்கிலோ ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டிலோ வைக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரம் மார்க்கெட் இறக்கத்தில் இருக்கலாம்.
இதை விட பெரிய ரிஸ்க் என்ன தெரியுமா? 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படாத பணத்தை வைப்பு நிதியில் வைப்பதுதான். 40 வயதில் இருக்கும் ஒருவர் ரிட்டையர்மெண்ட்டுக்காக வைத்திருக்கும் பணத்தை 20 ஆண்டுகள் வைப்பு நிதியில் வைத்திருந்தால் பணம் தேய்ந்து போகும். எப்படி என்கிறீர்களா? வைப்பு நிதியில் 1 லட்சம் 20 ஆண்டுகள் கழித்து தோராயமாக 3 லட்ச ரூபாயக இருக்கும். இன்று 1 லட்ச ரூபாய்க்கு வாங்கக்கூடிய பொருள் அல்லது சேவையின் விலை 20 ஆண்டுகள் கழித்து 3 லட்சத்தைவிட அதிகமாக இருக்கும். அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இன்ஃப்ளேசனை விட அதிகமாக வளர்ச்சி காண வைப்பது புத்திசாலித்தனம்
இப்படிச் சொல்வதை விட நீங்க எல்லாரும் உங்க முதலீட்டை ஜீவன் ஆனந்த் மற்றும் ஜீவன் சரல்ல போட்டு விட்டு அவை உங்க எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று எண்ணியிருக்கும் திட்டங்களின் சொந்தக்கார நிறுவனம்…
ஷேர் மார்க்கெட் எல்லாம் ரிஸ்க் சார், எல் ஐ சி ல போட்டா கேரண்டி சார் என்று முகவர்களால் சர்ட்டிஃபிகேட் வழங்கப்படும் நிறுவனம்..
இந்தியாவின் மொத்த புது இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம் 1.75 ட்ரில்லியன் ரூபாய்கள் அதில் எல் ஐ சி மட்டும் 1.27 ட்ரில்லியன் ரூபாய்கள். எல் ஐ சியின் மொத்த ப்ரீமியம் கலெக்சன் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் – ட்ரில்லியனுக்கு 12 சீரோக்கள் என்பது பதிவுக்கு சம்பந்தம் இல்லாத தகவல்
இழப்புக் காப்பீடு, போனஸ், செலவு போன்றவை போக லாபத்தில் 50% கவர்மெண்ட் செக்யூரிட்டிகள் போட வேண்டும் என்பது விதி.. அதைப் பெரும்பாலும் இந்திய அரசின் பாண்ட்களில் போட்டுவிட்டு மிச்சத்தை எல் ஐ சி ஷேர் சென்ற ஆண்டு மட்டும் மார்க்கெட்டில் போட்ட பணம் எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமில்லை லேடிஸ் & ஜெண்டில்மென் வெறும் ஐம்பதாயிரம் கோடி ருபாய் மட்டும். மார்ச் 31 2017 அன்று எல் ஐ சியின் மொத்த மொதலீடு 24,69,589 கோடி ரூபாய்கள், ஷேர் மார்க்கெட்டில் சென்ற் ஆண்டு லாபம் மட்டும் 1.8 லட்சம் கோடிகள்
உங்க ஜீவன் ஆனந்த் பாலிசியின் ஒரு அம்சம் – லாபத்தில் பங்கு – அந்த லாபம் எங்கேருந்து வருது? அரசு பாண்ட்லேருந்தும் முகவர்களால் ரிஸ்க் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஷேர் மார்க்கெட்டிலிருந்தும்தான்…
மொதல்ல – உங்க யாராலாவது தேவைப்படும் அளவுக்கு (ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு) எந்த ஜீவன் டேஷ் பாலிசியாவது வாங்க முடியுமான்னு பாருங்க (டேஷ்னதும் தப்பா யோசிக்காதீங்க ஜீவன் பக்கத்துல எந்த பேரு போட்டாலும் அப்படி ஒரு பாலிசி இருக்கும், டேஷ்ல உங்க பாலிசி பேரை போட்டுக்கோங்க), வாங்க முடியாதுல்ல… அப்புறம் என்ன டேஷுக்கு அதை வாங்கணும்ங்கறேன்… (இந்த டேஷ் நீங்க நினைச்ச அதேதான்)
ரெண்டாவது முதலீடுன்னு சொல்லி விற்கப்படும் பாசிலிகளின் மூலம் கிடைக்கும் சொற்ப பணமும் ஷேர் மார்க்கெட்டில் லாபம் கிடைச்சால் மட்டுமே என்கிற போது… சல்லிசா டெர்ம் பாலிசியை ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு எடுத்துட்டு மிச்சத்தை ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலம் அதே பங்குச் சந்தைக்கு ஏன் அனுப்பக் கூடாது? இந்த ப்ளானில் பயனர் இறந்தாலும் வருமானத்தின் 10 மடங்கு பணம் குடும்பத்துக்கு கிடைக்கும், இறக்கலேன்னாலும் மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சி மூலம் கணிசமான தொகை கையில் இருக்கும்… இரண்டு சூழ்நிலைகளிலும் குறைந்த அளவே பணம் தரக்கூடிய ஜீவன் —— பக்கம் இனி போவீங்க?
Va Nagappan மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் பொறுமையின்மை குறித்து ஆதங்கப்பட்டிருந்தார்.
அஞ்சு லட்ச ரூபாய்க்கு வாங்குன நிலம் இன்னிக்கு கோடிரூபாய் என்றும் 300 ரூபாய்க்கு வாங்குன தங்கம் இன்னிக்கு 3000ரூபாய் என்றும் வி்யப்போர், அதற்கு ஆன காலத்தை குறிப்பிட மறந்துவிடுகின்றனர். ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும் பொறுமை காக்க தயாராக இருக்கும் அதே ஆட்கள் ஈக்விட்டியில் மட்டும் அவசரப்படுகின்றனர். பணம் போட்ட அடுத்த ஆண்டே ரெட்டிப்பாகணும் என்று எதிர்பார்க்கின்றனர் அல்லது ஆகும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.
பங்குச் சந்தை முதலீடு மந்திரத்தில் மாங்காய் வரவைக்கும் வேலை அல்ல, ஓ எம் ஆர் தாண்டி இன்னிக்கு 10 லட்ச ரூபாய்க்கு இடம் வாங்கிப் போட்டா பிற்காலத்தில் ஒரு கோடி போகும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அதே போல ஏபிசி கம்பெனி குறிப்பிட்ட தொழிலில் இருக்கு, அதுக்கு டிமாண்ட் இருக்கு அந்த டிமாண்ட் மேலும் கூடும் அப்ப அக்கம்பெனிக்கு லாபம் அதிகரிக்கும் அதன் பங்கு விலை கூடும் அதுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்னு கணிச்சு செய்யறதுதான் பங்குச் சந்தை முதலீடு. இதை நம்மால் தொடர்ந்து கண்காணிக்க முடியாது என்பதாலும் சிறு தொகையில் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது என்பதாலும், மாதா மாதம் சிறு தொகை முதலீடு செய்வது ப்ராக்டிகலா ஒத்து வராது என்பதாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம். குறுகிய கால (மூன்றாண்டுகளுக்குள்) தேவையோ இலக்கோ இருந்தால் அதற்கான சேமிப்பை பங்குச் சந்தைக்குள் கொண்டு வராதீர்கள். Wealth Creation / Retirement Planning போன்ற நீண்டகாலத் திட்டங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் போன்று பலன் தரக்கூடியது வேறில்லை என் கருத்தில். ஆனா அதுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் நம்மை பாதிக்க அனுமதிக்ககூடாது,
அப்புறம் தேர்தல் வரப்போகுது, ரிசஷன் வரப்போகுது மார்க்கெட் வீழும், அதனால இப்ப பணத்தை எடுக்கறேன் அப்புறம் மீண்டும் போடறேன் என்பதெல்லாம் நீண்டகால் முதலீட்டின் பயனை அடையமுடியாமல் ஆக்கிவிடும். பங்குச் சந்தையின் போக்கை ஓரளவுக்கு கணிக்ககூடியவர்கள் வாரன் பஃபெட் போன்ற வெகுசிலரே, துல்லியமாக கணிக்ககூடியவர்கள் யாருமேயில்லை, அப்படியிருக்கையில் பங்குச் சந்தை முதலீட்டில் “உள்ளே -வெளியே” விளையாடுவோரின் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து முதலீடு செய்துவருவோரின் போர்ட்ஃபோலியோ சிறப்பாக இருக்கும்.
ஆண்டுக்கொரு முறையாவது ரீபேலன்ஸ் செய்வது அவசியம், போர்ட்ஃபோலியோவை சரிபார்த்து நாம் முடிவு செய்திருக்கும் ஈக்விட்டி – ஃபிக்ஸ்ட் இன்கம் ரேஷியோவுக்கு மறுபடி கொண்டு வரணும் அது வேற, இந்த மாசம் ஈக்விட்டிலேருந்து முழுசா பாண்டுக்கு மாத்தறேன், ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் ஈக்விட்டிக்கு மாத்தறேன்னு போன நஷ்டமே மிஞ்சும். அந்த அளவுக்கெல்லாம் சரியா மார்க்கெட்டை டைம் செய்யக்கூடியவராக இருந்தால் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே தேவையில்லை. அப்படிப்பட்டவர் ஃபியூச்சர் & ஆப்சனில் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்
அப்புறம் இன்னோரு விசயம் – ஆயுள் காப்பீடு எடுத்தாச்சு, மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி ஒரு வருசமா போடற அனுபவம் கிடைச்சாச்சு, அடுத்து என்ன – நேரடி பங்குகளில் முதலீடு செய்வது என்று பலரும் நினைக்கின்றனர். இது மிகவும் தவறு. It is not a natural progression to move from MF to Direct Equity – it is completely different ball game. while it is not impossible to learn what is needed to invest in direct equity, it is a lot to learn and it is ongoing learning. it takes a lot of time and efforts to master “Stock Picking” – yet, Direct equity investing will not cover market volatility like SIP in MF does.
I am not a big fan of DIY direct equity, as a matter of fact, I don’t do it at all.
எந்தப் பங்கை எப்போது வாங்கணும் என்று முடிவு செய்வது கடினம், வாங்கின பங்கை எப்போது விற்கணும் என்று முடிவு செய்வது அதை விடக் கடினம். பங்கின் விலை ஏறிக்கொண்டே இருந்தாலும் விற்க விடாது இறங்கிக் கொண்டேயிருந்தாலும் விற்கவிடாது நம் மனம், அதற்குக் காரணம் நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் எமோசனல் அட்டாச்மெண்ட். அது இல்லாத காரணத்தால் ஒரு ஃபண்ட் மேனேஜரால் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க முடிகிறது.
எனக்கு நேரடி பங்கு வர்த்தகம் குறித்த அனுபவமோ அறிவோ இல்லை, அவற்றைப் பெற படிக்க நேரமுமில்லை ஆனாலும் நேரடி பங்குகள் வாங்கணும் என்று நினைக்கிறீகளா? உங்களுக்கு PMS (portfolio management services) சரியா இருக்கும். 1.5 -2% கட்டணத்துக்கு உங்க பணத்தை “மேனேஜ்” செய்வதற்கு நிறுவனங்கள் உள்ளன. 2% கட்டணம் போனாலும் இறுதியில் சொந்தமா செய்யும் முதலீட்டை விட இது அதிக லாபம் தரும். பி எம் எஸ் கொடுப்பதற்கு குறைந்தபட்சம் உங்களிடம் 25 லட்ச ரூபாய் இருக்க வேண்டும், பெரும்பாலான நிறுவனங்கள் 50 லட்சரூபாய்க்கு குறைந்து பி எம் எஸ் செய்வதில்லை.
அவ்வளவு ரூபாய் சேரும்வரை என்ன செய்வது என்கிறீர்களா? உள்ளே வெளியே விளையாடமால் Keep Investing and Stay Invested in Mutual Funds. Amen
கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் ரீட்டெயில் இன்வெஸ்டர்கள் எஸ் ஐ பி மாதாந்திர முதலீட்டை நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எக்கனாமிக் டைம்ஸ் கட்டுரை சொல்கிறது.
நீங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், முதலீட்டைத் தொடர்வதும், நிறுத்துவதும், இருக்குற பணத்தை எடுத்துக்கிட்டு வருவதும் உங்க விருப்பம், ஆனா இதை விட மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியில் என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.
அக்டோபர் 2008 முதல் மார்ச் 2009 வரை (5 மாதங்கள்), அமெரிக்கப் பங்குச் சந்தை பெறும் வீழ்ச்சியடந்தது. 9 அக்டோபர் 2008 இல் 14,164 புள்ளிகளாக இருந்த டௌ ஜோன்ஸ் குறியீடு 9 மார்ச் 2009 அன்று வெறும் 6504 புள்ளிகளாக ஆகிவிட்டது. 5 மாதங்களில் 54% வீழ்ச்சி. அதாவது அக்டோபர் அன்று உங்க கணக்கில் இருந்த ஒரு கோடி ரூபாய் நீங்க எதுவுமே பண்ணாம 5 மாசம் கழிச்சு 56 லட்சமாக குறைந்திருக்கும். இப்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிறிய வீழ்ச்சிக்கே பயப்படுவோர் 54% குறைந்திருந்தா என்ன பண்ணியிருப்பாங்க?
இந்தியாவில் எப்படியோ தெரியல, அமெரிக்க முதலீட்டாளர்கள் மூவர் என்ன பண்ணாங்கன்னு பாக்கலாம்.
டாம், டிக் & ஹாரி மூவரும் நெருங்கிய நண்பர்கள், மூவரும் ஒரு ஆலோசகர் துணையுடன் ஒரே மாதிரி பங்குச் சந்தை முதலீடுகளை செய்து வந்தனர். 2008இல் சந்தை வீழ்ச்சியடையும் போது மூவரின் கணக்கிலும் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தது. ஒரே மாதிரி முதலீடு செய்து வந்தாலும் 5 மாத தொடர் வீழ்ச்சியின் போது மூவரும் வெவ்வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கினர். ஹாரியைத் தவிர மற்ற இருவரும் ஆலோசகர் பேச்சைக் கேட்பதையும் நிறுத்தி விட்டனர்
டாம் 54% மதிப்பு இறக்கத்தைக் கண்டதும் ரொம்பவே பயந்துவிட்டார். இன்னமும் சந்தையில் பணத்தை வைத்திருந்தால், மொத்தவும் போய்விடும் என்று 10 மார்ச் 2009 அன்று 460,000 டாலர்களையும் எடுத்து வங்கியில் போட்டுவிட்டார். அமெரிக்க வங்கிகள் சேமிப்புக்கணக்குக்கு வெறும் 0.5% மட்டுமே வட்டி கிடைக்கும் அதற்கும் வருமான வரி உண்டு, ஆக மொத்தம் பணம் அப்படியே இருக்கும். ஆனால் 2009 முதல் இன்று வரை அமெரிக்காவில் விலைவாசி 15% உயர்ந்துள்ளது. அதாவது 2009 இல் 400,000 டாலருக்கு கிடைத்த பொருளுக்கு இன்று 460,000 கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது 54%ஐ பங்குச் சந்தையில் இழந்த டாம் இன்னொரு 15%ஐ இன்ஃப்ளேசனில் இழந்து விட்டார்.
டிக் கொஞ்சம் மிதவாதி. டாம் 2009 இல் தன் முதலீட்டை எடுக்கப்போறேன்னு சொன்னதும் இவரும் கொஞ்சம் பயந்து விட்டார். டிக் அதற்கு மேலும் எவ்வித முதலீடும் செய்யவில்லை ஆனால் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு மில்லியன் டாலரைத் தொடவில்லை. இன்று அதன் மதிப்பு 1.9 மில்லியன் டாலர்கள். இன்று டௌ ஜோன்ஸ் குறியீடு 26,627 புள்ளிகள் அதாவது நஷ்டத்தையும் ஈடு செய்து, ஒரிஜினல் முதலீட்டின் இரு மடங்காகவும் ஆகியுள்ளது.
இருப்பதிலேயே ஹாரிதான் புத்திசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி. டாமையும் டிக்கையும் பங்குச் சந்தையில் நீண்டகாலம் நிலைத்திருப்பதை வலியுறுத்தினார், ஒருவர் பாதி கேட்டார் மற்றொருவர் சுத்தமா கேக்கல. பங்குச் சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என்று நம்பிய ஹாரி 10 மார்ச் 2009, ஏற்கெனவே இருந்த முதலீட்டை தொடவில்லை, அது மட்டுமில்லாமல் தன்னிடமிருந்த வேறு சில முதலீடுகளிலிருந்து எடுத்து இன்னொரு மில்லியன் டாலரை 6504 புள்ளிகளில் டௌ ஜோன்ஸ் இருந்த போது சல்லிசா கிடைத்த நல்ல பங்குகளில் முதலீடு செய்தார். ஆக அவரோட மொத்த முதலீடு 2 மில்லியன் டாலர்கள். 54% வீழ்ந்த முதல் மில்லியனின் இன்றைய மதிப்பு 1.9மில்லியன், வீழ்ச்சியடந்த மார்க்கெட்டில் முதலீடு செய்த மில்லியனின் இன்றைய மதிப்பு 4.1 மில்லியன் டாலர்கள். ஆக மொத்தம் 6 மில்லியன் டாலர்கள்.
இப்படம் சொல்ல வர்றது என்னன்னா, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் (பொதுக் காப்பீடு வழங்கும் நிறுவனம்) செப்டம்பர் வரையிலான அரையாண்டில் ஈட்டிய நிகர லாபம் 96,382 லட்சம், இதே அரையாண்டில் இந்நிறுவனம் அதன் முதலீடுகளின் மூலம் பெற்ற லாபம் 1,97,225 லட்சம். இது பங்குச் சந்தை முதலீடுகளில் கிடைத்த லாபம். நிறுவனத்தின் பிசினஸ் காப்பீடு வழங்கி அதில் லாபம் பார்ப்பது, ஆனால் நடப்பதோ முதலீட்டில் லாபம் பார்ப்பது, இன்னும் சொல்லப் போனால், பங்குச் சந்தை முதலீடு மட்டும் இல்லாமல் போனால் இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.
இன்சூரன்ஸ் கம்பெனிகள் நம்மிடமிருந்து வசூலித்த ப்ரீமியம் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பெரும் லாபம் சம்பாதிக்கட்டும், நாம் வழக்கம் போல, ஷேர் மார்க்கெட் எல்லாம் ரிஸ்க் & சூதாட்டம்னு சொல்லிட்டு அனைத்து ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்வோம்.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பென்சன் என்கிற safety net இருந்தது. ரிட்டையர் ஆகும் போது சொந்த வீடும் கையில் கொஞ்சம் காசும் இருந்தா போதும் என்கிற நிலை. நிரந்தர வைப்பு நிதி தரும் வட்டியும் பென்சனும் வாழப் போதுமானதாக இருந்தது.
தொண்ணூறுகளில்
ஏற்பட்ட பொருதாளார மாற்றத்துக்குப் பின் நிலை வெகுவாக மாறியுள்ளது. சந்தை பொருளாதாரத்தில்
வாழத் தேவையும் அதிகமாகிப் போனது, பென்சனும் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக
தனியார் நிறுவன ஊழியர்கள் ரிட்டையர்மெண்ட் குறித்து யோசிக்க ஆரம்பித்தன் விளைவே ம்யூச்சுவல்
ஃபண்ட்களின் வளர்ச்சி.
2007 மார்ச்
மாதம் 3 லட்சம் ரூபாய் கோடி அளவில் இருந்த ம்யூச்சுவல் ப்ஃண்ட்களின் AUM (Asset
Under Management) 2014 ஆண்டு முதல் முறையாக 10 லட்சம் கோடியை எட்டியது, அதுக்கப்புறம்
அசுர வளர்ச்சி கண்டு இன்று அது 20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது மூன்றே ஆண்டுகளில்
இரு மடங்கு வளர்ச்சி அதுவும் பத்து லட்சம் கோடி ருபாய் அளவுக்கு.
பலரும் ம்யூச்சுவல்
ஃபண்ட் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வந்தாலும், இன்னமும் இந்தியாவில்
முதலீடு குறிந்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். இருந்திருந்தால்,
யூலிப் போன்ற திட்டங்களில் இன்னும் மக்கள் பணம் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
போகிற போக்கில்
“மச்சான் ஒரு டீ சொல்லேன்” ரேஞ்சில் மாசம் அஞ்சாயிரம் இன்வெஸ்ட் பண்ணனும் நல்ல ம்யூச்சுவல்
ஃப்ண்ட் சொல்லேன் அப்படிங்கறாங்க.
முதலீடு அப்படிங்கறது
“one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள.
Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின்
அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி
கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு
அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள்
செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்
அது போல, முதலீடு
செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு
என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும்
(5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும்.
உதாரணத்துக்கு..
ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக
சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க
முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள்
கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும்.
இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ
தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது.
குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.
கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம்.
பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம்.
அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.
அப்படி ம்யூச்சுவல்
ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது
என்று முடிவு செய்வது கடினம்.
ஈக்விட் ஃபண்ட்,
பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப்
ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப்
என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.
நேரடி பங்குச்
சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை
இதை
ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு
10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க.
மேலே
சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
முதலீடு,
பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
கையில்
இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால
இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
எப்பேர்பட்ட
முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
அவசரத்தேவைக்கு
மாச சம்பளத்தின் 1-2 மடங்கு இருக்கட்டும்
ஈக்விட்டி
/ பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா
வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர்
70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை
குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது,
அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும்
வைக்கணும்
குறைந்த
பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
பங்குச்
சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள்
துணையைப் பெருவது நல்லது.
முதலீட்டு ஆலோசகர்களைத்
தேர்ந்தெடுப்பது எப்படி?
உடல் நலம் காக்கும்
மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித்தான். நீங்க ஃபீஸ் ஏதும் கொடுக்க வேண்டாம், மருந்து கம்பெனிகளிடம்
கமிசன் வாங்கிக்கறேன்னு ஒரு டாக்டர் சொன்னா அவரிடம் போவோமா? ஒரே மருந்தை நூறு கம்பெனிகள்
தயாரிக்கின்றன, எந்த கம்பெனி அதிக கமிசன் தருதோ அவங்க மாத்திரையைத்தானே அவர் பரிந்துரை
செய்வார். கம்பனி அதையும் நம்ம கிட்டதான் வசூல் செய்யும். அதே லாஜிக்தான் முதலீட்டு
ஆலோசகர்களுக்கும். அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் “Fee Only” Advisors இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. வாடிக்கையாளர்
தரும் 0.5 – 1 % மட்டுமே இவர்களின் வருமானம். இவர்கள் பரிந்துரைக்கும் ம்யூச்சுவல்
ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து இவர்கள் கமிசன் ஏதும் பெறக்கூடாது. இப்படி இருந்தால் அவர்
பாரபட்சமின்றி நல்ல முதலீடுகளை நமக்குக் காட்டுவார்கள்.
எப்படி டாக்டர்,
வக்கீல், இஞ்சினியருக்கு ஃபீஸ் கொடுத்து கன்சல்டேசன் பெருகிறோமோ அப்படி முதலீட்டு ஆலோசகர்ளுக்கும்
கொடுத்தால்தான் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்
லாபத்தில் பங்கு
என்று ஒரு முறை இருக்கிறது. அதிலிருக்கும் ரிஸ்க் – அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆலோசகர்கள்
ரிஸ்க் அதிகமான முதலீடுகளை பரிந்துரைக்கும் வாய்ப்பு இருப்பதால் அது உசிதமல்ல.
ம்யூச்சுவல்
ஃப்ண்டில் போடறதா இருந்தா www.valueresearchonline.com போன்ற வெப்சைட்களில் லார்ஜ் கேப், ஸ்மால்
கேப், பாண்ட் இவற்றில் டாப் 10 ஃபண்ட்கள் குறித்து பாத்துட்டு போங்க, இவை தவிர ஆலோசகர்
வேறு ஃபண்ட்களை பரிந்துரை செய்தால், காரணம் கேளுங்க, அந்த ஃபண்ட் டாப் 10 ஃபண்ட்களை
விட எந்த விதத்தில் சிறந்தது என்று கேளுங்க. பதில் திருப்தியா இருந்தால் அதில் முதலீடு
செய்யுங்க. சில டாக்டர்கள் நான் டாக்டரா நீயான்னு கேக்கறா மாதிரி கேட்டா ஆலோசகரை மாத்திடுங்க.
இதெல்லாம் ரொம்ப
கஷ்டம் பாஸ், எனக்கு சிம்பிளா 3-4 ஃபண்ட் சொல்லுங்க, அதில் பணம் போடறேன்னு சொல்றவரா
நீங்க? உங்களுக்கென உருவானதுதான் Robo Investing என்கிற கான்செப்ட். ரோபோ இன்வெஸ்டிங்
தளங்களில் நீங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சா, வயசு, முதலீடு செய்ய இருக்கும் தொகை, காலம்,
உங்க risk appetite ஒரு சில அடிப்படை கேள்விகள் கேக்கும். பதில்களை வைத்து அதில் உள்ள
அல்கோரிதம் உங்களுக்கென ஒரு ப்ரத்யேக போர்ட்ஃபோலியோ கொடுக்கும், அது எவ்வளவு ப்ரத்யேகம்னா,
உலகில் உள்ள எல்லா மகர ராசிகாரர்களும் ஒரே பலன் சொல்றது எவ்வள்வு ப்ரத்யேகமோ அந்த அளவுக்குத்தான்
இதுவும். அது சொல்லும் ஃப்ண்ட்களில் பணம் போட எழுதிக் கொடுத்தா மாதா மாதம் உங்க வங்கிக்
கணக்கில் இருந்து பணம் எடுத்து அதுவே முதலீடு செய்து விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை
அதுவே ரீ பேலன்சிங் செய்து விடும். அமெரிக்காவில் Betterment, Wealthsimple,
Wealth Front என நிறைய ரோபோ பேலன்சிங் தளங்கள் உள்ளன. இவர்கள் 0.25% முதல் 0.5% வரை
ஃபீஸ் வாங்குகிறார்கள்.
இந்தியாவில்
இந்த கான்செப்ட் இன்னும் சூடு பிடிக்க வில்லை, www.wealthy.in, www.goalwise.com போன்றோர் ரோபோ இன்வெஸ்டிங் சேவை அளிக்கின்றனர்.
இவற்றில் பிரச்சனை மேலே சொன்ன ஃபீஸ் வாங்கும் வழிதான். நம்மிடம் ஃபீஸ் வாங்காமல், ம்யூச்சுவல்
ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து கமிசன் பெறுகின்றனர். இந்நிலை மாறும் போது இன்னும் நல்ல
ஃபண்ட்களை இவர்கள் பரிந்துரை செய்வார்கள் என நம்பலாம்.
தற்போது இந்தியாவில்
உள்ள ம்யூச்சுவல் ஃபண்ட்கள் 2-3 % அளவுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்க இதுவும் ஒரு
காரணம். அமெரிக்காவில் வேன்கார்ட், ஃபிடெலிடி நிறுவனங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்கள்
0.3% முதல் 0.9% வரையிலும் actively managed funds 0.5% முதல் 1% வரையிலும் கட்டணம்
பெற்று வருகின்றன. இந்த அளவுக்கு குறையலேன்னாலும் இந்தியாவில் இப்ப இருக்கும் கட்டணங்கள்
பாதி அளவுக்காவது குறையணும்.
எல்லாம் சொல்லிட்டு
என்னிக்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்னு சொல்லணும் இல்லையா? முதலீடு செய்ய ஆரம்பிக்க
உகந்த நாள் “இன்று”. நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே உங்க ஓய்வு கால திட்டமிடுதலைத்
தொடங்குங்க