புத்திசாலித்தனமான முதலீடு… தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ம்மவர்கள் முதலீடு செய்வதே பெரிய விஷயம். அப்படிச் செய்கிறவர்களும் சிலபல தவறுகளைச் செய்துவிடுவதால், அந்த முதலீட்டின் மூலம் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு நாம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?    

1. செலவும், முதலீடும் ஒன்றல்ல 

எது செலவு, எது சேமிப்பு என்பதில் பலருக்கு  குழப்பம் இருக்கிறது. தங்கம் நல்ல முதலீடு என இன்னும்கூட பலரும் நினைக்கிறார்கள். தங்க நகை வாங்குவது முதலீட்டில் வராது. தினமும் ஓட்ட பயன்படுத்தும் காரும் அப்படித்தான். ரூ.10  லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார், ஷோரூமை விட்டு சாலைக்கு வந்ததும் அது செகண்ட் ஹாண்ட் காராகி, அதன் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகிவிடும். 

இதுபோலவே, காப்பீடும் செலவே. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, பொருள்களுக்கான காப்பீடு எல்லாம் செலவே. பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ‘முதலீடு’ செய்வதாக நினைத்துப் பணத்தை விரயம் செய்கின்றனர். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைக் காப்பீடு பாலிசி பெற மட்டுமே அணுக வேண்டும். முதலீடு என்பது உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்க வேண்டும்.  

2. ஓய்வுக்காலத் தேவைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி 

“பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேராது” என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஓய்வுக்காலத்துக்காக காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது தவறானது. காப்பீடும் முதலீட்டு வளர்ச்சியும் வழங்கும் திட்டங் களில் (ULIP) உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடும் கிடைக்காது, வருமானமும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், நீண்ட நாள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.  

3. தொடர்ச்சியான முதலீடே ஜெயிக்கும்

பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வரும்போது எல்லாரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் செய்வது தவறு. அதைவிடப் பெரிய தவறு, பங்குச் சந்தை விழும்போது முதல் ஆளாக போய் பணத்தை எடுப்பது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ளாமல் அதில்  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan – SIP) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது.  

4. முதலீட்டைப் பரவலாக்காமல் இருப்பது

என்ரான் நிறுவனம், தன் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு முழுவதையும் என்ரான் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதித்தது. அந்த நிறுவனம் திவாலானபோது, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிட்டது. எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் (Don’t put all your eggs in one basket) வந்ததால் வந்த தொல்லை இது. ஒரு நல்ல சொத்துப் பகிர்வில் (Asset Allocation) நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம்/ வெள்ளி அனைத்தும் இருக்க வேண்டும். 

5. கட்டணங்களில் கவனம் செலுத்தாதது

ஒவ்வொரு முதலீட்டுக்கும் கட்டணம் உண்டு. அவற்றில் கூடுதல் கவனம் அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமானது செலவு விகிதம் என அழைக்கப்படும். இதனைப் பார்க்க சிறிதாகத் தெரியும். கட்டணங்கள், 20-30 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும்போது போர்ட்ஃபோலியோவின் செயல் திறனை அது பெரிய அளவில் பாதிக்கும். ஒரே மாதிரியான இரு ஃபண்டுகளை ஒப்பிடுகையில் குறைவான செலவு விகிதம் கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. உதாரணம், இண்டெக்ஸ் ஃபண்டுகள்.

6. கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்வது  

ஒரு ஃபண்டின் ஐந்து மற்றும் பத்தாண்டு கால வருமானம் / வளர்ச்சி ஒரு முக்கியக் காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே முதலீட்டை முடிவு செய்யும் காரணியாக இருக்க முடியாது. ஃபண்டின் ஸ்டைல், அளவு, கட்டணம், டேர்ன் ஓவர், ரேட்டிங், ஃபண்ட் மேனேஜரின் செயல்திறன் ஆகிய காரணிகளை வைத்தே ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிலர் ஓராண்டு வருமானத்தை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பார்கள். இது மகா தவறு.

7. வருமான வரிச் சலுகையில் மட்டும் கவனம் செலுத்துவது

அதிகம் பேர் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக வரி விலக்கை நினைக்கிறார்கள். வரி விலக்கில்லா முதலீடு 20% வளர்ச்சி தரும் நிலையில், வருமான வரி விலக்குத் தரும் முதலீடு 10% தந்தால் அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. எனவே, வரி விலக்கு என்பதை மட்டும் பார்க்காமல், அது தரும் வருமானத்தையும் பாருங்கள்.

8. அதிக ரிஸ்க் எடுப்பது அல்லது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பது

சிலர் அஸெட் அலோகேஷன்படி பிரித்து முதலீடு செய்யாமல் எல்லாப் பணத்தையும் அக்ரெஸிவ் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மார்க்கெட் வீழ்ச்சி அடையும்போது இந்த போர்ட்ஃபோலியோ அதிக அளவில் நஷ்டத்தைத் தரும். வேறு சிலரோ, சேமிப்பு முழுவதையும் வங்கி வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். இவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருந்தாலும், வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இரு நிலைகளும் தவறு. முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க் குறைவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும். 

9. ஆலோசகர்களைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை ஆலோசகர்களாக்குவது

முதலீடு செய்யத் தேவையான அளவு அறிவு, அனுபவம், நேரம் இருப்பவர்கள் பிறர் துணையின்றி தாமே முதலீடு செய்யலாம். பெரும்பாலானோருக்கு இவை மூன்றும் இருப்பதில்லை. அவர்கள், ஒரு நல்ல நிதி ஆலோசகரை நாடுவது நலம். டாக்டர், வக்கீலைப்போல நிதி ஆலோசகரும் ஒரு புரஃபஷனல்தான். அவருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டும். அந்தச் செலவு உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைக்கவும், அதே சமயத்தில் வளர்ச்சி காண வைக்கவும் உதவும். நண்பர்களை ஆலோசர்களாக்குவதைத் தவிர்ப்பது நட்புக்கு நல்லது. 

10. தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது 

முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. அவ்வப்போது போகும் பாதை, வேகம், எரிபொருள் அளவு இவற்றைக் கண்காணிப்பது போல, முதலீட்டிலும் செய்ய வேண்டும். நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி போய்க்கொண்டிருக்கிறது. இனி ரிட்டயர்மென்ட் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்று இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோவைப் பார்த்து, அதை மாற்றியமைக்க வேண்டுமெனில், அதை செய்தே ஆகவேண்டும். 

25 ஆண்டுகளில் இந்திய சந்தைதான் பெஸ்ட்!

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைதான் மிகச் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 1,357 சதவிகிதமும், சென்செக்ஸ் 1,289 சதவிகிதமும் லாபம் தந்திருக்கின்றன. ஜெர்மனி 755%, அமெரிக்கா 688% லாபம் தந்திருக்கின்றன. 

கொரியா, தைவான், சீனா, பிரான்ஸ் நாட்டு பங்குச் சந்தைகள் 200 சதவிகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பங்குச் சந்தை 179 சதவிகிதமும், ஜப்பான் பங்குச் சந்தைகள் வெறும் 44 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. 

ஈக்விட்டியும் பாண்ட் முதலீடும்

ஈக்விட்டியும் பாண்ட் முதலீடும். 
இவை இரண்டும் ஒரு போர்ட்ஃபோலியோவின் ஸ்டெபிலிட்டிக்கு மிக முக்கியம். ஈக்விட்டி வளர்ச்சிக்கும் பாண்ட் சேஃப்டிக்கும் முக்கியம்.

ஈக்விட்டி ஒரு காரில் இருக்கும் ஆக்சிலரேட்டர் என்றால் பாண்ட் ப்ரேக் போன்றது. ப்ரேக் வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினாலும், கார் தறிகெட்டு ஓடி ஆக்சிடெண்ட் ஆகாமல் காக்கும்.

பல முதலீட்டாளர்கள் இரண்டிலும் சரியான நேரத்தில் முதலீடு செய்யாமல் விட்டு விடுகிறார்கள்

இளம் வயதினர் மார்க்கெட்டில் எல்லாருக்கும் 30-40 % வளர்ச்சி கிடைக்கிறதே என்று சேமிப்பு அனைத்தையும் ஈக்விட்டியில் போடுகின்றனர். பங்குச் சந்தை மேலே மட்டுமே போகும் வரையில் இது நல்லாத்தான் இருக்கும், சந்தை வீழ்ச்சி அடையும் போது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பாண்ட்கள்தான் ஸ்டபிலிடி கொடுக்கும்

இதற்கு நேர் மாறாக ரிட்டையர் ஆக இருப்போரும் ரிட்டையர் ஆனவர்களும் முதலை சேமிப்பதாக எண்ணி ஈக்விட்டியை முழுதுமாக தவிர்க்கின்றனர். இதுவும் தவறும். ஓரளவுக்கு ஈக்விட்டி இல்லாத போர்ட்ஃபோலியோவின் வளர்ச்சி மிகக்கம்மியாக இருக்கும்.

இளம் வயதினரின் போர்ட்ஃபோலியோவில் 20% மாவது பாண்ட்களும் முதியோரின் போர்ட்ஃபோலியோவில் 20-30 அல்லது 40 % வரை ஈக்விட்டியிலும் வைப்பது ஒரு நல்ல அசெட் அலோகேசனாக இருக்கும்.

Rear View Mirror Investing

No photo description available.

Statistics are like Mini Skirts, They reveal most things but cover the most important thing. This is one such superficial argument – first of all, it doesn’t talk about Income Tax – if you are in 30% slab, the FD amount becomes 10490 , then it takes a bad year to compare

How about taking the Real return after taxes of Rs 1 L invested 10 years ago? Real Return is after paying Income Tax

Amount in US market became half from 2008 to 2009 – almost 50% negative returns – Warren Buffet did not go bankrupt, he stayed put and it became multi fold

FD is wealth preservation and Equity is for Wealth Creation – An Investor should decide based on his need, investment goals and risk appetite

FD rates in India are just about the Inflation rate – small shift in FD rates or in Inflation would make them meaningless

Rear View Mirror Investing

இந்த ஆண்டு இந்த கம்பெனியின் பங்கை இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால் இன்னிக்கு இத்தனை கோடி ஆகியிருக்கும்னு ஃபார்வேர்ட் மெசஜ் எழுதறதுக்கு தடை விதிக்கச் சொல்லணும், முடியல இவனுங்களோட

After the Fact இப்படி நடந்திருந்தா இப்படி ரிசல்ட் வந்திருக்கும்னு சொல்றது ரொம்ப ஈசி, அப்படி எழுதறவங்களில் ஒருத்தர் கூட அந்நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலையில் வாங்கி பெருமளவு சம்பாதித்ததாகத் தெரியவில்லை.

ரிலையன்ஸ் பங்கை வாங்கியிருந்தால், எச் சி எஃப் சி வாங்கியிருந்தால், ஐடிசி வாங்கியிருந்தால்னு தால் போஸ்ட் எழுதறவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கறேன் – உங்க தந்தையிடமிருந்து புறப்பட்ட மில்லியன் கணக்கான விந்தில் வேற விந்து மில்லி செகண்ட் வேகத்தில் ஜெயித்திருந்தால் இந்த மாதிரி போஸ்ட் எழுத நீங்கள் பிறந்தேயிருக்கமாட்டீர்கள்

Investment is Individualistic

Image result for one size does not fit all

ஒரு நண்பர் லாபம் தரக்கூடிய SIP Scheme ரெண்டு சொல்லுங்கன்னு கேட்டிருந்தார். போற போக்கில் சொல்லிட்டுப் போக அது ஒன்றும் ஃபாஸ்ட் புட் ஆர்டர் அல்ல. ரொம்ப நாளைக்கு முன்ன எழுதிய போஸ்ட்டிலிருந்து ஒரு பகுதியை மறுபடி எழுதறேன்

முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்

அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் (5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும். 
உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.

கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.

அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.

ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.

நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை

0. இதை ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு 10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க. 
1. மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
2. முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
3. கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
4. எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
5. சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு 
6. அவசரத்தேவைக்கு மாச சம்பளத்தின் 3-6 மடங்கு இருக்கட்டும்
7. ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும்
8. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
9. பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.

நானோ யாராவது ஒருவரோ இப்ப நாலு ஃபண்ட் பேரைச் சொல்லிட்டுப் போயிடலாம், அவை தொடர்ந்து நல்லா செயல் படும் என்று சொல்ல முடியாது, அதுக்குத்தான் ஆண்டுக்கு ஒருமுறை எல்லாத்தையும் பாத்து ரீபேலன்சிங் செய்யணும் என்று சொல்றது. இதைத் தொடர்ந்து செய்ய கட்டணம் வாங்கும் ஆலோசகரால்தான் முடியும். இலவசமாக சொல்லும் என் போன்றோர் உங்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது.

மருத்துவம் போல் முதலீட்டு ஆலோசனையும் ஒரு ஸ்பெசாலிட்டி ப்ரொஃபசன், அத்துறையில் நிறைய வல்லுனர்கள் இருக்காங்க, அவர்களில் நல்லவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் உதவியுடன் முதலீடு செய்யுங்க

5% Rule and Retirement Corpus

ஓய்வு கால சேமிப்பு குறித்த தலைப்பில் எவர் க்ரீன் கேள்வி ரிட்டையர்மெண்ட்டுக்கு எவ்வளவு சேக்கணும் என்பதே. அதிலும் நாற்பதைத் தொட்டவர்களின் மனதில் வியாபித்திருப்பது இது, நண்பர் Murali Kannan அவர்கள் கூட சமீபத்தில் நாற்பதைத் தொட்டவர்களின் ரிட்டையர்மெண்ட் கவலை குறித்து எழுதியிருந்தார்.

முந்தைய தலைமுறை போல நமக்கு பென்சன் எனும் லக்சரி கிடையாது. பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிற்கவும் முடியாது. நம் ஓய்வு காலத்துக்கு நாமே சேமித்தால்தான் உண்டு. இதையும் 5% விதியையும் விளக்கவே இப்பதிவு.

ரிட்டையர்மெண்ட்டுக்குத் தேவைப்படும் தொகையை துல்லியமாக யாராலும் கணிக்க முடியாது – மருத்துவம் போன்ற எதிர்பாரா செலவுகள் அதிகரிக்கக்கூடும், இன்ஃப்ளேசன் அடுத்த 20- 30 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது – ஆனால் இன்றிருக்கும் தகவல்களைக் கொண்டு தோராயமாக இதைக் கணிக்க முயல்கிறேன்.

40 வயதாகும் ஒருவர் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். ரிட்டையர் ஆகும் அன்னிக்கு கடனில்லாத வீடு இருக்கணும், பிள்ளைகளின் படிப்புச் செலவு முடிந்திருக்கணும். இவற்றைச் செய்து முடிக்காமல் ரிட்டையர் ஆவது கடினம். 
இன்றைய உங்க குடும்பச் செலவுக் கணக்கை எடுங்க, அதில் வீட்டுக்கடன், பிள்ளைகள் படிப்புச் செலவு, பிள்ளைகளின் பிற செலவுகளை நீக்கிடுங்க – மிச்சமிருப்பதுதான் நீங்களும் உங்க மனைவியும் வாழத்தேவையான பணம். 
2019 ஜனவரி மாதம் உங்க வயசு 40 ஆக இருக்கும் போது இத்தொகை 25000 ரூபாய் / ஆண்டுக்கு 3 லட்ச ரூபா என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியாவின் இன்ஃப்ளேசன் தோரயமா 6% அதாவது இந்த ஆண்டு 100 ருபாய் இருக்கும் பொருளோ சேவையோ அடுத்த ஆண்டு 106 ரூபாயாக இருக்கும். இப்படியே கணக்குப் போட்டால் உங்களுக்கு 60 வயது ஆகும் போது இன்றிருக்கும் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய உங்களுக்கு ஆகும் செலவு 9,62,141 – ஒன்பது லட்சத்து அறுபத்து இரண்டாயிரம் ரூபாய். அதற்கப்புறமும் இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் 85 வயது வரை எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டிருக்கிறேன். இன்று ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தரும் லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய 85வது வயதில் ஆண்டுக்கு 41 லட்சத்து 29 ஆயிரத்து 383 ரூபாகள் ஆகும்.

அது என்ன 5% விதி இது ஆக்சுவலா விதி அல்ல, பொருளாதார / சேமிப்பு வல்லுனர்கள் ரிட்டையர்மெண்ட் சேமிப்பிலிருந்து ஆண்டுக்கு 5% மட்டுமே உருவி செலவு செய்யலாம் என அறிவுரை சொல்கின்றனர். அதற்கு மேல் எடுத்து செலவு செய்தால் நீங்க சேர்த்து வைத்திருக்கும் தொகை உங்க வாழ் நாள் முழுமைக்கும் வராமல் போகலாம், கடைசி காலத்தில் செலவுக்கு காசில்லாமல் நீங்கள் நிற்கும் நிலை வரலாம் என்கிறனர்.

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்போர் தம் சேமிப்பை பங்குச் சந்தை முதலீடு போன்ற ரிஸ்கான வழிகளில் முதலீடு செய்யலாம், இதையே ரிட்டையர் ஆன ஒருவர் செய்ய முடியாது – ரிட்டையர்மெண்ட் தொகையை வங்கி வைப்பு நிதி, அரசு கடன் பத்திரங்கள் போன்ற சேஃபான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது நலம். ரிஸ்க் இல்லாத / கம்மியான முதலீடுகளின் ரிட்டர்னும் கம்மியாவே இருக்கும். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இத்தகைய முதலீடுகளின் ரிட்டர்ன் 5% க்கு மேல் இருக்க வாய்ப்புகள் குறைவு.

அதாவது உங்க சேமிப்பு ஆண்டுக்கு 5 % ரிட்டர்ன் கொடுக்கும் அதே சமயம் உங்க செலவோ ஆண்டுக்கு 6% அதிகரித்துக்கொண்டேயிருக்கும். அப்ப நீங்க வட்டி மட்டுமல்லாது அசலில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். இதை சமாளிக்க நீங்க செய்ய வேண்டியது உங்களுக்கு 60 வயது ஆகும் போது இருக்கக் கூடிய ஆண்டு செலவின் 30 மடங்கை சேமிப்பு இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். இது இன்று 40 வயது ஆகும் ஒருவரின் தற்போதைய செலவின் 100 மடங்கு.

40 வயது ஆகும் ஒருவரின் குடும்பச் செலவு ஆண்டுக்கு 3 லட்சம் (வீட்டுக்கடன், பிள்ளைகள் செலவு சேர்க்காமல்) 60 வயதில் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்யத் தேவை ரூ9,62,141. அங்கிருந்து ஆரம்பித்து 85 வயது ஆகும் போது வாழத் தேவையான சேமிப்புத் தொகை 2 கோடியே 88 லட்சத்து 64 ஆயிரத்து 219 ரூபாய்கள்.

இப்போது எக்செல் ஷீட்டை ஒரு முறை பாருங்கள். அந்நபர் ரிட்டையர் ஆகும் அன்று இத்தொகையை சேமித்து வைத்திருக்கிறார். கணக்கு எளிதாகப் புரிவதற்கு ஜனவரி 1 அன்றே அந்த ஆண்டுக்கான செலவு 962141 மொத்ததையும் கழித்து விட்டு மிச்சம் 2,79,02079க்கு மட்டும் 5% வளர்ச்சி போட்டு அந்த ஆண்டு இறுதியில் 2929783 ரூபாய் அவரிடம் இருக்கும். அடுத்த ஆண்டு 6% விலைவாசி உயர்வில் செலவு 1019869 ஆக இருக்கும். அது போக மிச்சமிருக்கும் 2,82,77,313 ரூபாய் 5% வளர்ச்சி பெற்று 29691179 ஆக இருக்கும். வளர்ச்சி 5% லேயே நிற்கும் ஆனால் செலவோ அதிகரித்துக் கொண்டேயிருகும். 2 கோடியே 88 லட்சத்தில் ஆரம்பித்த சேமிப்பு 10 ஆண்டுகள் அதிகரித்து 70 வயதில் மூணு கோடியைத்தாண்டும் ஆனா அதற்கப்புறம் செலவு அதிகரித்து அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். 74 வயது ஆகும் போது 60 வயதில் ஆரம்பித்ததை விட கம்மியாகும்… அது மேலும் குறைந்து கொண்டே வந்து 85ம் வயது முடிவில் வெறும் 2 லட்ச ரூபாய் மட்டுமே கையிருப்பு இருக்கும்.

வளரும் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களை வளர்த்து ஆளாக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், அதே ரிட்டையர் ஆனப்புறம் சேமிப்பு கரைந்தபின்பும் உயிரோடு இருக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள். 85 வயது வரை கணக்கிட்டு சேமித்து அதற்கு முன்னர் இறந்தால் பிள்ளைகள் சந்தோசமாக மிச்சப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள், அதே பெற்றோரின் சேமிப்பு 70 வயதில் கரைந்து விட்டால் அதற்கப்புறம் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் குறைவே.

சரி இத்தனை பணத்தை எப்படி எங்கு சேமிப்பது? மாதம் 20,000 ரூபாயை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 20 ஆண்டுகள் சேமித்தால் 3 கோடி ரூபாயை எட்டி விடலாம். எந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பதை ஒரு நல்ல ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை எல்லைக் கோட்டை நிர்ணயிக்காமல் சேமித்தவர்களும் சேமிப்பே இல்லாதவர்களும் இனியாவது சரியான பாதையில் சேமிக்கத் தொடங்குங்கள்

No photo description available.

ஓய்வுக்காக உழைத்திடு

Image may contain: sky, outdoor and nature

The Most Beautiful View comes after the Hardest Climb

It takes years of preparation, many encounters with smaller mountains, Tonnes of training, Lot of Planning and 4 weeks acclimatization before anyone could even attempt the Mt. Everest. Obviously, one has to go through the hardest climb to get the Most beautiful view from the top of the world

This applies your RETIREMENT too, if you like to get a nice view after retirement, you got to work hard for years to get that. If you believe a passive investment with an Insurance company (Endowment policies like those Jeevan Dashes), you are grossly mistaken. They do not suffice any need – Insurance or Investment.

Save for a Safe Retirement

சேமிப்பின் பத்து விதிகள்

Status

1. இலக்கை நிர்ணயுங்கள் – இலக்கில்லா சேமிப்பு அர்த்தமில்லாதது. உங்களுக்கான இலக்கை முதலில் முடிவு செய்யுங்கள்

2. பட்ஜெட் அத்தியாவசியம் – இலக்கை முடிவு செய்தபின் வருமானத்தின் 70-80 %க்குள் உங்க செலவுகளைத் திட்டமிடுங்கள். பட்ஜெட்டை எப்போதும் மீறாதீர்கள்

3. சேமிப்பை சீக்கிரமே ஆரம்பியுங்கள் – சம்பாதிக்க ஆரம்பித்ததும் சேமிக்க ஆரம்பியுங்கள். இப்பத்தான் வேலைக்குப் போயிருக்கேன், சேமிப்பெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்னு விடாதீங்க. மாசம் 10,000 ரூபாய் 20 வருசம் முதலீடு செய்துவந்தால் இறுதியில் 76 லட்சரூபாய் இருக்கும். அதையே 30 வருசம் முதலீடு செய்து வந்தால் இறுதில் 2.3 கோடி ரூபாய் இருக்கும். அதுதான் கூட்டு வட்டியின் மகிமை

4. வருமானம் உயரும் போது சேமிப்பையும் உயர்த்துங்கள் – ஊதிய உயர்வு வரும் போது சேமிப்பின் அளவும் உயர வேண்டும். 10% அதிக ஊதியம் வந்தால் சேமிப்பும் குறைந்தபட்சம் 10% உயரமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

5. நல்ல ஆலோசகரை கண்டறியுங்கள் – முதலீட்டின் முதல் எதிரி எமோசனல் முடிவுகள். உங்க பணத்தை நீங்களே முதலீடு செய்யும் போது அதில் உங்க எமோசனை வைப்பது இயல்பு, அதையே ஒரு ஆலோசகர் செய்யும் போது முடிவுகள் ரேசனலாக இருக்கும். ஆலோசகருக்கு கட்டணம் தர வேண்டியிருக்கலாம், ஆனால் அது நீண்ட காலத்தில் பயன் தரும்

6. கற்பதை நிறுத்தாதீர்கள் – ஆலோசகர் இருந்தாலும் நீங்களும் தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். முதலீட்டு வாய்ப்புகள், வரி – வரி விலக்கு, சந்தையின் போக்கு போன்றவை குறித்து படிப்பதை நிறுத்தாதீங்க

7. பங்குச் சந்தை இறக்கத்தை எப்போதும் எதிர்பாருங்கள் – நீண்ட காலம் முதலீடு செய்யும் போது சந்தை இறக்கம் வந்தே தீரும். அது நாளையே நடக்கும் என்று எப்போதும் எண்ணுங்கள். அப்படி இறக்கம் வந்தால் என்ன செய்வது என்று முடிவு செய்தவர்களுக்கு அது ஆப்பர்ச்சுனிட்டி. சந்தை இறக்க நேரத்தில் பணத்தை எடுக்காமல் இருக்க, அவசரகால நிதி எப்போதும் கையிருப்பு இருக்கட்டும். எவ்வளவு மோசமாக வீழ்ந்தாலும் மூன்றாண்டுகளுக்கும் மீண்டு வந்தது என்பது வரலாறு. இரண்டு ஆண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை சந்தை முதலீட்டில் வைக்கமல் இருந்தால் எந்த வீழ்ச்சி குறித்தும் கவலைப்படத் தேவையில்லை

8. முதலீட்டை பரவலாக்குங்கள் – எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு

9. ஆண்டுக்கொரு முறை முதலீட்டை சரிபாருங்கள் – பார்த்து தேவையான மாறுதல்களைச் செய்யுங்கள்

10. ஆயுள் காப்பீடு எடுங்கள் – எவ்வளவுதான் பாசிடிவான ஆளாக இருந்தாலும் காப்பீடு விசயத்தில் மட்டும் பெசிமிஸ்ட்டாக இருங்கள். நாளை நாம் இல்லேன்னா? என்ற கேள்வி எப்போதும் இருக்கட்டும். நீங்க இருக்கும் போது குடும்பத்துக்கு வழங்கிய லைஃப்ஸ்டைலை நீங்க இல்லேன்னாலும் அவர்களுக்கு வழங்க வேண்டியது உங்க கடமை. அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே தர முடியும். ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டெர்ம் பாலிசி எடுத்து வையுங்கள்.


மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் மாதாமாதம் முதலீடு செய்வோருக்கு இலவச ஆயுள் காப்பீடு

The following is purely my personal opinion. This is NOT to sell or recommend Any specific mutual fund. Consider your current financial situation, your financial goals and consult a financial advisor before making any investments

ஆயுள் காப்பீடு, நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு இவற்றின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து சொல்லிக்கிட்டு வர்றேன்.

இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கும் யூலிப் பாலிசிகள் இவை இரண்டையும் வழங்கறோம்னு சொல்லிக்கிட்டு உங்க பணத்தை சுரண்டுகின்றன. இதற்கு நேர்மாறாய் – மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் மாதாமாதம் முதலீடு செய்வோருக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகின்றன இரு நிறுவனங்கள்

ரிலையன்ஸ் மற்றும் ஆதித்ய பிர்லா நிறுவனங்கள் எஸ் ஐ பி சந்தாதாரர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகின்றன.

இரண்டு திட்டங்களையும் படித்துப் பார்த்ததில் எனக்கு பிர்லா நிறுவனத்தின் திட்டம் பெட்டராகப் படுகிறது.

ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்வோருக்கு முதலாம் ஆண்டு மாதச் சந்தாவின் பத்து மடங்கும், இரண்டாம் ஆண்டு 50 மடங்கும் மூன்றாம் ஆண்டிலிருந்து 100 மடங்கும் இலவச ஆயுள் காப்பீடு வழங்குகிறது. 
அதாவது மாதம் 10,000 ரூ நீங்கள் முதலீடு செய்து வந்தால் மூன்றாம் ஆண்டிலிருந்து 10 லட்ச ரூபாய் இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

There is no free Lunch என்கிற சொலவடைக்கு ஏற்ப, இதிலும் சில கண்டிசன்கள் இருக்கின்றன, ஆனால் அவை முதலீட்டாளரை டிசிப்ளின் செய்யவே உதவும். இந்த செஞ்சுரி எஸ் ஐ பியில் மூன்றாடுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யணும், ஓராண்டுக்குள் பணத்தை எடுத்தால் 2% கட்டணமும், ஓராண்டு முதல் மூன்றாண்டுக்குள் எடுத்தால் 1% கட்டணும் வசூலிக்கப்படும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு பணம் எடுத்தால் கட்டணம் கிடையாது. மூன்றாண்டுக்குள் முதலீட்டை நிறுத்தினால் காப்பீடும் நின்றுவிடும்.
மூன்றாண்டுகள் பணம் செலுத்தியபின், தொடர்ந்து பணம் செலுத்தா விட்டாலும், பணத்தை எடுக்காத வரையும் முதலீட்டாளருக்கு 55 வயது ஆகும் வரையும் காப்பீடு தொடரும்.

முதல் 45 நாட்களுக்கு விபத்தினால் நிகமும் மரணம் மட்டுமே காப்பீட்டால் கவர் செய்யப் படுகிறது, அதற்கப்புறம் அனைத்து வித மரணங்களும் கவர் செய்யப் படுகின்றன. காப்பீடு வழங்கப்படும் முன் உங்களுக்கு இருக்கும் நோயினால் மரணம் நேர்ந்தாலும் காப்பீட்டு பணம் கிடைக்காது.

இப்படி சில பல கண்டிசன்கள் இருந்தாலும், இலவசமாக கிடைக்கும் கூடுதல் ஆயுள் காப்பீடு நல்ல விசயமே.

இதையும் உங்களுக்குத் தேவையான ஆயுள் காப்பீட்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு ஆயுள் காப்பீடு அனைவருக்கும் அவசியம். ஒரு வேளை வருமானம் ஈட்டுபவர் இறக்க நேரிட்டால், இது கொஞ்சம் கூடுதல் தொகையை குடும்பத்துக்கு வழங்கும். வருமான வரி சேமிப்புக்காக மட்டும் இன்சூரன்ஸ் வாங்குவதை விட முட்டாள்தனாமனது இலவச காப்பீட்டுக்காக மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. ஒரே மாதிரி இருக்கும் இரு ஃபண்ட்களில் எதை தெரிவு செய்வது என்ற குழப்பம் இருந்தால், இலவச காப்பீட்டை ஒரு காரணியாக எடுக்கலாம். மத்தபடி நீங்க எப்ப வேணா முதலீட்டை நிறுத்தலாம் அல்லது மாத்தலாம் – அப்ப காப்பீடும் போய்விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

Mutual Fund முதலீடு

மியூச்சுவல் முதலீடு ஆரம்பிச்சிட்டீங்க, இனிமே நீங்க செய்யவேண்டியவை

1. ஒழுங்கா மாதா மாதம் தவறாமல் முதலீடு செய்யுங்க

2. தெனமும் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டில் லாகின் பண்ணி பேலன்ஸ் ஏறியிருக்கா இறங்கியிருக்கான்னு பாத்துக்கிட்டே இருக்காதீங்க

3. ஒரு ஃபண்ட் மேனேஜரை நம்பி பணம் போட்டுட்டீங்க, மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் அவர் நல்லா செயல்படுவார்னு நம்பி கொஞ்ச காலமாவது வெயிட் பண்ணுங்க

4. ஆறு மாசத்துக்கு ஒரு முறை ஃபண்ட் எப்படி செயல் படுதுன்னு பாருங்க, அதே கேட்டகரியில் மத்த ஃபண்ட்களின் வளர்ச்சியையும் பாருங்க, 1-2% வித்தியாசம் இருந்தால் ஒண்ணும் செய்ய வேண்டாம், அதுக்கு மேல இருந்தா ஃபண்ட் ஸ்விட்ச் செய்வது குறித்து யோசிக்கலாம்

5. ஆண்டுக்கு ஒரு முறை ரீபேலன்சிங் செய்யுங்க. அதாவது லார்ஜ் கேப் 50% மிட் கேப் 30% பாண்ட் 20% என்று முடிவு செஞ்சிருக்கீங்கன்னு வச்சிப்போம். மாசம் 10,000 முதலீடு – ஓராண்டு முடிவில் 1.2 லட்சம் முதலீடு 1.5 லட்சமாக இருக்கும். அதில் 50% 75,000 அதுக்கு மேல லார்ஜ் கேப்பில் இருப்பதை எதில் கம்மியா இருக்கோ அதுக்கு மாத்துங்க… அதிக லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஃபண்டில் இருந்து கம்மி லாபம் கொடுக்கும் பாண்டில் ஏன் போடணும்னு நீங்க கேக்கலாம். மார்க்கெட் பெருசா விழும் போது அதுதான் உங்களை தாங்கிப் பிடிக்கும்.

6. மார்க்கெட் ஏறும் போது முதலீடு செய்வது எளிது, மார்க்கெட் விழும் போது எடுத்துக்கிட்டு ஓடி வந்து விடக்கூடாது. மார்க்கெட் கீழ வரும் போது அதை மேலும் வாங்க ஆப்பர்ச்சுனிட்டியாகத்தான் பார்க்க வேண்டும். வீழ்ந்த மார்க்கெட் மேல எழுந்து தான் ஆக வேண்டும் அதுதான் நியதி, அப்படி எழும் போது நீங்க கம்மி விலைக்கு வாங்கின யூனிட்கள் அதிக லாபம் தரும்

7. தொடர்ந்து சந்தை, முதலீடுகள் குறித்து படித்துக் கொண்டே இருங்கள், புதிதாய் வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்து முதலீடு செய்யுங்கள்

மிக மிக முக்கியமான பாயிண்ட் – முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. ஒரு வேளை பணம் இழக்க நேரிட்டால் என்னைத் தேடி வந்து உதைக்காதீர்கள்