போரிஸ் பெக்கர் – டென்னிஸில் வெற்றி வாகை சூடியவர் வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய முதலீட்டு பாடம்

போரிஸ் பெக்கர் – எண்பதுகளில் டென்னிஸ் பார்த்தவர்கள் யாரும் இப்பெயரை மறந்து விட முடியாது. Serve and Volley யின் கிங் போரிஸ் பெக்கர். இவர் விளையாடி பெற்ற பரிசுப்பணம் $ 25 மில்லியன், எண்டார்ஸ்மெண்ட்டிலும் நிறைய சம்பாதித்தார். தற்போது 50 வயதாகும் பெக்கர் 2017 லேயே திவால் நோட்டீஸ் கொடுத்தார், கடன்களை அடைக்க தன்னுடைய மெடல்களையும் கப்புகளையும், புகைப்படங்களையும் ஏலத்துக்கு விடறாராம்.. அவர் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம். வருமானம் ஈட்டினால் மட்டும் போதாது, அதை ஒழுங்கா பாதுகாக்கவும் தெரியணும். சம்பாதிக்கும் போதே நல்ல முறையில் முதலீடு செய்து சேமிக்கும் பணம் வாழ்நாள் முழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

https://www.business-standard.com/article/sports/tennis-legend-boris-becker-to-auction-trophies-souvenirs-to-pay-debt-119062400496_1.html

சொந்த வீடா வாடகை வீடா?

To rent or buy

நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி – வீட்டுக்கடனில் வீடு வாங்கலாமா அல்லது வாடகை வீட்டிலேயே இருக்கலாமா? என்பதுதான்

போதாக்குறைக்கு வாடகை கொடுத்துட்டு மிச்சத்தை முதலீடு செஞ்சா எவ்வளவு சேக்கலாம்னு ஒரு ஸ்லைடு வேற அப்பப்ப வலம் வரும். அந்த ஸ்லைடில் வாடகை உயர்வு, ஷேர் மார்க்கெட் volatility, Appreciation of the house போன்ற பல முக்கிய விசயங்கள் விடுபட்டிருக்கும், அதுக்கெல்லாம் மேல கடன் வாங்கினாத்தான் வீடே வாங்க முடியும் – அது இல்லாம வாடகை வீட்டில் இருக்கும் போது எங்கேருந்து முதலீடு செய்வது??

தோராயமா ஒரு கணக்கு 
சென்னை புறநகரில் ஒரு அப்பார்ட்மெண்ட் 40 லட்சம். முன்பணம் 8 லட்சம், 32 லட்சத்தை கட்டி முடிக்கும் போது 66 லட்சம். ஆக மொத்தம் வீட்டுக்கு கொடுத்தது 74 லட்சம். 34 லட்சத்துக்கு வரி விலக்கு ஒரு 10 லட்சம், 20 ஆண்டுகளுக்கு தோராயமா வாடகை 36 லட்சம் – இது ரெண்டையும் கழிச்சா வீட்டின் அடக்க விலை 28 லட்சம் – 20 ஆண்டுகள் கழிச்சு வீட்டை 50 லட்சத்துக்கு வித்தா கையிருப்பு 22 லட்சம். 
இதுக்கு பதிலா 8 லட்சத்தை முதலீடு செஞ்சா 8% கூட்டு வட்டியில் 20 ஆண்டு கழித்து கையிருப்பு 37 லட்சம் – ஆக சொந்த வீடு வாங்கினா கூடுதல் செலவு 15 லட்சரூபாய்

இதே ஒரு பிள்ளையைப் பெத்தா இன்னிக்கு அதை ஆளாக்குறதுக்கு இதை விட பல மடங்கு செலவாகும், ஆனா யாருமே புள்ளை பெத்துக்கறது லாபமா நட்டமான்னு கேக்க மாட்டாங்கறாங்களே ஏன்?

ஏன்னா, வீடு என்பது முதலீடு என்றே இந்தியச் சமூகம் சிந்திக்கிறது. இதுநாள் வரை வீடும் நிலமும் வளர்ச்சியடைந்தே வந்திருக்கிறது. வாங்கி பத்தாண்டுகள் கழித்து அப்பார்ட்மெண்ட்கள் வாங்கிய விலைக்குப் போவதே பெரும்பாடாக மாறும் போது இச்சமூகம் இப்படி கேள்வி கேட்கிறது.

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ROI பார்க்க முடியாது – 
எல்லா வாட்ச்களும் ஒரே நேரத்தைதான் காட்டுகின்றன – நாம் Titan or Fossil வாங்குகிறோம் 
உடலை மறைக்க 200 ரூபாய் சட்டை போதும் நாமோ 2000 ரூபாய் கொடுத்து ப்ராண்டட் சட்டை வாங்குகிறோம்
டூ வீலரில் போனாலும் சேருமிடம் போய்ச் சேரலாம், ஆனாலும் கார் வாங்குகிறோம்

இவற்றைப் போல சொந்த வீடும் ஒரு செலவே… 
It offers Intangible benefits like many other expenses we do. 
The Perceived Security and Stability own house offers can never be offered by a rental unit.

ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி இருவரும் சொந்த வீடு வேணும்னு நினைச்சா வாங்கணும், வேண்டாம்னு நினைச்சா வாங்க வேண்டாம் – இதுக்கு மேல இதுக்கு பதில் கிடையாது.

வாழப்போகும் வீட்டுக்கு வட்டிக் கணக்கு பாக்கமுடியாது.

இளைஞர்களுக்கு காப்பீடு முதலீடுத் திட்டம்

தமிழகத்தில் தற்போது நிறைய இளைஞர்கள் தம் 25 வயதில் ஆண்டுக்கு அஞ்சு லட்சம் சம்பாதிக்கறாங்க. இன்னமும் பெற்றோருடன் இருப்பதால் அவர்களுக்கு பெரிசா செலவு கிடையாது. இந்த சில ஆண்டுகள் வாழ்வின் பெரும்பகுதிக்காக திட்டமிட, சேமிக்க சிறப்பான காலம்.

முதலீட்டைப்பத்தி யோசிக்கற்துக்கு முன்ன ஆயுள் காப்பீட்டை பாருங்க. உடனடியா ஒரு பெரிய தொகைக்கு டெர்ம் இன்சூரன்ஸ் ப்ளான் எடுங்க . 
காப்பீட்டின் அளவு, காலம் நிறுவனங்களுக்கிடையே மாறுபடலாம். ஆதித்ய பிர்லா சன்லைஃப் நிறுவனம் 40 வயது வரை உள்ளவர்களுக்கு ஆண்டுவருமானத்தின் 20 மடங்கு வரை காப்பீடு வழங்குகிறது. அதிகபட்சமாக 50 ஆண்டுகாலம் வரை கவர் செய்கிறது (80 வயது உச்ச வரம்பு, அதாவது 30 வயதானவர் 50 ஆண்டு கவர் எடுக்கலாம், 40 வயதானவருக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள்)

இளமையில் காப்பீடு எடுப்பது மிகவும் சிறந்தது, வயது ஏற ஏற ப்ரீமியத்தின் விலையும் அதிகமாகும். 25 வயதில் ஒருவர் தேவையான அளவு டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து விட்டால் அவர் ரிட்டையர் ஆகும் வரை ப்ரீமியத்தின் விலை மாறாது. இன்னிக்கே கம்மியாத் தெரியும் ப்ரீமியம் 20-25 ஆண்டுகள் கழித்து ஒரு பொருட்டாகவே தெரியாது ஆனால் உங்களுக்குத் தேவையான காப்பீடு ரிட்டையர் ஆகும் வரை தொடரும்.

ஆயுள் காப்பீட்டுத்தேவை என்பது Sine wave இன் மேல் பகுதியைப் போன்றது. சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது பூஜ்யமாக இருக்கும் காப்பீட்டுத் தேவை சம்பளத்துடன் சேர்ந்து உயரே பயணிக்க ஆரம்பிக்கும் ரிட்டையர் ஆகும் தினம் காப்பீட்டின் தேவை மீண்டும் பூஜ்யமாகும். Sine Wave இல் Crest எனப்படும் உச்ச பாயிண்ட் பொதுவா வாழ்வில் 45- 50 வயதுகளில் இருக்கும் – அப்பதான் நாம் Careen Peak இல் இருப்போம், குடும்பத்துக்கும் பொருளாதாரத் தேவை உச்ச நிலையில் இருக்கும். அப்ப யோசிச்சு காப்பீடு எடுத்தா ப்ரீமியம் அதிகமாத்தான் இருக்கும். அதுக்கு பதிலா அதிக கமிட்மெண்ட் இல்லாத 25 வயதில் 5 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் 1 கோடி ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து விட்டால் சம்பளம் 10 லட்சம் ஆகும் வரையாவது காப்பீடு குறித்த கவலையின்றி இருக்கலாம். இதுவும் வேலை செய்யும் நிறுவனம் தரும் ஆயுள் காப்பீடும் போக இன்னமும் காப்பீடு வேண்டுமென்றால் மட்டும் அப்புறம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம்.

எல்லாம் சரி, 25 வயதில் காப்பீட்டுக்கு எவ்வளவு ஆகும்னு கேக்கறீங்களா?

புகை பிடிக்காத ஆண், வயது 25, காப்பீட்டின் காலம் 40 ஆண்டுகள் (65 வயது ரிட்டையர்மெண்ட் வரை), ஆண்டுக்கொரு முறை ப்ரீமியம் செலுத்தும் முறை

ஒரு கோடிக்கு – ரூ 9,912 ( மாத செலவு 826 ரூ மட்டுமே) 
1.5 கோடிக்கு ரூ 14,042 (மாத செலவு 1170)

2 கோடிக்கு ரூ 18,172 (மாத செலவு 1514)

புகை பிடிக்காத பெண், வயது 25, காப்பீட்டின் காலம் 40 ஆண்டுகள் (65 வயது ரிட்டையர்மெண்ட் வரை), ஆண்டுக்கொரு முறை ப்ரீமியம் செலுத்தும் முறை

ஒரு கோடிக்கு – ரூ 8,762 (மாத செலவு 730 ரூ மட்டுமே)

1.5 கோடிக்கு ரூ 12,361(மாத செலவு 1030)

2 கோடிக்கு ரூ 18,172 (மாத செலவு 1330)

மேலே சொன்ன ப்ரீமியம்கள் வரிகள் உள்பட கால்குலேட் செய்யப்பட்டவை

80 சி செக்‌ஷன் வருமானவரி விலக்கை முழுதாக இந்த வயதில் உபயோகிக்க மாட்டார்கள், எனவே இந்த ப்ரீமியம் தொகைக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும். தோராயமா 20% வரி விலக்கு என்று வச்சிக்கிட்டாலும் 2 கோடி ரூபாய் காப்பீட்டுக்கு 25 வயது ஆண் செலுத்தும் Effecitve Premium 18172 less 20% வெறும் 14,538 அதாவது மாதம் 1211 ரூபாய்க்கு ரெண்டு கோடி காப்பீடு அதுவும் ரிட்டையர்மெண்ட் வரை ப்ரீமியத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல். 25 வயது பெண்ணின் Effecitve Premium 15690 less 20% ஆண்டுக்கு 12,768 மட்டுமே.

காப்பீட்டுத் தேவையை பூர்த்தி செய்தப்புறம் முதலீட்டுக்கு வாங்க

குடும்பம் நடத்த ஆரம்பித்தபின் வருமானத்தில் 20% வரையே பொதுவா சேமிக்க இயலும், 25 வயதில் பெற்றோருடன் இருக்கும் வரை செலவுகள் கம்மியா இருக்கும், இந்த நேரத்தில் 30-40-50 % வரை கூட சேமிக்க முடியும்.

நீங்க வாழ வீடு தேவைப்படும் வரையில் வீடு வாங்காதீங்க. வருமானவரி சேமிபுக்காக வீட்டுக் கடன் வாங்குவது வீண் விரயம். முன்பு போல இனி ரியல் எஸ்டேட் விலை ஏறுவது சந்தேகமே. அப்பார்ட்மெண்ட்களின் வாழ்நாள் 20-30 ஆண்டுகள் மட்டுமே.

வேலைக்குப் போனவுடன் கடனில் கார் வாங்குவதும் உசிதமல்ல. வாரத்தில் 5 நாள் காரை வீட்டில் தூங்க வைத்து விட்டு, கார் இருக்குதேன்னு வார இறுதியில் பீச்சுக்கும் சினிமாவுக்கும் காரில் போவது Doesn’t name any financial sense. காருக்கான மாதாந்திரத் தவணையில் சிறு பகுதியை ஓலா / ஊபருக்கு செலவிட்டு மிச்சத்தை முதலீடு செய்து வந்தால் சில ஆண்டுகள் கழித்து காரின் முழு விலையை இல்லாவிட்டாலும் பெரும் பகுதியை டவுன் பேமெண்ட்டாக கட்டலாம்.

புதிய பென்சன் திட்டம் முதலீட்டுக்கு ஒரு சாய்ஸ் என்றாலும் அதில் கட்டுப்பாடுகள் அதிகம். வருமானவரி விலக்கு தேவைப்படுவோர் Aditya Birla Sunlife Tax Relief 96 or Axis Long Term Equity Fund போன்ற ELSS ஃபண்ட்களில் மாதாந்திர முதலீடும் சிறு பகுதி பாண்ட் ஃபண்ட் ஒன்றிலும் முதலீடு செய்யலாம். வருமான வரி விலக்கு தேவைப்படாதோர் ஒரு லார்ஜ் கேப் ஃபண்ட், ஒரு மிட் கேப், ஒரு பாண்ட் ஃபண்ட் அல்லது ஒரு லார்ஜ் கேப், ஒரு பேலன்ஸ்ட் ஃபண்ட் என்று மாதாந்திர முதலீடு செய்யலாம்.

விருப்பம் இருப்போர் www.moneycontrol.comwww.valueresearchonline.com போன்ற தளங்கில் நேரம் செலவிட்டு மியூச்சுவல் ஃபண்ட் குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். விருப்பமும் நேரமும் இல்லாதவர்கள் நல்ல ஆலோசகர் உதவியுடன் மியூச்சுவல் ஃபண்ட்களை தெரிவு செய்யலாம்

சரி பெற்றோர் என்ன செய்யணும்? ஒண்ணும் செய்ய வேண்டாம். இன்றைய இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை தேடிக்கண்டறியும் திறமை கொண்டவர்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு வங்கி வைப்பு நிதி, இன்சூரன்ஸ் கம்பெனியில் முதலீடு தாண்டி பெரிசா தெரியாது. தவறான ஆலோசனை சொல்வதை விட மௌனமாய் இருப்பதே மேல்.

வேகமாய் வண்டி ஓட்டி விபத்து நிகழ்ந்தாலும் பெரும்பாலானோர் மீண்டும் அந்தத் தவறு செய்வார்கள் ஆனால் முதலீட்டைப் பொருத்தவரையில் ஒரு தவறைப்போல பாடம் சொல்லித் தருவது வேறு எதுவுமில்லை. அவர்களே சிறு தவறுகள் செய்து அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும். உங்களிடம் அறிவுரை கேட்டால் மட்டும் சொன்னால் போதும்

முதலீட்டில் முத்தான முப்பது

  1. செலவு போக சேமிப்பு தவறான அணுகுமுறை, சேமிப்பு போகத்தான் செலவு

2. முதலீட்டை விட ஆயுள் காப்பிட்டு முக்கியம்

3. வருமானத்தின் 10% கூட சேமிக்க முடியலேன்னா, உங்க செலவுகளைக் குறைக்கணும் அல்லது உங்க வருமானத்தை உயர்த்தணும்

4. மூன்றாண்டுகளுக்குள் தேவையான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தவறு. பத்தாண்டுகளுக்குப் பின்னரே தேவைப்படும் பணத்தை வங்கி வைப்பு நிதியில் வைப்பது குற்றம்

5. அதிக ரிட்டர்ன் வேணும்னா அதிக ரிஸ்க் எடுத்துத்தான் ஆகணும். முதலுக்குப் பாதுகாப்புதான் முக்கியம்னா, குறைந்த ரிட்டர்னை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

6. 20% ஈக்விட்டி – 80% பாண்ட் போர்ட்ஃபோலியோ வைத்திருப்போர் 5% நட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும். 30-70க்கு 10%, 50-50க்கு 20%, 80-20க்கு 35%, 100% ஈக்விட்டியில் வைத்திருப்போர் 50% நட்டத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்

7. பொருத்தார் பூமி ஆள்வார் – இது பங்குச் சந்தை முதலீட்டுக்குன்னே சொன்ன பழமொழி. செப்டம்பர் 2008 இல் 20,800 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் அக்டோபர் 27, 2008 அன்று 8509க்கு வீழ்ந்தது, ஐயோ 60% போச்சேன்னு எடுத்துட்டு ஓடினவங்களுக்கு 60% நஷ்டம் நிரந்தரம். அப்படியே விட்டு வச்சிட்டு வேலையைப் பாத்தவங்களுக்கு இன்றைய சென்செக்ஸ் 33,340 புள்ளிகள், அதாவது 10 வருசத்தில் 4 மடங்கு உயர்வு மற்றும் வீழ்ச்சியை சரி செய்து அதற்கு மேலும் 60% உயர்வு

8. உலகின் ஆகச்சிறந்த போர்ட்ஃபோலியோ என்று எதுவுமில்லை

9. எந்த முதலீட்டாளரும் எல்லா சமயங்களிலும் சரியாக பங்குச் சந்தையை கணிக்க முடியாது

10. உடைந்த கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டுவதைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் யார் வேண்டுமானாலும் ஓரிரு முறை இண்டெக்ஸ் குறியீட்டைவிட அதிக ரிட்டர்ன் பெற இயலும்

11. பங்குச் சந்தையை டைம் செய்ய நினைப்பது வீண் வேலை, எஸ் ஐ பி முறையில் மாதா மாதம் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்

12. இந்த யுகத்துக்கு ஒரே ஒரு வாரன் பஃபெட்தான், அந்த கோட்டா முடிந்து விட்டபடியால் மற்றோர் மார்க்கெட்டை தோற்கடிக்க நினைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்

13. வாரன் பஃபெட்டின் 84 பில்லியன் டாலர் சொத்தை நினைத்துப் பார்ப்போர் அதற்கு பின்னால் இருக்கும் 76 ஆண்டு பொறுமையை வசதியாக மறந்து விடுகின்றனர்

14. வாரன் பஃபெட் 1958 இல் 31,500 டாலருக்கு வாங்கிய வீட்டில்தான் இன்னும் வசிக்கிறார், அதற்கப்புறம் அவர் முதலீட்டுக்காகவோ பகட்டுக்காகவோ வேறு வீடு வாங்கவில்லை – போர்ட்ஃபோலியோவின் பெரும்பகுதியை அப்பார்ட்மெண்ட்டிலும் நிலத்திலும் வைத்திருப்போர் கவனிக்க வேண்டியது இது.

15. பத்தாண்டுகள் ஒரு பங்கை வைத்திருக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அப்பங்கை பத்து நிமிடம் கூட வைத்திருக்ககூடாது

16. பொறுமையற்றவர்களிடமிருந்து பொறுமையை கடைபிடிப்போரிடம் மெதுவாக ஆனால் நிச்சயமாக பணத்தை கொண்டு சேர்க்கும் சிஸ்டத்தின் பேர் ஸ்டாக் மார்க்கெட்

17. Buy, Hold and not watch market daily மந்திரத்தை கடைபிடிக்கவும் நீண்ட நெடுங்காலம் காத்திருக்கவும் தயாராக இருந்தால் மட்டுமே வாரனின் வாரிசாக உங்களை Fantasize செய்யுங்கள், இல்லேன்னா இருக்கவே இருக்கிறது மியூச்சுவல் ஃபண்ட் வழி

18. Buy & Hold Strategy இன்வெஸ்டராக இருப்பதில் மிகக் கடினமான விசயம் ரெண்டையுமே மார்க்கெட் தினந்தோறும் வீழ்ந்து கொண்டிருக்கும் போது செய்ய வேண்டியிருப்பது

19. Hire a “Fee Only” advisor, refuse to talk Investment with Insurance Advisors

20. பக்கத்து வீட்டுக்காரரும், ஆஃபிசில் அடுத்த சீட்காரரும் ஷேர் மார்க்கெட் பத்தி திடீர்னு பேசினா மார்க்கெட் உச்சத்தில் இருக்குன்னு அர்த்தம் அது கைவசம் உள்ள பங்குகளை விற்க உகந்த நேரம். அதே ஆட்கள் ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம்னு சொன்னா மார்க்கெட் படு பாதாளத்தில் இருக்குன்னு அர்த்தம், அது நாம ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்ற பங்குகளை வாங்க சரியான நேரம்

21. அவர்களுடைய போர்ட்ஃபோலியோ ரியல் எஸ்டேட் விலையேற்றம், தங்க விலையேற்றம் போன்றவற்றால் சிறப்பாக செயல்படுவது போல தோற்றமளிக்கும் போதும் நம்முடைய எஸ் ஐ பியை தொடர்வதைப் போல கடினமான செயல் வேறில்லை

22. எப்போதுமே போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதி மோசமாக செயல்படுவதை உறுதி செய்யும் உத்தியின் பெயர் Diversification

23. Compound interest is amazing but it takes a really long time to work

24. நீங்கள் வைத்திருக்கும் பங்கு குறித்தான மதிப்பீடு மற்றும் அதற்கு நீங்க குடுத்த விலை குறித்து பங்குச்சந்தை கவலைப் படுவதில்லை

25. ஏற்றம் காணும் பங்குச் சந்தையின் மீது வைக்கும் நம்பிக்கையை விட வீழ்ந்து கொண்டிருக்கும் பங்குச்சந்தையின் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும்

26. இண்டெக்ஸ் ஃபண்ட்களின் வளர்ச்சி அவை ட்ராக் செய்யும் இண்டெக்ஸின் வளர்ச்சியை ஒட்டியே இருக்கும். இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்வோர் மார்க்கெட்டை விட அதிக வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடாது

27. Actively Managed Fund is a concept which tries to outperform the market and invariably fails

28. பங்குச்சந்தை வெற்றி என்பது பொறுமை, டிசிப்ளின் சார்ந்த விசயம் – புத்திசாலித்தனம் சார்ந்த விசயமல்ல

29. Day Trading is a FAIL PROOF way to get grey hair in less than a year

30. அடுத்தவர் போர்ட்ஃபோலியோவை காப்பியடிக்காதீர்கள்

எண்டோமெண்ட்டும் மணிபேக்கும் எதுக்கு லாயக்கு?

No photo description available.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் ஈமச்சடங்குகளுக்கு கூட இன்சூரன்ஸ் இருக்காமேன்னு கேட்டார். ஆமா ஒருவர் வாழும் போதே அவரோட இறுதிச் சடங்கு செலவுகளைச் சமாளிக்க இருவகை காப்பீடுகள் உள்ளன – Burial Insurance குறிப்பிட்ட அளவு பணத்தை அவரோட நாமினிக்கிட்ட கொடுத்துடும், அதுக்குள்ள செலவு பண்ணி மிச்சத்தை அவர் எடுத்துக்கலாம். Preneed Funeral Insurance நேரடியா பணத்தை Funeral House க்கு கொடுத்துடும் என்றேன். 
அது மாதிரி இந்தியாவில் ஏதும் இருக்கான்னு கேட்டார். இருக்கே… மணி பேக் பாலிசி, எண்டோமெண்ட் பாலிசின்னு வெவ்வேறு பேர்ல இருக்குன்னு சொன்னேன்.. . நான் அப்படி என்ன தப்பாச் சொல்லிட்டேன்னு கோவிச்சிக்கிட்டு போனை வச்சிட்டுப் போயிட்டார்??

மருத்துவனை பெருஞ்செலவு, மருத்துவக் காப்பீடு இருந்து அது ஓரளவுக்கு காப்பாத்தினாலும், ஒருவர் இறந்த முதல் இரண்டு நாட்கள் செலவுக்கும், 16 நாள் காரியத்துக்கும் இன்னிக்கு எப்படியும் 2 முதல் 5 லட்சம் வரை செலவாகும். (இது இந்து முறைப்படி, மத்த மத மக்கள் பத்தி எனக்குத் தெரியாது) – ஏன் எடுக்கறோம், எதுக்கு எடுக்கறோம்னே தெரியாம மக்கள் எடுத்து வச்சிருக்கும் மணி பேக் மற்று எண்டோமெண்ட் பாலிசிகளின் சம் அஸ்யூர்ட் சில லட்சங்களே இருக்கின்றன.

பொதுவா வாங்கும் சம்பளத்தில் 5% காப்பீட்டுக்கு செலவழிப்பாங்க. ஆண்டுக்கு 12 லைஃப் பிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஏஜெண்ட் இதையும் முழுசா குடும்பத்தலைவருக்கு செலவழிக்க விடாமல் மேடத்துக்கு, பையனுக்கு, பாப்பாவுக்குன்னு 4 பாலிசிக்கு பிரிச்சு வச்சிடுவார். வருமானத்தில் 2% ஐ வச்சி எடுக்கும் எண்டோமெண்ட்டின் சம் அஸ்யூர்ட் 5 இருந்தாலே அதிசயம். பாலிசி எடுத்து சில ஆண்டுகளில் ஒருவர் இறந்தால் பெருசா போனஸ் எல்லாம் இருக்காது. இறுதிக் காரியங்களைச் செய்ய வாங்கின கடனைத்தான் சம் அஸ்யூர்டை வச்சி அடைக்கலாம்.

இறுதிச் சடங்கு செலவு அளவுக்கு காப்பீடு வழங்கும் எண்டோமெண்ட் பாலிசிகளா இறுதி வரை குடும்பத்தைக் காக்கும் டெர்ம் பாலிசிகளா – Make a wise choice when you are alive and put 3 meals a day on your loved one’s table when even when you are not there.

டேர்ம்பிளான் எப்படி வழங்கப்படுகிறது – by Kesavan Chidambaram

டேர்ம்பிளான் விண்ணப்பிக்கும்போது முதலில் சரியான வயதை தெரிவிக்கவேண்டும். வயதை அடிப்படையாக கொண்டே திட்டத்தின் பிரீமியம் வரையறுக்கப்டுகிறது. மேலும் புகையிலை பயன்படுத்துபவரா இல்லையா என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால் புகையிலை பயன்படுத்தாதவர்களுக்கு சாதாரண பிரீமியத்திலிருந்து 30% வரை தள்ளுபடி தரப்படுகிறது. இதை எப்படி நிறுவனம் தெரிந்துகொள்ளும்.

டேர்ம்பிளானுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம். மற்ற பரிசோதனைகளுடன் சேர்த்து புகைபழக்கம் இல்லாதவர்களுக்கு routine urine analysis with Cotinine என்ற பரிசோதனையும் செய்யப்படும். அதில் புகையிலை பயன்படுத்துபவர்களின் சிறுநீரில் நிகோடின் அளவு தெரியவரும்.

அளிக்கப்படும் விண்ணப்பம் இருவிதமாக பரிசீலிக்கப்படும். ஒன்று உடல் தகுதி ரீதியிலும் மற்றொன்று பொருளாதார சூழல் ரீதியிலும் இருக்கும். (Medical underwriting & financial underwriting ) இருவேறு குழுக்கள் பரிசீலிக்கும்.

உடல் தகுதி தேர்வென்பது ஒருவர் எத்தனை ஆண்டுகள் காப்பீடு கேட்டிருக்கிறாரோ அத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக இருப்பாரா என்பதை மருத்துவ பரிசோதனை முடிவுகளை வைத்து முடிவெடுப்பார்கள்.

பொருளாதார தகுதி என்பது ஒருவர் எவ்வளவு தொகைக்கு காப்பீடு கேட்கிறாரோ அந்த அளவுக்கு தகுதியானவரா என்று பார்ப்பது. அதாவது அவர் கேட்டிருக்கும் காப்பீடு அளவுக்கு அவருக்கு வருமானமிருக்கிறதா தொடர்ந்து பணம்கட்டும் தகுதி இருக்கிறதா ஒருவேளை அவர் இறந்துபோனால் அவர் காப்பீடு கேட்கும் அளவுக்கு குடும்பத்துக்கு வருமான இழப்புஉண்டா என்றெல்லாம் பார்ப்பார்கள்.

நேற்று பேசிய நண்பர் ஒருவர் தான் ஆண்டுக்கு ஐந்துலட்ச ரூபாய்க்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதாகவும் தனக்கு ஐம்பதுலட்ச ரூபாய் காப்பீடு வேண்டுமென்றும் கேட்டிருந்தார். அவர் வயது 45. வருமானம் எப்படி வருகிறது என்று கேட்டபோது நான்குலட்ச ரூபாய் வாடகை வருமானமும் ஒருலட்ச ரூபாய் வட்டி மற்றும் டிவிடன்ட் வருமானமும் உள்ளதென்றார்.

காப்பீடு என்பதே ஒருவர் இறந்துபோனால் அவர்மூலம் குடும்பத்துக்கு வரும் வருமானத்துக்கு மாற்றாக அதை ஈடுசெய்யும் விதமாக வழங்கப்படுவதாகும். இங்கு இவர் இறந்துபோனால் குடும்பத்துக்கு வருமான இழப்பு என்ன? இவர் இருந்தாலும் இல்லையென்றாலும் வாடகை வட்டி டிவிடன்ட் எல்லாம் தொடர்ந்து வரப்போகிறது. இதில் வருமான இழப்பே இல்லை. கம்பனி இவர் விண்ணப்பத்தை ஏற்று காப்பீடு வழங்காது. அவரிடம் சொல்லி புரியவைத்தேன்.

இ்ப்படியாக விண்ணப்பத்தை பரிசீலித்து காப்பீடு வழங்க வாடிக்கையாளர் மருத்துவ பரிசோதனைகள் முடித்தபின் குறைந்தது பத்து நாட்களாவது கம்பனிக்கு தேவைப்படும்.

ஸ்ரீராம் அவர்கள் எழுதிய பதிவில் ஒருதம்பதியினர் இணைந்து பாலிசி எடுத்ததாக கூறியிருந்தார்.அந்த தம்பதியினர் பாலிசிக்கு பணம் செலுத்தியபின் அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு பல்வேறு வேலைவிசயமாக பலஊர்களுக்கு சென்றிருந்தனர். அவர் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தார். காப்பீட்டு பணம் செலுத்தியதற்கும் மருத்துவ பரிசோதனை செய்ததற்கும் இடையில் எட்டு நாட்கள் இருந்தது. இதனால் காப்பீடு வழங்குவது தாமதமானது. அவர்கள் என்னை கேட்கவில்லை. உங்களுக்கு ஒரு தகவலுக்காக சொல்கிறேன். எப்படியெல்லாம் தாமதமாகிறது என்பதற்காக.

சரி. உடல் பரிசோதனையில் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும். 
பலர் காப்பீட்டு கம்பனி தெரிவித்தபின்னரே தங்களது உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து கொள்கின்றனர். பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். ரத்த பரிசோதனையில் பலருக்கு சர்க்கரை அளவு கூடுலாக இருக்கலாம். ரத்த அழுத்தம் கூடவோ குறையவோ இருக்கலாம். உங்களைவிட உங்கள் உடல்நலத்தின்மீது அக்கறை காட்டுபவர்கள் காப்பீட்டு கம்பனிகளே என்று உணருங்கள். சிறிது தவறினாலும் பலகோடி நட்டமாகிவிடும்.

உடல்தகுதியில் பிரச்சனை இருந்தால் கம்பனிகள் மூன்றுவிதமாக முடிவெடுப்பார்கள். 1. கூடுதல் பிரீமியம் கேட்பது. ரேட்அப் என்று சொல்வார்கள். 2. காப்பீடு வழங்குவதை ஆறுமாதம் தள்ளி வைப்பது. போஸ்ட்போன்டு என்று சொல்வார்கள். உடல்தகுதியை சீராக்கி ஆறுமாதம் கழித்து விண்ணப்பம் செய்யுங்கள் என்பார்கள். 3. விண்ணப்பத்தை நிராகரிப்பது. அதாவது ரிஜக்ட் செய்வது.

பலகோடி ரூபாய் சம்பந்தபட்ட விசயம் என்பதால் காலதாமதத்தை தவிற்க இயலாது. பாலிசி வழங்க எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை க்ளைம் என்று வந்தால் உடனடியாக வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு பரிசோதனைகளும் தாமதங்களும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று நிரூபித்து காப்பீடு பெறும்போது க்ளைமில் பிரச்சனைவர வாய்ப்பே இல்லை.

டெர்ம் இன்சூரஸில் ரைடர்கள் அவசியமா?

டெர்ம் இன்சூரன்ஸ் பக்கம் மக்கள் கவனத்தைத் திருப்பினாலும் காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்றதை விற்க முயன்று கொண்டேதான் இருக்கின்றன.

எண்டோமெண்ட், மணிபேக் பாலிசிகள் உபயோகமற்றவை என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர், குறைந்த ப்ரீமியத்தில் தேவையான கவரேஜ் டெர்ம் பாலிசிகளால் மட்டுமே வழங்கமுடியும் என்றுணர்ந்த பொதுமக்கள் அதையே கேட்கத் தொடங்கியதும் காப்பீட்டு நிறுவங்கள் ரைடர்கள் என்ற பேரில் தேவயற்ற விசயங்களை இணைக்கத் தொடங்கினார்கள். 
சூப்பர் மார்க்கெட்டில் பில்லிங் கவுண்டர் அருகே சாக்லேட், பபிள் கம் போன்ற எளிதில் கவரக்கூடிய அதே சமயம் அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும், நமக்குத் தேவையானதை வாங்கிய பின் பில் போடும் அவசரத்தில் கண்ணில் படும் தேவையற்ற பொருட்களை வாங்குவது போல இந்த ரைடர்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

ரைடர்கள் என்னென்ன அவை அவசியமா என்று பார்க்கலாம்

1. க்ரிடிகல் இல்னெஸ் ரைடர் : இது மட்டமான ரைடர் இல்லேனாலும் அவசியமற்றது. இந்த ரைடர் எடுத்தால், நிறுவனம் லிஸ்ட் செய்திருக்கும் கேன்சர் போன்ற சில பல கொடும் நோய்கள் வந்தால், பாலிசி தொகையில் குறிப்பிட்ட அளவு வழங்கப்படும், அதற்கப்புறம் ப்ரீமியம் கட்டத்தேவையில்லை. இதில் கூறப்பட்டிருக்கும் நோய்கள் வந்த ஒருவர் அதற்கப்புறம் அதிக நாள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கப்புறம் கிடைக்கப் போகும் பணம் இப்போதே கிடைக்கும், அதுவும் மருத்துவச் செலவுக்குப் போய்விடும். அவர் இறக்கும் போது குடும்பத்துக்கு தேவைப்படும் பணம் இருக்காது. 
இதற்காக செலவழிக்கும் பணத்தைக் கொண்டு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது நன்மை பயக்கும்

2. விபத்திற்கு இரட்டைக்காப்பீடு : எனக்குத் தெரிந்ததில் இதை விட அனாவசிய செலவு வேறேதுமில்லை. 10 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு குடும்பத்திற்கு அவசியம் என முடிவு செய்து டெர்ம் இன்சுரன்ஸ் வாங்குகிறார். அவர் விபத்தில் இறந்தால் இரட்டிப்புக் காப்பீடு அதாவது 2 கோடி கவரேஜ் வழங்குவதே ஆக்சிடெண்ட் டபுள் கவரேஜ். அவர் நோயில் இறந்தால் 1 கோடி தேவைப்படும் குடும்பத்துக்கு விபத்தில் இறந்தால் மட்டும் ஏன் 2 கோடி தேவைப்படும்? இதற்கு செலவழிக்கும் ப்ரீமியத்தையும் வைத்து 1.5 கோடிக்கு பாலிசி எடுத்தால் அவர் எப்படி இறந்தாலும் குடும்பத்துக்கு அந்தத் தொகை கிடைக்கும். நம் இறப்பின் காரணத்தை கணிக்க முயல்வது, பங்குச் சந்தையின் போக்கை கணிக்க முயல்வதை விட முட்டாள்தனமானது

3. எக்ஸ்ப்ரஸ் பேமெண்ட் : முப்பதாண்டு கால பாலிசியின் முழு ப்ரீமியத்தையும் எட்டு ஆண்டிலேயே கட்டி பணம் சேமிப்பது.

தொடக்கம் முதலே இருந்து வரும் பழக்கம், பாலிசிக்கு ஆண்டு ப்ரீமியம் கணிக்கப்படும் அதை ஆண்டுக்கொரு முறையோ இரு முறையோ நாலு முறையோ செலுத்தலாம். இப்ப புதுசா ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. ஆண்டு ப்ரீமியம் 11,000 ரூபாய், 30 ஆண்டுக்கு மூணு லட்சத்து 30ஆயிரம் வருது, இதையே 8 வருசங்களில் கட்டினா ஆண்டுக்கு 28,261 ரூபாய் மொத்தமே 2,26.088 ரூபாய், ஆக உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மிச்சம் என்பார்கள். இதுல ரெண்டு பிரச்சனைகள் இருக்கு

அ. இதற்காக செலுத்தும் அதிக தொகையை முதலீடு செய்தால் முப்பதாண்டு முடிவில் நம்மிடம் அதிகப் பணம் இருக்கும் 
சராசரியா 10% வளர்ச்சி என்று வைத்தால், 8 ஆண்டுகளுக்கு மாதம் 1468 ரூபாய் சேமித்தால் 2,14,000 ரூபாய் இருக்க வாய்ப்பு அதிகம், அது மிச்ச 22 ஆண்டுகள் வளர்ச்சியடைந்து 17.5 லட்சமாக இருக்கும். எட்டு ஆண்டுகள் அதிகமாக செலுத்தி முடித்த பின் ஆண்டுக்கு 11ஆயிரத்தை சேமித்தால் 22 ஆண்டுகள் கழித்து 8.8 லட்சம் மட்டுமே கையில் இருக்கும் . இது க்ளியரா கம்பெனிக்கே லாபம் தரும் திட்டம்

ஆ. டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து 7 ஆண்டுகள் கழித்து பயனர் இறந்தால் எக்ஸ்ப்ரஸ் பே திட்டத்தில் அவர் கிட்டத்தட்ட முழு ப்ரீமியத்தையும் செலுத்தி இருப்பார், ரெகுலர் திட்டத்தில் இருந்திருந்தால் அவர் வெறும் 77,000 மட்டுமே செலுத்தியிருப்பார்

4. ப்ரீமியம் திரும்பக் கிடைக்கும் ரைடர் : இதுவும் ஒரு பம்மாத்து வேலையே. நான் பல முறை சொன்னா மாதிரி வாகன இன்சூரன்ஸிலும் பொருட்களின் இன்சூரன்ஸிலும் ரிட்டர்ன் எதிர்பார்க்காத நாம் ஆயுள் காப்பீட்டில் மட்டும் ஏன் ரிட்டர்ன் எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் அதே பல்லவிதான் – இந்த ரைடருக்கு செலுத்தும் தொகையை நல்ல வகையில் முதலீடு செய்தால் 30 ஆண்டு முடிவில் ரிட்டர்ன் கிடைக்கும் ப்ரீமியத்தை விட அதிகம் கையில் இருக்கும்.

அடுத்து பயன் தரக்கூடிய ரெண்டு ரைடர்கள்

1. அதிகரிக்கும் கவரேஜ் : இது கிட்டத்தட்ட அனைவருக்கும் அவசியம். ஏன் அனைவருக்கும் அவசியம்னு சொல்லலேன்னா – சிலர் 45 – 50 வயது வரை டெர்ம் பாலிசி எடுப்பதில்ல்லை, அப்போது அவர்களில் பலரும் வருமானத்தின் உச்சியை கிட்டத்தட்ட எட்டி விடுகின்றனர் அதற்கப்புறம் வருமானம் நிறைய உயர்வதில்லை அதனால் காப்பீட்டின் அளவும் அதிகம் உயர வேண்டியதில்லை, அவர்களில் பலர் அதற்குள் நெறய சேமித்து விடுகின்றனர், அவர்களுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல காப்பீடு தேவையில்லை. இருவதுகளிலும் முப்பதுகளிலும் உள்ளோரின் வருமானம் இனி நிறைய உயரும், வருமானம் உயர உயர குடும்பத்தின் லைஃப் ஸ்டைலும் உயரும், இவை உயர உயர காப்பீட்டு அளவின் தேவையும் உயரும். இவர்கள் அதிகரிக்கும் கவரேஜ் திட்டத்தில் சேருவது நல்லது

2. கணவன் – மனைவி Joint கவரேஜ் : இருவரும் வருமானம் ஈட்டுகின்றனர், கணவரின் வருமானம் மனைவியின் வருமானத்தை விட கணிசமாக அதிகம் – இந்நிலையில் இருப்போருக்கு இது நல்ல திட்டம். இதில் கணவரின் காப்பீட்டு அளவில் பாதி மனைவிக்கு வழங்கப்படும். உதாரணத்துக்கு கணவர் 1 கோடிக்கு பாலிசி எடுத்தால் மனைவிக்கு 50 லட்ச ரூபாய்க்கு கவரேஜ் 10% டிஸ்கவுண்ட் ரேட்டில் வழங்கப்படும். கணவன் இறந்தால் மனைவிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் இது நார்மல், இந்த திட்டத்தில் மனைவியின் 50 லட்ச ரூபாய் காப்பீடு தொடரும் ஆனால் அவர் கணவரின் இறப்பிற்கு அப்புறம் ப்ரீமியம் கட்டத் தேவையில்லை. வருமானமீட்டும் கணவன் மனைவி இருவரும் தனித்தனியே பாலிசி எடுப்பதை விட இது ரொம்பவே பெட்டர்.

பாலிசி பற்றி குடும்பத்தாரிடம் சொல்லி வையுங்கள்

No photo description available.

காப்பீடு எடுத்தா மட்டும் பத்தாது. எப்படி க்ளெய்ம் செய்வதுனு வீட்ல இருக்கவங்களுக்கு அவசியம் சொல்லியும் கொடுக்கனும். நம்ம கிட்ட இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை – பல ஆண்கள் மனைவியிடமோ பிள்ளைகளிடமோ நிதி சம்பந்தமா எதுவுமே சொல்வதில்லை. பெண்களும் “அதெல்லாம் எனக்குத் தெரியாது என் வீட்டுக்காரருக்குத்தான் தெரியும் அவருதான் எல்லாத்தையும் பாத்துக்கறாரு” என்று இருந்து விடுகிறார்கள். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்களும் இதில் அடக்கம். வங்கிக் கணக்கு பாஸ்வேர்ட், எங்க என்ன சேமிப்பு, முதலீடு இருக்கு, என்னென்ன காப்பீடுகள் இருக்கு இப்படி எதுவுமே சொல்லாம கணவர் திடீர்னு இறந்தா மனைவி இப்படி வங்கிக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் பணத்தை தாரை வார்க்க வேண்டியதுதான்

வாட்சப் வெறியர்களின் அட்டகாசமும் மைக்ரோசாஃப்ட் எக்செலின் உபயோகமும்


வர வர வாட்சப் வெறியர்களின் அட்டகாசம் தாங்க முடியல, இன்னிக்கு வந்த ஃபார்வர்ட் மெசேஜ்

STATE BANK OF INDIA”
have introduced new scheme called “Sukanya Yojana” In this they have mentioned
Any person having daughter from age 1 to 10, They have to pay Rs.1000/- per year, after 14 years, meaning in 14 years after paying 14000 when daughter will become 21 years old a person will have Rs.600000/-. 
Forward this message to all your relatives.
Government has implemented this scheme all over in India.
_Only for Girl
Always share good information to others.

Has க்கு பதிலா have, having daughter, after 14 years, meaning in 14 years after இப்படி ஏராளமான பிழைகள். சொற்குற்றத்தையாவது மன்னிச்சிடலாம், ஆனா எதுக்கு இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பறாங்கன்னு தெரியல

சுகன்ய சம்ரித்தி யோஜனான்னு ஒரு திட்டம் இருக்கு, சுகன்யா யோஜனான்னு இல்ல

அது 2014 லேருந்து இருக்கு, புதுசு இல்ல

இது இந்திய அரசின் திட்டம், ஸ்டேட் வங்கி மட்டுமல்லாது பல வங்கிகள் மூலம் வழங்கப்படுது 
மெசேஜில் சொல்லியிருக்கா மாதிரி கேரண்ட்டி எல்லாம் கிடையாது.

சிம்பிளா சொன்னா பெண் குழந்தைகளுக்கு மட்டுமான வரிவிலக்கு உடைய ரிக்கெரிங் டெபாசிட் மாதிரிதான் இது. 8.6% வட்டியில் ஆரம்பிச்ச இது இப்ப 8.1%ல வந்து நிக்குது இன்னும் குறையும் என எதிர்பார்க்கிறேன்

இத்திட்டத்தில் பெண் குழந்தை பேரில் ஆண்டுக்கு 1000 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், அதிக பட்சமாக 15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம், கணக்கு ஆரம்பித்ததிலிருந்து 21 ஆண்டுகள் கழித்து இது முதிர்வடையும். 21 ஆண்டுகளும் அவ்வப்போது இருக்கும் வட்டிக்கு ஏற்ப உங்க முதலீடு வளரும். இதில் சொல்லியிருக்கறா மாதிரி கேரண்டி எல்லாம் கிடையாது

இன்னிக்கு இருக்கும் 8.1% அடுத்த 21 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தா, 14 ஆண்டுகள் மாசம் 83 ரூபாய் (ஆண்டுக்கு 1000 ரூபாய்) கட்டிட்டு அதுக்கப்புறம் 7 ஆண்டுகள் காத்திருந்தா 21 ஆண்டுகள் கழித்து தோராயமா 45,000 ரூபாய் கிடைக்கும். இந்த வட்டி 21 ஆண்டுகள் தொடர வாய்ப்பு ரொம்ப கம்மி.

14 ஆயிரம் போட்டுட்டு ஆறு லட்சம் வேணும்னா, அந்த காசுக்கு லாட்டரி சீட்டுதான் வாங்கணும். ஆறு லட்சம் ஆகறதுக்கு 21 வருசமும் தொடர்ந்து எவ்வளவு வட்டி வரணும் தெரியுமா? 25% கூட்டு வட்டி 21 வருசம் வந்தால்தான் வெறும் 14 ஆயிரம் முதலீடு 6 லட்சம் ஆகும்

இந்த ரெண்டு கணக்குகளையும் அஞ்சு நிமிசத்த்துக்குள்ள எக்செல் ஷீட் ஒன்றில் கண்டுபிடிச்சிடலாம். அதைச் செய்ய யாருக்கும் பொறுமையில்லை

குறைந்த பட்சம் இது போன்ற ஃபேக் நியூஸை ஃபார்வேர்ட் செய்யாமலாவது இருக்கலாம், பாவம் ஸ்டேட் பாங்க் ஊழியர்கள், நாளைலேருந்து கூட்டம் குவியப் போகுது

எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

இந்த வருசம் எந்த ஃபண்ட் நல்ல ரிட்டர்ன் தரும்
தெரியாது

யாரு தேர்தலில் ஜெயிப்பார்கள்? 
தெரியாது

அடுத்து அமையும் ஆட்சியில் மார்க்கெட் ஏறுமா? 
தெரியாது

எலக்சன் ரிசல்ட் அன்னிக்கு மார்க்கெட் ஏறுமா இறங்குமா? 
தெரியாது

இந்தாண்டும் மிட் கேப் இறக்கம் காணுமா? 
தெரியாது

ஒராண்டில் எந்த ஷேர்கள் நல்லாப் போகும்? 
தெரியாது

எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்? 
உங்களுக்கு எந்த ஃபண்ட் சரியா வரும்னு எனக்குத் தெரியாது.

அப்ப உனக்கு என்னதான்யா தெரியும்? 
உங்க வயது 35 – இன்னிக்கு உங்க குடும்பச் செலவு (பிள்ளைகள் செலவு இல்லாமல்) 25,000 ரூபாய் ஆகுதுன்னா, நீங்க ரிட்டையர் ஆகும் போது (65 வயது, 6% இன்ஃப்லேசன்) மாசம் 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்னு தெரியும்

இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் கல்விக் கட்டண ஏற்றத்துக்கும் பொதுவான விலைவாசி ஏற்றத்துக்கும் சம்பந்தமில்லைன்னு தெரியும். இன்ஃப்ளேசன் 6% ஆக இருக்கும் போதும் கல்லூரிச் செலவு மட்டும் 10% அளவில் ஏறிக்கிட்டே இருக்குன்னு தெரியும்

உங்க பிள்ளைகள் இப்ப ஆரம்பப் பள்ளியில் இருக்காங்க, அவங்க கல்லூரி போகும் போது தலா 50 லட்சம் ஆக மொத்தம் 1 கோடி ரூபாய் செலவாகும்னு தெரியும்

வங்கி தரும் வட்டி இப்ப 7% அளவில் இருக்குன்னும் அது மேலும் குறையும்னும் தெரியும். இன்சூரன்ஸ் கம்பெனிகளின் எந்த ஒரு திட்டமும் 5-6 % மேல் ரிட்டர்ன் தராதுன்னு தெரியும். இவற்றில் முதலீடு செய்தால் பொருளாதார இலக்குகளை எட்டவே முடியாதுன்னு தெரியும்

நீண்ட நாள் முதலீட்டில் பங்குச் சந்தை மட்டுமே இன்ஃப்ளேசனைத் தாண்டி ரிட்டர்ன் தந்திருக்கு, தரும் என்று தெரியும்.

ஓய்வு கால திட்டமிடல் மிக நீண்ட பயணம். மார்க்கெட் வீழ்ச்சி தற்காலிகமானது, போன வருச மிட் கேப் வீழ்ச்சி மார்க்கெட் சந்திக்கும் முதல் வீழ்ச்சியுமல்ல நிச்சயமாக கடைசி வீழ்ச்சியுமல்ல. உங்க குறிக்கோள் நீண்ட கால பயணமாக இருந்தால் சிறு சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை