Investment is Individualistic

Image result for one size does not fit all

ஒரு நண்பர் லாபம் தரக்கூடிய SIP Scheme ரெண்டு சொல்லுங்கன்னு கேட்டிருந்தார். போற போக்கில் சொல்லிட்டுப் போக அது ஒன்றும் ஃபாஸ்ட் புட் ஆர்டர் அல்ல. ரொம்ப நாளைக்கு முன்ன எழுதிய போஸ்ட்டிலிருந்து ஒரு பகுதியை மறுபடி எழுதறேன்

முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்

அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் (5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும். 
உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.

கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.

அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.

ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.

நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை

0. இதை ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு 10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க. 
1. மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
2. முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
3. கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
4. எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
5. சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு 
6. அவசரத்தேவைக்கு மாச சம்பளத்தின் 3-6 மடங்கு இருக்கட்டும்
7. ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும்
8. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
9. பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.

நானோ யாராவது ஒருவரோ இப்ப நாலு ஃபண்ட் பேரைச் சொல்லிட்டுப் போயிடலாம், அவை தொடர்ந்து நல்லா செயல் படும் என்று சொல்ல முடியாது, அதுக்குத்தான் ஆண்டுக்கு ஒருமுறை எல்லாத்தையும் பாத்து ரீபேலன்சிங் செய்யணும் என்று சொல்றது. இதைத் தொடர்ந்து செய்ய கட்டணம் வாங்கும் ஆலோசகரால்தான் முடியும். இலவசமாக சொல்லும் என் போன்றோர் உங்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது.

மருத்துவம் போல் முதலீட்டு ஆலோசனையும் ஒரு ஸ்பெசாலிட்டி ப்ரொஃபசன், அத்துறையில் நிறைய வல்லுனர்கள் இருக்காங்க, அவர்களில் நல்லவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் உதவியுடன் முதலீடு செய்யுங்க

5% Rule and Retirement Corpus

ஓய்வு கால சேமிப்பு குறித்த தலைப்பில் எவர் க்ரீன் கேள்வி ரிட்டையர்மெண்ட்டுக்கு எவ்வளவு சேக்கணும் என்பதே. அதிலும் நாற்பதைத் தொட்டவர்களின் மனதில் வியாபித்திருப்பது இது, நண்பர் Murali Kannan அவர்கள் கூட சமீபத்தில் நாற்பதைத் தொட்டவர்களின் ரிட்டையர்மெண்ட் கவலை குறித்து எழுதியிருந்தார்.

முந்தைய தலைமுறை போல நமக்கு பென்சன் எனும் லக்சரி கிடையாது. பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிற்கவும் முடியாது. நம் ஓய்வு காலத்துக்கு நாமே சேமித்தால்தான் உண்டு. இதையும் 5% விதியையும் விளக்கவே இப்பதிவு.

ரிட்டையர்மெண்ட்டுக்குத் தேவைப்படும் தொகையை துல்லியமாக யாராலும் கணிக்க முடியாது – மருத்துவம் போன்ற எதிர்பாரா செலவுகள் அதிகரிக்கக்கூடும், இன்ஃப்ளேசன் அடுத்த 20- 30 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது – ஆனால் இன்றிருக்கும் தகவல்களைக் கொண்டு தோராயமாக இதைக் கணிக்க முயல்கிறேன்.

40 வயதாகும் ஒருவர் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். ரிட்டையர் ஆகும் அன்னிக்கு கடனில்லாத வீடு இருக்கணும், பிள்ளைகளின் படிப்புச் செலவு முடிந்திருக்கணும். இவற்றைச் செய்து முடிக்காமல் ரிட்டையர் ஆவது கடினம். 
இன்றைய உங்க குடும்பச் செலவுக் கணக்கை எடுங்க, அதில் வீட்டுக்கடன், பிள்ளைகள் படிப்புச் செலவு, பிள்ளைகளின் பிற செலவுகளை நீக்கிடுங்க – மிச்சமிருப்பதுதான் நீங்களும் உங்க மனைவியும் வாழத்தேவையான பணம். 
2019 ஜனவரி மாதம் உங்க வயசு 40 ஆக இருக்கும் போது இத்தொகை 25000 ரூபாய் / ஆண்டுக்கு 3 லட்ச ரூபா என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியாவின் இன்ஃப்ளேசன் தோரயமா 6% அதாவது இந்த ஆண்டு 100 ருபாய் இருக்கும் பொருளோ சேவையோ அடுத்த ஆண்டு 106 ரூபாயாக இருக்கும். இப்படியே கணக்குப் போட்டால் உங்களுக்கு 60 வயது ஆகும் போது இன்றிருக்கும் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய உங்களுக்கு ஆகும் செலவு 9,62,141 – ஒன்பது லட்சத்து அறுபத்து இரண்டாயிரம் ரூபாய். அதற்கப்புறமும் இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் 85 வயது வரை எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டிருக்கிறேன். இன்று ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தரும் லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய 85வது வயதில் ஆண்டுக்கு 41 லட்சத்து 29 ஆயிரத்து 383 ரூபாகள் ஆகும்.

அது என்ன 5% விதி இது ஆக்சுவலா விதி அல்ல, பொருளாதார / சேமிப்பு வல்லுனர்கள் ரிட்டையர்மெண்ட் சேமிப்பிலிருந்து ஆண்டுக்கு 5% மட்டுமே உருவி செலவு செய்யலாம் என அறிவுரை சொல்கின்றனர். அதற்கு மேல் எடுத்து செலவு செய்தால் நீங்க சேர்த்து வைத்திருக்கும் தொகை உங்க வாழ் நாள் முழுமைக்கும் வராமல் போகலாம், கடைசி காலத்தில் செலவுக்கு காசில்லாமல் நீங்கள் நிற்கும் நிலை வரலாம் என்கிறனர்.

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்போர் தம் சேமிப்பை பங்குச் சந்தை முதலீடு போன்ற ரிஸ்கான வழிகளில் முதலீடு செய்யலாம், இதையே ரிட்டையர் ஆன ஒருவர் செய்ய முடியாது – ரிட்டையர்மெண்ட் தொகையை வங்கி வைப்பு நிதி, அரசு கடன் பத்திரங்கள் போன்ற சேஃபான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது நலம். ரிஸ்க் இல்லாத / கம்மியான முதலீடுகளின் ரிட்டர்னும் கம்மியாவே இருக்கும். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இத்தகைய முதலீடுகளின் ரிட்டர்ன் 5% க்கு மேல் இருக்க வாய்ப்புகள் குறைவு.

அதாவது உங்க சேமிப்பு ஆண்டுக்கு 5 % ரிட்டர்ன் கொடுக்கும் அதே சமயம் உங்க செலவோ ஆண்டுக்கு 6% அதிகரித்துக்கொண்டேயிருக்கும். அப்ப நீங்க வட்டி மட்டுமல்லாது அசலில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். இதை சமாளிக்க நீங்க செய்ய வேண்டியது உங்களுக்கு 60 வயது ஆகும் போது இருக்கக் கூடிய ஆண்டு செலவின் 30 மடங்கை சேமிப்பு இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். இது இன்று 40 வயது ஆகும் ஒருவரின் தற்போதைய செலவின் 100 மடங்கு.

40 வயது ஆகும் ஒருவரின் குடும்பச் செலவு ஆண்டுக்கு 3 லட்சம் (வீட்டுக்கடன், பிள்ளைகள் செலவு சேர்க்காமல்) 60 வயதில் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்யத் தேவை ரூ9,62,141. அங்கிருந்து ஆரம்பித்து 85 வயது ஆகும் போது வாழத் தேவையான சேமிப்புத் தொகை 2 கோடியே 88 லட்சத்து 64 ஆயிரத்து 219 ரூபாய்கள்.

இப்போது எக்செல் ஷீட்டை ஒரு முறை பாருங்கள். அந்நபர் ரிட்டையர் ஆகும் அன்று இத்தொகையை சேமித்து வைத்திருக்கிறார். கணக்கு எளிதாகப் புரிவதற்கு ஜனவரி 1 அன்றே அந்த ஆண்டுக்கான செலவு 962141 மொத்ததையும் கழித்து விட்டு மிச்சம் 2,79,02079க்கு மட்டும் 5% வளர்ச்சி போட்டு அந்த ஆண்டு இறுதியில் 2929783 ரூபாய் அவரிடம் இருக்கும். அடுத்த ஆண்டு 6% விலைவாசி உயர்வில் செலவு 1019869 ஆக இருக்கும். அது போக மிச்சமிருக்கும் 2,82,77,313 ரூபாய் 5% வளர்ச்சி பெற்று 29691179 ஆக இருக்கும். வளர்ச்சி 5% லேயே நிற்கும் ஆனால் செலவோ அதிகரித்துக் கொண்டேயிருகும். 2 கோடியே 88 லட்சத்தில் ஆரம்பித்த சேமிப்பு 10 ஆண்டுகள் அதிகரித்து 70 வயதில் மூணு கோடியைத்தாண்டும் ஆனா அதற்கப்புறம் செலவு அதிகரித்து அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். 74 வயது ஆகும் போது 60 வயதில் ஆரம்பித்ததை விட கம்மியாகும்… அது மேலும் குறைந்து கொண்டே வந்து 85ம் வயது முடிவில் வெறும் 2 லட்ச ரூபாய் மட்டுமே கையிருப்பு இருக்கும்.

வளரும் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களை வளர்த்து ஆளாக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், அதே ரிட்டையர் ஆனப்புறம் சேமிப்பு கரைந்தபின்பும் உயிரோடு இருக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள். 85 வயது வரை கணக்கிட்டு சேமித்து அதற்கு முன்னர் இறந்தால் பிள்ளைகள் சந்தோசமாக மிச்சப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள், அதே பெற்றோரின் சேமிப்பு 70 வயதில் கரைந்து விட்டால் அதற்கப்புறம் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் குறைவே.

சரி இத்தனை பணத்தை எப்படி எங்கு சேமிப்பது? மாதம் 20,000 ரூபாயை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 20 ஆண்டுகள் சேமித்தால் 3 கோடி ரூபாயை எட்டி விடலாம். எந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பதை ஒரு நல்ல ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை எல்லைக் கோட்டை நிர்ணயிக்காமல் சேமித்தவர்களும் சேமிப்பே இல்லாதவர்களும் இனியாவது சரியான பாதையில் சேமிக்கத் தொடங்குங்கள்

No photo description available.

ஆண்டுக்கொரு முறை

Image result for annual financial checkup

காலண்டரின் பக்கங்கள் தீர்ந்து போகும் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் ஒன்று குறைகிறது.

ஆண்டுக்கொருமுறை உடல்நலத்தை சரிபார்க்க மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நம்மில் எத்தனை பேர் நம்முடைய பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்? 
பள்ளிகளில் தரும் ரிப்போர்ட் கார்டும், அலுவலங்களில் நடக்கும் அப்ரைசலும் அர்த்தம் பொதிந்தவை. நாம் எந்த விசயங்களில் வலுவாக இருக்கிறோம், எந்தெந்த விசயங்களில் வீக்காக இருக்கிறோம் – அந்த விசயங்களையும் வலுவானவை லிஸ்ட்டில் சேர்க்க அடுத்தாண்டுக்கான “ஆக்சன் ப்ளான்” என்ன என்பதையெல்லாம் தெளிவாக அவை விளக்கும். அதே போல் நம் பொருளாதார நிலைமையையும் Self Appraise செய்ய சரியான தருணம் புத்தாண்டு தினம். இதில் நாம் பார்க்க வேண்டியவை

1. *ஆயுள் காப்பீடு*
நீங்கள் இதுவரை வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளை ஒரு முறை எடுத்துப் பாருங்கள். தொடரலாமா அல்லது விட்டொழிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் எண்டோமெண்ட் / மணி பேக் / யூலிப் பாலிசிகளை உடனடியாக தலை முழுகுங்கள். ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு டெர்ம் பாலிசி ஐடியல், 10 மடங்காவது அத்தியாவசியம். அதற்கும் கீழே இன்சூர் செய்திருந்தால், மேலும் ஒரு பாலிசி எடுப்பதன் மூலமோ அல்லது பழைய பாலிசியை நிறுத்தி விட்டு மொத்த அமவுண்ட்டுக்கு வேறு பாலிசியையோ எடுங்கள். இந்தாண்டு உங்க சம்பளம் கூடியிருந்தால் காப்பீட்டின் அளவும் கூட வேண்டும். சென்ற ஆண்டில் ஏதேனும் Life Changing நிகழ்வுகள் நடந்திருக்கலாம். பணி புரியும் கணவன் மனைவி மட்டும் இருக்கும் போது குறிப்பிட்ட அளவு காப்பீடு எடுத்திருப்பீர்கள். குழந்தை பிறப்பு அதை மாற்றி விடும், இப்ப அதிக காப்பீடு தேவை என்று உணர்ந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காப்பீட்டின் அளவை அதிகரியுங்கள். 
காப்பீட்டுக்கு ப்ரீமியம் கட்டும் தேதியை முக்கியமான இடத்தில் குறித்து வையுங்கள். இறுதி தேதி வரை காத்திராமல் சீக்கிரமே செலுத்துங்கள்

2. *ஹெல்த் இன்சூரன்ஸ்*
ஆயுள் காப்பீட்டுக்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டின் அளவை ரீவிசிட் செய்யுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன எனத் தோன்றினால் கூடுதல் காப்பீடு எடுங்கள். ப்ரீமியம் கட்ட வேண்டிய தேதியை குறித்து வைத்து சீக்கிரமே கட்டி விடுங்கள். இரு காப்பீடுகளிலும் லாப்ஸ் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

3. *அவசரத்தேவைக்கான கையிருப்பு*
சேமிப்பு நீண்ட காலத்துக்கானது, அதைத் தவிர எப்போதும் 6 மாத செலவுக்கான பணம் கையிருப்பில் இருப்பது அவசியம். இந்த ஆண்டு குடும்பச் செலவு கூடியிருக்கலாம் அல்லது எமர்ஜென்சி ஃபண்டிலிருந்து எடுத்து செலவு செய்ய நேரிட்டிருக்கலாம். அதைச் சரி பார்த்து மீண்டும் அதை 6 மாத செலவு அளவுக்கு கொண்டு வர செலவைக் கட்டுப்படுத்துவது / நீண்ட கால சேமிப்பைக் குறைப்பது என திட்டம் தீட்டி அதை செயல்படுத்துங்கள்.

4. *சிபில் ஸ்கோரை சரி பாருங்கள்*
அனைத்து நிதி நிறுவனங்களும் உங்க நம்பகத்தன்மையை சரி பார்க்க சிபில் ஸ்கோரையே உபயோகிக்கின்றன. அதை ஆண்டுக்கொரு முறையாவது (ஆறு மாதத்திற்கு ஒரு முறை பார்ப்பது இன்னும் நல்லது) பாருங்கள். நீங்கள் வாங்காத கடன், க்ரெடிட் கார்ட் அதில் இருந்தாலோ நீங்க சரியான நேரத்தில் செலுத்திய கடன் சரியாக ரிப்போர்ட் செய்யப்படாமல் இருந்தாலோ உரிய புகார் அளித்து அதைச் சரி செய்யுங்கள்

5. *வருமான வரி விலக்கு வாய்ப்புகளை சரி பாருங்கள்* 
நீங்கள் வருமானவரி கட்டுபவராக இருந்தால், வரி விலக்கு வாய்ப்புகள் அனைத்தையும் உபயோக்கிறீர்களா என சரி பாருங்கள். ஒரு சில செக்சன்களில் வரி விலக்கு பெறாமல் இருந்தால் அவற்றைப் பெற என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். இந்த சப்ஜெக்ட் முழுசாத் தெரியலேன்னா ஒரு நல்ல சார்டெட் அக்கவுண்டண்ட் உதவியை நாடுங்கள். சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கும் ரூபாயைவிட மதிப்பு மிக்கது என உணருங்கள் .

6. எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட்களில் சேமிப்பைத் துவக்குங்கள். 
இதற்கு உதவி தேவைப்பட்டால் நல்ல முதலீட்டு ஆலோசகரை நாடுங்கள்

7. *போர்ட்ஃபோலியோ ரிபேலன்சிங்*
ஆண்டுக்கொரு முறை உங்க போர்ட்ஃபோலியோவை சரி பார்த்தல் மிக மிக அவசியம். முதலீடு செய்திருக்கும் ஃபண்ட்களின் செயல்பாட்டைப் பாருங்கள். திருப்திகரமாக செயல்படாத ஃபண்ட்களில் இருந்து முதலீட்டை மாற்றுங்கள். வயது ஏற ஏற ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்து கடன் பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்தல் அவசியம். அதன் படி 40,50,60 வயதை எட்டியவர்கள் உங்க குறிக்கோள் படி முதலீடுகளை மாற்றி அமையுங்கள். 
உங்க போர்ட்ஃபோலியோவில் லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் ஃபண்ட்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கியிருப்பீர்கள். ஆண்டு இறுதியில் அவை பெரும்பாலும் அந்த சதவீதத்தில் இருக்காது. அதிலும் குறிப்பா மிட்கேப் பங்குகள் வீழ்ந்த இந்தாண்டு இறுதியில் போர்ட்ஃபோலியோவின் நிலவரம் கலவரமாக இருக்கும். கலங்காமல் அவற்றை ரீபேலன்ஸ் செய்து மீண்டும் நீங்க முடிவு செய்த சதவீதத்திற்கு கொண்டு வாங்க. என்னடா இவன் நல்ல போயிட்டு இருக்கும் பண்ட்லேருந்து எடுத்து வீழ்ந்திருக்கும் ஃபண்ட்ல போடச் சொல்றானேன்னு நினைக்காதீங்க. அது ஆப்பர்ச்சுனிட்டி, இன்னிக்கு வீழ்ந்திருக்கும் ஃபண்ட்களின் NAV கம்மியா இருக்கும், உங்க பணத்திற்கு அதிக யூனிட்கள் கிடைக்கும், நாளைக்கே அவை மீண்டு வரும் போது அதிக லாபம் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதியில் மிட்கேப்லேருந்து எடுத்து லார்ஜ் கேப் போடும் நிலைமை வரும்

8. க்ரெடிட் கார்ட் பேலன்ஸ் மற்றும் பர்சனல் லோன் இருந்தால் அவற்றை முடிக்க தீர்க்கமான திட்டம் தீட்டுங்கள். இவை இரண்டும் உங்க பொருளாதார நிலைக்கும் கேடு விளைவிக்ககூடியவை. க்ரெடிட் கார்ட் பேலன்ஸை உடனடியாக தீர்க்கவும். அதைத் தீர்க்கும் வரை அந்தக் கார்டை வீட்டில் வைத்து விட்டு வெளியே செல்ல முடிவு செய்யுங்கள். ரிவால்விங் க்ரெடிட் சுழலில் மாட்டி வெளியே வந்தவர்கள் சொற்பமே. 
பர்சனல் லோன் அதிகம் இருந்தால் 2019 இல் அதை முடிக்க திட்டமிடுங்கள். எந்தச் செலவையெல்லாம் தவிர்க்கலாம் என்று பாருங்கள். அதிக வட்டி கட்டும் பர்சனல் லோனை முடிக்க எமெர்ஜென்சி ஃபண்டிலும் கை வைக்கலாம், சேமிப்பையும் தற்காலிகமாக நிறுத்தலாம்.

9. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கியிருந்தால், அவர்கள் கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். ஜனவரி 1 அன்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த ஆண்டு கடனைத் திருப்பித்தர ஒரு Schedule சொல்லுங்கள். அதை உறுதியாக கடைபிடியுங்கள்.

10. *வரவு செலவு கணக்கைச் சரிபாருங்கள்*

பட்ஜெட் போடுபவராக இருந்தால் அதை ஒரு முறை சரி பாருங்கள். எந்தச் செலவுகளை தவிர்க்க முடியும் , எதையெல்லாம் குறைக்க முடியும் என்று பாருங்கள். இதுவரை பட்ஜெட் போட்டதில்லையென்றால், அடுத்த ஆண்டு முதல் பட்ஜெட் போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்

இதுக்கெல்லாம் மேல ஒண்ணு இருக்கு. ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தைக் குறைக்கப் பாருங்கள். அதற்கு பதிலாக வேலையிலோ, தொழிலிலோ அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு தேவையானதைப் படியுங்கள். எதுவுமே இல்லேன்னா, தனி நபர் சேமிப்பு குறித்து தேடிப் படியுங்கள். இப்ப இங்க வந்து எவனோ ஒருத்தன் வேலையத்துப் போய் எழுதி வச்சிருக்கும் ஆலோசனைகளை படிக்கும் நிலையிலிருந்து பிறருக்கு ஆலோசனை சொல்லும் நிலைக்கு உங்களை உயர்த்துங்கள்

ஓய்வுக்காக உழைத்திடு

Image may contain: sky, outdoor and nature

The Most Beautiful View comes after the Hardest Climb

It takes years of preparation, many encounters with smaller mountains, Tonnes of training, Lot of Planning and 4 weeks acclimatization before anyone could even attempt the Mt. Everest. Obviously, one has to go through the hardest climb to get the Most beautiful view from the top of the world

This applies your RETIREMENT too, if you like to get a nice view after retirement, you got to work hard for years to get that. If you believe a passive investment with an Insurance company (Endowment policies like those Jeevan Dashes), you are grossly mistaken. They do not suffice any need – Insurance or Investment.

Save for a Safe Retirement

முதலீட்டில் டாம், டிக் மற்றும் ஹாரி

1

கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் ரீட்டெயில் இன்வெஸ்டர்கள் எஸ் ஐ பி மாதாந்திர முதலீட்டை நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எக்கனாமிக் டைம்ஸ் கட்டுரை சொல்கிறது.

நீங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், முதலீட்டைத் தொடர்வதும், நிறுத்துவதும், இருக்குற பணத்தை எடுத்துக்கிட்டு வருவதும் உங்க விருப்பம், ஆனா இதை விட மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியில் என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

அக்டோபர் 2008 முதல் மார்ச் 2009 வரை (5 மாதங்கள்), அமெரிக்கப் பங்குச் சந்தை பெறும் வீழ்ச்சியடந்தது. 9 அக்டோபர் 2008 இல் 14,164 புள்ளிகளாக இருந்த டௌ ஜோன்ஸ் குறியீடு 9 மார்ச் 2009 அன்று வெறும் 6504 புள்ளிகளாக ஆகிவிட்டது. 5 மாதங்களில் 54% வீழ்ச்சி. அதாவது அக்டோபர் அன்று உங்க கணக்கில் இருந்த ஒரு கோடி ரூபாய் நீங்க எதுவுமே பண்ணாம 5 மாசம் கழிச்சு 56 லட்சமாக குறைந்திருக்கும். இப்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிறிய வீழ்ச்சிக்கே பயப்படுவோர் 54% குறைந்திருந்தா என்ன பண்ணியிருப்பாங்க?

இந்தியாவில் எப்படியோ தெரியல, அமெரிக்க முதலீட்டாளர்கள் மூவர் என்ன பண்ணாங்கன்னு பாக்கலாம்.

டாம், டிக் & ஹாரி மூவரும் நெருங்கிய நண்பர்கள், மூவரும் ஒரு ஆலோசகர் துணையுடன் ஒரே மாதிரி பங்குச் சந்தை முதலீடுகளை செய்து வந்தனர். 2008இல் சந்தை வீழ்ச்சியடையும் போது மூவரின் கணக்கிலும் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தது. ஒரே மாதிரி முதலீடு செய்து வந்தாலும் 5 மாத தொடர் வீழ்ச்சியின் போது மூவரும் வெவ்வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கினர். ஹாரியைத் தவிர மற்ற இருவரும் ஆலோசகர் பேச்சைக் கேட்பதையும் நிறுத்தி விட்டனர்

டாம் 54% மதிப்பு இறக்கத்தைக் கண்டதும் ரொம்பவே பயந்துவிட்டார். இன்னமும் சந்தையில் பணத்தை வைத்திருந்தால், மொத்தவும் போய்விடும் என்று 10 மார்ச் 2009 அன்று 460,000 டாலர்களையும் எடுத்து வங்கியில் போட்டுவிட்டார். அமெரிக்க வங்கிகள் சேமிப்புக்கணக்குக்கு வெறும் 0.5% மட்டுமே வட்டி கிடைக்கும் அதற்கும் வருமான வரி உண்டு, ஆக மொத்தம் பணம் அப்படியே இருக்கும். ஆனால் 2009 முதல் இன்று வரை அமெரிக்காவில் விலைவாசி 15% உயர்ந்துள்ளது. அதாவது 2009 இல் 400,000 டாலருக்கு கிடைத்த பொருளுக்கு இன்று 460,000 கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது 54%ஐ பங்குச் சந்தையில் இழந்த டாம் இன்னொரு 15%ஐ இன்ஃப்ளேசனில் இழந்து விட்டார்.

டிக் கொஞ்சம் மிதவாதி. டாம் 2009 இல் தன் முதலீட்டை எடுக்கப்போறேன்னு சொன்னதும் இவரும் கொஞ்சம் பயந்து விட்டார். டிக் அதற்கு மேலும் எவ்வித முதலீடும் செய்யவில்லை ஆனால் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு மில்லியன் டாலரைத் தொடவில்லை. இன்று அதன் மதிப்பு 1.9 மில்லியன் டாலர்கள். இன்று டௌ ஜோன்ஸ் குறியீடு 26,627 புள்ளிகள் அதாவது நஷ்டத்தையும் ஈடு செய்து, ஒரிஜினல் முதலீட்டின் இரு மடங்காகவும் ஆகியுள்ளது.

இருப்பதிலேயே ஹாரிதான் புத்திசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி. டாமையும் டிக்கையும் பங்குச் சந்தையில் நீண்டகாலம் நிலைத்திருப்பதை வலியுறுத்தினார், ஒருவர் பாதி கேட்டார் மற்றொருவர் சுத்தமா கேக்கல. 
பங்குச் சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என்று நம்பிய ஹாரி 10 மார்ச் 2009, ஏற்கெனவே இருந்த முதலீட்டை தொடவில்லை, அது மட்டுமில்லாமல் தன்னிடமிருந்த வேறு சில முதலீடுகளிலிருந்து எடுத்து இன்னொரு மில்லியன் டாலரை 6504 புள்ளிகளில் டௌ ஜோன்ஸ் இருந்த போது சல்லிசா கிடைத்த நல்ல பங்குகளில் முதலீடு செய்தார். ஆக அவரோட மொத்த முதலீடு 2 மில்லியன் டாலர்கள். 54% வீழ்ந்த முதல் மில்லியனின் இன்றைய மதிப்பு 1.9மில்லியன், வீழ்ச்சியடந்த மார்க்கெட்டில் முதலீடு செய்த மில்லியனின் இன்றைய மதிப்பு 4.1 மில்லியன் டாலர்கள். ஆக மொத்தம் 6 மில்லியன் டாலர்கள்.

https://economictimes.indiatimes.com/mf/analysis/mutual-fund-investors-stop-their-sips-as-market-turns-volatile/articleshow/66049916.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=ETFBMF&fbclid=IwAR20K923Mzca2y3fRIX1DaRcRX62AWgCQHIWEeLAHwd1MdyLCZi9vONFOvsடாம், டிக் & ஹாரி – இந்த மூவரில் நீங்க யார் மாதிரி என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஆஃப்டர் ஆல் உங்க பணம் – உங்க முடிவு

ஆயுள் காப்பீட்டில் நாம் செய்யும் தவறுகள்

Image result for life insurance images

1. ஆயுள் காப்பீடு எடுக்காமல் காலம் தாழ்த்துவது

மக்கள் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது இது. இப்ப என்ன அவசரம் என்று காப்பீடு எடுக்காமல் இருந்து விடுகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த ஒவ்வொருவரும் ஆயுள் காப்பீடு எடுக்கணும். இளம் வயதில் எடுத்தால் ப்ரீமியம் கம்மியாக இருக்கும். வயதாக வயதாக ப்ரீமியம் கூடிக்கொண்டே போகும். அப்புறம் நீரழிவு, இதய நோய் போன்றவை வரும் முன்னரே காப்பீடு எடுத்து விட வேண்டும். இது போன்ற நோய்கள் வந்தப்புறம் இன்சூரன்ஸ் கிடைப்பதே கடினம்

2. தவறான பாலிசிகளை வாங்குவது

டெர்ம் பாலிசி தவிர வேறு எதையும் வாங்குவது பண விரயம். எந்த எண்டோமெண்ட் / யூலிப் / மணி பேக் பாலிசிகளாலும் உங்களுக்குத் தேவையான அளவு காப்பீட்டை பெற முடியாது

3. தேவை இல்லாதோருக்கு காப்பீடு வாங்குவது

சார், மேடம் பேர்ல ஒரு பாலிசியும் பாப்பா பேர்ல ஒரு பாலிசியும் போட்டுடலாம் என்று சொல்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பேச்சில் மயங்காமல், சரிங்க அப்படியே போட்டுடலாம் ரெண்டு பேருக்கும் தலா ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி போடுங்கன்னு சொல்லுங்க, அவர் தெரிச்சி ஓடிடுவார். வருமானம் இல்லாதோருக்கு டெர்ம் பாலிசி தர மாட்டாங்க ஏன்னா இன்சூரன்ஸ் என்பதே வருமான இழப்பை ஈடுகட்டத்தான் என்பது காப்பீடு நிறுவனங்களின் நிலை. அப்ப எண்டோமெண்ட் மட்டும் ஏன் கொடுக்கறீங்கன்னு கேளுங்க. வருமானம் ஈட்டாதோருக்கு குறிப்பா குழந்தைகள் பேரில் ஆயுள் காப்பீடு போடாதீங்க. அவர்களுக்கு முதலீடு வேணும்னா அதுக்கு பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன

4. க்ரூப் பாலிசி இருக்குன்னு காப்பீடு எடுக்காமல் இருப்பது

அலுவலகத்தில் தரும் க்ரூப் பாலிசியை மட்டும் நம்பி இருக்காதீர்கள். அதில் உங்களுக்குத் தேவைப்படும் ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இருக்காது. நீங்க அதே கம்பெனியில் ரிட்டையர்மெண்ட் வரை வேலை செய்வீங்கன்னு நிச்சயமில்லை, அடுத்த கம்பெனியிலும் க்ரூப் பாலிசி இருக்கும் என நிச்சயமில்லை. இருக்கும் கம்பெனி வழங்கும் க்ரூப் பாலிசியிலும் மாற்றங்கள் வரலாம். இப்ப விட்டுட்டு அப்புறம் தேவையை உணரும் போது உங்களுக்கு நீரழிவு நோய் வந்து காப்பீடு எடுக்க முடியாமலே போகலாம்

5. தேவைக்கு குறைவாக காப்பீடு செய்வது

ஒருவரின் ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு காப்பீடு ஐடியல், குறைந்த பட்சம் 10 மடங்காவது இருக்க வேண்டியது அவசியம். இப்ப நீங்க ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கறீங்க. உங்க குடும்பம் அதுக்கு ஏத்த லைஃப்ஸ்டைலுக்கு பழகிடுவாங்க. நீங்க திடீர்னு இறந்தா 2 கோடி ருபாய் இருந்தால்தான் அதை முதலீடு செய்து ஆண்டுக்கு 12-14 லட்சம் பெற முடியும். அப்போதுதான் விலைவாசி உயர்ந்தாலும் உங்க குடும்பத்தாரால் சமாளிக்க முடியும். ஒரு கோடி கிடைத்தால் அதிலிருந்து வரும் 7 லட்சம் வச்சி செலவுகளை கட்டுப் படுத்தி சமாளிக்கலாம். அதற்கும் குறைவாக காப்பீட்டுத் தொகை கிடைத்தால் அது சில ஆண்டுகளிலேயே கரைந்து விடும்

6. தேவைக்கு அதிகமாக காப்பீடு செய்வது

எப்படி தேவைக்கு குறைவாக காப்பீடு செய்வது தவறோ அது போல தேவைக்கு அதிகமாக காப்பீடு செய்வதும் தவறு. நிறுவனங்கள் பொதுவா உங்க தேவைக்கு அதிகமா காப்பீடு தர மாட்டாங்க., அப்படியே கிடைத்தாலும் உதாரணத்துக்கு வருமானத்தின் 40- 50 மடங்கு காப்பீடு எடுப்பது வீண் (மிக இளம் வயதில் இருப்போர் விதிவிலக்கு). 20 மடங்கு காப்பீட்டுக்கு ஆகும் ப்ரீமியத்துக்கும் மேல் செலவழிக்கும் பணத்தை முதலீடு செய்யும் வாய்ப்பை இழப்பீர்கள். 
அதே போல ரிட்டையர்மெண்ட் முதலீட்டு குறிக்கோளை அடைந்த பின் காப்பீட்டை நிறுத்தி விடலாம். இன்று நாம் இறந்தால் குடும்பம் இதே லைஃப்ஸ்டைலை தொடர முடியும் என்ற நிலை வந்தபின் கட்டும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் வீண் செலவு

7. ப்ரீமியத்தை மட்டும் வைத்து முடிவு செய்வது

டெர்ம் பாலிசி எடுக்கும் போது ப்ரீமியத்தை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள். காப்பீட்டு நிறுவனத்தின் க்ளெயிம் ரேசியோ, கஸ்டமர் சர்வீஸ் பற்றிய ரிவ்யூஸ், கம்பெனி இன்னும் 30-40 ஆண்டுகள் நிலைத்திருக்குமா என்பதையெல்லாம் பார்த்து ஆராய்ந்து முடிவெடுங்கள்.

எப்ப எடுக்கறது, எந்த பாலிசி எடுக்கறது, எந்த நிறுவனத்தில் எடுக்கறதுன்னு குழம்புவோர் இவற்றை விலக்கிவிட்டால் மிச்சமிருப்பதே சரியா முடிவாக இருக்கும்

யாருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை?

டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு தேவையில்லை, அதை வாங்காதீர்கள்

என்னடா ஆச்சு இவனுக்கு? இவன் பேச்சைக் கேட்டு டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் இப்படி சொல்றானேன்னு திட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?

இப்பதிவு யார் யாருக்கெல்லாம் ஆயுள் காப்பீடு தேவையில்லை என்பது குறித்து

1. குழந்தைகள் : கண்டிப்பா ஆயுள் காப்பீடு தேவைப்படாதவர்கள் லிஸ்டில் முதலிடம் பெறுபவர்கள் குழந்தைகள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கிறேன் பேர்வழி என்று காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். சேமிப்பிற்கு பல்வேறு நல்ல வழிகள் இருக்கின்றன

2. ஓய்வு பெற்றவர்கள் : வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் காப்பீடு தேவையில்லை. காப்பீடு என்பதே திடீர் மரணத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சரிகட்டுவதற்குத்தான். வருமானம் இல்லாத போது காப்பீடு அவசியல்லாதது மட்டுமல்ல அது ஒரு அநாவசிய செலவு

3. இறந்தாலும் வருமான இழப்பு இல்லதோர் : சில பேரோட வருமானம் மொத்தமும் வீட்டு வாடகையில் மூலம் இருக்கும். அவர்கள் இறந்து போனாலும் வருமானம் சற்றும் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கும். இவர்களைப் போன்றோருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை

4. செய்யும் தொழிலில் குடும்பத்தாரை ஈடுபடுத்துவோர் : உதாரணத்துக்கு சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி அவர் உயிருடன் இருக்கும் போதே பிள்ளைகளை ஆளுக்கொரு கடையை நிர்வகிக்க வைத்து விட்டார், அவர் இறந்தபின்னும் கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தன. அவர் இறப்பால் குடும்பத்தாருக்கு பொருளாதார இழப்பு இருந்திருக்காது என நினைக்கிறேன். இது போன்று தம் கடையிலோ, தொழிலிலோ குடும்பத்தாரை ஈடுபடுத்தி முழுமையாக தொழிலை நடத்தும் அளவுக்கு வைத்திருப்போருக்கும் பெரிய அளவில் ஆயுள் காப்பீடு தேவையில்லை

5. ஒரு குடும்பத் தலைவர் தான் இருக்கும் போதே மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டால் அதற்குப் பின் ஆயுள் காப்பீட்டுக்கு அவசியமில்லை

6. உங்க பெற்றோர் உங்க வருமானத்தை நம்பி வாழவில்லை, நீங்க திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோர் – அதாவது பொருளாதார ரீதியில் உங்களை நம்பி யாரும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்று உறுதியாக நம்புவோருக்கும் ஆயுள் காப்பீடு அவசியமற்றது.

7. அமெரிக்காவில் இருக்கும் அமிஷ் சமூகம் போல முழுக்க முழுக்க சுயசார்பு வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை.

8. நீங்க “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்” கேட்டகரி ஆளாக இருந்து, உங்க மரணத்துக்குப்பின் உங்க குடும்பத்தை கடவுள் பொருளாதார சீரழிவிலிருந்து காப்பார் என்று நீங்க நம்பினால் – தேவை எனினும் நீங்களும் ஆயுள் காப்பீடு இல்லாமல் வாழலாம். “In God, We Trust” என்று அமெரிக்கா அச்சிடுவதும் பணத்தில்தான் என்பதை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்

வாழ்க்கையின் எந்த எட்டில் நீங்கள் இருந்தாலும் இந்த எட்டில் இல்லாவிட்டால் ஆயுள் காப்பீடு உங்களுக்கு அவசியம். உங்க வருமானத்தை நம்பி ஏதேனும் ஒரு ஜீவன் இருந்தால், நீங்க வருமானம் ஈட்டும் வரையும், அந்த ஜீவன் பொருளாதார ரீதியில் உங்களைச் சார்ந்து இருக்கும் வரையும் உங்களுக்கு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு அத்தியாவசியம்