முதியோருக்கான முதலீட்டு வாய்ப்புகள்.

நம் அப்பாவும் தாத்தாவும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற போது வந்த பணத்தை இந்தியன் வங்கியிலோ சுந்தரம் ஃபைனாஸிலோ போட்டுவிட்டு வந்த வட்டியில் வாழ முடிந்தது. 15% வட்டி, போட்ட பணம் 5 வருடங்களில் இரட்டிப்பான காலமெல்லாம் போய் இப்ப சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி 7.25% ல வந்து நிக்குது. வரும் காலங்களில் இது இன்னும் குறையும் என எதிர்பாக்கலாம்.

ஓய்வு பெற்றவர்களில் பலரும் பங்குச் சந்தை குறித்து அறிமுகம் இல்லாதவர்கள். ஈக்விட்டியிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அவர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் என்னென்ன?

1. Fixed Deposit with Non Banking Financial Companies : வைப்பு நிதி என்பது வங்கிகளால் மட்டும் வழங்கப்படுவதல்ல. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட பல நிறுவங்கள் 5 ஆண்டுகள் வரை வைப்பு நிதி பெறுகின்றன. இவை வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகின்றன

எல் ஐ சி ஹவுசிங் – 7.7%, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் 8.5%, மஹிந்த்ரா நிறுவனம் 8.3%, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் 9.38% ஆகியவை சில உதாரணங்கள் (இவை சீனியர் சிட்டிசன்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும் திட்டங்கள, மாதாமாதம் வட்டி வேணும்னா கொஞ்சம் கம்மியாகும்.ஆண்டுக்கொருமுறை வட்டி வங்கிக்கு வருமாறு செய்துவிட்டு மாதாமாதம் எடுத்துக்கொள்வது அதிக நன்மை பயக்கும்)

சாதகம் : வங்கியை விட அதிக வட்டி
பாதகம் : வங்கிகளை விட பாதுகாப்பு கொஞ்சம் குறைவு என்று சொல்லலாம். வங்கிகள் போற போக்கைப் பாத்தா அதுவும் பாதகமாத் தெரியல

2. பிரதம மந்திரி வய வந்தன யோஜ்னா: 
60 வயது மேற்பட்டோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம். எல் ஐ சி வழியாக வழங்கப் படுகிறது

காலம் : 10 ஆண்டுகள் 
வட்டி : மாத வட்டிக்கு 8%, ஆண்டுக்கு ஒரு முறை வாங்கினால் 8.3%
அதிக பட்ச முதலீடு : 15 லட்சம் 
நடுவில் டெபாசிட்டை உடைக்க முடியாது, ஆனா 3 ஆண்டுகளுக்குப் பிறகு 75% கடன் பெற்றுக் கொள்ளலாம்

சாதகங்கள் : 10 ஆண்டுகளுக்கு 8.3% வட்டி தரும் திட்டம் வேறு எதுவும் இன்று இல்லை 
மத்திய அரசின் திட்டம் ஆதலால் பாதுகாப்பு மிக அதிகம் 
வட்டி குறையாமல் 10 ஆண்டுகளும் இருக்கும்

பாதகங்கள் : வங்கிகளில் செய்வது போல டெபாசிட்டை உடைக்க முடியாது
15 லட்சம் வரைதான் இதில் முதலீடு செய்ய முடியும்

3. சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் 
60 வயதுக்கு மேற்பட்டோரும் வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிய 55 வயதுக்கு மேற்பட்டோரும் முதலீடு செய்யலாம்

8.6% வட்டியில் ஆரம்பிச்சது இப்ப 8.3% த்தில் வந்து நிக்குது

வங்கிகள் மூலமோ, தபால் அலுவலகம் மூலமோ முதலீடு செய்யலாம்

15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்

காலம் : 5 ஆண்டுகள், அப்புறம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்

ஒரு வருடம் கழித்து Pre Mature Withdrawal செய்யலாம் (கட்டணம் உண்டு)

சாதகங்கள் 
வங்கியை விட அதிக வட்டி 
செக்சன் 80 C யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு

பாதகம் : வட்டி நிர்ணயம் இல்லை, ஆண்டுக்கொரு முறை வரி மாற்றி அமைக்கப்படும். குறைந்து கொண்டே வரும் என நினைக்கிறேன்

4. எல் ஐ சியின் ஜீவன் அக்‌ஷய் : 
இது ஒரு வகை பென்சன் திட்டம். உலகிலுள்ள பெரும்பான்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் Annuity என்ற பென்சன் திட்டத்தை வழங்குகின்றன. நான்றிந்த வரையில் ஜீவன் அக்‌ஷய் அளவுக்கு பென்சன் வழங்கும் Annuity வேறு எதுவுமில்லை

முதலீட்டுத் தொகை : எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

இத்திட்டம் முதியோருக்கு மட்டுமல்ல, யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். வாழ் நாள் முழுதும் மாறாத (குறையாத) பென்சன் தரும் திட்டம் என்பதால் இதை இங்கு சேர்த்தேன்

முதலீடுத்தொகை, வயது, எல் ஐ சி தரும் 7 ஆப்சன்கள் இவற்றிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும். 60 வயதுக்கு மேற்பட்டோர் எடுக்கும் ஆப்சனுக்கு ஏற்ப 7-8% எதிர்பார்க்கலாம்

1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். 
இவையே அந்த 7 ஆப்சன்கள் 
சாதகம் : இன்று ரிட்டையர் ஆகும் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகள் உயிருடன் இருப்பார் என எதிர்பார்க்கலாம். இன்னும் 5-10 ஆண்டுகள் கழித்து இன்று இருக்கும் வட்டி விகிதம் இருக்காது. இந்த ஒரு திட்டம் மட்டும் தான் வாழ் நாள் முழுதும் குறிப்பிட்ட வட்டி கேரண்டீட் தருகிறது. 
முதலீட்டுத் தொகைக்கு சீலிங் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் 
பாதகம் : உங்க வாழ் நாளில் பணம் திரும்ப வராது, வட்டி மட்டுமே வரும். மூன்றாவது & ஏழாவது ஆப்சனில் மட்டும் உங்க வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்

5. மத்திய அரசின் 7.75% கடன் பத்திரம் 
பேரே இதன் முழு விவரங்களையும் சொல்லிவிடும்
இது ஒரு கடன் பத்திரம், மத்திய அரசால் வழங்கப்படுவது

இதுவும் சீனியர் சிட்டிசன்கள் மட்டுமன்றி எல்லாருக்குமான முதலீடு. வங்கிகளை விட சிறிது அதிக வட்டி மற்றும் மத்திய அரசு கடன் பத்திரம் என்பதால் அதிக பாதுகாப்பு – இவ்விரு காரணங்களால் இதையும் இங்கு பட்டியலிட்டேன்.

வட்டி : ஆண்டுக்கு 7.75% 
எவ்வளவு முதலீடு செய்யலாம் : உச்சவரம்பு இல்லை 
முதலீட்டு காலம் : முதலீடு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைக்கும் – இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது

60 முதல் 70 வயதானவர்கள் 6 ஆண்டுகளுக்குப்பிறகும் 
70 முதல் 80 வயதானவர்கள் 5 ஆண்டுகளுக்குப்பிறகும் 
80 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆண்டுகளுக்குப்பிறகும் பணம் திரும்பப் பெறலாம்.

சாதகம் : வங்கிகளை விட சிறிது அதிக வட்டி 
பாதகங்கள் : குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் திரும்பப் பெற முடியாது 
இக்கடன் பத்திரங்கள் டீமேட் அக்கவுண்ட் மூலமே வழங்கப்படுகின்றன. டீமேட் அக்கவுண்ட் இல்லாதவர்கள் இதற்காக மட்டும் டீமேட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.

இவை தவிர, போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் ஸ்கீம்னு ஒண்ணு இருக்கு. அதில் ஒரு வருஷத்துக்கு 6.6%, ரெண்டு வருசத்துக்கு 6.7% மூணு வருஷத்துக்கு 6.9%, அஞ்சு வருசத்துக்கு 7.4% வட்டி வழங்கப் படுகிறது. இது வங்கி வட்டியை ஒத்திருப்பத்தால் இது குறித்து பெரிசா எழுத ஒன்றுமில்லை.

மாதாந்திர வட்டி தேவைப்படாதவர்கள் பெரும்பாலும் Cumulative Deposit செய்வார்கள். அதில் வரும் மொத்த வட்டிக்கும் வருமான வரி உண்டு. கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும்னா – கையிருப்பை இதில் ஏதாவது ஒரு வைப்பு நிதியில் போட்டு அதில் வரும் வட்டியை மட்டும் ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் முடிவில் Cumulative Deposit மூலம் பெறுவதை விட அதிகம் பெற வாய்ப்பு அதிகம்.

வங்கி சேமிப்புக் கணக்கு vs Liquid Mutual Funds

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டியை மறைமுகமாகக் குறைத்துள்ளது. May 2,2019 முதல் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கணக்குகளுக்கு வட்டி 3.5% லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது. இது எல்லாருக்கும் என மாற்றப்படும் எனவும் ஏனைய வங்கிகளும் விரைவில் வட்டிக் குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன்

இனியாவது வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணத்தை முடக்காதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அதில் பேலன்ஸ் வைத்து விட்டு மிச்சத்தை Liquid Mutual Funds யிலோ அல்லது குறைந்த பட்சம் வைப்பு நிதியிலோ வையுங்கள்.

இந்நடவடிக்கை எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் வட்டி விகிதம் இன்ஃப்ளேசனை ஒட்டியே இருக்கும். இன்ஃப்ளேசன் குறையும் போது வட்டி குறைவதும் இயல்பே. மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர வட்டியை குறைத்தே ஆகவேண்டும். வங்கி வைப்பு நிதிக்கான வட்டி 5 – 6% லெவலுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சாதக பாதகங்கள் நீங்க்ள் இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். நீங்க டெபாசிட் செய்யும் இடத்தில் இருந்தால் இது உங்களைப் பாதிக்கும். வீட்டுக் கடனோ தொழில் கடனோ வாங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இன்ஃப்ளேசனைத் தாண்டி அதிக அளவு வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் தரக்கூடியது பங்குச் சந்தை முதலீடுகளே. ஏற்கெனவே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணவரத்து அதிகமா இருக்கு. வங்கி வட்டி விகிதம் குறையும் போது அது இன்னும் அதிகமாகும்..

ஈக்விட்டியும் பாண்ட் முதலீடும்

ஈக்விட்டியும் பாண்ட் முதலீடும். 
இவை இரண்டும் ஒரு போர்ட்ஃபோலியோவின் ஸ்டெபிலிட்டிக்கு மிக முக்கியம். ஈக்விட்டி வளர்ச்சிக்கும் பாண்ட் சேஃப்டிக்கும் முக்கியம்.

ஈக்விட்டி ஒரு காரில் இருக்கும் ஆக்சிலரேட்டர் என்றால் பாண்ட் ப்ரேக் போன்றது. ப்ரேக் வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினாலும், கார் தறிகெட்டு ஓடி ஆக்சிடெண்ட் ஆகாமல் காக்கும்.

பல முதலீட்டாளர்கள் இரண்டிலும் சரியான நேரத்தில் முதலீடு செய்யாமல் விட்டு விடுகிறார்கள்

இளம் வயதினர் மார்க்கெட்டில் எல்லாருக்கும் 30-40 % வளர்ச்சி கிடைக்கிறதே என்று சேமிப்பு அனைத்தையும் ஈக்விட்டியில் போடுகின்றனர். பங்குச் சந்தை மேலே மட்டுமே போகும் வரையில் இது நல்லாத்தான் இருக்கும், சந்தை வீழ்ச்சி அடையும் போது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பாண்ட்கள்தான் ஸ்டபிலிடி கொடுக்கும்

இதற்கு நேர் மாறாக ரிட்டையர் ஆக இருப்போரும் ரிட்டையர் ஆனவர்களும் முதலை சேமிப்பதாக எண்ணி ஈக்விட்டியை முழுதுமாக தவிர்க்கின்றனர். இதுவும் தவறும். ஓரளவுக்கு ஈக்விட்டி இல்லாத போர்ட்ஃபோலியோவின் வளர்ச்சி மிகக்கம்மியாக இருக்கும்.

இளம் வயதினரின் போர்ட்ஃபோலியோவில் 20% மாவது பாண்ட்களும் முதியோரின் போர்ட்ஃபோலியோவில் 20-30 அல்லது 40 % வரை ஈக்விட்டியிலும் வைப்பது ஒரு நல்ல அசெட் அலோகேசனாக இருக்கும்.

கடன் பத்திரங்களும் வைப்பு நிதியும்

கடன் பத்திரங்கள் (Bonds) Secondary Market இல் விற்கப்படுகின்றன, வாங்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலம் கழித்து கடன் பத்திரங்கள் முதிர்வடையும், பத்திரங்களை வெளியிட்டவர் (அரசோ தனியார் நிறுவனமோ) Good Standingஇல் இருப்பார், பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவை செகண்டரி மார்க்கெட்டில் வாங்கப்படுகின்றன. இதையே வைப்புநிதிகளுக்கும் (Fixed Deposit) ஏன் ஏற்படுத்தக்கூடாது?? அப்படி ஒரு சந்தை உருவானால், வங்கி வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில் அது நல்லதொரு வாய்ப்பை வழங்கும்.

உதாரணத்துக்கு எனக்கு ஐசிஐசிஐ வங்கியில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு வைப்பு நிதி இருக்குன்னு வச்சிப்போம். 5 வருசம் முன்ன போட்ட போது 9.25% வட்டி, முதிர்வு காலம் மொத்தம் 10 ஆண்டுகள், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அது முதிர்வடையும் போது அதன் மதிப்பு ரூ 24,22,225. வருமான வரி ஆளுக்காள் மாறுபடும் என்பதால் அதை கான்செப்ட்டுக்கு கணக்கில் எடுக்க வில்லை. கூட்டு வட்டி முறையில் இன்று அதன் மதிப்பு ரூ.15,56,350.

இன்று அதே வங்கி வழங்குவது 7% வட்டி. இன்று ஒருவர் 15,56,350 ரூபாயை முதலீடு செய்தால் அவருக்கு வெறும் 21,82,861 மட்டுமே கிடைக்கும். இன்றைய வட்டி விகிதத்தில் ஐந்தாண்கள் கழித்து 24,22,200 ரூ கிடைக்கணும்னா அவர் ரூ 17,27,000 முதலீடு செய்யணும்.

இப்ப நான் அவருக்கு என்னுடைய வைப்பு நிதியை 16,50,000க்கு விற்க முடிந்தால் இருவருக்குமே லாபம். இன்றைக்கு அந்த வைப்பு நிதியை அந்த விலைக்கு விற்க எனக்கு பல காரணங்கள் இருக்கலாம். வைப்பு நிதியை உடைத்து எடுத்தால் எனக்கு 15,56,350 மட்டுமே கிடைக்கும்… Fixed Deposit Secondary Market உருவானால் நல்லா இருக்கும்ல

முதலீட்டில் கடன் பத்திரங்களின் (Bonds) முக்கியத்துவம்

Image result for investment bond pictures

நாணயம் விகடனில் வந்த என் கட்டுரை

பணம் சம்பாதிக்க நிறுவனங்களின் பங்குகளில் (Stocks) முதலீடு செய்

பங்குகளில் சம்பாதித்த பணத்தை பாதுகாக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய் என்று பங்குச் சந்தையில் ஒரு சொலவடை உண்டு

படிக்கும் போது முரணாகத் தோன்றினாலும் சிறு / குறு முதலீட்டார்கள் முதல் முதலீட்டு நிறுவனங்கள் வரை அனைவரின் முதலீட்டுத் தொகுப்பிலும் (Portfolio) இருக்க வேண்டியது கடன் பத்திரங்கள் (Bonds). அவை போர்ட்ஃபோலியோவுக்கு ஸ்திரத்தன்மை வழங்கக் கூடியவை.

ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிப்பவர்கள், செய்யும் நூறு ரூபாய் முதலீட்டில் அவர் வயது என்னவோ அவ்வளவு சதவீதம் பாண்டிகளிலும் மிச்சத்தை ஷேர்களிமும் முதலீடு செய்ய வேண்டும் எனபது பொருளாதார நிபுணர்களின் பரிந்துரை. வயது அதிகமாவது போல் போர்ட்ஃபோலியோவில் பாண்ட்களின் சதவிகிதமும் அதிகாகிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு நாட்டில் வட்டி விகிதம் அதிகமாகும் போது பாண்ட்களின் மவுசு குறையும், வட்டி விகிதம் குறையும் போது பாண்ட்களின் மவுசு அதிகமாகும். இந்தியாவில் வட்டிவிகிதம்  குறைந்து கொண்டு வரும் இப்போது பாண்ட்கள் நல்ல  வளர்ச்சி காண்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் யூடிஐ நிறுவனத்தின் கில்ட் அட்வாண்டேஜ் நிதி 11.3% வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்டேட் பாங்க், ஃப்ரான்க்ளின் டெம்பிள்டன் போன்ற நிறுவங்களின் நிதிகள் 10.5 % வளர்ந்துள்ளன. வங்கிகள் தரும் 6-7% வட்டியை விட இவை அதிகம்.  முன்பு வட்டி அதிகமா இருந்த போது வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் இப்போது After Market இல் நல்ல விலைக்கு வாங்கி விற்கப்படுகின்றன. இந்தியாவில் இன்னும் சில வருடங்களுக்கு வட்டி விகிதம் குறையவே வாய்ப்பு அதிகம், எனவே பாண்ட்களின் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்ட அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாகி வந்தாலும் பாண்ட்களில் முதலீடு செய்ய வேண்டிய தருணமிது.

அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்ற நவம்பர் 2017 இல் 18,250 ஆக இருந்த டௌ ஜோன்ஸ் (அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடுகளில் ஒன்று) பத்தே மாதங்களில் 22,349 புள்ளிகளை எட்டியுள்ளது. அதாவது பத்து மாதங்களில் 22.5 % வளர்ச்சி. இப்போது அமெரிக்கப் பங்குச் சந்தையில் மூதலீடு செய்பவர் தன்னை ரிட்டையர்மெண்ட் எனும் ஊருக்குச் செல்லும் போர்ட்ஃபோலியோ எனும் தண்டவாளத்தில் செல்லும் ட்ரெயினை ஓட்டுபவர் போல யோசிக்க வேண்டும். வண்டியின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே அடைந்து விடுவோம் என்று விட்டு விட முடியாது. ஒரு நேரத்தில் வேகம் மிக அதிகமாக ஆகி வண்டி தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்து நேர வாய்ப்புண்டு. இப்போது அவர் “பாண்ட்ஸ்” எனும் ப்ரேக்கை உபயோகித்து வண்டிக்கு ஒரு ஸ்திரத்தன்மையை தர வேண்டும். அப்போதுதான் வளைவில் ஏதோ ஒரு தடங்கல் வந்தால் ட்ரெயினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஓயூவூதியத்துக்கு போர்ட்ஃபோலியோவிலிந்து ஆண்டுக்கு 5% எடுத்து செலவு பண்ண நினைப்பவர்களுக்கு பாண்ட் அதி முக்கியம். ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போது ஷேர்களை வாங்க வேண்டுமே தவிர விற்கக் கூடாது. ஒருவர் 1000 ரூபாய்க்கு வாங்கிய பங்கு வீழ்ச்சி காலத்தில் 500 ருபாய்க்கு போக வாய்புண்டு. அப்ப அவர் மாச செலவு 50,000 ரூபாய்க்கு 50 ஷேர் விக்கறதுக்கு பதில் 100 ஷேர் விக்க வேண்டியிருக்கும். வீழ்ச்சி முடிந்து வளர்ச்சி காலம் வரை காத்திருந்தால், 50 ஷேருக்கே 50,000 ரூபாய கிடைக்க வாய்ப்புண்டு. இந்த மாதிரி நேரங்களில் ஷேர்களை விற்காமல் அதிக ஏற்ற இறக்கங்கள் அற்ற பாண்ட்கள் உறுதுணையாக இருக்கும்

ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடையும் காலகட்டங்களில் போர்ட்ஃபோலியோவின் வீழ்ச்சியைக் குறைக்க பாண்ட்கள் அவசியம்.

கடன் பத்திரங்கள் (பாண்ட்) வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் கட்டுப்படுத்தி முதலீட்டுத் திட்டத்தை ஒரு நேர்கோட்டில் வைத்திருக்க பெருமளவு உதவும். அதுக்காக பாண்ட்களின் வளர்ச்சி ரொம்ப கம்மி என்று நினைக்க வேண்டாம்.

அமெரிக்க பங்குச்சந்தை  வரலாற்றிலேயே மிக மோசமான ஆண்டுகள் 1970ம் 2008ம். 1970இல் ஷேர் மார்க்கெட் இழந்தது 22.6%, 2008இல் இன்னும் மோசம் நாஸ்டாக் 41.7% வீழ்ந்தது. அதாவது டிசம்பர் 31, 2007ம் ஆண்டு ஒரு லட்சம் டாலராக இருந்த போர்ட்ஃபோலியோ டிசம்பர் 31, 2108 அன்று 58,000 டாலராக ஆகியிருந்தது. 1970ம் ஆண்டு பாண்ட் மார்க்கெட் 6.5% ரிட்டர்ன்ஸ் கொடுத்தது, 2008ம் ஆண்டு ஏழு சதவீதத்துக்கும் அதிகமாக ரிட்டன்ஸ் தந்தது. இதே ஆண்டுகளில் ஷேர்களில் 50 சதவீதமும் பாண்டில் 50 சதவீதமும் வைத்திருந்த போர்ட்ஃபோலியோ எப்படி செயல்பட்டது தெரியுமா? 1974 ஆண்டு நட்டத்தை 22.6 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதத்துக்கு குறைத்திருக்கும். 2008ம் ஆண்டு 41% நட்டத்துக்கு பதிலா 19.9% நட்டம் மட்டுமே கண்டிருக்கும்.  இப்ப புரிஞ்சிருக்கும் கடின காலங்களில் பாண்ட்களின் முக்கியத்துவம் என்னன்னு. 

வரிசேமிக்கவும் பாண்ட்கள் உள்ளன. Tax Free Bond and Tax Savings Bond என ரெண்டு வகை வரிசேமிப்பு பாண்ட்கள் இந்தியாவில் உள்ளன. வரிகட்டிய பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் போடறதுக்கு பதில் டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்களில் முதலீடு செய்யலாம், இதில் வரும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. வைப்பு நிதிக்கு 7% வட்டி வழங்கும் எச் டி எஃப் சி வங்கி டாக்ஸ் ஃப்ரீ பாண்டுக்கு 8% வட்டி வழங்குகிறது. டாக்ஸ் சேவிங் பாண்ட்களில் வட்டிக்கு வரிவிலக்கு செக்சன் 80cc யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 20,000 வரை உண்டு ஆனால் முதலீடுக்க்கு வருமான வரி விலக்கு உண்டு. இவை பெரும்பாலும் நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நிறுவனங்கள் வழங்கும் Infrastructure Bonds. ஒருவர் 2007 ஆண்டு ஒரு நிலத்தை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி 2017 இல் அம்பது லட்ச ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். லாபம் 40 லட்ச ரூபாய், இதுல இண்டக்சேசன் போக ஒரு 20 லட்ச ரூபாய் நிகரலாபம். இதுக்கு  நீண்ட கால மூலதன ஆதாய வரி (Longterm capital gain) கட்டறதுக்கு பதிலா NHAI / REC போன்ற நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் செக்சன் 54 EC யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்

இனி உங்க போர்ட்ஃபோலியோவில் பாண்ட்களும் இருக்கும்தானே !!!