பட்ஜெட் போடுவது என்பது தேவையான ஆனால் பலரும் கடைபிடிக்காத பழக்கம்.
பட்ஜெட் போடணும்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல என்போருக்கான பதிவு
One Size Fits All Solution பட்ஜெட்டில் இல்லை. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருத்தருக்கு சாப்பாட்டு செலவு அதிகமாகும், வேறொருவருக்கு பெட்ரோல் செலவு அதிகமாகும்.. அனைவருக்கும் பொருந்தும் டெம்பளேட் பட்ஜெட் போட முடியாது. மாதம் 50 முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கும் ஓரிரு பிள்ளைகள் கொண்ட நடுத்தர தமிழ்க் குடும்பத்தை மனதில் கொண்டு இதை வரைந்திருக்கிறேன்.
வீட்டுக்கடன் 35%
உணவு, உடை, மருந்து இன்னபிற – 25%
வாகனக் கடன் மற்றும் பெட்ரோல் – 15%
கல்வி – 10%
சேமிப்பு 10%
டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு 5%
இது ஒரு டெம்ப்ளேட், ஒவ்வொரு குடும்பத்தின் தேவையும் மாறுபடும். அதன்படி ஒவ்வொரு தலைப்புக்குமான செலவு 5% கூட குறைய இருக்கக்கூடும்.
வீட்டுக்கடன் 30% அளவில் இருப்பது நல்லது, அப்படி இருக்கும் போது அந்த 5% கல்விக்கோ சேமிப்புக்கோ அல்லது Discretionary செலவுகளுக்கோ உபயோகிக்கலாம்.
சிலருக்கு கல்லூரிச் செலவு 20% வரை கூட போகலாம், அப்போது அந்த 10%த்தை வீட்டுக்கடனிலிருந்தோ உணவு உடை பட்ஜெட்டிலிருந்தோ குறைத்து மேனேஜ் செய்யலாம்.
மாதம் 75,000 சம்பளம் வாங்குபவர் தன் வீட்டுக்கடன் தவணையை 22,000-25,000 ரூபாய்க்குள் வைக்க விரும்பினால், அவர் வாங்கும் வீடு ஆண்டு வருமானமான 9 லட்சத்தின் 4 -5 மடங்குக்குள் இருக்க வேண்டும். அதிலும் 20 %க்கும் மேல் கையிருப்பு போட்டு 30 -32 லட்சம் அளவிலேயே கடன் வாங்க வேண்டும்.
கார் நிஜமாவே அவசியமாக இருந்தால் வாங்கலாம். காரைப் பொருத்த வரை ஆண்டு வருமானத்தின் பாதிக்குள் காரின் விலை இருக்க வேண்டும். அதற்கு மேல் காருக்குச் செலவு செய்வது உசிதமல்ல
வருமானத்தின் 5%க்குள் அர்த்தமுள்ள ஆயுள் காப்பீடு வாங்கணும்னா, அது டெர்ம் பாலிசியில்தான் சாத்தியம். அதுக்கும் மேல நீங்க செலவு பண்றீங்கன்னா, தேவையான வேறு செலவுகளின் பட்ஜெட்டிலிருந்து செலவழிக்கிறீர்கள் அல்லது வேறு நல்ல சேமிப்பு வாய்ப்புகளை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்
உங்களுக்கான பட்ஜெட் எப்படி இருந்தாலும் பட்ஜெட்னு ஒண்ணு போட்டு ஒவ்வொரு மாதமும் நீங்க எப்படி செலவு பண்ணியிருக்கீங்கன்னு பாக்கறதும். அதிகமா செலவு செய்யும் கேட்டகரியில் செலவை குறைப்பது எப்படின்னு பாக்கறதும் முக்கியம்.