ஆலோசகர் அவசியமா?

Image result for financial advisor pictures

இறுதிச்சுற்று படம் பாத்திருப்பீங்க, அதில் ரித்திகா சிங்கின் வெற்றிக்குக் காரணம் அவரோட ஆற்றலா அல்லது மாதவனின் கோச்சிங் திறமையா என்று பட்டிமன்றமே வைக்கலாம். ரித்திகாவின் ஆற்றலை முறைப்படுத்தி அவரை ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி இலக்கை அடைய வைத்தவர் அவரோட கோச். முதலீட்டு ஆலோசகர்கள் பணியும் இத்தகையதே..

நம்மிடம் சம்பாதிக்கும் ஆற்றல் உள்ளது, அதில் நம் தேவைகள் போக மிச்சமிருக்கும் பணத்தை எப்படி பெருக்குவது என்பது பலருக்கும் தெரிவதேயில்லை. இங்குதான் ஒரு ஆலோசகரின் தேவை வருகிறது.

முதலீடுகள் குறித்து நன்கு அறிந்தவர்கள், தொடர்ந்து அது குறித்து படித்து தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பவர்கள், தன் முதலீட்டுத் தொகுப்பை (Portfolio) தொடர்ந்து கவனித்து தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய முடிந்தவர்களுக்கு பொதுவா மற்றவர்களின் ஆலோசனை தேவைப் படாது, ஆனால் முதலீட்டுக் கல்விக்கான உலகின் முதல் நிறுவனம் துவக்கிய Loren Dunton சொன்னது போல, ஆலோசகர் தேவைப்படாத அளவுக்கு முதலீடு குறித்து ஞானம் உடையவர்கள்தான் கண்டிப்பாக ஆலோசகர்கள் உதவியை நாடுகின்றனர். அதுவே அவங்க வெற்றியின் ரகசியம். 

உங்களுக்கு ஆலோசகர் தேவையா என்று எப்படி அறிந்து கொள்வது?

  1. குடும்பத்தில் ஒருவரோ அல்லது இருவரும் நல்லா சம்பாதிக்கிறீங்க, ஆனால் உங்க கையிருப்பு மட்டும் வளருவதில்லை என்று நினைக்கிறீர்களா?
  2. வருமானத்தில் பெரும் பகுதியை காப்பீட்டு நிறுவங்களின் திட்டங்களில் “முதலீடு” செய்து விட்டு ரிட்டையர்மெண்ட்டுக்கு எவ்வளவு பணம் கையில் இருக்கும் என்று தெரியவில்லையா?
  3. அதிக செலவு பிடிக்கும் விசயங்களான பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பு, திருமணம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை நோக்கி நகர திடமான திட்டம் இல்லையா?
  4. நீங்க சம்பாதிக்கும் அதே அளவு சம்பாதிக்கும் உங்க அண்டை வீட்டுக்காரர் கட்டும் வருமான வரி எப்படி உங்க வரியை விட கம்மியா இருக்குன்னு யோசித்ததுண்டா?
  5. அறுபது வயதில் ரிட்டையர் ஆகும் போது மாதா மாதம் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், அதைப் பெற உங்களிடம் ரிட்டையர் ஆகும் என்று எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்று தெரியவில்லையா?
  6. வங்கிகள் தரும் வட்டி விகிதம் குறைந்து கொண்டே போகிறதே! இனியும் வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில் பணம் போடலாமா என்ற சிந்தனையா?
  7. ஷேர் மார்க்கெட் சூதாட்டம் போன்றது என்று அதிலிருந்து விலகியே இருக்கிறீர்களா?
  8. நேரடியா நிறுவங்களின் பங்குகளை வாங்கலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா என்று குழப்பமா?
  9. முதலீடு செய்யலாம் என்று இறங்கினால், ஈக்விட்டி, பாண்ட், ஆன்னுவிட்டி, லார்ஜ் கேப், மிட் கேப் என்று புரியாத பாஷையில் ஏதோதோ சொல்றாங்க, எதில் முதலீடு செய்வது புரியாமல் திணறுகிறீர்களா?
  10. இவை ஓரளவுக்கு புரிந்து முதலீடு செய்து வரும்போது வீழ்ச்சி அடையும் மார்க்கெட்டுக்கு ப்ளான் ஏதும் இல்லையா?

இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் சொல்பவர்களுக்கு ஆலோசகர் அவசியம் தேவை.

ஆலோசகர் வேலை கிட்டத்தட்ட ஜிம் ட்ரெயினர் வேலை போன்றது. ஜிம்முக்கு போறதுக்கு உடல் எடை குறைக்கணும், எடை மெயிண்டெயின் செய்யணும், மாரதான் ஓட பயிற்சி செய்யணும், கார்டியோ செஞ்சு மாரடைப்பு வராம தடுக்கணும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் அல்லது இலக்கு.

அதையறிந்த ட்ரெயினர் உங்களுக்கு என்ன தேவையோ அந்த உடற்பயிற்சிகளைச் சொல்வார், எதை எவ்வளவு நேரம் செய்யணும், எப்ப செய்யணும், என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது என்றெல்லாம் பரிந்துரைப்பார், இலக்கை அடையும் வரை உங்களுடன் பயணிப்பார்.

அதே போல முதலீட்டு ஆலோசகரும்  இலக்கை நிர்ணயித்துவிட்டு அதை அடைய எங்கு முதலீடு செய்யணும், எவ்வளவு செய்யணும், காப்பீட்டின் முக்கியத்துவம், முதலீட்டில் செய்ய வேண்டியது செய்யக்கூடாதவை எல்லாத்தையும் அடையாளம் காட்டி இலக்கை அடையும் வரை உங்களுடன் பயணிப்பார்.

ஆலோசகர்களின் துணையுடன் முதலீடு செய்வதில் உள்ள சாதகங்கள்

  1. நம் சொத்தின் மீது எமோசனல் அட்டாச்மெண்ட் வைப்பது மனித இயல்பு. அதை விலக்கச் சிறந்த தீர்வு ஆலோசனை கேட்பது. ஆலோசனை சொல்பவருக்கு உங்க முதலீட்டின் மீது எமோசனல் அட்டாச்மெண்ட் கிடையாது. அப்ப அவரிடமிருந்து வரும் ஆலோசனை பகுத்தறிந்ததாக இருக்கும்.
  2. பங்குச் சந்தையின் போக்கை முழுமையாக யாராலும்  கணிக்க முடியாது.  விலை ஏறும் காலத்தில் விற்பதும் விலை இறங்கும் போது வாங்குவதும் தான் சிறந்த ஸ்ட்ராடஜி.  சிறு முதலீட்டார்கள் பலரும் செய்யும் தவறு இதை மாற்றிச் செய்வதுதான். மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறதே என்று முதலீடு செய்வோம். சந்தை பலமா அடி வாங்கி 20% வீழ்ந்ததும் ஓடிப் போய் மொதோ ஆளா பணத்தை வெளில எடுப்போம். நல்ல ஆலோசரின் துணை மார்க்கெட் வீழும்போது சமாளிக்க பக்க பலமாய் இருக்கும்.

நல்ல ஆலோசகரை எப்படி அடையாளம் காண்பது

அசோசியேசன் அஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா நிறுவனம் AMFI Certification வழங்குகிறது, இச்சான்றிதழ் பெற்றவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை விற்கலாம்

Certified Financial Professional சான்றிதழ் பெற்றவர்கள் பிறருக்கு முதலீட்டு ஆலோசனைகள் சொல்லும் தகுதி பெற்றவர்கள்

  எல்லாத் தொழில்களையும் போல இதிலும் படித்துப் பெறும் அறிவை 10-20 ஆண்டுகள் ப்ராக்டீஸ் செய்தும் கற்றுக்கொள்ளலாம். எனவே சான்றிதழ் பெற்றவர்களையோ அல்லது அனுபவம் உடையவர்களையோ தேர்ந்தெடுக்கலாம்.

ஆலோசகர் எந்த ஒரு  நிதி நிறுவனத்தின் ஊழியராக இல்லாதவராக இருக்கட்டும். அப்படி இருந்தால், அவர் அந்நிறுவனத்தின் முதலீடுகளை மட்டுமே முன்னிறுத்துவார்.

சென்செக்ஸ் அல்லது நிஃப்டியின் வளர்ச்சியை விட இருமடங்கு மும்மடங்கு ரிட்டர்ன் உத்தரவாதம் தருகிறேன் என்பவர்களிடமிருந்து விலகியே இருங்கள். Warren Buffet போன்ற வெகு சிலரால் மட்டுமே தொடர்ச்சியாக மார்க்கெட்டை விட அதிக ரிட்டர்ன்ஸ் தர முடிந்திருக்கிறது.

உங்க பேரிலேயே பங்குகளையும் மியூச்சுவல் ஃபண்ட்களையும் வைத்திருங்கள். தன்னிடம் பணத்தைத் தரச்சொல்லும் ஆலோசகரை நிராகரியுங்கள்.

ஆலோசகரின் முதலீட்டு சித்தாந்தம் என்ன என்று கேளுங்கள்.  முழுக்க  Aggressive ஆகவும் இல்லாமல் Conservative ஆகவும் இல்லாமல் ஒவ்வொருத்தர் தேவைக்கு ஏற்ப சரிவிகிதத்தில் Portofilio வை வடிவமைப்பவராக இருக்கட்டும்.

ஆலோசகர் கடந்த பத்தாண்டுகளில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய ரிட்டர்ன்ஸை கேட்டறியுங்கள். முக்கியமாக மார்க்கெட் வீழ்ச்சியடந்த 2008ம் ஆண்டு அவருடைய Performance என்ன என்பதைப் பாருங்கள். முடிந்தால் அவருடைய வாடிக்கையாளர் ஓரிருவருடன் பேசி அவர்கள் கருத்தைக் கேளுங்கள்.

ஆலோசகரின் கட்டணம் : மருத்துவர்களைப் போல வழக்கறிஞர்களைப் போல முதலீட்டு ஆலோசர்களின் சேவைக்கும் கட்டணம் உண்டு. முதல் முறை உங்களைப் பற்றி அறிய ஓரிரு மணி நேரங்கள் அவர் செலவிட வேண்டும், அதுக்கு ஒரு முறைக் கட்டணமும், தொடர்ந்து உங்க போர்ட்ஃபோலியோவின் அளவிற்கேற்ப 0.5 % முதல் 2% வரையும் கட்டணம் இருக்கும்.

மருத்துவர் தரும் மருந்துகள் நோயைத் தற்காலிகமாகத் தீர்க்கலாம், தொடர்ந்து உடல் நலம் காப்பது உங்கள் கையில், அது போல முதலீட்டு ஆலோசகர் எல்லாத்தையும் பாத்துப்பார் என்று இருக்காதீர்கள். செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பது உங்க கையில். நீங்களும் ஆண்டுக்கொரு முறையாவது போர்ட்ஃபோலியோ சரியான பாதையில் செல்கிறதா என்று பார்த்து ஆலோசகர் உதவியுடன் ரீபேலன்சிங் செய்து வாருங்கள்.

ரமாகாந்த் அச்சரேகர் என்கிற கோச் சச்சின், வினோத் காம்ப்ளி இருவருக்கும் பயிற்சி அளித்தார். ஆரம்ப காலத்தில் இருவரின் திறமையில் பெரிய வித்தியாசம் இல்லை. தன்னுடைய தொடர் உழைப்பால் சச்சின் அடைந்த உயரங்களையும் நாமறிவோம், கவனம் சிதறிய காம்ப்ளியின் நிலையும் நமக்குத் தெரியும். நல்ல ஆலோசகரின் உதவியும் நம் பொருளாதார ஒழுக்கமும் இணைந்தால் எவரெஸ்ட் தொட்டு விடும் உயரமே.