எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்

ஆயுள் காப்பீட்டுச் சந்தை மெதுவாக டெர்ம் பாலிசியை நோக்கி நகர்வதை உணர்ந்த எல் ஐ சி புதிதாக இரு டெர்ம் பாலிசிகளை அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் ஆயுள் காப்பீடு என்பதே ஒரு முதலீடாக நீண்ட நாட்களாக கருதப்பட்டு வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் எண்டோமெண்ட், மணி பேக், யூ எல் ஐ பி போன்றவற்றின் உபயோகம்ற்ற தன்மையை உணர்ந்து டெர்ம் பாலிசி பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். இதையுணர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் டெர்ம் பாலிசியில் கவனம் செலுத்துவதோடு அதில் அதிகரிக்கும் கவரேஜ், சீக்கிரமே பணம் செலுத்தி முடித்தல், ப்ரீமியம் திரும்பக் கிடைக்க வழி, Critical Illness Coverage போன்ற உத்திகளையும் அறிமுகப்படுத்தி பல்லாயிரக்கணக்கான டெர்ம் பாலிசிகள் விற்றுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சியிலும் இடெர்ம், அன்மோல் ஜீவன், அமுல்ய ஜீவன் என்று மூன்று டெர்ம் பாலிசிகள் இருந்தாலும் நிறுவனமும் முகவர்களும் அதில் கவனம் செலுத்தவில்லை. எல் ஐ சி யின் டெர்ம் பாலிசிகளில் இடெர்ம் தான் இதுநாள் வரை விலை குறைவானது ஆனால் அதன் ப்ரீமியமே தனியார் நிறுவன டெர்ம் பாலிசிகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருந்ததும் அது பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் வெற்றி பெறாமல் போனதற்குக் காரணம்.

இதை உணர்ந்த எல் ஐ சி புதிதாக எல் ஐ சி Tech Term (No 854) மற்றும் ஜீவன் அமர் (எண் 855) என இரு டெர்ம் பாலிசிகளை புதிதாக அறிமுகம் செய்கிறது. இவை இரண்டுமே

பெரும்பாலான விசயங்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்டவை. இரண்டுக்குமுள்ள ஒரே வித்தியாசம் டெக் டெர்ம் இடெர்ம் போல எல் ஐ சியின் இணையதளமான www.licindia.in வில் மட்டுமே வாங்க முடியும். ஜீவன் அமர் பாலிசியை முகவர்களிடம் வாங்கலாம். ஜீவன் அமரின் ப்ரீமியம் Tech Term ஐ விட மிக அதிகம்.

இவ்விரு திட்டங்களின் அம்சங்கள்

  1. இவை டெர்ம் பாலிசிகள் – அதாவது காப்பீட்டு காலத்தில் பாலிசிதாரர் இறந்தால் குடும்பத்துக்கு காப்பீட்டுப் பணம் கிடைக்கும். காப்பீட்டு காலத்தில் பாலிசிதாரர் இறக்காத பட்சத்தில் பாலிசிதாரருக்கோ குடும்பத்துக்கோ பணம் ஏதும் கிடைக்காது
  • Tech Term இல் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 50 லட்சம். அமரில் 25 லட்சம்
  • பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகையை (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்
  • அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகையை தெரிவு செய்யும் போது முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரே அளவில் இருக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10% அளவில் அதிகரிக்கும் 16ம் ஆண்டிலிருந்து மீண்டும் காப்பீட்டுத் தொகை ஒரே அளவில் இருக்கும். உதாரணத்துக்கு 50 லட்சம் பாலிசி எடுப்பவரின் sum assured முதல் 5 ஆண்டுகளுக்கு 50 லட்சமாகவே இருக்கும். 6ம் ஆண்டு 55 லட்சம் ஏழாம் ஆண்டு 60 லட்சம் என அதிகரித்து 15ம் ஆண்டு முடிவில் 1 கோடியாக இருக்கும். பாலிசியின் மிச்ச காலத்துக்கு ஒரு கோடியாகவே இருக்கும். அப்புறம் உயராது
  • பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினி பணத்தை மொத்தமாகவோ 5 அல்லது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தோ வாங்கிக் கொள்ளலாம் (மொத்தமாக வாங்கி செலவழித்து விடாமல் 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது)
  • இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்
  • இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம்
  • இப்பாலிசிகள் Accidental Rider, புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன. மற்ற எல்லா பாலிசிகளையும் போல பெண்களுக்கான ப்ரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு

 இப்பாலிசிகள் குறித்த என் கருத்துகள்

இவ்விரு பாலிசிகளும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சந்தையில் உள்ள பிற டெர்ம் பாலிசிகளிலுள்ள நல்ல அம்சங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன (எல் ஐ சியின் முந்தைய டெர்ம் பாலிசிகளில் இவை இல்லை). குறிப்பாக அதிகரிக்கும் கவரேஜ், பாலிசி பணத்தை 15 ஆண்டுகள் பிரித்து வாங்கிக்கொள்ளும் வசதி போன்றவை மிக நல்ல அம்சங்கள்

எல் ஐ சி இடெர்மின் ப்ரீமியம் மிக அதிகம் என்பது பொதுவான குற்றச்சாட்டு, Tech Term இல் அது சரி செய்யப்பட்டுள்ளது. இதன் ப்ரீமியம் எல் ஐ சியின் தற்போதைய டெர்ம் பாலிசிகளின் ப்ரீமியத்தை விட குறைவு.

ஒரே பாதகமான அம்சமாக நான் எண்ணுவது ஜீவன் அமரின் ப்ரீமியம் Tech Term  ப்ரீமியத்தை விட மிக அதிகம்.

உதாரணத்துக்கு 40 வயதான ஒருவர் ஒரு கோடிக்கு 10 ஆண்டு காலம் காப்பீடு எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தற்போதைய இடெர்ம் எடுத்தால் அவரோட ஆண்டு ப்ரீமியம் 14800 + ஜி எஸ் டி 2451 = மொத்தம் 17,251 (ஆன்லைன் பேமெண்ட் டிஸ்கவுண்ட் கணக்கில் எடுக்கவில்லை). இது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகம்

Tech Term இல் இதன் ப்ரீமியம் வெறும் 10,240 + ஜி எஸ் டி 1689 = 11,929 மட்டுமே. அதாவது இடெர்மை விட 30% விலை குறைவு

ஜீவன் அமரில் இவர் செலுத்த வேண்டிய ப்ரீமியம் 16065 ஜிஎஸ்டி தனி. அதாவது ஜீவன் அமரின் ப்ரீமியம் இடெர்மை விட அதிகம், Tech Termஐ விட மிக மிக அதிகம்.

இவ்வாறான விலைப்பட்டியலின் மூலம் எல் ஐ சி ஜீவன் அமரின் தோல்வியை அறிமுகத்திற்கு முன்னரே உறுதி செய்கிறது. மேலும் ஆன்லைன் பாலிசிக்கும் முகவர் விற்கும் பாலிசிக்கும் இவ்வளவு பெரிய விலை வித்தியாசம் வைப்பதன் மூலம் அது முகவர்களையும் வஞ்சிக்கிறது.

எல் ஐ சி இந்தியாவின் மிகப்பெரிய, மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனம். அதற்காக மக்கள் தனியார் பாலிசிகளைவிட கொஞ்சம் விலை அதிகம் தர முன்வருவர். முகவரிடம் பேசி விளக்கம் கேட்டு பாலிசி வாங்கும் வசதிக்காக ஆன்லைன் ஷாப்பிங்கைவிட 4-5% அதிகவிலை தரவும் தயாராக இருப்பார்கள். ஒரேடியா ஆஃப்லைன் பாலிசி ப்ரீமியத்தை ஆன்லைன் பாலிசி ப்ரீமியத்தை விட 60% அதிகம் வைத்தால் முகவர்கள் அதை Promote செய்யவும் மாட்டார்கள் அப்படியே Promote செய்தாலும் மக்கள் அவர்களிடம் விளக்கம் எல்லாம் கேட்டுவிட்டு ஆன்லைனில் எடுத்து விடுவார்கள், ஓரிரு முறை இப்படி நடந்ததும் முகவர்களே டெர்ம் பாலிசி குறித்து வாயைத் திறக்க மாட்டார்கள். முகவர்களின் வருமானம் ப்ரீமியத்தின் குறிப்பிட்ட சதவீதம்தான் – ஏற்கெனவே டெர்ம் பாலிசியின் ப்ரீமியம் குறைவு என்பதால் அவர்களின் வருமானம் குறைவாகவே இருக்கும், இப்படி எல் ஐ சியே அவர்களுக்குப் போட்டியாக வந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

அதிக விலை காரணமாக டெர்ம் இன்சூர்ன்ஸுக்கு எல் ஐ சி பக்கம் போகாமல் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் Tech Term எடுப்பார்கள் என நம்புகிறேன். எல் ஐ சி மனசு வச்சு ப்ரீமியத்தைக் குறைக்காவிட்டால் ஜீவன் அமர் பெருசா செல்ஃப் எடுக்காது என்றே நினைக்கிறேன்.