ஆயுள் காப்பீட்டில் தேவையற்றவை.

பொதுவா ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் எந்த பாலிசி எடுக்கலாம்னுதான் பேசுவோம் – இன்னிக்கு ஆயுள் காப்பீட்டில் தேவையற்றவை குறித்து பாக்கலாம்

1. குழந்தைகளுக்கு காப்பீடு : இதை குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம் என்றே கூறுவேன். ஆயுள் காப்பீடு என்பதே திடீர் மரணத்தால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்வதற்காகத்தான், குழந்தைகளுக்கு காப்பீடு எடுப்பது என்பது அடிப்பைடையிலேயே தவறு. காலேஜ் போகும் போது பணம் கிடைக்கும்னு ஏமாத்தி அவங்களுக்கு வருசா வருசம் பணம் கிடைக்க முகவர்கள் செய்யும் ஏமாற்று வேலை இது. கல்லூரிக்காக சேமிக்கணும்னா அதுக்கு சேமிப்பு ஆப்சன்கள் பல உள்ளன – காப்பீடு ஒரு மோசமான சேமிப்பு

2. அப்புறம் இந்த வீட்டுக் கடனுக்காக அதனுடன் இணைந்த ஆயுள் காப்பீடு – கடன் வழங்கும் வங்கி எடுக்கச் சொன்னால் முடியவே முடியாதுன்னு சொல்லிடுங்க – உங்க வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை ஆயுள் காப்பீடு எடுத்திருக்கணும் நீங்க, கண்டிப்பா உங்க வீட்டுக் கடன் அதை விட அதிகமா இருக்க வாய்ப்பில்லை – எனக்கு தேவையான காப்பீடு இருக்குன்னு சொல்லுங்க – கடனுடன் சேர்ந்த காப்பீட்டை நீங்க கணக்கிலயே எடுக்க முடியாது ஏன்னா கடன் குறையக் குறைய காப்பீட்டின் அளவும் குறைந்து கொண்டே வரும் – இதன் ப்ரீமியமும் அதிகம்


3. விபத்திற்கு இரட்டிப்புக் காப்பீடு : உங்க ஆண்டு வருமானம் 10 லட்சரூபாய் – தேவைகளை கணக்கிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கறீங்க – நீங்க எப்படி இறந்தாலும் உங்க குடும்பத்தின் தேவை ஒரு கோடிதான் – அப்படியிருக்க விபத்தில் இறந்தால் மட்டும் அவர்களின் தேவை இரண்டு கோடி ஆகிவிடுமா என்ன? இந்த ரைடருக்கு கட்டும் காசில் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய்க்கு காப்பிடு எடுத்துட்டுப் போயிடலாம்

4. Whole Life Policy : வருமானம் ஈட்டும்வரைதான் இன்சூரன்ஸ் தேவை, நீங்க வருமானம் ஈட்டுவதை நிறுத்தியபின், உங்க மரணம் குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதிக்காது – அப்போது உங்களுக்கு காப்பீடு தேவையில்லை. ஹோல் லைஃப் பாலிசி டெர்ம்பாலிசியை விட ரொம்ப காஸ்ட்லி, அதுக்கு பதிலா டெர்ம் பாலிசி 65 வயது வரை எடுத்து விட்டு மிச்சப் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யலாம்

டெர்ம் பாலிசியும் ரீ இன்சூரன்ஸும்

Insurance, management, reinsurance, risk icon. Element of insurance icon. Premium quality graphic design icon. Signs and symbols collection icon for websites, web design

நண்பர் ஒருத்தர் பெரிய தொகைக்கு டெர்ம் பாலிசி எடுத்ததும் அதில் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி நண்பர்கள் எல்லாருக்கும் பரிந்துரைத்திருக்கிறார். 
எப்படி விளக்கிச் சொன்னார்னு தெரியல, அவரோட நண்பர்கள் எல்லாரும் ஆண்டுக்கு வெறும் 12,000 முதல் 18,000 ரூபாய்க்கு எப்படி ஒரு கோடி குடுப்பாங்க? எல்லாம் ஏமாத்து வேலை எம் எல் எம் மாதிரி உன்னை ஆள் பிடிக்க அனுப்புனாங்களான்னு கேட்டிருக்காங்க.

அடிப்படை புரிதல் இல்லாததால்தான் இப்படி அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. காப்பீட்டையும் முதலீடாகவே பார்த்துப் பழகிய சமூகத்திற்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு என்பதே புதிது அதுவும் மாசம் 2000 க்குள்ள கிடைக்குதுன்னா சந்தேகம் கொள்வது இயல்பே.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம், எந்த நிறுவனமும் மாசம் 2000 ரூபாய் தந்தா உங்களுக்கு 1 கோடி ரூபாய் தர்றதா சொல்லவில்லை, ஒரு வேளை பாலிசி காலத்துக்குள் நீங்க இறந்தால் உங்க குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகத்தான் சொல்கிறது. பாலிசி காலத்துக்குள் நீங்க இறக்கா விட்டால் கட்டிய பணம் முழுதும் கம்பெனிக்கே. ஆண்டு முழுதும் விபத்து நேராவிட்டால் காப்பீட்டு நிறுவனம், நீங்க வாகன காப்பீட்டுக்கு கொடுத்த பணத்தைத் திருப்பித் தருவதில்லை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மட்டும் ஏன் திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. 
காப்பீடு என்பது ரிஸ்க்கைப் பகிர்வது, ஒரு லட்சம் பேர் காப்பீடு எடுத்தால், 20 வருடத்தில் 20,000 பேர் கூட இறக்க மாட்டார்கள், அவர்களுக்கு மட்டும் க்ளெய்ம் கொடுத்தால் போதும், மற்ற 19,80,000 பேர் கட்டும் ப்ரீமியம் கம்பெனிக்கே. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ப்ரீமியம் கம்மியாகும்

இப்ப காப்பீட்டின் ப்ரீமியம் எப்படி முடிவு செய்யப் படுகிறது என்று பார்க்கலாம். 
காப்பீடு என்பது Art அல்ல அது Science. காப்பீட்டின் ப்ரீமியம் மூன்று காரணிகள் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. அவை மார்ட்டாலிட்டி ரேட் அதாவது இறப்பு விகிதம், வட்டி விகிதம் மற்றும் கம்பெனியின் செலவுகள்

இதற்கென தனிப்படிப்பு இருக்கிறது அதன் பெயர் ஆக்சூரியல் அறிவியல். ஒரு ஆக்சுவரி இறப்பு விகிதத்தையும் வட்டியையும் கணக்கிட்டு பாலிசிக்கு எவ்வளவு பணம் தேவை என்று சொல்வார், நிறுவனம் நடத்த ஆகும் செலவு மற்றும் லாபம் சேர்த்து ப்ரீமியத்தை நிர்ணயிக்கும்.

இறப்பு விகிதம் : ஒரு நாட்டில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி வாழும் காலம், அவர்கள் செய்யும் வேலை, இருக்குமிடம், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றை கணக்கில் எடுத்து, ஒரு குறிப்பிட்ட வயது வரம்பில் இத்தனை சதவீதம் பேர் இறக்க வாய்ப்புண்டு என்று கணக்கிடுவார்கள்

வட்டி விகிதம் : பயனர்கள் கட்டும் ப்ரீமியத்தை நிறுவனம் பங்குகள், கடன் பத்திரங்கள் (பாண்ட்) மற்றும் வைப்புநிதியில் முதலீடு செய்யும், ஒரு நாட்டின் பொருளாதர நிலைமையை கணக்கில் கொண்டு முதலீடு இத்தனை சதவீதம் வருமானம் கொடுக்கும் என்றும் கணக்கிடுவார்கள்

செலவு : இதைத்தவிர பாலிசியை விற்க, நிறுவனம் நடத்த, க்ளெயிம் செட்டில் செய்ய என்று பல செலவுகள் உண்டு. அவற்றையும் கணக்கில் எடுத்து லாபம் சேர்த்து ப்ரீமியத்தை முடிவு செய்வார்கள். இதனால்தான் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி (ஆன்லைன் மட்டுமே) ஏஜெண்ட்டிடம் வாங்கும் டெர்ம் பாலிசியை விட விலை குறைவாக உள்ளது. ஏனென்றால் இடெர்ம் பாலிசியை விற்க செலவு ஏதும் இல்லை.

இவற்றுக்கும் மேலே, காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த Exposure யும் தாங்களே வைத்துக் கொள்வதில்லை. எப்படி ஒரு பயனர் தன் வருமானம் என்கிற Exposure ஐ காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றி விடுகிறாரோ, அது போல காப்பீட்டு நிறுவனங்களும் தம் Exposureஐ ரீஇன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தள்ளி விடுகின்றன. நாலு கம்பெனிகள் வெவ்வேறு நாடுகளில் தலா ஒரு கோடி பாலிசி விற்கின்றன என்று வைத்துக் கொள்வோம், ரீஇன்சூரன்ஸ் கம்பெனி அந்த நாலு கோடி பாலிசிகளையும் ரீ இன்சூர் செய்யும், டேட்டாசெட் அதிகமாக அதிகமாக அதுவும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து அவை வரும் போது இழப்பு மிகக்குறைவாக இருக்கும்.

சூரிச், ம்யூனிச், ஸ்விஸ் ரீ, பெர்க்‌ஷைர் போன்ற பல நிறுவனங்கள் ரீஇன்சூரன்ஸ் துறையில் செயல் படுகின்றன, 2016 ஆண்டு இந்நிறுவனங்கள் 76பில்லியன் டாலர் அளவுக்கு ரீ இன்சூரன்ஸ் வழங்கியுள்ளன. இந்திய நிறுவங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட எக்ஸ்போஷரை ரீ இன்சூர் செய்கின்றன. ஒருத்தர் 2 கோடிக்கு பாலிசி எடுத்தால் நிறுவனம் ஒரு கோடி எக்ஸ்போஷரை தன்னிடம் வைத்துக் கொண்டு மிச்ச ஒரு கோடியை ரீஇன்சூர் செய்கிறது. ஏற்கெனவே இறக்கப் போவோரின் எண்ணிக்கை 1-2% அதிலும் குறிப்பிட்ட கவரேஜ் ரீஇன்சூர் செய்யப்படுவதால் நிறுவனம் க்ளெய்ம்களால் நொடித்துப் போக வாய்ப்பு மிகக் குறைவே.

நகைக்கடை வைப்பு நிதியிலும், ஈமு கோழியிலும் முதலீடு செய்ய யோசிக்காத மக்கள் இன்சுரன்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுப் பேர்வழிகள் போன்று நினைப்பது விந்தை. ஐ ஆர் டி ஏ வின் கண்காணிப்பில் செயல் படும் இந்திய காப்பீடு நிறுவங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது அப்படி ஒன்றும் அபாயகரமானது அல்ல என்பது என் கருத்து

வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும்

Life insurance users

இந்த கேப்சனை எல் ஐ சி நிறுவனம் ஒரு தவறான பாலிசிக்கு கொடுத்து வச்சிருக்கு. இது டெர்ம் பாலிசிக்குத்தான் கனகச்சிதமா பொருந்தும்

வாழும் போது : டெர்ம்பாலிசி மன நிம்மதி தரும். ரெண்டு கோடிக்கு வீடு வாங்கின நண்பர் ஒண்ணரை கோடிக்கு கடன் வாங்கி வச்சிருந்தார். ரெண்டு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்தததும் அவருக்கு கிடைத்த நிம்மதி வார்த்தையில் விவரிக்க முடியாதது. சுயதொழில் செய்யும் உலகம் சுற்றும் ஒரு வாலிப நண்பருக்கும் அப்படியே… 
நாளைக்கே நாம் இறக்க நேரிட்டாலும் குடும்பம் பொருளாதார ரீதியா கஷ்டப்படாது இருக்கும் நிலைமையை அவர்களுக்கு வழங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. டெர்ம் பாலிசி தவிர வேறு எதாலும் இதை கொடுக்க முடியாது

வாழ்க்கைக்குப் பிறகு :

1. சம்பளம் வருதுன்னு ஒரு லைஃப் ஸ்டைல் உருவாக்கி அதுக்காக வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன்னு வாங்கி வச்சிருக்கோம் நம்மில் பலர் – எதிர்பாராத விதமா நாம் இறக்க நேரிட்டால் ஆயுள் காப்பீடுதான் அக்கடன்களை அடைக்கும்

2. நாம் குடும்பத்துக்கு அளித்து வந்த லைஃப் ஸ்டைலை நமக்குப் பின்னும் அவர்கள் தொடர ஒரே வாய்ப்பு நம் ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு டெர்ம் பாலிசி எடுப்பதுதான்

3. ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்க முடிந்தால் பிள்ளைகளின் நிகழ்காலத்தை மட்டுமன்றி கல்லூரிப்படிப்பு போன்ற எதிர்கால செலவுகளுக்கும் சேர்த்து பணம் விட்டுச் செல்ல முடியும்

4. செத்தும் கொடுத்தவர் சீதக்காதி மட்டுமல்ல என் அப்பாவும்தான்னு பிள்ளைகள் சொல்லுமளவுக்கு விட்டுச் செல்ல கோடிகளை சேர்த்து வைக்கத் தேவையில்லை ஆயிரங்கள் செலவழித்து ஓரிரு கோடிகளுக்கு டெர்ம் பாலிசி எடுத்து வைத்தால் போதும்.

வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் துணை வருவது டெர்ம் பாலிசி மட்டுமே

காப்பீட்டு பணத்தைக் கடனாளிகளிடமிருந்து காப்பது எப்படி? / Married Women’s Property Act

Image result for images for mwp act

சுதாவின் கணவர் ரங்கராஜ் சிறு தொழில் ஒன்றை நிறுவி நல்ல முறையில் நடத்தி வந்தார். தொழில் அபிவிருத்திக்காக நிறைய கடன் வாங்கியிருந்தார். குடும்பத்தின் பாதுகாப்புக்காக ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசியும் எடுத்திருந்தார்

வித்யாவின் கணவர் சந்தானம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி, இவரும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி ஒரு கோடி ரூபாய்க்கு எண்டோமெண்ட் பாலிசி எடுத்து வைத்திருந்தார்

கவிதாவின் கணவர் சங்கரும் லதாவின் கணவர் ஜோசஃபும் தலா ஐம்பது லட்சரூபாய்க்கு ஹோல் லைஃப் பாலிசி வாங்கியிருந்தனர்.

கணவர்கள் நால்வரும் ஒரு ரயில் விபத்தில் இறந்தனர். கணவர்களின் மரணம் பேரிழப்பாக இருந்தாலும் இன்சூரன்ஸ் பணம் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த உதவும் என்று எண்ணியிருந்த குடும்பத்தாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒருவரின் இன்சூரன்ஸ் பணத்தை கடன் கொடுத்தவர்கள் பெற்றுச் சென்றனர். ஒருவர் குடும்பத்துக்குத் தெரியாமல் 75% இன்சூரன்ஸ் கம்பெனியிலேயே லோன் வாங்கியிருந்தார். இன்னொருவர் மனைவியிடம் சொல்லாமல் சென்ற மாதம்தான் பாலிசியை சரண்டர் செய்து விட்டிருந்தார். கடைசி ஆள் இன்னொரு நாமினி பேரை இன்னோரு பெண்ணுக்கு மாற்றி விட்டிருந்தார்.

இவர்கள் நால்வருக்கும் நேர்ந்தது வேறு யாருக்கும் நேராமல் இருக்க ஒரு வழி இருகிறது அதுதான் MWP Act எனப்படும் Married Women’s Property Act மூலம் காப்பீடு பெறுவது. இச்சட்டம் மணமான பெண்களின் சொத்துக்களை சொந்தக்காரர்கள், கடன் கொடுத்தவர்கள் மற்றும் கணவனிடமிருந்து காக்க உருவானது. இதன் ஆறாம் செக்சன் காப்பிட்டு பணப்பாதுக்காப்பு குறித்தானது. ஆயுள் காப்பீடு எடுக்கும் போது MWP Act form இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே எடுத்த பாலிசியில் இதை இணைக்க முடியாது. பாலிசி எடுப்பவர் தனக்கு மட்டுமே இதை எடுக்க முடியும், வேறு ஒருவருக்காக எடுக்க முடியாது. பாலிசி தாரர் இறந்தால் காப்பீட்டுப் பணம் மனைவிக்கு மட்டும், பிள்ளைகளுக்கு மட்டும், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு என்று ஏதாவது ஒரு ஆப்சன் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

காப்பீட்டுப் பணம் அனைவருக்கும் சரிசமமாகப் பிரிக்கும் படியும் இதனை எழுதலாம் அல்லது யாருக்கு எத்தனை சதவீதம் என்று குறிப்பிட்டும் எழுதலாம். ஆனால், ஒரு முறை தேர்ந்தெடுத்தபின் அதை மாற்ற இயலாது.

MWP Act இன் கீழ் எடுக்கப்படும் ஒவ்வொரு ஆயுள் காப்பீடும் ஒரு ட்ரஸ்ட் போன்றது. ட்ரஸ்டின் சொத்துகள் அதன் Beneficiaries க்கு மட்டுமே சொந்தம் . பாலிசிதாரருக்கோ அவருடைய நிறுவனத்துக்கோ கடன் கொடுத்தவர்கள் அவருடைய வீடு, வங்கியில் உள்ள பணம், ஆயுள் காப்பீட்டுத் தொகை உள்பட அனைத்து சொத்துகள் மீதும் உரிமை கொண்டாட முடியும் ஆனால் அவர்களால் இந்தச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயுள் காப்பீடு பணத்தின் மீது உரிமை கோர முடியாது

இச்சட்டம் வெளி ஆட்கள் மட்டுமல்லாது கணவரிடமிருந்தும் குடும்பத்தைக் காக்கிறது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட பாலிசியை சரண்டர் செய்யவும் முடியாது, பாலிசியிலிருந்து கடனும் பெற முடியாது. ஒரு முறை மனைவியை நாமினியாக அறிவித்த பின் வேறு யார் பேருக்கும் அதை மாற்றவும் முடியாது.

சரி. இந்தப் பாலிசியை எப்படி பெறுவது?
MWP Act பாதுகாப்பு பெறுவது எளிது, இதற்காக ஒரு எளிய விண்ணப்படிவம் உள்ளது. இது எல்லா இன்சூரன்ஸ் முகவர்களிடமும் இருக்க வேண்டும். ஆயுள் காப்பிட்டு படிவத்துடன் இதையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும், இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

பாதகங்கள்
இத்திட்டத்தின் பாதகங்கள் என்று பார்த்தால், இன்சூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்ய இயலாது. ஏதேனும் கடனுக்காக இன்சூரன்ஸ் பாலிசியைப் பிணையாக தர முடியாது. மெச்சூரிட்டி தொகை வரும் பாலிசியாக இருந்தால், அத்தொகை நேரடியாக மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தான் போகுமே தவிர பணம் போட்ட குடும்பத் தலைவருக்கு வராது.

காப்பீடும் முதலீடும்

insurance vs investmentயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஐந்தறிவு படைத்த யானை கூட தான் இறக்கும் போது அதன் மதிப்புக்கு ஈடான தந்தத்தை விட்டுச் செல்கிறது.

நீங்க சம்பாதிக்கும் பொதே திடீரென இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு என்ன விட்டுட்டுப் போகறீங்க? ஈராண்டு செலவுக்கு வரும் எண்டோமெண்ட் பாலிசிகளையா அல்லது யூஸ்லெஸ் யூலிப் பாலிசிகளையா அல்லது குடும்பத்தைப் பாதுகாக்கும் டெர்ம் பாலிசிகளையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

”நல்ல முதலீடு”, வருமானவரி சேமிக்கும் வழி, புள்ளைங்க எதிர்காலத்துக்கு அவங்க பேர்ல பாலிசி போடுங்க – போன்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி பாலிசி போட்டால் கஷ்டப்படப்போவது நீங்களல்ல, உங்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படப்போவது உங்க குடும்பம்தான்.

எண்டோமெண்ட் பாலிசி போடச் சொல்லி வற்புறுத்தறவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி -இதுல காப்பீடு எவ்வளவுன்னு கேளுங்க – ? ஒருத்தரோட சம்பளம் மாதம் 50,000 ரூபாய், அதில் அவரால் 5% க்கு மேல் காப்பீட்டுக்கு செலவு செய்ய முடியாது அதாவது மாதம் 2500ரூபாய் – இதில் எவ்வளவு எண்டோமெண்ட் கவர் எடுக்க முடியும் தெரியுமா? தோராயமாக 7,5,000 மட்டுமே (35 வயது, 30 ஆண்டுகள் ஜீவன் ஆனந்த்) – நீங்கள் உயிரோடு இருந்தால் மாசம் 50,000 ரூபாய் கொண்டு வருவீங்க, அதுவும் உயர்ந்துகிட்டே போகும். திடீர்னு நீங்க இறந்தா வெறும் 7.5 லட்சத்தை வச்சிக்கிட்டு உங்க குடும்பம் எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும்?

27,000 ரூபாய்க்கு எவ்வளவு டெர்ம் பாலிசி எடுக்க முடியும் தெரியுமா? 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எல் ஐ சியில் எடுக்கலாம். தனியார் நிறுவனத்தில் எடுத்தால் கிட்டத்தட்ட 15-18 ஆயிரம் ரூபாய் ப்ரீமியத்துக்கே இவ்வளவு கவரேஜ் எடுக்கலாம். அதாவது உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு. இதை வச்சிக்கிட்டு உங்க பிள்ளைகள் தலையெடுக்கும் வரை கௌரம்வமா உங்க குடும்பம் வாழ்ந்து விடமுடியும்

உங்க இழப்பை ஈடுசெய்ய முடியாது, ஆனால் நீங்க ஈட்டும் வருமானத்தை கண்டிப்பாக ஈடுசெய்ய முடியும், ஆனால் அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே முடியும்.

இனியாவது ஆயுள் காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்துப் பார்க்க ஆரம்பிங்க. காப்பீட்டு நிறுவன எண்டோமெண்ட் பாலிசிகள் 5-6% மிக அதிகபட்சமாக 7% வளர்ச்சி கிடைக்கலாம், அதற்கு மேல் தரக்கூடிய திட்டம் இல்லை. செல்வமகள் போன்ற அரசின் திட்டங்களில் கூட இதை விட அதிக வட்டி கிடைக்கிறது. நீண்ட கால பங்குச் சந்தை முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட்கள்) 10-15%க்கும் மேல் வளர்ச்சி தந்துள்ளன. சலூன்ல போய் சாம்பார் பொடி கேக்கமாட்டீங்கல்ல, அது போல வங்கிகளில் டெபாசிட், கடன் பத்தி மட்டும் பேசுங்க, காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு பத்தி மட்டும் பேசுங்க, முதலீட்டுக்கு முதலீட்டு நிறுவனங்களை அணுகுங்க

LIC யின் பங்குச்சந்தை முதலீடுகள்

டெர்ம் பாலிசியைத் தவிர வேறெந்த ஆயுள் காப்பீட்டையும் வாங்காதீங்கன்னு எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் பாலிசி நல்லாருக்குன்னு சொல்றாங்களே? ஏஜெண்ட் இதுல போட்டா நல்ல ரிட்டர்ன்ஸ் இருக்கும்னு சொல்றாரே? வங்கியில் இந்த இன்சூரன்ஸ் பால்சியில் 8% கேரண்டீட் ரிட்டர்னு சொல்றாங்களே? இது நல்ல முதலீடான்னு கேட்பது நிற்கவேயில்லை

நேரடி / மியூச்சுவல் ஃபண்ட் வழிப் பங்குச் சந்தை முதலீடு எல்லாம் ரிஸ்க்குங்க, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் எண்டோமெண்ட் / ஹோல் லைஃப் பாலிசியில் முதலீடு செய்தா கேரண்டீட் ரிட்டர்ன் கிடைக்கும்னு நினைக்கறாங்க பலபேர்.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் இரு கேள்விகள்

1. எந்த எண்டோமெண்ட் பாலிசிலியிலும் ரிட்டர்ன்ஸ் குறித்து எவ்வித கேரண்டியும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. வங்கியில் நீங்கள் வைக்கும் பணம்தான் (சேமிப்புக் கணக்கிலோ வைப்பு நிதியிலோ) அதன் மூலப்பொருள். 4 முதல் 7% வட்டிக்கு வங்கி உங்களிடம் பணம் வாங்கி அதை 9-18 % வட்டிக்கு விற்கிறது. உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி கணக்கில் வைத்தால் வங்கி தோராயமாக 4- 5 லட்ச ரூபாயை Fractional Reserve Lending மூலம் கடன் கொடுக்கும். இதன் மூலம் வங்கி வருமானம் பெறுகிறது. பணத்தை மூலதனமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தாத காப்பீட்டு நிறுவனம் எப்படி வங்கியை விட அதிக வட்டி தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியாவை பொருத்த வரை எல் ஐ சி தான் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். அது தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சார், ஷேர்லாம் ரிஸ்க் – மொத்த முதலும் கோவிந்தாவாகிடும், பாலிசில போட்டீங்கன்னா கேரண்டீட் ரிட்டர்ன் என்று சொல்லி ஏஜெண்ட் ஜீவன் ஆனந்துக்கு வாங்கும் ப்ரீமியத்தை எல் ஐ சி பங்குச் சந்தையிலும் அரசு கடன் பத்திரன்களிலும்தான் முதலீடு செய்கிறது. அவற்றிலிருந்து எல் ஐ சி அள்ளி எடுக்கும் வருமானத்தில்தான் உங்களுக்கான போனஸ் கிள்ளித் தரப்படுகிறது.

இவ்வாறு பல ஆண்டுகளாக எல் ஐ சி முதலீடு செய்து வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

(மே 2018 வரையிலான விவரங்கள்)

நேரடிப் பங்குகளில் முதலீடு – 4.6 லட்சம் கோடிகள்
ப்ரெஃபென்ஸ் ஷேர் 59 ஆயிரம் கோடிகள்
மியூச்சுவல் ஃபண்ட்கள் 25 ஆயிரம் கோடிகள்

அரசு கடன் பத்திரங்கள் 1.6 லட்சம் கோடி
பிர கடன் பத்திரங்கள் 25 ஆயிரம் கோடி
Debentures / Bonds 78 ஆயிரம் கோடி

2018 ல் மட்டும் எல் ஐ சி பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை 58,000 ஆயிரம் கோடி.

இதையெல்லாம் கூட்டி மொத்தமா எவ்வளவு எல் ஐ சி வச்சிருக்குன்னு பாத்துக்கோங்க

எல் ஐ சி முதலீடு செய்திருக்கும் பங்குகள், அரசின் கடன் பத்திரங்கள் அனைத்திலும் நாமும் நேரடியாகவோ மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமோ முதலீடு செய்ய முடியும். எல் ஐ சி யின் போர்ட்ஃபோலியோ திறமையாக நிர்வகிக்கப் படுகிறது என்பது உண்மையே – ஆனால் அதே அளவு திறமையுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.

நொடித்துப் போன நிறுவனங்களை எல் ஐ சியின் தலையில் கட்டுவதை மத்திய அரசு ஒரு பழக்கமாவே வச்சிருக்கு. அது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்கள் எல் ஐ சியை விட சிறப்பாக போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியும்

எல் ஐ சியின் போர்ட்ஃபோலியோ எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் எண்டோமெண்ட் பாலிசிகளில் 5-6% க்கு மேல் ரிட்டர்ன் கிடைக்கப் போவதில்லை. எல்லோரும் பயமுறுத்தறா மாதிரி பங்குச் சந்தை மொத்தமா வீழ்ந்தால் காப்பீடு நிறுவனங்களும் போனஸ் வழங்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்களில் 1-2% கட்டணம் போக மிச்சத்தொகை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது, வளர்ச்சியின் முழு பெனிஃபிட்டும் உங்களுக்கே

டெர்ம் பாலிசி தவிர மற்ற பாலிசிகள் தரும் காப்பிடும் பிரயோசனப்படாது முதலீடாகவும் அவை மோசமானவை என ஏன் சொல்கிறேன்

35 வயதுடைய ஒருத்தர் 30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கறார்னு வச்சிக்குவோம். அவர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்.

ஜீவன் ஆனந்த் 35 வயது, 30 ஆண்டுகாலம் – இதுக்கு ப்ரீமியம் 1.9 லட்ச ரூபாய்

5 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் 2 லட்ச ருபாய் ப்ரீமியம் கட்டவே முடியாது

அதே ஆள் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்தால் (35 வயது, 30 ஆண்டுகள்) அதற்கு ப்ரீமியம் வெறும் 11,562 ரூபாய்கள்தான். அதாவது ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய்கள் மட்டுமே. இதை அவரால் சுலபமாக எடுக்க முடியும்.

இப்ப முதலீட்டுக்கு வருவோம். ஜீவன் ஆனந்த் பாலிசியின் முடிவில் கிடைக்கக் கூடிய தொகை 1.8 கோடி, அப்புறமும் காப்பீடு தொடரும், பாலிசிதாரர் இறக்கும் போது ஒரு 50 லட்சம் கிடைக்கும்.
அதற்கு பதிலாக 12 ஆயிரத்துக்கு எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்ச 178,000 ஐ மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் 30 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் உங்களிடம் 5 கோடி ரூபாய்கள் இருக்க நல்ல வாய்ப்புண்டு

இனியாவது உங்க ஓய்வு கால சேமிப்புக்கு எண்டோமெண்ட் பாலிசிகளை நம்பாமல் எல் ஐ சியே நம்பும் பங்குச் சந்தை முதலீடுகளை தேர்ந்தெடுங்கள்

எல் ஐ சியின் முதலீடு குறித்த தகவல்கள் 4/9/2018 அன்று மணிகண்ட்ரோல் தளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டன

டெர்ம் பாலிசி – பொதுவான சந்தேகங்கள்

Related imageஆயுள் காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசி எடுக்கும் போது பொதுவா பயனர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்

1. எவ்வளவு காலத்துக்கு காப்பீடு எடுப்பது?

காப்பீடு என்னவோ பெருமாள் கோவில் பிரசாதம் போல எவ்வளவு நாள் கிடைக்குதோ அவ்வளவு நாள் எடுக்கலாம்னு நினைக்கறாங்க. தான் எப்போது இறந்தாலும் பணம் கிடைத்தால் லாபம் என்று நினைப்பது தவறு. இப்படி நினைக்கப் போயித்தான் பலரும் ஹோல் லைஃப் பாலிசி எடுத்து டெர்ம் பாலிசியை விட மிக அதிக ப்ரீமியம் கட்டிக்கிட்டு இருக்காங்க.
காப்பீடு என்பது Income Replacement என்று புரியும் போது ரிட்டையர் ஆகும் வயது வரை காப்பீடு எடுத்தால் போதுமானது என்ற தெளிவு பிறக்கும்.
ரிட்டையர் ஆனப்புறம் (வருமானம் ஈட்டாத நிலையில்) காப்பீட் வீண் செலவே.

30 வயதில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ரிட்டையர்மெண்ட் வயதான 65 வரை காப்பீடு வேண்டி 35 ஆண்டுகாலம் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 60 வயதிலேயே அவருடைய பிள்ளைகள் படிப்பை முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா, அப்போது அவர் காப்பீட்டுக்கு ப்ரீமியம் செலுத்துவதை நிறுத்தி விடலாம்.

2. ப்ரீமியம் செலுத்தும் ஃப்ரீக்வன்சி

காலாண்டுக்கு ஒருமுறையோ அரையாண்டுக்கு ஒரு முறையோ ப்ரீமியம் செலுத்துவதை விட ஆண்டுக்கொரு முறை ப்ரீமியம் செலுத்தும் போது ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட் கிடைக்கும், அதைத் தெரிவு செய்வது நல்லது

3. எவ்வளவு காப்பீடு எடுப்பது?

பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு சிறந்த கவரேஜ், 10 மடங்கு அடிப்படைத் தேவை என்பது உலக வழக்கு.

காப்பீட்டின் அளவை முடிவு செய்வதற்கு முன்னால் இவற்றை கன்சிடர் செய்வது நலம்

கடன்கள் : ஒரே ஒரு வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பமாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்தலைவருக்கு எடுக்கும் காப்பீடு அவர் வைத்திருக்கும் அனைத்துக் கடன்களையும் கவர் செய்யும் வகையில் இருக்க வேண்டும்

கல்விச் செலவு : உங்க பிள்ளைகளின் வயது, அவர்கள் கல்லூரிப்படிப்பை முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

தற்போதைய லைஃப் ஸ்டைல் :
குடும்பத் தலைவர் தீடிரென இறக்க நேரிட்டாலும் குடும்பம் தற்போதைய லைஃப் ஸ்டைலை தொடர எவ்வளவு பணம் தேவைப்படும் என்று பாருங்கள்.

எதிர்காலத்தில் வரக்கூடிய மாற்றங்கள்

இது கொஞ்சம் கடினமான விசயம். தற்போது உங்க குடும்பத்தின் மாதாந்திர செலவு 25,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம், ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தேவை. நீண்ட காலத்துக்கு இன்ஃப்லேசனை கணிப்பது கடினம். விலைவாசி ஆண்டுக்கு 6 முதல் 8% வரை ஏறும் வைத்துக் கொள்ளலாம். சராசரியாக 7% விலைவாசி உயர்ந்து கொண்டே போனால் 20 ஆண்டுகள் கழித்து இதே லைஃப் ஸ்டைலுக்கு ஆண்டுக்கு 11 லட்சரூபாய்க்கு மேல் தேவை. பிள்ளைகளின் தற்போதைய வயது, அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதையும் கணக்கிட்டு காப்பீட்டின் அளவை முடிவு செய்யுங்கள்.

கடன்கள் கம்மியாகவும், பிள்ளைகள் விரைவில் வேலைக்குப் போகும் சூழலும் இருப்போர் ஆண்டு வருமானத்தின் 10-15 மடங்கும் மற்றோர் ஆண்டு வருமானத்தின் 15-20 மடங்கும் காப்பீடு எடுப்பது நல்லது.

4. எந்த நிறுவனத்தில் எடுப்பது?

அரசு நிறுவனமான எல் ஐ சி யிலோ (இடெர்ம் பாலிசி) தனியார் நிறுவனங்களான ஆதித்ய பிர்லா, ஐசிஐசிஐ, எச் டி எஃப் சி, ஏகான் போன்ற நிறுவனம் ஒன்றிலோ எதில் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

5. Premium திரும்பக் கிடைக்கும் பாலிசிகள் எடுக்கலாமா?

வேண்டாம், அந்த மாதிரி பாலிசிகளின் ப்ரீமியம் அதிகமாக இருக்கும். உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடு (Sum Assured) குறைவாக எடுக்க நேரிடும், மேலும் உங்க காசை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருவாங்க. அதற்கு பதில் நல்ல முதலீடு செய்யலாம்

புதிய தலைமுறையில் கேள்வி பதில்

Image may contain: 2 people, people smilingஎனக்கு நாற்பது வயது வரை கல்யாணப் பத்திரிக்கை தவிர வேறு எந்தப் பத்திரிக்கையிலும் பேர் வந்ததில்லை. சின்ன வயதில் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்பின எந்தக் கேள்வியும் பிரசுரமானதில்லை.

ஆயுள் காப்பீடு குறித்து புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு வந்த கேள்வி இது. அதுக்கு என் கிட்ட பதில் கிடைக்கும்னும் எப்படி நண்பர் Justin Durai நம்பினார்னு தெரியல. கேள்வி கூட பிரசுரம் ஆகாத எனக்கு பதில் சொல்லும் வாய்ப்பளித்த நண்பருக்கு நன்றி.

கேள்வி : எனக்கு வயது 40. இதுவரை இரண்டு மூன்று முறை வெவ்வேறு இன்ஸ்யூரன்ஸ் எடுத்தும் அதை தொடர முடியாமல் பாதியில் விட்டு அந்த பணம் வீணாகிவிட்டது. மூன்று வருடம் தொடர்ந்து கட்டாவிட்டால் பணம் திரும்ப கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எந்த இன்ஸ்யூரன்ஸும் என்னிடம் இல்லை. இனிமேல் எடுப்பது பயன் தருமா? அப்படியெனில் எந்த மாதிரியான இன்ஸ்யூரன்ஸ் (எண்டோன்மெண்ட், டேர்ம்) எடுப்பது? அல்லது சேமிப்பு, முதலீடு என்று யோசிப்பது நல்லதா? ஆலோசனை தாருங்கள்.

க. ராஜேஸ்வரி, சென்னை

என்னுடைய பதில்

அன்புள்ள ராஜேஸ்வரி

நாற்பது வயது என்பது வருமானம் ஈட்டுவோருக்கு ஆயுள் காப்பீடு அத்தியாவசியமான காலகட்டம். நாற்பதுகளில்தான் பொதுவாக கமிட்மெண்ட்ஸ் அதிகம் இருக்கும்.
பள்ளி செல்லும் பிள்ளைகள், வீட்டுக் கடன் இ எம் ஐ, வாகனக் கடன் என்று இந்த வயதில்தான் பொருளாதாரத் தேவை அதிகம் இருக்கும். நாற்பது முதல் ஓய்வுபெறும் வயது வரை
(60 அல்லது 65) இருக்குமாறு ஒரு ஆயுள் காப்பீடு நாப்பது வயதில் இருக்கும் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்,

ஒரு வண்டியை இன்சூர் செய்கிறீர்கள், அந்த ஆண்டில் வண்டிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கும், விபத்து நேராவிட்டாலும் காப்பீட்டு நிறுவனம் பணம் தர
வேண்டும் என்று நீங்க எதிர்பார்ப்பதில்லை, ஆனால் ஆயுள் காப்பீடு எடுத்தவர் காப்பீட்டு காலத்தில் இறக்கா விட்டாலும் பணம் கிடைக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? காப்பீடு மற்றும்
முதலீட்டை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள், இவை இரண்டும் வெவ்வேறு. ஆண்டுக்கு 6 லட்சரூபாய் வருமானம் உள்ள ஒருவர் திடீரென இறந்தால் அவர் குடும்பம் அதே லைஃப் ஸ்டைல்
தொடர குறைந்தபட்சமாக 60 முதல் 90 லட்ச ரூபாயாவது தேவைப்படும். அத்தொகை இருந்தால்தான் அதை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு அக்குடும்பம் வாழ முடியும். வெறும் பத்து
லட்சரூபாய்கள் காப்பிடு இருந்தால் அதை வைத்துக்கொண்டு 2-3 ஆண்டுகள் மட்டுமே குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியும். வருமானத்தின் 10 மடங்கு அளவுக்கு காப்பீட்டை எண்டோமெண்ட் பாலிசியில் பெற
முடியாது ஏனென்றால் அதற்கு ப்ரீமியம் மிக மிக அதிகமாக இருக்கும். இந்த அளவுக்கு காப்பீடு டெர்ம் பாலிசியில் மட்டுமே சாத்தியம்.

நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்களா? அல்லது சுயதொழில் மூலம் வருவாய் இருக்கிறதா என்று சொல்லவில்லை. உங்களுக்கு வருமானம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை
டெர்ம் பாலிசி எடுங்கள். அதை அரசு நிறுவனமான எல் ஐ சியிலோ அல்லது ஏதேனும் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திலோ எடுக்கலாம். ஒரு வேளை நீங்கள் வேலைக்குப் போகாத
குடும்பத் தலைவியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கணவருக்கு டெர்ம் பாலிசி எடுங்கள். இதற்கு ப்ரீமியம் குறைவே. 40 வயது பெண்மணி, 50 லட்ச ரூபாய் காப்பீடு 25 ஆண்டு காலம் – இதற்கு
ஆகும் ஆண்டு ப்ரீமியம் வெறும் 14600 ரூபாய்தான். தனியார் நிறுவனங்களில் இதற்கும் குறைவாகவே இருக்கும். காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசி எடுத்து விட்டு சேமிப்புக்கு மியூச்சுவல் ஃபண்ட்,
வங்கி வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, தங்கமகள் சேமிப்புத் திட்டம், புதிய பென்சன் திட்டம், பி பி எஃப் போன்றவற்றை தேர்ந்தெடுங்கள். உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

காஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு

dollars in cupகாஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு

கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டு தகவல் சொன்னார்கள்.

முதல் நண்பர், சிங்கப்பூர் வாழ் என் ஆர் ஐ வயது 35, எச் டி எஃப் சியில் 2 கோடிக்கு டெர்ம் பாலிசி 30 ஆண்டு காலம் எடுத்திருக்கார். அதற்கு ஓராண்டு ப்ரீமியம் ரூ 21,500 மட்டுமே. நாள் கணக்கில் பார்த்தால் ஒரு நாளைக்கு 58 ரூபாய்

நண்பர் அவரோட நண்பரை டெர்ம்பாலிசி எடுக்க வைத்திருக்கிறார். வயது 29 எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி 32 ஆண்டு காலம், இதன் ப்ரீமியம் வெறும் 15,741 மட்டுமே, அதாவது ஒரு நாளைக்கு 43 ரூபாய்

இன்னொரு நண்பர், வயது 42, எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி எடுத்திருக்கிறார், அதன் ப்ரீமியம் ரூ 26,923, அதாவது ஒரு நாளைக்கு 72 ரூபாய்

இதில் ரெண்டு விசயங்களை கவனிக்கலாம்.

உண்மையான காப்பீட்டுக்கு (எண்டோமெண்ட், மணி பேக் என்ன பிற போன்ற ஃபேக் காப்பீட்டு பாலிசிகள் தவிர்க்கப்படவேண்டியவை) ஆகும் செலவு மிகவும் கம்மி. 40-50 ரூபாய் என்பது பலருக்கு தினமும் வெளியில் காஃபி குடிக்கும் செலவு. அவ்வாறு உணவகத்தில் காஃபி குடிப்பதற்கு பதிலாக அப்பணத்தைக் கொண்டு கோடி ரூபாய் காப்பீடு எடுத்து குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

ரெண்டாவது இளமையில் கல், கற்றபின் காப்பீடு எடு என்பதே. 29 வயதாக இருக்கும் போது 1 கோடி ரூபாய் காப்பீடு 16 ஆயிரத்துக்கும் குறைவாகக் கிடைக்கிறது, அதே அளவு காப்பீடு, குறைவான காலத்துக்கே 27 ஆயிரம் ரூபாய் ஆகிறது 41 வயதானவருக்கு. வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஆயுள் காப்பீடு பெறுவதும் ஓய்வு காலத்துக்கு திட்டமிடுதலும் அவசியம்.

அரசு வேலையில் இருப்போர் புது பென்சன் திட்டமா பழைய திட்டமான்னு போராட்டம் செய்வதை வேடிக்கை பார்க்கும் தனியார் துறை ஊழியர்கள் தமக்கு எந்த பென்சன் திட்டமும் இல்லை என்பதை உணர வேண்டும்

வேண்டாத காப்பீட்டு பாலிசிகளை என்ன செய்வது?

தெரியாமல் எடுத்துவிட்ட எண்டோமெண்ட் பாலிசியை என்ன செய்வது?

நான் அதிகம் எதிர்கொண்ட கேள்விகளின் பட்டியலில் டாப் 3யில் இக்கேள்வி இடம்பெறும். ஜீவன் ஆனந்த் அல்லது வேறொரு எண்டோமெண்ட் பாலிசி எடுத்துவிட்டேன். இப்பத்தான் புரியது அது ஒரு தேவையற்ற பாலிசி என்று. ஆனா பாலிசி எடுத்து சில பல வருசங்கள் ஆச்சு, வெறும் அஞ்சு லட்சத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்டிக்கிட்டு வர்றேன், அதே ப்ரீமியத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக டெர்ம் பாலிசி கிடைக்குது, அதை எடுத்து குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்னா, ரெண்டு பாலிசிக்கும் பணம் கட்ட முடியாது அல்லது ரெண்டு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்துட்டேன், இனி ஜீவன் ஆனந்த தரும் 5 லட்ச ரூபாய் கவரேஜுக்கு அர்த்தமேயில்லை, அந்த பாலிசியை என்ன செய்யட்டும் என்று கேட்போர் அனேகம்.

இந்நிலையில் இருப்போருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன

1. முதல் தெரிவு பாலிசி கேன்சல் செய்வது. பாலிசி எடுத்து மூன்றாண்டுகள் கூட ஆகலேன்னா, கட்டிய பணம் முழுதும் போய்விடும், எதுவும் கிடைக்காது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் கிடைக்காது, அப்புறம் கட்டிய ப்ரீமியங்களின் 30% திரும்பக் கிடைக்கும், அதற்கப்புறம் போனஸ் ஏதாவது இருந்தால், அதுவும் கிடைக்கும். உதாரணத்த்துக்கு 20,000 ஆண்டு ப்ரீமியம் 5 ஆண்டுகள் கட்டியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சமிருக்கும் 80 ஆயிரத்தின் 30% 24,000 ரூபாயும் போனஸ் இருந்தால் அதுவும் கிடைக்கும்.

2. ரெண்டாவது தெரிவு, பாலிசியை கடைசி வரை தொடர்வது. காப்பீடாகவும் பிரயோசனமில்லை, முதலீடாவகும் பிரயோசமில்லை என்று தெரிந்தும் ஆரம்பிச்சதை விட வேண்டாம் என தொடர்வது

3. இவை இரண்டுக்கும் இடையில் அதிகம் அறியப்படாத “Paid Up” Policy Option. அதாவது பாலிசியை கேன்சலும் செய்யாமல் தொடர்ந்து இறுதி வரை ப்ரீமியமும் செலுத்தாமல் இருக்க வகை செய்யும் தெரிவு இது.

தேவைப்படாத பாலிசியை கேன்சல் செய்யாமல் “Paid Up” ஆக மாற்றுவதன் மூலம் கட்டியபணத்திற்கு இழப்பு ஏதும் ஏற்படாது, இனிமேல் கட்ட வேண்டிய ப்ரீமியம் எதையும் கட்ட வேண்டியதில்லை. பாலிசியின் முதிர்வு வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், கட்டிய தொகையும் அதற்குண்டான போனஸும் கிடைக்கும்.
ஒரு உதாரணம் – பாலிசி எடுத்த போது வயது 23, தற்போது 26, காப்பீட்டுத் தொகை 12 லட்சம், காப்பீட்டின் காலம் 21 ஆண்டுகள், காலாண்டு ப்ரீமியம் 15 ஆயிரம் ரூபாய்கள். இப்ப இவருக்கான தெரிவுகள்

அ. மூன்றாண்டுகள் முடியும் வரை காத்திருந்து பாலிசியை கேன்சல் செய்வது. அப்படிச் செய்தால், மூன்றாண்டுகளுக்கான ப்ரீமியம் 1.8 லட்சத்தில் முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சம் இருப்பதில் 30% அதாவது 36,000 ரூபாய் கையில் கிடைக்கும்

ஆ. பாலிசியை உடனே “Paid Up”ஆக மாற்றினால் இப்போது பணம் ஏதும் கிடைக்காது, காப்பீட்டு காலத்தில் மிச்சம் இருப்பது 18 ஆண்டுகள், இதன் முடிவில் (தற்போதைய போனஸ் நிலவரப்படி) தோராயமாக 2 லட்ச ரூபாய் கிடைக்கும்.

கேன்சல் செய்து இன்று கிடைக்கும் 36,000 ரூபாயை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 18 ஆண்டுகள் முடிவில் 3 லட்ச ரூபாய் இருக்க வாய்ப்பு அதிகம். நிச்சயமில்லாத நாளைய லாபத்துக்காக இன்று நிச்சயமாக நிகழக்கூடிய நஷ்டத்தை ஏற்க விருப்பமில்லாதோருக்கு இந்த “Paid Up” பாலிசி தெரிவு நல்ல முடிவாக இருக்கும்

என் கருத்தில், பாலிசியின் ஆரம்ப காலத்தில் இருப்போர் (பாலிசி ஆரம்பிச்சு 5 ஆண்டுகள், இன்னும் 15 – 20 ஆண்டுகள் இருக்கு) பாலிசியை கேன்சல் செய்து விட்டு பணத்தை மியூச்சுவல் ஃப்ண்டில் முதலீடு செய்வது சரியா இருக்கும்

பாலிசி ஆரம்பிச்சு பல வருடங்கள் ஆச்சு இன்னும் 2-3 வருசங்களே இருக்கு பாலிசி முதிர்ச்சி அடைய என்பவர்கள், அந்த சில ஆண்டுகளும் ப்ரீமியம் கட்டி மொத்தமா போனஸ் பெறுவது மியூச்சுவல் ஃபண்டுக்கு மாற்றுவதை விடவும் பெயிட் அப் மாற்றுவதை விடவும் அதிக பலன தரும்

இவை இரண்டுக்கும் இடையில் இருப்போருக்கு (ஆரம்பிச்சு 7 – 8 -10 வருசம் ஆச்சு இன்னும் 10 வருசம் இருக்கு) பெயிட் அப் தெரிவு சரியாக இருக்கும்