புத்திசாலித்தனமான முதலீடு… தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ம்மவர்கள் முதலீடு செய்வதே பெரிய விஷயம். அப்படிச் செய்கிறவர்களும் சிலபல தவறுகளைச் செய்துவிடுவதால், அந்த முதலீட்டின் மூலம் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு நாம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?    

1. செலவும், முதலீடும் ஒன்றல்ல 

எது செலவு, எது சேமிப்பு என்பதில் பலருக்கு  குழப்பம் இருக்கிறது. தங்கம் நல்ல முதலீடு என இன்னும்கூட பலரும் நினைக்கிறார்கள். தங்க நகை வாங்குவது முதலீட்டில் வராது. தினமும் ஓட்ட பயன்படுத்தும் காரும் அப்படித்தான். ரூ.10  லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார், ஷோரூமை விட்டு சாலைக்கு வந்ததும் அது செகண்ட் ஹாண்ட் காராகி, அதன் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகிவிடும். 

இதுபோலவே, காப்பீடும் செலவே. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, பொருள்களுக்கான காப்பீடு எல்லாம் செலவே. பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ‘முதலீடு’ செய்வதாக நினைத்துப் பணத்தை விரயம் செய்கின்றனர். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைக் காப்பீடு பாலிசி பெற மட்டுமே அணுக வேண்டும். முதலீடு என்பது உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்க வேண்டும்.  

2. ஓய்வுக்காலத் தேவைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி 

“பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேராது” என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஓய்வுக்காலத்துக்காக காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது தவறானது. காப்பீடும் முதலீட்டு வளர்ச்சியும் வழங்கும் திட்டங் களில் (ULIP) உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடும் கிடைக்காது, வருமானமும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், நீண்ட நாள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.  

3. தொடர்ச்சியான முதலீடே ஜெயிக்கும்

பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வரும்போது எல்லாரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் செய்வது தவறு. அதைவிடப் பெரிய தவறு, பங்குச் சந்தை விழும்போது முதல் ஆளாக போய் பணத்தை எடுப்பது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ளாமல் அதில்  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan – SIP) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது.  

4. முதலீட்டைப் பரவலாக்காமல் இருப்பது

என்ரான் நிறுவனம், தன் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு முழுவதையும் என்ரான் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதித்தது. அந்த நிறுவனம் திவாலானபோது, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிட்டது. எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் (Don’t put all your eggs in one basket) வந்ததால் வந்த தொல்லை இது. ஒரு நல்ல சொத்துப் பகிர்வில் (Asset Allocation) நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம்/ வெள்ளி அனைத்தும் இருக்க வேண்டும். 

5. கட்டணங்களில் கவனம் செலுத்தாதது

ஒவ்வொரு முதலீட்டுக்கும் கட்டணம் உண்டு. அவற்றில் கூடுதல் கவனம் அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமானது செலவு விகிதம் என அழைக்கப்படும். இதனைப் பார்க்க சிறிதாகத் தெரியும். கட்டணங்கள், 20-30 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும்போது போர்ட்ஃபோலியோவின் செயல் திறனை அது பெரிய அளவில் பாதிக்கும். ஒரே மாதிரியான இரு ஃபண்டுகளை ஒப்பிடுகையில் குறைவான செலவு விகிதம் கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. உதாரணம், இண்டெக்ஸ் ஃபண்டுகள்.

6. கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்வது  

ஒரு ஃபண்டின் ஐந்து மற்றும் பத்தாண்டு கால வருமானம் / வளர்ச்சி ஒரு முக்கியக் காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே முதலீட்டை முடிவு செய்யும் காரணியாக இருக்க முடியாது. ஃபண்டின் ஸ்டைல், அளவு, கட்டணம், டேர்ன் ஓவர், ரேட்டிங், ஃபண்ட் மேனேஜரின் செயல்திறன் ஆகிய காரணிகளை வைத்தே ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிலர் ஓராண்டு வருமானத்தை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பார்கள். இது மகா தவறு.

7. வருமான வரிச் சலுகையில் மட்டும் கவனம் செலுத்துவது

அதிகம் பேர் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக வரி விலக்கை நினைக்கிறார்கள். வரி விலக்கில்லா முதலீடு 20% வளர்ச்சி தரும் நிலையில், வருமான வரி விலக்குத் தரும் முதலீடு 10% தந்தால் அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. எனவே, வரி விலக்கு என்பதை மட்டும் பார்க்காமல், அது தரும் வருமானத்தையும் பாருங்கள்.

8. அதிக ரிஸ்க் எடுப்பது அல்லது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பது

சிலர் அஸெட் அலோகேஷன்படி பிரித்து முதலீடு செய்யாமல் எல்லாப் பணத்தையும் அக்ரெஸிவ் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மார்க்கெட் வீழ்ச்சி அடையும்போது இந்த போர்ட்ஃபோலியோ அதிக அளவில் நஷ்டத்தைத் தரும். வேறு சிலரோ, சேமிப்பு முழுவதையும் வங்கி வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். இவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருந்தாலும், வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இரு நிலைகளும் தவறு. முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க் குறைவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும். 

9. ஆலோசகர்களைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை ஆலோசகர்களாக்குவது

முதலீடு செய்யத் தேவையான அளவு அறிவு, அனுபவம், நேரம் இருப்பவர்கள் பிறர் துணையின்றி தாமே முதலீடு செய்யலாம். பெரும்பாலானோருக்கு இவை மூன்றும் இருப்பதில்லை. அவர்கள், ஒரு நல்ல நிதி ஆலோசகரை நாடுவது நலம். டாக்டர், வக்கீலைப்போல நிதி ஆலோசகரும் ஒரு புரஃபஷனல்தான். அவருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டும். அந்தச் செலவு உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைக்கவும், அதே சமயத்தில் வளர்ச்சி காண வைக்கவும் உதவும். நண்பர்களை ஆலோசர்களாக்குவதைத் தவிர்ப்பது நட்புக்கு நல்லது. 

10. தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது 

முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. அவ்வப்போது போகும் பாதை, வேகம், எரிபொருள் அளவு இவற்றைக் கண்காணிப்பது போல, முதலீட்டிலும் செய்ய வேண்டும். நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி போய்க்கொண்டிருக்கிறது. இனி ரிட்டயர்மென்ட் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்று இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோவைப் பார்த்து, அதை மாற்றியமைக்க வேண்டுமெனில், அதை செய்தே ஆகவேண்டும். 

25 ஆண்டுகளில் இந்திய சந்தைதான் பெஸ்ட்!

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைதான் மிகச் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 1,357 சதவிகிதமும், சென்செக்ஸ் 1,289 சதவிகிதமும் லாபம் தந்திருக்கின்றன. ஜெர்மனி 755%, அமெரிக்கா 688% லாபம் தந்திருக்கின்றன. 

கொரியா, தைவான், சீனா, பிரான்ஸ் நாட்டு பங்குச் சந்தைகள் 200 சதவிகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பங்குச் சந்தை 179 சதவிகிதமும், ஜப்பான் பங்குச் சந்தைகள் வெறும் 44 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. 

நன்றே செய் அதுவும் இன்றே செய்

இன்சூரன்ஸ் எடுக்கறதுன்னு முடிவு செஞ்சதும் இன்னிக்கே எடுத்துடுங்க… நாளைக்கு ப்ரீமியம் அதிகமாக ஆகிடலாம். நண்பர் ஒருத்தர் என்னிடம் பேசியபின், டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செஞ்சார், தேவையான எல்லா ஆராய்ச்சியும் பண்ணி, அமவுண்ட் கம்பெனி எல்லாம் முடிவு செஞ்சிட்டார், ஆனா பாலிசி எடுக்க ஒரு வாரம் நேரம் எடுத்துக்கிட்டார், ப்ரீமியம் அமவுண்ட் ஆண்டுக்கு 500 ரூ அதிகமாகிடிச்சு. இன்சூரன்ஸை பொருத்தவரை Nearest Birthday is what will be taken for your age. அதாவது ஜூலை 7 1974 அன்று பிறந்த எனக்கு – ஜனவரி 7 2017 வரை 43 வயது என கணக்கிடப்படும், ஜனவரி 8 க்கு அப்புறம் 44 வயதுக்கு உரிய ப்ரீமியம் கட்ட வேண்டும். ஆண்டுக்கு 500 ருபாய் சின்ன விசயமாத் தெரியலாம், ஆனால் 35 வயதாகும் ஒருவர் இந்த 40 ரூபாயை மாசாமாசம் மிச்சம் பிடிச்சு முதலீடு செய்து வந்தால் அவரோட ரிட்டையர்மெண்ட் ஃபண்டில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் இருக்கும். தள்ளிப் போடுதல் பர்ஸுக்கு கெடுதல்.

எந்த டெர்ம் பாலிடி சிறந்தது?

எந்த நிறுவனத்தில் டெர்ம் பாலிசி எடுக்கணும்? 
எல் ஐ சியின் டெர்ம் பாலிசி ப்ரீமியம் அதிகமா இருக்கு, நான் தனியார் நிறுவனத்தில் எடுக்கலாமா?

இவையே பொதுவா டெர்ம் பாலிசி எடுக்க நினைப்போரின் கேள்விகளாக இருக்கின்றன. இவற்றுக்கு இங்கு பதில் அளிக்க முயல்கிறேன்

1. டெர்ம் பாலிசி என்பது “No Frills” வகை. இதில் பெரும்பாலும் அம்சங்கள் (Features) என்று ஏதும் இல்லை. பயனர் இறந்தால் குடும்பத்துக்கு இழப்பீடு, காப்பீட்டுக் காலம் முடியும் வரை பயனர் இறக்கலேன்னா யாருக்கும் எதுவும் கிடைக்காது. என்னைப் பொருத்த வரை ரைடர்கள் எதுவும் தேவையில்லை. ஆக கம்பேர் பண்ணி பாக்க அம்சங்கள் ஏதும் இல்லை

2. எந்த நிறுவனத்தில் வேணா எடுக்கலாம். ஓப்பீட்டுப் பார்ப்பதற்கு சில காரணிகளை உபயோக்கலாம்

அ. நிலைத்தன்மை / நம்பிக்கை : நிறுவனம் எவ்வளவு நாளா இருக்கு, இன்னும் முப்பது நாப்பது வருசம் இருக்குமா அல்லது கை மாறுமா அல்லது திவாலாகுமா? இதை அப்ஜெக்டிவாக அணுகுவது கொஞ்சம் கஷ்டம், சப்ஜெக்டிவாக எந்த கம்பெனி நீண்ட நாள் நிலைக்கும்னு பாக்கலாம். எல் ஐ சி அரசு நிறுவனம், டாடா பிர்லா நிறுவனங்கள் இந்தியாவில் நீண்ட நாட்களாக தொழில் செய்து வருகின்றன, அவை இணைந்திருக்கும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் நீண்ட வரலாறு கொண்டவை. எச் டி எஃப் சியும் ஐ சி ஐ சி யும் இந்தியாவில் செயல்படும் லாபகரமான வங்கிகள் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

ஆ. கஸ்டமர் சர்வீஸ் : எண்டோமெண்ட் பாலிசி விக்க மல்லு கட்டிட்டு அது முடியாம போனப்புறம் டெர்ம் பாலிசி கொடுக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ண வங்கி மேனேஜர், பாலிசி இஷ்யூ ஆக விடாம அழிச்சாட்டியம் பண்ணது எல்லாம் பார்த்திருக்கேன். கஸ்டமர் சர்வீஸில் சேவை பெற்ற நண்பரின் கருத்துக்களைக் கேட்டு இதை முடிவு செய்யுங்க

இ. க்ளெயிம் செட்டில்மெண்ட் ரேஷியோ : நிறுவனம் வருகின்ற க்ளெயிம்களில் எத்தனை சதவீதம் செட்டில் செய்கிறது என்பதை குறிப்பது இது. ஒவ்வொரு ஆண்டும் ஐ ஆர் டி ஏ எல்லா நிறுவனங்களில் ரேஷியோவை வெளியிடும். 
விண்ணப்பத்தை ஒழுங்காக பூர்த்தி செய்தால் க்ளெயிம் ஏற்பட்டால் இழப்பீடு பெறுவது கடினமாக இருக்காது. இருக்கும் உடல் உபாதைகள், இதுவரை செய்த அறுவை சிகிச்சைகள், நம்மிடம் இருக்கும் மற்ற பாலிசி விவரங்கள் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுங்கள். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், பாலிசி கைக்கு வந்ததும் அதையும் மூணு முறை படிச்சுப் பாருங்க. பேர், பிறந்த தேதி, விலாசம், நாமினி பேர், உறவு, பிறந்த தேதி இவையனத்தும் சரியா இருக்கான்னு பாருங்க. டையாபட்டிஸை மறைப்பது, அறுவை சிகிச்சையை சொல்லாமல் இருப்பது, தெரியவா போகுதுன்னு வச்சிருக்கும் 50 லட்ச ரூபாய் பாலிசி விவரத்தை விடுவது, மனைவின் சர்ட்டிஃபிக்கேட் பேரை எழுதாமல் கண்ணம்மா குட்டிமான்னு எதையாவது நாமினி இடத்தில் எழுதுவது – இவற்றில் எதையும் செய்யாமல் இருந்தால் க்ளெயிம் ரிஜக்ட் ஆவதற்கு வாய்ப்புகள் கம்மி

இன்னிக்கு படிச்சேன். காலில் செய்த அறுவை சிகிச்சையை மறைத்தவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிருக்கார், காப்பிட்டு நிறுவனம் க்ளெய்மை மறுத்து விட்டது, குடும்பத்தார் Ombudsman போய் பணம் வாங்கியிருக்காங்க. உடனே இந்த கம்பெனி மோசம் என்று எண்ண வேண்டாம், க்ளெயிம் ரிஜெக்ட் செய்தபின்னர் Ombudsman குட்டியதும் க்ளெயிம் ரிலீஸ் செய்யாத கம்பெனி இந்தியாவில் ஒன்று கூட இல்லை.

3. எல் ஐ சியின் டெர்ம் இன்சூரன்ஸ் ப்ரீமியம் இருப்பதிலேயே அதிகம். 
ஆமாம், எல் ஐ சி யின் ப்ரீமியம் அதிகம்தான், ஆனா எல் ஐ சியின் நிலைத்தன்மையும் க்ளெயிம் ரேஷியூவும் Unmatched. Claim Raitio விவரங்கள் பொது வெளியில் கிடைக்கும் நீங்க தேடிப்பார்க்கலாம்

எல்லா நிறுவனங்களும் ஏன் அரசுகளும் கூட திவால் ஆகக்கூடியவைதான். இந்திய அரசும் ஏன் அமெரிக்க அரசும் கூட திவால் ஆக Theoritical Possibilities உண்டு. ஆனா ப்ராக்டிகலாக எல் ஐ சி திவால் ஆகும் வாய்ப்புகள் குறைவு ஏன்னா

அ. எல் ஐ சியிடம் இரண்டரை கோடி லட்ச ரூபாய்கள் கையிருப்பு இருக்கிறது. அதில் ஒரு பாதி அரசு கடன் பத்திரங்களில் சேஃபாக உள்ளது, மிச்சம் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டித் தருகிறது

ஆ. எல் ஐ சி நாட்டின் அனைத்து நகரங்களின் முக்கிய இடங்களில் சொந்தக் கட்டிடங்கள் வைத்துள்ளது. எல் ஐ சியின் புக்கில் இவை வாங்கிய விலையிலேயே உள்ளன, இன்றைய மார்க்கெட் மதிப்புக்கு அவற்றை புக்கில் மாற்றினால் ஓவர் நைட் எல் ஐ சி உலகின் அதிக மதிப்புள்ள காப்பீடு நிறுவனமாக மாறும். அந்த அளவுக்கு எல் ஐ சியிடம் சொத்து உள்ளது

இ. இன்னமும் ஏஜெண்ட்கள் எண்டோமெண்ட் பாலிசியும் மணி பேக்கையும் பெருமளவு விற்றுக்கொண்டிருக்கின்றனர். இவற்றில் சிறிய சம் அஷ்யூர்டுக்கு அதிக அளவு ப்ரீமியம் எல் ஐ சிக்கு கிடைக்கிறது. பெரும்பாலான பாலிசிகளில் சம் அஷ்யூர்ட் மட்டுமே கேரன்டீட், போனஸ் எல்லாம் எல் ஐ சி லாபத்தில் இயங்கினால் மட்டுமே தரப்படும். இப்பாலிசிகளின் மூலம் தொடர்ந்து பணம் வந்து கொண்டேயிருக்கும் நிலையில் டெர்ம் பாலிசி க்ளெயிம் செட்டில் செய்வதில் பிரச்சனை இருக்காது

4. எல் ஐ சி அரசு நிறுவனம், அது திவால் ஆக இந்திய அரசு விடாது, இந்திய அரசு திவால் ஆனால் மட்டுமே எல் ஐ சி திவால் ஆகும் என நான் நம்புகிறேன்

எல்லா சேஃப்டி ஃபீச்சர்ஸும் கொண்ட கார் விலை அதிகமாகத்தான் இருக்கும் அந்த காரில் போனால் விபத்து நிகழாது என்பதும் உத்திரவாதமில்லை, அவ்வம்சம்கள் குறைவாக இருக்கும் காரில் போனால் இறப்போம் என்பதும் நிச்சயமில்லை, ஆனாலும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமுள்ள கார் விலை அதிகமாகத்தான் இருக்கும்

இந்தியாவில் செயல்படும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஐ ஆர் டி ஏவின் கண்காப்பில் செயல்படுகின்றன, எல்லா விதமான பொருளாதாரப் பாதுகாப்பு அரண்களும் கொண்டிருக்கின்றன. உங்களுக்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது உங்க உரிமை

யாருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை?

டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு தேவையில்லை, அதை வாங்காதீர்கள்

என்னடா ஆச்சு இவனுக்கு? இவன் பேச்சைக் கேட்டு டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் இப்படி சொல்றானேன்னு திட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?

இப்பதிவு யார் யாருக்கெல்லாம் ஆயுள் காப்பீடு தேவையில்லை என்பது குறித்து

1. குழந்தைகள் : கண்டிப்பா ஆயுள் காப்பீடு தேவைப்படாதவர்கள் லிஸ்டில் முதலிடம் பெறுபவர்கள் குழந்தைகள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கிறேன் பேர்வழி என்று காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். சேமிப்பிற்கு பல்வேறு நல்ல வழிகள் இருக்கின்றன

2. ஓய்வு பெற்றவர்கள் : வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் காப்பீடு தேவையில்லை. காப்பீடு என்பதே திடீர் மரணத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சரிகட்டுவதற்குத்தான். வருமானம் இல்லாத போது காப்பீடு அவசியல்லாதது மட்டுமல்ல அது ஒரு அநாவசிய செலவு

3. இறந்தாலும் வருமான இழப்பு இல்லதோர் : சில பேரோட வருமானம் மொத்தமும் வீட்டு வாடகையில் மூலம் இருக்கும். அவர்கள் இறந்து போனாலும் வருமானம் சற்றும் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கும். இவர்களைப் போன்றோருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை

4. செய்யும் தொழிலில் குடும்பத்தாரை ஈடுபடுத்துவோர் : உதாரணத்துக்கு சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி அவர் உயிருடன் இருக்கும் போதே பிள்ளைகளை ஆளுக்கொரு கடையை நிர்வகிக்க வைத்து விட்டார், அவர் இறந்தபின்னும் கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தன. அவர் இறப்பால் குடும்பத்தாருக்கு பொருளாதார இழப்பு இருந்திருக்காது என நினைக்கிறேன். இது போன்று தம் கடையிலோ, தொழிலிலோ குடும்பத்தாரை ஈடுபடுத்தி முழுமையாக தொழிலை நடத்தும் அளவுக்கு வைத்திருப்போருக்கும் பெரிய அளவில் ஆயுள் காப்பீடு தேவையில்லை

5. ஒரு குடும்பத் தலைவர் தான் இருக்கும் போதே மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டால் அதற்குப் பின் ஆயுள் காப்பீட்டுக்கு அவசியமில்லை

6. உங்க பெற்றோர் உங்க வருமானத்தை நம்பி வாழவில்லை, நீங்க திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோர் – அதாவது பொருளாதார ரீதியில் உங்களை நம்பி யாரும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்று உறுதியாக நம்புவோருக்கும் ஆயுள் காப்பீடு அவசியமற்றது.

7. அமெரிக்காவில் இருக்கும் அமிஷ் சமூகம் போல முழுக்க முழுக்க சுயசார்பு வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை.

8. நீங்க “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்” கேட்டகரி ஆளாக இருந்து, உங்க மரணத்துக்குப்பின் உங்க குடும்பத்தை கடவுள் பொருளாதார சீரழிவிலிருந்து காப்பார் என்று நீங்க நம்பினால் – தேவை எனினும் நீங்களும் ஆயுள் காப்பீடு இல்லாமல் வாழலாம். “In God, We Trust” என்று அமெரிக்கா அச்சிடுவதும் பணத்தில்தான் என்பதை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்

வாழ்க்கையின் எந்த எட்டில் நீங்கள் இருந்தாலும் இந்த எட்டில் இல்லாவிட்டால் ஆயுள் காப்பீடு உங்களுக்கு அவசியம். உங்க வருமானத்தை நம்பி ஏதேனும் ஒரு ஜீவன் இருந்தால், நீங்க வருமானம் ஈட்டும் வரையும், அந்த ஜீவன் பொருளாதார ரீதியில் உங்களைச் சார்ந்து இருக்கும் வரையும் உங்களுக்கு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு அத்தியாவசியம்

மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் மாதாமாதம் முதலீடு செய்வோருக்கு இலவச ஆயுள் காப்பீடு

The following is purely my personal opinion. This is NOT to sell or recommend Any specific mutual fund. Consider your current financial situation, your financial goals and consult a financial advisor before making any investments

ஆயுள் காப்பீடு, நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு இவற்றின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து சொல்லிக்கிட்டு வர்றேன்.

இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கும் யூலிப் பாலிசிகள் இவை இரண்டையும் வழங்கறோம்னு சொல்லிக்கிட்டு உங்க பணத்தை சுரண்டுகின்றன. இதற்கு நேர்மாறாய் – மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் மாதாமாதம் முதலீடு செய்வோருக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகின்றன இரு நிறுவனங்கள்

ரிலையன்ஸ் மற்றும் ஆதித்ய பிர்லா நிறுவனங்கள் எஸ் ஐ பி சந்தாதாரர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகின்றன.

இரண்டு திட்டங்களையும் படித்துப் பார்த்ததில் எனக்கு பிர்லா நிறுவனத்தின் திட்டம் பெட்டராகப் படுகிறது.

ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்வோருக்கு முதலாம் ஆண்டு மாதச் சந்தாவின் பத்து மடங்கும், இரண்டாம் ஆண்டு 50 மடங்கும் மூன்றாம் ஆண்டிலிருந்து 100 மடங்கும் இலவச ஆயுள் காப்பீடு வழங்குகிறது. 
அதாவது மாதம் 10,000 ரூ நீங்கள் முதலீடு செய்து வந்தால் மூன்றாம் ஆண்டிலிருந்து 10 லட்ச ரூபாய் இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

There is no free Lunch என்கிற சொலவடைக்கு ஏற்ப, இதிலும் சில கண்டிசன்கள் இருக்கின்றன, ஆனால் அவை முதலீட்டாளரை டிசிப்ளின் செய்யவே உதவும். இந்த செஞ்சுரி எஸ் ஐ பியில் மூன்றாடுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யணும், ஓராண்டுக்குள் பணத்தை எடுத்தால் 2% கட்டணமும், ஓராண்டு முதல் மூன்றாண்டுக்குள் எடுத்தால் 1% கட்டணும் வசூலிக்கப்படும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு பணம் எடுத்தால் கட்டணம் கிடையாது. மூன்றாண்டுக்குள் முதலீட்டை நிறுத்தினால் காப்பீடும் நின்றுவிடும்.
மூன்றாண்டுகள் பணம் செலுத்தியபின், தொடர்ந்து பணம் செலுத்தா விட்டாலும், பணத்தை எடுக்காத வரையும் முதலீட்டாளருக்கு 55 வயது ஆகும் வரையும் காப்பீடு தொடரும்.

முதல் 45 நாட்களுக்கு விபத்தினால் நிகமும் மரணம் மட்டுமே காப்பீட்டால் கவர் செய்யப் படுகிறது, அதற்கப்புறம் அனைத்து வித மரணங்களும் கவர் செய்யப் படுகின்றன. காப்பீடு வழங்கப்படும் முன் உங்களுக்கு இருக்கும் நோயினால் மரணம் நேர்ந்தாலும் காப்பீட்டு பணம் கிடைக்காது.

இப்படி சில பல கண்டிசன்கள் இருந்தாலும், இலவசமாக கிடைக்கும் கூடுதல் ஆயுள் காப்பீடு நல்ல விசயமே.

இதையும் உங்களுக்குத் தேவையான ஆயுள் காப்பீட்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு ஆயுள் காப்பீடு அனைவருக்கும் அவசியம். ஒரு வேளை வருமானம் ஈட்டுபவர் இறக்க நேரிட்டால், இது கொஞ்சம் கூடுதல் தொகையை குடும்பத்துக்கு வழங்கும். வருமான வரி சேமிப்புக்காக மட்டும் இன்சூரன்ஸ் வாங்குவதை விட முட்டாள்தனாமனது இலவச காப்பீட்டுக்காக மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. ஒரே மாதிரி இருக்கும் இரு ஃபண்ட்களில் எதை தெரிவு செய்வது என்ற குழப்பம் இருந்தால், இலவச காப்பீட்டை ஒரு காரணியாக எடுக்கலாம். மத்தபடி நீங்க எப்ப வேணா முதலீட்டை நிறுத்தலாம் அல்லது மாத்தலாம் – அப்ப காப்பீடும் போய்விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு அவசியமா?

Image result for children insurance policy images

குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது Conceptual ஆ தவறு. வருமானம் ஈட்டாத யாருக்குமே ஆயுள் காப்பீடு தேவையில்லை, குழந்தைகளுக்குத் தேவையேயில்லை. புள்ள செத்தா பணம் வரட்டும்னு எந்தப் பெற்றோரும் நினைப்பதில்லை. அதனால எந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டும் குழந்தைகளுக்கு பாலிசி விக்கும் போது சம் அஸ்யூர்ட் பத்தி பேசவே மாட்டாங்க. பசங்க காலேஜ் போகும் போது ஃபீஸ் கட்ட உதவும் என்பதை மட்டுமே சொல்லி விப்பாங்க. அதாவது முதலீடாக மட்டுமே சொல்லி விற்கப்படும் இன்சூரன்ஸ் பாலிசி. சரி முதலீடாக அத்தகைய பாலிசிகள் தேறுகின்றனவான்னு பாத்தா, நீங்கள் செய்யக் கூடிய முதலீடுகளிலேயே மட்டமான முதலீடாக இருக்கிறது.

எல் ஐ சி வழங்கும் சில்ரன்ஸ் மணி பேக் பாலிசி எடுத்துக் கொள்வோம். 
அஞ்சு வயசு குழந்தைக்கு 1 லட்ச ரூபாய் சம் அஸ்யூர்ட், 20 ஆண்டு காலம் எடுத்தால், வரியோட சேத்து ப்ரீமியம் ரூ 5838. 13, 15, 17 வருடங்களின் முடிவில் ரூ 20,000 மற்றும் 20 வருட முடிவில் 40,000 மற்றும் கேரண்டீடா 14,000 ஆக மொத்தம் 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வெறும் 20,000 ரூபாய் அதுவும் 13 வருசம் கழித்து கிடைக்கும் போது அதை செலவுதான் செய்வோம், முதலீடு செய்யும் வாய்ப்பு கம்மி – அப்படியே முதலீடு செய்வதாக வைத்து கால்குலேட் செய்தேன்.

13 ஆண்டு முடிவில் கிடைக்கும் 20,000 ரூ 8% அளவில் வளர்ந்து 20 ஆண்டு முடிவில் 34,276 ஆக இருக்கும் 
15 ஆண்டு முடிவில் கிடைக்கும் 20,000 ரூ 8% அளவில் வளர்ந்து 20 ஆண்டு முடிவில் 29,386 ஆக இருக்கும் 
17 ஆண்டு முடிவில் கிடைக்கும் 20,000 ரூ 8% அளவில் வளர்ந்து 20 ஆண்டு முடிவில் 25,194 ஆக இருக்கும் 
இறுதியில் கிடைக்கும் 54,000ம் சேர்ந்து மொத்த கையிறுப்பு 1,42,857 ஆக இருக்கும். நீங்க செலுத்திய தொகை ரூ 116,760.

இந்தத் தொகையை வேறு எதிலாவது முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம்
மாதம் ரூ 486.5, இருபது வருட காலம் – வெறும் 2% வளர்ச்சி இருந்தால் கையிறுப்பு எவ்வளவு இருக்கும் தெரியுமா? ரூ 1,43,418. அதாவது சில்ரன்ஸ் மணி பேக் தரும் ரிட்டர்ன் 2 சதவீதத்துக்கும் குறைவு.

மீடியம் ரிஸ்க் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் போட்டு வெறும் 8% வளர்ச்சி கண்டால் 2,86,000 ரூ இருக்கும். அது கூட வேண்டாம் வங்கி ரெக்கரிங் டெபாசிட்டிலோ ரிஸ்க் ரொம்பவே கம்மியான பாண்ட் ஃபண்ட்களிலோ பணம் போட்டு வந்தாலே இதை விட அதிக கையிருப்பு நம்மிடமிருக்கும்.

இன்சூரன்ஸ் தரும் ரிட்டர்ன்ஸ் இன்ஃப்ளேசனுக்கு கூட காணாது. அதாவது நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு ஈடாக இன்று கிடைக்கக் கூடிய பொருளைக்கூட 20 வருசம் கழித்து இன்சூரன்ஸ் தரும் பணத்தைக் கொண்டு அன்றைய விலையில் வாங்க முடியாது. இந்த பாலிசியை விட ஜி ஆர் டி தங்க மாளிகை மாதச்சீட்டு கூட பெட்டர் என்பேன்.

கால்குலேட் செய்த விவரம் இணைக்கப் பட்டுள்ளது.

No photo description available.

டிஸ்கி : மேலே கூறப்பட்டது என் தனிப்பட்ட கருத்து. இதை முதலீட்டு ஆலோசனையாக கருதுவது உங்கள் விருப்பம் மற்றும் முடிவு மட்டுமே. காப்பீடு / முதலீட்டுத் திட்டங்களில் பணம் போடும் முன்னர் கற்றறிந்த முதலீட்டு ஆலோசகரை கலந்தாலாசிக்கவும்

ஆயுள் காப்பீடு எதுவரை தேவை?

/Why term policy is not necessary to continue after the retirement? Is it not good to continue till 75 years// 
நண்பர் விஜயகுமார் வாகீசன் இந்த கேள்வியைக் கேட்டிருந்தார்

இந்த கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கு, அதனால் தனி பதிவா எழுதிடறேன்

மொதல்ல தெரிஞ்சிக்க வேண்டியது Insurnce is ONLY for Income replacement அதாவது வருமானம் ஈட்டுபவர் இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு பணம் தரக்கூடிய வழி.

வருமானம் ஈட்டாதவருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை, வேலைக்குப் போய் சம்பளம் வாங்க ஆரம்பிக்கும் வரையும் ஓய்வு பெற்ற பின்பும் யாருக்கும் ஆயுள் காப்பீடு அவசியமில்லை. ஓய்வு பெற்ற பின் சம்பளம் வரப்போவதில்லை, அப்போது அவர் இறக்க நேரிட்டாலும் குடும்பத்துக்கு வருமான இழப்பு ஏதும் இருக்காது, அப்ப எதுக்கு ஆயுள் காப்பீடு???

என் கருத்துப்படி, இத்தனை வயசுக்கப்புறம் காப்பீடு தேவையில்லை என்று சொல்லமாட்டேன் – ஏனென்றால் ஓய்வு பெறும் வயது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நீங்க ரிட்டையாகும் மறுநாள் முதல் உங்களுக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை.

இன்னும் ஒரு படி மேலே போய் – உங்க ஓய்வு கால சேமிப்பு குறிக்கோளை அடையும் நாள் நீங்க ஆயுள் காப்பீட்டை நிறுத்தி விடலாம். அதாவது 35 வயது ஆகும் ஒருத்தர், தன் ரிட்டையர்மெண்ட் வயது 65 எனவும் சேமிப்பு குறிக்கோள் 10 கோடி ரூபாய் என்றும் முடிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் தன் ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு்எடுத்து விட்டு சேமிப்புக்கு மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடறார் , ஒரு வேளை 62ம் வயதில் அவர் தனது குறிக்கோளான 10 கோடியை எட்டி விட்டால் அத்தோடு அவர் தனது ஆயுள் காப்பீட்டை கேன்சல் செய்து விடலாம். ஏனென்றால் அதற்கப்புறம் காப்பீடு வெறும் செலவும் மட்டுமே, அது தரும் சென்ஸ் ஆஃப் செக்யூரிட்டி அவருக்குத் தேவையில்லை.

அடுத்த காரணம் அது எக்ஸ்பென்சிவ் : நாற்பது வயதாகும் சுந்தர் ஒருகோடி ரூபாய்க்கு எல் ஐ சி இடெர்ம் பாலிசி எடுக்கறார், 25 ஆண்டுகாலம் எடுத்தா ப்ரீமியம் ஆண்டுக்கு 36,190 ரூ, அதே அவர் 35ஆண்டு காலம் எடுத்தா Premium Rs 50,336. அதாவது தேவையற்ற காலத்தில் காப்பீடு பெறுவதற்கு, காப்பீடு தேவையான 30ஆண்டு காலம் 30 *14000 = 4,20,000 ரூ அதிகம் கட்டுவீங்க. 
ஒண்ணு ஆண்டுக்கு 14,000 சேமிக்கலாம் அல்லது அந்த காசுக்கு ரிட்டையர் ஆகும் வரை அதிக காப்பீடு பெறலாம்

ரிட்டையர் ஆன பின் உங்க வருமானம் குறைந்து விடும், அப்போது நீங்க தேவையற்ற செலவீனங்களைக் குறைத்து, கையிறுப்பு உயிர் வாழும் காலம் முழுதும் வர்றா மாதிரி பாத்துக்கணும். பென்சன் பணத்தில் இருந்து ஆயுள் காப்பீட்டு ப்ரீமியம் கட்டிக்கிட்டு இருக்கக்கூடாது.

கடேசியா, குடும்பத்தார் நம்மை நம்பி இருக்கும் போது, இன்னும் குறிப்பா சொல்லப்போனா நம் சம்பளத்தை நம்பி இருக்கும் போது காப்பீடு அவசியம், 65 வயது வரை இறக்கலேன்னா, 75க்குள் இறக்க வாய்ப்பு எவ்வளவு அதும் நாம் வருமானம் ஈட்டாத போது? அந்த பத்தாண்டுகள் காப்பீடு எதுக்கு? கட்டிய பணம் எப்படியாவது திரும்பக்கிடைக்கணும் என்கிற மனநிலையைவிட்டு வெளிய வந்தால் ரிட்டையர் ஆகும் தினம் ஆஃபிஸை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு போய் எல்லா பாலிசிகளையும் கேன்சல் பண்ணிட்டு வந்துடுவீங்க

Accident Double Cover Rider

ஆயுள் காப்பீட்டில் விபத்தால் ஏற்படும் மரணத்துக்கு இரட்டிப்பு காப்பீடு ரைடரை பலரும் விரும்புவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருத்தர் தனக்கு தேவையான அளவு காப்பீடு (ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு) எடுத்து விட்டால் மரணம் எப்படி நிகழ்ந்தாலும் குடும்பத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் போகுது.

ஒரு வேளை பாலிசி காலத்துக்குள் தான் இயற்கை மரணம் அடைய வாய்ப்பில்லை என்றும், மரணம் நிகழ்ந்தால் அது விபத்தின் மூலம்தான் இருக்கும் என்றும் ஒருவர் நினைத்தால் வருமானத்தின் 5 மடங்கு மட்டும் காப்பீடு எடுத்து விட்டு ஆக்சிடெண்ட் ரைடர் எடுத்தால் போதும்

தனக்கு தேவை என்று கருதும் அளவுக்கு காப்பீடும் எடுத்து விட்டு ஆக்சிடெண்ட் ரைடரும் எடுப்பது எதுக்கு?

Am I missing anything here???

எல் ஐ சியின் ஜீவன் தரங் – ஒரு பார்வை

இது ஒரு Whole Life வகை பாலிசி.. இந்த பாலிசி குறித்து பாக்கறதுக்கு முன்ன ஹோல் லைஃப்னா என்னான்னு கொஞ்சம் பாக்கலாம்

டெர்ம் பாலிசி எடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுப்போம். உதாரணத்துக்கு 35 வயசு ஆன ஒருவர் டெர்ம் பாலிசி எடுத்தார்னா 25-30 வருடங்களுக்கு எடுப்பது உத்தமம்
ஏன்னா அவர் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் காலத்தில் இறக்க நேரிட்டால் அவர் குடும்பத்துக்கு பாலிசி அமவுண்ட் income replacement ஆக இருக்கும். 
காப்பீடு முதிர்வடையும் வரை அவர் இறக்கலேன்னா, அவருக்கோ குடும்பத்துக்கோ எதுவும் கிடைக்காது. ஹோல் லைஃப் பேருக்கேத்தா மாதிரி ஆயுட்காலம் முழுவதற்குமான காப்பீடு

சாகும் வரை உண்ணாவிரதம் வேணா இருக்கலாம், சாகும் வரை காப்பிட்டுன்னு சொன்னா முடிவில்லாம இருக்கும் அதனால் பொதுவா ஹோல் லைஃப் பாலிசிகள் சந்தாதாரருக்கு 100 வயது
ஆகும் வரை என்று நிர்ணயிக்கப் படுகிறன. இன்றைய தேதியில் நூத்துக்கு 99 பேர் அதுக்கு முன்ன இறந்துடுவாங்க, அதனால் இதை ஹோல் லைஃப் என்று சொல்லலாம்.

இதில் ப்ரீமியம் கட்டும் காலம் என்று இருக்கும். பாலிசி எடுத்ததுலேருந்து 10-15-20 வருடங்களுக்கு ப்ரீமியம் கட்டினால் போதும். அக்காலம் முடியும் போது ஒரு தொகை கிடைக்கும்
அப்போலேருந்து எடுத்தவருக்கு 100 வயசு ஆகும் வரை ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 100 வயசு வரைக்கும் இருந்தால் மீண்டும் ஒரு தொகை கிடைக்கும்
அதுக்குள்ள அவர் இறந்து விட்டால் நாமினிக்கு பாலிசி தொகையும் போனஸும் கிடைக்கும்..

இது நல்லாத்தானே இருக்கு அப்படீங்கறீங்களா? பொதுவா ஹோல் லைஃப் பாலிசியிலும் குறிப்பா ஜீவன் தரங்கிலும் உள்ள பிரச்சனைகளைச் சொல்றேன்1. ஆயுள் காப்பீட்டின் அடிப்படையே income replacement தான், அதாவது ஒருத்தர் சம்பாதிக்கும் போது குடும்பம் அவர் சம்பளத்துக்கு ஏத்த லைஃப் ஸ்டைல் ஏற்படுத்தியிருப்பாங்க. 
திடீரென அவர் இறக்க நேரிட்டால், குடும்பம் அந்த லைஃப் ஸ்டைலை தொடர பணம் தருவது ஆயுள் காப்பீடு. ஹோல் லைஃப் இதுக்கு எதிரானது. ரிட்டையர் ஆன ஒருவருக்கு ஆயுள் 
காப்பீடு தேவையே இல்லை. 60 வயதில் முடியும் ஒரு பாலிசி எடுப்பதற்கும் 100 வயசில் முடியும் ஒரு பாலிசி எடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு ப்ரீமியம்ல. 
chances of someone dying at 80 or 90 is much higher than him dying at 60, hence the premium will be much higher

2. ப்ரீமியம் அதிகமாவதால், சந்தாதாரரால் அவருக்குத் தேவையான அளவு காப்பீடு எடுக்க முடியாது. உதாரணத்துக்கு ஒருத்தர் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்று 
வைத்துக் கொள்வோம், குடும்பம் மாசம் 40,000 ரூபாய்க்கான செலவுகளை ப்ளான் பண்ணிடுவாங்க. அவர் திடீர்னு இறந்து விட்டால், குடும்பம் ஓரளவு சமாளிக்க 50 லட்ச ரூபாயாவது 
வேண்டும். அது இருந்தால்தான் அக்குடும்பம் பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து 25ஆயிரம் ரூபாயாவது வர்ற மாதிரி ஏற்பாடு செய்ய முடியும். 
anything less than 10 times your annual salary will be inadequate, இந்த அளவு ஹோல் லைஃப் எடுக்க ரொம்ப செலவாகும்.

3. ஹோல் லைஃப்பில் மெச்சூரிட்டி பெனிஃபிட் என்பதே அர்த்தமில்லாதது. ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே 100 வயது வரை வாழ்ந்து அதை பெறுவார்கள். 99% க்கும் அதிகமானோர்
அதை வாங்காமலே இறந்து விடுவார்கள். which means, there is no liquidity in this plan. Premium paying period க்கு அப்புறம் சிறு தொகை ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் ஆனா ஒரு பெரிய தொகை உயிருடன் இருக்கும் போது கிடைக்காது. மருத்துவச் செலவுக்கோ பிள்ளைகள் திருமணத்துக்கோ வேணும்னா கிடைக்காது

இப்ப ஜீவன் தரங்குக்கு வருவோம்

ரமேஷுக்கு வயது 35, புகை பிடிக்கும் பழக்கமில்லை. 20 ஆண்டுகாலம் ப்ரீமியம் செலுத்தத் தயார், அவர் சம்பளம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய், அவர் 50 லட்ச ரூபாய்க்கு தரங் பாலிசி எடுக்க விரும்புகிறார். அவரோட ப்ரீமியம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 2,52,350 ரூ மற்றும் வரிகள் மொத்தம் 2,82,00 ரூபாய்க்கு மேல வரும். அஞ்சு லட்சம் சம்பாதிப்பவரால் இவ்வளவு
கட்டவே முடியாது. ஒண்ணு அவர் சம்பளத்தில் பாதிய காப்பீடுக்கு கட்டணும் அல்லது தேவைக்கு குறைவாக காப்பீடு எடுக்கணும். Bottomline இது காப்பீட்டுக்கு லாயக்கில்லை

சரி காப்பிட்டுக்குத்தான் லாயக்கில்லை, முதலீடாக நல்லா இருக்கான்னு பாக்கலாம்.

ஆண்டுக்கு 2,82,000 ரூ வீதம் 20 ஆண்டுகளுக்கு கட்டின பிறகு ரமேஷுக்கு 20 லட்சம் முதல் 64 லட்சம் ரூ வரை கிடைக்கும். கண்டிப்பா இவ்வளவு கிடைக்கும்னு சொல்ல முடியாது. அதுக்கப்புறம்
ரமேஷுக்கு 100 வயது ஆகும் வரை ஆண்டுக்கு 2,75,000 கிடைக்கும். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இது ரொம்ப கம்மி என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ரமேஷ் இந்த பாலிசிக்கு பதிலா
என்ன செய்யலாம்னு பாக்கலாம்.

இதே 50 லட்ச ரூபாய்க்கு எல் ஐ சியின் நல்ல திட்டமான இடெர்ம் பாலிசி எடுத்தால் ப்ரீயம் ஆண்டுக்கு வெறும் 12,000 ரூபாய் மட்டுமே. மிச்சம் இருப்பது 270,000 ரூபாய். அதாவது மாசத்துக்கு
22500 ரூபாய். இதை அவர் வேறு நல்ல Equity & Bond fund களில் போடலாம்.

அவரோட முதலீடு ஆண்டுக்கு 5% (as against Tarang’s scenario 1 which is Rs40,000 per lakh) or 10% (as against Tarang’s Scenario 2 which is Rs 128,000 per lakh) 
வளருதுன்னு வச்சி கணக்கு பண்ணிப் பாக்கலாம். see excel

இடெர்ம் பாலிசி எடுத்தப்புறம் மிச்ச பணத்தை முதலீடு பண்ணிட்டு வந்தால், ரமேஷிடம் 90 லட்சம் முதல் 1.7 கோடி வரை இருக்கும் (வளர்ச்சியைப் பொருத்து) இது தரங் தரக்கூடிய
தொகையை விட மிக அதிகம். மேலும் இந்தப் பணத்தை முதலீடு செய்து வைத்தால் ஆண்டு தோறும் கிடைக்கும் தொகையும் தரங் தரக்கூடிய தொகையை விட அதிகம்

இவ்வகை சேமிப்பில் லிக்விடிட்டியும் அதிகம். எப்போது வேண்டுமானாலும் நீங்க உங்க பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

No photo description available.

This is purely my opinion and not intended to suggest for or against any schemes. consider your current situation, financial goals and consult an advisor before investing

பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா

Related image

மத்திய அரசின் இன்னுமொரு நலத்திட்டம். இது இந்தியக் குடிமகன்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்குகிறது. மிகக் குறைந்த செலவில் குறைந்த அளவு ஆயுள் காப்பீடு

என்னளவில் இது அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் அதுக்கு மேலே இருப்பவர்களுக்கு உகந்ததல்ல. ஆனாலும் இதை நல்ல திட்டமாகக் கருதுகிறேன்

ஆயுள் காப்பீடின் அளவு வெறும் 2 லட்ச ரூபாய் மட்டும்தான். காப்பிட்டின் பாலபாடமாக ஆண்டு வருமானத்தின் 5 முதல் 20 மடங்கு வரை காப்பீடு எடுக்கச் சொல்வாங்க, எனவே மாசம் 50,000 ரூ சம்பாதிக்கும் ஒருவரின் குடும்பத்துக்கு இந்த காப்பீடு யானைப்பசிக்கு சோளப்பொரி. மேலும் காப்பீடு 55 வயதில் முடிந்து விடும், காப்பீடு அதிகம் தேவைப்படும் காலம் 55- 65 வயது வரை. இதுவோ 55ல முடிந்து விடும். 
அப்புறம் நான் ஏன் இதை நல்ல திட்டம் என்கிறேன்.

இதை வாங்கலாம் உங்களுக்காக அல்ல, உங்க வீட்டிலோ அலுவலகத்திலோ வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களுக்கு வாங்கித் தரலாம். செலவு ஆண்டுக்கு 330 ரூபாய் தான் (வரிகள் தனி). நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான செலவில் 2 லட்ச ரூபாய் காப்பீடு. வீட்டு வேலை செய்யும் பெண்மணி, டிரைவர், அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன், அலுவலக ப்யூன் போன்றோர் காப்பீட்டில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களில் ஒருவர் இறக்க நேரிட்டால் அக்குடும்பம் ரொம்பவே கஷ்டப் படுகிறது, அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கணிசமான தொகை, நமக்கோ ஆண்டுக்கு 330 ரூபாய் பெரிய பணமில்லை. உங்களுக்கு வேலை செய்பவரின் குடும்பத்துக்காக இதைச் செய்யலாம். சும்மாத் தர மனசில்லைன்னா தீபாவளி போனஸாக இதைத் தரலாம்.

இக்காப்பீட்டை எல் ஐ சி நிறுவனம் மூலமாகவும் வங்கிகளின் மூலமாகவும் பெறலாம்