ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு குறித்து தமிழில் பேசும் தளம். I am not a professional financial advisor – certified or otherwise The purpose of articles written here is purely educational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals and Invest as you see fit or consult a Professional Financial Advisor before investing
நண்பர் ஒருவர் அமெரிக்காவில் ஈமச்சடங்குகளுக்கு கூட இன்சூரன்ஸ் இருக்காமேன்னு கேட்டார். ஆமா ஒருவர் வாழும் போதே அவரோட இறுதிச் சடங்கு செலவுகளைச் சமாளிக்க இருவகை காப்பீடுகள் உள்ளன – Burial Insurance குறிப்பிட்ட அளவு பணத்தை அவரோட நாமினிக்கிட்ட கொடுத்துடும், அதுக்குள்ள செலவு பண்ணி மிச்சத்தை அவர் எடுத்துக்கலாம். Preneed Funeral Insurance நேரடியா பணத்தை Funeral House க்கு கொடுத்துடும் என்றேன். அது மாதிரி இந்தியாவில் ஏதும் இருக்கான்னு கேட்டார். இருக்கே… மணி பேக் பாலிசி, எண்டோமெண்ட் பாலிசின்னு வெவ்வேறு பேர்ல இருக்குன்னு சொன்னேன்.. . நான் அப்படி என்ன தப்பாச் சொல்லிட்டேன்னு கோவிச்சிக்கிட்டு போனை வச்சிட்டுப் போயிட்டார்??
மருத்துவனை பெருஞ்செலவு, மருத்துவக் காப்பீடு இருந்து அது ஓரளவுக்கு காப்பாத்தினாலும், ஒருவர் இறந்த முதல் இரண்டு நாட்கள் செலவுக்கும், 16 நாள் காரியத்துக்கும் இன்னிக்கு எப்படியும் 2 முதல் 5 லட்சம் வரை செலவாகும். (இது இந்து முறைப்படி, மத்த மத மக்கள் பத்தி எனக்குத் தெரியாது) – ஏன் எடுக்கறோம், எதுக்கு எடுக்கறோம்னே தெரியாம மக்கள் எடுத்து வச்சிருக்கும் மணி பேக் மற்று எண்டோமெண்ட் பாலிசிகளின் சம் அஸ்யூர்ட் சில லட்சங்களே இருக்கின்றன.
பொதுவா வாங்கும் சம்பளத்தில் 5% காப்பீட்டுக்கு செலவழிப்பாங்க. ஆண்டுக்கு 12 லைஃப் பிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஏஜெண்ட் இதையும் முழுசா குடும்பத்தலைவருக்கு செலவழிக்க விடாமல் மேடத்துக்கு, பையனுக்கு, பாப்பாவுக்குன்னு 4 பாலிசிக்கு பிரிச்சு வச்சிடுவார். வருமானத்தில் 2% ஐ வச்சி எடுக்கும் எண்டோமெண்ட்டின் சம் அஸ்யூர்ட் 5 இருந்தாலே அதிசயம். பாலிசி எடுத்து சில ஆண்டுகளில் ஒருவர் இறந்தால் பெருசா போனஸ் எல்லாம் இருக்காது. இறுதிக் காரியங்களைச் செய்ய வாங்கின கடனைத்தான் சம் அஸ்யூர்டை வச்சி அடைக்கலாம்.
இறுதிச் சடங்கு செலவு அளவுக்கு காப்பீடு வழங்கும் எண்டோமெண்ட் பாலிசிகளா இறுதி வரை குடும்பத்தைக் காக்கும் டெர்ம் பாலிசிகளா – Make a wise choice when you are alive and put 3 meals a day on your loved one’s table when even when you are not there.
இன்சூரன்ஸ் கம்பெனிகளில் “முதலீடு” செய்வதன் தீமைகளை பத்தாயிரம் வார்த்தைகளில் கட்டுரையாக்குவதை விட எளிதாக் இப்படம் விளக்குகிறது.
எண்டோமெண்ட் பாலிசிகளின் முடிவில் பணம் கிடைக்கும் என்பது உண்மையே.. ஆனால் எவ்வளவு கிடைக்கும் என்று உறுதியாச் சொல்ல முடியாது. இன்னிக்கு நீங்க ரூபாய்களாகக் கொட்டி செய்யும் முதலீடு இறுதியில் சிறு காசுகளாத் திரும்ப வரும். பத்து லட்சம் முதலீடு செய்து பதிமூன்று லட்சம் திரும்ப வரலாம் ஆனா அது கையில் கிடைக்கும் போது பதிமூணு லட்சத்தின் மதிப்பு இன்றைய நிலையில் ஆயிரங்களில் இருக்கும். அதைத்தான் இப்படம் எளிமையாக விளக்குகிறது.
எண்டோமெண்ட் பாலிசி குறித்து சில நண்பர்கள், ஷேர் மார்க்கெட் ஃபாலோ பண்ண முடியாத, பிசினஸ் பண்ணத் தெரியாத, ரியல் எஸ்டேட் மேல நம்பிக்கை இல்லாத, தங்கம் வாங்கி வச்சிக்கிட்டு பயப்பட விரும்பாத, வங்கிகள் மேல மிகுந்த கோவத்துடன் இருப்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் எண்டோமெண்ட் பாலிசியில பணம் போடலாம். செத்தா பசங்களுக்கு பணம் கிடைக்கும், உயிரோட இருந்தா வங்கி வட்டி அளவுக்காவது வளர்ச்சி வருமே, முதலீடு செய்யலாம் இல்லையான்னு கேட்டிருந்தாங்க . அதற்க்கான பதில்
1. வங்கி பணத்தை கமாடிட்டியா உபயோகித்து பிசினஸ் பண்ணுது, உங்க கிட்ட வட்டிக்கு வாங்கி பிறருக்கு கடன் கொடுத்து லாபம் பாக்குது. அதே அளவு அல்லது அதற்கு மேலும் வட்டி தருவதற்கு காப்பீட்டு நிறுவனம் என்ன செய்யுதுன்னு எப்பவாவது யோசிச்சி இருக்கீங்களா?
2. நேரடி பங்குச் சந்தை முதலீடு எல்லாருக்கும் சரியா வராது அது ஓகே. நீங்க ஏன் மியூச்சுவல் ஃபண்ட் வழியை தேர்ந்தெடுப்பதில்லை?
3. மியூச்சுவல் ஃபண்ட் தேர்ந்தெடுப்பதும் கஷ்டம். 2000க்கும் மேல ஃபண்ட் இருக்கு அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பதுன்னு புரியலயா? அதே மாதிரி பலப்பல காப்பீட்டுத் திட்டங்கள் (எண்டோமெண்ட், ஹோல் லைஃப், யூலிப், மணி பேக்) இருக்கின்றன. எல்லாத்தையும் அலசி ஆராய்ந்தா இப்ப வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசியை எடுத்தீங்க?
4. காப்பீட்டு முகவர் சொன்ன பாலிசியைத்தானே கண்ணை மூடிக்கிட்டு எடுத்தீங்க?நீங்க முதலாண்டு கட்டும் தொகையில் 30% பெரும் அவர் நல்ல ஆலோசனை சொல்வார்னு நம்புற நீங்க, நீங்க முதலீடு செய்யும் தொகையில் 1% பெரும் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசர் நல்ல ஆலோசனை சொல்வார் என ஏன் நம்பமாட்டேங்கறீங்க?
5. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வளர்ச்சியைத்தான் பாலிசிதாரர்களுக்கு போனஸாக வழங்குகிறது என்பது தெரியுமா?
6. நீங்க காப்பீடு நிறுவனத்திடம் பணம் கொடுத்து அது அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் வளர்ச்சியில் கிள்ளி உங்களிடம் போனஸாக கொடுப்பதற்கு பதில் நீங்களே மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சந்தையில் முதலீடு செய்து வளர்ச்சியை அள்ளலாமே
7. எண்டோமெண்ட் பாலிசிகளில் எனக்கு இருக்கும் பிரச்சனைகளில் வளர்ச்சி / வட்டி இரண்டாம் பட்சமே, முதல் பிரச்சனை காப்பீடு என்பதுதான் Irony. காப்பீடு அவசியம் – இன்னும் ஒரு படி மேல போய் அத்தியாவசியம் என்பேன். குடும்பத்தின் பொருளாதாரம் நலன் காக்க தலைவரின் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை காப்பீடு அவசியம். இந்த அளவு காப்பீடு எண்டோமெண்ட் பாலிசிகளில் எடுக்கவே முடியாது. இந்தளவு காப்பீடு டெர்ம் பாலிசியில் மட்டுமே எடுக்க முடியும். ஆண்டு வருமானத்தின் 5 மடங்கு எண்டோமெண்ட் ப்ரீமியமே எட்டாத உயரத்தில் இருக்கும். அதனாலத்தான் எண்டோமெண்ட் பாலிசி வேண்டாமனு சொல்றேன்
8. வருமானத்தின் 10 மடங்கோ அதற்கு மேலோ டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் வட்டி கம்மியாத்தான் வரும், வரும் வட்டி இன்ஃப்லேசனை விட கம்மியாத்தான் இருக்கும் தெரிஞ்சே 5-6% வளர்ச்சி தரும் எண்டோமெண்ட் பாலிசியில் முதலீடு செய்வதாக இருந்தால் தாராளமா செய்யுங்க. உங்க பணம் – உங்க முடிவு.
ஆனா பிரச்சனை எஙக் வருதுன்னா, காப்பீட்டுக்கான பட்ஜெட் முழுவதையும் எண்டோமெண்ட்டுக்கு கட்டிட்டு தேவனையான அளவு காப்பீடு எடுப்பதிலை பலரும். எண்டொம்மெண்ட் எடுத்துட்டு ஆயுள் காப்பீடு எடுத்து விட்டேன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இறக்கும் போது குடும்பத்துக்கு 5-10 லட்சம் மட்டுமே கிடைக்கும் – அதை வச்சி குடும்பம் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும். அதே காசுக்கு 1 கோடி ரூபாய் டெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் காப்பிட்டு தேவையும் பூர்த்தியாகும் முதலீடும் நல்ல வளர்ச்சி காணும்.
புது மொந்தையில் பழைய கள் கூட அல்ல புது மொந்தையில் புளித்துப் போன கள்ளு..
எல் ஐ சி எப்போதுதான் இந்த் மணி பேக் பாலிசியை விட்டு வெளியே வரப்போகுதுன்னு தெரியல… இந்த மாதிரி இத்துப்போன பாலிசிகளை டிசைன் செய்யும் நேரத்தில் டெர்ம் பாலிசிகளில் என்ன புதுமை செய்யலாம்னு யோசிக்கலாம்
இது பணக்காரர்களுக்கு மட்டுமேயான மணி பேக் பாலிசியாம், இல்லயா பின்ன? குறைந்தபட்ச சம் அச்யூர்ட் ஒரு கோடி ரூபாயாச்சே..
பிற மணி பேக் பாலிசிகளுக்குக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எம்ஜியார் மரு வச்சிக்கிட்டு மாறுவேஷம்னு சொன்னா மாதிரி ரொம்ப மெனக்கெடவேயில்லை எல் ஐ சி
மணி பேக் பாலிசிகள் 5,10, 15 ம் ஆண்டு இறுதியில் பணம் தரும், இது 16 & 18ம் ஆண்டுகளின் இறுதியில் 45% பணமும் 20ம் ஆண்டு இறுதியில் 10% பணமும், லாயல்டி அடிசனும், கேரண்டீட் அடிசனும் தருது. க்ரிடிகல் இல்னெஸ் பலவற்றை இலவச இணைப்பாக சேர்த்திருக்காங்க..
40 வயதானவருக்கு 20 ஆண்டு கால பாலிசி பாத்தா பிரீமியம் ஏழரை லட்ச ரூபாய் வருது. அதாவது மாசத்துக்கு 62,500 ரூபாய். 16 ஆண்டுகாலம் ப்ரீமியம் செலுத்தணும். தாராளமாய் லாயல்டி அடிசனும், கேரண்டீட் அடிசனும் போட்டு கணக்கு பண்ணேன். 16 & 18 ம் ஆண்டு முடிவில் கிடைக்கும் 45 லட்ச ரூபாய் ஆண்டு 10% வளர்ச்சி அடைந்தால் கடைசியில் கையில் ஒருகோடியே நாப்பது லட்ச ரூபாய் இருக்கும். அதே 62500 ரூபாயை வேறு எங்காவது மாதாமாதம் முதலீடு செய்து வந்தால் 16 ஆண்டு இறுதியிலேயே 2% வளர்ச்சி கணக்கில் 1.41 கோடி இருக்கும். 10% வளர்ச்சி கண்டால் 16 ஆண்டு முடிவில் 2.9 கோடிக்கு மேல இருக்கும்.
2% க்கு மேல அப்ரிசியேசன் கொடுக்கறதில்ல என்பதை மணி பேக் பாலிசிகளின் கொள்கை முடிவாவே வச்சிருக்கு போல எல் ஐ சி…
ஆண்டுக்கு 7-8 லட்சரூபாய் ப்ரீமியம் கட்ட முடியும், தனக்கு 2% அளவுக்கு கூட அப்ரிசியேசன் கொடுக்கக் கூடிய முதலீடு ஏதும் தெரியாது என்பவர்களுக்கு இது உகந்த திட்டம். மற்றவர்கள் வழக்கம் போல கோடி ருபாய்க்கு டெர்ம்பாலிசியும், முதலீட்டுக்கு நல்ல அசெட் அலோகேசன் மியூச்சுவல் ஃபண்ட்களையும் நாடுதல் நலம்
எண்டோமெண்ட், மணி பேக் பாலிசி எல்லாம் நல்ல முதலீடுன்னு நம்புறவங்க அடுத்த போஸ்ட்டுக்கு தாவி விடுதல் நலம். இந்த பதிவு முழுக்க முழுக்க என்னோட பர்சனல் ஒப்பீனியன். இது யாருக்கும் அறிவுரை சொல்லவோ எந்த பாலிசியையும் வாங்கவோ விற்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் போட்ட கணக்கை சேமிக்க மட்டுமே…
மணிபேக் பாலிசி மட்டமான சாய்ஸ் என்பது என் நம்பிக்கை ஆனா இவ்வளவு மட்டமா இருக்கும்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்..
நான் கிறுக்கறதையெல்லாம் படிச்ச ஒரு நண்பர் ஆலோசனைன்னு வந்தார். நல்ல இன்சூரன்ஸ் ஏஜெண்டா பாருங்க சார், எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தெரியாதுன்னு சொன்னாலும் கேக்கல, மணிபேக்ல போடலாம்னு முடிவு பண்ணிட்டேன், 20 வருச ஸ்கீம்ல போடலாமா அல்லது 25 வருச ஸ்கீம்ல போடலாமான்னு மட்டும் சொல்லுங்க. ப்ரீமியம் வித்தியாசம் வருது. 20 வருசத்தில் 3 முறையும் 25 வருசத்தில் 4 முறையும் நடுவில் பணம் வரும், கடேசீல லம்ப்பாவும் வரும் – ரெண்டையும் எக்சலில் போட்டு எதில் அதிக பணம் கிடைக்கும்னு சொன்னா போதும்னு சொன்னார். சரி எக்சல் சொல்லப் போகுது அதை அவருக்கு காமிச்சிட்டா போதும்னு ஆரம்பிச்சேன்
நண்பரின் வயது35 இன்சூரன்ஸ் காலம் 20 வருசம் காப்பீட்டு அளவு : 10 லட்ச ரூபாய் ப்ளான் : மணி பேக் 20 வருச ப்ளான் நம்பர் 820 இதுக்கு ப்ரீமியம் பாத்தா மாசத்துக்கு 6749 ரூ வருது. (ரூ 6458 மற்றும் 291 ரூ வரி).
அதாவது ஆண்டுக்கு 77,496 மற்றும் வரிகளாம் 10 லச்ச ரூவா இன்சூரன்ஸுக்கு. சில பல பாலிசிகளைப் பாத்திருக்கேன். சம் அஸ்யூர்டுக்கு 7.7% ப்ரீமியம் இப்பத்தான் பாக்கறேன். நண்பரின் ஆண்டு வருமானம் ரூ 10 லட்சம். உங்க ஆண்டு வருமானம் அளவுக்கு இன்சூரன்ஸ் போதாதுன்னு சொன்னதுக்கு, இல்லீங்க நல்ல ரிட்டன்ஸ் இருக்கு. நீங்க 20-25 வருச ப்ளான்களில் ரிட்டர்ன் வித்தியாசம் மட்டும் பாருங்கன்னார். நமக்கென்ன போச்சுன்னு எக்சலில் கவனம் செலுத்தினேன்.
5 ஆண்டுகள் கழித்து 2 லட்ச ரூபாய் கிடைக்கும். நம்மாள் ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம் என்பவர். அதனால் வங்கி வட்டி 6% வச்சி கணக்கு போட்டேன். அந்த 2 லட்சம் கூட்டு வட்டி முறையில் 15 ஆண்டுகள் கழித்து ரூ 479312 ஆகியிருக்கும்
10 ஆண்டுகளித்து இன்னோரு 2 லச்ச ரூபாய், அது பத்தாண்டுகள் 6% வட்டியில் வளர்ந்து 358170 ஆகியிருக்கும்.
15 ஆண்டுகள் கழித்து இன்னோரு 2 லச்ச ரூபாய், அது ஐந்தாண்டுகள் வளந்து 267645 ஆக இருக்கும். (இன்றைய நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் வங்கி வட்டி விகிதம் 6% எல்லாம் இருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் 6% போட்டு கணக்கு பண்ணேன்)
கடேசி பேமெண்ட் கொஞ்சம் ட்ரிக்கி. 4 லட்சம் கேரண்டீட் அதுக்கு மேல போனஸ், லாபத்தில் பங்கு எல்லாம் தருவாங்களாம். எவ்வளவுன்னு கேரன்டி இல்லை. சரி நாலுக்கு பதில் எட்டு லட்சம் தர்றாங்கன்னே வச்சிக்கோவோம்.
ஆக மொத்தம் 19,05,126 ரூ நண்பரிடம் 20 ஆண்டுகள் கழித்து இருக்கும்.
வாவ் 20 லட்ச ரூபாயா? நல்ல ரிட்டர்ன்பா அப்படியே 25 வருசம் பாத்துடுன்னு சொன்னவருக்கு ஒரு போன் கால் வந்தது. அவர் பேசிட்டு வர்றதுக்குள்ள எல் ஐ சியின் அமுல்ய ஜீவன் (நம்பர் 822) பாலிசியில் 35 வயசு, 20 ஆண்டு காலம், 10 லட்ச ரூபாய் காப்பீடுக்கு ப்ரீமியம் எவ்வளவுன்னு பாத்தேன். ஆண்டுக்கு 4150 + 747 வரி = 4897. அதாவது மாசத்துக்கு 408 ரூ. அதே பத்து லட்ச ரூபாய் காப்பீடு, அதே 20 வருச காலம் 6750 ரூ எங்க 408 ரூ எங்க.
அமுல்ய ஜீவன் எடுத்துட்டு, மிச்ச காசான 6340 ரூபாயை வங்கி ரெக்கரிங்க் அல்லது பாண்ட்கள் அல்லது ஈக்விட்டி ம்யூச்சுவல் ஃபண்ட் அல்லது சிட் ஃபண்ட் எதிலாவது முதலீடு செய்யலாம்.
மணி பேக் பாலிசி மூலம் வரக்கூடிய 19,05,126 ஐ விட அதிகம் பெற அந்த முதலீடு பெற வேண்டிய வட்டி அல்லது வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? வெறும் 2.2% மட்டுமே.
மாதாமாதம் முதலீடு ரூ 6340 காலம் 240 மாதங்கள் வட்டி 2.2% கடேசில கையில் 19,09,200 ரூ இருக்கும் அதாவது மணி பேக் பாலிசி கணக்கை விட நாலாயிரம் ரூ அதிகம் சம்பாதிக்க வெறும் 2.2% வட்டி கிடைத்தால் போதும். மணி பேக் பாலிசி கணக்குக்கு எடுத்த 6% வட்டி கிடைச்சால் 29,29339 ரூ இருக்கும்.
போன் பேசி விட்டு வந்த நண்பரிடம் இதையும் காமிச்சேன். பாவம் உனக்கு 2.5% வளர்ச்சி தரக்கூடிய முதலீடு எதுவும் தெரியாது இல்லையா? உனக்கு மணி பேக் தான் சரியா வரும், அடுத்து 25 வருச மணி பேக்கையும் பாத்துடலாம் என்றேன்.
ஸ்ரீராம், அமுல்ய ஜீவன்ல 20 லட்ச ரூபாய்க்கு எவ்வளவு ப்ரீமியம்னு பாரு, அப்படியே எப்பபாரு சொல்வியே அந்த இ எல் எஸ் எஸ் ம்யூச்சுவல் ஃபண்ட் பத்தியும் சொல்லுப்பா என்றார்