இளமையில் கல் என்பது பழமொழி, இளமையில் திட்டமிடு என்பது புதுமொழி..

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை இருபதுகளின் இறுதியிலோ முப்பதுகளின் ஆரம்பத்திலோ தொடர் முதலீடு ஆரம்பித்தால் ரிட்டையர் ஆகும் போது கணிசமான தொகை கையில் இருக்கும். 35 ஆண்டுகள் மாதாமாதம் 2500ரூ நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து வந்தால் முடிவில் 1 கோடி ரூபாய் இருக்க வாய்ப்பு மிக அதிகம். இதை Power of Compounding என்பார்கள்

காப்பீட்டிலும் சீக்கிரம் ஆரம்பிப்பது பலனளிக்கும். நண்பர் வல்லம் பசிர் 29, ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செய்தார். இதை இரண்டு கம்பெனிகளில் தலா 50 லட்சம் என முடிவு செய்துள்ளார்… ஜீவன் ஆனந்திலும் ஜீவன் சரலிலும் இன்ன பிற ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்யும் வாலிப வயோதிக அன்பர்களே, பஷீர் ஒரு கோடி ருபாய் காப்பீடுக்கு கட்டப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? எஸ் பி ஐயில் 50 லகரத்துக்கு ஆண்டுக்கு 10,400 ரூபாய், எல் ஐ சியில் 8800 ரூபாய். அதாவது ஒரு கோடிக்கு ப்ரீமியம் வெறும் 19.200 ரூபாய். மாசம் வெறும் 1600 ரூபாய்.

எஸ் பி ஐ மேனேஜர் கிட்டத்தட்ட டெர்ம் பாலிசி விக்க மாட்டேன்னே சொல்லியிருக்கார், இது வேணாம் சார், ரிட்டர்ன் எதுமே வராது, இதுக்கு பதிலா மணிபேக் போடுங்க என்றெல்லாம் மூளைச் சலவை செய்ய முயன்றுள்ளார். அதுல காப்பீடு 5 லட்சம் மட்டுமே கிடைக்கும் நான் இறந்தால் அது குடும்பத்துக்கு ஒராண்டுக்கு கூட காணாது, அப்புறம் நீங்களா என் குடும்பத்தைக் காப்பீங்கன்னு கேட்டதும் இந்தாள் கிட்ட எதுவும் தேராதுன்னு விட்டிருக்கிறார். வெல்டன் பஷீர்

பாலிசி ரசீது கையில் வந்ததும் பஷீருக்கு கிடைத்த திருப்தியை வார்த்தையில் விவரிக்க இயலாது

மாசத்துக்கு 10-20 ஆயிரம் இன்சூரன்ஸில் “முதலீடு” செய்வதற்கு பதில் 1600 ரூபாய்க்கு பாலிசி, மிச்சம் ஒரு பத்தாயிரத்தை எஸ் ஐ பி முதலீடு செய்து வந்தால் பஷீருக்கு 65 வயது ஆகும் போது 4-5 கோடி ரூபாய் கையில் இருக்க வாய்ப்பு மிக அதிகம்.

பஷீர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்… நீங்க எல்லாம் வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசிகள் இத்தகைய நிலைமையில் உங்களை வச்சிருக்கான்னு யோசிங்க, இல்லைனா அப்புறம் அந்த பாலிசிகளை ஏன் நீங்க இன்னமும் வச்சிருக்கீங்கன்னு யோசிங்க.

வங்கிகளிலும் ஆல்கஹால் கம்பெனிகளிலும் முதலீடு செய்யாத மியூச்சுவல் ஃபண்ட்.

நெறய முஸ்லிம் நண்பர்கள் வங்கிகளிலும் ஆல்கஹால் கம்பெனிகளிலும் முதலீடு செய்யாத மியூச்சுவல் ஃபண்ட் இருந்தாச் சொல்லுங்கன்னு கேட்டிருந்தாங்க… தேடிப்பார்த்ததில் இது ஒண்ணுதான் என் கண்ணில் பட்டது.

இதுக்கு ஒரு மார்க்கெட் இருப்பதைக் கண்டறிந்து டாடா நிறுவனம் ஷரியா சட்டப்படி செயல்படும் கம்பெனிகளில் முதலீடு செய்கிறது. இந்த ஃபண்டின் பெயர் டாடா எதிகல் ஃபண்ட். கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 10% வளர்ச்சி கண்டிருக்கு. மாருதி சுசுகியில் 8% ஹிந்துஸ்தன் லீவரில் 6%க்கும் மேல் முதலீடு செய்துள்ளது… மத்த நிறுவனங்களில் 2-3% மட்டும் வெயிட்டேஜ்… ஃபண்டின் செயல்திறன் சுமார்தான் என்றாலும் வங்கிகள் எவற்றிலும் முதலீடு செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு இவ்வளவுதான் செய்ய இயலும்.

ஷரியா விதிகளையும் மீறக்கூடாது, மீயூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யணும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.

http://www.tatamutualfund.com/our-funds/equity/diversified/tata-ethical-fund?fbclid=IwAR1DQooWBAKnwJLVYE9IvhQNpkQpfENJr3USxReFp3WB4ousSIDaTFDxNVY

Disclaimer: I am not a professional financial advisor – certified or otherwise

The purpose of this post is purely informational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals, consult a financial advisor before investing.

மியூச்சுவல் ஃபண்டில் டைரக்ட், ரெகுலர் இன்னபிற

மியூச்சுவல் ஃபண்ட்களில் ரெகுலர், டைரக்டின் வித்தியாசம் மற்றும் NAV (Net Asset Value) குறித்து 
ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் – 2002 ம் ஆண்டு முதல் இருக்கும் ஒரு லார்ஜ் கேப் ஃபண்ட், இதன் நான்கு விதமான NAV கள் 
ரெகுலர் க்ரோத் மோடில் NAV 226 ரூபாய்
ரெகுலர் டிவிடெண்ட் மோடில் NAV 26 ரூபாய்
டைரக்ட் க்ரோத் மோடில் NAV 240 ரூபாய்
டைரக்ட் டிவிடெண்ட் மோடில் NAV 53 ரூபாய்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு அதிலேருந்து மாதாந்திரச் செலவுக்கு பணம் தேவைப்படுவோர் டிவிடெண்ட் மோட் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு அவ்வப்போது டிவிடெண்ட் வருமானம் கிடைக்கும் 
எதிர்காலத்துக்காக சேமிக்கிறேன், இப்போதைக்கு இதிலேருந்து பணம் தேவையில்லை என்போர் க்ரோத் மோட் தெரிவு செய்தால், டிவிடெண்ட் பணமும் இதே திட்டத்தில் முதலீடு செய்யப்படும். அது கூட்டு வட்டி போல செயல்பட்டு 10-15 வருடங்கள் கழித்து ஒரு பெரிய தொகையாக இருக்கும். இவ்வகையினர் க்ரோத் மோட் தேர்ந்தெடுக்கலாம்.

இது சுலபமான தெரிவு. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பர்களில் பலருக்கும் புரியாத விசயம் ரெகுலர் மற்றும் டைரக்ட் தெரிவு.

இப்ப ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் உதாரணத்துக்கு வருவோம். ஒருத்தர் இதை யார் உதவியும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய விரும்புகிறார். ஒரு ஏஜெண்ட் இவரிடம் அதே ஃபண்ட் அதே யூனிட் – ரெகுலர் மோட்ல சீப்பா 226 ரூபாய்க்கு நான் வாங்கித் தர்றேன், நீங்க நேரடியா டைரக்ட் மோட்ல வாங்கினா ஒரு யூனிட்டுக்கு 240 ரூபாய் கொடுக்கணும்னு சொல்றார். மேலோட்டமாகப் பார்க்கையில் சரியென்றே தோணும். இப்படித்தான் பல பேர் தேவையின்றி ரெகுலர் மோடில் பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்

The formula for NAV. We calculate the NAV of a mutual fund by dividing the total net assets by the total number of units issued. To get the total net assets of a fund, subtract any liabilities from the current value of the mutual fund’s assets and then divide the figure by the total number of units outstanding.. The value of all units of a mutual fund portfolio are calculated on a daily basis, from this all expenses are then subtracted.

இப்படித்தான் மியூச்சுவல் ஃபண்டின் NAV கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஃபண்டிலும் முதலீடு செய்ய ரெகுலர், டைரக்ட் என்று இரு வழிகள் உள்ளன. இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒரே ஒரு வித்தியாசம்தான் அது கட்டணம். பொதுவா இவை இரண்டுக்கும் 0.5 % முதல் 1% வரை கட்டணத்தில் வித்தியாசம் இருக்கும். ரெகுலர் திட்டத்துக்கு 2% எக்ஸ்பென்ஸ் ரேஷியோன்னா டைரக்ட் திட்டத்துக்கு 1% அல்லது 1.25% இருக்கும். இந்த டிஃபரன்ஸ் அமவுண்ட் முதலீட்டு ஆலோசகர்களுக்கு கமிசன் தருவதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வைத்துள்ளன.

ரமேஷ், சுரேஷ் இருவரும் இந்த ஃபண்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வைத்திருக்காங்கன்னு வச்சிக்குவோம், ரமேஷ் ஒரு யூனிட்டை 240 ரூபாய் கொடுத்து வான்கினாலும் அவர் தரும் கட்டணம் 1.17% மட்டுமே.

சுரேஷ் ஒரு யூனிட்டை 226 ரூபாய்க்கே வாங்கினாலும் அவர் தரும் கட்டணம் 1.97%

The expense ratio of a stock or asset fund is the total percentage of fund assets used for administrative, management, advertising , and all other expenses. An expense ratio of 1% per annum means that each year 1% of the fund’s total assets will be used to cover expenses.

ஒவ்வொரு ஆண்டும் இருவரின் போர்ட்ஃபோலியோவின் மதிப்பில் 1.17% அல்லது 1.97% மியூச்சுல் ஃப்ண்ட் கம்பெனி கட்டணமாக எடுத்துக் கொள்ளும். ரமேஷின் கட்டணம் கம்மியா இருப்பதால், அவருடைய முதலீட்டில் அதிக அளவு பங்குகள் வாங்க முடியும், ஒவ்வொரு ஆண்டும் அவர் கம்மியாக கட்டணம் செலுத்துவதால் 20 ஆண்டுகள் கழித்து அவரிடம் சுரேஷை விட கணிசமான அளவு பணம் அதிகம் இருக்கும்.

2012 வரை இந்தியாவில் ரெகுலர் மட்டுமே இருந்தது. 1 January 2013 அன்று முதல் DIRECT Fundகள் அறிமுகப்படுத்தப்பட்டன . 1 January 2013 அன்று DIRECT fund மற்றும் REGULAR fund ன் NAV ம் சமமாக இருந்திருக்கும்

டைரக்ட் அறிமுகம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . DIRECT ல் இதுவரை செய்யப்பட்டு செலவு குறைவு என்பதால் NAVயும் அதிகமாகயிருக்கு. எதிர்காலத்திலும் இது தொடரும்.. DIRECT அதிக RETURNS கொடுக்கும் .

யார் ரெகுலர் வாங்கணும்? யார் டைரக்ட் வாங்கணும்?

மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை குறித்தெல்லாம் எதுவும் தெரியாது என்பதால் ஒரு ஆலோசகரை நாடி அவர் உதவியுடன் ஃபண்ட்களை தெரிவு செய்து முதலீடு செய்வோர் – ஒண்ணு அவருக்கு இவங்க கட்டணம் செலுத்தணும் அல்லது ரெகுலர் மோடில் முதலீடு செய்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவங்களிடமிருந்து அவர் பெற்றுக் கொள்ளக்கொள்ள வேண்டும். டாக்டர், வக்கீல் மாதிரி முதலீட்டு ஆலோசகரும் ஒரு ஃப்ரொபசனல் – அவருடைய பரிந்துரைக்கு பணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுத்தாக வேண்டும்

ஆலோசகர் உதவியின்றி நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தளத்திலோ அல்லது Karvy / CAMS போன்ற RTA’s (Registrar & Transfer Agents) இடம் முதலீடு செய்வோர் டைரக்ட் முறையில் முதலீடு செய்து அதிக பலனைப் பெறலாம்.

இவை தவிர “எல்லா ஃபண்டையும் ஒரே லாகின்ல பாக்கலாம்” “போன் ஆப்ல பாக்கலாம்” போன்ற அற்ப காரணங்களுக்காக பல ப்ளாட்ஃபார்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர் – ஃபண்ட் ஹவுஸ்களில் நேரடி முதலீடு, Karvy / CAMS போன்ற RTA’s (Registrar & Transfer Agents) வழியாக முதலீடு தவிர வேறெந்த வழியும் தேவையில்லை என்பது என் கருத்து. அப்படியே அவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால், டைரக்ட் மோட் இருக்கான்னு பாருங்க, இல்லேன்னா அவற்றைத் தவிருங்க. சில Platform டைரக்ட் மோட் தருவாங்க, அதிலேருந்து அவர்களுக்கு வருமானம் ஏதும் கிடைக்காது, ஆனா உங்களைப்பற்றிய அனைத்து தகவல்களும் அவர்களுக்கு கிடைத்துவிடும் – அதை வைத்து அவர்கள் பல விதங்களில் சம்பாதிப்பார்கள்

ஆலோசகர் இல்லேன்னாலும் தெரியாம ரெகுலர் மோட் தெரிவு செய்து சில ஆண்டுகளால முதலீடு செய்து வருகிறேன், இதை எப்படி சரி செய்வது என்று கேட்போருக்காக

ரெகுலர்லேருந்து டைரக்டுக்கு மாற முடியாது, ஏற்கெனவே தவறு செய்து விட்டதால் அதைச் சரி செய்ய தலையைத் சுற்றித்தான் மூக்கைத் தொட்டாக வேண்டும்.

1. முதலில் ரெகுலர் மோடில் செய்து வரும் எஸ் ஐ பி யை நிறுத்துங்க

2. அதே ஃபண்ட்களில் புதிதாக டைரக்ட் மோடில் எஸ் ஐ பி துவங்குங்க. இதன் மூலம் இனி செய்யும் முதலீடுகளாவது குறைந்த கட்டணித்தில் இருக்கும்

3. எஸ் ஐ பியை நிறுத்தி விட்டாலும் உங்க போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பணத்துக்கு ஓவ்வொரு ஆண்டும் ரெகுலர் கட்டணம் போய்க்கொண்டுதான் இருக்கும். இதைத் தவிர்க்க பழைய போர்ட்ஃபோலியோவிலிந்து புதிய போர்ட்ஃபோலியோவுக்கு STP (Systematic Transfer Plan) கொடுங்க. உதாரணத்துக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் ரெகுலர் யூனிட்கள் விற்கப்பட்டு அன்றே அதே தொகைக்கு டைரக்ட் போர்ட்ஃபோலியோவில் யூனிட்கள் வாங்கப்படும். 
விற்கப்படும் யூனிட்களை விட வாங்கும் யூனிட்கள் கம்மியா இருக்கேன்னு கவலை வேண்டாம், நீண்ட கால முதலீட்டில் இது அதிக பலன் தரும்.

STP ஆரம்பிக்கும் முன் நீங்க எப்ப முதலீடு செய்ய ஆரம்பிச்சீங்க, இப்ப வெளியேறினா Exit load & Tax Implications என்னன்னு பாத்துட்டு அப்புறமா செய்யுங்க. இப்ப STP கட்டணம் அல்லது Short Term Capital Gain அல்லது ரெண்டும் வரும்னா, அவை முடியும் வரை காத்திருந்து பிறகு STP செய்யுங்க

காப்பீடும் முதலீடும்

insurance vs investmentயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஐந்தறிவு படைத்த யானை கூட தான் இறக்கும் போது அதன் மதிப்புக்கு ஈடான தந்தத்தை விட்டுச் செல்கிறது.

நீங்க சம்பாதிக்கும் பொதே திடீரென இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு என்ன விட்டுட்டுப் போகறீங்க? ஈராண்டு செலவுக்கு வரும் எண்டோமெண்ட் பாலிசிகளையா அல்லது யூஸ்லெஸ் யூலிப் பாலிசிகளையா அல்லது குடும்பத்தைப் பாதுகாக்கும் டெர்ம் பாலிசிகளையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

”நல்ல முதலீடு”, வருமானவரி சேமிக்கும் வழி, புள்ளைங்க எதிர்காலத்துக்கு அவங்க பேர்ல பாலிசி போடுங்க – போன்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி பாலிசி போட்டால் கஷ்டப்படப்போவது நீங்களல்ல, உங்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படப்போவது உங்க குடும்பம்தான்.

எண்டோமெண்ட் பாலிசி போடச் சொல்லி வற்புறுத்தறவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி -இதுல காப்பீடு எவ்வளவுன்னு கேளுங்க – ? ஒருத்தரோட சம்பளம் மாதம் 50,000 ரூபாய், அதில் அவரால் 5% க்கு மேல் காப்பீட்டுக்கு செலவு செய்ய முடியாது அதாவது மாதம் 2500ரூபாய் – இதில் எவ்வளவு எண்டோமெண்ட் கவர் எடுக்க முடியும் தெரியுமா? தோராயமாக 7,5,000 மட்டுமே (35 வயது, 30 ஆண்டுகள் ஜீவன் ஆனந்த்) – நீங்கள் உயிரோடு இருந்தால் மாசம் 50,000 ரூபாய் கொண்டு வருவீங்க, அதுவும் உயர்ந்துகிட்டே போகும். திடீர்னு நீங்க இறந்தா வெறும் 7.5 லட்சத்தை வச்சிக்கிட்டு உங்க குடும்பம் எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும்?

27,000 ரூபாய்க்கு எவ்வளவு டெர்ம் பாலிசி எடுக்க முடியும் தெரியுமா? 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எல் ஐ சியில் எடுக்கலாம். தனியார் நிறுவனத்தில் எடுத்தால் கிட்டத்தட்ட 15-18 ஆயிரம் ரூபாய் ப்ரீமியத்துக்கே இவ்வளவு கவரேஜ் எடுக்கலாம். அதாவது உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு. இதை வச்சிக்கிட்டு உங்க பிள்ளைகள் தலையெடுக்கும் வரை கௌரம்வமா உங்க குடும்பம் வாழ்ந்து விடமுடியும்

உங்க இழப்பை ஈடுசெய்ய முடியாது, ஆனால் நீங்க ஈட்டும் வருமானத்தை கண்டிப்பாக ஈடுசெய்ய முடியும், ஆனால் அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே முடியும்.

இனியாவது ஆயுள் காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்துப் பார்க்க ஆரம்பிங்க. காப்பீட்டு நிறுவன எண்டோமெண்ட் பாலிசிகள் 5-6% மிக அதிகபட்சமாக 7% வளர்ச்சி கிடைக்கலாம், அதற்கு மேல் தரக்கூடிய திட்டம் இல்லை. செல்வமகள் போன்ற அரசின் திட்டங்களில் கூட இதை விட அதிக வட்டி கிடைக்கிறது. நீண்ட கால பங்குச் சந்தை முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட்கள்) 10-15%க்கும் மேல் வளர்ச்சி தந்துள்ளன. சலூன்ல போய் சாம்பார் பொடி கேக்கமாட்டீங்கல்ல, அது போல வங்கிகளில் டெபாசிட், கடன் பத்தி மட்டும் பேசுங்க, காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு பத்தி மட்டும் பேசுங்க, முதலீட்டுக்கு முதலீட்டு நிறுவனங்களை அணுகுங்க

LIC யின் பங்குச்சந்தை முதலீடுகள்

டெர்ம் பாலிசியைத் தவிர வேறெந்த ஆயுள் காப்பீட்டையும் வாங்காதீங்கன்னு எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் பாலிசி நல்லாருக்குன்னு சொல்றாங்களே? ஏஜெண்ட் இதுல போட்டா நல்ல ரிட்டர்ன்ஸ் இருக்கும்னு சொல்றாரே? வங்கியில் இந்த இன்சூரன்ஸ் பால்சியில் 8% கேரண்டீட் ரிட்டர்னு சொல்றாங்களே? இது நல்ல முதலீடான்னு கேட்பது நிற்கவேயில்லை

நேரடி / மியூச்சுவல் ஃபண்ட் வழிப் பங்குச் சந்தை முதலீடு எல்லாம் ரிஸ்க்குங்க, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் எண்டோமெண்ட் / ஹோல் லைஃப் பாலிசியில் முதலீடு செய்தா கேரண்டீட் ரிட்டர்ன் கிடைக்கும்னு நினைக்கறாங்க பலபேர்.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் இரு கேள்விகள்

1. எந்த எண்டோமெண்ட் பாலிசிலியிலும் ரிட்டர்ன்ஸ் குறித்து எவ்வித கேரண்டியும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. வங்கியில் நீங்கள் வைக்கும் பணம்தான் (சேமிப்புக் கணக்கிலோ வைப்பு நிதியிலோ) அதன் மூலப்பொருள். 4 முதல் 7% வட்டிக்கு வங்கி உங்களிடம் பணம் வாங்கி அதை 9-18 % வட்டிக்கு விற்கிறது. உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி கணக்கில் வைத்தால் வங்கி தோராயமாக 4- 5 லட்ச ரூபாயை Fractional Reserve Lending மூலம் கடன் கொடுக்கும். இதன் மூலம் வங்கி வருமானம் பெறுகிறது. பணத்தை மூலதனமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தாத காப்பீட்டு நிறுவனம் எப்படி வங்கியை விட அதிக வட்டி தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியாவை பொருத்த வரை எல் ஐ சி தான் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். அது தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சார், ஷேர்லாம் ரிஸ்க் – மொத்த முதலும் கோவிந்தாவாகிடும், பாலிசில போட்டீங்கன்னா கேரண்டீட் ரிட்டர்ன் என்று சொல்லி ஏஜெண்ட் ஜீவன் ஆனந்துக்கு வாங்கும் ப்ரீமியத்தை எல் ஐ சி பங்குச் சந்தையிலும் அரசு கடன் பத்திரன்களிலும்தான் முதலீடு செய்கிறது. அவற்றிலிருந்து எல் ஐ சி அள்ளி எடுக்கும் வருமானத்தில்தான் உங்களுக்கான போனஸ் கிள்ளித் தரப்படுகிறது.

இவ்வாறு பல ஆண்டுகளாக எல் ஐ சி முதலீடு செய்து வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

(மே 2018 வரையிலான விவரங்கள்)

நேரடிப் பங்குகளில் முதலீடு – 4.6 லட்சம் கோடிகள்
ப்ரெஃபென்ஸ் ஷேர் 59 ஆயிரம் கோடிகள்
மியூச்சுவல் ஃபண்ட்கள் 25 ஆயிரம் கோடிகள்

அரசு கடன் பத்திரங்கள் 1.6 லட்சம் கோடி
பிர கடன் பத்திரங்கள் 25 ஆயிரம் கோடி
Debentures / Bonds 78 ஆயிரம் கோடி

2018 ல் மட்டும் எல் ஐ சி பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை 58,000 ஆயிரம் கோடி.

இதையெல்லாம் கூட்டி மொத்தமா எவ்வளவு எல் ஐ சி வச்சிருக்குன்னு பாத்துக்கோங்க

எல் ஐ சி முதலீடு செய்திருக்கும் பங்குகள், அரசின் கடன் பத்திரங்கள் அனைத்திலும் நாமும் நேரடியாகவோ மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமோ முதலீடு செய்ய முடியும். எல் ஐ சி யின் போர்ட்ஃபோலியோ திறமையாக நிர்வகிக்கப் படுகிறது என்பது உண்மையே – ஆனால் அதே அளவு திறமையுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.

நொடித்துப் போன நிறுவனங்களை எல் ஐ சியின் தலையில் கட்டுவதை மத்திய அரசு ஒரு பழக்கமாவே வச்சிருக்கு. அது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்கள் எல் ஐ சியை விட சிறப்பாக போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியும்

எல் ஐ சியின் போர்ட்ஃபோலியோ எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் எண்டோமெண்ட் பாலிசிகளில் 5-6% க்கு மேல் ரிட்டர்ன் கிடைக்கப் போவதில்லை. எல்லோரும் பயமுறுத்தறா மாதிரி பங்குச் சந்தை மொத்தமா வீழ்ந்தால் காப்பீடு நிறுவனங்களும் போனஸ் வழங்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்களில் 1-2% கட்டணம் போக மிச்சத்தொகை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது, வளர்ச்சியின் முழு பெனிஃபிட்டும் உங்களுக்கே

டெர்ம் பாலிசி தவிர மற்ற பாலிசிகள் தரும் காப்பிடும் பிரயோசனப்படாது முதலீடாகவும் அவை மோசமானவை என ஏன் சொல்கிறேன்

35 வயதுடைய ஒருத்தர் 30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கறார்னு வச்சிக்குவோம். அவர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்.

ஜீவன் ஆனந்த் 35 வயது, 30 ஆண்டுகாலம் – இதுக்கு ப்ரீமியம் 1.9 லட்ச ரூபாய்

5 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் 2 லட்ச ருபாய் ப்ரீமியம் கட்டவே முடியாது

அதே ஆள் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்தால் (35 வயது, 30 ஆண்டுகள்) அதற்கு ப்ரீமியம் வெறும் 11,562 ரூபாய்கள்தான். அதாவது ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய்கள் மட்டுமே. இதை அவரால் சுலபமாக எடுக்க முடியும்.

இப்ப முதலீட்டுக்கு வருவோம். ஜீவன் ஆனந்த் பாலிசியின் முடிவில் கிடைக்கக் கூடிய தொகை 1.8 கோடி, அப்புறமும் காப்பீடு தொடரும், பாலிசிதாரர் இறக்கும் போது ஒரு 50 லட்சம் கிடைக்கும்.
அதற்கு பதிலாக 12 ஆயிரத்துக்கு எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்ச 178,000 ஐ மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் 30 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் உங்களிடம் 5 கோடி ரூபாய்கள் இருக்க நல்ல வாய்ப்புண்டு

இனியாவது உங்க ஓய்வு கால சேமிப்புக்கு எண்டோமெண்ட் பாலிசிகளை நம்பாமல் எல் ஐ சியே நம்பும் பங்குச் சந்தை முதலீடுகளை தேர்ந்தெடுங்கள்

எல் ஐ சியின் முதலீடு குறித்த தகவல்கள் 4/9/2018 அன்று மணிகண்ட்ரோல் தளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டன

ELSS (Equity Linked Savings Scheme) அப்படின்னா என்ன?

Image may contain: textULIP, ELSS மற்றும் வருமானவரி சேமிப்பு

இந்தப்படம் சொல்லும் சில கருத்துகள்

1. யூ எல் ஐ பி திட்டம் மோசமானது.
2. அதை மியூச்சவல் ஃபண்ட் முதலீடு + இலவச காப்பீட்டு என்பது போல் சொல்லப்படுவதை நம்பி முதலீடு செய்யக்கூடாது
3. வங்கிக்குப் போனால் சேமிப்பு, கடன், லாக்கர் இவை குறித்து மட்டும் பேசி விட்டு வந்து விட வேண்டும். வங்கியில் யாராவது முதலீடு குறித்தோ காப்பீடு குறித்தோ பேசினால், காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ஓடி வந்து விட வேண்டும்.

சரி யூ எல் ஐ பி மோசம், அப்ப ELSS?

ELSS (Equity Linked Savings Scheme) அப்படின்னா என்ன? அதில் எல்லாரும் முதலீடு செய்யலாமா?

ELSS என்பது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் போன்று மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் வகை.
இவ்வகை ஃபண்ட்கள் பாண்ட் எனும் கடன் பத்திரங்களில் இல்லாமல் ஈக்விட்டி எனும் பங்குச் சந்தை முதலீட்டை அடிப்படையாகக் கொண்டவை (ஈக்விட்டி ஃபண்ட்ஸ்)

நெறய ஈக்விட்டி ஃபண்ட்ஸ் இருக்கே, இதிலென்ன வித்தியாசம்?
இரு முக்கிய வித்தியாசங்கள் உள்ளன – 1. இதில் செய்யும் முதலீட்டுக்கு செக்சன் 80சியின் கீழ் வரி விலக்கு உண்டு (மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகளுக்கு கிடையாது) 2. இதில் செய்யும் முதலீட்டை 3 ஆண்டுகளுக்கு திரும்ப எடுக்க முடியாது. பொதுவா மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இம்மாதிரி நிபந்தனை கிடையாது. ஓராண்டுக்குள் எடுத்தால் 1% கட்டணம் இருக்கக் கூடும் ஆனால் எடுக்கவே முடியாது என்று இருக்காது.

ELSS இன் சாதகங்கள் :
1. வருமான வரி விலக்கு : இதில் செய்யும் முதலீட்டுக்கு செக்சன் 80சி யில் விலக்கு உண்டு

2. மூன்றாண்டுகள் லாக் இன் இருப்பதால் ஃபண்ட் மேனேஜருக்கு சுதந்திரம் அதிகம். முதலீட்டாளர் எடுக்கக்கூடும் என்று எப்போதும் நிறைய கேஷ் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாள் முதலீட்டுக்கு உகந்த பங்குகளை அவர் வாங்க முடியும்.

ELSS இன் பாதகங்கள்:
1. மூன்றாண்டுகள் முதலீட்டை எடுக்க முடியாது

2. எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு முதலீட்டுக்கும் முன்றாண்டு முடிந்த பின் தான் பணத்தை எடுக்க முடியும். உதாரணத்துக்கு வேறொரு ஃபண்டில் ஜனவரி 2016 முதல் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்த பணத்தை இப்போது மொத்தமாக எடுக்க முடியும், ஆனால் ELSS இல் ஜனவரி 2016 இல் முதலீடு செய்ததை மட்டுமே இப்போது எடுக்க முடியும் மார்ச் 2016 இல் முதலீடு செய்ததை ஏப்ரல் 2019இல் தான் எடுக்க முடியும்.

ELSS யாருக்கு ?
இது ஒரு நல்ல திட்டம் அதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் இது அனைவருக்குமானதல்ல

ஆண்டுக்கு 5 -6 லட்சரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்து, செக்சன் 80சியில் 1.5 லட்சம் விலக்கு பெறும் அளவுக்கு பிற முதலீடுகள் இல்லாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம்

ஏற்கெனவே இன்சூரன்ஸ் ப்ரீமியம், சுகன்ய சம்ரிதி, பி பி எஃப் போன்றவற்றில் 1.5 லட்சம் முதலீடு செய்து விட்டிருந்தால் இதில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் வருமான வரி விலக்கு இருக்காது

80சி யில் இடம்பெறக்கூடிய முதலீடுகள் 1 லட்சம் இருந்தால் மிச்சம் 50 ஆயிரம் மட்டும் இதில் முதலீடு செய்யலாம்

வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள், 80சியின் முழுமைக்கும் வேறு முதலீடுகள் வைத்திருப்போர், ELSS இல் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். அதற்கு பதில் Flexibility கொண்ட மற்ற ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யலாம்.

ELSS இல் ரிட்டர்ன்ஸ் நிச்சயம் என்றொரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது நிச்சயம் தவறு. மற்ற அனைத்து பங்குச் சந்தை முதலீடுகளைப் போல இதிலும் ரிஸ்க் உண்டு. உதாரணத்துக்கு ரிலையன்ஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் கடந்த ஆண்டு 24% வீழ்ச்சியடந்துள்ளது. 2017 இறுதியில் அக்கவுண்டில் இருந்த 10 லட்ச ரூபாய் 2018 இறுதியில் 7.6 லட்சமாக குறைந்திருக்கும். அது மீண்டு வர வாய்ப்புள்ளது என்றாலும், ELSS ஃபண்ட்கள் ஸ்திரமானவை என்பது வெறும் மாயையே.

இந்தக் கேட்டகரியில் எனக்குப் பிடித்த ஃபண்ட்கள் Axis Long Term Equity Fund – Direct Plan & Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct Plan – இதன் மூலம் நான் இவற்றைப் பரிந்துரைக்கவில்லை, எனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடித்திருந்தால், சுயமாக முடிவெடுத்து முதலீடு செய்யுங்கள்.

வங்கி சேமிப்புக் கணக்குகளில் அதிக பணத்தை வைக்கலாமா ?

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டியை மறைமுகமாகக் குறைத்துள்ளது. இன்று முதல் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கணக்குகளுக்கு வட்டி 3.5% லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது. இது எல்லாருக்கும் என மாற்றப்படும் எனவும் ஏனைய வங்கிகளும் விரைவில் வட்டிக் குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன்

இனியாவது வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணத்தை முடக்காதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அதில் பேலன்ஸ் வைத்து விட்டு மிச்சத்தை Liquid Mutual Funds இலோ அல்லது குறைந்த பட்சம் வைப்பு நிதியிலோ வையுங்கள்.

இந்நடவடிக்கை எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் வட்டி விகிதம் இன்ஃப்ளேசனை ஒட்டியே இருக்கும். இன்ஃப்ளேசன் குறையும் போது வட்டி குறைவதும் இயல்பே. மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர வட்டியை குறைத்தே ஆகவேண்டும். வங்கி வைப்பு நிதிக்கான வட்டி 5 – 6% லெவலுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சாதக பாதகங்கள் நீங்க்ள் இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். நீங்க டெபாசிட் செய்யும் இடத்தில் இருந்தால் இது உங்களைப் பாதிக்கும். வீட்டுக் கடனோ தொழில் கடனோ வாங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இன்ஃப்ளேசனைத் தாண்டி அதிக அளவு வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் தரக்கூடியது பங்குச் சந்தை முதலீடுகளே. ஏற்கெனவே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணவரத்து அதிகமா இருக்கு. வங்கி வட்டி விகிதம் குறையும் போது அது இன்னும் அதிகமாகும்..

Mutual Fund: “Growth” or “Dividend”

நண்பர்கள் பலரும் கேட்கும் கேள்வி. Mutual Fundல் முதலீடு செய்யும் பொழுது, எந்த விருப்பத்தை தேர்வு செய்யனும். “Growth” or “Dividend” ?.

பொதுவாக சொன்னால் -> எதிர் காலத்திற்க்கு + தொடர் சேமிப்புக்கு – GROWTH .

செய்த முதலீட்டிலிருந்து தொடர் வருமானம் வருவதற்க்கு DIVIDEND.

மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது – Mutual Fundகளில் Dividend என்பது பங்குச்சந்தையிலிருப்பது போல லாபத்தில் ஒரு பங்கல்ல. இருக்கும் பணத்திலிருந்து எடுத்துக்கொடுப்பது. அவ்வளவு தான். 
எளிய உதாரணம்(எந்த வரியையும் கணக்கில் கொள்ளவில்லை): 
NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம் . 
GROWTH -> 10(Unit) * 1,000(NAV) = 10,000 .
DIVIDEND -> 10(Unit) * 1,000(NAV) = 10,000 .
ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் Dividend மட்டும் 500 ரூபாய் கிடைத்திருக்கு.
Dividendற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை 
GROWTH -> 10(Unit) * 1,000(NAV) = 10,000
DIVIDEND -> 10(Unit) * 950 (NAV) = 9,500
மேற்க்கண்ட உதாரணத்தை படித்தவுடன் , இதென்னங்க அநியாயமாயிருக்கு, நம்ம பணத்தை எடுத்து நமக்கே கொடுக்கறதுக்கு பேரு “Dividend”யா என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் Mutual fund dividend யை சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்..
அடிப்படையில் Mutual Fund முதலீட்டை இருவகையாகப் பிரிக்கலாம் .
1. Equity – பங்கு சார்ந்த முதலீடு (65% அல்லது அதற்க்கு மேல் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்க வேண்டும்)
https://www.amfiindia.com/…/knowledge-cen…/equity-funds.html
2. Debt – கடன் சார்ந்த முதலீடு. கார்ப்பரேட் மற்றும் அரசு பத்திரங்கள், பெருநிறுவன கடன் பத்திரங்கள் நிலையான வருவாய் முதலீடுகள் (
(65% அல்லது அதற்க்கு மேல் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாதவை அனைத்தும் )
https://www.amfiindia.com/i…/knowledge-center/debt-fund.html
எதுக்கு இப்ப Equity மற்றும் Debtன்னு கேட்கறீங்களா .?இதை பொறுத்து தான் Dividendக்கான DDT(Dividend Distribution Tax) வரி விதிப்பு கணக்கீடு செய்வாங்க.
முதலில் நாம பார்க்கப்போவது – MF – DEBT DIVIDEND – DDT(Dividend Distribution Tax) – 28.84 per cent (25 per cent tax + 12 per cent surcharge + 3 per cent cess ) .
—————————————–
10%, 20% வருமான வரி வரம்பிலிருப்போர்:
NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம். ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் Dividendற்க்கு மட்டும் யூனிட்ற்க்கு 50 ரூபாய் தர Fund House முடிவெடுக்குது .
DDT(28.84%) = ஒரு யூனிட்க்கு 14.42 வரி பிடித்தம் செய்யப்படும். 
மொத்த DDT தொகை = 10 * 14.42 = 144.20
நமக்கு கிடைக்கும் Dividend => 10 * 35.58 = 355.80.
Dividendற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை
DIVIDEND -> 10(Unit) * 950 (NAV) = 9,500
மகிழ்ச்சியான செய்தி –> கிடைக்கும் DIVIDENDற்க்கு வரியில்லை. அதுதான் DDT பேர்ல சுளையாக 28.84% போய்டுச்சே .. அதுக்கப்புறம் எதுக்கு வரி என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் DEBT – Mutual fund dividend யை தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்..
Mutual Fund – DEBT டிவிடெண்ட்ல் DDT மிக அதிகமென்பதால் இதில் முதலீடு செய்வதற்க்கு பதிலாக Exit load அல்லாத GROWTH fund ல் முதலீடு செய்து SWP அல்லது தேவைப்படும் பொழுது REDEEM செய்வதே சிறப்பானது.
இதனால் வரி குறையும் , மேலும் DEBT Mutual Fund யை மூன்று வருடத்திற்க்கு மேல் வைத்திருந்தால் Indexation benefit கிடைக்கும்.

MF – EQUITY DIVIDEND 
—————————-
MF – EQUITY DIVIDEND – DDT(Dividend Distribution Tax) – 11.648 per cent (Including surcharge and Cess) . NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம். ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் Dividendற்க்கு மட்டும் யூனிட்டிற்க்கு 50 ரூபாய் தர Fund House முடிவெடுக்குது .
DDT(11.648%) = ஒரு யூனிட்க்கு 5.824 வரி பிடித்தம் செய்யப்படும். 
மொத்த DDT தொகை = 10 * 5.824 = 58.24
நமக்கு கிடைக்கும் Dividend => 10 * 44.176 = 441.76.
Dividendற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை
DIVIDEND -> 10(Unit) * 950 (NAV) = 9,500
மகிழ்ச்சியான செய்தி –> கிடைக்கும் DIVIDENDற்க்கு வரியில்லை. அதுதான் DDT பேர்ல 11.648% போய்டுச்சே .. அதுக்கப்புறம் எதுக்கு வரி என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் EQUITY – Mutual fund dividend யை புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்..
—————————-
MF – EQUITY GROWTH 
—————————-
NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம். ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் 500 ரூபாயை தேவைக்காக எடுக்கிறோமெனில்(REDEEM)
நமக்கு கிடைக்கும் தொகை => 0.5 யூனிட் * 1000 = 500
REDEEMற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை
9.5(Unit) * 1000 (NAV) = 9,500
வருமான வரி – வரியில்லை , செய்த முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்காததால் வரியில்லை.
———————————————————————————-
லாபம் கிடைக்கும் பட்சத்தில்,
Mutual Fund – EQUITY GROWTH fundல் முதலீடு செய்து ஒரு வருடத்திற்க்கு முன் பணத்தை எடுக்கும் பொழுது லாபத்திற்க்கான வருமான வரி (Short term capital gains) -> 15.6% (15% Tax + 4% Surcharge)
Mutual Fund – EQUITY GROWTH fundல் முதலீடு செய்து ஒரு வருடத்திற்க்கு பிறகு பணத்தை எடுக்கும் பொழுது லாபத்திற்க்கான வருமான வரி (Long term capital gains) -> லாபம் ஒரு லட்சம் வரைக்கும் வரியில்லை(Equity மொத்த லாபம்) + ஒரு லட்சத்திற்க்கு மேற்பட்ட லாபத்திற்கு மட்டும் 10.4% (10% Tax + 4% Surcharge)
வருமான வரியின் அடிப்படையில் பார்க்கும் பொழுது குறுகிய கால முதலீட்டிற்க்கு Dividendயின் DDT வரி குறைவு என்றாலும் Equityயில் குறுகிய கால முதலீடு என்பது அதிக RISKயுடையது. முதலீடே குறைந்தால் DIVIDEND யால் அதிக நட்டம் ஏற்படும். EQUITY ல் நீண்ட கால முதலீட்டின் வழி RISKயை குறைக்கலாம் , முதலீட்டைப்பெருக்கலாம்.
Equityயில் நீண்ட கால முதலீடே சிறப்பானது. எனவே GROWTH யை தேர்ந்தெடுத்து கூட்டு வட்டியின் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்.

A Step in the right Direction

ஆசான் Va Nagappan இரு வாரங்களுக்கு முன்னர் இது பற்றிச் சொல்லும் போது அவரிடம் சொன்னேன் – இது SIP முறையின் முழு பலனை அடைய சிறந்த வழி என்று

SIP முறை என்பது ஒரு குறிப்பிட்ட ஃபண்டில் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து செலுத்தி வருவது. மாதா மாதம் பணம் செலுத்தலாம் என்பதை இதன் பயனாக மக்கள் பார்த்தாலும் உதன் உண்மையான பயன் Rupee Cost Average அடைவதேயாகும். அதாவது நாம் வாங்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் விலை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும், எஸ் ஐ பி மூலம் வாங்கும் போது we buy units at average cost. பொதுவா இது மாதம் ஒரு முறையோ இரு முறைகளோ வாங்கறா மாதிரியான வசதியை ஃபண்ட் ஹவுஸ்கள் வழங்கி வந்தன. எச் டி எஃப் சி 5, 10, 15, 20, 25 தேதிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கி வந்தது. தினசரி எஸ் ஐ பி என்பது எஸ் ஐ பி யின் முழு பலனையும் அடைய உதவும். மாதா மாதம் ஏற்ற இறக்கங்களை மட்டும் கவர் செய்யாமல் இனி தினசரி ஏற்ற இறக்கங்களின் பலனையும் இதன் மூலம் பெற முடியும்.

இனி வெறும் 500 ரூபாயிலிருந்து எஸ் பி ஐ முறையில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் வசதி

மாதம் 5000 ரூ எச் டி எஃப் சி ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் 1 3 7 10 13 16 19 22 25 28 தேதிகளில் என 10 முறை எஸ் ஐ பியில் 500 ரூ வீதம் முதலீடு செய்யலாம்

ஒரே ஃபண்டில் 15,000 ரூ முதலீடு செய்ய நினைப்பவர்கள் தினசரி 500 என்று மாதத்தின் 30 நாளும் முதலீடு செய்யலாம்.

எச் டி எஃப் சி யின் திட்டம் அடையும் வெற்றியைப் பொறுத்து மற்ற நிறுவனங்களும் இதை அறிமுகப் படுத்து என நினைக்கிறேன்.

http://www.businessworld.in/article/HDFC-Securities-Launches-Daily-SIP-/24-01-2018-138279/?fbclid=IwAR2rGgY8QRqQboTZ3Qi8x8_etO21DBetmSvzAnLf0adQTWGOjC6x1sPTqcw

Funds Overlapping

நண்பர் ஒருத்தர் அஞ்சு லார்ஜ்கேப் ஃபண்ட்களில் எஸ் ஐ பி போடணும், எந்தெந்த ஃபண்ட்ல போடலாம்னு கேட்டார்.

ஐபிஎல் ல டீம்களை வாங்கிப் போடலாம்னு போறீங்க, டாப் 5 பேட்ஸ்மென், டாப் 4 பௌலர்கள் எல்லா டீம்லயும் இருக்காங்க ரெண்டு முக்கியத்துவம் குறைவான ப்ளேயர்கள் மட்டுமே ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசம். எல்லோரும் ரன் அடிக்கறாங்க , சச்சினை ஓப்பனிங்கும் கோலியை ஒன் டவுனிலும், கடேசி அஞ்சு ஓவருக்கு பாண்ட்யாவையும் உபயோகிக்கும் டீம் அதிக ரன் அடிக்குது, மாத்தி உபயோகிக்கும் டீம் அதை விட கம்மியா ரன் சேர்க்குது… அப்ப நீங்க அஞ்சு டீம்லயும் 20% பங்கு வாங்குவீங்களா அல்லது அதிக ரன் அடிக்கும் & தொடர்ச்சியா வெற்றிகளை குவிக்கும் டீமை 100% வாங்குவீங்களான்னு கேட்டேன்… நான் என்ன தப்பாச் சொல்லிட்டேன்னு கோவிச்சிக்கிட்டு போயிட்டாருன்னு தெரியல!!!!

நம்மில் பல பேர் செய்யும் தவறு இது… 14 ஃபண்ட்கள் கொண்ட போர்ட்ஃபோலியோ எல்லாம் வச்சிருக்காங்க. அவற்றினுள் என்ன இருக்குன்னே பல பேருக்குத் தெரியறதில்ல. ஒரே கேட்டகரி ஃபண்ட்ஸ் ரெண்டுக்கு மேல முதலீடு பண்றதுக்கான முகாந்திரன் எனக்குத் தெரிஞ்சு எதுவும் இல்லை. Birla Sunlife Frontline Equity, Mirae Assets India opportunities இவ்விரு லார்ஜ் கேப் ஃபண்ட்ஸ் எடுத்துக்கிட்டா HDFC, HDFC Bank, ICICI Bank, ITC, L &T, Maruti, SBI, Indus Ind Bank, ITC என்று பல கம்பெனிகளின் பங்குகள் ரெண்டிலும் கணிசமா இருக்கு. இதைத்தான் ஒவர்லாப் என்று சொல்வாங்க.. இப்படி இருக்கும் பல ஃபண்ட்கள் ஐந்தில் 20% முதலீடு செய்வதற்கு பதில் ஒன்றிலோ ரெண்டிலோ மட்டும் முதலீடு செய்வது நலம்.