சில வருடங்களில் ஓய்வு பெறவுள்ள ஐம்பதுகளில் இருப்போர் எடுக்க வேண்டிய காப்பீட்டு அளவு.

காப்பீட்டின் அளவு ரொம்ப பெரிய சப்ஜெக்ட் – ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகர் க்ளையண்ட்டின் எல்லா விவரங்களையும் (வருமானம், செலவு, உடல்நிலை, சேமிப்பு, கடன் இன்னபிற) ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு என்ன மாதிரி லைஃப் ஸ்டைல் வேண்டும் என்றும் தெரிந்து கொண்டு (கிராமத்தில் அமைதியான வாழ்க்கை அல்லது உலகம் முழுதும் சுற்றும் ப்ளான் இன்னபிற) அதற்கு ஏற்றாற் போல காப்பீட்டை டிசைன் செய்யணும் (சம் அஸ்யூர்ட், காலம்) – இதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாச் செய்யும் அளவுக்கு அதுவும் இலவசமா செய்யும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை. அதனால் தான் பொதுவாக ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இன்றியமையாதது, 20 மடங்கு ஹெல்தியான காப்பீடு என்கிறேன், இது பெரும்பான்மையானவர்களுக்கு சரியா வரும். வெகு சிக்கனமாக வாழ்ந்து கடன் கம்மியா வச்சிருப்பவருக்கு 20 மடங்கு அனாவசியம், சம்பளம் முழுவதற்கும் இ எம் ஐ வச்சிக்கிட்டு சேமிப்பே இல்லாதவருக்கு 10 மடங்கு மிகக் குறைவு… டெர்ம் பாலிசியே வாங்காமல் எண்டோமெண்ட்டையே வாங்கும் சமூகம் இப்பத்தான் டெர்ம் பாலிசி பக்கம் திரும்புகிறது.. அவர்கள் ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்தாலே சந்தோசம்..

இப்ப கேள்விக்கான நேரடி பதில் – வயது முக்கியமில்லை – யாரோட சம்பளத்தை நம்பி குடும்பம் இருக்கோ அவர்கள் எல்லோருக்கும் காப்பீடு அவசியம். 35 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டு காலமும் 50 வயதாகும் ஒருவர் 15 ஆண்டு காலமும் எடுக்கணும். இன்று நான் இறந்தால் என் மனைவி அவர் வாழ்நாள் முழுதும், மகள் சம்பாதிக்கும் வயது வரைக்கும் எவ்வளவு செலவாகும், அதில் எவ்வளவு என் சேமிப்பு கொடுக்கும் என்று கணக்கிட்டு மிச்சத்தை இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்யணும். எனக்கு 65 வயதில் ரிட்டையர் ஆகும் அன்று நானும் மனைவியும் மிச்ச காலத்தை கழிக்கும் அளவுக்கு சேமிப்பு இருக்குமாறு திட்டமிடவேண்டும்.

எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

இந்த வருசம் எந்த ஃபண்ட் நல்ல ரிட்டர்ன் தரும்
தெரியாது

யாரு தேர்தலில் ஜெயிப்பார்கள்? 
தெரியாது

அடுத்து அமையும் ஆட்சியில் மார்க்கெட் ஏறுமா? 
தெரியாது

எலக்சன் ரிசல்ட் அன்னிக்கு மார்க்கெட் ஏறுமா இறங்குமா? 
தெரியாது

இந்தாண்டும் மிட் கேப் இறக்கம் காணுமா? 
தெரியாது

ஒராண்டில் எந்த ஷேர்கள் நல்லாப் போகும்? 
தெரியாது

எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறேன், எந்த 4 ஃபண்டில் முதலீடு செய்யலாம்? 
உங்களுக்கு எந்த ஃபண்ட் சரியா வரும்னு எனக்குத் தெரியாது.

அப்ப உனக்கு என்னதான்யா தெரியும்? 
உங்க வயது 35 – இன்னிக்கு உங்க குடும்பச் செலவு (பிள்ளைகள் செலவு இல்லாமல்) 25,000 ரூபாய் ஆகுதுன்னா, நீங்க ரிட்டையர் ஆகும் போது (65 வயது, 6% இன்ஃப்லேசன்) மாசம் 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்னு தெரியும்

இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் கல்விக் கட்டண ஏற்றத்துக்கும் பொதுவான விலைவாசி ஏற்றத்துக்கும் சம்பந்தமில்லைன்னு தெரியும். இன்ஃப்ளேசன் 6% ஆக இருக்கும் போதும் கல்லூரிச் செலவு மட்டும் 10% அளவில் ஏறிக்கிட்டே இருக்குன்னு தெரியும்

உங்க பிள்ளைகள் இப்ப ஆரம்பப் பள்ளியில் இருக்காங்க, அவங்க கல்லூரி போகும் போது தலா 50 லட்சம் ஆக மொத்தம் 1 கோடி ரூபாய் செலவாகும்னு தெரியும்

வங்கி தரும் வட்டி இப்ப 7% அளவில் இருக்குன்னும் அது மேலும் குறையும்னும் தெரியும். இன்சூரன்ஸ் கம்பெனிகளின் எந்த ஒரு திட்டமும் 5-6 % மேல் ரிட்டர்ன் தராதுன்னு தெரியும். இவற்றில் முதலீடு செய்தால் பொருளாதார இலக்குகளை எட்டவே முடியாதுன்னு தெரியும்

நீண்ட நாள் முதலீட்டில் பங்குச் சந்தை மட்டுமே இன்ஃப்ளேசனைத் தாண்டி ரிட்டர்ன் தந்திருக்கு, தரும் என்று தெரியும்.

ஓய்வு கால திட்டமிடல் மிக நீண்ட பயணம். மார்க்கெட் வீழ்ச்சி தற்காலிகமானது, போன வருச மிட் கேப் வீழ்ச்சி மார்க்கெட் சந்திக்கும் முதல் வீழ்ச்சியுமல்ல நிச்சயமாக கடைசி வீழ்ச்சியுமல்ல. உங்க குறிக்கோள் நீண்ட கால பயணமாக இருந்தால் சிறு சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை

அமெரிக்கர்களும் ஓய்வுகால திட்டமிடலும்

பெரும்பாலான அமெரிக்கர்கள் ரிட்டையர்மெண்ட்டுக்கு சேமிப்பதில்லைனு ஆதங்கப்படுது இந்தக் கட்டுரை

இந்த சர்வேயின் படி 70% அமெரிக்கர்கள் தம் வருமானத்தில் 10%க்கும் கம்மியாத்தான் சேமிக்கிறார்களாம், குறிப்பா 21 % பேர் எதுவுமே சேமிப்பதில்லையாம். இவர்கள் வாழ்நாள் முழுதும் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

20 ஆண்டுகளுக்கு முன் வரை சேவிங் எக்கானமியாக இருந்த இந்தியா இப்போது ஸ்பெண்டிங் எக்கானமியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது போன்ற சர்வே இப்போது இந்தியாவில் எடுத்தால் ரிசல்ட் ரொம்பவே கவலைக்கிடமாக இருக்கும். இந்தியர்களின் சேமிப்புப் பழக்கம் அடியோடு குறைந்து விட்டது.

சேமிப்பு இல்லாவிட்டால் அமெரிக்கர்களுக்கும் கஷ்டம்தான், ஆனால் இவற்றைக் கவனியுங்கள்
1. அமெரிக்காவில் இன்ஃப்ளேசன் 2% மட்டுமே
2. உலகிற்கே தேவைப்படும் டாலர் அமெரிக்காவோடது. டாலர் தேவை இருக்கும் வரை அமெரிக்காதான் நம்பர் 1. அதன் பொருளாதாரம் நிலைத்திருக்கும்
3. குறைந்தபட்சம் இந்தத் தலைமுறையினர் காலத்திற்கு அமெரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி (ஓய்வூதியம் மாதிரி) திவால் ஆகாது. கொஞ்சமேனும் பணம் கிடைத்துக்கொண்டிருக்கும்
3. சீனியர் சிட்டிசன்களுக்கு மெடிகேர் என்ற பேரில் ஓரளவுக்கு கவர் செய்யக்கூடிய ஹெல்த்கேர் இருக்கு
4. 70 வயதானவர்களுக்கும் வால்மார்ட் வாயிலில் நின்று வெறுமனே வரவேற்கும் வேலையோ மெக்டோனால்டில் பணம் வாங்கிப் போடும் வேலையோ ஏதோ ஒண்ணு கிடைக்கும். நான் வண்டியை சர்வீஸுக்கு விடும் கடையில் கர்டசி ரைட் என்று ஒரு கார் வச்சிருக்காங்க, அதில் என்னை அலுவலகத்தில் விடும் ஓட்டுனருக்கு வயது 75க்கு மேல். இந்தியாவில் இது போல கம்பெனிகளில் வயதானவர்களுக்கு வேலையும் கிடைக்காது

இத்தனைக்குப் பிறகும் சேமிக்காத அமெரிக்கர்களின் பாடு திண்டாட்டம்தான். அங்கே நிலைமை அப்படி இருக்கும் போது, அதிக இன்ஃப்ளேசன் கொண்ட, ஓய்வூதியத்துக்கும் ஹெல்த் இன்சூரன்சுக்கும் வழியே இல்லாத, வயதானவர்களுக்கு வேலை கிடைக்காத இந்தியாவில் – ஓய்வு பெற்ற பின் 25-30 ஆண்டுகள் வாழத்தேவையான பணத்தைச் சேர்த்து வைக்காதவர்கள் பாடு ரொம்பவே கஷ்டம்.

வருமானம் கம்மியோ அதிகமோ, வருமானத்தின் 80%க்குள் வாழப்பழகுங்கள். தேவைகளைச் சுருக்கி குறைந்தபட்சம் 20% சேமிக்க ஆரம்பிங்க, அதையும் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் இழந்து விடாமல் நல்ல முறையில் முதலீடு செய்து வாங்க. கடைசி காலத்தில் பிள்ளைகளை நம்பி இருந்து விடாமல் இருக்கும் வாழ்க்கை அனைவருக்கும் வாய்க்கட்டும்

https://www.cnbc.com/2019/03/14/heres-how-many-americans-are-not-saving-any-money-for-emergencies-or-retirement-at-all.html?fbclid=IwAR2K6DYv7HDOWOe7_Y-FBpKMa7pHKkeHW9rtESl9Tyiz5PeF96-Wq7HhPNk

ஓய்வுக்காக உழைத்திடு

Happy Retirement Clipart 4 - 257 X 192

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பென்சன் என்கிற safety net இருந்தது. ரிட்டையர் ஆகும் போது சொந்த வீடும் கையில் கொஞ்சம் காசும் இருந்தா போதும் என்கிற நிலை.  நிரந்தர வைப்பு நிதி தரும் வட்டியும் பென்சனும் வாழப் போதுமானதாக இருந்தது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருதாளார மாற்றத்துக்குப் பின் நிலை வெகுவாக மாறியுள்ளது. சந்தை பொருளாதாரத்தில் வாழத் தேவையும் அதிகமாகிப் போனது, பென்சனும் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவன ஊழியர்கள் ரிட்டையர்மெண்ட் குறித்து யோசிக்க ஆரம்பித்தன் விளைவே ம்யூச்சுவல் ஃபண்ட்களின் வளர்ச்சி.

2007 மார்ச் மாதம் 3 லட்சம் ரூபாய் கோடி அளவில் இருந்த ம்யூச்சுவல் ப்ஃண்ட்களின் AUM (Asset Under Management) 2014 ஆண்டு முதல் முறையாக 10 லட்சம் கோடியை எட்டியது, அதுக்கப்புறம் அசுர வளர்ச்சி கண்டு இன்று அது 20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது மூன்றே ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி அதுவும் பத்து லட்சம் கோடி ருபாய் அளவுக்கு.

பலரும் ம்யூச்சுவல் ஃபண்ட் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வந்தாலும், இன்னமும் இந்தியாவில் முதலீடு குறிந்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். இருந்திருந்தால், யூலிப் போன்ற திட்டங்களில் இன்னும் மக்கள் பணம் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

போகிற போக்கில் “மச்சான் ஒரு டீ சொல்லேன்” ரேஞ்சில் மாசம் அஞ்சாயிரம் இன்வெஸ்ட் பண்ணனும் நல்ல ம்யூச்சுவல் ஃப்ண்ட் சொல்லேன் அப்படிங்கறாங்க.

முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்

அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் (5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும்.

உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.

கேள்விக்கெலலாம்  பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.

அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.

ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.

நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை

  • இதை ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு 10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க.
  • மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
  • முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
  • கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
  • எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
  • சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு
  • அவசரத்தேவைக்கு மாச சம்பளத்தின் 1-2 மடங்கு இருக்கட்டும்
  • ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும்
  • குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
  • பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.

முதலீட்டு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

உடல் நலம் காக்கும் மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித்தான்.  நீங்க ஃபீஸ் ஏதும் கொடுக்க வேண்டாம், மருந்து கம்பெனிகளிடம் கமிசன் வாங்கிக்கறேன்னு ஒரு டாக்டர் சொன்னா அவரிடம் போவோமா? ஒரே மருந்தை நூறு கம்பெனிகள் தயாரிக்கின்றன, எந்த கம்பெனி அதிக கமிசன் தருதோ அவங்க மாத்திரையைத்தானே அவர் பரிந்துரை செய்வார். கம்பனி அதையும் நம்ம கிட்டதான் வசூல் செய்யும். அதே லாஜிக்தான் முதலீட்டு ஆலோசகர்களுக்கும். அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் “Fee Only”  Advisors இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. வாடிக்கையாளர் தரும் 0.5 – 1 % மட்டுமே இவர்களின் வருமானம். இவர்கள் பரிந்துரைக்கும் ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து இவர்கள் கமிசன் ஏதும் பெறக்கூடாது. இப்படி இருந்தால் அவர் பாரபட்சமின்றி நல்ல முதலீடுகளை நமக்குக் காட்டுவார்கள்.

எப்படி டாக்டர், வக்கீல், இஞ்சினியருக்கு ஃபீஸ் கொடுத்து கன்சல்டேசன் பெருகிறோமோ அப்படி முதலீட்டு ஆலோசகர்ளுக்கும் கொடுத்தால்தான் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்

லாபத்தில் பங்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதிலிருக்கும் ரிஸ்க் – அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆலோசகர்கள் ரிஸ்க் அதிகமான முதலீடுகளை பரிந்துரைக்கும் வாய்ப்பு இருப்பதால் அது உசிதமல்ல.

ம்யூச்சுவல் ஃப்ண்டில் போடறதா இருந்தா www.valueresearchonline.com போன்ற வெப்சைட்களில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், பாண்ட் இவற்றில் டாப் 10 ஃபண்ட்கள் குறித்து பாத்துட்டு போங்க, இவை தவிர ஆலோசகர் வேறு ஃபண்ட்களை பரிந்துரை செய்தால், காரணம் கேளுங்க, அந்த ஃபண்ட் டாப் 10 ஃபண்ட்களை விட எந்த விதத்தில் சிறந்தது என்று கேளுங்க. பதில் திருப்தியா இருந்தால் அதில் முதலீடு செய்யுங்க. சில டாக்டர்கள் நான் டாக்டரா நீயான்னு கேக்கறா மாதிரி கேட்டா ஆலோசகரை மாத்திடுங்க.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ், எனக்கு சிம்பிளா 3-4 ஃபண்ட் சொல்லுங்க, அதில் பணம் போடறேன்னு சொல்றவரா நீங்க? உங்களுக்கென உருவானதுதான் Robo Investing என்கிற கான்செப்ட். ரோபோ இன்வெஸ்டிங் தளங்களில் நீங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சா, வயசு, முதலீடு செய்ய இருக்கும் தொகை, காலம், உங்க risk appetite ஒரு சில அடிப்படை கேள்விகள் கேக்கும். பதில்களை வைத்து அதில் உள்ள அல்கோரிதம் உங்களுக்கென ஒரு ப்ரத்யேக போர்ட்ஃபோலியோ கொடுக்கும், அது எவ்வளவு ப்ரத்யேகம்னா, உலகில் உள்ள எல்லா மகர ராசிகாரர்களும் ஒரே பலன் சொல்றது எவ்வள்வு ப்ரத்யேகமோ அந்த அளவுக்குத்தான் இதுவும். அது சொல்லும் ஃப்ண்ட்களில் பணம் போட எழுதிக் கொடுத்தா மாதா மாதம் உங்க வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து அதுவே முதலீடு செய்து விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதுவே ரீ பேலன்சிங் செய்து விடும். அமெரிக்காவில் Betterment, Wealthsimple, Wealth Front என நிறைய ரோபோ பேலன்சிங் தளங்கள் உள்ளன. இவர்கள் 0.25% முதல் 0.5% வரை ஃபீஸ் வாங்குகிறார்கள்.

இந்தியாவில் இந்த கான்செப்ட் இன்னும் சூடு பிடிக்க வில்லை, www.wealthy.in, www.goalwise.com போன்றோர் ரோபோ இன்வெஸ்டிங் சேவை அளிக்கின்றனர். இவற்றில் பிரச்சனை மேலே சொன்ன ஃபீஸ் வாங்கும் வழிதான். நம்மிடம் ஃபீஸ் வாங்காமல், ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து கமிசன் பெறுகின்றனர். இந்நிலை மாறும் போது இன்னும் நல்ல ஃபண்ட்களை இவர்கள் பரிந்துரை செய்வார்கள் என நம்பலாம்.

தற்போது இந்தியாவில் உள்ள ம்யூச்சுவல் ஃபண்ட்கள் 2-3 % அளவுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்க இதுவும் ஒரு காரணம். அமெரிக்காவில் வேன்கார்ட், ஃபிடெலிடி நிறுவனங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் 0.3% முதல் 0.9% வரையிலும் actively managed funds 0.5% முதல் 1% வரையிலும் கட்டணம் பெற்று வருகின்றன. இந்த அளவுக்கு குறையலேன்னாலும் இந்தியாவில் இப்ப இருக்கும் கட்டணங்கள் பாதி அளவுக்காவது குறையணும். 

எல்லாம் சொல்லிட்டு என்னிக்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்னு சொல்லணும் இல்லையா? முதலீடு செய்ய ஆரம்பிக்க உகந்த நாள் “இன்று”. நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே உங்க ஓய்வு கால திட்டமிடுதலைத் தொடங்குங்க

மாடி வீட்டு ஏழை – Reverse Mortgage

Image may contain: one or more people and text

2016 மே மாதம் பெங்களூரு சுல்தான் பேட்டையில் ஒரு வீட்டின் உரிமையாளர்கள் வினோபா ராவ் (வயது 80) மற்றும் அவர் மனைவி கலாவதி பாய் (வயது 72) இறந்து கிடந்தனர்.
வயதான காலத்தில் அவர்களைப் பார்த்துக் கொள்ள ஆளின்றி வறுமையில் வாடி பட்டினியில் இறந்திருக்கின்றனர். நாலு ஆண்டுகளுக்கு முன்னரே மின்சார இணைப்பும் குடிநீர் இணைப்பும்
துண்டிக்கப் பட்டுள்ளது. வினோபா ராவ் ஆயுதப் படையில் வேலை செய்து ரிட்டையர் ஆனவர் – அவருக்குக் கிடைத்த சில ஆயிரம் ரூபாய்கள் பென்சன் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
இதில் ஆகப் பெரிய சோகம் என்னன்னா, அவங்க இருந்தது சொந்த வீடு அதன் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்!!!!!

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு சொந்தமாய் இருந்தும் வறுமையில் வாடிய இவர்கள் நிலைமைக்கு காரணம் அறியாமையே
வினோபா ராவ் அவர்கள் வேலை செய்யும் போது ஹோம் லோன் வாங்கி வீட்டைக் கட்டுகிறார். 20 ஆண்டுகள் மாதத் தவணை கட்டி வீட்டை சொந்தமாக்கிக் கொள்கிறார்.
இந்திலையில் அந்த வீட்டின் கடன் ஏதுமில்லா Free Hold நிலையை அடைகிறது. வினோபா போல நிறைய பேர் ஒரு வீட்டோடும் கையில் சொற்ப பணத்தோடும் ரிட்டையர் ஆவதைப் பாக்கறோம்.
மகனோ மகளோ வெளி நாட்டில் செட்டில் ஆனப்புறம் அங்கு போகவும் இவர்களுக்கு மனசு வர்றதில்லை, அவர்களிடம் வாங்கி உண்ணவும் தன்மானம் இடம் கொடுப்பதில்லை

வங்கி, வைப்பு நிதி, ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட் இன்னபிற குறித்து ஓரளவுக்கு கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இவர்களைப் போன்றவர்களுக்கும், வருமானம் நின்ற பின் எப்படி வாழ்வது என்ற கேள்வி உடையோருக்கும் அதிகம் விளம்பரப் படுத்தப் படாத வரப்பிரசாதம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ்

Reverse Mortgage :
வங்கி தரும் பணத்தைக் கொண்டு வீட்டை வாங்கிவிட்டு மாதா மாதம் வங்கிக்கு பணம் தருவது மார்ட்கேஜ் அல்லது ஹோம் லோன்
கடன் கொடுக்கும் வங்கி கடன் வாங்குபவருக்கு மாதாந்திரத் தவணை கொடுத்தல் அது ரிவர்ஸ் மார்ட்கேஜ்

நீங்களும் உங்க மனைவி / கணவர் உயிருடன் உள்ள வரை (இப்போதைக்கு அதிக பட்சமாக 20 ஆண்டுகள் வரை) வங்கி உங்களுக்கு மாதா மாதம் பணம் தந்து உங்க இறப்புக்கு பின் வீட்டை
எடுத்துக் கொள்ளும் .

அ. இத்திட்டம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே.
ஆ. வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு அதில் 80% வரை கடன் கொடுக்கமுடியும். அதை மாதாந்திரத் தவணைகளாக மாற்றி 20 ஆண்டுகள் வரை வங்கிகள் வழங்கும்
இ. இத்திட்டத்தில் நீங்கள் குடியிருக்கும் வீட்டைமட்டுமே உபயோகிக்க முடியும். வாடகைக்காக வாங்கி வைத்திருக்கும் இன்வெஸ்ட்மெண்ட் வீட்டைக் கொடுக்க முடியாது
இ. தவணையை மாதா மாதமோ, காலாண்டுக்கு ஒரு முறையோ அரையாண்டுக்கு ஒருமுறையோ பெற்றுக் கொள்ளலாம்
ஈ. இதன் மூலம் பெரும் பணம் வருமானமாக கருதப் படாது எனவே நீங்கள் இதற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை
உ. இது அடமானம் போல அல்ல – அடமானத்தில் மொத்தமாக பணம் பெற்றுக் கொண்டு மாதா மாதம் அடைக்க வேண்டும். இதில் மொத்தமா பணம் கிடைக்காது. திருப்பித் தரும் அவசியம்
கிடையாது.
ஊ. கணவனும் மனைவியும் உயிருடன் இருக்கும் வரை வங்கி பணம் தரும். இருவரும் இறந்த பின் வீடு வங்கிக்கு சொந்தமாகி விடும்
எ. அப்போது வங்கி இவர்களின் வாரிசுதாரர்களுக்கு வீட்டை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும். வாரிசுகள் விருப்பப் பட்டால் வங்கிக்கு மொத்தமா பணம் கொடுத்து வீட்டை வாங்கிக்
கொள்ளலாம்.
ஏ. வாரிசுகள் வாங்காத பட்சத்தில் வங்கி வீட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளும்

ரிவர்ஸ் மார்ட்கேஜ் குறித்த மேலும் சில தகவல்கள்

  1. வீட்டின் உரிமையாளர் வீட்டில் வசிக்கும் வரை அவரே அதற்கு உரிமையாளராகவும், பொறுப்பாகவும் இருப்பார். வீட்டு வரி, மெயிண்டனன்ஸ் போன்றவற்றை அவர்தான் கட்ட வேண்டும்
  2. வீட்டின் உரிமையாளர் 20ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தாலும் அவர் அவ்வீட்டில் தொடர்ந்து வசிக்கலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப்பின் வங்கி பணம் தருவதை நிறுத்தி விடும்
  3. வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விட்டாலோ, வரிகளை செலுத்தாமல் விட்டாலோ, திவால் ஆகும் நிலைமை வந்தாலோ வங்கி வீட்டை எடுத்துக் கொள்ளும்
  4. ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு கொடுத்த வீட்டை உரிமையாளர் அடகு வைக்கவோ விற்கவோ முடியாது.
  5. உரிமையாளர் வீட்டை விற்க முடிவு செய்தால், முதலில் வங்கிக்கு சேர வேண்டிய தொகையை செலுத்தி வீட்டை மறுபடியும் ஃப்ரீ ஹோல்ட் நிலைக்கு கொண்டு வந்தபின்னரே விற்க முடியும்.
  6. இப்போதைக்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ் மூலம் பெறக்கூடிய அதிகபட்சத் தொகை 1 கோடி ரூபாய்.

வினோபா ராவ்க்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ் குறித்து தெரிந்திருந்தால், இரு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இனி இது மாதிரி மரணங்கள் நிகழாகமல் இருக்க நாம் செய்ய வேண்டியது
இத்திட்டத்தை ரிட்டையர் ஆனவர்களுக்கு தெரியப் படுத்துவதுதான்.

ஓய்வுக்காக உழைத்திடு

Image result for retired person relaxing picture
இவை எனக்கான விதிகள், உங்களுக்கும் இவை பொருத்தமாக இருப்பின் எடுத்தாள்க – Everyone’s Financial needs are different, the following can no way be interpreted as advice or suggestion
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான், எங்கப்பா சேத்து வக்கல, ஆனாலும் சந்தோசமாகவே இருந்தார் என்பவர்கள் தயவு செஞ்சு இப்பவே அப்பீட் ஆகிக்கோங்க, இது உங்களுக்கு ரொம்ப போர் அடிக்கும்
ஓய்வா இருக்கறதுக்கு எதுக்கு உழைக்கணும்னு கேக்கறீங்களா?
60 க்கு அப்புறமான வாழ்வில் ஓய்வா இருக்கணும்னா 60 வரை உடலால் கடினமாகவும் மூளையால் புத்திசாலித்தனமாவும் உழைக்கணும். கடின உழைப்பில் சேர்த்த பணத்தை புத்திசாலித்தனமா முதலீடு செஞ்சா அறுவதுக்கப்புறம் யார் கையையும்
எதிர்பார்க்காமல் நிம்மதியா இருக்கலாம், கடனில்லாமல் சாகலாம்.
சந்தோசமான ரிட்டையர்மெண்ட்டுக்கு சில அடிப்படைகள்
1. 20 களின் கடைசியிலோ முப்பதுகளின் தொடக்கத்திலோ Pure Term Insurance Policy எடுங்க, உங்க வருடாந்திர சம்பளத்தின் 20 மடங்கு லட்சியம் 10 மடங்கு நிச்சயம். கார்ப்பரேசன் திரும்ப பணம் தரும் பாலிசிகள் ஏதும் வேண்டாம்
இது குறித்து விரிவா ஒருநாள் எழுதணும், இப்போதைக்கு இது போதும்
2. வேண்டிய அளவுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இருக்கட்டும்
3. நீங்க ரிட்டையர் ஆகும் தினம் வீடு முழுசா உங்களுக்குச் சொந்தமா இருக்கணும், உங்க பிள்ளைங்க உங்களிடம் தினசரி செலவுகளுக்கு எதிர்பார்க்ககூடாது – இவை இரண்டும் நடக்காமல் ரிட்டையர் ஆவதற்கு உங்களிடம் பல கோடிகள் இருக்கணும்
4. இப்ப உங்க வயசு 36ன்னு வச்சுப்போம், இன்னும் 24 வருசத்தில் நீங்க ரிட்டையர் ஆகணும். இப்ப (வீட்டுக் கடன், பிள்ளைகளின் செலவு இவை இல்லாமல்) ரெண்டு பேருக்கு சாப்பாடு, மருத்துவம், போக்குவரத்து செலவுக்கு ஒரு 15,000 ரூபாய் ஆகுதுன்னு வச்சிக்கோங்க. நீங்க ரிட்டையர் ஆகும் போது உங்களுக்கு மாசத்துக்கு 1,20,000 ஆகும். ஆறாண்டுகளுக்கு செலவு இரட்டிப்பாகும் என்பது பொருளாதார வல்லுனர்களின் ஒரு குன்சான கணக்கு. மோடியின் நல்லாட்சி தொடர்ந்து இந்தியாவின்
inflation குறைந்து GDP அதிகரித்து, இதெல்லாம் நடந்து 8 ஆண்டுகளுக்குத்தான் இரட்டிப்பாகுதுன்னு வச்சிப்போம்
8 year mark – 30,000 per month – 3,60,000 per annum
16 year mark – 60,000 permonth – 7,20,000 per annum
24 year mark – 120,000 pm – 14,40,000 per annum 
என்ன தலை சுத்துதா – இதுக்கே இப்படின்னா எப்படி? அதே அப்பாடக்கர் வல்லுனர்கள் சொல்ற இன்னோரு கணக்கு – You should withdraw to a maximum of 5% of the wealth created. 
அப்படின்னா மிகக் குறைந்த பட்சமா 3 கோடி ஓவா இருந்தாத்தான் 2038 இல் இப்ப 15,000 ஓவாக்கு வாழற வாழ்க்கை சாத்தியமாகும்
5. இப்போலேருந்து மாசத்துக்கு 20-25 ஆயிரம் ரூவா Systematic Investment Plan களீல் முதலீடு செய்து வந்தா இதை அடைய முடியும். கண்டிப்பா ஒரு நல்ல Financial Advisor இன் உதவியை நாடவும்
6. இப்பத்தான் நான் இன்னைக்கு எழுத நினைச்சதுக்கே வர்றேன். உங்க முதலீடுகளில் Real Estate ஒரு முக்கிய பங்கு வகிக்கட்டும். சப்ளை டிமாண்ட் ஏடாகூடமா இருக்கும் நம்ம நாட்டில் நிலம் / வீட்டின் விலை இன்னும் சில பல
ஆண்டுகளுக்கு குறைய வாய்ப்பேயில்லை. நல்ல இடமா பாத்து முதலீடு பண்ணுங்க. நல்ல முதலீடாக மட்டுமில்லாமல் உங்க வீடு உங்களுக்கு ரிட்டையர்மெண்டில் சோறும் போடும். எப்படின்னு கேக்கறீங்களா? Reverse Mortgage மூலமாக
Reverse Mortgage என்றால் என்ன :
நீங்க வீடு வாங்க கடன் வாங்கி மாதாமாதம் பணம் கட்டினால் அது Mortgage, உங்களுக்கு சொந்தமான வீட்டை வங்கி உத்திரவாதமாக பெற்றுக் கொண்டு உங்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்தால் அது Reverse Mortgage
இது எப்படி சாத்தியம்? நடைமுறை என்ன?
உங்களுக்கு ஒரு வீடு சொந்தமா இருக்கு, அதன் மதிப்பு 1 கோடின்னு வச்சிக்குவோம், ரிட்டையர்மெண்ட் காலத்தில் நீங்க அதில்தான் வசிக்கணும், வாடகைக்கும் விட வழியில்லை. அந்த வீட்டை உத்திரவாதமாக பெற்றுக் கொண்டு வங்கி ஒரு தொகையை 
நிர்ணயம் செய்யும். அதில் ஒரு பகுதியை முன்பணமாகவும், மிச்சத்தை மாதாமாதம் பென்சன் போலவும் பெற்றுக் கொள்ளலாம்.. கணவன் மனைவில் இருவரில் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை இந்தத் தொகை தரப்படும்.
மாதச் செலவுக்கு பணத்தை வங்கிகளிடமிருந்து நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம், அல்லது மொத்தப் பணத்தையும் LIC யின் Annuity யில் முதலீடு செய்து அங்கிருந்தும் மாதாமாதம் பணம் பெற்றுக் கொள்ளலாம்
உங்களுக்குப் பிறகு உங்க பிள்ளைகள் அந்த வீடு வேணும்னு நினைச்சா அவர்கள் வங்கிக்கு உரிய தொகையை செலுத்தி விட்டு வீட்டை பெற்றுக் கொள்ளலாம், அவர்களுக்கு வேண்டாத பட்சத்தில் வங்கி வீட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளும்.
நடுவிலேயே நீங்க வீட்டை விற்றும் பணத்தை செட்டில் செய்யலாம்.
Eligibility
இந்திய வங்கிகளில் பணம் பெற இந்தியனாய் இருத்தல் அவசியம்
60 குறைந்த பட்ச வயது
நீங்க வசிக்கும் Primary Residence மட்டுமே எலிஜிபில்
Tenure : 15-20 ஆண்டுகள்
தற்போதைய வட்டி விகிதம் : Base rate + 1.75%
சில வங்கிகள் சொந்த சம்பாதியத்தில் வாங்கிய வீடாகணும் இருக்கணும் என்று சொல்கிறன, அதாவது மூதாதையர் சொத்துக்களுக்கு தருவதில்லை
இவையனைத்தும் இன்னும் 25 ஆண்டுகளில் மாறும். எனவே இப்போதைக்கு இது குறித்தான Subject Knowledge இருந்தால் போதுமானது, தேவைப்படும் காலத்தில் அப்ப இருக்கும் Terms and conditions களுக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்
இப்பணம் வருமானமல்ல. இது கடன் எனவே இதற்கு வருமான வரி கிடையாது
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மதிப்பிடலாம், வீட்டின் மதிப்பு உயர்ந்திருப்பின், அதிக பணம் கேட்டு வாங்க முடியும்
இப்போதைக்கு அதிக பட்ச தொகை 1 கோடி ரூபாய்
2007 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்ட இந்தத் திட்டம் இன்னும் அதிக அளவில் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. முதல் நான்காண்டுகளில் வெறும் 1700 கோடிகளே இந்த லோன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கிட்டத்தட்ட முழுதுமே வட, மேற்கு
இந்தியாவிலேயே வழங்கப் பட்டுள்ளது, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இது Self எடுக்கவேயில்லை. அடுத்த 4-5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படும் என்றும் 20,000 கோடிகள் வரை Disburse செய்யப் படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.