LIC Endowment நியூ ஜீவன் ஆனந்த் vs PPF vs Mutual fund

வணக்கம் நண்பர்களே. LIC என்பது காப்பீட்டு நிறுவனம். அதில் காப்பீடு செய்யவேண்டும், ஆனால் காப்பீட்டுடன் முதலீடு என ஒன்றாகச் செய்யக்கூடாது என்பது என் கருத்து. ஏன் காப்பீட்டில் முதலீடு செய்யக்கூடாதென்றால், காப்பீடும் பத்தாது, முதலீடும் தேறாது(கூட்டு வட்டி 4% முதல் 6% வரை). பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டால், பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் முதிர்வுத்தொகை மகிழ்ச்சியைத் தராது.
LICவில் முதலீட்டுடன் காப்பீட்டுக்கென பல திட்டங்களிருக்கின்றன. அதில் முதலாவதாக நாம் பார்க்கப்போவது Endowment வகையைச் சேர்ந்த நியூ ஜீவன் ஆனந்த்.  https://www.licindia.in/Products/Insurance-Plan/anand

LIC Endowment நியூ ஜீவன் ஆனந்த்

LICவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மாதிரி. https://www.licindia.in/Products/Insurance-Plan/anand/abi.aspx
பாலிசிதாரரின் வயது 30. காலம் – 35 ஆண்டுகள். உறுதிப்படுத்தப்பட்ட முதிர்வுத் தொகை (Sum Assured ) – ஒரு லட்சம்.பாலிசித்தொகை  – ஆண்டுக்கு 3,165.
முதலில் பொதுவாக LICயின் endowment திட்டத்தின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம். 

1. Insurance – நான் Endowment திட்டங்களின் காப்பீட்டைப் பற்றி விவாதிக்கப்போவதில்லை. ஏனென்றால் காப்பீட்டுத் தொகை மிகக்குறைவு. ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330 செலுத்தினாலே,ஒன்றல்ல இரண்டு லட்சம் காப்பீடு கிடைக்கும். அதிகத் தொகைக்கு TERM INSURANCE. Term Insuranceக்கு ஈடான காப்பீட்டை Endowmentடால் கொடுக்கவே முடியாது என்பதே நிதர்சனம்.
2. Vested Simple Reversionary Bonus – LIC ஒவ்வொரு ஆண்டும் அதன் முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் Bonus நிர்ணயிக்கும். இணைப்பு -> https://www.licindia.in/Customer-Services/Bonus-Information. மேற்கண்ட நம் மாதிரிக்கு 2018ல் கொடுக்கப்பட்ட Bonus தொகை, Sum Assuredன் ஆயிரத்துக்கு 49 ரூபாய். மொத்தம் 4,900.. அடேங்கப்பா நாம் போட்ட பணமே 3,165 தான், அதற்கு 4,900 போனசானு நினைக்குறீங்களா .? இந்த Bonusயை கண்ணால பார்க்கத்தான் முடியும். திட்ட முதிர்வுக்குப் பிறகு தான் கையில் கிடைக்கும் . மேலும் இந்த Bonusக்கு எந்த வட்டியும் கிடையாது. இது போல், நம் எடுத்துக்காட்டின் படி ஆண்டுக்கு ஒன்று என மொத்தம் 35 போனஸ் கிடைக்கும். எதிர்காலத்தில் LICன் முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தைப் பொறுத்து இதே போனஸ் கிடைக்கலாம் , அல்லது குறையலாம். LIC தளத்தின் மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்ட அதிகபட்ச போனஸ் தொகையே 32 ரூபாய் என்றாலும் 2018ல் தந்த 49 ரூபாயையே நம் தோராய கணக்கிற்குப் பயன்படுத்துகிறேன். 
முதிர்வின் பொழுது கிடைக்கும் போனஸ் -> 35 ஆண்டுகள் * 4,900 போனஸ்  = 1,71,500 ரூபாய். இதுதவிர LICயின் சாதனை, மையில் கல்லைப் பொறுத்து எப்பவாவது சிறப்பு போனஸ் தரப்படலாம். இது பெரிய அளவில் முதிர்வு தொகையை மாற்றாது என்பதால் கணக்கில் கொள்ளவில்லை .
3. Final Additional bonus – முதிர்வின் பொழுது ஒரு முறை வழங்கப்படும். 2012ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட போனஸ் தொகை Sum Assuredன் ஆயிரத்துக்கு 1,850 ரூபாய். இணைப்பு -> https://www.licindia.in/Customer-Services/Bonus-Information/Bonus__For_2011-12
முதிர்வின் பொழுது கிடைக்கும் Final Additional bonus -> (1,00,000/1000) * 1,850 போனஸ்  = 1,85,000 ரூபாய் 


2054 ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மொத்தத் தொகை  -> 1,00,000 உறுதிபடுத்தப்பட்ட முதிர்வுத் தொகை (Sum Assured ) +1,71,500  Vested Simple Reversionary Bonus(தோராயமாக) + 1,85,000 Final Additional bonus (தோராயமாக) = 4,56,500 ரூபாய்.கூட்டு வட்டியின் படி 6.78%. முப்பதைந்து ஆண்டு நீண்ட கால முதலீடு என்பதால் ஒரு சுமாரான 6.78% கூட்டு வட்டி கிடைத்திருக்கு.

PPF – Public Provident Fund

இதற்க்கு பதிலாக ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330யை காப்பீட்டுக்குச் செலுத்திவிட்டு மீதத் தொகையை மிகவும் பாதுகாப்பான PPFல் முதலீடு செய்திருந்தால் எதிர்பார்க்கப்படும் தொகை (தோராயமாக) ->  5,80,000.00 ரூபாய். ஏறக்குறைய ஒரு லட்சத்து முப்பதாயிரம் அதிகம். எப்படி LICன் 2018ம் ஆண்டு Bonus தொகையை அனைத்து ஆண்டுகளுக்கும் கணக்கில் கொண்டேனோ, அது போல PPFன் தற்போதைய 8% வட்டியையே கணக்கில் கொண்டுள்ளேன். LIC Bonus போல இதுவும் மாறலாம். மேலும் ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் தொகையும் எதிர்காலத்தில் கூடலாம். மத்திய அரசின் திட்டம் என்பதால் பெரிய அளவில் விலையேற்றமிருக்காது எனக் கருதி விலை உயர்வைக் கணக்கில் கொள்ளவில்லை.

Mutual fund – Aggressive Hybrid Fund

இதுவே கொஞ்சம் துணிவு எடுத்து ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330 காப்பீட்டுக்குச் செலுத்திவிட்டு மீதத் தொகையை Aggressive Hybrid Fundல் முதலீடு செய்து 10% கூட்டு வட்டியை எதிர்பார்த்தால் கிடைக்கும் தொகை (தோராயமாக) -> 9,30,000(LICன் திட்ட முதிர்வில் கிடைக்கும் தொகையைப் போல் இருமடங்கு). Aggressive Hybrid Fundல் கிடைக்கும் லாபத்தொகைக்கு நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி 10% செலுத்த வேண்டும்.

தெரிந்து கொள்வோம்:
LIC Endowment ஆரம்பித்து முப்பது நாட்களைக் கடந்து விட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசியை நிறுத்தும் பட்சத்தில் எந்த தொகையும் திரும்பக் கிடைக்காது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்திற்கு முன் பாலிசியை Surrender செய்தால், முதல் வருட பாலிசி தொகையைக் குறைத்து  விட்டு Special surrender value கணக்கின் படி ஒரு குறிப்பிட்ட தொகை திரும்பத் தரப்படும். பெரும்பாலும் போட்ட பணமே திரும்பவராது. தயவு செய்து Special surrender value கணக்கை கேட்க வேண்டாம் . இதனால் பெரும்பாலானவர்களுக்கு எந்த உபயோகமுமில்லை.

LIC ஏஜெண்டுகளுக்கு Endowment பாலிசிகளுக்கு முதலாண்டுக்கு தோராயமாக 25% கமிஷனும், அதன் பிறகு ஒவ்வொரு தவணைக்கும் 5% முதல் 7.5% வரை கமிஷனும் தரப்படுகிறது. ஏஜெண்டுகளின் சேவை ஆண்டுகளை பொறுத்து கமிஷன் மாறும்.

அனைத்து கணக்குகளையும் கீழ்க்கண்ட இணைப்பில் கொடுத்துள்ளேன். https://docs.google.com/spreadsheets/d/1DaFbqi0_K_69all7kqTn3GChZPqy3uDVA7HecO6I-iI/edit?usp=sharing
கணக்கில் தவறிருந்தாலோ அல்லது புரிதலில் தவறிருந்தாலோ சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன் அல்லது தெரிந்து கொள்கிறேன் 

நன்றி:

https://freefincal.com

எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்

ஆயுள் காப்பீட்டுச் சந்தை மெதுவாக டெர்ம் பாலிசியை நோக்கி நகர்வதை உணர்ந்த எல் ஐ சி புதிதாக இரு டெர்ம் பாலிசிகளை அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் ஆயுள் காப்பீடு என்பதே ஒரு முதலீடாக நீண்ட நாட்களாக கருதப்பட்டு வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் எண்டோமெண்ட், மணி பேக், யூ எல் ஐ பி போன்றவற்றின் உபயோகம்ற்ற தன்மையை உணர்ந்து டெர்ம் பாலிசி பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். இதையுணர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் டெர்ம் பாலிசியில் கவனம் செலுத்துவதோடு அதில் அதிகரிக்கும் கவரேஜ், சீக்கிரமே பணம் செலுத்தி முடித்தல், ப்ரீமியம் திரும்பக் கிடைக்க வழி, Critical Illness Coverage போன்ற உத்திகளையும் அறிமுகப்படுத்தி பல்லாயிரக்கணக்கான டெர்ம் பாலிசிகள் விற்றுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சியிலும் இடெர்ம், அன்மோல் ஜீவன், அமுல்ய ஜீவன் என்று மூன்று டெர்ம் பாலிசிகள் இருந்தாலும் நிறுவனமும் முகவர்களும் அதில் கவனம் செலுத்தவில்லை. எல் ஐ சி யின் டெர்ம் பாலிசிகளில் இடெர்ம் தான் இதுநாள் வரை விலை குறைவானது ஆனால் அதன் ப்ரீமியமே தனியார் நிறுவன டெர்ம் பாலிசிகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருந்ததும் அது பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் வெற்றி பெறாமல் போனதற்குக் காரணம்.

இதை உணர்ந்த எல் ஐ சி புதிதாக எல் ஐ சி Tech Term (No 854) மற்றும் ஜீவன் அமர் (எண் 855) என இரு டெர்ம் பாலிசிகளை புதிதாக அறிமுகம் செய்கிறது. இவை இரண்டுமே

பெரும்பாலான விசயங்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்டவை. இரண்டுக்குமுள்ள ஒரே வித்தியாசம் டெக் டெர்ம் இடெர்ம் போல எல் ஐ சியின் இணையதளமான www.licindia.in வில் மட்டுமே வாங்க முடியும். ஜீவன் அமர் பாலிசியை முகவர்களிடம் வாங்கலாம். ஜீவன் அமரின் ப்ரீமியம் Tech Term ஐ விட மிக அதிகம்.

இவ்விரு திட்டங்களின் அம்சங்கள்

  1. இவை டெர்ம் பாலிசிகள் – அதாவது காப்பீட்டு காலத்தில் பாலிசிதாரர் இறந்தால் குடும்பத்துக்கு காப்பீட்டுப் பணம் கிடைக்கும். காப்பீட்டு காலத்தில் பாலிசிதாரர் இறக்காத பட்சத்தில் பாலிசிதாரருக்கோ குடும்பத்துக்கோ பணம் ஏதும் கிடைக்காது
  • Tech Term இல் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 50 லட்சம். அமரில் 25 லட்சம்
  • பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகையை (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்
  • அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகையை தெரிவு செய்யும் போது முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரே அளவில் இருக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10% அளவில் அதிகரிக்கும் 16ம் ஆண்டிலிருந்து மீண்டும் காப்பீட்டுத் தொகை ஒரே அளவில் இருக்கும். உதாரணத்துக்கு 50 லட்சம் பாலிசி எடுப்பவரின் sum assured முதல் 5 ஆண்டுகளுக்கு 50 லட்சமாகவே இருக்கும். 6ம் ஆண்டு 55 லட்சம் ஏழாம் ஆண்டு 60 லட்சம் என அதிகரித்து 15ம் ஆண்டு முடிவில் 1 கோடியாக இருக்கும். பாலிசியின் மிச்ச காலத்துக்கு ஒரு கோடியாகவே இருக்கும். அப்புறம் உயராது
  • பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினி பணத்தை மொத்தமாகவோ 5 அல்லது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தோ வாங்கிக் கொள்ளலாம் (மொத்தமாக வாங்கி செலவழித்து விடாமல் 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது)
  • இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்
  • இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம்
  • இப்பாலிசிகள் Accidental Rider, புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன. மற்ற எல்லா பாலிசிகளையும் போல பெண்களுக்கான ப்ரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு

 இப்பாலிசிகள் குறித்த என் கருத்துகள்

இவ்விரு பாலிசிகளும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சந்தையில் உள்ள பிற டெர்ம் பாலிசிகளிலுள்ள நல்ல அம்சங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன (எல் ஐ சியின் முந்தைய டெர்ம் பாலிசிகளில் இவை இல்லை). குறிப்பாக அதிகரிக்கும் கவரேஜ், பாலிசி பணத்தை 15 ஆண்டுகள் பிரித்து வாங்கிக்கொள்ளும் வசதி போன்றவை மிக நல்ல அம்சங்கள்

எல் ஐ சி இடெர்மின் ப்ரீமியம் மிக அதிகம் என்பது பொதுவான குற்றச்சாட்டு, Tech Term இல் அது சரி செய்யப்பட்டுள்ளது. இதன் ப்ரீமியம் எல் ஐ சியின் தற்போதைய டெர்ம் பாலிசிகளின் ப்ரீமியத்தை விட குறைவு.

ஒரே பாதகமான அம்சமாக நான் எண்ணுவது ஜீவன் அமரின் ப்ரீமியம் Tech Term  ப்ரீமியத்தை விட மிக அதிகம்.

உதாரணத்துக்கு 40 வயதான ஒருவர் ஒரு கோடிக்கு 10 ஆண்டு காலம் காப்பீடு எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தற்போதைய இடெர்ம் எடுத்தால் அவரோட ஆண்டு ப்ரீமியம் 14800 + ஜி எஸ் டி 2451 = மொத்தம் 17,251 (ஆன்லைன் பேமெண்ட் டிஸ்கவுண்ட் கணக்கில் எடுக்கவில்லை). இது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகம்

Tech Term இல் இதன் ப்ரீமியம் வெறும் 10,240 + ஜி எஸ் டி 1689 = 11,929 மட்டுமே. அதாவது இடெர்மை விட 30% விலை குறைவு

ஜீவன் அமரில் இவர் செலுத்த வேண்டிய ப்ரீமியம் 16065 ஜிஎஸ்டி தனி. அதாவது ஜீவன் அமரின் ப்ரீமியம் இடெர்மை விட அதிகம், Tech Termஐ விட மிக மிக அதிகம்.

இவ்வாறான விலைப்பட்டியலின் மூலம் எல் ஐ சி ஜீவன் அமரின் தோல்வியை அறிமுகத்திற்கு முன்னரே உறுதி செய்கிறது. மேலும் ஆன்லைன் பாலிசிக்கும் முகவர் விற்கும் பாலிசிக்கும் இவ்வளவு பெரிய விலை வித்தியாசம் வைப்பதன் மூலம் அது முகவர்களையும் வஞ்சிக்கிறது.

எல் ஐ சி இந்தியாவின் மிகப்பெரிய, மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனம். அதற்காக மக்கள் தனியார் பாலிசிகளைவிட கொஞ்சம் விலை அதிகம் தர முன்வருவர். முகவரிடம் பேசி விளக்கம் கேட்டு பாலிசி வாங்கும் வசதிக்காக ஆன்லைன் ஷாப்பிங்கைவிட 4-5% அதிகவிலை தரவும் தயாராக இருப்பார்கள். ஒரேடியா ஆஃப்லைன் பாலிசி ப்ரீமியத்தை ஆன்லைன் பாலிசி ப்ரீமியத்தை விட 60% அதிகம் வைத்தால் முகவர்கள் அதை Promote செய்யவும் மாட்டார்கள் அப்படியே Promote செய்தாலும் மக்கள் அவர்களிடம் விளக்கம் எல்லாம் கேட்டுவிட்டு ஆன்லைனில் எடுத்து விடுவார்கள், ஓரிரு முறை இப்படி நடந்ததும் முகவர்களே டெர்ம் பாலிசி குறித்து வாயைத் திறக்க மாட்டார்கள். முகவர்களின் வருமானம் ப்ரீமியத்தின் குறிப்பிட்ட சதவீதம்தான் – ஏற்கெனவே டெர்ம் பாலிசியின் ப்ரீமியம் குறைவு என்பதால் அவர்களின் வருமானம் குறைவாகவே இருக்கும், இப்படி எல் ஐ சியே அவர்களுக்குப் போட்டியாக வந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

அதிக விலை காரணமாக டெர்ம் இன்சூர்ன்ஸுக்கு எல் ஐ சி பக்கம் போகாமல் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் Tech Term எடுப்பார்கள் என நம்புகிறேன். எல் ஐ சி மனசு வச்சு ப்ரீமியத்தைக் குறைக்காவிட்டால் ஜீவன் அமர் பெருசா செல்ஃப் எடுக்காது என்றே நினைக்கிறேன்.

RIP – Rest in Peace + Retire in Peace

பிரபலமான ஒருவர் இறந்தால் ஆயிரமாயிரம் RIP க்கள் போடறோம், நமக்கு ரெண்டு RIPக்கள் தேவை. அதையும் கொஞ்சம் கவனிக்கலாமே

முதல் RIP – Rest in Peace உண்மையிலேயே நாம் அமைதியாக உறங்க வேண்டுமென்றால் அதற்கு குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்பாவின் இழப்பையும் அம்மாவின் இழப்பையும் ஈடுசெய்யவே முடியாது ஆனா அவர்களின் வருமானத்தை கண்டிப்பா ஈடு செய்ய முடியும். குடும்பத் தலைவர் தீடிரென இறந்தால் அவர் அடுத்த 20-30 ஆண்டுகள் ஈட்டியிருக்கக்கூடிய வருமானத்தை தரக்கூடியது டெர்ம் பாலிசி மட்டுமே. ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டெர்ம் பாலிசி தவறாமல் எடுங்க

ரெண்டாவது RIP Retire in Peace 60 வயதில் வருமானம் ஈட்டுவது நின்றபின் பிள்ளைகள் கையை எதிர்பாத்து நிக்காமல் இருக்க வருமானம் ஈட்டும் போது சேமிக்கணும். சேமிப்பதுடன் நிற்காமல் அதை நல்ல முறையில் முதலீடு செய்யணும். PF, NPS, Mutual Funds, Fixed Income என்று நல்லதொரு Asset Allocation கொண்ட Portfolio உருவாக்கி முதலீடு செய்யுங்கள்

காப்பீட்டின் ப்ரீமியம் எப்படி முடிவு செய்யப் படுகிறது

நண்பர் ஒருத்தர் பெரிய தொகைக்கு டெர்ம் பாலிசி எடுத்ததும் அதில் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி நண்பர்கள் எல்லாருக்கும் பரிந்துரைத்திருக்கிறார். எப்படி விளக்கிச் சொன்னார்னு தெரியல, அவரோட நண்பர்கள் எல்லாரும் ஆண்டுக்கு வெறும் 12,000 முதல் 18,000 ரூபாய்க்கு எப்படி ஒரு கோடி குடுப்பாங்க? எல்லாம் ஏமாத்து வேலை எம் எல் எம் மாதிரி உன்னை ஆள் பிடிக்க அனுப்புனாங்களான்னு கேட்டிருக்காங்க.

அடிப்படை புரிதல் இல்லாததால்தான் இப்படி அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. காப்பீட்டையும் முதலீடாகவே பார்த்துப் பழகிய சமூகத்திற்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு என்பதே புதிது அதுவும் மாசம் 2000 க்குள்ள கிடைக்குதுன்னா சந்தேகம் கொள்வது இயல்பே.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம், எந்த நிறுவனமும் மாசம் 2000 ரூபாய் தந்தா உங்களுக்கு 1 கோடி ரூபாய் தர்றதா சொல்லவில்லை, ஒரு வேளை பாலிசி காலத்துக்குள் நீங்க இறந்தால் உங்க குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகத்தான் சொல்கிறது. பாலிசி காலத்துக்குள் நீங்க இறக்கா விட்டால் கட்டிய பணம் முழுதும் கம்பெனிக்கே. ஆண்டு முழுதும் விபத்து நேராவிட்டால் காப்பீட்டு நிறுவனம், நீங்க வாகன காப்பீட்டுக்கு கொடுத்த பணத்தைத் திருப்பித் தருவதில்லை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மட்டும் ஏன் திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.


காப்பீடு என்பது ரிஸ்க்கைப் பகிர்வது, ஒரு லட்சம் பேர் காப்பீடு எடுத்தால், 20 வருடத்தில் 20,000 பேர் கூட இறக்க மாட்டார்கள், அவர்களுக்கு மட்டும் க்ளெய்ம் கொடுத்தால் போதும், மற்ற 19,80,000 பேர் கட்டும் ப்ரீமியம் கம்பெனிக்கே. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ப்ரீமியம் கம்மியாகும்

இப்ப காப்பீட்டின் ப்ரீமியம் எப்படி முடிவு செய்யப் படுகிறது என்று பார்க்கலாம்.


காப்பீடு என்பது Art அல்ல அது Science. காப்பீட்டின் ப்ரீமியம் மூன்று காரணிகள் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. அவை மார்ட்டாலிட்டி ரேட் அதாவது இறப்பு விகிதம், வட்டி விகிதம் மற்றும் கம்பெனியின் செலவுகள்

இதற்கென தனிப்படிப்பு இருக்கிறது அதன் பெயர் ஆக்சூரியல் அறிவியல். ஒரு ஆக்சுவரி இறப்பு விகிதத்தையும் வட்டியையும் கணக்கிட்டு பாலிசிக்கு எவ்வளவு பணம் தேவை என்று சொல்வார், நிறுவனம் நடத்த ஆகும் செலவு மற்றும் லாபம் சேர்த்து ப்ரீமியத்தை நிர்ணயிக்கும்.

இறப்பு விகிதம் : ஒரு நாட்டில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி வாழும் காலம், அவர்கள் செய்யும் வேலை, இருக்குமிடம், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றை கணக்கில் எடுத்து, ஒரு குறிப்பிட்ட வயது வரம்பில் இத்தனை சதவீதம் பேர் இறக்க வாய்ப்புண்டு என்று கணக்கிடுவார்கள்

வட்டி விகிதம் : பயனர்கள் கட்டும் ப்ரீமியத்தை நிறுவனம் பங்குகள், கடன் பத்திரங்கள் (பாண்ட்) மற்றும் வைப்புநிதியில் முதலீடு செய்யும், ஒரு நாட்டின் பொருளாதர நிலைமையை கணக்கில் கொண்டு முதலீடு இத்தனை சதவீதம் வருமானம் கொடுக்கும் என்றும் கணக்கிடுவார்கள்

செலவு : இதைத்தவிர பாலிசியை விற்க, நிறுவனம் நடத்த, க்ளெயிம் செட்டில் செய்ய என்று பல செலவுகள் உண்டு. அவற்றையும் கணக்கில் எடுத்து லாபம் சேர்த்து ப்ரீமியத்தை முடிவு செய்வார்கள். இதனால்தான் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி (ஆன்லைன் மட்டுமே) ஏஜெண்ட்டிடம் வாங்கும் டெர்ம் பாலிசியை விட விலை குறைவாக உள்ளது. ஏனென்றால் இடெர்ம் பாலிசியை விற்க செலவு ஏதும் இல்லை.

இவற்றுக்கும் மேலே, காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த Exposure யும் தாங்களே வைத்துக் கொள்வதில்லை. எப்படி ஒரு பயனர் தன் வருமானம் என்கிற Exposure ஐ காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றி விடுகிறாரோ, அது போல காப்பீட்டு நிறுவனங்களும் தம் Exposureஐ ரீஇன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தள்ளி விடுகின்றன. நாலு கம்பெனிகள் வெவ்வேறு நாடுகளில் தலா ஒரு கோடி பாலிசி விற்கின்றன என்று வைத்துக் கொள்வோம், ரீஇன்சூரன்ஸ் கம்பெனி அந்த நாலு கோடி பாலிசிகளையும் ரீ இன்சூர் செய்யும், டேட்டாசெட் அதிகமாக அதிகமாக அதுவும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து அவை வரும் போது இழப்பு மிகக்குறைவாக இருக்கும்.

சூரிச், ம்யூனிச், ஸ்விஸ் ரீ, பெர்க்‌ஷைர் போன்ற பல நிறுவனங்கள் ரீஇன்சூரன்ஸ் துறையில் செயல் படுகின்றன, 2016 ஆண்டு இந்நிறுவனங்கள் 76பில்லியன் டாலர் அளவுக்கு ரீ இன்சூரன்ஸ் வழங்கியுள்ளன. இந்திய நிறுவங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட எக்ஸ்போஷரை ரீ இன்சூர் செய்கின்றன. ஒருத்தர் 2 கோடிக்கு பாலிசி எடுத்தால் நிறுவனம் ஒரு கோடி எக்ஸ்போஷரை தன்னிடம் வைத்துக் கொண்டு மிச்ச ஒரு கோடியை ரீஇன்சூர் செய்கிறது. ஏற்கெனவே இறக்கப் போவோரின் எண்ணிக்கை 1-2% அதிலும் குறிப்பிட்ட கவரேஜ் ரீஇன்சூர் செய்யப்படுவதால் நிறுவனம் க்ளெய்ம்களால் நொடித்துப் போக வாய்ப்பு மிகக் குறைவே.

நகைக்கடை வைப்பு நிதியிலும், ஈமு கோழியிலும் முதலீடு செய்ய யோசிக்காத மக்கள் இன்சுரன்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுப் பேர்வழிகள் போன்று நினைப்பது விந்தை. ஐ ஆர் டி ஏ வின் கண்காணிப்பில் செயல் படும் இந்திய காப்பீடு நிறுவங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது அப்படி ஒன்றும் அபாயகரமானது அல்ல என்பது என் கருத்து

Image result for term insurance
Image result for actuarial science

சில வருடங்களில் ஓய்வு பெறவுள்ள ஐம்பதுகளில் இருப்போர் எடுக்க வேண்டிய காப்பீட்டு அளவு.

காப்பீட்டின் அளவு ரொம்ப பெரிய சப்ஜெக்ட் – ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகர் க்ளையண்ட்டின் எல்லா விவரங்களையும் (வருமானம், செலவு, உடல்நிலை, சேமிப்பு, கடன் இன்னபிற) ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு என்ன மாதிரி லைஃப் ஸ்டைல் வேண்டும் என்றும் தெரிந்து கொண்டு (கிராமத்தில் அமைதியான வாழ்க்கை அல்லது உலகம் முழுதும் சுற்றும் ப்ளான் இன்னபிற) அதற்கு ஏற்றாற் போல காப்பீட்டை டிசைன் செய்யணும் (சம் அஸ்யூர்ட், காலம்) – இதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாச் செய்யும் அளவுக்கு அதுவும் இலவசமா செய்யும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை. அதனால் தான் பொதுவாக ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இன்றியமையாதது, 20 மடங்கு ஹெல்தியான காப்பீடு என்கிறேன், இது பெரும்பான்மையானவர்களுக்கு சரியா வரும். வெகு சிக்கனமாக வாழ்ந்து கடன் கம்மியா வச்சிருப்பவருக்கு 20 மடங்கு அனாவசியம், சம்பளம் முழுவதற்கும் இ எம் ஐ வச்சிக்கிட்டு சேமிப்பே இல்லாதவருக்கு 10 மடங்கு மிகக் குறைவு… டெர்ம் பாலிசியே வாங்காமல் எண்டோமெண்ட்டையே வாங்கும் சமூகம் இப்பத்தான் டெர்ம் பாலிசி பக்கம் திரும்புகிறது.. அவர்கள் ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்தாலே சந்தோசம்..

இப்ப கேள்விக்கான நேரடி பதில் – வயது முக்கியமில்லை – யாரோட சம்பளத்தை நம்பி குடும்பம் இருக்கோ அவர்கள் எல்லோருக்கும் காப்பீடு அவசியம். 35 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டு காலமும் 50 வயதாகும் ஒருவர் 15 ஆண்டு காலமும் எடுக்கணும். இன்று நான் இறந்தால் என் மனைவி அவர் வாழ்நாள் முழுதும், மகள் சம்பாதிக்கும் வயது வரைக்கும் எவ்வளவு செலவாகும், அதில் எவ்வளவு என் சேமிப்பு கொடுக்கும் என்று கணக்கிட்டு மிச்சத்தை இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்யணும். எனக்கு 65 வயதில் ரிட்டையர் ஆகும் அன்று நானும் மனைவியும் மிச்ச காலத்தை கழிக்கும் அளவுக்கு சேமிப்பு இருக்குமாறு திட்டமிடவேண்டும்.