இளமையில் கல் என்பது பழமொழி, இளமையில் திட்டமிடு என்பது புதுமொழி..

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை இருபதுகளின் இறுதியிலோ முப்பதுகளின் ஆரம்பத்திலோ தொடர் முதலீடு ஆரம்பித்தால் ரிட்டையர் ஆகும் போது கணிசமான தொகை கையில் இருக்கும். 35 ஆண்டுகள் மாதாமாதம் 2500ரூ நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து வந்தால் முடிவில் 1 கோடி ரூபாய் இருக்க வாய்ப்பு மிக அதிகம். இதை Power of Compounding என்பார்கள்

காப்பீட்டிலும் சீக்கிரம் ஆரம்பிப்பது பலனளிக்கும். நண்பர் வல்லம் பசிர் 29, ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செய்தார். இதை இரண்டு கம்பெனிகளில் தலா 50 லட்சம் என முடிவு செய்துள்ளார்… ஜீவன் ஆனந்திலும் ஜீவன் சரலிலும் இன்ன பிற ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்யும் வாலிப வயோதிக அன்பர்களே, பஷீர் ஒரு கோடி ருபாய் காப்பீடுக்கு கட்டப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? எஸ் பி ஐயில் 50 லகரத்துக்கு ஆண்டுக்கு 10,400 ரூபாய், எல் ஐ சியில் 8800 ரூபாய். அதாவது ஒரு கோடிக்கு ப்ரீமியம் வெறும் 19.200 ரூபாய். மாசம் வெறும் 1600 ரூபாய்.

எஸ் பி ஐ மேனேஜர் கிட்டத்தட்ட டெர்ம் பாலிசி விக்க மாட்டேன்னே சொல்லியிருக்கார், இது வேணாம் சார், ரிட்டர்ன் எதுமே வராது, இதுக்கு பதிலா மணிபேக் போடுங்க என்றெல்லாம் மூளைச் சலவை செய்ய முயன்றுள்ளார். அதுல காப்பீடு 5 லட்சம் மட்டுமே கிடைக்கும் நான் இறந்தால் அது குடும்பத்துக்கு ஒராண்டுக்கு கூட காணாது, அப்புறம் நீங்களா என் குடும்பத்தைக் காப்பீங்கன்னு கேட்டதும் இந்தாள் கிட்ட எதுவும் தேராதுன்னு விட்டிருக்கிறார். வெல்டன் பஷீர்

பாலிசி ரசீது கையில் வந்ததும் பஷீருக்கு கிடைத்த திருப்தியை வார்த்தையில் விவரிக்க இயலாது

மாசத்துக்கு 10-20 ஆயிரம் இன்சூரன்ஸில் “முதலீடு” செய்வதற்கு பதில் 1600 ரூபாய்க்கு பாலிசி, மிச்சம் ஒரு பத்தாயிரத்தை எஸ் ஐ பி முதலீடு செய்து வந்தால் பஷீருக்கு 65 வயது ஆகும் போது 4-5 கோடி ரூபாய் கையில் இருக்க வாய்ப்பு மிக அதிகம்.

பஷீர் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்… நீங்க எல்லாம் வச்சிருக்கும் ஜீவன் டேஷ் பாலிசிகள் இத்தகைய நிலைமையில் உங்களை வச்சிருக்கான்னு யோசிங்க, இல்லைனா அப்புறம் அந்த பாலிசிகளை ஏன் நீங்க இன்னமும் வச்சிருக்கீங்கன்னு யோசிங்க.

டெர்ம் பாலிசியும் ரீ இன்சூரன்ஸும்

Insurance, management, reinsurance, risk icon. Element of insurance icon. Premium quality graphic design icon. Signs and symbols collection icon for websites, web design

நண்பர் ஒருத்தர் பெரிய தொகைக்கு டெர்ம் பாலிசி எடுத்ததும் அதில் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி நண்பர்கள் எல்லாருக்கும் பரிந்துரைத்திருக்கிறார். 
எப்படி விளக்கிச் சொன்னார்னு தெரியல, அவரோட நண்பர்கள் எல்லாரும் ஆண்டுக்கு வெறும் 12,000 முதல் 18,000 ரூபாய்க்கு எப்படி ஒரு கோடி குடுப்பாங்க? எல்லாம் ஏமாத்து வேலை எம் எல் எம் மாதிரி உன்னை ஆள் பிடிக்க அனுப்புனாங்களான்னு கேட்டிருக்காங்க.

அடிப்படை புரிதல் இல்லாததால்தான் இப்படி அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. காப்பீட்டையும் முதலீடாகவே பார்த்துப் பழகிய சமூகத்திற்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு என்பதே புதிது அதுவும் மாசம் 2000 க்குள்ள கிடைக்குதுன்னா சந்தேகம் கொள்வது இயல்பே.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம், எந்த நிறுவனமும் மாசம் 2000 ரூபாய் தந்தா உங்களுக்கு 1 கோடி ரூபாய் தர்றதா சொல்லவில்லை, ஒரு வேளை பாலிசி காலத்துக்குள் நீங்க இறந்தால் உங்க குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகத்தான் சொல்கிறது. பாலிசி காலத்துக்குள் நீங்க இறக்கா விட்டால் கட்டிய பணம் முழுதும் கம்பெனிக்கே. ஆண்டு முழுதும் விபத்து நேராவிட்டால் காப்பீட்டு நிறுவனம், நீங்க வாகன காப்பீட்டுக்கு கொடுத்த பணத்தைத் திருப்பித் தருவதில்லை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மட்டும் ஏன் திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. 
காப்பீடு என்பது ரிஸ்க்கைப் பகிர்வது, ஒரு லட்சம் பேர் காப்பீடு எடுத்தால், 20 வருடத்தில் 20,000 பேர் கூட இறக்க மாட்டார்கள், அவர்களுக்கு மட்டும் க்ளெய்ம் கொடுத்தால் போதும், மற்ற 19,80,000 பேர் கட்டும் ப்ரீமியம் கம்பெனிக்கே. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ப்ரீமியம் கம்மியாகும்

இப்ப காப்பீட்டின் ப்ரீமியம் எப்படி முடிவு செய்யப் படுகிறது என்று பார்க்கலாம். 
காப்பீடு என்பது Art அல்ல அது Science. காப்பீட்டின் ப்ரீமியம் மூன்று காரணிகள் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. அவை மார்ட்டாலிட்டி ரேட் அதாவது இறப்பு விகிதம், வட்டி விகிதம் மற்றும் கம்பெனியின் செலவுகள்

இதற்கென தனிப்படிப்பு இருக்கிறது அதன் பெயர் ஆக்சூரியல் அறிவியல். ஒரு ஆக்சுவரி இறப்பு விகிதத்தையும் வட்டியையும் கணக்கிட்டு பாலிசிக்கு எவ்வளவு பணம் தேவை என்று சொல்வார், நிறுவனம் நடத்த ஆகும் செலவு மற்றும் லாபம் சேர்த்து ப்ரீமியத்தை நிர்ணயிக்கும்.

இறப்பு விகிதம் : ஒரு நாட்டில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி வாழும் காலம், அவர்கள் செய்யும் வேலை, இருக்குமிடம், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றை கணக்கில் எடுத்து, ஒரு குறிப்பிட்ட வயது வரம்பில் இத்தனை சதவீதம் பேர் இறக்க வாய்ப்புண்டு என்று கணக்கிடுவார்கள்

வட்டி விகிதம் : பயனர்கள் கட்டும் ப்ரீமியத்தை நிறுவனம் பங்குகள், கடன் பத்திரங்கள் (பாண்ட்) மற்றும் வைப்புநிதியில் முதலீடு செய்யும், ஒரு நாட்டின் பொருளாதர நிலைமையை கணக்கில் கொண்டு முதலீடு இத்தனை சதவீதம் வருமானம் கொடுக்கும் என்றும் கணக்கிடுவார்கள்

செலவு : இதைத்தவிர பாலிசியை விற்க, நிறுவனம் நடத்த, க்ளெயிம் செட்டில் செய்ய என்று பல செலவுகள் உண்டு. அவற்றையும் கணக்கில் எடுத்து லாபம் சேர்த்து ப்ரீமியத்தை முடிவு செய்வார்கள். இதனால்தான் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி (ஆன்லைன் மட்டுமே) ஏஜெண்ட்டிடம் வாங்கும் டெர்ம் பாலிசியை விட விலை குறைவாக உள்ளது. ஏனென்றால் இடெர்ம் பாலிசியை விற்க செலவு ஏதும் இல்லை.

இவற்றுக்கும் மேலே, காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த Exposure யும் தாங்களே வைத்துக் கொள்வதில்லை. எப்படி ஒரு பயனர் தன் வருமானம் என்கிற Exposure ஐ காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றி விடுகிறாரோ, அது போல காப்பீட்டு நிறுவனங்களும் தம் Exposureஐ ரீஇன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தள்ளி விடுகின்றன. நாலு கம்பெனிகள் வெவ்வேறு நாடுகளில் தலா ஒரு கோடி பாலிசி விற்கின்றன என்று வைத்துக் கொள்வோம், ரீஇன்சூரன்ஸ் கம்பெனி அந்த நாலு கோடி பாலிசிகளையும் ரீ இன்சூர் செய்யும், டேட்டாசெட் அதிகமாக அதிகமாக அதுவும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து அவை வரும் போது இழப்பு மிகக்குறைவாக இருக்கும்.

சூரிச், ம்யூனிச், ஸ்விஸ் ரீ, பெர்க்‌ஷைர் போன்ற பல நிறுவனங்கள் ரீஇன்சூரன்ஸ் துறையில் செயல் படுகின்றன, 2016 ஆண்டு இந்நிறுவனங்கள் 76பில்லியன் டாலர் அளவுக்கு ரீ இன்சூரன்ஸ் வழங்கியுள்ளன. இந்திய நிறுவங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட எக்ஸ்போஷரை ரீ இன்சூர் செய்கின்றன. ஒருத்தர் 2 கோடிக்கு பாலிசி எடுத்தால் நிறுவனம் ஒரு கோடி எக்ஸ்போஷரை தன்னிடம் வைத்துக் கொண்டு மிச்ச ஒரு கோடியை ரீஇன்சூர் செய்கிறது. ஏற்கெனவே இறக்கப் போவோரின் எண்ணிக்கை 1-2% அதிலும் குறிப்பிட்ட கவரேஜ் ரீஇன்சூர் செய்யப்படுவதால் நிறுவனம் க்ளெய்ம்களால் நொடித்துப் போக வாய்ப்பு மிகக் குறைவே.

நகைக்கடை வைப்பு நிதியிலும், ஈமு கோழியிலும் முதலீடு செய்ய யோசிக்காத மக்கள் இன்சுரன்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுப் பேர்வழிகள் போன்று நினைப்பது விந்தை. ஐ ஆர் டி ஏ வின் கண்காணிப்பில் செயல் படும் இந்திய காப்பீடு நிறுவங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது அப்படி ஒன்றும் அபாயகரமானது அல்ல என்பது என் கருத்து

வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும்

Life insurance users

இந்த கேப்சனை எல் ஐ சி நிறுவனம் ஒரு தவறான பாலிசிக்கு கொடுத்து வச்சிருக்கு. இது டெர்ம் பாலிசிக்குத்தான் கனகச்சிதமா பொருந்தும்

வாழும் போது : டெர்ம்பாலிசி மன நிம்மதி தரும். ரெண்டு கோடிக்கு வீடு வாங்கின நண்பர் ஒண்ணரை கோடிக்கு கடன் வாங்கி வச்சிருந்தார். ரெண்டு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்தததும் அவருக்கு கிடைத்த நிம்மதி வார்த்தையில் விவரிக்க முடியாதது. சுயதொழில் செய்யும் உலகம் சுற்றும் ஒரு வாலிப நண்பருக்கும் அப்படியே… 
நாளைக்கே நாம் இறக்க நேரிட்டாலும் குடும்பம் பொருளாதார ரீதியா கஷ்டப்படாது இருக்கும் நிலைமையை அவர்களுக்கு வழங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. டெர்ம் பாலிசி தவிர வேறு எதாலும் இதை கொடுக்க முடியாது

வாழ்க்கைக்குப் பிறகு :

1. சம்பளம் வருதுன்னு ஒரு லைஃப் ஸ்டைல் உருவாக்கி அதுக்காக வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன்னு வாங்கி வச்சிருக்கோம் நம்மில் பலர் – எதிர்பாராத விதமா நாம் இறக்க நேரிட்டால் ஆயுள் காப்பீடுதான் அக்கடன்களை அடைக்கும்

2. நாம் குடும்பத்துக்கு அளித்து வந்த லைஃப் ஸ்டைலை நமக்குப் பின்னும் அவர்கள் தொடர ஒரே வாய்ப்பு நம் ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு டெர்ம் பாலிசி எடுப்பதுதான்

3. ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்க முடிந்தால் பிள்ளைகளின் நிகழ்காலத்தை மட்டுமன்றி கல்லூரிப்படிப்பு போன்ற எதிர்கால செலவுகளுக்கும் சேர்த்து பணம் விட்டுச் செல்ல முடியும்

4. செத்தும் கொடுத்தவர் சீதக்காதி மட்டுமல்ல என் அப்பாவும்தான்னு பிள்ளைகள் சொல்லுமளவுக்கு விட்டுச் செல்ல கோடிகளை சேர்த்து வைக்கத் தேவையில்லை ஆயிரங்கள் செலவழித்து ஓரிரு கோடிகளுக்கு டெர்ம் பாலிசி எடுத்து வைத்தால் போதும்.

வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் துணை வருவது டெர்ம் பாலிசி மட்டுமே

காப்பீடும் முதலீடும்

insurance vs investmentயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஐந்தறிவு படைத்த யானை கூட தான் இறக்கும் போது அதன் மதிப்புக்கு ஈடான தந்தத்தை விட்டுச் செல்கிறது.

நீங்க சம்பாதிக்கும் பொதே திடீரென இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு என்ன விட்டுட்டுப் போகறீங்க? ஈராண்டு செலவுக்கு வரும் எண்டோமெண்ட் பாலிசிகளையா அல்லது யூஸ்லெஸ் யூலிப் பாலிசிகளையா அல்லது குடும்பத்தைப் பாதுகாக்கும் டெர்ம் பாலிசிகளையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

”நல்ல முதலீடு”, வருமானவரி சேமிக்கும் வழி, புள்ளைங்க எதிர்காலத்துக்கு அவங்க பேர்ல பாலிசி போடுங்க – போன்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி பாலிசி போட்டால் கஷ்டப்படப்போவது நீங்களல்ல, உங்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படப்போவது உங்க குடும்பம்தான்.

எண்டோமெண்ட் பாலிசி போடச் சொல்லி வற்புறுத்தறவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி -இதுல காப்பீடு எவ்வளவுன்னு கேளுங்க – ? ஒருத்தரோட சம்பளம் மாதம் 50,000 ரூபாய், அதில் அவரால் 5% க்கு மேல் காப்பீட்டுக்கு செலவு செய்ய முடியாது அதாவது மாதம் 2500ரூபாய் – இதில் எவ்வளவு எண்டோமெண்ட் கவர் எடுக்க முடியும் தெரியுமா? தோராயமாக 7,5,000 மட்டுமே (35 வயது, 30 ஆண்டுகள் ஜீவன் ஆனந்த்) – நீங்கள் உயிரோடு இருந்தால் மாசம் 50,000 ரூபாய் கொண்டு வருவீங்க, அதுவும் உயர்ந்துகிட்டே போகும். திடீர்னு நீங்க இறந்தா வெறும் 7.5 லட்சத்தை வச்சிக்கிட்டு உங்க குடும்பம் எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும்?

27,000 ரூபாய்க்கு எவ்வளவு டெர்ம் பாலிசி எடுக்க முடியும் தெரியுமா? 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எல் ஐ சியில் எடுக்கலாம். தனியார் நிறுவனத்தில் எடுத்தால் கிட்டத்தட்ட 15-18 ஆயிரம் ரூபாய் ப்ரீமியத்துக்கே இவ்வளவு கவரேஜ் எடுக்கலாம். அதாவது உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு. இதை வச்சிக்கிட்டு உங்க பிள்ளைகள் தலையெடுக்கும் வரை கௌரம்வமா உங்க குடும்பம் வாழ்ந்து விடமுடியும்

உங்க இழப்பை ஈடுசெய்ய முடியாது, ஆனால் நீங்க ஈட்டும் வருமானத்தை கண்டிப்பாக ஈடுசெய்ய முடியும், ஆனால் அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே முடியும்.

இனியாவது ஆயுள் காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்துப் பார்க்க ஆரம்பிங்க. காப்பீட்டு நிறுவன எண்டோமெண்ட் பாலிசிகள் 5-6% மிக அதிகபட்சமாக 7% வளர்ச்சி கிடைக்கலாம், அதற்கு மேல் தரக்கூடிய திட்டம் இல்லை. செல்வமகள் போன்ற அரசின் திட்டங்களில் கூட இதை விட அதிக வட்டி கிடைக்கிறது. நீண்ட கால பங்குச் சந்தை முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட்கள்) 10-15%க்கும் மேல் வளர்ச்சி தந்துள்ளன. சலூன்ல போய் சாம்பார் பொடி கேக்கமாட்டீங்கல்ல, அது போல வங்கிகளில் டெபாசிட், கடன் பத்தி மட்டும் பேசுங்க, காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு பத்தி மட்டும் பேசுங்க, முதலீட்டுக்கு முதலீட்டு நிறுவனங்களை அணுகுங்க

LIC யின் பங்குச்சந்தை முதலீடுகள்

டெர்ம் பாலிசியைத் தவிர வேறெந்த ஆயுள் காப்பீட்டையும் வாங்காதீங்கன்னு எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் பாலிசி நல்லாருக்குன்னு சொல்றாங்களே? ஏஜெண்ட் இதுல போட்டா நல்ல ரிட்டர்ன்ஸ் இருக்கும்னு சொல்றாரே? வங்கியில் இந்த இன்சூரன்ஸ் பால்சியில் 8% கேரண்டீட் ரிட்டர்னு சொல்றாங்களே? இது நல்ல முதலீடான்னு கேட்பது நிற்கவேயில்லை

நேரடி / மியூச்சுவல் ஃபண்ட் வழிப் பங்குச் சந்தை முதலீடு எல்லாம் ரிஸ்க்குங்க, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் எண்டோமெண்ட் / ஹோல் லைஃப் பாலிசியில் முதலீடு செய்தா கேரண்டீட் ரிட்டர்ன் கிடைக்கும்னு நினைக்கறாங்க பலபேர்.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் இரு கேள்விகள்

1. எந்த எண்டோமெண்ட் பாலிசிலியிலும் ரிட்டர்ன்ஸ் குறித்து எவ்வித கேரண்டியும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. வங்கியில் நீங்கள் வைக்கும் பணம்தான் (சேமிப்புக் கணக்கிலோ வைப்பு நிதியிலோ) அதன் மூலப்பொருள். 4 முதல் 7% வட்டிக்கு வங்கி உங்களிடம் பணம் வாங்கி அதை 9-18 % வட்டிக்கு விற்கிறது. உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி கணக்கில் வைத்தால் வங்கி தோராயமாக 4- 5 லட்ச ரூபாயை Fractional Reserve Lending மூலம் கடன் கொடுக்கும். இதன் மூலம் வங்கி வருமானம் பெறுகிறது. பணத்தை மூலதனமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தாத காப்பீட்டு நிறுவனம் எப்படி வங்கியை விட அதிக வட்டி தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியாவை பொருத்த வரை எல் ஐ சி தான் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். அது தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சார், ஷேர்லாம் ரிஸ்க் – மொத்த முதலும் கோவிந்தாவாகிடும், பாலிசில போட்டீங்கன்னா கேரண்டீட் ரிட்டர்ன் என்று சொல்லி ஏஜெண்ட் ஜீவன் ஆனந்துக்கு வாங்கும் ப்ரீமியத்தை எல் ஐ சி பங்குச் சந்தையிலும் அரசு கடன் பத்திரன்களிலும்தான் முதலீடு செய்கிறது. அவற்றிலிருந்து எல் ஐ சி அள்ளி எடுக்கும் வருமானத்தில்தான் உங்களுக்கான போனஸ் கிள்ளித் தரப்படுகிறது.

இவ்வாறு பல ஆண்டுகளாக எல் ஐ சி முதலீடு செய்து வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

(மே 2018 வரையிலான விவரங்கள்)

நேரடிப் பங்குகளில் முதலீடு – 4.6 லட்சம் கோடிகள்
ப்ரெஃபென்ஸ் ஷேர் 59 ஆயிரம் கோடிகள்
மியூச்சுவல் ஃபண்ட்கள் 25 ஆயிரம் கோடிகள்

அரசு கடன் பத்திரங்கள் 1.6 லட்சம் கோடி
பிர கடன் பத்திரங்கள் 25 ஆயிரம் கோடி
Debentures / Bonds 78 ஆயிரம் கோடி

2018 ல் மட்டும் எல் ஐ சி பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை 58,000 ஆயிரம் கோடி.

இதையெல்லாம் கூட்டி மொத்தமா எவ்வளவு எல் ஐ சி வச்சிருக்குன்னு பாத்துக்கோங்க

எல் ஐ சி முதலீடு செய்திருக்கும் பங்குகள், அரசின் கடன் பத்திரங்கள் அனைத்திலும் நாமும் நேரடியாகவோ மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமோ முதலீடு செய்ய முடியும். எல் ஐ சி யின் போர்ட்ஃபோலியோ திறமையாக நிர்வகிக்கப் படுகிறது என்பது உண்மையே – ஆனால் அதே அளவு திறமையுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.

நொடித்துப் போன நிறுவனங்களை எல் ஐ சியின் தலையில் கட்டுவதை மத்திய அரசு ஒரு பழக்கமாவே வச்சிருக்கு. அது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்கள் எல் ஐ சியை விட சிறப்பாக போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியும்

எல் ஐ சியின் போர்ட்ஃபோலியோ எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் எண்டோமெண்ட் பாலிசிகளில் 5-6% க்கு மேல் ரிட்டர்ன் கிடைக்கப் போவதில்லை. எல்லோரும் பயமுறுத்தறா மாதிரி பங்குச் சந்தை மொத்தமா வீழ்ந்தால் காப்பீடு நிறுவனங்களும் போனஸ் வழங்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்களில் 1-2% கட்டணம் போக மிச்சத்தொகை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது, வளர்ச்சியின் முழு பெனிஃபிட்டும் உங்களுக்கே

டெர்ம் பாலிசி தவிர மற்ற பாலிசிகள் தரும் காப்பிடும் பிரயோசனப்படாது முதலீடாகவும் அவை மோசமானவை என ஏன் சொல்கிறேன்

35 வயதுடைய ஒருத்தர் 30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கறார்னு வச்சிக்குவோம். அவர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்.

ஜீவன் ஆனந்த் 35 வயது, 30 ஆண்டுகாலம் – இதுக்கு ப்ரீமியம் 1.9 லட்ச ரூபாய்

5 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் 2 லட்ச ருபாய் ப்ரீமியம் கட்டவே முடியாது

அதே ஆள் எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்தால் (35 வயது, 30 ஆண்டுகள்) அதற்கு ப்ரீமியம் வெறும் 11,562 ரூபாய்கள்தான். அதாவது ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய்கள் மட்டுமே. இதை அவரால் சுலபமாக எடுக்க முடியும்.

இப்ப முதலீட்டுக்கு வருவோம். ஜீவன் ஆனந்த் பாலிசியின் முடிவில் கிடைக்கக் கூடிய தொகை 1.8 கோடி, அப்புறமும் காப்பீடு தொடரும், பாலிசிதாரர் இறக்கும் போது ஒரு 50 லட்சம் கிடைக்கும்.
அதற்கு பதிலாக 12 ஆயிரத்துக்கு எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்ச 178,000 ஐ மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் 30 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் உங்களிடம் 5 கோடி ரூபாய்கள் இருக்க நல்ல வாய்ப்புண்டு

இனியாவது உங்க ஓய்வு கால சேமிப்புக்கு எண்டோமெண்ட் பாலிசிகளை நம்பாமல் எல் ஐ சியே நம்பும் பங்குச் சந்தை முதலீடுகளை தேர்ந்தெடுங்கள்

எல் ஐ சியின் முதலீடு குறித்த தகவல்கள் 4/9/2018 அன்று மணிகண்ட்ரோல் தளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டன

ஏன் வேண்டாம் எக்ஸ்ப்ரெஸ் பே? (express pay)

ஃபேஸ்புக் க்ரூப் ஒன்றில் டெர்ம் பாலிசி எடுக்கும் போது சீக்கிரமே ப்ரீமியம் கட்டி முடிக்கற ஆப்சன் எடுப்பது நல்லதான்னு கேட்டிருந்தார், அங்கு ஆங்கிலத்தில் நான் சொன்ன பதிலின் தமிழாக்கம் இங்கு

30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கும் போது ப்ரீமியத்தை எட்டே ஆண்டுகளில் கட்டினா செம லாபம் – ஆனா அந்த லாபம் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுக்கும் நிறுவனத்துக்கும்தான் உங்களுக்கு அல்ல.

ஏன் வேண்டாம் எக்ஸ்ப்ரெஸ் பே?

1. 30 வயதாகும் நபர் 30 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு எடுக்கிறார். ஆண்டு தோறும் கட்டினால் 11,000 ரூபாய் கட்டினால் போதும் . எதுக்கு சார் 30 வருசம் கட்டறீங்க? எட்டே வருசத்தில் கட்டினால் மொத்த ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கும் சீக்கிரமும் கட்டி முடிச்சிடலாம் என்று ஏஜெண்ட்கள் மூளைச் சலவை செய்வர்.
30 ஆண்டுகள் *11000 = 3,30,000
8 ஆண்டுகள் * 28261= 2,26,088

மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் லாபமாகத் தோன்றும். ஆனால், அந்த எட்டு ஆண்டுகளும் நீங்கள் ஆண்டுக்கு 17,261 ரூபாய் அதிகமாகச் செலுத்துவீர்கள். இதையே மாதம் 1438 ரூபாயாக நல்ல மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் 8 ஆண்டுகள் முடிவில் உங்களிடம் 2,10,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். அதாவது ஒரு லட்ச ரூபாய் லாபத்தைப் பெற 2 லட்சத்துக்கும் மேல் இழக்கிறீர்கள். அப்படி 8 ஆண்டுகள் முதலீசு செய்து 2 லட்சத்துக்கும் சேர்த்தால், அதற்கப்புறம் அதிலிருந்து வரும் வட்டி அல்லது வளர்ச்சியிலிருந்தே ஆண்டுக்கு 11,000 எடுத்து ப்ரீமியமாக கட்டலாம்.

2. இந்த எக்ஸ்ப்ரஸ் பே இன்னும் ஒரு விதத்தில் நஷ்டமே தருகிறது. பாலிசிதாரர் ரெகுலர் பே முறையில் ப்ரீமியம் செலுத்தி வரும் போதும் 9 ம் ஆண்டு இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும், அவர் செலுத்திய ப்ரீமியம் 8*11000 = 88,000 ரூபாய் மட்டுமே. அதே அவர் எக்ஸ்ப்ரஸ் பே தெரிவு செய்தாலும் குடும்பத்துக்கு கிடைக்கப் போவது என்னவோ அதே ஒரு கோடிதான் ஆனால் அவர் 2,26,000 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி முடித்திருப்பார்.

3. பாலிசிதாரர், 55 வயதில் சீக்கிரமே ரிட்டையர் ஆகும் முடிவு எடுத்தால், அப்போது டெர்ம் பாலிசியை கேன்சல் செய்து விடலாம், அதற்கப்புறம் 5 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் எக்ஸ்ப்ரஸ் பே முறையில் 8 ஆண்டுகளில் முழு ப்ரீமியத்தையும் செலுத்தியிருந்தால், தேவையற்ற போதும் கவரேஜ் தொடர்ந்து கொண்டிருக்கும்

4. வருமான வரி விலக்கு. 30-35 வயதில் இருக்கும் போது பெரும்பாலானோருக்கு வீட்டுக் கடன் இருக்கும். வீட்டுக் கடனுக்கான அசல், பி எஃப், இ எல் எஸ் எஸ் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் சேத்து சுலபமா 1.5 லட்சம் வந்து விடும் பலருக்கும். இந்நிலையில் அதிக ப்ரீமியம் கட்டினாலும் அது 80சி யின் உச்ச வரம்புக்கு மேல் போய் வரி விலக்குக்கு உபயோகமில்லாமல் போய் விடும். 15-20 ஆண்டுகளில் வீட்டுக்கடன் முடிந்து விடும் – அப்போது இன்சூரன்ஸ் ப்ரீமியம் வருமானவரி விலக்கு பெற உபயோகமாக இருக்கும்.

எனவே ஏஜெண்ட்களின் சேல்ஸ் டாக்குக்கு மயங்காமல் பாலிசி காலம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் ப்ரீமியம் கட்டும் முறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது

டெர்ம் பாலிசி – பொதுவான சந்தேகங்கள்

Related imageஆயுள் காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசி எடுக்கும் போது பொதுவா பயனர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்

1. எவ்வளவு காலத்துக்கு காப்பீடு எடுப்பது?

காப்பீடு என்னவோ பெருமாள் கோவில் பிரசாதம் போல எவ்வளவு நாள் கிடைக்குதோ அவ்வளவு நாள் எடுக்கலாம்னு நினைக்கறாங்க. தான் எப்போது இறந்தாலும் பணம் கிடைத்தால் லாபம் என்று நினைப்பது தவறு. இப்படி நினைக்கப் போயித்தான் பலரும் ஹோல் லைஃப் பாலிசி எடுத்து டெர்ம் பாலிசியை விட மிக அதிக ப்ரீமியம் கட்டிக்கிட்டு இருக்காங்க.
காப்பீடு என்பது Income Replacement என்று புரியும் போது ரிட்டையர் ஆகும் வயது வரை காப்பீடு எடுத்தால் போதுமானது என்ற தெளிவு பிறக்கும்.
ரிட்டையர் ஆனப்புறம் (வருமானம் ஈட்டாத நிலையில்) காப்பீட் வீண் செலவே.

30 வயதில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ரிட்டையர்மெண்ட் வயதான 65 வரை காப்பீடு வேண்டி 35 ஆண்டுகாலம் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 60 வயதிலேயே அவருடைய பிள்ளைகள் படிப்பை முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா, அப்போது அவர் காப்பீட்டுக்கு ப்ரீமியம் செலுத்துவதை நிறுத்தி விடலாம்.

2. ப்ரீமியம் செலுத்தும் ஃப்ரீக்வன்சி

காலாண்டுக்கு ஒருமுறையோ அரையாண்டுக்கு ஒரு முறையோ ப்ரீமியம் செலுத்துவதை விட ஆண்டுக்கொரு முறை ப்ரீமியம் செலுத்தும் போது ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட் கிடைக்கும், அதைத் தெரிவு செய்வது நல்லது

3. எவ்வளவு காப்பீடு எடுப்பது?

பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு சிறந்த கவரேஜ், 10 மடங்கு அடிப்படைத் தேவை என்பது உலக வழக்கு.

காப்பீட்டின் அளவை முடிவு செய்வதற்கு முன்னால் இவற்றை கன்சிடர் செய்வது நலம்

கடன்கள் : ஒரே ஒரு வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பமாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்தலைவருக்கு எடுக்கும் காப்பீடு அவர் வைத்திருக்கும் அனைத்துக் கடன்களையும் கவர் செய்யும் வகையில் இருக்க வேண்டும்

கல்விச் செலவு : உங்க பிள்ளைகளின் வயது, அவர்கள் கல்லூரிப்படிப்பை முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

தற்போதைய லைஃப் ஸ்டைல் :
குடும்பத் தலைவர் தீடிரென இறக்க நேரிட்டாலும் குடும்பம் தற்போதைய லைஃப் ஸ்டைலை தொடர எவ்வளவு பணம் தேவைப்படும் என்று பாருங்கள்.

எதிர்காலத்தில் வரக்கூடிய மாற்றங்கள்

இது கொஞ்சம் கடினமான விசயம். தற்போது உங்க குடும்பத்தின் மாதாந்திர செலவு 25,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம், ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தேவை. நீண்ட காலத்துக்கு இன்ஃப்லேசனை கணிப்பது கடினம். விலைவாசி ஆண்டுக்கு 6 முதல் 8% வரை ஏறும் வைத்துக் கொள்ளலாம். சராசரியாக 7% விலைவாசி உயர்ந்து கொண்டே போனால் 20 ஆண்டுகள் கழித்து இதே லைஃப் ஸ்டைலுக்கு ஆண்டுக்கு 11 லட்சரூபாய்க்கு மேல் தேவை. பிள்ளைகளின் தற்போதைய வயது, அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதையும் கணக்கிட்டு காப்பீட்டின் அளவை முடிவு செய்யுங்கள்.

கடன்கள் கம்மியாகவும், பிள்ளைகள் விரைவில் வேலைக்குப் போகும் சூழலும் இருப்போர் ஆண்டு வருமானத்தின் 10-15 மடங்கும் மற்றோர் ஆண்டு வருமானத்தின் 15-20 மடங்கும் காப்பீடு எடுப்பது நல்லது.

4. எந்த நிறுவனத்தில் எடுப்பது?

அரசு நிறுவனமான எல் ஐ சி யிலோ (இடெர்ம் பாலிசி) தனியார் நிறுவனங்களான ஆதித்ய பிர்லா, ஐசிஐசிஐ, எச் டி எஃப் சி, ஏகான் போன்ற நிறுவனம் ஒன்றிலோ எதில் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

5. Premium திரும்பக் கிடைக்கும் பாலிசிகள் எடுக்கலாமா?

வேண்டாம், அந்த மாதிரி பாலிசிகளின் ப்ரீமியம் அதிகமாக இருக்கும். உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடு (Sum Assured) குறைவாக எடுக்க நேரிடும், மேலும் உங்க காசை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருவாங்க. அதற்கு பதில் நல்ல முதலீடு செய்யலாம்

காஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு

dollars in cupகாஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு

கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டு தகவல் சொன்னார்கள்.

முதல் நண்பர், சிங்கப்பூர் வாழ் என் ஆர் ஐ வயது 35, எச் டி எஃப் சியில் 2 கோடிக்கு டெர்ம் பாலிசி 30 ஆண்டு காலம் எடுத்திருக்கார். அதற்கு ஓராண்டு ப்ரீமியம் ரூ 21,500 மட்டுமே. நாள் கணக்கில் பார்த்தால் ஒரு நாளைக்கு 58 ரூபாய்

நண்பர் அவரோட நண்பரை டெர்ம்பாலிசி எடுக்க வைத்திருக்கிறார். வயது 29 எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி 32 ஆண்டு காலம், இதன் ப்ரீமியம் வெறும் 15,741 மட்டுமே, அதாவது ஒரு நாளைக்கு 43 ரூபாய்

இன்னொரு நண்பர், வயது 42, எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி எடுத்திருக்கிறார், அதன் ப்ரீமியம் ரூ 26,923, அதாவது ஒரு நாளைக்கு 72 ரூபாய்

இதில் ரெண்டு விசயங்களை கவனிக்கலாம்.

உண்மையான காப்பீட்டுக்கு (எண்டோமெண்ட், மணி பேக் என்ன பிற போன்ற ஃபேக் காப்பீட்டு பாலிசிகள் தவிர்க்கப்படவேண்டியவை) ஆகும் செலவு மிகவும் கம்மி. 40-50 ரூபாய் என்பது பலருக்கு தினமும் வெளியில் காஃபி குடிக்கும் செலவு. அவ்வாறு உணவகத்தில் காஃபி குடிப்பதற்கு பதிலாக அப்பணத்தைக் கொண்டு கோடி ரூபாய் காப்பீடு எடுத்து குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

ரெண்டாவது இளமையில் கல், கற்றபின் காப்பீடு எடு என்பதே. 29 வயதாக இருக்கும் போது 1 கோடி ரூபாய் காப்பீடு 16 ஆயிரத்துக்கும் குறைவாகக் கிடைக்கிறது, அதே அளவு காப்பீடு, குறைவான காலத்துக்கே 27 ஆயிரம் ரூபாய் ஆகிறது 41 வயதானவருக்கு. வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஆயுள் காப்பீடு பெறுவதும் ஓய்வு காலத்துக்கு திட்டமிடுதலும் அவசியம்.

அரசு வேலையில் இருப்போர் புது பென்சன் திட்டமா பழைய திட்டமான்னு போராட்டம் செய்வதை வேடிக்கை பார்க்கும் தனியார் துறை ஊழியர்கள் தமக்கு எந்த பென்சன் திட்டமும் இல்லை என்பதை உணர வேண்டும்

நன்றே செய் அதுவும் இன்றே செய்

இன்சூரன்ஸ் எடுக்கறதுன்னு முடிவு செஞ்சதும் இன்னிக்கே எடுத்துடுங்க… நாளைக்கு ப்ரீமியம் அதிகமாக ஆகிடலாம். நண்பர் ஒருத்தர் என்னிடம் பேசியபின், டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செஞ்சார், தேவையான எல்லா ஆராய்ச்சியும் பண்ணி, அமவுண்ட் கம்பெனி எல்லாம் முடிவு செஞ்சிட்டார், ஆனா பாலிசி எடுக்க ஒரு வாரம் நேரம் எடுத்துக்கிட்டார், ப்ரீமியம் அமவுண்ட் ஆண்டுக்கு 500 ரூ அதிகமாகிடிச்சு. இன்சூரன்ஸை பொருத்தவரை Nearest Birthday is what will be taken for your age. அதாவது ஜூலை 7 1974 அன்று பிறந்த எனக்கு – ஜனவரி 7 2017 வரை 43 வயது என கணக்கிடப்படும், ஜனவரி 8 க்கு அப்புறம் 44 வயதுக்கு உரிய ப்ரீமியம் கட்ட வேண்டும். ஆண்டுக்கு 500 ருபாய் சின்ன விசயமாத் தெரியலாம், ஆனால் 35 வயதாகும் ஒருவர் இந்த 40 ரூபாயை மாசாமாசம் மிச்சம் பிடிச்சு முதலீடு செய்து வந்தால் அவரோட ரிட்டையர்மெண்ட் ஃபண்டில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் இருக்கும். தள்ளிப் போடுதல் பர்ஸுக்கு கெடுதல்.

டெர்ம் பாலிசியில் தேவையற்ற செலவுகள்

எண்டோமெண்ட் பாலிசிகளில் அதிக லாபம் பார்த்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் டெர்ம் பாலிசியின் பக்கம் கவனத்தைத் திருப்பியதும் அதிலும் தேவையற்ற விசயங்களைப்புகுத்தி பணம் சம்பாதிக்க முயல்கின்றன. அதில் முக்கியமானது “ரிட்டர்ன் ஆஃப் ப்ரீமியம்” ரைடர். இதில் பயனர் காப்பீட்டு காலத்தில் இறக்காவிட்டால் அவர் கட்டிய ப்ரீமியம் தொகை திரும்பக் கிடைக்கும்

30 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு ஒரு கோடி டெர்ம் பாலிசி எடுத்தால் அவரோட ப்ரீமியம் ஆண்டுக்கு தோரயமாக 10,000 ரூபாய் வரும் அதுவே அவர் ப்ரீமியம் திரும்பக் கிடைக்கும் பாலிசி எடுத்தால் ப்ரீமியம் ஆண்டுக்கு 25,000 ரூபாய். அதாவது ஆண்டுக்கு 15,000 ரூபாய்.

பாலிசி முடிவில் அவர் இறக்கா விட்டால் அவருக்கு கிடைக்கும் தொகை 25000*30 = 7,50,000 ரூபாய். அதற்கு பதிலாக அவர் ப்யூர் டெர்ம் பாலிசி 10,000 ரூபாய்க்கு எடுத்துவிட்டு மிச்ச 15,000த்தை மாதம் 1250 ரூபாய் வீதம் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் 10% வளர்ச்சியில் 30 ஆண்டுகால முடிவில் அவருக்கு 28,25,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். 30 ஆண்டு என்பது மிக நீண்ட காலம் 10% வளர்ச்சி காண சாத்தியம் மிக அதிகம். வெறும் 6% வளர்ச்சி கண்டாலே அவரிடம் 12,55,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்.

காப்பீட்டுக்கு கட்டிய பணம் திரும்பக் கிடைக்கணும் என்கிற மனநிலையில் இருந்து வெளியே வந்து சிந்தித்தால் யாரும் இதைத் தெரிவு செய்ய மாட்டார்கள்.

தேவையற்ற இரண்டாவது எக்ஸ்ப்ரஸ் பே. 30 வயதாகும் நபர் 30 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு எடுக்கிறார். ஆண்டு தோறும் கட்டினால் 11,000 ரூபாய் கட்டினால் போதும் (இது வேறு நிறுவனம்). எதுக்கு சார் 30 வருசம் கட்டறீங்க? எட்டே வருசத்தில் கட்டினால் மொத்த ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கும் சீக்கிரமும் கட்டி முடிச்சிடலாம் என்று ஏஜெண்ட்கள் மூளைச் சலவை செய்வர். 
30 ஆண்டுகள் *11000 = 3,30,000
8 ஆண்டுகள் * 28261= 2,26,088 
மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் லாபமாகத் தோன்றும். ஆனால், அந்த எட்டு ஆண்டுகளும் நீங்கள் ஆண்டுக்கு 17,261 ரூபாய் அதிகமாகச் செலுத்துவீர்கள். இதையே மாதம் 1438 ரூபாயாக நல்ல மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் 8 ஆண்டுகள் முடிவில் உங்களிடம் 2,10,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். அதாவது ஒரு லட்ச ரூபாய் லாபத்தைப் பெற 2 லட்சத்துக்கும் மேல் இழக்கிறீர்கள். அப்படி 8 ஆண்டுகள் முதலீசு செய்து 2 லட்சத்துக்கும் சேர்த்தால், அதற்கப்புறம் அதிலிருந்து வரும் வட்டி அல்லது வளர்ச்சியிலிருந்தே ஆண்டுக்கு 11,000 எடுத்து ப்ரீமியமாக கட்டலாம்.

இந்த எக்ஸ்ப்ரஸ் பே இன்னும் ஒரு விதத்தில் நஷ்டமே தருகிறது. பாலிசிதாரர் ரெகுலர் பே முறையில் ப்ரீமியம் செலுத்தி வரும் போதும் 9 ம் ஆண்டு இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும், அவர் செலுத்திய ப்ரீமியம் 8*11000 = 88,000 ரூபாய் மட்டுமே. அதே அவர் எக்ஸ்ப்ரஸ் பே தெரிவு செய்தாலும் குடும்பத்துக்கு கிடைக்கப் போவது என்னவோ அதே ஒரு கோடிதான் ஆனால் அவர் 2,26,000 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி முடித்திருப்பார்.

பாலிசிதாரர், 55 வயதில் சீக்கிரமே ரிட்டையர் ஆகும் முடிவு எடுத்தால், அப்போது டெர்ம் பாலிசியை கேன்சல் செய்து விடலாம், அதற்கப்புறம் 5 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் எக்ஸ்ப்ரஸ் பே முறையில் 8 ஆண்டுகளில் முழு ப்ரீமியத்தையும் செலுத்தியிருந்தால், தேவையற்ற போதும் கவரேஜ் தொடர்ந்து கொண்டிருக்கும்

தேவையற்ற மூன்றாவது ரைடர் இரண்டாவது ரைடரைப் போன்றது ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே. 30 வயது ஆகும் நபர் 30 ஆண்டுகளுக்கு டெர்ம் பாலிசி எடுக்க விரும்புகிறார். அவருக்கு சொல்லப்படுவது – உங்களால் 30 ஆண்டுகள் ப்ரீமியம் கட்ட முடியும், 50 ஆண்டுகளுக்கு கவரேஜ் தர்றோம், நீங்க 30 ஆண்டுகள் ப்ரீமியம் கட்டினால் போதும் என்று. 30 ஆண்டுகள் பணம் கட்டி 50 ஆண்டுகள் கவரேஜ் பெருவது லாபம் என்று நினைத்துவிடாதீர்கள் – கம்பெனிகள் செய்வது மேலே கூறியது போன்றே – 50 ஆண்டுகளுக்கான ப்ரீமியத்தை உங்களிடமிருந்து 30 ஆண்டுகளில் வசூலித்து விடுவார்கள் – இதை வேண்டாம் என்று சொல்லக் காரணம் வேறு. எக்ஸ்ப்ரஸ் பே முறையில் பண நஷ்டம் மட்டுமே ஆனால் இந்த பாலிசி அடிப்படையிலேயே தவறு. ரிட்டையர் ஆன, வருமானம் ஈட்டாத யாருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை – 60 வயது முதல் 80 வயது வரை தேவையே படாத காப்பீட்டுக்கு 30 ஆண்டுகாலம் ப்ரீமியம் கட்டிக் கொண்டு இருப்பீர்கள்.

காப்பீடு என்பது செலவு, அது முதலீடு அல்ல, காப்பீட்டுக்கு கட்டிய பணம் திரும்ப வரவேண்டும். ரிட்டையர் ஆன பின்பும் 80-90 வயதில் இறந்தாலும் பணம் கிடைக்கணும் போன்ற எண்ணங்களை விட்டொழித்தால், தேவைப்படும் காலத்தில் தேவையான அளவு காப்பீடு பெறலாம்