பெண்களின் பொருளாதார பாதுகாப்பிற்கு

பெண்களின் பாதுகாப்பு இப்போ ஹாட் டாபிக். பெண்களின் பொருளாதார பாதுகாப்பு பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் அவர்கள் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்

உங்கள் குடும்பத்தின் நெட் வொர்த் என்ன?  நெட் வொர்த்தா அப்படின்னா?

சேமிப்பை எப்படி முதலீடு செய்கிறீர்கள்? என் கணவர் தாங்க அதெல்லாம் பார்க்கிறார்.

உங்க கணவருக்கு எவ்வளவு ஆயுள் காப்பீடு இருக்கு? தெரியலீங்க.. எல்.ஐ.சி-யில் ஏதோ பாலிசி வச்சிருக்கார், என் பேர்லயும் பிள்ளைங்க பேர்ல கூட இருக்கு, மத்த விவரங்கள் எல்லாம் அவருக்குத்தான் தெரியும்

சரி, வங்கிக் கணக்கின் ஆன்லைன் பாஸ்வேர்டாவது தெரியுமா? தெரியாது, கணவர் சொல்லவும் இல்லை, எனக்கும் கேக்கணும்னு தோணலை.

இந்தியாவில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். இவர்களிடம் கேக்க இன்னோரு கேள்வி இருக்கு – நாளை உங்க கணவர் இறந்துவிட்டால் அடுத்த 15-20 ஆண்டுகள் பிள்ளைகள் தலையெடுக்கும் வரை எப்படி குடும்பம் நடத்துவது என்று உங்களிடம் ப்ளான் இருக்கா?

இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. பெங்களூரில் வசித்த ஒரு தம்பதி – மனைவி சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், கணவர் மென்பொருள் நிபுணர். மெத்தப் படித்த இப்பெண்மணியும் மற்றவர்களைப் போல நிதி நிர்வாகத்தில் பங்கெடுக்கவில்லை. ஒரு நாள் கணவர் விபத்தில் இறந்ததும் அவர் உலகமே தலை கீழாக மாறிப் போனது. வீட்டுக் கடனுக்கு தவணை கட்டும் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்ட் அவரிடம் இல்லை, வங்கிக் கணக்கு ஜாயிண்ட்டாக இல்லாததால் அவரால் உடனடியாக அதை ஆப்பரேட் செய்ய முடியவில்லை. திருமணத்துக்கு முன்னரே எடுக்கப்பட்ட காப்பீடில் இறந்து போன மாமியார் பேர் நாமினியா இருக்கு. எல்லா பாஸ்வேர்ட்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்த லேப்டாப் விபத்தில் உருக்குலைந்து விட்டது. இம்மாதிரியான நிலை வராமல் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.

Division of Labor நல்லதுதான், வீட்டின் சில வேலைகளை மனைவியும் வேறு சிலவற்றை கணவனும் பிரித்துச் செய்வது நல்ல பழக்கம் ஆனால் அனைத்தையும் இப்படி கோடு போட்டு பிரிப்பதுமில்லை, பிரிக்கவும் முடியாது. வீடு வாங்குவது, பிள்ளைகளுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுப்பது போன்ற விசயங்களில் பெண்கள் பங்கெடுக்காமல் இருப்பதேயில்லை. கணவர் திடீரென இறந்தால் அவை இரண்டுமே (வீடு மற்றும் கல்வி) கேள்விக்குறியாகி விடும் என்பதை கணவனும் மனைவியும் உணர வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் அதைச் சமாளிக்க தேவைப்படும் அனைத்து விவரங்களையும் இருவரும் பரஸ்பரம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பெண்களின் பொருளாதார பாதுகாப்புக்கு ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை என்னென்ன?

  1. ஆணை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்பீடு) எடுத்து வைக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானத்தின் 10 மடங்காவது காப்பீடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
  2. காப்பீடு குறித்து பேசும் போது பெண்களும் இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளைத் தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றிற்கு இரு முறை சரி பார்த்தல், நாமினியாக தன்னை நியமித்தல், நாமினியின் விவரங்களை சரியாக எழுதுதல் (பேர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகியவை பெண்களின் கடமை.
  3. எங்கெல்லாம் ஜாயிண்ட் ஓனர்ஷிப் சாத்தியமோ (வங்கிக் கணக்கு, அசையும் அசையாச் சொத்து அனைத்தும்) அவை அனைத்தும் இருவர் பேரிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  4. சேமிப்பு / முதலீடு குறித்த அனைத்து சந்திப்பிலும் பெண்களும் இருக்க வேண்டும். முடிவெடுக்க முடிந்தால் நலம் அப்படி இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் என்னென்ன சேமிப்பு / முதலீடு உள்ளன, அவற்றை கணவனின் இறப்பிற்கு பிறகு எப்படி வாங்குவது என்பதைத் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
  5. உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக உயிலில் யார் யார்க்கு என்னென்ன சேர வேண்டும் என எழுதி கையெழுத்திட்டு சாட்சிக் கையெழுத்துடன் வையுங்கள். உயில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ் நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிரை மாற்றி எழுத இயலும். ஒரு முறை எழுதிவிட்டால் கண்ட்ரோல் போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை.
  6. எவ்வளவுதான் நல்ல பிள்ளைகளாக இருந்தாலும் சான்ஸ் எடுக்காமல் மனைவியை நாமினியாகவும் வாரிசுதாரராகவும் எழுதுங்கள். மனைவியை பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்
  7. வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுண்ட் லாகின், இமெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்ட்களையும் இருவரும் அறிந்த இடத்தில் சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்ட் மாற்றும் போதும் தவறாமல் சேமித்து வைத்திருக்கும் இடத்தில் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
  8. கணவன், மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது, திடீரென ஒருவர் இறந்தால் மற்றவர் அந்த போன் நம்பரை தொடர்ந்து உபயோக்கிக்க இயலும். செல்போனில் வரும் ஓ.டி.பி இல்லாமல் பாஸ்வேர்ட் மாற்றுவது கடினம்.
  9. பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்ட் ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து ஒரு பத்து கேள்விகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கான பதில்கள் கொடுத்து அவற்றையே உபயோகிக்கச் சொல்லுங்கள். அவற்றையும் பாஸ்வேர்ட் ஷீட்டில் சேமித்து வையுங்கள். ஒரு வேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்ட் தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்ட்டை மாற்ற இயலும்.
  10. குழந்தை பிறப்புக்குப்பின் இல்லத்தரசியாக மாறுபவர்கள் குழந்தைகள் ஒரளவு வளரந்து முழு நேரப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தபின்னர் மீண்டும் வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தோ செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறையிலும் பெருகி விட்டிருக்கின்றன. அவற்றை பற்றி பெண்கள் யோசிப்பது முக்கியம்
  11. அமெரிக்காவில் விவாகரத்து ஆகும் போது (திருமணத்துக்கு முன்பே அக்ரீமெண்ட் போடவில்லையென்றால் ) இருக்கும் சொத்துகள் அனைத்தும் கணவன் மனைவிக்கு பிரித்து வழங்கப்படும், அது நாள் வரை யார் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதெல்லாம் பொருட்டேயில்லை. இப்படிப்பட்ட தீர்க்கமான விதிகள் இந்தியாவில் இல்லாத நிலையில் பெண்கள் தமக்கென சேமித்தல் அவசியம். மேலே சொன்ன மாதிரி ஜாயிண்ட் வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ளலாம், அல்லது பெண்கள் தங்களுக்கென ஒரு வங்கிக் கணக்குத் துவங்கி அதில் குடும்பத்தின் சேமிப்பில் பாதியை வைக்கலாம்.
  12. இவற்றை செய்த பின் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். நம் குடும்பத்தில் நிகழாத வரை பேரிழப்பும் வெறும் புள்ளிவிவரமே.. ஒருவேளை இழப்பு நம் குடும்பத்தில் நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.