இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் அப்படீங்கறாங்களே அதில் முதலீடு செய்யலாமான்னு நெறய பேரு யோசிக்கறாங்க…
முதலீடு செய்யறதுக்கு முன்னாடி இண்டெக்ஸ் ஃபண்டுனா என்ன? அது யாருக்கு சரியா வரும் எல்லாம் தெரிஞ்சிக்கணும்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் இருவகை உண்டு – Actively Managed and Passively Managed. நமக்கு தெரிந்த பெரும்பாலான ஃபண்ட்கள் ஆக்டிவிலி மேனேஜ்ட் கேட்டகரி. எல்லா ஃபண்ட்களும் நிஃப்டி போன்ற ஏதோ ஒரு இண்டெக்ஸை ட்ராக் செய்யும். உதாரணத்துக்கு எஸ் பி ஐ ப்ளூ சிப் ஃபண்ட் BSE 100 Index ஐ ட்ராக் செய்கிறது. அதிலிருக்கும் கம்பெனிகளில் 50-60 ஐ தேர்ந்தெடுத்து அதன் பங்குகளில் முதலீடு செய்கிறார் இதன் ஃபண்ட் மேனேஜர். இப்பங்குகளின் போக்கை தினம்தோறும் கவனித்து அவர் கணிப்பின் படி வாங்க / விற்க முடிவெடுக்கிறார்.
இதே BSE 100 Index ஃபண்ட் என்று ஒன்று இருந்தால் அது passive முறையில் நிர்வகிக்கப்படும். இந்த இண்டெக்ஸில் இருக்கும் அனைத்து கம்பெனிகளின் மார்க்கெட் கேப்பின் மொத்தம் நூறு கோடின்னு வச்சிப்போம், அதில் ஒரு கம்பெனியான எச்டிஎஃப்சியின் மதிப்பு 5 கோடி, ஐசிஐசிஐயின் மதிப்பு 3 கோடின்னு வச்சிக்கிட்டால், அவற்றின் வெயிட்டேஜ் முறையே 5 மற்றும் 3 சதவீதமாகும். இதே மாதிரி எல்லா கம்பெனிகளுக்கு வெயிட்டேஜ் போட்டு ஒரு அல்கோரிதம் எழுதி வச்சிடுவாங்க. அந்த அல்கோரிதம் ஃபண்டுக்குள் வரும் ஒவ்வொரு ரூபாயையும் அதே விகிதததில் முதலீடு செய்து விடும். கம்பெனிகளின் மார்க்கெட் கேப் மாறும் போதோல்லாம் அது ஆட்டோமேட்டிக்காக ரீ பேலன்சிங் செய்து கொண்டேயிருக்கும்.
ஆக்டிவிலி மேனேஜ்ட் ஃபண்களைப் போல இதில் தினந்தோறும் வர்த்தகம் நிகழ்ந்து கொண்டே இருக்காது. எனவே இதன் டர்ன் ஓவர் ரேஷியோ கம்மியா இருக்கும் (டர்ன் ஓவர் ரேஷியோ என்பது ஒரு ஃப்ண்ட் ஒரு வருடத்தில் எத்தனை பங்குகளை மாற்றுகிறது என்பதைக் குறிப்பது, ஒரு வருடத்தில் தன்னுள் இருக்கும் அனைத்து பங்குகளின் அளவையும் ஒரு ஃபண்ட் மாற்றினால் அதன் டர்ன் ஓவர் ரேஷியோ 100%, பொதுவா இது மேனேஜ்ட் ஃபண்ட்களில் அதிகமா இருக்கும்)
சாதகங்கள்
இண்டெக்ஸ் ஃபண்ட்களுக்கு மேனேஜர் அவசியமில்லை, அல்கோரிதம்கள் அவர் வேலையை செய்துவிடும் அல்லது எளிதாக்கிவிடும். இவற்றின் கட்டணம் வெகு கம்மியாக இருக்கும். அமெரிக்க வான்கார்ட் நிறுவனம் 0.04% கட்டணத்திலிருந்து இண்டெக்ஸ் ஃபண்ட்கள் வழங்குகிறது, இந்தியாவில் 0.2% லிருந்து இண்டெக்ஸ் ஃபண்ட்கள் உள்ளன
இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் மிக நீண்ட கால முதலீட்டாளர்களாக இருப்பார்கள், பணம் வெளியே போகாமல் ஃபண்டுக்குள் இருக்கும் போது பங்குகளை விற்பதும் மிகக் குறைவாக இருக்கும். இது ஃபண்டின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும்
மேனேஜெட் ஃபண்ட்கள் எப்போதும் நல்ல முதலீட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும், அப்படி வாய்ப்பு வரும்போது நாலு பங்கை வித்தாத்தான் வாங்க முடியும் என்ற நிலையை தவிர்க்க கையில் எப்போதும் பணம் வைத்திருக்கும் – அப்படி வைத்திருக்கும் பணம் வளர்வதில்லை. ஒரு ஃப்ண்டில் ஆயிரம் கோடி ருபாய் இருந்தால் சுமாராக 20 கோடி ரூபாய் பணமாக கையில் இருக்கும், அப்ப 980 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக்கும், முதலீட்டாளர்களும் 980 கோடியின் பயனை மட்டுமே அனுபவிக்க முடியும்.
இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இண்டெக்ஸின் அனைத்து பங்குகளிலும் முதலீடு செய்து விட்டதால் அது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
பாதகம்னு பாத்தா – இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இண்டெக்ஸ் காணும் வளர்ச்சி மட்டுமே காணும். அதாவது BSE 100 Index 10% உயர்ந்தா அதன் இண்டெக்ஸ் ஃபண்டும் 9.5 முதல் 10.5% வரையே உயரும். மார்க்கெட் 10% உயர்ந்தா என் முதலீடு 25% வளரணும்னு நினைப்பவர்களுக்கு இது சரியா வராது.
இண்டெக்ஸை விட அதிகம் ஏறும் ஃபண்ட் இண்டெக்ஸ் கீழிறங்கும் போது பெரும்பாலும் மிக அதிகமாக இழக்கும்.
இண்டெக்ஸ் ஃபண்ட் டெஸ்ட் மேட்ச், மேனேஜ்ட் ஃபண்ட் ஒரு நாள் போட்டி மாதிரி என்று சொல்லலாம்,. டெஸ்ட் மேட்சில் ஸ்ட்ராடஜி முக்கியம், ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் அதை சரி செய்ய நேரம் இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் ஒரு மோசமான ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்
சாரி டி 20 எல்லாம் நான் கிரிக்கெட்டாகவே கருதுவதில்லை.
இந்தியாவில் இன்னும் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் பெரிய அளவில் வளரவில்லை.
வட்டி விகிதம் மிகவும் கம்மியாகி வரும் நிலையில் இப்பதான் மக்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை நோக்கி வருகின்றனர். நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து மேனேஜ்ட் ஃபண்ட்கள் மார்க்கெட்டை விட சிறப்பா செயல்பட்டுக் கொண்டே இருக்க முடியாது, 30-40 வருடங்களில் மார்க்கெட் ரிட்டன்ஸ் கிடைச்சாலே போதும், கம்மி கட்டணத்தில் தம் குறிக்கோளை அடைய முடியும் என்ற நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.