ஒரு நண்பர் லாபம் தரக்கூடிய SIP Scheme ரெண்டு சொல்லுங்கன்னு கேட்டிருந்தார். போற போக்கில் சொல்லிட்டுப் போக அது ஒன்றும் ஃபாஸ்ட் புட் ஆர்டர் அல்ல. ரொம்ப நாளைக்கு முன்ன எழுதிய போஸ்ட்டிலிருந்து ஒரு பகுதியை மறுபடி எழுதறேன்
முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்
அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் (5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும்.
உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.
கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.
அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.
ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.
நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை
0. இதை ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு 10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க.
1. மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
2. முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
3. கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
4. எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
5. சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு
6. அவசரத்தேவைக்கு மாச சம்பளத்தின் 3-6 மடங்கு இருக்கட்டும்
7. ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும்
8. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
9. பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.
நானோ யாராவது ஒருவரோ இப்ப நாலு ஃபண்ட் பேரைச் சொல்லிட்டுப் போயிடலாம், அவை தொடர்ந்து நல்லா செயல் படும் என்று சொல்ல முடியாது, அதுக்குத்தான் ஆண்டுக்கு ஒருமுறை எல்லாத்தையும் பாத்து ரீபேலன்சிங் செய்யணும் என்று சொல்றது. இதைத் தொடர்ந்து செய்ய கட்டணம் வாங்கும் ஆலோசகரால்தான் முடியும். இலவசமாக சொல்லும் என் போன்றோர் உங்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது.
மருத்துவம் போல் முதலீட்டு ஆலோசனையும் ஒரு ஸ்பெசாலிட்டி ப்ரொஃபசன், அத்துறையில் நிறைய வல்லுனர்கள் இருக்காங்க, அவர்களில் நல்லவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் உதவியுடன் முதலீடு செய்யுங்க