ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு குறித்து தமிழில் பேசும் தளம். I am not a professional financial advisor – certified or otherwise The purpose of articles written here is purely educational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals and Invest as you see fit or consult a Professional Financial Advisor before investing
ஆசான் Va Nagappan இரு வாரங்களுக்கு முன்னர் இது பற்றிச் சொல்லும் போது அவரிடம் சொன்னேன் – இது SIP முறையின் முழு பலனை அடைய சிறந்த வழி என்று
SIP முறை என்பது ஒரு குறிப்பிட்ட ஃபண்டில் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து செலுத்தி வருவது. மாதா மாதம் பணம் செலுத்தலாம் என்பதை இதன் பயனாக மக்கள் பார்த்தாலும் உதன் உண்மையான பயன் Rupee Cost Average அடைவதேயாகும். அதாவது நாம் வாங்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் விலை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும், எஸ் ஐ பி மூலம் வாங்கும் போது we buy units at average cost. பொதுவா இது மாதம் ஒரு முறையோ இரு முறைகளோ வாங்கறா மாதிரியான வசதியை ஃபண்ட் ஹவுஸ்கள் வழங்கி வந்தன. எச் டி எஃப் சி 5, 10, 15, 20, 25 தேதிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கி வந்தது. தினசரி எஸ் ஐ பி என்பது எஸ் ஐ பி யின் முழு பலனையும் அடைய உதவும். மாதா மாதம் ஏற்ற இறக்கங்களை மட்டும் கவர் செய்யாமல் இனி தினசரி ஏற்ற இறக்கங்களின் பலனையும் இதன் மூலம் பெற முடியும்.
இனி வெறும் 500 ரூபாயிலிருந்து எஸ் பி ஐ முறையில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் வசதி
மாதம் 5000 ரூ எச் டி எஃப் சி ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் 1 3 7 10 13 16 19 22 25 28 தேதிகளில் என 10 முறை எஸ் ஐ பியில் 500 ரூ வீதம் முதலீடு செய்யலாம்
ஒரே ஃபண்டில் 15,000 ரூ முதலீடு செய்ய நினைப்பவர்கள் தினசரி 500 என்று மாதத்தின் 30 நாளும் முதலீடு செய்யலாம்.
எச் டி எஃப் சி யின் திட்டம் அடையும் வெற்றியைப் பொறுத்து மற்ற நிறுவனங்களும் இதை அறிமுகப் படுத்து என நினைக்கிறேன்.
நம்மவர்கள் முதலீடு செய்வதே பெரிய விஷயம். அப்படிச் செய்கிறவர்களும் சிலபல தவறுகளைச் செய்துவிடுவதால், அந்த முதலீட்டின் மூலம் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு நாம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?
1. செலவும், முதலீடும் ஒன்றல்ல
எது செலவு, எது சேமிப்பு என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. தங்கம் நல்ல முதலீடு என இன்னும்கூட பலரும் நினைக்கிறார்கள். தங்க நகை வாங்குவது முதலீட்டில் வராது. தினமும் ஓட்ட பயன்படுத்தும் காரும் அப்படித்தான். ரூ.10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார், ஷோரூமை விட்டு சாலைக்கு வந்ததும் அது செகண்ட் ஹாண்ட் காராகி, அதன் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகிவிடும்.
இதுபோலவே, காப்பீடும் செலவே. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, பொருள்களுக்கான காப்பீடு எல்லாம் செலவே. பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ‘முதலீடு’ செய்வதாக நினைத்துப் பணத்தை விரயம் செய்கின்றனர். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைக் காப்பீடு பாலிசி பெற மட்டுமே அணுக வேண்டும். முதலீடு என்பது உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்க வேண்டும்.
2. ஓய்வுக்காலத் தேவைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி
“பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேராது” என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஓய்வுக்காலத்துக்காக காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது தவறானது. காப்பீடும் முதலீட்டு வளர்ச்சியும் வழங்கும் திட்டங் களில் (ULIP) உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடும் கிடைக்காது, வருமானமும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், நீண்ட நாள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
3. தொடர்ச்சியான முதலீடே ஜெயிக்கும்
பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வரும்போது எல்லாரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் செய்வது தவறு. அதைவிடப் பெரிய தவறு, பங்குச் சந்தை விழும்போது முதல் ஆளாக போய் பணத்தை எடுப்பது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ளாமல் அதில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan – SIP) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது.
4. முதலீட்டைப் பரவலாக்காமல் இருப்பது
என்ரான் நிறுவனம், தன் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு முழுவதையும் என்ரான் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதித்தது. அந்த நிறுவனம் திவாலானபோது, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிட்டது. எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் (Don’t put all your eggs in one basket) வந்ததால் வந்த தொல்லை இது. ஒரு நல்ல சொத்துப் பகிர்வில் (Asset Allocation) நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம்/ வெள்ளி அனைத்தும் இருக்க வேண்டும்.
5. கட்டணங்களில் கவனம் செலுத்தாதது
ஒவ்வொரு முதலீட்டுக்கும் கட்டணம் உண்டு. அவற்றில் கூடுதல் கவனம் அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமானது செலவு விகிதம் என அழைக்கப்படும். இதனைப் பார்க்க சிறிதாகத் தெரியும். கட்டணங்கள், 20-30 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும்போது போர்ட்ஃபோலியோவின் செயல் திறனை அது பெரிய அளவில் பாதிக்கும். ஒரே மாதிரியான இரு ஃபண்டுகளை ஒப்பிடுகையில் குறைவான செலவு விகிதம் கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. உதாரணம், இண்டெக்ஸ் ஃபண்டுகள்.
6. கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்வது
ஒரு ஃபண்டின் ஐந்து மற்றும் பத்தாண்டு கால வருமானம் / வளர்ச்சி ஒரு முக்கியக் காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே முதலீட்டை முடிவு செய்யும் காரணியாக இருக்க முடியாது. ஃபண்டின் ஸ்டைல், அளவு, கட்டணம், டேர்ன் ஓவர், ரேட்டிங், ஃபண்ட் மேனேஜரின் செயல்திறன் ஆகிய காரணிகளை வைத்தே ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிலர் ஓராண்டு வருமானத்தை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பார்கள். இது மகா தவறு.
7. வருமான வரிச் சலுகையில் மட்டும் கவனம் செலுத்துவது
அதிகம் பேர் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக வரி விலக்கை நினைக்கிறார்கள். வரி விலக்கில்லா முதலீடு 20% வளர்ச்சி தரும் நிலையில், வருமான வரி விலக்குத் தரும் முதலீடு 10% தந்தால் அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. எனவே, வரி விலக்கு என்பதை மட்டும் பார்க்காமல், அது தரும் வருமானத்தையும் பாருங்கள்.
8. அதிக ரிஸ்க் எடுப்பது அல்லது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பது
சிலர் அஸெட் அலோகேஷன்படி பிரித்து முதலீடு செய்யாமல் எல்லாப் பணத்தையும் அக்ரெஸிவ் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மார்க்கெட் வீழ்ச்சி அடையும்போது இந்த போர்ட்ஃபோலியோ அதிக அளவில் நஷ்டத்தைத் தரும். வேறு சிலரோ, சேமிப்பு முழுவதையும் வங்கி வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். இவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருந்தாலும், வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இரு நிலைகளும் தவறு. முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க் குறைவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும்.
9. ஆலோசகர்களைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை ஆலோசகர்களாக்குவது
முதலீடு செய்யத் தேவையான அளவு அறிவு, அனுபவம், நேரம் இருப்பவர்கள் பிறர் துணையின்றி தாமே முதலீடு செய்யலாம். பெரும்பாலானோருக்கு இவை மூன்றும் இருப்பதில்லை. அவர்கள், ஒரு நல்ல நிதி ஆலோசகரை நாடுவது நலம். டாக்டர், வக்கீலைப்போல நிதி ஆலோசகரும் ஒரு புரஃபஷனல்தான். அவருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டும். அந்தச் செலவு உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைக்கவும், அதே சமயத்தில் வளர்ச்சி காண வைக்கவும் உதவும். நண்பர்களை ஆலோசர்களாக்குவதைத் தவிர்ப்பது நட்புக்கு நல்லது.
10. தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது
முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. அவ்வப்போது போகும் பாதை, வேகம், எரிபொருள் அளவு இவற்றைக் கண்காணிப்பது போல, முதலீட்டிலும் செய்ய வேண்டும். நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி போய்க்கொண்டிருக்கிறது. இனி ரிட்டயர்மென்ட் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்று இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோவைப் பார்த்து, அதை மாற்றியமைக்க வேண்டுமெனில், அதை செய்தே ஆகவேண்டும்.
25 ஆண்டுகளில் இந்திய சந்தைதான் பெஸ்ட்!
ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைதான் மிகச் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 1,357 சதவிகிதமும், சென்செக்ஸ் 1,289 சதவிகிதமும் லாபம் தந்திருக்கின்றன. ஜெர்மனி 755%, அமெரிக்கா 688% லாபம் தந்திருக்கின்றன.
கொரியா, தைவான், சீனா, பிரான்ஸ் நாட்டு பங்குச் சந்தைகள் 200 சதவிகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பங்குச் சந்தை 179 சதவிகிதமும், ஜப்பான் பங்குச் சந்தைகள் வெறும் 44 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன.
நண்பர் ஒருத்தர் அஞ்சு லார்ஜ்கேப் ஃபண்ட்களில் எஸ் ஐ பி போடணும், எந்தெந்த ஃபண்ட்ல போடலாம்னு கேட்டார்.
ஐபிஎல் ல டீம்களை வாங்கிப் போடலாம்னு போறீங்க, டாப் 5 பேட்ஸ்மென், டாப் 4 பௌலர்கள் எல்லா டீம்லயும் இருக்காங்க ரெண்டு முக்கியத்துவம் குறைவான ப்ளேயர்கள் மட்டுமே ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசம். எல்லோரும் ரன் அடிக்கறாங்க , சச்சினை ஓப்பனிங்கும் கோலியை ஒன் டவுனிலும், கடேசி அஞ்சு ஓவருக்கு பாண்ட்யாவையும் உபயோகிக்கும் டீம் அதிக ரன் அடிக்குது, மாத்தி உபயோகிக்கும் டீம் அதை விட கம்மியா ரன் சேர்க்குது… அப்ப நீங்க அஞ்சு டீம்லயும் 20% பங்கு வாங்குவீங்களா அல்லது அதிக ரன் அடிக்கும் & தொடர்ச்சியா வெற்றிகளை குவிக்கும் டீமை 100% வாங்குவீங்களான்னு கேட்டேன்… நான் என்ன தப்பாச் சொல்லிட்டேன்னு கோவிச்சிக்கிட்டு போயிட்டாருன்னு தெரியல!!!!
நம்மில் பல பேர் செய்யும் தவறு இது… 14 ஃபண்ட்கள் கொண்ட போர்ட்ஃபோலியோ எல்லாம் வச்சிருக்காங்க. அவற்றினுள் என்ன இருக்குன்னே பல பேருக்குத் தெரியறதில்ல. ஒரே கேட்டகரி ஃபண்ட்ஸ் ரெண்டுக்கு மேல முதலீடு பண்றதுக்கான முகாந்திரன் எனக்குத் தெரிஞ்சு எதுவும் இல்லை. Birla Sunlife Frontline Equity, Mirae Assets India opportunities இவ்விரு லார்ஜ் கேப் ஃபண்ட்ஸ் எடுத்துக்கிட்டா HDFC, HDFC Bank, ICICI Bank, ITC, L &T, Maruti, SBI, Indus Ind Bank, ITC என்று பல கம்பெனிகளின் பங்குகள் ரெண்டிலும் கணிசமா இருக்கு. இதைத்தான் ஒவர்லாப் என்று சொல்வாங்க.. இப்படி இருக்கும் பல ஃபண்ட்கள் ஐந்தில் 20% முதலீடு செய்வதற்கு பதில் ஒன்றிலோ ரெண்டிலோ மட்டும் முதலீடு செய்வது நலம்.
நம்ம ஆட்கள் பொதுவா மாற்றிச் சொல்லும் வார்த்தைகள் Sales / Marketing Hotel / Restaurant அந்த வரிசையில் Asset Allocation / Diversification இதையும் சேர்க்கலாம். இவை ஒன்று போலத் தெரிந்தாலும் இவை வெவ்வேறு.
Asset Allocation : இது நம்முடைய முதலீடு ஒவ்வொரு Asset Class லும் எவ்வளவு சதவீதம் வைக்கப்போறோம் என்பதைக் குறிப்பது. மொத்த முதலீட்டில் Equity 55% Debt/ Bond 20%, Real Estate 20% Gold 5% என்று ஒரு போர்ட்ஃபோலியோ உருவாக்குவது.
Diversification : உன்னிடம் இருக்கும் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதே என்று சொல்வார்கள். அது தவறி விழுந்தால் அனைத்து முட்டைகளும் உடையும். அது போலத்தான் Diversification. ஈக்விட்டியில் 55% என்று முடிவு செய்தாகி விட்டது – மொத்த பணத்தையும் ஒரே கம்பனியின் பங்கிலோ அல்லது ஒரே கேட்டகரி மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்யக்கூடாது. நேரடி பங்கு வாங்கறதா இருந்தா தொகைக்கேற்ப 10-20 அல்லது அதற்கு மேல் நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று 2-3 மியூச்சுவல் ஃபண்ட்களிலோ முதலீடு செய்ய வேண்டும்.
இனியாவது முதலீடு குறித்து எழுதும் போது பேசும் போது சரியான பதங்களை உபயோகிப்போம்.
இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் அப்படீங்கறாங்களே அதில் முதலீடு செய்யலாமான்னு நெறய பேரு யோசிக்கறாங்க… முதலீடு செய்யறதுக்கு முன்னாடி இண்டெக்ஸ் ஃபண்டுனா என்ன? அது யாருக்கு சரியா வரும் எல்லாம் தெரிஞ்சிக்கணும்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் இருவகை உண்டு – Actively Managed and Passively Managed. நமக்கு தெரிந்த பெரும்பாலான ஃபண்ட்கள் ஆக்டிவிலி மேனேஜ்ட் கேட்டகரி. எல்லா ஃபண்ட்களும் நிஃப்டி போன்ற ஏதோ ஒரு இண்டெக்ஸை ட்ராக் செய்யும். உதாரணத்துக்கு எஸ் பி ஐ ப்ளூ சிப் ஃபண்ட் BSE 100 Index ஐ ட்ராக் செய்கிறது. அதிலிருக்கும் கம்பெனிகளில் 50-60 ஐ தேர்ந்தெடுத்து அதன் பங்குகளில் முதலீடு செய்கிறார் இதன் ஃபண்ட் மேனேஜர். இப்பங்குகளின் போக்கை தினம்தோறும் கவனித்து அவர் கணிப்பின் படி வாங்க / விற்க முடிவெடுக்கிறார்.
இதே BSE 100 Index ஃபண்ட் என்று ஒன்று இருந்தால் அது passive முறையில் நிர்வகிக்கப்படும். இந்த இண்டெக்ஸில் இருக்கும் அனைத்து கம்பெனிகளின் மார்க்கெட் கேப்பின் மொத்தம் நூறு கோடின்னு வச்சிப்போம், அதில் ஒரு கம்பெனியான எச்டிஎஃப்சியின் மதிப்பு 5 கோடி, ஐசிஐசிஐயின் மதிப்பு 3 கோடின்னு வச்சிக்கிட்டால், அவற்றின் வெயிட்டேஜ் முறையே 5 மற்றும் 3 சதவீதமாகும். இதே மாதிரி எல்லா கம்பெனிகளுக்கு வெயிட்டேஜ் போட்டு ஒரு அல்கோரிதம் எழுதி வச்சிடுவாங்க. அந்த அல்கோரிதம் ஃபண்டுக்குள் வரும் ஒவ்வொரு ரூபாயையும் அதே விகிதததில் முதலீடு செய்து விடும். கம்பெனிகளின் மார்க்கெட் கேப் மாறும் போதோல்லாம் அது ஆட்டோமேட்டிக்காக ரீ பேலன்சிங் செய்து கொண்டேயிருக்கும். ஆக்டிவிலி மேனேஜ்ட் ஃபண்களைப் போல இதில் தினந்தோறும் வர்த்தகம் நிகழ்ந்து கொண்டே இருக்காது. எனவே இதன் டர்ன் ஓவர் ரேஷியோ கம்மியா இருக்கும் (டர்ன் ஓவர் ரேஷியோ என்பது ஒரு ஃப்ண்ட் ஒரு வருடத்தில் எத்தனை பங்குகளை மாற்றுகிறது என்பதைக் குறிப்பது, ஒரு வருடத்தில் தன்னுள் இருக்கும் அனைத்து பங்குகளின் அளவையும் ஒரு ஃபண்ட் மாற்றினால் அதன் டர்ன் ஓவர் ரேஷியோ 100%, பொதுவா இது மேனேஜ்ட் ஃபண்ட்களில் அதிகமா இருக்கும்)
சாதகங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்களுக்கு மேனேஜர் அவசியமில்லை, அல்கோரிதம்கள் அவர் வேலையை செய்துவிடும் அல்லது எளிதாக்கிவிடும். இவற்றின் கட்டணம் வெகு கம்மியாக இருக்கும். அமெரிக்க வான்கார்ட் நிறுவனம் 0.04% கட்டணத்திலிருந்து இண்டெக்ஸ் ஃபண்ட்கள் வழங்குகிறது, இந்தியாவில் 0.2% லிருந்து இண்டெக்ஸ் ஃபண்ட்கள் உள்ளன
இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் மிக நீண்ட கால முதலீட்டாளர்களாக இருப்பார்கள், பணம் வெளியே போகாமல் ஃபண்டுக்குள் இருக்கும் போது பங்குகளை விற்பதும் மிகக் குறைவாக இருக்கும். இது ஃபண்டின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும்
மேனேஜெட் ஃபண்ட்கள் எப்போதும் நல்ல முதலீட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும், அப்படி வாய்ப்பு வரும்போது நாலு பங்கை வித்தாத்தான் வாங்க முடியும் என்ற நிலையை தவிர்க்க கையில் எப்போதும் பணம் வைத்திருக்கும் – அப்படி வைத்திருக்கும் பணம் வளர்வதில்லை. ஒரு ஃப்ண்டில் ஆயிரம் கோடி ருபாய் இருந்தால் சுமாராக 20 கோடி ரூபாய் பணமாக கையில் இருக்கும், அப்ப 980 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக்கும், முதலீட்டாளர்களும் 980 கோடியின் பயனை மட்டுமே அனுபவிக்க முடியும். இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இண்டெக்ஸின் அனைத்து பங்குகளிலும் முதலீடு செய்து விட்டதால் அது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
பாதகம்னு பாத்தா – இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இண்டெக்ஸ் காணும் வளர்ச்சி மட்டுமே காணும். அதாவது BSE 100 Index 10% உயர்ந்தா அதன் இண்டெக்ஸ் ஃபண்டும் 9.5 முதல் 10.5% வரையே உயரும். மார்க்கெட் 10% உயர்ந்தா என் முதலீடு 25% வளரணும்னு நினைப்பவர்களுக்கு இது சரியா வராது. இண்டெக்ஸை விட அதிகம் ஏறும் ஃபண்ட் இண்டெக்ஸ் கீழிறங்கும் போது பெரும்பாலும் மிக அதிகமாக இழக்கும். இண்டெக்ஸ் ஃபண்ட் டெஸ்ட் மேட்ச், மேனேஜ்ட் ஃபண்ட் ஒரு நாள் போட்டி மாதிரி என்று சொல்லலாம்,. டெஸ்ட் மேட்சில் ஸ்ட்ராடஜி முக்கியம், ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் அதை சரி செய்ய நேரம் இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் ஒரு மோசமான ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் சாரி டி 20 எல்லாம் நான் கிரிக்கெட்டாகவே கருதுவதில்லை.
இந்தியாவில் இன்னும் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் பெரிய அளவில் வளரவில்லை. வட்டி விகிதம் மிகவும் கம்மியாகி வரும் நிலையில் இப்பதான் மக்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை நோக்கி வருகின்றனர். நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து மேனேஜ்ட் ஃபண்ட்கள் மார்க்கெட்டை விட சிறப்பா செயல்பட்டுக் கொண்டே இருக்க முடியாது, 30-40 வருடங்களில் மார்க்கெட் ரிட்டன்ஸ் கிடைச்சாலே போதும், கம்மி கட்டணத்தில் தம் குறிக்கோளை அடைய முடியும் என்ற நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நானும் நண்பர் ஒருவரும் எங்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை ஆலோசிக்கிறோம். நாங்கள் 30களிலும் நாற்பதுகளிலும் இருக்கிறோம், எங்களால் இன்னும் இருபது முதல் முப்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்ய முடியும். நாங்கள் இருவரும் மார்க்கெட் வீழ்ச்சியடையும் போது Panic ஆகி பணத்தை எடுத்து நஷ்டத்தை நிரந்தரமாக்காமல் Stay Invested ஆக இருந்து மீண்டு வருவோம். இப்படிப்பட்ட நீண்ட கால முதலீட்டார்கள்களான நாங்க எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று எழுதினோம்
1. நாங்கள் Aggressive முதலீட்டளர்களாக இருந்தால் அசெட் அலோகேசன் 90% ஈக்விட்டி 10% பாண்ட் அ. 50 % லார்ஜ் கேப் ஃபண்ட்ஸ், 40% மிட் கேப் ஃபண்ட்ஸ் மற்றும் 10% பாண்ட் ஆ. 40% லார்ஜ்கேப், 30% மிட்கேப், 30% பேலன்ஸ்ட் ஃபண்ட்ஸ் (பேலன்ஸ்டில் 30-35% பாண்டில் இருப்பதால் ஒவரால் போர்ட்ஃபோலியோவின் 10% பாண்டுக்கு வரும்)
2. நாங்கள் Moderate முதலீட்டாளராக இருந்தால் 80% ஈக்விட்டி 20% பாண்ட் அ. 50% லார்ஜ் கேப், 30% மிட் கேப், 20% பாண்ட் ஆ. 30% லார்ஜ், 30 % மிட்கேப், 30% பேலன்ஸ்ட், 10% பாண்ட்
3. நாங்கள் Conservative முதலீட்டாளர்களாக இருந்தால் 70% ஈக்விட்டி 30% பாண்ட் அ. 45% லார்ஜ்கேப், 25% மிட்கேப், 30% பாண்ட் ஆ. 20% லார்ஜ்கேப், 20% மிட்கேப், 45% பேலன்ஸ்ட், 15% பாண்ட்
இவ்வாறு முதலீடு செய்வோம். இது உங்களுக்கும் பொருத்தமானதாக இருப்பதாக நீங்கள் எண்ணினால் ப்ளானை உபயோகித்துக் கொள்ளலாம்.
ஈக்விட்டியும் பாண்ட் முதலீடும். இவை இரண்டும் ஒரு போர்ட்ஃபோலியோவின் ஸ்டெபிலிட்டிக்கு மிக முக்கியம். ஈக்விட்டி வளர்ச்சிக்கும் பாண்ட் சேஃப்டிக்கும் முக்கியம்.
ஈக்விட்டி ஒரு காரில் இருக்கும் ஆக்சிலரேட்டர் என்றால் பாண்ட் ப்ரேக் போன்றது. ப்ரேக் வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினாலும், கார் தறிகெட்டு ஓடி ஆக்சிடெண்ட் ஆகாமல் காக்கும்.
பல முதலீட்டாளர்கள் இரண்டிலும் சரியான நேரத்தில் முதலீடு செய்யாமல் விட்டு விடுகிறார்கள்
இளம் வயதினர் மார்க்கெட்டில் எல்லாருக்கும் 30-40 % வளர்ச்சி கிடைக்கிறதே என்று சேமிப்பு அனைத்தையும் ஈக்விட்டியில் போடுகின்றனர். பங்குச் சந்தை மேலே மட்டுமே போகும் வரையில் இது நல்லாத்தான் இருக்கும், சந்தை வீழ்ச்சி அடையும் போது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பாண்ட்கள்தான் ஸ்டபிலிடி கொடுக்கும்
இதற்கு நேர் மாறாக ரிட்டையர் ஆக இருப்போரும் ரிட்டையர் ஆனவர்களும் முதலை சேமிப்பதாக எண்ணி ஈக்விட்டியை முழுதுமாக தவிர்க்கின்றனர். இதுவும் தவறும். ஓரளவுக்கு ஈக்விட்டி இல்லாத போர்ட்ஃபோலியோவின் வளர்ச்சி மிகக்கம்மியாக இருக்கும்.
இளம் வயதினரின் போர்ட்ஃபோலியோவில் 20% மாவது பாண்ட்களும் முதியோரின் போர்ட்ஃபோலியோவில் 20-30 அல்லது 40 % வரை ஈக்விட்டியிலும் வைப்பது ஒரு நல்ல அசெட் அலோகேசனாக இருக்கும்.
இன்சூரன்ஸ் எடுக்கறதுன்னு முடிவு செஞ்சதும் இன்னிக்கே எடுத்துடுங்க… நாளைக்கு ப்ரீமியம் அதிகமாக ஆகிடலாம். நண்பர் ஒருத்தர் என்னிடம் பேசியபின், டெர்ம் பாலிசி எடுக்க முடிவு செஞ்சார், தேவையான எல்லா ஆராய்ச்சியும் பண்ணி, அமவுண்ட் கம்பெனி எல்லாம் முடிவு செஞ்சிட்டார், ஆனா பாலிசி எடுக்க ஒரு வாரம் நேரம் எடுத்துக்கிட்டார், ப்ரீமியம் அமவுண்ட் ஆண்டுக்கு 500 ரூ அதிகமாகிடிச்சு. இன்சூரன்ஸை பொருத்தவரை Nearest Birthday is what will be taken for your age. அதாவது ஜூலை 7 1974 அன்று பிறந்த எனக்கு – ஜனவரி 7 2017 வரை 43 வயது என கணக்கிடப்படும், ஜனவரி 8 க்கு அப்புறம் 44 வயதுக்கு உரிய ப்ரீமியம் கட்ட வேண்டும். ஆண்டுக்கு 500 ருபாய் சின்ன விசயமாத் தெரியலாம், ஆனால் 35 வயதாகும் ஒருவர் இந்த 40 ரூபாயை மாசாமாசம் மிச்சம் பிடிச்சு முதலீடு செய்து வந்தால் அவரோட ரிட்டையர்மெண்ட் ஃபண்டில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் இருக்கும். தள்ளிப் போடுதல் பர்ஸுக்கு கெடுதல்.
Statistics are like Mini Skirts, They reveal most things but cover the most important thing. This is one such superficial argument – first of all, it doesn’t talk about Income Tax – if you are in 30% slab, the FD amount becomes 10490 , then it takes a bad year to compare
How about taking the Real return after taxes of Rs 1 L invested 10 years ago? Real Return is after paying Income Tax
Amount in US market became half from 2008 to 2009 – almost 50% negative returns – Warren Buffet did not go bankrupt, he stayed put and it became multi fold
FD is wealth preservation and Equity is for Wealth Creation – An Investor should decide based on his need, investment goals and risk appetite
FD rates in India are just about the Inflation rate – small shift in FD rates or in Inflation would make them meaningless
பெண்களின் பாதுகாப்பு இப்போ ஹாட் டாபிக். பெண்களின் பொருளாதார பாதுகாப்பு பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் அவர்கள் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்
உங்கள் குடும்பத்தின் நெட் வொர்த் என்ன? நெட் வொர்த்தா அப்படின்னா?
சேமிப்பை எப்படி முதலீடு செய்கிறீர்கள்? என் கணவர் தாங்க அதெல்லாம் பார்க்கிறார்.
உங்க கணவருக்கு எவ்வளவு ஆயுள் காப்பீடு இருக்கு? தெரியலீங்க.. எல்.ஐ.சி-யில் ஏதோ பாலிசி வச்சிருக்கார், என் பேர்லயும் பிள்ளைங்க பேர்ல கூட இருக்கு, மத்த விவரங்கள் எல்லாம் அவருக்குத்தான் தெரியும்
சரி, வங்கிக் கணக்கின் ஆன்லைன் பாஸ்வேர்டாவது தெரியுமா? தெரியாது, கணவர் சொல்லவும் இல்லை, எனக்கும் கேக்கணும்னு தோணலை.
இந்தியாவில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். இவர்களிடம் கேக்க இன்னோரு கேள்வி இருக்கு – நாளை உங்க கணவர் இறந்துவிட்டால் அடுத்த 15-20 ஆண்டுகள் பிள்ளைகள் தலையெடுக்கும் வரை எப்படி குடும்பம் நடத்துவது என்று உங்களிடம் ப்ளான் இருக்கா?
இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. பெங்களூரில் வசித்த ஒரு தம்பதி – மனைவி சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், கணவர் மென்பொருள் நிபுணர். மெத்தப் படித்த இப்பெண்மணியும் மற்றவர்களைப் போல நிதி நிர்வாகத்தில் பங்கெடுக்கவில்லை. ஒரு நாள் கணவர் விபத்தில் இறந்ததும் அவர் உலகமே தலை கீழாக மாறிப் போனது. வீட்டுக் கடனுக்கு தவணை கட்டும் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்ட் அவரிடம் இல்லை, வங்கிக் கணக்கு ஜாயிண்ட்டாக இல்லாததால் அவரால் உடனடியாக அதை ஆப்பரேட் செய்ய முடியவில்லை. திருமணத்துக்கு முன்னரே எடுக்கப்பட்ட காப்பீடில் இறந்து போன மாமியார் பேர் நாமினியா இருக்கு. எல்லா பாஸ்வேர்ட்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்த லேப்டாப் விபத்தில் உருக்குலைந்து விட்டது. இம்மாதிரியான நிலை வராமல் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
Division of Labor நல்லதுதான், வீட்டின் சில வேலைகளை மனைவியும் வேறு சிலவற்றை கணவனும் பிரித்துச் செய்வது நல்ல பழக்கம் ஆனால் அனைத்தையும் இப்படி கோடு போட்டு பிரிப்பதுமில்லை, பிரிக்கவும் முடியாது. வீடு வாங்குவது, பிள்ளைகளுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுப்பது போன்ற விசயங்களில் பெண்கள் பங்கெடுக்காமல் இருப்பதேயில்லை. கணவர் திடீரென இறந்தால் அவை இரண்டுமே (வீடு மற்றும் கல்வி) கேள்விக்குறியாகி விடும் என்பதை கணவனும் மனைவியும் உணர வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் அதைச் சமாளிக்க தேவைப்படும் அனைத்து விவரங்களையும் இருவரும் பரஸ்பரம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
பெண்களின் பொருளாதார பாதுகாப்புக்கு ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை என்னென்ன?
ஆணை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்பீடு) எடுத்து வைக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானத்தின் 10 மடங்காவது காப்பீடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
காப்பீடு குறித்து பேசும் போது பெண்களும் இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளைத் தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றிற்கு இரு முறை சரி பார்த்தல், நாமினியாக தன்னை நியமித்தல், நாமினியின் விவரங்களை சரியாக எழுதுதல் (பேர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகியவை பெண்களின் கடமை.
எங்கெல்லாம் ஜாயிண்ட் ஓனர்ஷிப் சாத்தியமோ (வங்கிக் கணக்கு, அசையும் அசையாச் சொத்து அனைத்தும்) அவை அனைத்தும் இருவர் பேரிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
சேமிப்பு / முதலீடு குறித்த அனைத்து சந்திப்பிலும் பெண்களும் இருக்க வேண்டும். முடிவெடுக்க முடிந்தால் நலம் அப்படி இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் என்னென்ன சேமிப்பு / முதலீடு உள்ளன, அவற்றை கணவனின் இறப்பிற்கு பிறகு எப்படி வாங்குவது என்பதைத் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக உயிலில் யார் யார்க்கு என்னென்ன சேர வேண்டும் என எழுதி கையெழுத்திட்டு சாட்சிக் கையெழுத்துடன் வையுங்கள். உயில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ் நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிரை மாற்றி எழுத இயலும். ஒரு முறை எழுதிவிட்டால் கண்ட்ரோல் போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை.
எவ்வளவுதான் நல்ல பிள்ளைகளாக இருந்தாலும் சான்ஸ் எடுக்காமல் மனைவியை நாமினியாகவும் வாரிசுதாரராகவும் எழுதுங்கள். மனைவியை பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்
வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுண்ட் லாகின், இமெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்ட்களையும் இருவரும் அறிந்த இடத்தில் சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்ட் மாற்றும் போதும் தவறாமல் சேமித்து வைத்திருக்கும் இடத்தில் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
கணவன், மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது, திடீரென ஒருவர் இறந்தால் மற்றவர் அந்த போன் நம்பரை தொடர்ந்து உபயோக்கிக்க இயலும். செல்போனில் வரும் ஓ.டி.பி இல்லாமல் பாஸ்வேர்ட் மாற்றுவது கடினம்.
பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்ட் ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து ஒரு பத்து கேள்விகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கான பதில்கள் கொடுத்து அவற்றையே உபயோகிக்கச் சொல்லுங்கள். அவற்றையும் பாஸ்வேர்ட் ஷீட்டில் சேமித்து வையுங்கள். ஒரு வேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்ட் தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்ட்டை மாற்ற இயலும்.
குழந்தை பிறப்புக்குப்பின் இல்லத்தரசியாக மாறுபவர்கள் குழந்தைகள் ஒரளவு வளரந்து முழு நேரப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தபின்னர் மீண்டும் வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தோ செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறையிலும் பெருகி விட்டிருக்கின்றன. அவற்றை பற்றி பெண்கள் யோசிப்பது முக்கியம்
அமெரிக்காவில் விவாகரத்து ஆகும் போது (திருமணத்துக்கு முன்பே அக்ரீமெண்ட் போடவில்லையென்றால் ) இருக்கும் சொத்துகள் அனைத்தும் கணவன் மனைவிக்கு பிரித்து வழங்கப்படும், அது நாள் வரை யார் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதெல்லாம் பொருட்டேயில்லை. இப்படிப்பட்ட தீர்க்கமான விதிகள் இந்தியாவில் இல்லாத நிலையில் பெண்கள் தமக்கென சேமித்தல் அவசியம். மேலே சொன்ன மாதிரி ஜாயிண்ட் வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ளலாம், அல்லது பெண்கள் தங்களுக்கென ஒரு வங்கிக் கணக்குத் துவங்கி அதில் குடும்பத்தின் சேமிப்பில் பாதியை வைக்கலாம்.
இவற்றை செய்த பின் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். நம் குடும்பத்தில் நிகழாத வரை பேரிழப்பும் வெறும் புள்ளிவிவரமே.. ஒருவேளை இழப்பு நம் குடும்பத்தில் நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.